சென்னை புத்தக கண்காட்சியில் அனைவருக்கும் பயனளிக்கும் பாடநூல் நிறுவன வெளியீடுகள்
மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து தரப்பின ருக்கும் பயனளிக்கக் கூடிய நூல்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 16ஆம் தேதி 800 அரங்குகளுடன் துவங்கியது. கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் பல்வேறு பதிப்புகளின் வெளியீட்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அரங்கம் (எப் – 14) அமைக்கப் பட்டுள்ளது.
இந்த அரங்கத்தை முதலமைச்சர் பார்வை யிட்ட முதலமைச்சர் ‘திசைதோறும் திராவிடம்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில் புகழ்பெற்ற 6 இலக்கிய நூல்களையும் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் கால்டுவெல் ஒப்பிலக்கணம் நூலையும் வெளியிட்டார்.
கி.ராஜநாராயணன் எழுதிய ‘கரிசல் கதைகள்’ நூலும், ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’, ‘திருக்குறள்’ உள்ளிட்ட 12 நூல்கள் புகழ்பெற்ற ஆங்கில பதிப்பகங்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களும் இங்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
இந்த நூல்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. அதேபோல், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 150ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் அவரது நூல்கள் அனைத்தையும் அரசு வெளியிடும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதையொட்டி அவரது நினைவு நாளன்று 1,020 பக்கங்கள் கொண்ட ‘பன்னூல் திரட்டு’, 725 பக்கங்கள் கொண்ட ‘திருக்குறள் உரை’ ஆகிய 2 தொகுதி நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்த 1,745 பக்கங்கள் கொண்ட இரண்டு நூல்களும் மிகவும் குறைந்த விலையில் 600 ரூபாய்க்கு கிடைக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 3 திட்டங்களில் ஒன்றான முத்தமிழ் அறிஞர் மொழி பெயர்ப்பு திட்டத்தின் கீழ் உயர்கல்வி மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய நூல்கள் மொழியாக்கம் செய்து வெளியிடப் பட உள்ளன.
அதன் ஒருபகுதியாக, திராவிட கருத்தியல் உருவாவதற்கு முக்கிய காரணமான, திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய குடும்ப மொழி இலக்கியங்கங் களை ஒப்பிட்டு ‘திராவிட அல்லது தென் இந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியத்தால் மொழி யாக்கம் செய்யப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 1500 பக்கங்கள் கொண்ட அந்த நூல் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நூலில் அவர் திராவிடம் ஆரிய குடும்பத்தை சேர்ந்தது இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. பாடநூல் நிறுவனம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி, தமிழ் வரலாறு, இந்திய வரலாறு உள்ளிட்ட 874 தலைப்புகளில் அரிய நூல்களை 32 பாட பிரிவுகளில் வெளியிட்டுள்ள.
இந்த நூல்கள் யுபிஎஸ்சி தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு, குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு பயனளிப்பவையாக ஆகும். இந்த அரிய நூல்கள் தற்போது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு 635 நூல்கள் மிகவும் குறைந்த விலையில் பாடநூல் கழக அரங்கில் கிடைக்கின்றன.
அதேபோல் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் 23 நூல்கள் மறு பதிப்பு செய்யப்பட்டு புகழ்பெற்ற பேராசிரியர்களின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும் ஜி.எஸ்.அனந்த நாராயணன் எழுதிய கலைச்சொற்கள் உளவியல், தமிழ்ச் சுருக்கெழுத்து புவியியல், கலைச்சொற்கள் – பொறியியல் தொழில்நுட்ப வியல், கலைச்சொற்கள் – புள்ளி இயல் போன்ற அகராதி நூல்களும், அரசியல், இயற்பியல், உளவியல், கல்வியி யல், சமூகவியல், தத்துவம், நிலவியல், மனையியல், வகை நுண்கணிதம், உலக வரலாறு மற்றும் தமிழ்நாட்டு வரலாறு, வேதியியல், வேளாண்மை, இலக்கியம், உயிரியல், பொது விலங்கியல், மருத்துவம், வணிகவி யல், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வரலாறு, பன்னாட்டு பொருளாதாரம், உடலியங்கியல், உயர்கல்வி நுழைவுத்தேர்வு வினாக்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், கீழடி குறித்த நூல்களும் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடிய நூல்கள் ஒருசேர இந்த அரங்கில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல்களை www.textbookcorp.in என்ற இணையதள முகவரியில் rare book என்ற உட்தலைப்பின் வழி நுழைந்து ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்