அரசியல் மாற்றத்திற்கு அடித்தளமிடும் வாசிப்பு கட்டுரை – என்.சிவகுரு
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை எனும் திருவிழா வெகு விமர்சையாக பத்து நாட்கள் நடைபெறும். கிராமங்கள் மட்டுமல்லாமல், பெரு நகரங்களிலும் துர்காவின் பெரு உருவங்கள் சிலைகளாக நிறுவப்பட்டு, பந்தல் அமைத்து, மக்கள் பங்கேற்ப்போடு நவராத்திரி திருவிழா நடக்கும்.
இந்த திருவிழாவில் பெருந்திரளில் மக்கள் கலந்து கொள்ளும் போது, அதை எவ்வாறு இடதுசாரிகள் பயன்படுத்தி கொள்வது என்பது நமது யோசனை.. அதற்கும் நம்மிடம் வழி இருந்தது. எதை அவர்களிடம் கொண்டு செல்வது என யோசித்தார்கள்…கலை, இலக்கியம், எனும் படைப்புகளுக்கு பெரும் பாரம்பரியம் கொண்ட வங்கத்து மண்ணின் மக்களுக்கு வாசிப்பு பழக்கம் கொஞ்சம் கூடுதல் தான். ஆக வங்கத்து மக்களிடம் புத்தக விற்பனை மூலம் இடது சாரி கருத்தியலை இக்காலத்தில் கொண்டு செல்வதே ஒரு நல்ல வழிமுறை என முடிவெடுத்து தோழர் பிரமோத் தாஸ் குப்தா காலத்திலிருந்து இந்த நடைமுறையை செயல் படுத்தினர்.
எங்கெல்லாம் துர்கா சிலைகள் நிறுவப்படுகிறதோ அதற்கு மிக அருகமையில் கட்சியின் சார்பாக புத்தக விற்பனை கடைகள் திறக்கப்படும். நமது வெளியீட்டில் வந்துள்ள புத்தகங்கள் மட்டுமல்லாமல், அறிவியல், விஞ்ஞானம், சிறார் நூல்கள் என அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வண்ணம் புத்தக விற்பனை நடக்கும். இந்த நடைமுறை வெகுவான மக்கள் திரளை நம் பக்கம் கொண்டு வந்தது. அரசியலாகவும் நமக்கும் பலனை ஈட்டி தந்தது.
இது இடது சாரிகளுக்கு அரசியலாக செல்வாக்கை தருகிறது என்பதை உணர்ந்த எதிர் கருத்தாளர்கள், அரசியலாக நம்மை எதிர்ப்பவர்கள் எல்லோருக்கும் பிரமிப்பை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல.
அரசியலாக நம்மை எதிர்த்தவர்கள் அடுத்த ஆண்டுகளில் புத்தக கடைகள் திறந்தார்கள். அவர்களின் கருத்தியலை கொண்டு சென்றார்கள். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த ஒரு பாரம்பரியம், வாசிப்பு வழக்கம் , நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால் மூன்றாம் தர அரசியலுக்கு நிச்சயமாக ஒரு பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த சில அரசியல் இயக்கங்கள் புத்தக விற்பனையை, முடக்க ஏற்பாடு செய்தார்கள். அராஜகமாக சில வேலைகளில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் புத்தக விற்பனை தொடர்ந்தது.
மேற்கு வங்கத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறை அரசியல் பல வடிவங்களில் நம் தளங்களை உடைத்தது. அதில் நாம் கிராமந்தோறும் நடத்திய நூலகங்களும் அடங்கும். கட்சியின் அலுவலகங்களை இடித்து தள்ளி, சூறையாடி, சேதப்படுத்திய போது, மறக்காமல் அவர்கள் செய்தது புத்தக அழிப்பு.
வன்முறையின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள், திட்டமிட்ட கலவரத்தை தூண்டியவர்கள், என எல்லோரும் கை கோர்த்து இடது சாரிகளின் ஆட்சியை அகற்றியதின் விளைவை இன்று அம்மாநில மக்கள் சந்தித்து கொண்டிருக்கிறார்கள்..
தீரத்துடன் அம்மாநில இடது சாரிகள் இந்த நயவஞ்சக சக்திகளை எதிர்கொண்டனர்.. ஓரளவு வெற்றியும் பெற்றனர்..ஆனாலும் போக வேண்டிய தூரம் அதிகம்… பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க இடது சாரிகளால் மட்டுமே முடியுமென அம்மாநில மக்கள் உணர துவங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்று காரணமாக, கூட்டமாக சேர முடியாத நிலை, துர்கா பூஜை நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெறவில்லை. மாறி வரும் வங்கத்து அரசியல் நிகழ்ச்சி போக்குகள், கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு இந்தாண்டு அரசே (மாநில அரசு) கொல்கத்தாவின் பல இடங்களில் துர்கா பூஜை பந்தல் அமைக்க உதவி செய்துள்ளது. அது சில சர்ச்சைகளை உருவாக்கியும் உள்ளது.
நமது பாரம்பரியத்தின் அடையாளமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்தாண்டு துர்கா பூஜை திருவிழாவை ஒட்டி, மேற்கு வங்க மாநிலம் முழுவதும் மீண்டும் புத்தக கடைகளை திறப்பது என முடிவெடுத்து மாநிலம் முழுவதும் (குறிப்பாக கொல்கத்தா மாநகரத்தில் அதிகமாக) திறந்தது. கட்சியின் மாநில செயலாளர் துவங்கி, அனைத்து மட்டங்களிலும் தோழர்களின் பங்கேற்போடு புத்தக கடைகள் மூலம் விற்பனையை மேற்கொண்டனர்.
வங்கத்தின் அரசியல் வேதியலில் சமீப காலமாக பல மாற்றங்கள் நடைபெற்று வருவதை இந்த புத்தக கடைகளின் விற்பனை மூலம் தெரிய வருகிறது என்பதும், இளைய தலைமுறையினர் இடது சாரிகளின் பக்கம் மீண்டும் திரும்பி வருகின்றனர் என்பதையும் நீரூபிக்கின்றது.
இந்த ஆண்டு நாம் துவக்கிய முயற்சியை அடியொற்றி காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் , பாரதிய ஜனதா கட்சி, என பல அமைப்புக்கள் போட்டி போட்டு கொண்டு கடைகளை விரித்தன காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு , சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிய எழுத்தாளர்களின் இல்லை. தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, மம்தாவின் அரசியல் பயணம் என ஈர்க்காத தலைப்புகள்… கடை விரித்தாலும், கொள்வோர் சிலரே.
ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் மார்க்சிஸ்ட் ஆட்சியை அகற்ற செய்த சதி வேலைகள், கிராம அளவில் கட்சியின் தொண்டர்கள், அவர் தம் குடும்பங்களை கொலை செய்து, மிரட்டி, மிருகத்தனமாக தாக்கி, வீடுகளை நாசப்படுத்தி, பொருட்களை சூறையாடி, ஊரை விட்டே துரத்தி, வன்முறை களமாக மாற்றினர். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் வெற்றியும் பெற்றனர்.
நம்மை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து விட்டு வங்கத்தில் வன்ம அரசியலை முன்னெடுக்க நினைக்கும் அவர்களுக்கு தத்துவ பின்புலத்தோடு பாடம் கற்பிக்க வங்கத்து மக்களிடம் புத்தக விற்பனை பெரும் உதவி செய்துள்ளது.
பேராசான் மார்க்ஸ், எங்கெல்ஸ், மாவீரன் சே, ஆகியோரின் புத்தகங்கள் இந்த ஆண்டு பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. இது நாம் மிகைப்படுத்தி எழுதும் தகவல்கள் அல்ல. நம்மை புறக்கணித்து, நம் செய்திகளை இருட்டடிப்பு செய்து வந்த வங்கத்து நாளிதழ்கள் வேறு வழியின்றி இந்தாண்டு உண்மையை சொல்ல வேண்டியுள்ளது.
பிஜேபி இந்த ஆண்டு மாநிலம் முழுமைக்கும் சுமார் 8 லட்சம் ரூபாய்க்கு புத்தகம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் இரண்டு பகுதி குழுக்களே (ஜாதவ்பூர் & ஷிபூர்) கொல்கத்தா நகருக்குள் 8 லட்ச ரூபாய்க்கு புத்தகங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளன. நாடியா, மால்டா மாவட்டத்தில் நமது புத்தக கடைகளில் 8லட்சமும், 4 லட்சமும் விற்பனை செய்துள்ளன.
மற்ற மாவட்டங்களின் புத்தக விற்பனை விவரங்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
பிரதான எதிர் கட்சியான பிஜேபி கிட்டத்தட்ட 42 மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக செயல்படுத்தக்கூடிய இடங்களில் மாவட்டத்திற்கு 4முதல்5 கடைகளின் மூலம் விற்பனையை செய்கின்றன. கிட்டத்தட்ட 200 கடைகளை மட்டுமே நடைமுறையில் இயங்கி வருகிறது. ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலை…சேதப்படுத்தப்பட்ட கடைகளை புனரமைத்து இந்த ஆண்டு 1300 மையங்களில் நாம் புத்தக விற்பனையை இந்த ஆண்டு நடத்தியுள்ளோம்.
மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் பயணங்கள், லெனின் எழுதிய அரசும் புரட்சியும் இந்த ஆண்டு அதிகமாக விற்பனையான நூல்கள் . அதே கட்சியின் பொது செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதி வெளிவந்துள்ள இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் எனும் புத்தகமும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் வாங்கப்பட்டது.
நேஷனல் வெளியீட்டகத்தின் இயக்குநர் தோழர் அனிருத்த சக்கரவர்த்தி, சுதன்வா தேஷ்பாண்டே எழுதிய ஹல்லா போல் ( உரக்கப்பேசு ) சப்தார் ஹாஷ்மி யின் வாழ்க்கை வரலாறு புத்தகமும் எங்கள் விற்பனையில் இந்தாண்டு முக்கிய இடத்தை பிடித்தது.
இந்த முன்னெடுப்பு ஒரு பெரிய பண்பாட்டு அசைவை வங்கத்தில் நிச்சயமாக உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
தஞ்சாவூர்