சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நிவேதிதா லூயிஸுடன் நேர்காணல் – பிருந்தா சீனிவாசன்
இப்படியும் எழுதலாம் வரலாறு!
நிவேதிதா லூயிஸ்
நிவேதிதா லூயிஸின் ‘முதல் பெண்கள்’ கட்டுரைத் தொகுப்பின் மூலம் தொடங்கிய எழுத்துப் பயணம், ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’, ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’, ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ (இரண்டு தொகுதிகள்) என்று அடுத்தடுத்து நகர்ந்துகொண்டிருக்கிறது. நிவேதிதா லூயிஸுடன் உரையாடியதிலிருந்து…
பெண்கள் பெரும்பாலும் கவிதைகளையும் புனைவுகளையுமே எழுதுகிறார்களே?
பெண்கள் புனைவைத் தாண்டி வெளியே வர வேண்டும். ஆண், பெண் உறவு நிலை குறித்து மட்டுமே எழுதும்போது ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடக்கூடும். புனைவல்லாதவற்றை எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டும், கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அது நம் அறிவை விரிவாக்கும். ராஜம் கிருஷ்ணன் போன்ற வெகுசில பெண் எழுத்தாளர்களே கள ஆய்வு செய்து கதை எழுதினார்கள். ஆங்கிலேயர்கள் எழுதியவற்றைத்தான் இப்போதுவரை வரலாறு எனப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தப் படைப்புகளில் காலனியாதிக்கக் கண்ணோட்டமே மேலோங்கியிருக்கும். சதாசிவபண்டாரத்தார், மயிலை சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் எழுதிய வரலாற்றைப் படித்தப்போதுதான் நாட்டார் கண்ணோட்டத்துடன் வரலாறு எழுதப்படுவதன் அவசியம் புரிந்தது. பெண்கள் பார்வையில், பெண்களையும் உள்ளடக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதற்காகவாவது பெண்கள் புனைவிலிருந்து வெளியேவர வேண்டும்.
எழுத்துலகில் ஆணுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண்ணுக்கும் கிடைக்கிறதா?
சென்னை புத்தகக்காட்சியில் பல அரங்குகளில் ஆண் படைப்பாளிகளின் சிலைகளும் பெரிய அளவிலான உருவப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. பெயருக்குக்கூடப் பெண்களை வைக்க வேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றுவதில்லை? முற்போக்குக் கருத்துகளைப் பேசுகிறவர்கள்கூடப் பெரியாரின் சிலையை மட்டுமே வைக்கிறார்களே ஒழிய, கருத்தியல்ரீதியாக அவருக்கு இணையாக நின்று செயல்பட்ட மணியம்மையின் சிலையை ஏன் வைப்பதில்லை? திராவிடக் கொள்கையை உயர்த்திப் பிடித்த சத்தியவாணி முத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரும்பணியாற்றிய அம்புஜம் அம்மாளுக்கும்கூட நாம் சிலை வைக்கவில்லை.
பெண்களின் வாசிப்புத்தளம் விரிவடைந்திருக்கிறதா?
உண்மையில் பெண்களிடையே தேர்ந்தெடுத்த வாசிப்பு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் எதை வாசிக்க வேண்டும் என்பதையும் பெண்கள் வாசிக்க வேண்டுமா என்பதையும் ஆண்களே முடிவுசெய்கிறார்கள்.
உங்களின் ‘முதல் பெண்கள்’ நூலை எழுதுவதற்கான தூண்டுதல் எது?
இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த 20 பெண்கள் குறித்துப் பெண்கள் இதழொன்றுக்காக எழுத ஒப்புக்கொண்டேன். இருவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி எழுதிவிட்டு, மூன்றாவதாக கமலா சத்யநாதன் குறித்து எழுதத் தொடங்கினேன். அப்போதுதான் அவரைப் பற்றிப் பல அரிய தகவல்கள் கிடைத்தன. கமலா சத்யநாதன் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்காக ஆங்கிலத்தில் பத்திரிகை நடத்தியிருக்கிறார். ஆனால், அவரைப் பற்றி ஒரேயொரு ஆய்வுக் கட்டுரை தவிர, வேறெந்தத் தகவலும் இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது.
அவர் நடத்திய இதழ்கள் சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருக்கும் தகவல் அறிந்து அவற்றை வாசித்தேன். முதல் இஸ்லாமியப் பெண் விமான ஓட்டுநர், உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி, முதல் பெண் வயலின் கலைஞர் என்று ஒவ்வொரு துறையிலும் தடம்பதித்த முதல் பெண்கள் குறித்து அப்போதே அவர் அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகுதான் தென்னிந்திய அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் தடம் பதித்த முதல் பெண்கள் குறித்துக் கள ஆய்வு செய்து எழுத வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. அதற்கான தேடலும் பயணமும் என்னை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றன.
யாருடைய எழுத்துகள் உங்களுக்கு முன்மாதிரி?
பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் எனக்குப் பெரிய முன்மாதிரி. ஆ.சிவசுப்பிரமணியன், தென்தமிழகத்தில் கத்தோலிக்கம் என்பதை முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்த பேராசியர் ஜான், ராஜம் கிருஷ்ணன் போன்றோரும் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டிகளே. போக்குவரத்து, தங்குமிடம், தகவல்தொடர்பின்மை என்று பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் அவர்கள் அந்தக் காலத்தில் ஆய்வு செய்திருப்பார்கள். ஆனால், நாம் இன்று இவ்வளவு தொழில்நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு குறைந்தபட்ச பயணங்களைக்கூட மேற்கொள்ளவில்லையென்றால் எப்படி?
பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: [email protected]
நன்றி: இந்துதமிழ் நாளிதழ்