Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 15th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 15



கிராமத்து நிலவின் தாழ்வாரத்தில் ஓர் உரையாடல்..

– டாக்டர் இடங்கர் பாவலன்

இளங்காலை வெயிலை உறிஞ்சியபடி உடலை முறித்துக் கொண்டிருந்தது ஜன்னல், நிலைக்கதவுகள். நான் நிலைவாசல் கடந்து சோம்பலை முறித்துக் கொள்கிற போதே தன்னியல்பில் உடலின் ஒவ்வோர் அசைவும் அதற்கேயுரிய நடன பாவணைகளை வெளிப்படுத்திய வண்ணமாயிருந்தது. மெலிசாக வீசுகிற இளங் காற்றுக்கு உடலை ஒப்புக் கொடுத்தபடியே சாலையோரம் அசடாய் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்தை நான் நிதானமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். பச்சைக் கொடியசைத்து வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக பூக்கள் ததும்ப நிறைவாயிருந்தது அம்மரம். அவையெல்லாம் இரவு வானில் பூத்துவிட்டு மரத்தில் இளைப்பாற வந்து அமர்ந்துவிட்ட நட்சத்திரங்கள் தானோ என்று இருளுக்கும் பகலுக்குமான அகாலத்தில் மனமோ இரசனையால் நிரம்பிக் கொண்டது.

முற்றத்தில் கைகள் சிவக்க மண்பானையில் செம்மண் குளைத்து நட்டு வைத்த காட்டு ரோஜா செடிகள் யாவும் இதழ் முழுக்க வர்ணங்களைப் பூசிக் கொண்டு விதவிதமாய் முகத்தைக் காட்டி குழந்தைமையாய் சிரித்துக் கொண்டிருந்தன. பூவிதழ் விளிம்பில் திரண்டு ததும்பி நிற்கிற ஒற்றைப் பனித்துளி, எப்படியாவது உதட்டு மேலிருந்து விழக் காத்திருக்கும் மழலையின் வாநீரை எனக்கு நினைவுபடுத்திவிடும். இப்படி நேற்றிரவு பூத்த நட்சத்திரங்களையும், கிளையில் துளிர்த்த பூக்களையும் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று குழந்தைகளின் ஞாபகங்கள் நறுமணம் போல மனதிற்குள் வந்து நிறைந்து கொள்கிறது. எல்லாவற்றிலும் தென்படுகிற ஒரு குழந்தைமையை மனம் எப்படியோ கண்டெடுத்துவிடுகிறது போல. மரத்தடி நிழலில் திறந்த புத்தகத்தினுள் எதார்த்தமாய் வந்து விழுகிற பன்னீர் பூவைப் போல மழலைக் குரலில் பூத்துச் சிரிக்கிற காளீஸ்வரி, பிரியாவின் முகங்கள் மெல்ல என் ஞாபகக் கேணியிலிருந்து மேலெழும்பி வருவதை நன்றாகவே உணர முடிகிறது.

சாலைத் திருப்பத்தில் தலை நிறையப் பூச்சூடி நிற்கிற வேப்பம் மரத்தில் சூல் தரிக்காது வாடிப் போகிற தனித்த மலட்டுப் பூக்களைப் பற்றி இதுவரை எவராவது அக்கறை கொண்டிருப்பார்களா என்று ஒருகணம் நிதானமாய் யோசித்துப் பார்க்கிறேன். அத்தனைக் கோடி நட்சத்திரத் திரள் கூட்டத்திலிருந்தும் அன்றாடம் தொலைந்து போகிற ஏதோவொரு விண்மீனை நினைத்து மனிதன் எப்போதாவது கவலை கொண்டிருப்பானா என்றும் சிந்தித்துப் பார்க்கிறேன். இப்படி மனிதப் பார்வைகளுக்கு அப்பால் தொலைந்து போன நட்சத்திரங்களையும், மலர்ந்தும் மலராத பூக்களையும் போல, இத்தனைக் கோடி குழந்தைகளில் எவரது பார்வைக் கோணத்திற்குள்ளும் வந்துவிடாத இந்த காது கேளாத குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில் சுருக்கென்று அடிவயிற்றில் ஏதோவொன்று பிரவச வலியாய் தைப்பது போலிருக்கிறது.

பெத்த புள்ளைங்க பத்தோட பதினொன்னா, இதுவும் இருந்துட்டுப் போவட்டுமே! என்றபடி அறியாமையின் பாதாளத்தில் தங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாக்கிவிடுகிற எத்தனையோ பெற்றோர்களுக்கு மத்தியில், தாமாக சிகிச்சைக்கு ஒப்புக் கொண்ட காளீஸ்வரி, பிரியாவின் குடும்பங்களை ஏனோ இக்கணத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. சென்னை வந்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தின் நம்பிக்கையை கண்கள் முழுக்க நிறைத்துக் கொண்டு மிளிர்ந்த அந்தக் கண்களைக் கண்ட நொடியில், இனி எல்லாமே சாத்தியமாகிவிடும் என்கிற சுடர் என்னுள்ளும் பற்றிக் கொண்டு கமழத் துவங்கிவிட்டது. ஆனாலும் எதிர்க்காற்றுக்கு அசட்டுத் தைரியத்தோடும், சிணுங்களோடும் முகிழ்த்தபடி எரிகிற அந்த அகல் விளக்கின் ஒளியை அணைத்துவிடுவதற்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் சிறிய தும்மலொன்றே போதுமானது என்கிற பயம் எனக்குள் இன்னமும் பதட்டத்தை விதைத்தபடியே தான் இருக்கிறது.

“கொழந்தைக்கு காது கேக்கலைன்னு சென்னைக்கு அழைச்சுட்டு போய், மூளைக்குள்ள ஆபரேசன் பண்ணப் போறதா சொல்லுறீங்களே, கேக்கவே பயமால்ல இருக்கு?” என்றபடி வழமையான ஆழிச் சங்கொன்றை எடுத்து பெற்றோரின் காதிலே ஊதிவிட்டால், அதுவொன்றே போதாதா? இந்நாள் வரையிலும் பெற்றோரிடம் அக்கறையாய் அடைகாத்து வந்த நம்பிக்கையின் வெளிச்சத்தை அது கருமேகம் சூரியனை மறைப்பது போல் செய்துவிடாதா? இவையெல்லாம் நினைத்து நினைத்து அது விரல் தொடுகிற ஒரு தொட்டாச்சிணுங்கியின் பேரதிர்ச்சியைப் போல ஒரு நடுக்கத்தை எனக்குள் நேற்றிரவிலிருந்து ஏற்படுத்திய வண்ணமாகவே இருக்கிறது.

சென்னைக்கு வந்து பரிசோதனையின் மூலமாக, சிகிச்சையின் வழியாக, பயிற்சியின் தொடர்ச்சியாக நன்றாகக் கேட்டுப் பேசுகிற குழந்தைகளைப் பார்த்தவுடன் வருகிற பரவச உணர்வினால், பெற்றோர்களின் ஆழ்மனதிற்குள் கிளர்ந்த நம்பிக்கையை நான் அப்படியே புடம் போட்டு ஆபரேசன் செய்து கொள்கிற நாள் வரையிலும் தக்க வைத்திருக்க வேண்டும். பசியைப் போக்குவதற்குப் பற்ற வைத்த வள்ளலாரின் நெருப்பைப் போல அணையாது அவர்களுக்குள் கிளர்ந்த பரவசத்தின் தீயைப் பேணிக் காக்க, அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்தபடியே தொடர்ச்சியாக அவர்களோடு இயங்கவும் வேண்டும்.

இங்கு, நான் இல்லாத சிறு இடைவெளியையும் நிரப்பிக் கொள்ள அக்கம் பக்கத்து அறியாமை நிறைந்த மனிதர்கள் எப்போதும் தயாராகவே இருப்பார்கள் என்பதே எனக்குள் ஒருவித பதட்டத்தை உண்டு பண்ணுகிறது. எனக்குள் துளிர்க்கிற அதீத கவலையெல்லாம் ஏதோதொரு அசந்தர்பத்தில் அறியாமையின் இருளுக்குள் தங்களது வெளிச்சத்தைத் தொலைத்தபடி, தங்கள் குறைபட்ட பிள்ளைகளை அந்த இருட்டுக்குள்ளே வாழ்வதற்கு பணித்துவிட்டால் இதுவரை முயற்சித்த எல்லாமும் பாழாகிவிடும் என்பதே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், பெற்றோர்களைக் காட்டிலும் நான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் அசட்டுத்தனத்தை எண்ணித் தான் அதிகமாக அச்சப்பட வேண்டியதாக இருக்கிறது.

இளவெயில் பட்டு உடல் விறுவிறுத்துக் கொள்கிற போதே நிதானம் பிறந்து மனம் தெளிவடையத் துவங்கிவிட்டது. இன்று இரண்டு குடும்பங்களையும் எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்கிற உறுதிப்பாட்டில் மெல்ல வாகனத்தில் கிளம்புகிற போதே சிலுசிலுவென்று அடிக்கிற காற்றில் உடலும் மனமும் இதமாய் நனையத் துவங்கிவிட்டது. நெடுநாளைக்கு அப்புறமாக குழந்தைகளின் வீடுகளைத் தேடிப் பயணப்படுகிற புத்துணர்வில் தன்னியல்பில் வந்து உதட்டில் ஒட்டிக் கொள்கிற சிரிப்பில் அசடாய் நான் கனிந்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அவர்களின் வீடுகளை நெருங்க நெருங்க மழலையின் பிஞ்சுக் கரங்களிலிருந்து வண்ண வண்ணக் கோடுகளின் கிறுக்கல்கள் வழியாக காகிதத்தில் ஓவியமாய் உருக்கொள்கிற கிராமத்தின் சாயலைப் போலொரு அற்புதமான ஊருக்குள் நுழைந்துவிட்டதான பரவசம் எனக்குள் கூடிவரத் துவங்கிவிட்டது.

மண்பாதையின் விளிம்பில் மனிதச்சங்கிலியாய் கைகோர்த்து நிற்கிற பள்ளிச்சீருடைக் குழந்தைகளைப் போல, நீர்மருது மரங்கள் யாவும் காற்றுக்குத் தலை உலுப்பியபடியே மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. சாலையிலிருந்து விலகி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரையிலும் கண்ணுக்குள் நிறைந்து கொள்கிற நீண்ட பச்சை வயல்களின் காற்றுக்கு இசைந்த அசைவுகள் யாவும் எனக்குள் ஒருவித ஆனந்தப் பரவச நிலையை நினைவுபடுத்தியபடியே இருக்கிறது. தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பால் மாடுகளின் கணங்.. கணங்.. கென ஒலிக்கிற காண்டா மணியின் சப்தங்கள் உள்ளுக்குள் ஏதேதோ செய்துவிடுகிறது.

தார்ச்சாலை, செம்மண் புழுதிபடிந்த சாலையாய் உருக்கொள்கையில் ஊரின் உதட்டிற்கு சிவப்புச் சாயம் பூசியதைப் போலொரு அழகு கிடைத்துவிடுகிறது. கிடத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பிலிருந்து நேற்றைய சாரலில் நனைந்த பிசுபிசுத்த ஈரமான நெடியொன்று வெட்டவெளியெங்கும் கமழ்ந்தபடியே இருந்தன. வண்ண வண்ண ஓவியங்களாய் விரிகின்ற இயற்கையின் பேரழை கண்களுக்குள் நிறைத்துக் கொண்டும், பால்மடி கட்டிய நெல்மணிகளின் வாசத்தையும், வகிடெடுத்து சீவியதைப்போல நிலத்தில் உழப்பட்ட மண்கட்டியின் வாசத்தையும் நெஞ்சுக்குழிக்குள் சுமந்து கொண்டு குழந்தைகளின் வீடுகளை நோக்கி நான் மழைக்கால தையிலான் குருவிகளைப் போன்ற உற்சாகத்தோடு பயணித்துக் கொண்டிருந்தேன்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 15th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள்

குழந்தைகளைத் தேடி கிராமம் கிராமமாக கூட்டைத் தொலைத்த குருவியைப் போலத் திரிந்த போது மனதிற்குள் முளைத்த கேள்விகளின் திகைப்பில் அப்போதெல்லாம் கண்ணில் படாத கிராமத்தின் அழகிய காட்சிகள், இப்போது வலிய வந்து பார்வைக்குள் நிறைகின்றன. ‘என் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்’ என்று வார்த்தைகளால் துரத்திய அதே வீடுகளிலிருந்து மீண்டும் வந்த அழைப்பின் கரங்களைப் பற்றியபடியே இப்போது திரும்பவும் நான் சென்று கொண்டிருக்கிறேன். தோல்வியின் முகத்தை சுமந்தபடி வீடு திரும்பிய அந்த நாளிற்கும், நம்பிக்கையினால் வெற்றியின் விளிம்பை தொட்டுவிட்ட இந்த நாளிற்குமான இடைவெளியை எண்ணி எனக்குள் கிளர்ந்த மட்டற்ற மகிழ்ச்சியை நான் எப்படி விளக்குவது?

கட்டாயம் இம்முறை அக்குடும்பத்தோடு மட்டுமே பேசிக் கொள்கிற முன்முடிவோடு நான் செல்லவில்லை. அக்குழந்தையின் மேல் அபிப்பிராயம் கொண்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும், உறவினர்களையும் ஒருசேர அமர்த்தி வைத்துப் பேசி அறுவைச் சிகிச்சையைப் பற்றிய அச்சத்தைப் போக்கிக் கொள்வதற்கான உந்துதலை அவர்களிடமிருந்தே துவங்குவதற்கான முயற்சியைத் தான் நான் இப்போது முன்னெடுத்திருக்கிறேன். இப்பெற்றோர்களை சமாளித்துவிடுவதற்கான எல்லா விதமான சாத்தியப்பாடுகளையும் கைப்பற்றி வைத்திருக்கும் நான், வெறும் கையோடுதான் உற்றார் உறவினர்களைச் சந்திக்கிற தீர்மானத்தோடு போய்க் கொண்டிருக்கிறேன். அவர்களைச் சமாளிப்பது சிரத்தையான காரியமென்றாலும்கூட, இப்போது கிடைத்த சிறு வெற்றியின் தீப்பந்தத்தைப் பற்றிக் கொண்டதன் நம்பிக்கையில் தான் இப்போது இங்கு வந்து நான் சேர்ந்திருக்கிறேன்.

குழந்தைக்குத் தலையில் ஆபரேசன் செய்துவிடப் போகிறார்கள் என்கிற பதட்டமும், அந்தச் சிகிச்சையால் பேசாதக் குழந்தை பேசிவிடப் போகிறதாம் என்கிற ஆச்சரியமும் கலந்த தண்டோரா செய்திகள் கிராம மக்களிடையே சமீப நாட்களாய் பலவிதங்களில் பரவியிருந்தது. மருத்துவர் வருகிறார் என்கிற எதிர்பார்ப்புகளோடு, அப்படி அவர் என்ன சொல்லிவிடப் போகிறார் என்கிற ஆர்வமும் கூடிய கண்களை அக்குழந்தையின் வீட்டுமுன் சாணம் மொழுகிய வாசல் முற்றத்தில் கூடியிருக்கிற அத்தனை பேர் முகத்திலும் ஒருசேர என்னால் காண முடிந்தது. உண்மையில் அத்தனை பேரையும் முன்னிரவில் நிலாச்சோறாக கூடி அமர வைத்துப் பேசுகிற வாய்ப்பை எண்ணி உள்ளார எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் அத்தனையும் தாண்டி கிராமத்தின் எகத்தாளப் பேச்சுக்கும், நறுக்கென்று கடிபடும்படியாக கேட்கப்படுகிற கேள்விகளுக்கும், அப்பாவியாய் கேட்கிற சந்தேகங்களுக்கும் நிதானமாய் பதில் சொல்கிற அளவிற்கு எனக்குப் பக்குவம் இருக்கிறதா என்கிற தடுமாற்றமும் எனக்குள் மெல்ல உருவாகி வருவதை உணர முடிகிறது.

தெருவிளக்கைச் சுற்றியலையும் ஈசல்களைப் போல பத்திற்கும் மேற்பட்ட கூட்டத்தில் ஒருவனாக நாங்கள் அங்குமிங்கும் முளைத்திருக்கிற கூரை வேயப்பட்ட சின்னஞ்சிறு வீடுகளடங்கிய தெருவின் மண்சாலைக்கு நடுவே வட்டமாக அமர்ந்திருந்தோம். பிறைநிலா வானிற்குக் கீழே சோடியம் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அந்த முன்னிரவில் எல்லோர் முகங்களிலும் அது ஆரஞ்சு வண்ணமாய் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எல்லோரது தூசி படித்த கண்களும் எனை நோக்கியே அம்பெய்வதைப் போலக் காத்திருந்தன. எனக்கோ எதிலிருந்து துவங்குவது, எங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்வது என்கிற குழப்பத்தில் விழித்தபடியே இருக்க, வெற்றிலைக் காம்பை நுனிவிரலில் கிள்ளிப் போட்டு வாயில் ஒதுக்கியபடியே பக்கத்தில் நின்ற தாத்தா தன் பேச்சால் முதல் சுழியைப் போட்டு வைத்தார்.

ஐயா, நீங்க சொல்லுத எல்லாத்தையும் கேட்டுக்கிடுதோம். ஆனா இது பச்சப் புள்ளைங்க பாத்துக்கிடுங்க. ஆபரேசன்னு இல்லாம ஊசி, மருந்துல சரி பண்ணிடலாமான்னு நீங்க தான் கொஞ்சம் பாத்துச் சொல்லணும்?

தாத்தா, நாம என்ன, இந்தக் கொழந்தைக்கு ஆசைப்பட்டா ஆபரேசன் பண்ணுதோம் சொல்லுங்க. சென்னைக்கு, நாங்க எல்லாரும் போயி செக்கப் பண்ணி பாத்தப் பெறவு தான ஆபரேசன் செய்யனுங்குற முடிவுக்கே வந்துருக்கோம். காதுல சீலு கட்டி, அழுக்கு கூடிப் போய், அதனால காது கேக்காம போச்சுன்னாகூட மருந்து ஊத்தியே புள்ளைய சரிகட்டிப்புடலாம். ஆனா, இது நரம்பு பிரச்சனையாப் போச்சே. அதனால மிஷின வச்சே வயித்தியம் பாக்க வேண்டியதாயிடுச்சு. அதையும் கொஞ்சம் நீங்க புரிஞ்சுக்கிடனும்.

அந்தத் தாத்தா புரிந்தும் புரியாமலும் ஒரு கோணத்தில் தலையாட்டி வைத்தார். எனக்கு இத்தகைய தலையசைப்பின் மீது தான் அச்சமே இருக்கிறது. வெளியே கேட்கப்படுகிற கேள்விகளுக்கு அவர்களுக்குத் தக்க பதிலொன்று கிடைக்காத பட்சத்தில், கிடைத்த பதிலிலிருந்து அவர்களுக்குச் சாதகமான விளக்கத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் இப்படியான யோசனைக்கெல்லாம் மனதை ஒப்புக் கொடுத்துவிட்டால் யாரையும் கறையேற்ற முடியாது என்கிற அவசரத்தில் நான் நிதானத்திற்கு வருவதற்குள், அடுத்த கேள்வியை அருகிலிருந்த பாட்டியொருவர் இயல்பாய் கேட்டு வைத்தார். கைகளை பின்புறமாக சாய்த்து ஊன்றியபடி இருகால்களையும் நீட்டி கூனல் விழுந்த முதுகை வளைத்து அவர் பேசிய விதம் ஒரு குழந்தையின் செய்கையை எனக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தது.

ஏஞ் சாமி, நரம்பு பெலமில்லாம இருக்குன்னு சொல்லுதீகளே, சத்து டானிக் கொடுத்தே தேத்திப்புட மாட்டீகளா?

பாட்டிம்மா, இது சத்து மாத்திரை, டானிக்கால சரிபண்ணுத இலேசுபட்ட காரியமில்ல. அப்படி, ஒரு நரம்பு விசயத்தை சரி பண்ணிடவும் முடியாது. ஒருதடவை நரம்பு பாதிச்சுடுச்சுன்னா மறுக்கா மருந்து கொடுத்து தேத்திடவும் முடியாது, பாத்துக்கிடுங்க. நாம மாசக்கணக்கா மருந்த கொடுத்துப் பாக்குறோம்னு காத்துக் கெடந்தோம்னா கொழந்தையைக் குணப்படுத்த நாமளே தாமதப்படுத்துற மாதிரியா ஆகிடும். இப்படி நரம்பு பிரச்சனையா இருக்குற புள்ளைங்களுக்கு மிஷினால மட்டுந்தான் வயித்தியமே பண்ண முடியும். அதுக்கு இந்த சத்து டானிக், சத்து ஊசில்லாம் பிரயோசனப்படாது, கேட்டுக்கிட்டியா பாட்டி!

ஆரம்பத்திலிருந்தே எதையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த அந்த தாத்தா வெற்றிலை போட்டுச் சிவந்த உதட்டைச் சுழித்து வாய்க்குள் காற்றையும் நீரையும் ஒருசேரக் கொப்பளித்து காற்றுக்குமிழ்களாக தூர அவற்றை உமிழ்ந்தார். அதுவரை நிதானத்தோடு மண்ணைக் கிளறிக் கொடுத்து குஞ்சுகளை தன்னியல்பில் மேய்த்துக் கொண்டிருந்த கோழிகள் விருட்டென்று சப்தம் கேட்டு பறந்து போய் வேறொரு குப்பையில் அமர்ந்து எக்கிப் பார்த்தது. மடமடவென எழுந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டவர் தொண்டையைச் செருமிக் கொண்டே மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

இந்த நாட்டு மருந்துலயே எல்லாத்தையும் சரி பண்ணுறதா பேசிக்குறாங்களே, அதோட சமாச்சாரம் எப்படி இருக்கும்னு பாத்துக்க முடியாதுங்களா?

ஐயா, இப்போ, கொழந்தைக்கு பிரச்சனை என்னான்னு பாத்தாச்சு. அதுல நூறு சதவீதம் காது கேக்க வாய்ப்பில்லைன்னு ரிப்போட்டும் வந்துருச்சு. இப்ப போயி நாம அவங்க சொல்லுதாங்க, இவங்க சொல்லுதாங்கன்னு போய் அலைஞ்சுப் பாத்தோம்னா பிரச்சனை ஒன்னும் மாறப் போறதில்லை. ஆனா, நம்ம புள்ளைக்கு வைத்தியம் செய்யுறதை ரொம்ப காலம் தள்ளிப் போடுத மாதிரியா ஆகிடும். சாமிக்கு நேந்துக்கிட்டா நாளைத் தள்ளிப் போட முடியுங்களா? அது மாதிரித் தான் இதுவும். காலா காலத்துல வயித்தியம் செஞ்சிடனும். இல்லைன்னா புள்ளைக்கு தான் கேடு, பாத்துக்குங்க. அதனால நம்ம புள்ளைக்கு அடுத்ததா என்ன வைத்தியம் பாக்கனுங்குறப் பத்தி யோசிக்குறது தான் நம்ம புள்ளைக்குமே நல்லது.

அருகே வயக்காட்டிலிருந்த மேய்த்த பசுவையும் கன்றையும் ஒருசேரக் கயிற்றில் பிடித்தபடி ஒருவர் கூட்டத்தையே எட்டிப் எட்டிப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். கன்றுக்குட்டி தன் முகத்தை பசுவின் பக்கம் சாய்த்தவாறு உரசிக் கொள்ள தனது சொரசொரப்பான வாழைப்பூ நிறத்திலான நாக்கை சுழற்றி மடித்து அது தனது கன்றை நக்கிக் கொடுத்தது. அதனது லயிப்பில் தன் உருண்டையான கண்களை தளர்த்திக் கொண்டு கிறங்குகையில் அவரது கணப்புச் சத்தத்தைக் கேட்டு விழித்தபடி இன்னும் நெருக்கமாக பசுவிடம் அணைந்து ஒட்டிக் கொண்டது. அவர் மாடுகளின் கயிற்றை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தன் போக்கில் கேள்வியை கூட்டத்திற்கு நடுவே சுருக்குக் கயிற்றை வீசுவதைப் போல சுண்டி தூக்கிப் போட்டார்.

ஐயா, நீங்க பேசுறது எல்லாஞ் சரித்தேன். ஆனா ஆபரேசன் பண்ணிக்க கிராமத்தான் எங்களுக்குத் தான் பயமா இருக்குது பாத்துக்கிடுங்க. ஆபரேசன்னு இல்லாம வெளிய மிஷின மாட்டிக்கிடுற மாதரி இந்தப் புள்ளைங்களுக்கு ஏதும் செஞ்சுற முடியாதுங்களா?

ஐயா, புள்ளைக்கு நரம்பு பிரச்சனைங்குறதால மிஷின மாட்டித்தான் வைத்தியமே பாத்தாகனும். அதை காக்ளியார் இம்பிளாண்ட் கணக்கா ஆபரேசனப் பண்ணிச் சரி செய்யனுமா இல்ல, சும்மா வெளியவே மாட்டி ஹியரிங் எய்டு கருவி வச்சே குணப்படுத்திடலாமான்னு மட்டும் தான் அடுத்ததா யோசிச்சு முடிவு பண்ண வேண்டியிருந்துச்சு. ஆனா, சென்னைக்குப் போயி அங்கின ஹியரிங் எய்டு மிசினையும் புள்ளைக்கு சூதானமா மாட்டிப் பாத்தாச்சு. நூறு சதவீதம் நரம்பு பாதிச்சதுனால இந்தக் கொழந்தைக்கு அதனால பிரயோசனம் இருக்காதுன்னு தெளிவா சொல்லிப்புட்டாங்க. அதுக்கு அப்புறமா தான நம்ம புள்ளைக்கு ஆபரேசன்னு முடிவு பண்ணி, நமக்கு சொல்லி அனுப்பிருக்காங்க!

நான் பேசுவதைக் காதில் போட்டுக் கொண்டே பசுவையும் கன்றையும் தலை திரும்பிப் பார்த்தார். திகைத்து நின்ற கன்றையும், தாய்மையில் கனிந்து நிற்கிற பசுவையும் ஒருமுறை நிறைவாக பார்த்துச் சிரித்துவிட்டு கழுத்துப் பட்டையில் பட்டுபோல் மின்னுகிற தோலைத் தடவிக் கொடுத்தபடி ஹோய்.. ஹோய் என்று சப்தமிட அவை தலை உலுப்பியபடி ம்ம்மே.. என்றபடி முன்னே நகரத் துவங்கியது. அவரும் தன்னியல்பில் கடந்து போகிற பாதசாரியைப் போல கூட்டத்திலிருந்து விலகிச் செல்ல, கூட்டம் சுறுசுறுப்படையத் துவங்கிவிட்டது.

இதுதான் கிராமத்தின் இயல்பா? யாரோ ஒருவருக்கு துயரமென்றதும் ஓடி வந்து ஆறுதல் சொல்வதும், சொல்லாலே அவர்களைச் சமாதானப்படுத்தித் தேற்றிவிடுவதும், அப்புறம் தன் போக்கில் எல்லாமே இங்கு இயற்கை தான் என்பது போல கலைந்து செல்வதுமான இம்மக்களின் இயல்பை புரிந்து கொள்ள இன்னும் எனக்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ, தெரியவில்லை. இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே ஓரமாய் அமர்ந்து கொட்டைப் பாக்கை இடித்துக் கொண்டிருந்த பாட்டி கூடவே ஒரு கேள்வியையும் போட்டு இடித்து வைத்தார்.

ஏய்யா சாமி, புள்ளைங்களுக்கு ஆபரேசன், மிஷின்னு எதுவுமே இல்லாம அதுக்குன்னு இருக்க பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டோம்னா, அவங்களே பதனமாச் சொல்லி பேச வச்சுப்புடுவாங்களாமே, அப்படியா?

ஆச்சி, இங்க பாத்துக்கிடுங்க. நம்ம புள்ளைக்கு காது கேக்கல. இப்போ, நீங்க பேசுறத நான் கேக்கேன். அதனால உங்ககிட்ட நான் பேசிட்டு இருக்கேன். அதே மாதிரி, அந்தக் கொழந்தைக்கும் பேசுறத கேட்டா தான, என்னான்னு புரிஞ்சுக்கிட்டு அதுவும் பேசும். இந்தக் கொழந்தைங்களுக்கு காது கேக்குறதுல தான் பிரச்சனையே தவிர, பேசாம இருக்குறது இல்ல. அத மொதல்ல விளங்கிக்கிடனும். இந்தப் புள்ளைங்கல்லாம் காது கேக்காததுனால தான் பேசாம இருக்குதுங்க. அதனால மொதல்ல அவங்களுக்கு காது கேக்குறதுக்குத் தான் வயித்தியம் பண்ணியாகனும். புரிஞ்சுக்கிட்டீங்களா!

ஆனா, பேச்சுப் பள்ளிக்கூடத்துல அந்தக் கொழந்தைங்களுக்கு காது கேக்க வைக்குறதுக்கான பக்குவத்த பண்ணுறதில்ல. நம்ம மொகத்தப் பாத்து, உதட்டப் பாத்துப் பேசுறதுக்கும், அப்புறமா கை சாடை போட்டுப் பேசுறதுக்கும் தான் புள்ளைங்களுக்கு அங்கின சொல்லித் தர்றாங்க. அப்போ, அவங்களுக்கு காது கேக்கலைங்குற பிரச்சனை அப்படியே தான இருக்கப் போவுது. அதனால, நாம மொதல்ல காது கேக்காம இருக்குறதுக்கு வயித்தியம் பாத்துக்கிடது தான் நல்லது. அப்படி மிஷினை மாட்டுனதுக்கு அப்புறமா, இந்த மாதிரி பேச்சுப் பயிற்சி கொடுத்தோம்னா, நாம பேசுறதக் கேட்டு அவங்களும் சுத்தபத்தமா பேச ஆரம்பிச்சுடுவாங்க. என்ன, கேட்டுக்கிட்டியா பாட்டி!

ம்ம்ம்… என்றபடி இடித்த கொட்டாம் பாக்கை இரும்புக் குவளையிலிருந்து விரலிடுக்கில் இணுக்காக எடுத்து வாயில் ஓரமாய் ஒதுக்கிவிட்டுக் கொண்டார். விரல்களைக் கடிக்க முயலுகிற பால் பற்கள்கூட முளைத்திடாத பச்சைக் குழந்தை போல வாயில் வாநீர் வழிய அவர் மெல்லுகிற அழகை நான் நிதானமாக இரசித்தபடியே இருந்தேன். அவர் மீண்டும் தன் சுருக்குப் பையிலிருந்து வெற்றிலையை உருவியெடுத்து அதன் கூர்முனையை தன் பழுத்த விரல்களால் ஒரு சுண்டு சுண்டிவிட்டு சுண்ணைம்பை பச்சைக் குழந்தையை தழுவுவது போல தடவிக் கொடுத்தபடி வாயிலிட்டுக் கடித்துக் கொண்டார். கிராமங்களில் பார்க்கப் பார்க்க சலித்திடாத காட்சிகளுள் வயதானவர்களின் குழந்தைமைகள் ஏராளம் இருக்கின்றன போலும். உண்மையில் அதைக் காணக் கிடைத்தவர்களோ பாக்கியவான்கள் தான்.

ஆனா, இந்தச் சின்ன வயசுலயே ஆபரேசன் பண்ணனுமா? கொஞ்சம் பொறுத்துப் பண்ணக் கூடாதுங்களா?

குடத்தை இடுப்பில் தூக்கிக் கொள்வது போல வளர்ந்துவிட்ட தன் பிள்ளையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு தண்ணீர் ஊற்றிப் பிசைந்த சோற்றை பிள்ளைக்கு ஊட்டியபடியே பெண்ணொருவள் வாசல் வெளியே நின்று கொண்டு தனது சந்தேகத்தை சபைக்கு முன் கேட்டு வைத்தாள். அந்தக் குழந்தைக்கு இந்தக் கூட்டம் திருவிழாவைக் கொண்டாட்டத்தை நினைவுபடுத்தியிருக்கும் போல. அந்தப் பக்கமே கைகாட்டி அம்மாவின் சட்டையைப் பிடித்திழுக்க அந்த பிஞ்சுக் கரங்களின் இழுபறிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தபடியே கூட்டத்தின் முகப்பிற்கு வந்து கேட்பதற்கு லாகுவாக நின்று கொண்டாள்.

அம்மா, இங்க பாருங்க, வெளிநாட்டுல பொறக்குற புள்ளைங்களுக்கு ஆறு மாசத்துலயே வெளியில மிசின மாட்டி பேச வச்சிடுதாங்க. ஆனா பாருங்க, நம்ம கொழந்தைங்களுக்கு அஞ்சு வயசு ஆவப்போது, இன்னும் வைத்தியம் பண்ணுறதப் பத்தியே யோசிச்சுட்டு இருக்கோம். இப்போ கொழந்தைங்க தவக்குறதுக்கு ஒரு பருவம், எழுந்து, உக்காந்து, நடக்க ஒரு பருவம்னு இருக்குத மாதிரி புள்ளைங்க கேட்டுப் பேசுறதுக்கும் ஒரு பருவம் இருக்கு. அததை அந்தந்தக் கால கட்டத்துல சொல்லிக் கொடுக்கலைனா புள்ளைங்களுக்கு சுத்தமா பேச முடியாம போயிடுது. உலகம் முழுக்க ஆராய்ச்சிலாம் பண்ணிப் பாத்துட்டு என்ன சொல்லுதாங்கன்னா, ஒரு வயசுக்குள்ளயே கொழந்தைங்களோட கொறையக் கண்டுபிடிச்சு குணப்படுத்திட்டோம்னா பேச்சுச் சுத்தம் அப்படித் தெளிவா, நம்மளக் கணக்கா இருக்குமாம். அப்படியெல்லாம் புள்ளைங்க நம்மளாட்டம் பேச வேணாமா? அதுக்கு சின்ன வயசுப் புள்ளைலயே வயித்தியம் பண்ணா தான் சரியாவும்..

தான் பிசைந்து ஊட்டுகிற சோற்றைக் குதப்பியபடியே உதட்டைப் பிதுக்கி வெளியே தள்ளுகிற பிள்ளையின் வாயைத் துடைத்தபடியிருந்த அந்த அம்மா அதட்டலோடு மீண்டும் மீண்டும் சாப்பிட வைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தையோ புருவத்தை சுளித்து அழுதுவிடுகிற தோரணையில் அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்க்க, சுச்சுச்சுச்..சோ.. என்றபடி உச்சி முகர்ந்து கண்ணத்தைக் கிள்ளி ஒரு முத்தமிட்டார். அந்தக் குழந்தை மறுபடி நெற்றியை அகலமாக்கி கண்ணங்கள் நிறைய தெத்துப் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டது. அந்தச் சிரிப்பிற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல சட்டென்று சோற்றை வாயிற்குள் திணிக்க உதப்ப முடியாமலே குழந்தை மென்று விழுங்கிக் கொண்டது. அவளும் ஒரு குழந்தையாகி வெவ்வவ்வே.. என்பதைப் போல விரலை ஒடித்து வக்கனம் காட்டி சிரித்துக் கொண்டாள். அம்மாவும் குழந்தையும் பேசிச் சிரித்துக் கொள்ளுகிற காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று கண்கள் விலகி இந்தப் பெற்றோர்களின் பக்கமாய் திரும்பியது. அவர்களும் என்னைப் போல அவற்றையெல்லாம் பார்த்துத் தாழ்த்திக் கொண்ட முகத்தோடு தன் மகளின் வியர்க்காத முகத்தை வலிய தனது சோலை முகப்பால் துடைத்துவிட்டுக் கொண்டார்.

நான் எதையுமே பார்க்காதது போல கூட்டத்தின் மீது கண்களை அலையவிட்டேன். எல்லோருக்குமே ஒருவித சங்கடம் இருக்கும் போல. அவரவர் தங்களது ஆற்றாமையைப் போக்கிக் கொள்ள ஏதோவொரு கேள்வியைக் கேட்டுவிட்ட பின்னால் தங்களின் மனக்குறை தீர்ந்துவிடும் என்பது போல எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர். அடுத்தடுத்து விடாமல் வருகிற மழைத்துளி போல கேட்கப்படுகிற கேள்விகளுக்கு நிதானமாய் நான் பதிலளித்தபடியே அவ்வப்போது ஓரக் கண்ணால் அவர்களைத் தயக்கத்தோடே பார்த்துக் கொண்டேன்.

சார், பேச்சுவாக்குல நீங்களே சொல்லுதீங்க, ஆறு வயசு வரைக்கும் பண்ணலாம்னு. அப்புறம் எதுங்குங்கய்யா இப்பவே அவசரப்படனும்?

யண்ணே, இங்க பாருங்க. ஆறு வயசுங்குறது ஆறு லட்சம் பெருமான ஆபரேசனை இலவசமா பண்ணிக்கிட அரசு நமக்குத் தர்ற சலுகை தான். அந்த வயசுக்குள்ள பண்ணிக்கிட்டாத்தான் அரசு காப்பீட்டுத் திட்டம் வழியா இந்த ஆபரேசனை இலவசமா செஞ்சுக்கவே முடியும். ஆனா அதுக்காக ஆறு வயசு வரைக்கும் காத்துக் கெடக்கனும்னு கிடையாது, பாத்துக்கிடுங்க. கொழந்தை கேக்குறதப் புரிஞ்சுக்கிட்டு பேசுற பக்குவம் மூணு வயசுக்குள்ளயே நல்லா வளந்துடுது. அப்போ இருந்து நாம சிகிச்சையை தள்ளிப் போடப் போட அந்த வைத்தியத்தோடு பெலனும் கொறைச்சலாத்தான் போவும். அதுவே ஆறு வயசுக்கு மேல ஆகுறப்போ அதோட முழு பெலனும் கிடைக்காமப் போயிடுது. அதனால, எந்த வயசுல புள்ளைங்களோட கொறைய நாம கண்டுபிடிக்குறமோ அப்பவே போயி சிகிச்சை எடுத்துக்கிடது தான் அவங்களுக்கு நல்லது, கேட்டுக்கிட்டீங்களா?

மேற்கொண்டு கூட்டத்திலிருந்து எழுகிற ஒவ்வொரு கேள்வியின் தருவாயிலும் நான் குதூகலத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன். நிஜத்தில் நான் இப்படியொரு தருணத்திற்காகத் தான் அவசர அவசரமாக இங்கே வந்திருந்தேன். அவர்களுக்கோ குழப்பம் தீர நிறைய பதில் தேவை, எனக்கோ குழப்பம் தீர நிறைய கேள்விகள் தேவை. அதனால் அவர்களிடமிருந்து கேள்விகள் வர வர எனக்குள்ளிருந்த மருத்துவன் ஏனைய தகவலோடு துள்ளிக் குதித்தபடி மெல்ல மெல்ல கயிற்றைப் பிடித்து அடிமனதின் ஆழத்திலிருந்து மேலேறி வந்து கொண்டிருந்தான். நான் கொஞ்சம் அக்கறையோடு தலையில் குட்டு வைத்து உள்ளுக்குள் இருந்த மருத்துவனை சிரமப்பட்டே அமைதியாக உட்கார வைக்க வேண்டியிருந்தது.

இது மூளைக்குள்ள மிஷின வச்சி பண்ணுத ஆபரேசன்னு பேசிக்கிடுதாங்களே, அது உண்மைதானுங்களா?

யக்கோவ், அதுல ஒரு பாதி உண்மையும் இருக்குது, பொய்யும் இருக்குதுங்க. இப்போ, நம்ம கொழந்தைக்கு உள்காதுல இருக்குற நரம்புல தான் பிரச்சனை. ஆனா மத்தபடி உள்காதோட எலும்பு, உறுப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்குது. இந்த மாதரி பிரச்சனைல்லாம் பொறக்குற ஆயிரம் புள்ளைங்கள்ல ஆறு கொழந்தைக்கு இருக்குது, பாத்துக்கிடுங்க. அதனால இந்த மாதரியா பிரச்சனை இருக்குறவங்களுக்கு வெறுமனே தோலுக்கு கீழ சின்னதா சிப் கணக்கா வச்சு பண்ணி ஆபரேசன்ல சரி பண்ணிடுதாங்க. அதாவது காதுக்குப் பின்னாடி துருத்திட்டு இருக்கே ஒரு எலும்பு, அதுக்கும் தோலுக்கும் இடையில தான் சிப் கணக்கா ஒரு மிஷின வைப்பாங்க.

ஆனா நீங்க சொல்லுதீங்களே மூளையில வச்சு ஆபரேசன் பண்ணிடுவாங்கன்னு. அந்த ஆபரேசன யாருக்குப் பண்ணுவாங்கன்னா, உள்காதே வளர்ச்சி இல்லாம, மூளைக்குப் போற நரம்பு மட்டுமே சரியா இருக்குங்குற புள்ளைங்களுக்கு மட்டும் தான் அப்படி பண்ணுவாங்க. இந்த மாதரிக் கொறையுள்ள புள்ளைங்கல்லாம் ரொம்பவும் அபூர்வமாத் தான் பொறக்குதாங்க. ஆனா அந்தப் புள்ளைங்களுக்கும்கூட மூளையில பண்ணுத ஆபரேசன எந்த பிரச்சனையும் இல்லாம கெட்டிக்காரத்தனமா டாக்டருங்க பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. அப்படி ஆபரேசன் பண்ணிக்கிட்ட கொழந்தைங்களுமே இப்பவும் சொகமாத் தான் இருக்காங்க, அதையும் கேட்டுக்கிடுங்க.

எனது குழந்தையின் பெற்றோர்கள் கூட்டத்தினுள் கேட்கப்படுகிற எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின்னாலும்கூட சிறிய தூசி போன்ற உறுத்தல் உள்ளுக்குள் இருந்திருக்கும் போல. அவர் தனது குழப்பத்தின் கேள்வியை அவருக்கேயுரிய பயத்தின் சாயலில் தயங்கித் தயங்கியே என்னிடம் கேட்கத் துவங்கினார். எவ்வளவு தான் சுற்றியுள்ள உலகமே சமாதானம் சொன்னாலும் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிற காலம் வரையிலும் மனிதர்களுக்கு ஆறுதல் கிடைப்பதேயில்லை போலும். இதையெல்லாம் விளங்கிக் கொண்டவனாக நானும்கூட அத்தகைய புரிதலின் நிதானத்தோடு தான் அவரிடம் பேசத் துவங்கினேன்.

ஆனாலும் புள்ளைக்கு எதாச்சும் ஆயிடுமோன்னு பயமாத்தான் இருக்குதுங்க சார்!

அம்மா, பிரசவ வலியை தாக்குப் புடிச்சுக்கிட்டு தான் நாம புள்ளைய பெத்துக்கிடுதோம். அதுக்காக வலியை நெனைச்சுக்கிட்டு புள்ளை வேணாம்னு இருந்திட முடியுமா, சொல்லுங்க. இப்போ, நம்ம புள்ளைக்கு என்ன பிரச்சனைன்னு பாத்தாச்சு. அதுக்கு வைத்தியம் இதுதான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். இதுக்கு மேலயும் நாம பயந்துக்கிட்டு புள்ளைக்கு வயித்தியத்தை தள்ளிப் போடுறது, சரியில்லை பாத்துக்கிடுங்க.

அவ்வளவு துயரத்திலும் தூங்கிவிட்ட தன் பிள்ளையை மடியில் கிடத்தி நெஞ்சுக்கூட்டில் தட்டிக் கொடுத்தபடியே மெலிதாக அவர் வலிந்து சிரித்துக் கொண்டதை தெருவிளக்கின் ஆரஞ்சு விளக்கொளியில் நான்  இரகசியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் கூட்டம் ஏதோ சலசலப்போடே இருந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஈரக்காற்று கொஞ்சம் நிதானத்தோடு அங்கே வீசத் துவங்கியிருந்தது. காற்றின் ஈரப்பசையை குடித்துவிடுகிற தாகத்தோடு தட்டான்கள் தலையை உருட்டியபடி இலாவகமாய் பறந்தலைந்தபடி இருந்தன. நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். அதன் ஏக்கம் காற்றின் வேகத்தினுள் நுழைந்து சுளித்தபடி எங்கோ கரைந்து போனது. அப்போது கல்லூரிப் பெண்ணொருவள் முன்வந்து பொருத்தமான கேள்வியை பொதுவாய் கேட்டு வைத்தார்.

ஏதோ ஹியரிங் எய்டுன்னு சொல்லுறீங்ளே, அப்படின்னா என்னாதுங்க சார்?

எல்லாருமே கேளுங்க, ரொம்ப முக்கியமான கேள்வியத் தான் இந்தப் பொண்ணு கேக்குது. மொதல்ல, இந்தப் பேரப் பாத்த ஒடனே பயந்துட வேணாம். ஒங்க எல்லோருக்குமே ஈசியா புரியுத மாதரியே சொல்லுதேன், சரிங்களா.

ஹம்ம்.. இப்போ மேடைல ஒருத்தர் மைக்க புடிச்சு பேச்சிட்டு இருக்காருன்னு வச்சுக்குவோம். நீங்கல்லாம் பின்னாடி வரிசைல உக்காந்துருக்கீங்க. உங்க பக்கத்துல ஸ்பீக்கர் இருக்குறதுனால அவரு பேச்சுறது அத்தனையும் சுத்த பத்தமா கேக்குது, கேக்கும் தான?

சரி, அதையே மைக் இல்லாம அவரு பேசிருந்தா உங்களுக்குக் கேக்குமா, கேட்டுருக்காது. அதாவது அவரு பேசுற சத்தம் அந்த மைக்கு வழியா உள்ளாரப் போயி, அவரு பேசுறதவிட இன்னும் சத்தமா சுருதியக் கூட்டி அது ஸ்பீக்கர் வழியா வந்து தான் உங்களுக்குக் கேக்குது, புரிஞ்சுதா? இதை வெளங்கிக்கிட்டா ஹியரிங் எய்டு மிசினை பத்தியும் நாம புரிஞ்சுக்கிடலாம்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 15th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள்

ஹியரிங் எய்டுங்குறதும் ஒரு காது கேக்குற மிசினுதான். அதாவது கொஞ்சம் சத்தமா பேசுனாத் தான் கேக்குங்குறவங்களுக்கு இந்த மிசினை மாட்டி காது கேக்க வச்சுப்புடலாம். இந்த மிசின்லயும் நம்ம அண்ணாச்சி மைக்க புடிச்சு பேசுற மாதரியே குட்டியா மைக்கு இருக்கும். ஏன்னா, இந்தக் கொறைபாடு இருக்குறவங்களுக்கு பக்கத்துல இருக்குறவங்க பேசுறதே குசுகுசுன்னு கேக்க மாட்டுதே!

இந்த மைக்குல இருந்து வர்ற சத்தத்தை வாங்கிட்டு, அந்த மிசினுக்குள்ள இருக்குற சிப்பு என்னா பண்ணுதுன்னா, சொளவுல குருணை பொறுக்குற மாதரி நுட்பமா கேக்குத சத்தங்களை பிரிச்சுப் போட்டு அதை இன்னும் சத்தமா ஸ்பீக்கர் வழியா காதுக்குள்ளார அதிகமாக்கிக் கொடுக்குது.

இதுல முக்கியமா வெளங்கிக்கிட வேண்டிய விசயம் என்னான்னா, இப்போ அண்ணாச்சி மேடையில பேசுறதை ஒரே சத்தத்துல தான் இந்த ஸ்பீக்கர் எல்லாமே கூட்டிக் குடுக்கும். ஆனா ஹியரிங் எய்டு மிசினைப் பொருத்தவரைக்கும் அது அப்படியில்ல. அந்தந்த கொழந்தைக்குன்னு ஏத்த எறக்கமா இருக்குற காது கேக்குற கொறைபாட்டப் பொறுத்து அதுக்கேத்த மாதரி தான் மிசினை செட்டப் பண்ணி கொழந்தைங்களுக்கு மாட்டிவிட்ருப்பாங்க. அப்போ அந்த கொழந்தைக்கு எவ்ளோ சத்தம் தேவையோ அதுக்கேத்த மாதரியே பக்குவமா சத்தத்தை அதிகரிச்சுக் கொடுத்து காது கேக்க வைக்கிற வேலையத்தான் இந்த ஹியரிங் எய்டு மிசினு செய்யுது பாத்துக்கிடுங்க. ஆனா, இந்த ஹியரிங் எய்டு மாட்டுறதுக்கு ஆபரேசன்லாம் தேவையில்ல, சும்மா காதுல மாட்டிக்கிட்டாலே போதும்.

அதே மாதிரி ஏதோ காக்ளியார் இம்பிளாண்ட்னு ஆபரேசன் பண்றதா சொல்றீங்களே, அது வழியா எப்படிங்கய்யா காது கேக்கும்?

தான் கேட்டுக் கொண்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்ட உற்சாகத்தோடு அடுத்த கேள்வியையும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டார். உண்மையில் இந்தக் கேள்வியை கேக்கத் தெரியாமல் விளித்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு இந்தப் பெண்ணின் சந்தேகம் எல்லோருக்குமானதாக ஆகிவிட்டிருந்தது. நான் அவரது கேள்விகளை அங்கீகரிக்கும் விதத்தில் ‘வெரிகுட்’ என்பதான உடல் பாவணைகளை வெளிப்படுத்தியபடியே விசயத்திற்குள் நுழைந்து கொண்டேன்.

இந்தப் பொண்ணு கேக்குத ஒவ்வொரு கேள்வியும் உங்க எல்லோத்துக்குமே தேவையான ஒண்ணு தான் பாத்துக்கிடுங்க. நாஞ் சொல்லுறத சரியா கேட்டுக்கிடுங்க. இப்போ, நான் ஏற்கனவே ஹியரிங் எய்டு மிசினைப் பத்தி சொன்னேன்ல. அதைப் புரிஞ்சுக்கிட்ட பின்னாடி இதுவுமே சுலபம் தான். இப்போ நாம ரேடியோவுல பாட்டு கேக்குதோம். சரியா கேக்கல, காதைத் திருகுற மாதரி இன்னும் பட்டனைத் திருகித் திருகி சத்தத்தை கூட்டிக்கிட்டே போறோம். ஒருகட்டத்துக்கு மேல அந்த ஸ்பீக்கரோட பவர் அவ்ளோ தான்னு முடிஞ்சிடும் இல்லியா, அதே மாதரித்தான் ஹியரிங் எய்டுக்கும் ஒரு எல்லை இருக்கு.

அறுபது, எழுவது பவர் பட்டன் வரைக்கும் காது கேக்கலைன்னாகூட ஹியரிங் எய்டு மிசினை போட்டு சத்தத்தை கூட்டி வச்சு கொழந்தைக்கு காது கேக்க வச்சுப்புடலாம். அதாவது இப்போ, காது கேக்காத புள்ளைங்க வெடி சத்தம் கேட்டா, இடி இடிச்சா மட்டும் தான் திரும்புதுன்னு பெத்தவங்க சொல்லுவாங்க, இல்லியா! அப்படின்னா என்னா அர்த்தம்? அந்த அளவு சத்தத்துல தான் புள்ளைங்களுக்கு காது கேக்கவே செய்யுது, புரியுதுங்களா? அந்த அளவு வரைக்கும் ஹியரிங் எய்டு மிசினால சத்தத்தை கூட்டிக் குடுக்க முடியுமான்னு மொதல்ல நாம செக்கப் பண்ணி பாக்கனும்.

ஆனா எம்பது பவர் வரைக்குமே கொடுத்தாலும் புள்ளைங்களுக்கு காது கேக்காதுங்குற எல்லைக்கு அந்தக் கொறைபாடு போயிடுச்சுன்னா இந்த மிசினால கொழந்தைங்களுக்கு ஒரு பிரயோசனமும் இருக்காது. அப்படியே மிசினை மாட்டிப் பாத்தாலும் ஏதோ மிக்சி ஓடுற மாதரித் தான் அந்தக் கொழந்தைக்கு கொகொரன்னு கேக்குமே தவிர தெளிவான பேச்சுச் சத்தமே இருக்காது. இப்படிக் கேக்குற சக்தி எம்பது பவருக்கும் மேல போகுறப்போ, ஹியரிங் எய்டு மிசினை மாட்டியும் கேக்காதுங்குறப்போ தான் காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசனையே ஆசுபத்திரில பண்ணச் சொல்லுதாங்க, சரியா கேட்டுக்கிட்டீங்களா..

காக்ளியாங்குறது உள்காதுக்குள்ள இருக்குற முக்கியமான உறுப்பு. அந்த உறுப்பு சரியா வேலை செய்ய மாட்டேங்குங்குறதால, அதுக்கு பதிலா ஒரு மிசினை நாம பொருத்துறதால தான் அதனை இம்பிளாண்ட்னு இங்கிலீஸ்ல சொல்லுதோம். அதை காக்ளியாலயே போய் பொருத்துறதால தான் காக்ளியார் இம்பிளாண்ட்னு கூடுதலா வெளக்கம் சொல்லுதாங்க.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 15th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள்

இப்போ காக்ளியார் இம்பிளாண்ட்ல ரெண்டு மிசின் இருக்கு பாத்துக்கிடுங்க. அதுல ஒன்னை தான் ஆபரேசன் பண்ணி உள்ள வைக்குதாங்க. இன்னொன்னு வெளியில சும்மா காதுல மாட்டிக்கிடுத மாதரி தான். இதைப் பத்திப் புரிஞ்சுக்க நான் ஒரு உதாரணம் சொல்லுதேன், கேக்குறீங்களா?

நாம போஸ்ட் ஆபிஸ் போறோம். அவங்க என்ன பண்ணுதாங்க, ஒரு குறிப்பிட்ட ஏரியாவச் சுத்தி இருக்குத தபாலை எல்லாம் வாங்கிட்டு வந்து அதையெல்லாம் பின்கோடு வாரியா பிரிச்சு வரிசைப்படுத்தி வைக்கிறாங்களா. அப்புறமா அதை பார்சல் பண்ணி ரயில்லயோ, பஸ்ஸுலயோ அனுப்பி வைக்குறாங்க. அதெல்லாம் அந்தந்த ஏரியாக்குப் போனதும் அங்க இருக்குற போஸ்ட் மேன் என்ன பண்ணுதாரு, அந்த பின்கோடப் படிச்சுப் பாத்துட்டு அதுல இருக்குத வீட்டு நம்பருக்குத் தக்க வண்டியில போய் டோர் டெலிவரி பண்றாரு, சரிதான? இதுல ஒன்னும் கொழப்பம் இல்லியே!

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 15th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள்

இப்போ காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசனுக்கு வந்துடுங்க, வந்துட்டீங்களா? இதுல ஆபரேசனப் பண்ணி உள்ள வைக்குற பகுதி ஒன்னும், காதுக்கு வெளியில மாட்டிக்கிற பகுதி இன்னொன்னும் இருக்குன்னு சொன்னேன்ல, இந்த வெளியில மாட்டிருக்க தொரட்டிக் கம்பு மாதரி பகுதியோட மொனையில தான் குட்டியா மைக் இருக்கு. இந்த மைக்கு தான் நம்ம தபால் பெட்டி. சுத்தி இருக்குற ஏரியாவுல இருக்கிற தபால வாங்கி போடுற மாதரி கொழந்தையச் சுத்தி இருக்குற சத்தத்தை எல்லாம் இந்த மைக் வாங்கிகிட்டு மிசினுக்குள்ளார அனுப்புது.

போஸ்ட் ஆபிஸ்ல பின்கோடுக்கு ஏத்த மாதரி பிரிச்சு வைக்கிற வேலை நடக்குத மாதரி, இந்த மிசினுக்குள்ளயும் சுதி அதிகமா இருக்குறது, கொறைச்சலா இருக்குறதுன்னு கேக்குத சத்தத்தை வச்சு அந்தந்த அதிர்வு நம்பருக்கு ஏத்த மாதரியா பிரிச்சுப் போட்டு அதை பின்கோடு கணக்கா குறிச்சு பார்சல் பண்ணி வெளியே அனுப்புது. இப்படி பார்சல் பண்ண சத்தம்லாம் மிசினுல இருந்து போற வயரு வழியா போயி வட்டமா தலையில ஒட்டி வச்சுருக்குற காந்தத்துக்கு வந்து சேருது. இங்கின வட்டமா இருக்குது பாத்துக்கிட்டீங்களா, இது தான் டெலிவரி பாய்ண்ட். இங்கின இருந்து தான் வெளிய இருந்து பார்சல் பண்ண சத்தங்களை உள்ளார இருக்குத மிசினுக்கு பாதிப்பில்லாம பக்குவா அனுப்புது. நம்ம போஸ்ட் ஆபிஸ்ல ரயில்ல பஸ்ஸூ வழியா அனுப்புத மாதரி.

அடுத்ததா பார்சல் பண்ணுன சத்தமெல்லாம் உள்ளாரப் போனதும் அங்குன இருக்குற மிசின் என்ன பண்ணுதுன்னா, அந்த பார்சலைப் பிரிச்சுப் பாத்து பின்கோடு வரிசைப்படி அடுக்கி வச்சுக்கிடுது. பின்ன, அதுல இருந்து கொரங்கு வாலு மாதரியா நீண்டுகிட்டு போகுதுல்ல, அதுக்கு இதெல்லாத்தையும் அனுப்பிடும். அந்த வாலுல தான் பன்னென்டு வகையான மின் தகடுங்க இருக்கும். அந்த தகடுங்க எல்லாம் பியானோ மியூசிக் போடுத பட்டன் மாதிரி சுருதிக்கு ஏத்த கணக்கா வரிசையா இருக்கும். நாம வீட்டு நம்பரைப் பாத்து டோர் டெலிவரி பண்ணுத மாதிரி சுருதி வாரியா சத்தங்களைக் கொண்டு போய் ஒவ்வொரு தகட்டுலயும் பந்துஸ்தா மிசினு சேக்குது.

அதாவது சாதாரணமா வெளிய கேக்குத சத்தத்தை எல்லாம் உள்காது வாங்கி மின்சாரமா மாத்தி நரம்புக்கு அனுப்புத வேலைக்குப் பதிலா, இந்த மிசினு இந்த சத்தங்களை சுருதி வாரியா பிரிச்சுப் போட்டு உள்காதுல இருக்குற நரம்புக்கு அனுப்பி வைக்குது. நம்ம கொழந்தைக்கு மூளைக்கு போற நரம்பு நல்லா இருக்குறதால அது வழியா சத்தமும் பக்குவமா மூளைக்குப் போய் சேந்துடுது. அங்க மூளையுமே நம்மளோட ஞாபகம் எல்லாத்தையும் புரட்டிப் பாத்து, யார் பேசுதா, என்ன பேசுதாங்க அப்படின்னு புரிஞ்சுக்கிட்டு, நம்ம என்ன செய்யனும், என்ன பதிலைச் சொல்லனும்னு நமக்குக் கட்டளையிடுது. இப்படித்தான் நம்மளச் சுத்தி என்னலாம் கேக்குதுன்னு மிசினும், மூளையும் நமக்குப் புரிய வைக்குது. அதைக் கேட்டுட்டு நாமலும் பதிலுக்குப் பதிலு வாயாடிட்டு இருக்கோம். உங்களுக்கு இதெல்லாம் புரிஞ்சதா?

அவர்கள் எதுவும் பேசவில்லை. பார்சல், டோர் டெலிவரி, போஸ்ட் ஆபிஸ் என்று எளிமையாக புரிந்து கொள்கிற வகையில் பேசிய போதும், இந்த ஒரு விளக்கம் மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தெரியும்தான். மருத்துவராகிய எனக்கே இதைப் படித்து புரிந்து கொள்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்ட போது, இவர்களுக்கு ஒரே சமயத்தில் புரிந்துவிட வேண்டுமென்பது எதிர்பார்ப்பது அபத்தமான விசயம்தான். ஆனால் எப்படியோ ஒரு எளிய உதாரணத்தோடு விளக்கிவிட்ட திருப்தியோடு சுற்றும் முற்றும் பார்க்க, ஓரளவு எல்லோரும் சமாதானமாகிவிட்ட பாவனையில் சில கேள்விகள் கேட்கிற குரல் மட்டுமே அங்குமிங்குமாக கேட்டுக் கொண்டிருந்தது.

ஐயா, நீங்க சொல்லுத மாதிரி வாய் பேசாதே கேக்காத புள்ளைங்கள நானும் பாத்துருக்கேனுங்க. இந்த மாதரி ஆபரேசன் பண்ண கொழந்தைங்கலாம் இன்னும் சரியா பேசாமத்தான் இருக்குது. அதுக்குப் பெசாம ஆபரேசன் பண்ணாமலே இருக்கலாமுங்களே?

ஐயா, நீங்க சொல்லுறதும் ஒருவிதத்துல நெசந்தேன். கொழந்தைக்குப் பேச்சு வரல, காது கேக்கலன்னு ஆசுபத்திரிக்கு போயி இது இலவசமா பண்ணுதாங்கன்னு ஒடனே பெத்தவங்களும் துணிஞ்சு ஆபரேசனப் பண்ணிப்புடுவாங்க. ஆனா அதுல ஒன்னப் புரிஞ்சுக்கிடனும். இந்த வைத்தியங்குறது ஆபரேசன வச்சு மட்டும் இல்லிங்க. அதுக்கப்புறமா பேசுறதுக்கு பயிற்சி கொடுக்குறதுல தான் முழு பெலனும் இருக்கு. பெத்தவங்க சிலரு ஆபரேசன் பண்ணதும் அவங்க கடமை முடிஞ்சதா நெனைச்சுக்கிட்டு அத்தோட பயிற்சிக்கு கூப்பிட்டு போறதயே மறந்துடுதாங்க. அப்படி பயிற்சி எடுத்துக்கிட்டா தானே பேச்சு வரும்?

இந்தப் புள்ளைங்க மிசினு வழியாத் தான் கேட்டுப் பேசப் பழகனுங்குறதால முறையா போய் பயிற்சி எடுத்துக்கிட்டா தான் பேச்சுச் சுத்தமா வரும். அதைப் பலரும் புரிஞ்சுக்கிடது கெடையாது, பாத்துக்கிடுங்க. நீங்க பாத்த புள்ளைங்களும் அப்படிப் பயிற்சிக்கு சரியா போகாத புள்ளையாத் தான் இருக்கும், இல்ல தாமதமா சிகிச்சை பண்ணிக்கிட்ட புள்ளையா இருக்கும். அதனால ஆபரேசன் பண்ணிக்கும் போதே அடுத்ததா பயிற்சி கொடுக்கனுங்குறதயும் பெத்தவங்க புரிஞ்சுக்கிடனும்.

ஆமாங்கய்யா, கொழந்தை ஆபரேசன் பண்ணதும் நம்மள மாதரியே பேசிப்புடுங்களா?

கொழந்தைங்களுக்கு ரெண்டு பிரச்சனை, அதுல ஒன்னுதான் காது கேக்கலைங்குறது, சரியா? இப்போ நாம மிசின் மூலமா ஆபரேசன் பண்ணி காது கேக்க வச்சுடுதோம். ஆனா பேசனுமே! கொழந்தை பொறந்ததுமே பேசிடுதா, இல்லையே! சுத்திக் கேக்குற சத்தத்தை கவனிச்சுப் பாத்துட்டு மொதல்ல புள்ளைங்க அழுதுகிட்டு தான் இருப்பாங்க. அவங்களுக்கு அது சத்தம்னு கூட தெரியாது. காதுக்குள்ள என்னமோ பண்ணுது, ஏதோ போயிடுச்சுங்குற மாதரி தான் கத்திக் கூப்பாடு போட்டு மிசின புடிங்குப் போட பாப்பாங்க.

நாம தான் சுத்தி கேக்குறதுலாம் சத்தம் தான். அதுல குயில் க்கூ.. க்கூ.. ன்னு கத்தும், நாய் இப்படி லொள்.. லொள்..ன்னு கொலைக்கும், வண்டிச் சத்தமா பாம்.. பாம்..னு கேக்கும்னு படிப்படியா சத்தத்த பத்தி சொல்லிக் கொடுக்கனும். அதுக்கப்புறமா அந்த சத்தத்துல இருந்து ஒவ்வொரு வார்த்தையா சொல்லிக் கொடுத்து, அதைப் புரிய வச்சு பேசக் கத்துக் கொடுக்கனும். அஞ்சு வயசுல ஆபரேசன் பண்ணாலும் அவங்கள பொருத்தவரைக்கும் சத்தத்தை கேக்குறதுல அன்னிக்கு பொறந்தவங்களா தான் அர்த்தம். நாம தான் கொஞ்சம் கொஞ்சமா பதனமா சொல்லிக் கொடுத்து பேசக் கத்துக் கொடுக்கனும். அதையெல்லாம் நாம ஆபரேசன் பண்ண ஆஸ்பத்திரிலயே காப்பீட்டு திட்டம் மூலமா இலவசமா ஒரு வருசத்துக்கு சொல்லிக் கொடுத்துடுவாங்க. அப்படி நம்மள மாதரி ஓரளவு பேசக் கத்துகிறதுக்கே ஒரு வருசம் வரைக்கும் ஆகும். அதையுமே நாம புரிஞ்சுக்கிடனும்.

ஐயா, இந்த மிஷினை மாட்டுனா மூளைக்குள்ள துரு புடிச்சுப் போயிடும், பைத்தியம் புடிச்சு புத்தி பேதளிச்சிடும்னு சொல்லுறாங்களே, நெசந்தானுங்களா?

இந்த ஆபரேசன நம்மூர்ல மட்டுமில்ல, ஒலகம் முழுக்க பண்ணிட்டு தான் இருக்காங்க. அப்படிப் பண்ணிட்டு புள்ளைங்களும் நல்லபடியா பேசி, பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு சொகமா வாழ்ந்துட்டுதான் இருக்காங்க. அதனால இப்படி மூளைக்குள்ள பண்ணுதாங்க, துரு பிடிச்சுடும், பையித்தியம் பிடிச்சிடும்னு சொல்லுறதெல்லாம் ஆபரேசன் பத்தின பயத்துலதான் சொல்லுதாங்களே தவிர, அப்படியெல்லாம் இதுவரைக்கும் ஆனதில்ல. அதே போல இந்த ஆபரேசன் ஏற்கனவே சொன்ன மாதரி தோலுக்கும் எலும்புக்கும் நடுவுல தான் பண்ணுதாங்களே தவிர மண்டையோட்டை தாண்டி மூளைக்குள்ள எல்லாம் பண்ணலைங்குற நாமலும் சூதானமா புரிஞ்சுக்கிடனும்.

ஆனா, இதுங்க வெளாட்டுத் தனமா இருக்குதுங்களே, புள்ளைங்க கீழ விழுந்து அடிபட்டு, மிஷினை புடுங்கி எறிஞ்சுட்டா என்னா பண்ணுறது?

அம்மா, நாம சின்னதா காயம் பட்டாலே தண்ணி படாம, தூசி படாம சுத்த பத்தமாக தொடைச்சி மருந்து போட்டுப் பாத்துக்கிடனும். இது மிசினை வச்சு பேசாத புள்ளைய பேச வைக்குற பக்குவமான வைத்தியம். இதுக்கு கொஞ்சம் பந்துஸ்தா பாத்துக்கிட தான் செய்யனும்குறத நாம மொதல்ல புரிஞ்சுக்கிடனும். அதே சமயம் புள்ளைங்களுக்கு ஆரம்பத்துல மிசின் வழியா சத்தம் கேக்கவுமே அது என்னமோ ஏதோன்னு அலறுவாங்க, கத்துவாங்க, மிசின புடிங்கிப் போடத்தான் பாப்பாங்க. ஆனா இது வழியா தான் நம்ம அம்மா சொல்லுறது கேக்குது, சுத்தி எல்லோரும் சொல்லுறத இதை மாட்டிக்கிட்டா தான் புரிஞ்சுக்க முடியும்னு தெரிஞ்சிக்கிட்டான்னா, நீங்களே கழட்டச் சொன்னாக்கூட புள்ளைங்க எடுக்க விட மாட்டாங்க. அதுக்கப்புறமா அவங்களே அந்த மிசின பதனமாப் பாத்துக்குவாங்க. ஆனா அதுவரைக்கும் நாம தான் கொஞ்சம் கவனமா பாத்துக்கிடனும், புரிஞ்சுதாம்மா?

ஐயா, நெசமாவே இது இலவசம் தானுங்களா இல்ல, கூப்பிட்டு போயிட்டு கூடுதலா ஏதும் துட்ட-கிட்ட புடுங்கிப்புடுவாங்களா?

சத்தியமா முழுக்க இலவசந்தானுங்க. புள்ளைங்கள மொதல்ல கூப்பிட்டு போயி செக்கப் பண்ணிட்டு, ஆபரேசன் செஞ்சு, அடுத்ததாத பேச்சுப் பயிற்சி கொடுத்து புள்ளைங்க பேசிப் பழகுற ஒரு வருசம் வரைக்கும் அத்தனைக்குமே ஒத்த பொட்டு காசு கெடையாது, கேட்டுக்கிட்டீங்களா. என்ன, சந்தோசம் தான?

காப்பீடு திட்ட அட்டை எங்களுக்கெல்லாம் இல்லீங்களே, ஒரு அவசர ஆத்தரத்துக்கு ஒத்தசையா இருக்கனும்னா, எங்க போயி எப்படி வாங்குறதுன்னு கொஞ்சம் எங்களுக்கும் உதவி பண்ணுங்கய்யா?

அது ஒன்னும் கஷ்டமான காரியமில்ல கேட்டுக்குங்க. உங்களோட ரேசன் கார்டையோ, ஸ்மார்ட் கார்டையோ கொண்டு போயி வி.ஏ.ஓ ஆபிஸ்ல கொடுத்தா போதும், உங்களோட சம்பாத்தியம் வருசத்துக்கு எழுபத்தி ரெண்டாயிருத்துக்குள்ள இருந்துச்சுன்னா அங்குனயே பாரத்துல கையெழுத்துப் போட்டு வி.ஏ.ஓ கொடுத்துருவாரு. அதுக்கெல்லாம் ஒத்த செலவு கெடையாது, பாத்துக்கிடுங்க. அதை அப்படியே கொண்டு போயி கலெக்டர் ஆபீஸ்ல இருக்குற காப்பீட்டு ஆபிசுல கொடுத்தோம்னா அவுங்க கம்யூட்டர்லயே போட்டோ எடுத்து பத்து நிமிசத்துல கார்டு போட்டுக் குடுத்துடுவாங்க. அத வச்சுக்கிட்டு எங்கனாலும் இலவசமா வயித்தியம் பாத்துக்கிடலாம். மொதல்ல போயி, அத வாங்கி வையுங்க அப்பத்தா, போங்க..

எல்லாம் பேசி முடிந்த பின்னால் மனநிறைவாய் இருந்தது. பிறைநிலாவிலிருந்து பௌணர்மிக்கு உருக்கொள்கிற பரிபூரணத்தைப் போலொரு இடத்தை என் மனம் அடைந்திருந்தது. மெல்ல மெல்ல தங்களுக்குள்ளே பேசிக் கொள்கிற கூட்டம் ஆங்காங்கே கலையத் துவங்க நான் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி எல்லாம் நல்ல படியா முடியும் என்பதாக ஆறுதல் கூறிவிட்டு கிளம்பத் துவங்கினேன். சாப்பிடாமலே உறங்கிவிட்ட அவரது பிள்ளைகளை எழுப்பி அரைத் தூக்க மயக்கத்தில் உணவை ஊட்டிவிட அவர்கள் ஆயத்தமாகவே, எழுந்து வெளியே வந்து நான் வானத்தைப் பார்த்தேன். இன்னும் பௌணர்மி நாளுக்கு கொஞ்ச நாட்களே மீதமிருந்தன. இனி அந்த ஆபரேசன் செய்து கொள்கிற நாளுக்காக இனி காத்திருப்பது மட்டுமே நான் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது.

அடுத்ததாக, சென்னை மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்து குழந்தைகள் இருவரும் ஒருசேர அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதையும், அவர்களுக்குக் கருவிகளைப் பொறுத்தி வாழ்வின் முதன் முதலாக சப்தங்களைக் கேட்டுக் கொண்டு குழந்தைகள் அடைந்த நெகிழ்வான தருணங்களையும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

முந்தைய தொடர்களை படிக்க: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 11 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 12 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 13 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14 – டாக்டர் இடங்கர் பாவலன்

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14



சென்னையில் நானும் குழந்தைகளும்..

– டாக்டர் இடங்கர் பாவலன்

 

மின்னுகிற ஒளிச்சிறகுகளை ஆயாசமாக வானிலே விரித்து, அந்தி சாய்கின்ற கணங்களின் உற்சவ நடனத்தை ஆடிக்களித்தபடியே மலை முகடுகளின் மீதேறி மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது சூரியன். கிரகணங்கள் சூழ்வதைப் போல வாய் பிளந்து கொண்ட மலை இடுக்குகளின் பற்களுக்குள் சூரியன் பொத்தென்று விழுந்து பூமியின் தொண்டைக்குழி ஆழத்திற்குள் நழுவியபடியே போய்க் கொண்டிருந்தது. கதிரவன் கலைந்துவிட்ட சோகத்தையெல்லாம் காணச் சகியாதவாறு ஜனத்திரள் கூட்டமொன்று மேற்கிலிருந்து சூரியன் மீண்டும் உதித்திடாதா என்கிற பாவனையோடு தண்டவாளங்களின் ஓரங்களில் நின்று இருண்ட ஆகாசத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தது. மேற்கின் அடிவானத்திலிருந்து சூரியப் புள்ளி போலக் கிளம்பி கொஞ்சம் கொஞ்சமாக சிவந்து தகித்தபடி இரயில் தனது முகப்பு ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியபடி குபுகுபுவென இரயில் நிலையத்தை நோக்கி ஓடோடி வந்து கொண்டிருந்தது.

இரயில்நிலையப் பிளாட்பாரங்களில் அம்மாக்களின் கைகளைப் பிடித்துக் கொண்டும், அப்பாக்களின் தோள்கள் மீதேறியும் குழந்தைகள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். புள்ளியிலிருந்து கோலம் உருத்திரண்டு வருவதைப் போல இரயில் தனது பருத்த உடலைக் காட்டி உரக்க சப்தமிட்டபடியே நெருங்கி வந்து கொண்டிருந்தது. அதுவரை துடிப்போடிருந்த குழந்தைகளெல்லாம் பற்றியிருந்த கைகளின் பிடிகளைத் தளர்த்தியபடி தரையிலமர்ந்து தங்கள் காதுகளின் இரைச்சல்களை இருகைகளாலும் பொத்திக் கொண்டனர். ஒருசில வளர்ந்துவிட்ட குழந்தைகள் விரல்களால் வணையப்பட்ட மகுடியால் உதடுகளின் மாடத்திலிருந்து குக்கூகூவென குரலெழுப்பியபடியே துள்ளிக் குதித்து சர்ப்பத்தைப் போலொரு நடனமாடிக் கொண்டிருந்தனர். எனதருகே காளீஸ்வரியும் ப்ரியாவும் எந்தவொரு சலனமுமின்றி ஊர்ந்து வருகிற பூதாகரமான இரயிலைப் பார்த்தபடி கற்சிலைகளில் ததும்புகிற பேரமைதியின் பூரணத்தோடு நிதானமாக நின்று கொண்டிருந்தனர்.

பிளாட்பாரத் தாழ்வாரங்களின் குடைகளுக்குக் கீழே காளீஸ்வரி, ப்ரியாவினுடைய குடும்பத்தோடு ஒருவனாக நின்றபடி இரயிலின் நகர்தலுக்கேற்ப, எங்களது இருக்கைகளடங்கிய இரயில் பெட்டியை நோக்கி முன்னும் பின்னுமாக அவதியோடு ஓடிக் கொண்டிருந்தோம். அத்தனை மனித இடிபாடுகளுக்கு மத்தியிலும் அவசரகதியிலே பெற்றோர்கள் கடக்கிற இரும்புப் பெட்டிகளை குழந்தைகள் விரல்விட்டு எண்ணியபடி இருந்தனர். நான் அவர்கள் இருவரையும் ஒரு கணம் திகைத்துத் திரும்பிப் பார்த்தேன். 

இதுவரை இப்படியொரு வெளிச் சுவாசத்தை நுகர்ந்துவிடாத புது அனுபவத்தையும், கூட்டத்தின் ஒவ்வாமையால் கண்களுக்குள் நிறைகிற அதிர்ச்சியின் விசும்பலுமாக ஒருவித கலவரத்தின் சாயலோடு அம்மாக்களின் கைகளை இறுகப் பற்றியபடி அவர்களிருவரும் நடுக்கத்தோடு வந்து கொண்டிருந்தனர். ஒருவித அச்சத்தின் பிடியில் பதுங்குகிற தன்மையோடு, பாவம் போல மரக்கிளையைப் பற்றியிருக்கிற தேவாங்கின் சாயலோடு அவர்கள் என்னைப் பார்த்தபடி விழிப்பதும், பின் அதிர்ச்சியில் உறைந்து கண்களில் ஒருவித ஏக்கம் கொள்வதையும் நான் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரயில் நிலைய அறிவிப்புகள், நடமாடும் விற்பனையர்களின் கூவி விற்கும் காரசாரமான பேச்சொலிகள், எரிச்சலும் பதட்டமுமாக சதா நகர்ந்து கொண்டேயிருக்கிற மனிதர்களென ஒட்டுமொத்த இரைச்சலின் உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட அவர்களிருவரைப் போலவே நானும் இருந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தோடு ஒருமுறை கற்பனையால் என்னை முழுவதுமாக நிறைத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல அவிழ்ந்து காற்றுக்கேற்ப இசைந்தபடி, பட்டும் படாமலுமாக இலையொன்று ஆற்றில் விழுகிற நித்தியத்தைப் போலொரு பேரானந்தத்தை ஒருவேளை இவர்களிடமிருந்துதான் நான் கற்றுத் தேர முடியுமோ என்னவோ?

தொலைவிலிருந்து கிளிப்பச்சை வண்ணத்தில் ஊழியரின் கைகள் சிறகினை அசைக்க இரயில் தனது ஏக்கப் பெருமூச்சை விட்டபடி நிலையத்திலிருந்து மெல்லக் குழுங்கி நகர்வதற்குள் எங்களது இருக்கைகளைக் கண்டுபிடித்து நாங்கள் ஒருசேர அமர்ந்திருந்தோம். இரயிலின் இருக்கைகள் கடைவாய்ப் பற்களைப் போல எதிரெதிர் துருவமாய் இசைந்து அமைந்திருப்பதும்கூட பயணாளிகளுக்கு ஏக சௌந்தர்யமான விசயம்தான். பயணம் முழுக்க ஏகாந்தமாய் பேசிச் சிரித்துக் கொள்ளவும், கூடி அரசியல் பேசி விவாதித்துக் கொள்வதுமாக யாரேனும் சக பயணியொருவர் கிடைத்துவிட்டாலே போதும், அந்தப் பயணமே பெரும் நித்தியத்தின் கொண்டாட்டமாகிவிடும்.

ஆனாலும் இப்போது நான் களிப்பூட்டும் சுற்றுலாவிற்காகச் செல்லவில்லை என்கிற பிரக்ஜையோடு தான் சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். இன்பச் சுற்றுலா செல்கிற எத்தனையோ இரயில் பயணிகளுக்கு மத்தியில், தங்களது பிள்ளை ஒரு வார்த்தை அம்மா, அப்பாவென்று பேசிடாதா! என்கிற கனவுகளோடுப் பயணிக்கிற இரண்டு குடும்பங்களும், அவர்களோடு மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டு உடன் செல்கிற பைத்தியக்கார மருத்துவரும் இருப்பதைப் பற்றிய கவலை யாருக்காவது இருக்குமா என்ன?

என்னோடு சேர்ந்து எதிரிருக்கையில் அமர்ந்தவரும் பிரியாவிற்காகவும் காளீஸ்வரிக்காகவும் ஜன்னல் இருக்கைகளை மனமுவந்து தியாகம் செய்ய வேண்டியதிருந்தது. இருளுக்குள் மண்ணுளிப் பாம்பைப் போல பதுங்கி தண்டவாளங்களில் நகர்ந்து கொண்டிருக்கிற இரயிலின் ஜன்னலுக்கருகே அமர்ந்து, தங்கள் முகத்திலிருந்து துருத்திக் கொண்டிருக்கிற மூக்கை வெளியே நீட்டியபடி, வீசுகிற காற்றின் குளிர்ச்சியை நாசித்துவாரங்களுள் நிறைத்து விளையாடியபடியே கனிந்து சிரித்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியே செவ்வகமாய் விழுகிற வெளிச்சப் பாதையில் அவசரத்தோடு கிளைகளசைத்து வழியனுப்பி வைக்கிற மரங்களுக்காக அவர்களும் காற்றிலே விரல்களின் ஜாடையால் கைகளசைத்து விடை கொடுத்தபடி எதனோடோ அரூபமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

நிஜத்தில், வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த இந்தக் குழந்தைகளையும், எல்லாம் தங்கள் விதியென நொந்த கொண்ட பெற்றோர்களையும் கரம் படித்து வீட்டிலிருந்து நகர்த்தி இரயில்நிலையம் வரையிலும் அழைத்து வந்த கால இடைவெளியில் எனக்குள்ளே நான் நிகழ்த்திய மனப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கையில் எனது நெஞ்சுக்குழியிலிருந்து கசப்பான நொடியொன்று மேலேறி நாசித்துளையை நெறிக்கிறது. ஆனாலும் ஆற்றை நோக்கிய படித்துறை கல்படிக்கட்டுகளின் ஈரம்படிந்த தடங்களில் கால் வைத்து, பாதங்கள் குளிர உடல் இன்புற்றுச் சிலிர்த்துக் கொள்வதைப் போல, இந்தக் கணத்தில் எனது முதல் முன்னேற்றத்தை நினைத்து உள்ளார எனக்கு முழுதிருப்திதான். ஆனாலும் இனி எல்லாவற்றிற்குமாக என்னை ஒப்புக் கொடுத்து மூழ்கி நான் சமுத்திரத்தினுள் எழுவதற்காக முன்னேறி மேலும் மேலுமாக நகர்ந்து கொண்டே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தே இருக்கின்றேன். இந்தப் பெற்றோர்களை சென்னைக்கு வரவழைப்பதற்கான துருப்புச்சீட்டைக் கண்டுபிடித்து அத்தனைக்கும் அவர்களை ஒப்புக் கொள்ள வைப்பதென்பது எனக்கு அதிசிரத்தையுடையதாகவே இருந்தாலும்கூட அத்தகைய போராட்டத்தை இப்போதெல்லாம் நான் மனமுவந்து விரும்பியே தான் செய்கிறேன்.

காளீஸ்வரி, ப்ரியா இரண்டு குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற்றோர்களைச் சந்தித்து உரையாடுகையில் எனது வார்த்தைகளின் மீது எத்தகைய கவனத்தை வைத்திருக்க வேண்டுமென்பதைப் பற்றி முன்னமே நான் மனதில் சூட்சமமாக குறித்து வைத்துக் கொண்டேன். என்னையறியமால் அவர்களுக்குச் சாதகமாக நான் உதிர்க்கிற சிறு வார்த்தைகளும் எனக்கெதிரான ஆயுதமாகவே அவர்கள் பயன்படுத்தக்கூடும் என்பதைப் பற்றியும் நான் புரிந்தே தான் வைத்திருக்கிறேன். அவர்களிடம் உரையாடிப் பகிர்ந்து கொள்கிற விசயங்களில் மருத்துவம் சார்ந்த அறிவுரைகளை மிகுந்த நம்பகத் தன்மையோடும், அதனது எளிய பாவனையோடும் தெள்ளத் தெளிவாக நான் விளக்கிப் பேச வேண்டியிருந்தது.

எப்போதும் என் வாழ்வில் என்னோடு அணுசரணையாகத் தொடருகிற, எவரிடமும் நெருங்கம் கொள்ளாதத் தனிமையும், விரக்தியுடன் கூடிய வெறுமையும், எனக்குள் நானே என்னைப் பூட்டிக் கொள்கிற தாழ்வுணர்வும், மருத்துவன் என்கிற அழகிய தங்கக் கூண்டுமாக நான் சக மனிதர்களோடு கலந்திருக்கா வண்ணம் எனக்கிருந்த அத்தனை வேலிப்படல்களையும் மனமுவந்து தாண்ட வேண்டியிருந்தது. அத்தோடு பெற்றோர்களிடம் நான் தோழமையோடு கலந்துப் பேசி எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பகிரவும் வேண்டியிருந்தது. உண்மையில், இவைதான் எனக்கு அத்தனையும்விட பெரும் சவாலான விசயமாக இருந்தது.

எனக்குள் உருவான ஆழமான நம்பிக்கை என்னவென்றால் ஒருவேளை இவர்கள் சென்னைக்கு வந்து, அங்கிருக்கிற பிரத்தியேகமான மருத்துவமனைகளில் இந்தக் குழந்தைகளுக்கென செய்யப்படுகிற பரிசோதனைகளையும், அப்படிப் பரிசோதனையின் வழியே சிகிச்சை செய்து கொண்டு நம்மைப் போலவே பேசுகிற பிள்ளைகளையும், அக்குழந்தைகளின் பெற்றோர்களையும் நேரிலே சென்று சந்தித்து உரையாடுகிற போது கட்டாயம் இவர்களும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கான தீர்வை நோக்கிய நிச்சயிக்கப்பட்ட பாதையில் சிந்திக்கத் துவங்கிவிடுவார்கள் என்பதுதான். இப்படியாக எனது நம்பிக்கையின் விரல்களைப் பற்றியபடி அவர்கள் என்னோடு மருத்துவமனை வருவதற்கான காலடிகளை நான் மிகவும் கவனமாக எட்டு வைத்து நடக்கத் துவக்கியிருந்தேன்.

இவை எல்லாவற்றிற்கும் துவக்கமாக பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதொரு எளிமையான நம்பிக்கையை அவர்களது கையிலே நான் பூப்போல அளிக்க வேண்டியிருந்தது. அதற்கு முதலில் என்னை நானே ஒப்புக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் ஆரம்பத்திலிருந்தே உணர்ந்திருந்தேன். சென்னைக்கு பரிசோதனைக்குச் செல்வதானால் உங்களோடு துணைக்கு நானும் கட்டாயம் வருகிறேன் என்கிற உத்திரவாதத்தை நான் அளித்த போது முதலில் அவர்கள் அதை நம்பவில்லை. அதோடு மட்டுமல்லாமல் உங்களோடு சேர்ந்து இன்னொரு குழந்தையும், குடும்பமும் வருகிறார்கள் என்பதான கூடுதல் நம்பிக்கையையும் நான் அந்த இரண்டு குடும்பங்களுக்குமே அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த இரண்டு விசயங்கள் மட்டுமே அவர்களைச் சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை.

ஆதலால் மேலும் சில விளக்கங்களை நான் கூடுதலாக அளிக்க வேண்டியிருந்தது. அதாவது இப்போது நாம் சென்னைக்குச் செல்கிறோமென்றால் குழந்தைகளைப் பரிசோதித்து உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்தப் போவதில்லை. அதற்குப் படிப்படியாக பல கட்டங்கள் இருக்கின்றன. இப்போது நாம் செல்வது என்னவோ நம் குழந்தைகளின் முழுஉடல் பரிசோதனைக்காக மட்டும் தான். சென்னை போன்ற பெருநகரங்களின் மருத்துவமனைக்குச் செல்கிற போதுதான் நம் குழந்தைகளுக்கான அனைத்து பரிசோதனை வசதிகளையும் ஒரே இடத்திலே எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதேசமயம் நம் குழந்தைகளுக்குக் கேட்கவில்லை, பேசவில்லை என்கிற ஒற்றைக் காரணத்திற்குப் பின்னால் இருக்கக்கூடிய பலதரப்பட்ட நோய்க்கூறுகளையெல்லாம் இருதயம், மூளை மற்றும் மனநல சிறப்பு மருத்துவர்களிடம் சென்று காப்பீட்டுத் திட்டத்தின் வழியே இலவசமாகப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

ஒருவேளை எல்லா பரிசோதனையும் செய்த பின்னால் அவர்களுக்கு ஆபரேசன் ஒன்று தான் தீர்வென்கிற பட்சத்தில் மருத்துவர்களே நினைத்தால்கூட உடனடியாக சிகிச்சையைச் துவக்கிவிட முடியாது. முதலமைச்சரின் விரிவான அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக காது கேட்கும் சிகிச்சையை இலவசமாகச் செய்ய வேண்டுமானால் முதலில் குழந்தையின் ஒட்டுமொத்த பரிசோதனை முடிவுகளையும் சென்னையின் முதன்மைக் காப்பீட்டு அலுவலகத்திற்கு இணையத்தின் வழியே அனுப்ப வேண்டும். அங்கே அவர்கள் அத்தனை ஆவணங்களையும் சரிபார்த்த பின்பு, ஒரு குறிப்பிட்ட நாளிலே குழந்தைகளை நேரிலே அழைத்து வரச்சொல்லி பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்புகிறார்கள்.

மேலே அவர்கள் குறிப்பிட்ட நாளில் குழந்தையை சென்னை காப்பீட்டு அலுவலகத்தில் வைத்து இறுதியாக ஒருமுறை பரிசோதித்துப் பார்த்து குறைபாட்டை உறுதி செய்த பின்னர் தான் ஏழரை இலட்சம் மதிப்பிலான அச்சிகிச்சைக்கான ஒப்புதலையே அவர்கள் வழங்குகிறார்கள். ஆகையால் நாம் பரிசோதனை செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்த பின்னால், நம் குழந்தைக்கு சிகிச்சைக்கான ஒப்புதல் கடிதம் வருகிற வரையிலும் இருக்கிற கால இடைவெளியில், ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்பதற்கான நேரமும் நம் கையிலே இருக்கும். ஆகவே, சிகிச்சையைப் பற்றி இப்போது யோசித்துக் குழப்பிக் கொள்ளவோ, அச்சப்படவோ வேண்டாம் என்று நான் அவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்.

நானொன்றும் இப்பெற்றோர்களிடம் தந்திரமாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை என்பதை முதலில் எனக்கு நானே சமாதானம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. உள்ளூரிலேயே அங்குமிங்கும் சம்பந்தமில்லாத மருத்துவர்களிடமும், அக்கம் பக்கத்து வீடுகளிலும் வைத்துச் சொல்லப்படுகிற கட்டுக் கதைகளைக் கேட்டுக் கொண்டு தவறான முடிவுகளை எடுப்பதைக் காட்டிலும், காது கேளாத குழந்தைகளுக்கென்றே இருக்கிற சென்னை பெருநகர மருத்துவமனைகளுக்குச் சென்று, அங்கே நேரடியாக எல்லாவற்றையும் பார்த்துத் தெளிந்து கொள்வதன் மூலம் அவர்களாகவே ஒரு இறுதிகட்ட முடிவிற்கு வரக்கூடும் என்கிற அர்த்தத்தில் தான் நான் இவ்வாறு நடந்து கொள்கிறேன் என்கிற தெளிவிற்கு நானே சிரத்தையோடு வர வேண்டியிருந்தது.

அதாவது நாம் செய்து கொள்ளப் போகிற பரிசோதனைகளில் இருந்து, காது கேட்கும் கருவி பொருத்துகிற அறுவைச் சிகிச்சை வரையிலான அனைத்துமே முதலமைச்சரின் விரிவானக் காப்பீடு திட்டத்தின் வழியே இலவசமாகவே மேற்கொள்கிறார்கள். ஆகையால் நாம் மருத்துவமனை சென்று நம் குழந்தைகளுக்கென்று பரிசோதிக்கிற ஐந்து வகையான காது கேட்டல் பரிசோதனைகள், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், சுருள் படம், எக்ஸ்-ரே, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளுக்கான செலவு என்பது ஒன்றுமே இல்லை என்பதைப் பற்றியெல்லாம் பொறுமையாகப் பேசி நான் அவர்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் மேலாக பிறவிக் குறைபாடுகளின் பரிசோதனைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு கிராமத்திலிருந்து கிளம்பி சென்னை வருகிற வறிய குடும்பங்களுக்குமான பல சலுகைகளையும்கூட இந்த மருத்துவமனை நிர்வாகமானது ஏற்படுத்தி வைத்திருப்பதை நான் ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டிருந்தேன்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

பெற்றோர்கள் இருவர் உட்பட குழந்தைக்கும் சேர்த்து மருத்துவமனைக்கு வந்து போகிற பயணச் செலவுகளை அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக் கொள்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பரிசோதனைக்காக வெளியூரிலிருந்து வந்து அங்கு தங்கியிருக்க வேண்டிய அந்த ஒரு வாரத்திற்கான விடுதிச் செலவுகளையும், அந்த நாட்களுக்கான மூன்று வேளை உணவுச் செலவுகளையும்கூட அவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படியென்றால் நம் கைகளிலிருந்து எந்தக் காசையும் கரைக்கத் தேவையில்லாமல் வெறுமனே போய் தமிழகத்தின் அதிநவீன மருத்துவமனையில் நமது குழந்தைகளுக்கான அத்தனை பரிசோதனைகளையும் இலவசமாகச் செய்துவிட்டு அப்படியே வீடு வந்து சேரப் போகிறோம் என்பதைச் சொல்லி நான் வியந்த போது, அதையெல்லாம் ஆமோதிப்பதைப் போல தன்னியல்பாகத் தலையாட்டிபடியே பெற்றோர்கள் ஆர்வத்தோடு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இவ்வளவு வாய்ப்புகளிருந்தும் இவ்வூரிலேயே கிடந்து நம் பிள்ளையை மௌனியாக வைத்திருப்பதென்பது தேர்ந்த சிற்பியொருவன் தெரிந்தே சிற்பத்தின் கண்களை மூளியாக்கிவிட்டதைப் போலதொரு பாவமாகிவிடும் என்பதான யோசனையில் பெற்றோர்கள் ஆழ்ந்திருப்பதை அவர்களின் முகபாவனைகளின் வழியே நான் கண்டடைந்து கொண்டிருந்தேன். அவர்களின் ஆச்சரியம் கலந்த உருண்ட கருவிழிகளின் மேல் தொக்கி நிற்கிற இமைகளும்கூட அடுத்து என்ன? என்பதான ஆர்வத்தோடு கேட்பதைப் போலவும் எனக்குள் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தது.

மேலும் பெற்றோர்களின் நெஞ்சினில் முறிந்த முள்ளைப் போல உறுத்திக் கொண்டிருக்கிற அறுவைச் சிகிச்சை பற்றிய பயங்களை, அதனைப் பற்றிய சந்தேகங்களை தெளிந்து கொள்வதற்காக இத்தகைய சென்னைப் பயணத்தைக்கூட ஒருவகையில் சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது அங்கே ஆயிரக்கணக்கான சிகிச்சைகள் செய்து பேரனுபவம் வாய்ந்த சிறப்புச் சிகிச்சை நிபுணர்களும், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான நுட்பங்கள் தெரிந்த அதிசிறப்பான பயிற்று வல்லுநர்களும் இருக்கையில், நமக்குள்ளிருக்கிற சந்தேகங்களை அவர்களிடமே விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் நம் குழந்தைக்கு ஒவ்வொன்றாக அவர்கள் பரிசோதித்துப் பார்க்கின்ற போது நாமும் அருகிலிருந்து அத்தகைய சப்தங்களுக்கான பரிசோதனைக்கு ஏற்ப மற்ற பிள்ளைகள் எப்படித் துணுக்குறுகிறார்கள், நம் பிள்ளைகள் எப்படி அணுவளவு சிணுங்களுமின்றி அமைதியாய் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தும்கூட பிரச்சனையின் தீவிரத்தை அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

அதேசமயம் ஏற்கனவே காது கேட்பதற்கான சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் பேச்சுப் பயிற்சிக்காக அங்கே வந்த வண்ணமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று அத்தகைய குழந்தைகள் பற்றிய குறைகளைக் கவனமாக விசாரித்தும், அவர்கள் சிகிச்சை செய்து கொண்டதைப் பற்றிய விவரங்களை நெகிழ்ச்சியோடு கலந்துரையாடியும் தங்களது குழப்பங்களை பெற்றோர்கள் அங்கேயே தணித்துக் கொள்ள முடியும். அதேபோல நம் பிள்ளைகள் போலவே பேசாமல் இருந்து, சிகிச்சைக்குப் பின்னர் நம்மைப் போலவே பேசுகிற குழந்தைகளோடு நாமும்கூட அமர்ந்து அவர்களிடம் செல்லமாகப் பேசி, அக்குழந்தைகளின் குரலில் இருக்கிற குழைவை இரசித்து, நம் பிள்ளையும்கூட இப்படி சிகிச்சைக்குப் பிறகு நன்றாகப் பேசிவிடுவார்கள் தானே என்கிற இறுதி முடிவிற்கு வருவதற்கு நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கும். இப்படி வாழைநாரிழையில் பூக்கோர்ப்பது போல ஒவ்வொரு விசயமாகச் சேகரித்து அவர்களது வீட்டின் முற்றத்திலமர்ந்து விலாவாரியாகப் பேசிய பின்னர் தான் அவர்கள் சென்னை வருவதற்கான முன்னேற்பாட்டையே அரை மனதோடு ஏற்கத் துவக்கியிருந்தார்கள்.

அவர்கள் ஒப்புக் கொண்ட மனம் சட்டென்று மாறுவதற்குள் சென்னை செல்வதற்கான முன்பதிவுகளை உடனே செய்துவிட வேண்டுமென்று அப்போதிருந்தே நான் சிந்திக்கத் துவங்கியிருந்தேன். குறுகிய கால இடைவெளியில் சென்னைக்குப் புறப்படுவதற்கான இருக்கைகள் கிடைக்காமல் போகவே, அப்போது கிடைத்த அமரும் வகையிலான இருக்கைகளைப் பதிவு செய்து ஒருவழியாக நாங்கள் சென்னை கிளம்புவதற்கு ஆயத்தமானோம்.

சென்னைக்குப் பயணப்படுவதானால், எங்களிடம் டிக்கெட் பதிவு செய்யப் பையில் பணமில்லை, அங்கே சென்று தங்குவதற்கு ஒரு வாரமென்றால் செலவுக்குக் கையில் காசில்லை, ஒருவாரம் விடுப்பு சொல்லிவிட்டு வரவேண்டுமென்றால் அலுவலகத்தில் அனுமதி கிடைக்காது, சென்னைக்கு முன்பின் நாங்கள் சென்றதேயில்லை என்கிற போது மருத்துவமனையை நாங்கள் எங்கே சென்று எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது, படிப்பறிவற்ற எங்களுக்கு அங்கே ஆங்கில மருத்துவர்கள் சொல்கிற விவரங்களெல்லாம் புரியாத பட்சத்தில் நாங்கள் எப்படி ஒரு முடிவிற்கு வருவது என்பது உள்ளிட்ட பல காரணங்களால், இயல்பாகவே அவர்களுக்குள் வருகிற மனத்தடைகளால் இப்பயணம் தடைபடாமலிருக்க, நானே அவர்களின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை அவசரகதியில் செய்ய வேண்டியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இறுதியில் இரயில் நிலையத்தின் ஓரிடத்திலே கூடி இப்போது எங்களுக்கான இருக்கையிலே நாங்கள் வந்து அமர்ந்திருக்கிறோம்.

நான் இருக்கையில் அமர்ந்தபடியே பயணிப்பதொன்றும் பெரிய விசயமல்ல. அதேசமயம் ஒரு மருத்துவனாக ஆயிரக்கணக்கில் செலவு செய்து முதல் வகுப்பிலே பயணம் செய்வதும்கூட எனக்குப் பெரிய விசயமுமல்ல. ஆனால் அவர்களை தனியே விட்டுவிட்டு நான் மட்டும் சௌகரியமாகப் பயணம் செய்வதற்கு மனம் விரும்பவில்லை. அதேசமயம் நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் தான் என்கிற உணர்வை ஏற்படுத்த அவர்களோடு சேர்ந்து பயணிப்பது மட்டும்தான் எனக்கிருக்கிற ஒரே வழி என்பதையும் நான் அறிந்திருந்தேன். அவர்களின் அருகாமையில் அமர்ந்து கொண்டு அன்றாடக் குடும்பக் கதைகளைப் பேசிப் பயணிப்பதும்கூட ஒருவகையில் அவர்களை சிகிச்சை நோக்கி நகர்த்துவதற்கான அனுகூலமாகக்கூட அமையலாம், யாருக்குத் தெரியும்?

எங்களுக்கு அருகே சென்னை செல்ல வேண்டிப் பயணிக்கிற இன்னொரு குடும்பமொன்று நேரம் செல்வதற்குள் சாப்பிட்டுத் துயில் கொள்வதற்கான ஆயத்தமான வேலையில் இறங்கியிருந்தது. அவர்களின் கையிலே வைத்திருந்த இனிப்புப் பண்டங்களை அருகே விளையாடிக் கொண்டிருந்த காளீஸ்வரியையும் பிரியாவையும் ஜாடையாலே அழைத்து கையிலே வலிந்து திணித்துக் கொண்டிருந்தனர். அவர்களது முகத்தையும் அம்மாக்களின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடியே இனிப்புகளைச் சுவைப்பதைப் பற்றிய கனவுகளின் ஏக்கத்தோடு அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்புறம் என்ன நினைத்தார்களோ அல்லது அம்மாவின் எத்தகைய முகபாவனைகளை தங்களுக்கான சமிக்கையென அவர்கள் உணர்ந்து கொண்டார்களோ பவ்வியமாக பிஞ்சுக் கரங்களை நீட்டி அவற்றை வாங்கிக் கொண்டார்கள்.

அத்தோடு மட்டும் நின்றிருந்தால் பரவாயில்லை தான். ஆனால் குழந்தைகளை அருகே அழைத்து வயதேறிய தங்கள் குளிர்ந்த கைகளுக்குள் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பொதிந்தபடி உம் பேரென்ன, உம் அம்மா பேரு என்ன, உனக்கு என்ன பிடிக்கும் என்று வரிசையாக குழந்தைகளுக்கென அவர்கள் மனதிலே அடுக்கி வைத்திருந்த கேள்விகளையெல்லாம் அடுத்தடுத்து வரிசையாக கேட்டபடியே இருந்தனர். எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் யாரோ யாரிடமோ பேசிக் கொள்வது போலான பாவனையில் குழந்தைகள் அவர்களது முகத்தையே ஆச்சரியத்தோடு பார்த்து இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் என்னுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்க நான் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தேன். இந்தப் பயணத்தில் இப்படியொரு மன அவஸ்தை நேருமென்பது நான் துளியும் எதிர்ப்பார்க்காத ஒன்று.

அருகிலுள்ளவரிடம் இக்குழந்தைகளைப் பற்றி சொல்லிவிடலாமா? இல்லையில்லை, அந்தப் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம் ஒருபுறம், ஒருவேளை இந்த இரவு முழுவதும் இப்படியே குழந்தைகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தால் எவ்வளவு நேரம் தான் இந்த வலியைத் தாங்கிக் கொள்வது, அப்படியே சொல்லிவிட்டாலும்கூட அவர்கள் இந்தக் குழந்தைகளை எப்போதும் போலான பார்வையிலே தான் பார்ப்பார்களா அல்லது பாவப்பட்ட வாயில்லா ஜீவன்களிடம் காட்டுகிற கருணையின் வடிவான பாவனையைத்தான் வெளிப்படுத்துவார்களா, உன் பேரென்ன, அம்மா பேரென்ன என்று பிள்ளைகளிடம் கேட்கிற போதெல்லாம் பெற்ற மனங்களிரண்டும் என்னபாடு பட்டிருக்கும், எப்படியெல்லாம் மனம் அகதியாய் தவித்திருக்கும், என் பிள்ளை செவிடு, ஊமை.. போதுமா! என்று அடிவயிற்றிலிருந்து உரக்கக் கத்திவிட்டு தங்களது பிள்ளைகளை இறுக அணைத்துக் கொண்டு அரற்றிக் கொள்வதற்கான காத்திருப்பு தான் அவர்களது இந்த நெடிய மௌனமா அல்லது சுற்றியுள்ளவர்களின் காருண்யத்தை வேண்டி என் பிள்ளைக்கு இப்படியாகிவிட்டதே என்று நெக்குறுகி புலம்பி அழத்தான் நேரம் பார்த்துக் காத்திருக்கிறார்களா? இப்படி ஒவ்வொன்றாக நினைத்தபடி அந்தவொரு கணத்த நொடியில் எனது மனம் பலவிதமானதொரு பித்துநிலையில் உள்ளாரப் பிதற்றிக் கொண்டிருந்தது.

இந்தவொரு பயணத்தில் அதிலும் ஒரே ஒரு நிகழ்வை எதிர்கொண்ட எனக்கே இப்படியொரு அவஸ்தையும் வேதனையும் என்றால், இவ்வளவு காலமும் இப்படியொரு வாதையை வைத்துக் கொண்டு எப்படி இந்தப் பெற்றோர்களெல்லாம் காலத்தை எண்ணிக் கடத்துகிறார்கள் என்று அவர்களை நினைத்துக் கண்களைக் கலங்களாகக் கசக்கிக் கொண்டேன். தங்கள் வாழ்நாளில் எத்தனை மனப்போராட்டங்களை அவர்கள் நிகழ்த்தியிருக்கக்கூடும்? அப்போதெல்லாம் அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? தங்கள் பிள்ளை மற்ற பிள்ளையைப் போலில்லையே என்று என்னவெல்லாம் கசந்து யோசித்திருப்பார்கள்? ஏதோவொரு மனநெருக்கடியாகிவிட்ட பொழுதில் இப்படியொரு வாழ்க்கையை நாமும் நம் பிள்ளையும் வாழ்ந்து தான் தீரணுமா என்று எந்தக் கணத்திலாவது அவர்கள் யோசித்திருப்பார்களா?

இதையெல்லாம் யோசிக்க யோசிக்க இரயில் வண்டியின் தாலாட்டுகிற ததும்பல்களையும் கடந்து உடலும் மனமும் கணத்து அதிர்ந்தது. கொஞ்ச நேரத்தில் குழந்தைகளும் அம்மாக்களின் மடியில் சென்று முகங்களைப் புதைத்தப்படி தூக்கத்தில் சிணுங்கத் துவங்கிவிட்டனர். அருகிலிருந்தவர்கள், பிள்ளைங்க கூச்சப்படுதுங்க போல! என்றபடி அவர்களுக்குள்ளாகவே பேசிச் சிரித்துக் கொண்டனர். அவர்களிடம் நானும் சிரிக்காமல் சிரித்து வைத்தேன். நேரம் செல்லச் செல்ல அந்த இடமே புத்த மடாலயத்தின் பேரமைதிக்குள்ளாகி சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டதைப் போல நான் உணர்கையில் அத்தனை தூக்கி வழிகிற மனிதக் குவியலுக்குள்ளிருந்து மெல்லிசான ஒரு விசும்பல் சப்தமொன்று கேட்கத் துவங்கியிருந்தது. அதையெல்லாம் வலிந்து கவனிக்காமல் தடக் தடக்கென்ற சப்தங்களை மட்டுமே காதுகளில் நிறைத்துக் கொள்ள முயன்று முயன்று அயர்ச்சியில் நான் தூங்கி எழுந்த போது நாங்கள் இறங்க வேண்டிய சென்னை இரயில் நிலையத்தை அதிகாலையிலே அடைந்திருந்தோம்.

பிரம்மாண்டமாக சாலையின் விளிம்பையடைத்தபடி நிற்கிற காது மூக்கு தொண்டை மருத்துவத்திற்கென்றே பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட அந்தப் பிரபலபான மருத்துவமனையின் வாசலில் நின்ற போது நான் தங்கச் சுரங்கத்தின் வாசலில் நிற்கிற பெருமிதத்தோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரசுக் கல்லூரி மருத்துவமனைகளில் இன்னும் பரவலாக காக்ளியார் சிகிச்சை துவங்கப்படாமலிருப்பதும், அதேசமயம் ஆயிரக்கணக்கிலான நோயாளிகளுக்கு மத்தியில் இக்குழந்தைகளைப் பரிசோதித்து சிகிச்சையைத் துவங்குவதற்காக மாதக் கணக்கிலே பெற்றோர்கள் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் நான் தனியார் மருத்துவமனையையே தேர்வு செய்திருந்தேன். 

அதிகாலை வெளிச்சம் உருக்கொள்வதற்குள் மருத்துவமனை நுழைந்துவிட்ட எங்களுக்கான வருகையைப் பதிவு செய்வதற்குரிய ஊழியர், பத்து மணிக்கு மேலே வருவதாகச் சொல்லி அங்கேயே காத்திருக்கப் பணிந்தனர், வரவேற்பரையிலிருந்த செவிலியர்கள். நான் எவரிடமும் என்னுடைய அடையாளத்தைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அது அவசியப்படுகிற இடங்களில் பயன்படுத்துவதைக் காட்டிலும் அநாவசியமாக எல்லாரிடமும் என்னை மருத்துவனென்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிற உள்ளுணர்வின்படியே நான் இயங்கிக் கொண்டிருந்தேன். கடிகாரத்தின் விரல்கள் பத்து மணிப்பொழுதைக் கடக்கும் முன்பே உணவருந்திவிட்டு தயாராக இருந்த எங்களை ஒருவழியாக கீழ்த் தளத்திலிருக்கிற காப்பீட்டு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

மருத்துவமனைக்கு ஒரு காது கேளாமல் குறைபட்ட குழந்தையைப் பரிந்துரைக்கையில் என்னென்ன ஆவணங்களோடு அவர்களை அனுப்ப வேண்டுமென்று முன்பே மருத்துவமனையில் விசாரித்துக் கொண்டு வந்திருந்ததால் எல்லாமும் சுமூகமாகவே துவங்கியது. பெற்றோர்களின் ஸ்மார்ட் கார்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, பெற்றோர் மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், அம்மாவின் மகப்பேறுக்கால பச்சை நிற அட்டை மற்றும் தடுப்பூசி அட்டை. அத்தோடு கூடவே அதுவரையிலும் குழந்தைக்குப் பரிசோதித்த பழைய ஆவணங்களையும் கொண்டு வரச் சொல்லி அறிவுறுத்தியமையால் அதைக் கேட்டவுடனே அவர்கள் கையிலே எல்லாவற்றையும் கொடுத்துவிட்டோம். எல்லா அசல் ஆவணங்களோடு கூடுதலாக அதன் ஒரு நகல்களையும் கொடுத்த பின்பாக கணினியின் உதவியோடு முதலில் அதைச் சரிபார்க்கத் துவங்குகிறார்கள்.

ஸ்மார்ட் கார்டு மூலமாக பெற்றோர்களின் பெயர்கள், முக்கியமாக சிகிச்சை செய்து கொள்ளப் போகிற குழந்தையின் பெயர் இருப்பதை உறுதி செய்கிறார்கள். காப்பீட்டு அட்டையில் குழந்தையின் பெயர் இல்லாவிட்டாலும்கூட ஸ்மார்ட் கார்டில் பெயர் இருந்தாலே போதுமானது. அப்படி இல்லாவிட்டாலும்கூட குழந்தையின் பெயரை தாசிஸ்தார் அலுவலகம் சென்று பெயரைச் சேர்த்தோ அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வைத்தே இன்னாரின் குழந்தை தான் என்று காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவோ முடியும். அடுத்ததாக காக்ளியார் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சையென்றால் ஆறு வயதிற்குள்ளாகத்தான் காப்பீடு திட்டத்தின் வழியே செய்ய முடியுமென்பதால் பிறப்புச் சான்றிதழை வைத்து வயதைக் கணக்கிடுகிறார்கள். பின்பு காப்பீட்டு எண்ணை அதன் இணையத்திற்குச் சென்று சரிபார்த்து, இந்தக் காப்பீட்டு அட்டையானது சிகிச்சை செய்து கொள்வதற்குத் தகுதியுடையது தானா என்பதனையும் உறுதி செய்கிறார்கள்.

அதேசமயம் இந்தக் குழந்தைகளுக்கான என்னுடைய தேடலில் இதுபோன்ற பலவிசயங்களை நானே எனது தேவைக்கேற்ப தெரிந்து வைத்திருப்பதால் மேற்கண்ட எல்லா விவரங்களையும் கணினியில் தனிப்பட்ட முறையில் நானே சரிபார்த்த பின்னர் தான் இப்பெற்றோர்களை சென்னைக்கு அழைத்தே வருகிறேன். ஏனென்றால் இந்தப் பெற்றோர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தாங்கள் வீணாக அலைகிறோம் என்று உணர்வதை நான் ஒருபோதும் விரும்பவில்லை என்பதே அதற்குக் காரணம்.

எல்லாவற்றையும் சரிபார்த்த பின்பாக குழந்தைகளுக்கென்று தனியே பைல் ஒன்றை தயார் செய்து அவற்றோடு காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரைச் சந்திப்பதற்காக பெற்றோர்களை தரைத்தளத்திற்கு அனுப்புகின்றனர். நானும் பெற்றோர்களுள் ஒருவராக குழந்தைகளோடு அமைதியாக முன்னே நகர்ந்து கொண்டிருந்தேன். குளிருட்டப்பட்டு தாழிடப்பட்ட அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அந்தச் சிறப்பு மருத்துவரும் எங்களைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துவிட்டு குழந்தைக்கு என்ன பிரச்சனை, காது கேளாமலும் வாய் பேசாமலும் எவ்வளவு காலமாக இருக்கிறது, இப்பிரச்சனை பிறவியிலிருந்தே இருக்கிறதா அல்லது இடையிலே வந்த பிரச்சனையா என்று நோயிற்குரிய கேள்விகளைக் கேட்டு அதன் மூலக் காரணத்தைத் தேடிய பயணத்தை மெல்ல அடியெடுத்து துவங்கியிருந்தார்.

மகப்பேறு காலத்தில் இப்பிரச்சனை வருவதற்கான அறிகுறி ஏதும் தென்பட்டதா என்பதை அறிவதற்காக மகப்பேறு மற்றும் பிரசவ கால விவரங்களைக் கனிவோடு கேட்டபடியும், பச்சை வண்ண மகப்பேறு அட்டையிலிருக்கிற தகவல்களைப் படித்துப் பார்த்தும், கையிலிருந்த படிவங்கள் ஒவ்வொன்றாக நிரப்பிக் கொண்டிருந்தார். மிக முக்கியமாக, பெற்றோர்கள் நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டவர்களா, குடும்பத்தில் எவருக்கேனும் மரபார்ந்த நோய்கள் ஏதும் தொடர்ந்து வருகிறதா என்பதைப் பற்றிய விவரணைகளை விலாவாரியாகக் கேட்டபடி இந்தக் குழந்தையின் பிரச்சனைக்கான மூலக்காரணத்தை பல தலைமுறைகளுக்கும் முன்னே சென்று தீவிரமாகத் தேடியலைந்தபடி இருந்தார். நான் அவரது கண்ணாடிச் சட்டத்திற்குப் பின்னாலிருக்கிற தேடுதல் நிறைந்த கண்களை எதிர்பார்ப்புகள் கலந்த பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

எல்லா கேள்விகளும் முடிந்த பின்பாக காதுகளை நுண்ணோக்கிக் கருவியின் வழியே பரிசோதித்தபடி வெளிக்காது, மற்றும் சவ்வின் தன்மையை அவர் உறுதி செய்கிறார். வெளிக்காதில் அழுக்கு மற்றும் காது ஜவ்வில் ஓட்டை போன்ற காரணங்களால் ஏற்படுகிற காது கேட்டல் பாதிப்பு இருப்பின் அதையும் கண்டறிய வேண்டித்தான் இத்தகைய பரிசோதனைகளை அவர் மேற்கொள்கிறார். ஒருவேளை காதுகளில் இறுகிப்போன அழுக்குகள் இருந்துவிட்டால் அவர்களை தொடர்ந்து சொட்டு மருந்து போடச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி ஒரு வாரம் கழித்தே மீண்டும் வரச் சொல்லுகிற நிகழ்வுகள் நடப்பதாக மருத்துவர் போகிற போக்கில் சொல்லிய போது அதை கவனமாகக் குறித்து வைத்துக் கொண்டேன். இனிமேல் என்னால் பரிந்துரைக்கப்பட்டு சென்னை செல்கிற குழந்தைகளுக்கு நானே காதில் அழுக்கையெல்லாம் பரிசோதித்துப் பார்த்து அனுப்பிவிட வேண்டும். இல்லையென்றால், பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சென்னை வரை வந்துவிட்டு மீண்டும் இதற்காகவென்று திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் இதையே சாக்காய் வைத்துக் கொண்டு அவர்கள் திரும்பவும் சிகிச்சைக்கு வர மறுத்துவிடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

குழந்தைகளுக்கு சில எளியமுறையிலான ஆரம்பகட்ட கேட்டல் பரிசோதனைகளைச் செய்த பின்பாக, மருத்துவர் அவரளவிலே பிறவிக் குறைபாடுகள் இருப்பதை ஒரளவு முடிவு செய்துவிடுகிறார். அதன் பின்னர் குறைபாட்டை உறுதி செய்வதற்கான கேட்டல் தொடர்பான ஏனைய பரிசோதனைகளையெல்லாம் செய்து வரச் சொல்லி ஆய்வகத்திற்குப் பரிந்துரைந்துவிட்டு அடுத்த குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவர் கிளம்பிக் கொண்டிருந்தார். நாங்கள் அவரின் பரிந்துரைப் படிவங்களை வாங்கிக் கொண்டு அருகிலிருக்கிற பரிசோதனைக் கூடத்திற்குள் அவசரகதியோடு உள்ளே நுழைந்தோம். அங்கே நாங்கள் இதற்கு முன்னால் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திடாத விசித்திரமான சூழலைக் கண்ட நிமிடத்தில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போய் பனிச்சிற்பங்களாய் நின்று கொண்டிருந்தோம்.

எங்களைப் போலவே தமிழகமெங்கிலும் இருந்து வந்திருக்கிற பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளால் நிரம்பியிருந்தது அந்த நுழைவரங்கம். குழந்தைகளை மடியில் கிடத்திக் கொண்டும், தோள்களில் தட்டிக் கொடுத்த படியும் இருக்கிற வாஞ்சையுடன் கூடிய தாய்மார்களையும், புத்தம் புதிய இடத்தில் பரிட்சயமற்று வீரிட்டு அழுகிற குழந்தைகளை அரற்றி அமைதியாக்கப் போராடிக் கொண்டிருக்கிற பதட்டத்துடன் கூடிய அம்மாக்களையும், தன் சப்தத்தின் அளவறியாது உரக்கச் சிரித்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்தபடி மருத்துவமனை வெளியிலும், நெருக்கடியான சாலையிலும் கண்மூடித்தனமாக அசட்டையோடு ஓடித்திரிகிற குழந்தைகளையும், தரையில் தவளையாகக் கிடந்து முரண்டு கொள்கிற குழந்தைகளையும், அங்கே ஒருசேர கண்ட நொடியில் எனக்குத் திக்கென்றிருந்தது. நாங்கள் உள் நுழைந்த அந்த நேரத்திலும்கூட சுமார் நாற்பதிற்கும் மேலான குழந்தைகள் இதே பரிசோதனைக்காக வந்து காத்துக் கொண்டிருந்தனர்.

நாங்கள் வரவேற்பறையை அணுகி குழந்தைகளுடைய பைலைக் கொடுத்து நிமிருகையில் எதிரே நீண்ட பட்டுத்துணியிலான வண்ணப் பலகையில் புகைப்படமாய் சிரிப்போடும் அழுகையோடும் உறைந்திருக்கிற குழந்தைகளின் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட் படங்களைப் பார்த்தோம். அதைப் பற்றி விசாரிக்கையில், அவர்களெல்லாம் சிகிச்சை செய்து கொண்டு பேசிய குழந்தைகளின் ஞாபகப் புகைப்படங்கள் என்று சொல்லிச் சிரித்த போது என்னால் பதிலுக்கு எந்தச் சிரிப்பையும் உதிக்க முடியவில்லை. பூக்களில் மொய்த்துக் கொண்டிருக்கிற வண்ணத்துப்பூச்சிகளைப் போலத் தெரிகிற அந்த வண்ணப் பலகையில் எட்டிப் பார்க்கிற குழந்தை முகங்களை நான் நீண்ட நேரமாகவே உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

இதுவரையிலும் சொற்பமான அளவிலேதான் இக்குழந்தைகள் இருக்கக்கூடும் என்ற சமாதானத்தில் இயங்கிக் கொண்டிருந்த எனக்கு சற்றும் எதிர்பார்த்திடாத வகையில் இத்தனைக் குழந்தைகளை புகைப்படங்களாகவும், நிஜத்திலும் கண்ட அதிர்ச்சியில் எனக்குள்ளே நான் நொருங்கிப் போனேன். ஆனாலும் இப்படங்களெல்லாம் வெற்றிகரமாகப் பேசிக் குணமாகிய குழந்தைகளின் பொக்கிஷங்கள் என்கிற சிறு நெகிழ்வு எனக்குள் ஆசுவசத்தை நிகழ்த்தியது. ஆனால் இவ்வளவு குறைபாடுடையக் குழந்தைகளைக் கண்ட பின்னாலும்கூட அந்த வரவேற்பறைப் பெண்ணின் முகத்தில் இயல்பானதொரு சிரிப்பை வெளிப்படுத்த முடிகிறதென்றால் அத்தகைய மகோன்னத நிலையை அடைவதற்கும்கூட ஒரு தனித்த பயிற்சி வேண்டும் தான் போல என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னால் அந்தப் புன்னகையின் தரிசன எல்லையைக் காலத்தில் அடைந்துவிட முடியுமா என்கிற ஆவல் தொற்றிக் கொள்ள அங்கிருந்தவர்களின் முகங்களையே மாறி மாறி பார்த்துப் பரவசமடைந்து கொண்டிருந்தேன்.

எங்களுக்கான அழைப்பு வரும் வரையிலும் நாங்கள் அங்கேயே காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தச் சிறியதொரு தருணத்தில் நிதானமாக குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்ட எல்லா அறைகளையும், விதவிதமான தோரணையில் வந்திருக்கிற பெற்றோர்களையும், அவர்கள் தம் குழந்தைகளையும் நான் நுட்பமாக கவனிக்கத் துவங்கியிருந்தேன். ஆறு மாதக் குழந்தை முதல் ஆறு வயதுக் குழந்தைகள் வரையிலான எல்லா பருவத்தினரும் அங்கே நிறைந்திருந்தார்கள். பச்சைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த ஒருவர் அழுகிற குழந்தையை மார்பிலிட்டு அணைத்தபடியே விட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். அவரது பார்வையில் வெறுமை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து அமர்ந்து கொள்வதைப் போல நீண்ட நேரமாக அவரது நிலைத்த பார்வையை அங்கிருந்து அகற்றவேயில்லை.

ஊரிலிருந்து கிளம்பி அப்படியே அரக்கப் பறக்க ஓடி வந்த களைப்போடும், பசியின்றி அழுக்குப் படிந்த கண்களில் கலங்கிய கண்ணீரோடும் கலந்த பெற்றோர்களின் நடுவே ஒருவனாக நான் அமர்ந்திருந்தேன். அங்கிருந்த குழந்தைகள் சிலர் புத்தனின் பேரமைதியோடும், ஒருசிலர் ஆழ்துளைக் கிணறு துளைக்கிற இரைச்சல் பெருவெளியைப் உருவாக்குகிற குறும்புத்தனத்தோடும் மருத்துவமனையை பரபரப்பான சந்தை போலவே உருமாற்றி வைத்திருந்தனர். எல்லா மருத்துவமனையிலும் பார்க்கிற பேரமைதியின் உறைவிடத்தை இங்கே என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாவற்றிலிருந்தும் தனித்த ஆன்மாவொன்று இங்கே சுற்றிக் கொண்டிருப்பதைப் போலொரு உணர்வு எனக்குள் கிளர்ந்தபடியே இருந்தது. அதேபோல துயரத்தின் சாயல் படிந்த அத்தனை முகங்களையும் கலைந்துவிட்டு அத்தனை குழந்தைகளையும் ஒருபோலப் பாவித்து பெற்றோர்களையும்கூட அத்தகைய குழந்தைமைக்குள் அடைத்துக் கொண்டு வாஞ்சையோடு அரவணைத்துச் செல்கிற பயிற்றுநர்களை நான் ஆரம்பத்திலிருந்து பார்த்தபடியே இருக்கிறேன். எங்களது முறையின் போது தாய்மையின் ஒட்டுமொத்த அன்பும் ததும்புகிற இளவயது பெண்ணொருவள் வந்து குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைத்த போது நாங்கள் நிதானித்துக் கொண்டு உள்ளே கிளம்பினோம்.

அங்கே காது கேட்டலைப் பரிசோதித்து அறிவதற்கான ஐந்து விதமான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் குழந்தைகளை அவர்களது போக்கிலேயே பொம்மைகளிடம் விளையாட விட்டு குழந்தைகளின் இயல்பை, கூர்ந்து நோக்குகிற பண்பை, பொம்மைகளைக் கையாளுகிற நுண்ணறிவுத் திறனை ஆராய்கிறார்கள். இதன் வழியே அக்குழந்தைக்குக் காது கேட்டல் தொடர்பான பிரச்சனையைத் தவிர்த்து வேறு ஏதேனும் மூளை வளர்ச்சிக் குறைபோடோ, ஆட்டிசக் குறைபாடோ இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கண்டறிகிறார்கள். பின்பு பிரத்தியேகமான காது கேட்டல் கருவிகள் மூலமாக அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கின்ற வேலையில் துரிதமாக இறங்கிவிடுகிறார்கள்.

ஏற்கனவே சொல்லியபடி வெளிக்காது, நடுக்காது, உள்காது என்றிருக்கிற காதுக்கான பகுதியில் எந்த இடத்தில் காது கேட்டலுக்கான பிரச்சனையிருக்கிறது என்பதைத் தனித்தனியே கருவிகள் வழியே பரிசோதித்துப் பார்க்கத் துவங்குகிறார்கள். முதலில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளின் வழியே கவனத்தை ஏற்படுத்தி சப்தங்களின் அளவுகளுக்கு ஏற்ப அவர்கள் எப்படி தங்கள் கவனத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதை ஆடியோகிராம் கருவியின் வழியே வெளிக்காதின் செயல்பாட்டை பதிவு செய்கிறார்கள். இரண்டாவதாக நடுக்காதிற்கான ஆடியோகிராம் பரிசோதனையில் சவ்வுக்குப் பின்னேயிருக்கிற பெட்டி போன்ற பகுதியில் ஏதேனும் நீர் கோர்த்திருக்கிறதா, நுண்ணிய எலும்புகளில் பிரச்சனை ஏதுமிருக்கிறதா என்பதையும் பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.

இதைப் பற்றிய அறிக்கையை சரிபார்க்கிற போதே மாலைப் பொழுதாகிவிட்டதால் ஏனைய பரிசோதனைகளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எங்களது அறைகளுக்குத் திரும்ப அனுப்பிவிட்டார்கள். அதேசமயம் அடுத்ததாக உள்காதுகளைப் பரிசோதிக்கின்ற மிக மிக்கியமான பரிசோதனைகளைச் செய்யவிருப்பதால் அதற்கான ஆயத்த வேலையாக குழந்தைகள் நன்றாகத் தூங்க வைக்க வேண்டியிருக்கும் என்பதையும் எங்களிடம் அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளைத் தூங்க வைத்த பின்னால் எடுக்க வேண்டிய பரிசோதனைகளுக்காக அவர்களை இரவிலே அதிகமாகத் தூங்கவிடாமல் செய்து அதிகாலையில் சீக்கிரமாகவே எழுப்பிவிட்டு மறுநாள் அரைத் தூக்கத்தோடு குழந்தைகளை அழைத்து வாருங்கள் என்பதை ஒரு முக்கிய அறிவிப்பைப் போலச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்கள்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

விடிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து உறங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளை எழுப்பி பெற்றோர்கள் அவர்களை அழ வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை தான். ஏற்கனவே காளீஸ்வரியின் பெற்றோர்கள் இப்படியான பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அவள் தூங்காத காரணத்தினால் தானே பரிசோதனையும் செய்யாமல், இவ்வளவு காலம் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். ஆதலால் தூங்காமல் இருப்பதன் காரணமாக பரிசோதிக்கத் தாமதமாவதையோ, அதனால் பரிசோதிக்க முடியாமல் சிகிச்சை தள்ளிப் போவதையோ அவர்களுமே விரும்பவில்லை.

நீண்ட தூரம் பயணித்த களைப்பிலும், நேற்று மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்த பின்பாக அடைந்த எரிச்சலிலும் குழந்தைகளின் பிடிவாதம் அதிகாலையில் உக்கிரமடையத் துவங்கி உரத்த அழுகையாக அது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பேய் பிடித்த வீட்டில் இரவில் கோடாங்கி அருள் வந்து ஆடி பேயோட்டுவதைப் போல இரண்டு குழந்தைகளையும் நடு ஜாமத்திலே எழுப்பி விட்டு அவர்களோடு பெற்றோர்களும் அர்த்த ராத்திரியில் ஏதேதோ விளையாட்டுக் காட்டி தூக்கத்தை விரட்டியடித்தபடி இருந்தனர். அடிவயிற்றில் கிச்சுக்கிச்சு மூட்டியபடி குழந்தைகளை வாய்விட்டுச் சிரிக்க வைத்து அவர்களோடு சரிக்குச் சமமாக பெற்றோர்களும் விளையாடி குழந்தையாகவே மாறியிருந்தனர். குழந்தைகளோடு குழந்தைகளாய் தலையில் கொம்பு முளைத்து முட்டி விளையாடுகிற அவர்களைப் பார்த்த நிமிடத்தில் என்னோடு ஆங்காரமாகப் பேசிச் சண்டையிட்டுக் கொண்ட பெற்றோர்கள் தான் இவர்களா என்று ஒரு கணம் சிரிப்பு வந்து அது கண்ணக்குழியில் போய் விழுந்தது. அவர்களின் செய்கைகளை இரசித்துச் சிரித்து உள்ளார மகிழ்ந்தபடியே சுவரோரமாய் படுத்து அப்படியே நான் மறுபடியும் தூங்கிப் போனேன்.

விடியக்காலை எழுந்து விளையாடிய அசதியில் குழந்தைகள் கண்ணசரத் தூங்கவும் பயிற்றுநர்கள் அடுத்தடுத்த பரிசோதனைகளை வரிசையாக எடுத்தபடி இருந்தனர். எங்கே பாதியில் விழித்துவிடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமிருக்க, வயர்கள் பொருத்தப்பட்டு சாந்தமாக துயல் கொள்கிற குழந்தைகளின் முகத்தையும், பரிசோதிக்கிற கருவிகள் இயங்குகிற நுட்பமான அசைவுகளையும், அதற்கேற்ப படிவத்தில் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிற பயிற்றுநர்களின் இசைவையும் மாறி மாறி பெற்றோர்களோடு நானும் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். உள்காதினைப் பரிசோதிக்கிற ஓ.ஏ.இ மற்றும் பெரா பரிசோதனையை எடுத்த பின்னர் இறுதியாக ஹியரிங் எய்டு கருவியை பொருத்திப் பார்க்கும் பரிசோதனையைத் துவக்கினார்கள்.

அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உலகத்தரத்திலான ஹியரிங் எய்டு கருவியை காதுகள் இரண்டிலும் ஒவ்வொன்றாகப் பொருத்திப் பார்த்து இக்குழந்தைகளுக்கு வெளிப்புற ஹியரிங் எய்டு கருவியின் வழியாகவே எளிதாகக் குணப்படுத்திவிட முடியுமா அல்லது காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசன் (Cochlear implant) வழியாகத்தான் தீர்வு காண முடியுமா என்பதைப் பரிசோதித்துக் கண்டறிகிறார்கள். இந்தப் பரிசோதனையில் தோல்வியுறுகிற குழந்தைகளுக்கு காக்ளியார் இம்பிளாண்ட் செய்வதைத் தவர வேறு வழியேயில்லை என்பதைப் பெற்றோர்களுக்கு ஒருவழியாக அவர்கள் தெளிவுபடுத்தியும் விடுகிறார்கள். பின்பு ஆரம்பத்திலிருந்து செய்த குழந்தைகளின் ஒட்டு மொத்த கேட்டல் பரிசோதனைக்கான முடிவுகளையும் ஒருங்கே வைத்துக் கொண்டு ஒரு நீண்ட முழுஅறிக்கையை தயார் செய்து பெற்றோர்களின் கைகளில் தருகிறார்கள்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14
காக்ளியார் இம்பிளாண்ட் ஆபரேசன் (Cochlear implant)

அதன் முடிவுகளுக்காக நாங்கள் வரவேற்பறையில் காத்திருக்கிற தருணத்தில் அங்கே பரிசோதனைக்காக தூங்க வைக்க முடியாமல் திணறியபடி இருக்கிற பெற்றோர்களின் செய்கைகள் ஒவ்வொன்றும் எனக்குள் ஒருவித நெகிழ்ச்சியான உணர்வைக் கிளர்த்தியிருந்தது. ஒருவர் ஐந்து வயது நிரம்பிவிட்ட தன் குழந்தையைத் தூங்க வைக்க கடையிலிருந்து பால் டப்பாவில் பாலை நிறைத்துக் கொண்டு வந்து பச்சிளம் குழந்தையைப் போல மடியில் கிடத்தி புகட்டிக் கொண்டிருந்தார். வயிறு நிரம்பிவிட்டால் விரைவில் தூங்கிவிடுவான் என்கிற நினைப்பில் அவர் பால் இறங்குகிற தொண்டைக்குழியையும் குழைந்து கிறங்குகிற கண்பாவைகளையும் பரிதவிப்போடு பார்த்தபடி இருந்தார்.

புட்டிப் பால் குடித்து நிரம்பிய வயிற்றோடு அவனைத் தூக்கி தோள் மீது போட்டு தூங்க வைக்க முயலுகையில் அவன் தெத்துப் பல்லைக் காட்டி உதட்டைப் பிதுக்கியபடி பின்வாக்கில் என்னைப் பார்த்து கண்ணக்குழி நிறைய சிரித்துக் கொண்டிருந்தான். எனக்கும் அவனைப் பார்த்து அடக்க முடியாதவாறு சிரிப்பு கொப்பளித்துக் கொண்டிருக்க, சிரிப்பை அடக்கியும் அடக்க முடியாதவாறும் அவனது செய்கைகளை நான் வெட்கத்தோடு முகத்தை மூடி இரசித்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி அவன் தூங்கிவிட்டானா என்று தலையைத் திருப்பித் திரும்பப் பார்த்து உள்ளார கொதிப்படைந்து கொண்டிருந்தார் அவனது அம்மா.

அங்குதான் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக அம்மாக்கள் செய்கிற குழந்தைமை கூடிய செய்கைகளை பரவசத்தோடு பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தேன். பச்சைக் குழந்தையொன்றை தோளிலே போட்டு மெல்லிய துண்டையோ அல்லது சேலை முந்தாணையோ முதுகில் போர்த்தியபடி மருத்துமனையின் குறுக்காக நடந்து நடந்து தேய்ந்து கொண்டிருந்தார் ஒரு அம்மா.

இன்னொருவர் அவரது மகனை மடியிலே கிடத்தி தலையை இடது தொடையில் தாங்கியபடி காது கேளாத குழந்தைக்குத் தாலாட்டுப் பாடி சோர்வுற்ற அவரது உதடுகளில் இருந்து முணுமுணுக்குகிற சொற்களுக்கு ஏற்ப தொடைகளைத் தாளகதியிலே ஆட்டி இசைத்துக் கொண்டிருந்தார். அவரது முக அசைவும் முக பாவணைகளும் தொடையசைவோடு ஒத்திசைவாக கலந்து இசையை மீட்டெடுத்தன. குழந்தையின் கால்கள் வலது தொடையை மீறி தரையில் தளர்ந்து கிடக்க, வலது கைகளை இடுப்பைச் சுற்றி வளைத்துப் போட்டபடி கைகளை ஒருவாக்கில் மடித்து குழந்தையின் முதுகிலே அணில் கோடுகளாய் வருடித் தடவியபடியே நீண்ட நேரமாக அவனைத் தட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்தார். இடது கைகள் வயலினின் உலோகக் கயிறுகளை அநாயசமாக சுண்டி மீட்பது போல மகனது தலைமுடியைக் கோதியபடியே இருந்தது.

அவரது எண்ணெய் பிசுபிசுப்பற்ற தலையும், குறுகிய தடித்த கழுத்தும், பருத்த அவரது உடலுமாக இயங்குகிற இசைவை பார்க்கப் பார்க்க அவர் ஒட்டு மொத்தக் கச்சேரியின் அத்தனை இசைவடிவங்களையும் தனது அங்கங்கள் ஒவ்வொன்றிலும் பொதிந்து வைத்திருப்பதைப் போலவே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. தனது வாய் தாலாட்டை கேட்க முடியாத மகனின் உடலிற்குள் தனது உடலசைவின் வழியாக இணைத்துணுக்குகளின் சங்கேதக் குறியீடுகளைக் கடத்தியபடியே ஆழ்ந்து தூங்க வைத்துக் கொண்டிருந்தார். இதுகூட தாலாட்டின் ஒரு வடிவம் தானென உள்ளிற்குள்ளேயே நெகிழ்ந்து உருகிக் கொண்டிருந்தேன் நான். சற்று நிமிடத்திலே கண்கள் கிறங்கிச் சுழல, புல்வெளியில் பனித்திரள் பந்துகள் திரண்டு கொள்ள, காலர நான் எங்கோ நடக்கையில் பாதங்கள் பனித்துளியில் கூசியபடியும், வீசுகிற குளுமையின் ஈரத்தில் நனைந்து போய் அதன் உருகி வழியும் இயற்கையின் ஸ்பரிசத்தில் தணிந்து கிளர்ச்சியுற்று மெல்ல மெல்ல மயங்கி நான் வீழ்வதைப் போல உணருகையில் அந்தக் குழந்தையோடு நானும் என்னை மறந்து ஆழ்ந்து தூங்கத் துவங்கியிருந்தேன்.

ஒருகணம் பார்த்துக் கொண்டிருக்கையிலே அவளது தாளகதியினுடைய துடிப்பின் மயக்கம் எனக்குள்ளே பரவசமாய் இறங்கி கிறங்கிச் சொக்கி தூக்கநிலைக்குச் சென்று மீண்டதை நினைத்து வெட்கப்பட்டு நான் பெண்மையாய் சிரித்துக் கொண்டேன். அவளின் அங்கங்கள் ஒவ்வொன்றின் இசைமையினுடைய அசாதாரண உற்சவத்தைப் பார்த்து கொஞ்சம் நானும் மருண்டு தான் போயிருந்தேன். சற்று நேரத்தில் துயில் கொண்டுவிட்ட அந்தக் குழந்தையை அழைத்துச் சென்ற பின்பாக இன்னொரு அம்மா தன் தூங்காத மகளை அள்ளியெடுத்தபடி ஒரு மூலைக்குத் தூக்கிச் சென்று கொண்டிருந்தார். எப்போதும் அம்மாவின் மேல் கால்போட்டுத் தூங்குவதற்காக அடம்பிடிக்கும் குழந்தையின் செய்கையை உணர்ந்த தாயாய், அவள் தானிருக்கிற இடத்தின் பிரக்ஜையற்று ஒரு ஓரமாய் துண்டை விரித்து மகளை தன்னருகிலே கிடத்தியவுடன் குழந்தை தன்னியல்பாக தனது காலைத் தூக்கி அவள் மேல் போட்டுக் கொடியைப் போல சுற்றியபடி அப்படியே தூங்கியும்விட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் அடிக்கடி தூக்கத்திற்குச் சென்று மறுபடி மறுபடி ஏதேனுமொரு குழந்தையின் வீரிட்டலில் எழும் மற்றுமொரு பிள்ளையைப் போல நானும் அங்கே தூக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்கையில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. இத்தனை இரைச்சலிலும் கண்ணயர்ந்து கொஞ்ச நிமிடம் நான் தூங்கியது அதிசயமான விசயம்தான். ஆனாலும் இக்குழந்தைகளெல்லாம் காது கேளாமல் இருப்பதன் காரணமாக இந்த இரைச்சல்களின் தொந்தரவுகள் ஏதுமற்று தூங்கியெழுந்து பரிசோதித்த பின்னால் அனைவரும் திவ்வியமாக வீடு போய் சேருகிறார்கள். இந்தக் குழந்தைகளெல்லாம் எத்தகைய பாவப்பட்ட ஜீவன்கள் என்று உள்ளார உடைந்து பொறுமிக் கொண்டிருந்த நிமிடத்தில், எங்களது குழந்தைகளின் பெயர்கள் வாசிக்கப்பட்ட போதுதான் துணுக்குற்று அத்தகைய பரிசோதனை முடிவுகளை வாங்கிபடி மீண்டும் மருத்துவரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து நகர்ந்து கடைசியாக வெளியேறினோம்.

அதுவரை பெற்றோர்களுடன் துணையாக வந்திருந்த மனிதரைப் போலான உளவியலில் இயங்கிக் கொண்டிருந்த எனக்குள்ளே, மருத்துவன் என்கிற இன்னொரு ஜீவன் அப்போதுதான் பூதக்கண்ணாடியோடு மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தது. அந்தக் குழந்தைகளின் பரிசோதனை முடிவில் என்ன எழுதியிருக்கிறென்று பார், அவர்களுக்கு என்ன பிரச்சனை, காது கேட்டலில் எத்தனை சதவீதம் கேட்கிறது, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி ஏதேனும் குறிப்பிடிருக்கிறார்களா என்று பார்.. பார்..  என வெள்ளைக் கோட்டணிந்த மருத்துவன் ஒருவன் உள்ளிருந்து கூக்குரலிட்டபடியே தவித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் நிதானித்து அவர்களிடமிருந்து பரிசோதனை முடிவுகளை வாங்கிப் பார்த்த பின்னர், மனம் இன்னதெனப் புரியாத உணர்ச்சிக்குள் மூழ்கித் திளைக்கத் துவங்கிவிட்டது.

தொண்ணூறு சதவீத்திற்கும் மேலாக கேட்கும் திறனை இழந்த இரண்டு குழந்தைகளையும் காக்ளியார் இம்ப்ளாண்ட் செய்யப் பரிந்துரை செய்திருந்தது அந்த அறிக்கை. சட்டென்று மனம் மகிழ்ச்சியில் திளைக்கத் துவங்கியிருந்தது. ஒருவழியாக இப்பெற்றோர்களை அழைத்து வந்து குழந்தைகளுக்கான காலம் கனிந்து கரைவதற்குள் அவர்களை சிகிச்சைக்குத் தயார்படுத்திவிட்டோம் என்கிற நிம்மதியான பெருமூச்சு நெஞ்சுக்குழியிலிருந்து இதமாக வெளியேறி காற்றில் கலந்தது. அடுத்த கணமே, அடச் சே! ஒரு குழந்தை பிறவிக் குறைபாடாய் இருக்கிறென்கிற அறிக்கையை அவர்கள் அளித்திருக்கிறார்கள், அதற்காக வருத்தப்பட்டு பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வதை விட்டுவிட்டு, மனம் ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தோடு துள்ளிக் குதிக்கிறது என்று என்னை நினைத்து நானே நொந்து கொண்டேன்.

இந்தக் குழந்தைக்கு எல்லாமும் சரியாய் இருந்திருக்கக் கூடாதா என்று ஒருமுறைகூட என் மனம் சிந்திக்கத் தவறியதை எண்ணி என்னை நானே எரிச்சலோடு திட்டிக் கொண்டேன். என் கையிலிருக்கிற அறிக்கைகளையும், அதை வாசித்தபடி வரிகளின் மேல் அலைவுறுகிற உருளைக் கண்களையும், நம் பிள்ளைக்கு அப்படி ஏதும் தீர்க்கமுடியாத குறையில்லை என்று சொல்லப் போகிற நடுங்கித் துடிக்கிற அந்த உதடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிற பெற்றோர்களிடம் என்னால் எதையுமே பேச முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு குறைபாடு உறுதியாகிவிட்டது, ஆபரேசன் தான் ஒரே தீர்வும், அதுவே இறுதியான முடிவென்றும் சொல்லிவிட்டு முன்னே போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரின் அறையின் வாசல் வந்துவிட, எங்களது முகத்தில் நிசப்தத்தை பூசியபடியே உள்ளே நுழைந்தோம்.

Early Births: Experiences Of A Physician Searching For Babies Who Are Deaf And Dumb At Birth, 14th Medical Series By Dr. Idangar Pavalan. ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 14

மருத்துவர் நிதானமாக அறிக்கையைப் படித்துவிட்டு அதைப் பற்றி விளக்கமாக அந்தப் பெற்றோர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் திரும்பித் திரும்பி என் முகத்தையே தவிப்போடு பார்த்தபடி இருந்ததைத் தவிர்க்க நான் அங்குமிங்கும் கண்களை அலைபாயவிட்டுக் கொண்டிருந்தேன். அவர்களது முகத்தில் நமது குழந்தையைச் சரியான இடத்தில், சரியான நேரத்தில் கொண்டு வந்து நல்லபடியாகப் பரிசோதித்துக் குறைபாட்டைக் கண்டுபிடித்துவிட்டோம் என்கிற திருப்தியேதும் தெரிகிறதா அல்லது எங்கு சென்றாலும் என் பிள்ளைக்கு எல்லாம் சரியாகிவிடும் என்ற வார்த்தைகளை உதிர்க்கிற எந்த மருத்துவர்களையும் காணவில்லையே என்கிற பரிதவிப்பு இருக்கிறதா என்று எதனையும் என்னால் உறுதிபட ஊகித்தறிய முடியவில்லை.

ஒருவழியாக காது வரை பரிசோதித்துவிட்ட பின்பாக காதிலிருந்து மூளை வரையிலும் நீளுகிற காது நரம்புகளையும், நரம்பு சென்று முடிகிற காது கேட்கிற மூளைப் பகுதியையும் பற்றி அறிந்து கொள்வதற்காக சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகளை எடுப்பதற்குப் பின்னர் அறிவுறுத்துகிறார்கள். அதன் வழியே காது நரம்பிலும், அது மூளைக்குள் பயணிக்கிற பாதையிலும், கேட்பதற்கும் பேசுவதற்குமான மூளைப் பகுதியிலும், வேறு எந்த குறைபாடும் இல்லையென்பதை உறுதி செய்கின்றனர். இப்பரிசோதனை முடிவுகளை மனக் கணக்காக முடிச்சுப் போட்டு இக்குழந்தைக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை தான் ஒரே தீர்வு, அதுவே நிரந்தரமான தீர்வு என்பதை மருத்துவரும் தெளிவுபட இறுதியில் அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சில் எவ்வித குழைவையோ தயக்கத்தையோ காண முடியாமல் நேரடியாக குழந்தையின் பிரச்சனையும், அதன் தீவிரத்தையும், அதற்கான சிகிச்சையும் மட்டுமே அறிவுறுத்திய பாவனையைக் கண்ட தருணத்தில் நான் மருத்துவன் என்கிற இடத்திலிருந்து எவ்வளவோ தொலைவு விலகி வந்துவிட்டேன் என்ற பிரம்மை என்னை அச்சுறுத்தியது.

இவையெல்லாம் முடிந்த பின்பாக அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்வதற்கான இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்ஸ் ரே மற்றும் இ.சி.ஜி போன்றவற்றை எடுக்க பரிந்துரைக்கின்றனர். அத்தனை பரிசோதனை முடிவுகளையும் பார்த்த பின்னர் முடிவாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு பல்வேறு சிறப்பு மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சைக்கான அனுமதி பெற்று வருவதற்காக பரிந்துரைக்கின்றனர். காது கேளாத குறைபாடானது பிறவிக் குறைபாடாக இருக்கிற போது குழந்தைகளுக்கு வேறு எந்த உறுப்பிலாவது ஏதாவது பிரச்சனை இருக்குமா என்பதை அறிய வேண்டித்தான் இத்தகைய சிறப்பு மருத்துவர்களிடம் பரிந்துரை செய்கிறார்கள். ஆக, காது கேட்பதற்கான பரிசோதனைக்கு வந்து எல்லா சிறப்பு மருத்துவர்களையும் பார்த்த திருப்தி பெற்றோர்களுக்குக் கிடைத்துவிடும் என்று ஒருபுறம் நிம்மதியாகவும் இருந்தது.

அதாவது காது கேட்டல் குறைபாடுடன் இருதயம் தொடர்பான வேறு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க இருதய சிறப்பு நிபுநரிடம் சென்று இருதய ஸ்கேன் பரிசோதனைகளை எடுத்துப் பார்க்கிறார்கள். மூளை தொடர்பான பிரச்சனைகளையும் ஆட்டிசம் குறைபாடுகளையும் கண்டறிவதற்கு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனையைப் பெற்றுவர அறிவுறுத்துகிறார்கள். குழந்தைகள் சிறப்பு மருத்துவரிடம் சென்று வயதிற்கேற்ப குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி இருக்கிறதா என்ற அறிக்கையை பெற்றுவரச் சொல்லுகிறார்கள்.

அதேபோல தொழிற்முறை சிகிச்சை நிபுணரிடம் ஒப்புதலையும், கண்களுக்கான சிறப்பு மருத்துவரைச் சந்தித்து பார்வைக் குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து அறிக்கையை பெறுகிறார்கள். இறுதியாக எல்லா பரிந்துரைகளையும் பெற்ற பின்னால் அறுவைச் சிகிச்சைக்கான ஒப்புதலுக்காக மயக்க மருந்து நிபுணரைச் சந்தித்த பின்னால் இக்குழந்தைகளுக்கு காது கேளாமல் இருப்பதைத் தவிரித்த வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும், காக்ளியார் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான எந்தவித தடையுமில்லை என்பதையும் அறிக்கையாகப் பெற்றுக் கொண்டு ஆரம்பத்தில் சந்தித்த மருத்துவரைப் பார்க்கச் சென்றோம். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதான சிறு புன்னகையுடன் வரவேற்றுவிட்டு மேற்கொண்டு அறிக்கைகளை காப்பீட்டு அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சிகிச்சைக்கான ஒப்புதல் வரும்வரையிலும் காத்திருக்கச் சொல்லி அறிவுறுத்திவிட்டு எங்களை அவர் வழியணுப்பி வைத்தார்.

நாங்கள் அத்தனை அறிக்கைகளையும் நகலெடுத்து எங்களுக்கும் காப்பீட்டு அலுவலகத்தில் ஒன்றுமாக கொடுத்துவிட்டு கிளம்புகையில் ஒட்டுமொத்தமாக நாங்கள் தளர்ந்து போயிருந்தோம். நாங்கள் இனி வீடு சென்று சென்னை முதன்மைக் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து சிகிச்சைக்கான ஒப்புதல் அழைப்பு வருகிற வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான். எல்லாம் நினைப்பதபடியே சிறப்பாக முடிந்துவிட்டது. இரண்டு குழந்தைகளுக்கும் உண்டான எதிர்காலத்திற்கு நல்லதொரு வழியை ஏற்படுத்தியிருக்கிற திருப்தியோடு நான் எனது பணிக்குத் திரும்பியாக வேண்டும். வாரம் முழுவதுமாக பரிசோதனைகள் செய்ய, பலதரப்பட சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்கவென்று ஓயாது ஓடிக் கொண்டு தளர்ந்து போயிருந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் சோர்வோடு திரும்பிப் பார்த்தேன். எல்லோருடைய கண்களிலும் ஒளியிழந்து போய் உடலெங்கும் தளர்ந்து எலும்புகளற்ற மனிதர்களைப் போலதொரு சதைப் பிண்டங்களாய் சக்தியற்று நின்று கொண்டிருந்தனர்.

எனதருகே மெல்ல நகர்ந்து வந்த பெற்றோர்கள் எல்லோரும் ஒருவித கசப்பான புன்னகையை உதிர்த்துவிட்டு கிணற்றுக்குள்ளிருந்து எழுகிற வற்றிய குரலோடு, நாங்க ஆபரேசன் செஞ்சுகுறோம் சார் என்றபடி பேசத் துவங்கினர். நாங்க எங்க கொழந்தைக்கு செக்கப் பண்ணும் போதே பாத்தோம், அவங்க எந்த சத்தத்துக்கும் இம்மியும் அசையவே இல்ல. அங்க வந்த மத்த கொழந்தைகளோட அம்மாங்க கிட்டயும் விசாரிச்சுப் பாத்தோம். இது பண்ணிக்குறது நல்லது தான்னு சொன்னாங்க. அப்படியும்கூட கடைசி வரைக்கும் நாங்க நம்பிக்கையில்லாமத் தான் இருந்தோம். ஆனா ஆபரேசன் பண்ண கொழந்தைங்களைப் பாத்த பின்னாடி எல்லாம் மனசு மாறிடுச்சு. அவங்க அம்மாகிட்ட பேசுனப்போ கட்டாயம் பண்ணுங்க, இந்த வாய்ப்பைத் தவற விட்டுடாதீங்கன்னு எடுத்துச் சொன்னாங்க. அந்தக் கொழந்தைங்க கிட்டயுமே போய் பேசிப் பாத்தோம். அவங்க சட்டுன்னு எங்களையும் அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, மாறி மாறி உம் பேரென்ன, என்ன பிடிக்கும், யாரைப் பிடிக்கும்னு கேள்வியா கேட்டு நாங்களே தவிச்சுப் போயிட்டோம். ஆனா அவங்க எல்லாத்துக்கும் ஒண்ணு விடாம பதில சொல்லி எங்கள அழ வச்சுட்டாங்க.

அவர் பேசி நிறுத்திய இடத்தில் அவரது முகம் கலங்கிய குளத்தின் மங்கலான ஒளியை நிறைத்துக் கொண்டு கண்ணீரைத் தாரை வார்த்தது. நானும் அங்கே விழவிருந்த இரண்டு சொட்டுக் கண்ணீரைக் காப்பாற்றிக் கொண்டு நிறைந்த மனதோடு வீடு வந்து சேர்ந்தேன். ஒருவழியாக எனது நம்பிக்கை என்னைக் கைவிடாமல் காப்பாற்றிவிட்டது.

ஆனாலும் அடுத்ததாக காளீஸ்வரிக்கும் பிரியாவிற்குமான அழைப்பு வந்து சிகிச்சைக்குச் செல்லும் முன்னர் அவர்களைத் தேற்றும் வகையில் ஆபரேசன் பற்றிய விவரங்களைப் பேசி அந்த நம்பிக்கையிலேயே தக்க வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்ந்து கொண்டேன். அப்படி நான் அவர்களுக்குச் சிகிச்சை பற்றி விளக்கிய விசயங்களையும், அதன் பின்பு அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிகழ்வுகளையும் பற்றி நீங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

முந்தைய தொடர்களை படிக்க: 

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 2 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 3 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 4 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 5 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 6 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 7 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 8 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 9 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 10 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 11 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 12 – டாக்டர் இடங்கர் பாவலன்

ஆதியில் பிறந்தவர்கள் (பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத குழந்தைகளைத் தேடியலைந்த ஒரு மருத்துவனின் அனுபவத் தொடர்) 13 – டாக்டர் இடங்கர் பாவலன்