Egijamam Book by Dhurai. Jeishankar Bookreview by Azhagiya Periyavan. துரை ஜெய்சங்கரின் எகிஜாமம் - அழகிய பெரியவன்

நூல் அறிமுகம்: எகிஜாமம் | துரை ஜெய்சங்கர் – அழகிய பெரியவன்



கதை சொல்லும் கவிதை

நம் தாய்மொழியின் சிகரக் கவிதையெனில் அது சங்கக் கவிதையே. தொல்குடிகளின் தூயதும், உயிர் பரிமளிப்பதுமான வாழ்வனுபவங்கள் மற்றும் எண்ணங்களினூடே அக்கவிதைகள் உருவெடுத்து ள்ளன. தொன்மையும் தூய்மையும் ஒருங்கே கொண்ட அக் கவிதைகளைப் போல உலக மொழிகளில் பிரிதொன்றைக் காண்பது அரிது. அல்லது அவ்விதம் இல்லவேயில்லை!

இத்தனை அருந்தன்மைக் கொண்ட சங்கக் கவிதையின் தொழிற்படு முறை அல்லது அடையாளக் கூறுகளில் முதன்மையானவை இரண்டு. அவை 1.கதைக்கூறு முறை 2. கருப்பொருளை உட்கிடையாய் வைத்தோ அல்லது பிறிதொன்றின் மேல் ஏற்றியோ சொல்லிடும் பாங்கு. இவ்விரு கூறுகளுமே உயிர்ப்புள்ள மூத்த உலக மொழிகளின் தொன்மையான வெளிப்பாட்டு முறையாகவும், இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ளும் ஆதிமனிதரின் மொழிவழி பொருள் * வெளிப்பாட்டு வடிவமாகவும் இருக்கின்றன.

இவ்விரண்டுக் கூறுகளும் இன்று வரையிலும் தமிழில் தொழிற்பட்டு வந்த வண்ணமே உள்ளன என்பது வியப்பூட்டும் ஒன்றுதான்! தமிழில் முன்னமே எழுதப் பட்டிருக்கும் பன்னூறு கவிதைகளில் பெரும் பகுதி இத்தன்மையைக் கொண்டவையே. மட்டுமின்றி, இன்று புதிதாக எழுதவரும் கவிஞர் ஒருவரின் கவிதையிலும் கூட, இவ்விரு கூறுகளும் ஓர்மையோடு பயிலப்படாமலேயே வெளிப்படுவதையும் பார்க்க முடியும். இது ஒரு தொல்மரபுத் தொடர்ச்சி.

மேற்சொன்ன அத் தொல்மரபுத் தொடர்சியை இத்தொகுப்பிலிருக்கும் துரை ஜெய்சங்கரின் கவிதைகளில் நான் பார்க்கிறேன். சமூக ஒடுக்கு முறையையும், ஏழ்மையையும் இந்தியச் சாபமாக ஒருசேர பெற்று வளரும் ஓர் எளிய மனிதனின் அப்பட்டமான அனுபவங்கள் இக்கவிதைகளில் பதிவாகியிருக்கின்றன. அந்த அனுபவங்கள் பொதுச் சொற்காளால் பின்னப்பட்ட சொற்கூடாக இல்லாமல், உயிர்ப்புத்தன்மை கொண்ட கவிதையாகவும், கதையாகவும் ஒருசேரப் பிணைந்து உருகொண்டிருக்கின்றன.

இத்தொகுப்பில் இருக்கும் பாடையில் இறையும் காசுகள், நீண்ட என் மவுனம், பரதேசிக் காக்காவும் கண்ணசந்த நானும், சேரியம்மா, காவு, நல்ல முள் தந்த நோவு ஆகிய கவிதைகளை எழுதுவதற்கு தனித்த அனுபவம் வேண்டும். இக்கவிதைகள் வைத்திருக்கும் கதைச் சித்திரங்கள் அசலானவை. சில சித்திரங்கள் வாசிப்பவரின் கூறுணர்வுக்கு ஏற்ப பொருள் கொள்ளும் வகையில் அடுக்குகளைக் கொண்டும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக பரதேசிக் காக்காவும் கண்ணசந்த நானும் கவிதையையோ, நல்ல முள் தந்த நோவு கவிதையையோ எடுத்துக் கொண்டால், அவை பன்மைப் பொருளை தரவல்ல கவிதைகளாக உருவாகியிருப்பதைப் பார்க்க முடியும்.

கன்று ஈனும் மாடாக இருந்தாலும், காகத்துக்குக் கவலையேதும் கிடையாது. மாடோ, மாட்டைக் கவனிப்பவரோ ஏமாந்தால் (அசந்தால்) காகங்கள் கொத்தி, உயிரோடு சதையைத்தான் பிடுங்கும்.

அதே போல, நல்ல என்கிற சொல் நம்மிடையே எடுத்தாளப்படும் எதிர்மறையான முறைமைகளை ஆலோசித்தால் நல்ல முள் தந்த நோவு கவிதை வேறு பொருளைத் தருகிறது. பொது வழக்கில் நாம், கொடும் நஞ்சுடையதை நல்ல பாம்பு என்கிறோம். கடுந்தாக் குதலை நல்ல அடி என்கிறோம். இன்னும் இப்படி பலவும் உண்டு. அந்தப் பட்டியலில் இக்கவிதையில் வரும் நல்ல முள்ளும் சேர்கிறது! பார்வையாகவே மாறிப்போன (கண் இமையில் ஒட்டுகிற), வலியையும், வேதனையையும் தருகின்ற, ஒருவரின் இயக்கத்தையே தடை செய்கிற ஒன்று (முள்) நல்ல முள் என்று சொல்லப்படுகிறது! அதுவும் இந்த முரண், எளிய மனிதரின் மனதிலும் இயல்பாகப் பதிந்திருக்கின்ற கருத்தாக இருக்கிறது! பொதுச் சமூகத்திலும் சாதி, மதம், ஆணாதிக்கம், ஏழைப் பணக்காரன் எனும் பொருளாதர அசமநிலை என்று எல்லாமே ஒருவகையில் நல்லவையாகத் தானே பார்க்கப்படுகின்றன?

காதல் உணர்வை கொடுத்துவிட்டு, காதலிக்காமல் போனவளைப் பற்றி பேசுகையில், பறையைச் செய்து விட்டு வாசிக்காமல் போனது போல் இருப்பதாக உருவகப் படுத்துகிறார். நிலத்துக்காரனை எதிர்ப்பதற்கு பனையின் உச்சியிலிருந்து வெட்டிச் சிதறவிடும் பனங்காய்களைச் ஒப்புமை சொல்கிறார். தலைமுறை தலைமுறையாய் கடைநிலை மக்கள் அனுபவித்து வரும் பாடுகளைச் சொல்வதற்கு கோழியொன்றை காவுகொடுக்கும் நிகழ்ச்சியை விவரிக்கிறார். இப்படியான கவிதைகளில் சொல்லவரும் பொருள் கச்சிதமாய் ஏறிக்கொள்வது மட்டுமின்றி, கவிதையின் அழுத்தமும் கூடிவிடுகிறது.

தொகுப்பின் பிற்பகுதியில் வரும் குறுங்கவிதைகள் இது வரைச் சொல்லிவந்த கவிதைகளுக்கு வேறு வகையில் ஈடுகொடுத்து நிற்பதாக நான் நினைக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கவிதைகளும், அண்மைக் கவிதைகளுமாக இவை தொகுக்கப் பட்டிருப்பதால் ஒருவேளை அப்படி ஓர் உணர்வு வரலாம். கவிதைக்குக் காலம் இல்லையென்பதால் இது ஒரு பொருட்டில்லை.

தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் வைத்திருந்த கதைக்கூறு தன்மையும், பொருளை ஏற்றிச் சொல்லும் பாங்கும் போகப் போகத் தடைபட்டு கவிதை பொது மொழிக்குத் தாவுவதால் கவிதையின் பொருளும் விரிந்த தளத்தில் உருவாவதைப் பார்க்க முடிகிறது. முன்னம் கவிதைகளைப் போலவே முழு தொகுப்பும் இருந்திருந்தால் தனி வாசிப்பனுபவத்தை இந்நூல் தந்திருக்கக் கூடும் என்று நினைப்பவருக்கு விடை சொல்லும் வகையில் சில குறுங்கவிதைகள் உருவாகி இருக்கின்றன.

நான் தீவு
என்னைச் சுற்றி உன் 
நினைவலைகள்

வலு காற்று 
சிறு குருவி பறத்தலை 
தடுக்க முடியாது

நிறைய பூக்கள் 
உதிர்ந்திருக்கின்றன 
மண்டியிடவில்லை மரம்

நீ பூசிய வர்ணங்களை
கழுவிச் செல்கிறது 
ஞான மழை 

என்று துரை ஜெய்சங்கர் எழுதும் குறுங்கவிதைகள் ஆழ்ந்த தத்துவார்த்தம் கொண்ட ஜென் கவிதைகளுக்கு அருகில் செல்வதை நான் பார்க்கிறேன். தங்களின் கல்லூரிக்காலம் தொடங்கி இன்று வரை என்னுடன் நட்பிலிருக்கும் ரகசியனும், துரை ஜெய்சங்கரும் கவிஞர்களாக இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. இரண்டாயிரம் தொடங்கியே எழுதிவரும் துரை ஜெய்சங்கர் தொடக்கத்திலேயே கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்து, தொடர்ந்து எழுதியுமிருந்தால் இன்று அவர் குறிப்பானதொரு புள்ளியை அடைந்திருப்பார் என்பது நிச்சயம். காலந் தாழ்த்தினாலும், முளைக்க விரும்பிடும் விதையானது நீண்ட உயிர் மௌனத்துக்குப் பிறகு தயக்கம் களைந்து வித்திலைகளை விரித்தெழும்புவதைப் போல இத்தொகுப்பு அவரால் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

அரசியல் தெளிவும், கலாரசனையும், நகைச்சு வை உணர்வும் கொண்ட தம்பி துரை ஜெய்சங்கர் அடிப்படையில் ஒரு கூத்துக் கலைஞனின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருக்கு கூத்துப் பாடல்களிலும், நடிப்பிலும் நாட்டமதிகம். மஞ்ச ளும், செம்மஞ்சளும் பாரித்திடும் தீப்பந்த ஒளியில், நளினமும், தளுக்கும், கம்பீரமும், ஒயிலும் வெளிப்படும் அரிதார உடல்மொழிகளையும், அதிரும் இசையையும் கட்டியக்காரனின் தெறிக்கும் எள்ளலில் அவர் அடுத்து எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

சிறுதொகுப்பே ஆயினும் தனக்கே உரிய ஆகிருதியுடன் வெளிப்பட்டிருக்கும் இக்கவிதைகளுக்கும், இனி அவர் எழுதப்போகும் கவிதைகளுக்கும் சேர்த்து அவரை பெருமகிழ்ச்சியுடன் நான் வாழ்த்துகிறேன்.