தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி




இயக்குநர் பிரசாத் முருகேசன் அவர்களும் இயக்குநர் வசந்தபாலன் அவர்களின் நண்பர் வரதராஜன் அவர்களும் என்னை சந்தித்தார்கள். எனக்கு நண்பர் வரதராஜன் அவர்களை “வெயில்” படத்திலேயே தெரியும். சசிக்குமாரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அந்தப் படத்திற்குத் தேவையான பாடல்களை எழுதித் தருமாறும் அதற்கான மெட்டுக்களைத் தந்தார்கள் ஆனால் சம்பளம் இப்போது எங்களால் தர இயலாது. தயாரிப்பு நிறுவனத்தில் முறைப்படி ஒப்பந்தமான பின் கொடுத்து விடுகிறோம், அதற்கு சில மாதங்கள் ஆகலாம், இப்போது நீங்கள் இந்த உதவியை செய்து தாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டனர். ஒரு இளைஞனின் திரைப்படக் கனவு மெய்ப்பட தமது பங்களிப்பும் இருந்தால்தான் என்னவென்று தோன்றியது. ஒப்புக் கொண்டு எழுதினேன். அந்தப் படம் தான் “கிடாரி”

Paadal Enbathu Punaipeyar Webseries 15 Written by Lyricist Yegathasi தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

அந்தப் பயணத்தில் எனக்களித்த பிரசாத் முருகேசனின் அன்பு, அவர்கள் சொன்னதுபோல் பிற்காலத்தில் கொடுத்த சம்பளத்திற்கும் மேலானது. அவர் தந்த பணத்தை செலவு செய்து விட்டேன், இன்னும் அப்படியேதான் இருக்கிறது அவரின் அன்பு. அந்தப் படத்தில் நாயகி நாயகனை எண்ணி எண்ணி உருகுகிறது போல் ஒரு சூழல். சஞ்சனாவின் குரல் கல்லுக்கும் காதல் வரச் செய்யும்.

“மீசை முடி வாங்கியாந்து
மூக்குத்தியா போடப் போறேன்
வாசப்படி தாண்டிப் போயி வாழப்போறேன் வாழப்போறேன்

சட்டம்பள போலவந்து
சட்டுன்னுதான் கைய நீட்ட
நெஞ்சுக்குழி கேட்ட தண்ணி
ஆத்தில் ஏது

துள்ளுக்கெடா
போல நானும் நாளும்
துண்டுபட்டேன் உள்ளுக்குள்ள
ஏன் தானோ

நா ஊர்வழிய மறந்துபுட்டேன்
உன் மடிசாய
வா உன்வழிய
தெறந்துபுட்டேன் என் கொடிகாய

நெஞ்சுக்குள்ள நின்னு கிட்டு கொட்டடிச்சு வாரானே
மஞ்சனத்திப் பூவபோல
மனங்கொத்தி போறானே

உறங்கி நாளாச்சு
உடம்பு நூலாச்சு
உசுரே மருகாதே
திருட வருவானே

பாடல் எழுதுவது எப்படி என்று சில நண்பர்கள் என்னிடம் கேட்பார்கள். என் அனுபவத்தை அவர்களிடம் பகிர்வேன். பாடல் எழுதல் முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கிறது. அது அவரவர் உயிர்வழி உருவாவது. அந்த உக்தி அவர் தவழ்ந்து, நடந்து, விழுந்து கண்டடைந்ததாகும். பாடல் எழுதும் பாணியில் பத்தாயிரம் ரகமுண்டென்றால் ஏற்கிறதா மனம், ஆனால் உண்மையே.

உதாரணத்திற்கு நான் பாடல் எழுதத் தொடங்குவதற்கு முன் இயக்குநர் கூறிய திரைப்படத்தின் சூழலை மனதில் ஊறப்போடுகிறேன். அந்தப் படம் ஒரு கலைப்படமா, கமர்சியல் படமா என்று தெரிந்து கொள்கிறேன். பாடலுக்குள் நடமாடவிருக்கும் கதாபாத்திரங்களின் குணங்களை நினைவில் நிறுத்திக் கொள்கிறேன், காதல் பாடலெனில் நாயகர்களின் அழகையும். பின்பு கதை நடக்கும் நிலத்தையும் மொழியையும் பிறகு இந்தப் பாடலை எந்தக் கோணத்தில் கொண்டுசெல்லப் போகிறோம் என்பதையும் முடிவு செய்கிறேன், காரணம் பாடலுக்கான கோணங்களுமே எல்லையற்றவை தான்.

இப்போது ஒரு வட்டத்திற்குள் நின்று யோசிக்காமல் விரிந்த நோக்கில் குறிப்புகளை நிறைய எடுத்துக் கொள்கிறேன். அவை பெரும்பாலும் புதியனவாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்கிறேன். பாடலுக்குரிய மெட்டை ஒரு நான்கு முறையாது கேட்கிறேன். அதன் தத்தகார அளவைப் புரிந்து கொள்கிறேன். என் மனம் எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளிலிருந்து முதல் வார்த்தையை கவனத்தோடு தயாரிக்கிறேன். காரணம் ஒரு பாடலுக்கு முதல் வார்த்தை கேட்போரின் நாக்கில் கரைவதாகவும் பின் உள்சென்று உறைவதாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் தூக்கத்திலும் அந்த வார்த்தையை முணுமுணுப்பர்.

ஒரு பாடலில் சரணம் பல வைத்துக் கொண்டபோதும் பல்லவி ஒன்றை மட்டும் வைத்துக்கொள்வதற்குக் காரணமே பாடலை நினைவில் வைத்துக் கொள்வதற்குத் தான். ஒரே பல்லவி அடிக்கடி வருவதன் மூலமே அந்தப் பாடலுக்கும் இரசிகனுக்குமான நெருக்கம் கூடுகிறது.

அதே நேரத்தில் பாடலில் குறைந்த பட்சமாக எதுகை மோனை இலக்கண அழகை தவறவிடாமல் பார்த்துக் கொள்கிறேன். நம் முன் லட்சம் வார்த்தைகள் இருப்பினும் ஒரு பாடல் தனது சந்தத்திற்கு இசைச் சொற்களையே கோருகிறது. அப்படியாகப் பாடலை வார்க்கிறபோது தான் அதன் சந்தம் பாடலின் நோக்கத்தை சரியாக நம் காதுக்குள் நுழைத்து இதயம் வரை எடுத்துச் செல்லும். காது காயமின்றி இனிமையும் கொள்ளும். மெட்டுக்கு எழுதுகிற பாடல் மீட்டர் இடிக்காமல் இருக்க வேண்டும். மெட்டுக்கு அல்லாமல் எழுதினாலும் அங்கே சந்தம் இடிக்காமல் எழுத வேண்டும். இப்படி எழுதுகிற பாடல் ஒரு பல்லவி, இரண்டு சரணம் எழுதி முடிவதில்லை. மாறாக 5 பல்லவி 10 பல்லவி மற்றும் 5 சரணம் 10 சரணம் என நீள நீள எழுதியே ஒரு பல்லவி இரு சரணம் என்கிற இன்றையத் திரைப்படத்தின் ஒரு பாடலை உருவாக்குகிறோம். அப்படியெனில் மற்ற மற்ற பல்லவி சரணங்களை என்ன செய்வீர்கள் எனக் கேட்கத் தோன்றலாம் உங்களுக்கு, விற்காதவற்றை இதே சூழலை ஒத்த இன்னொரு புதிய பாடல் எழுதக் கிடைக்கும் போது அதன் குறிப்புகளில் இதை சேர்த்துக்கொள்வேன். குறிப்புகளில் தான் வைத்துக்கொள்ள முடியும், காரணம் அதன் மெட்டு வேறு இதன் மெட்டு வேறு.

நீங்கள் வாசித்து வந்தது ஒரு பாடலை உருவாக்குவதில் என் அணுகுமுறை. என் எதிர்காலத் திட்டத்தில் என்னைப் போன்ற பாடலாசிரியர்கள் ஒரு 25 பேரையாவது அழைத்து அவரவர் அணுகல் முறையை பகிர்ந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அப்படியாகப் பகிரப்படும் போது தமிழ் பாட்டுச்சூழல் பெரும் செறிவும் செழிப்பும் பெறும்.

Paadal Enbathu Punaipeyar Webseries 15 Written by Lyricist Yegathasi தொடர் 15: பாடல் என்பது புனைப்பெயர் - கவிஞர் ஏகாதசி

2004 ஜூலை 16, உலகம் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினம். கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் தீப்பிடித்து 94 இளம் தளிர்கள் சாம்பலான கண்ணீர் தினம் அது. நான் திருமணம் முடித்து சில மாதங்களே ஆகியிருந்த நேரம். தனக்கே நிழற்ற நேரத்தில் இன்னோர் உயிரையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்தவொரு வெப்ப காலத்தில் இந்த சேதி கேட்டு நான் வெடித்துவிட்டேன். வீடு செல்ல மனசின்றி வீதியில் நின்று ஒரு ஒப்பாரியை எழுதித் தீர்த்தேன்.

பல்லவி
ஊரு ஒறங்கலையே – ஒருவா
சோறு எறங்கலையே
பள்ளிக்கூடம் போன மக்கா
எரிஞ்சு போனீகளே
பெத்தவுக நாங்கருக்க
பிரிஞ்சு போனீகளே

கொடும நடந்துருச்சு – அழது
குளமும் நெறஞ்சிருச்சே

சரணம் – 1
அலமாரி பொம்மைகள் தேடுதே உன்ன
அவைகளுக்கு என்ன சொல்ல
இருக்கிற சீருடை யாருக்குக் கண்ணே
ஏஞ் செல்லமே நீயும் இல்ல

அரைக்கிற தேங்காய்க்குக்
கைநீட்டப் புள்ளருக்கா
இடுப்புல உக்கார
இனிமேதான் யாரிருக்கா

விளையாண்ட தடமெல்லாம்
கூட்டி அழிச்சிட்டோமேமே
கொஞ்சி வளர்த்திட்டக்
குருவி தொலைச்சிட்டோமே

ஆலைச் சங்காய் அழுதீரோ
தீக்கிரை ஆகயில
அம்மாவென்று அழைத்தீரோ
உயிர்விட்டுப் போகயில

சரணம் – 2
ஆணியில் தொங்கிய பையொண்ணு எங்கே
அதுவும் காணலியே
காலையில் சாப்பிட்ட ஈயத் தட்டில்
ஈரம் காயலியே

சுவரெல்லாம் ஓவியம்
கிறுக்கிட யார் இருக்கா(ர்)
எரிஞ்சு நீ போயிட்ட
கூப்பிடப் பேர் இருக்கா

பாக்குற தெசயெல்லாம்
பத்தி எரியுதப்பா
எரிகிற தீயெல்லாம்
புள்ள முகம் தெரியுதப்பா

விண்மீனாய் வானத்தில் பூப்பீரோ காலத்தின் ஒரு நாளில்
அநாதைப் பெற்றோரை பார்ப்பீரோ வருமந்தத் திருநாளில்

இந்தப் பாடலை அண்ணன் கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். தாயாய் மாறி மெட்டமைத்துத் தந்தார் அல்லது கண்ணீரை மொழிபெயர்த்துத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு மெட்டு. அடுத்தபடியாக இந்நப் பாடலை மெட்டோடு நண்பர் கருணாநிதிக்கு அனுப்பினேன், ரொம்ப ஒப்பாரியாக இருக்கென்று அவர் அந்தப் பாடலை மேடைகளுக்கு எடுத்துச் செல்லவில்லை. பிறகு நடிகரும் பாடகருமான பெரியகருப்பத்தேவர் அப்பாவிடம் சென்று கிருஷ்ணசாமி அண்ணனின் குரலை டேப் ரெக்கார்டரில் போட்டுக் காட்டினேன். தொடர்ந்து மூன்று முறை கேட்டார். கண்களிலிருந்து நீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. நா தழுதழுக்க அவர் சொன்ன வார்த்தை,

“பாடும் போது என்னால் அழாமல் இருக்க முடியாது.. அழதுகொண்டு என்னால் பாட முடியாது.”

முந்தைய தொடர்களை வாசிக்க:

தொடர் 10: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 11: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 12: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 13: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 14: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி