நூல் அறிமுகம் : ஆதி வள்ளியப்பனின் இளையோருக்கு மார்க்ஸ் கதை – பூங்கொடி கதைசொல்லி
நூல் : இளையோருக்கு மார்க்ஸ் கதை
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 96
விலை : ₹80.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
உலகின் எந்த மூலையிலும் மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்தால், அரசுக்கு எதிராகப் போராடினால், முதலாளிகளின் கொள்ளையை வெளிப்படுத்தினால் , எந்தவொரு சுரண்டலுக்கும் எதிரான குரலுக்கும், கம்யூனிஸ்ட் என்ற முத்திரை குத்தப்படுவதை எங்கும் நாம் காணலாம். அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் சம உரிமை பெற்று அனைவரும் சமமாக வாழவேண்டும் என்பதைத்தான், மார்க்ஸ் முன்வைத்த கம்யூனிசக் கொள்கை வலியுறுத்துகிறது.
மனிதகுல வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லான, மூலதனம் என்று ஈடுஇணையற்ற நூலைத் தந்த, மார்க்ஸை பற்றி, அவர் வாழ்வைப் பற்றி, இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், மிக சிறப்பான வகையில் ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் அவர்கள் வடிவமைத்துள்ளார்.
கார்ல் மார்க்ஸின் தாய்நாடு பிரஷ்யா ( இன்றைய ஜெர்மனியின் ஒரு பகுதி). அவருடைய தந்தை வழக்குறைஞர் ஹென்ரிக் மார்க்ஸ். தாய் ஹென்ரிட்டா.. சிறு வயதில் படிப்பில் சுமாரான மாணவனாக இருந்தாலும், கவிதை படைக்கும் ஆற்றலும், ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார். பல மொழிகளை கற்றுக் கொள்ளும் ஆற்றல் அவருக்கு இளவயதிலேயே இருந்திருக்கிறது. மூலதனம் நூலை எழுதும் பொழுது, இரண்டாவது பாகத்தை எழுதும்போது அவர் ரஷ்ய மொழியை கற்க வேண்டியிருந்தது. அவரின் 55 வயதில் ஆறு மாதங்களுக்குள் ரஷ்ய மொழியை கற்றுக் கொண்டதோடு இல்லாமல் அதன் நாவல்களைப் படிக்கும் அளவிற்கு அந்த மொழியில் தேர்ச்சி பெற்று விட்டார். அவரது அயராத உழைப்பும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தான் முக்கிய காரணம்.
பள்ளியில் அவர் பயின்ற காலத்தில், ஒரு இளைஞன் ஒரு தொழிலில் ஈடுபட தொடங்குவதற்கு முன்னால் அவன் மனதில் உருவாகும் எண்ணங்கள் குறித்து, கட்டுரை எழுதுமாறு பணிக்க பட்டிருந்தது.
” சமூகத்துக்கு அதிக நன்மை தரக்கூடிய தொழிலை நாம் தேர்ந்தெடுத்தால், வாழ்க்கை நமக்கு பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் உலக நன்மைக்காக நாம் செய்யும் தியாகமாக மாறிவிடும். உலக மக்களில் பலருக்கும் மகிழ்ச்சியை உருவாக் குபவரே மகிழ்ச்சி அடைகிறார் என்பது பட்டறிவு. அதேநேரம் ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால் அறிவாளி ஆகலாம்; ஞானி ஆகலாம்; கவிஞராக கூட ஆகலாம்.ஆனால் குறைவற்ற உண்மையான மகத்தான மனிதனாக மாற முடியாது” அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்த இளம் வயதிலேயே, மனித சமூகத்திற்கு உழைப்பதுதான் அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான சாராம்சமாக இருந்திருக்கிறது.
வால்டேர், ரூசோ போன்ற பிரெஞ்சு தத்துவ சிந்தனையாளர்களின் கருத்துக்களை, தன் தந்தையின் வழியாகவும், சோசலிசம் எனப்படும் சமதர்மக் கொள்கை தொடர்பான ஆர்வத்தை, அவரது காதல் மனைவியான ஜென்னியின் தகப்பனார் வெஸ்ட் பாலன் அவர்கள் மூலமும் வளர்த்துக்கொண்டார்.
தன்னைவிட 4 வயது மூத்த ஜென்னியிடம் இருந்த நட்பு இளவயதில் காதலாக மாறியது. அவரது பதினெட்டாவது வயதில் சொந்தக்காலில் நின்ற பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் படித்த ஏழு ஆண்டு காலமும் ஜென்னி அவருக்காக காத்திருந்தார்.
அங்கு அவர் தத்துவ சிந்தனை, சட்டம், வரலாறு, புவியியல், இலக்கியம் என்று பல்வேறு துறைகளைப் பற்றி படித்தார். சட்டத் துறையில் கவனம் செலுத்துமாறு அவருடைய தந்தையின் அறிவுரையாக இருந்தாலும், அவருக்கு தத்துவ சிந்தனைகளில் தான் மனம் விரும்பி சென்றது.
பிரெடரிக் ஹெகல் என்ற தத்துவ சிந்தனையாளர் கருத்துக்கள் ஈர்க்கப்பட்டு, அவர் முன்வைத்த இயக்கவியல் கொள்கையை, மார்க்ஸ் வாசித்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் அவரின் பேராசிரியராக இருந்த, லு த்விக் பாயர்பாகின் பொருள்முதல்வாத கோட்பாட்டை வாசித்து தெரிந்து கொண்டார். இந்த இரண்டு கோட்பாடுகளையும் இணைத்து, தன்னுடைய கோட்பாடுகளுக்கு அடித்தளமாக பயன்படுத்தி விளக்கினார்.
அவருடைய இருபத்தி மூன்றாவது வயதில் முனைவர் பட்டத்தை பெற்றார். அந்தப் பட்டத்தை எந்த காலத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை. அதேபோல சட்டம் பயின்று இருந்த அவர் வழக்குரைஞராக இந்த நீதிமன்றத்திலும் வாதாடியது இல்லை.
பேராசிரியர் வேலை கிடைக்காததால், ரைன்லாந்து கெஸட் என்ற இதழில் எழுத ஆரம்பித்தார். இது தான் அவருடைய முதல் பணி. அவருடைய எழுத்துகளில் மக்களுக்காகத்தான் அரசை தவிர அரசுக்காக மக்கள் அல்ல..என்ற சாராம்சத்தில் அடிப்படையிலேயே கட்டுரைகள் எழுதிவந்தார்.
அரசுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், அரசின் நெருக்கடிகள் அவருக்கு தொடர்ந்தது. அந்த நேரத்தில் 1843 ஜூன் 13ஆம் தேதி ஏழு வருடங்கள் தனக்காக காத்திருந்த ஜென்னியை மணம் செய்து கொண்டார். தொடர்ந்து அங்கு வசிக்க முடியாத சூழல் பாரிசில் குடியேறினார். அங்கும் நெருக்கடி, பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு குடியேறி சென்றார். பின்னர் தன்னுடைய இறுதிக் காலத்தில் லண்டனில் வாழ்ந்தார். பல நாடுகளில் வசித்த போதும் எந்த நாட்டிலும் அவர் குடியுரிமையை பெறவில்லை. நான் இந்த உலகத்தின் குடிமகன் என்று தன்னைக் கூறிக் கொண்டார்.
வேறு யாரையும் விட எங்கெல்ஸ்யை விடவும் மார்க்கை அதிகமாக புரிந்து கொண்டவர் ஜென்னி. தன் கடைசி காலம் வரை மார்க்சுக்கு அனைத்து வகையிலும் உற்ற துணையாக இருந்தவர். ஜென்னியின் மேல் கொண்ட காதலால், தன் மூன்று மகள்களின் பெயரிலும் ஜென்னி என்ற பெயர் வருமாறு பெயர் வைத்தார். ஜென்னி கரோலின், ஜென்னி லாரா, ஜென்னி எலினார்…
மார்க்ஸ் கிறுக்கல் கையெழுத்தில் எழுதுவதைப் பார்த்து, அழகாக படி எடுத்துக் கொடுக்கும் வேலையை ஜென்னி செய்ய ஆரம்பித்தார். அந்த நாட்களில் என் வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான நாட்கள் என்று ஜென்னி குறிப்பிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை தன்னுடைய 29 ஆவது வயதில், உருவாக்கினார். சர்வதேச தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்..என்ற அந்த அறைகூவல் தான் உலக அரசியல் வரலாற்றில் தாக்கத்தை இன்றும் கூட ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கம்யூனிச தத்துவம் இப்படித்தான் உலகிலே வேர் பிடிக்க ஆரம்பித்தது.
ஜெர்மனி பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளுக்கும் குடி பெயர்ந்து கொண்டே ஒரு வசதி குறைவான அகதி வாழ்க்கையை தான் மார்க்ஸ் வாழ்ந்தார். ஒரு செய்தித்தாளுக்கு எழுதிய போது கிடைத்த சொற்ப வருவாய் தான், அவருக்கு கிடைத்த சம்பளம்.
அவர்கள் லண்டனில் இருக்கும் பொழுது, ஏழைகள் அதிகம் வசிக்கின்ற பகுதியில் தான், இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தான் வசித்து வந்தார். லண்டனில் தங்கள் குடும்பத்தின் ஒருநாள் வாழ்க்கை குறித்து ஜென்னி, தன்னுடைய நண்பர் யோசிப் வெய்டமையர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாஸ் வறுமையின் நம்பிக்கை தளராது, எப்படி ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை காட்டும் கண்ணாடியாக இந்த கடிதம் கருதப்படுகிறது.
ஒருமுறை கைச்செலவுக்கு காசில்லாமல், மேல்கோட்டை அடகு வைத்தார். நல்ல உடைகள் இல்லாததால் அவருடைய மகள்கள் பள்ளிக்கு பல நாட்கள் செல்ல முடியாத அவஸ்தைகளும் நிகழ்ந்த காலங்களும் உண்டு.
வேறு ஒரு ஆளாக இருந்தால் தன்மானத்தை விட்டுக் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் அவரால் அப்படி எல்லாம் வாழ முடியவில்லை. தன்னுடைய ஏழ்மை நிலையிலும் கூட, ஏழைத் தொழிலாளர்களுக்கு மக்களுக்கும் எதிராக நடைபெறும், சுரண்டலைப் பற்றி மட்டுமே அவரது இதயமும் மூளையும் சிந்தித்துக் கொண்டிருந்தது.
மார்க்ஸ் சிறந்த தலைவராக இருந்தார். அவரின் சிறந்த தோழராக ஏங்கல்ஸ் இருந்தார். ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் பொதுவுடமைக் கொள்கையை நடைமுறைக்கு சாத்தியமான கோட்பாடாக மார்க்ஸால் உருவாக்கியிருக்க முடியாது. மார்க்சின் பெருமளவு பொருளாதார தேவைகளை, பூர்த்தி செய்தவர் ஏங்கல்ஸ்.
மூலதனம் என்ற நூலுக்காக, அவர் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறார். தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த நூலை உருவாக்குவதற்கு அர்ப்பணித்து விட்டார். மூலதனத்தின் முதல் பாகம் முடிவடைந்ததும் தன் நண்பன் ஏங்கல்ஸ் க் தன்னுடைய நன்றி கடிதத்தை முதலில் எழுதினார்.
மூலதனத்தின் முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், அவரது மனைவி ஜென்னி உடல்நலம் குன்றி, காலமானார். மிகவும் நேசித்த அதனுடைய மூத்த மகள் ஜெனினி லாங்குவி அவரும் இறந்துவிட, அப்படின்னு துயரம் பன்மடங்காகப் பெருகி அதற்குப் பிறகு நீண்ட காலம் அவர் உயிர் வாழவில்லை.
அவரது மறைவிற்குப் பிறகு அவரது நண்பர் ஏங்கல்ஸ் மற்றும் இரு மகள்கள் துணையுடன் இரண்டாம் மூன்றாம் பாகத்தை அச்சில் கொண்டு வந்தார்கள்.
மார்க்சின் இளவயது வாழ்க்கை, காதல் வாழ்க்கை, வறுமையிலும் தளராத அவரது உழைப்பு, அவருக்கு உதவிய நண்பர்கள் , அவரது போராட்டங்கள் என்று அனைத்தும் இந்த நூலில் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உலகம் முன்பை விட மேம்பட்டதாக இருப்பதற்கு மார்க்ஸ் முன்வைத்த கொள்கைகள் காரணமாக இருந்திருக்கிறது. பொருளாதாரம், வரலாறு, கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், அரசு எதிர்ப்பு, சமூக மாற்றங்கள், மக்கள் புரட்சிகள், மக்களுக்காக இதழியல், கூட்டாக போராடும் உரிமை.. என பல்வேறு துறைகளிலும் மார்க்ஸ் தாக்கம் செலுத்தியிருக்கிறார்.
” மனித குலத்தின் நன்மைக்குப் பாடுபடும் வகையில் நம்முடைய வேலையை தேர்ந்தெடுத்து விட்டால் அதன் சுமை நமக்கு பெரிய நெருக்கடிகளை தராது..” என்று பள்ளி காலத்தில் அவர் எழுதியிருந்தது போலவே.. அவருடைய வரிகளுக்கு மிகச் உதாரணமாக அவரே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும், எப்படி உலகின் மகத்தான மனிதராக மார்க்ஸ் ஆனார் என்பதை இப்புத்தகம் மிக அழகாக சொல்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு அருமையான நூல்.
– பூங்கொடி கதைசொல்லி