Posted inPoetry
ஜனநேசனின் கவிதைகள்
மீசை முளைத்த அத்தைகள்
*********************************
உலகமறியா வயதில்
அப்பாவை இழந்த.
என்னைப் பேணி
அப்பாவின் குறை, நிறை
குணங்களைப் புகட்டி
வளர்த்த அத்தைமார்
மீசை முளையா
சித்தப்பா, பெரியப்பாமார் !
குறை களைந்து
நிறைகளால் என்னை
நிலைப்பித்த. சிற்பிகள் !
ஞானம்
**********
எதிரிலிருப்பவரோடு பேசுகையில்
மூக்குத்தண்டிலிருந்து நழுவும்
முகக்கவசத்தை சரி. செய்யும் போதெல்லாம்
சள்ளையாய் உணரும் மனம்
தலைமுறைகளாய் முந்தானையை
இலாவகமாய் சரிசெய்யும்
தாய்குலத்தின் துயர் எண்ணும்!
சிறுதொந்தியோடு குனிய நிமிர
அல்லலுறும் மனம்
பத்துமாதம் எனைச் சுமந்து
அன்றாடத்தைக் கடந்த
தாயை நினைத்து கசியும்!
தன்துயரிலிருந்தே உலகுதுயர்
காணும் ஞானமும்
காலம் கடந்தே வருகிறது…!