Good Luck Sakhi Moviereview By Era. Ramanan திரை விமர்சனம்: குட் லக் சகி – இரா இரமணன்

திரை விமர்சனம்: குட் லக் சகி – இரா இரமணன்

‘இறுதி சுற்று’’டங்கல்’ ‘பாக் மில்கா பாக்’ சாய்நா நெய்வால்’ ‘கனா’’ஜீவா’ போன்ற விளையாட்டை மையமாகக் கொண்ட பட வரிசையில் இது துப்பாக்கி சுடும் போட்டியை மையமாகக் கொண்டது.

2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜனவரி 2022 அன்று வெளிவந்துள்ள தெலுங்குப் படம். இதன் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் பிராதானமாக இந்தி திரையுலகில் இயங்கியவராம். ஹைதராபாத் புளூஸ்,ராக்போர்ட், இக்பால் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். திரைக்கதை எழுத்தாளர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். ஏழு சர்வ தேச விருதுகளும் இரண்டு தேசிய விருதுகளும் பெற்றவர். ‘குட் லக் சகி’ அவர் இயக்கிய முதல் தெலுங்குப் படம். கீர்த்தி சுரேஷ்,ஆதி பினிசெட்டி, ஜகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசிப்பவள் சகி. பழங்குடி இனத்தை சேர்ந்த பெண். குறி பார்த்து கோலி அடிப்பதில் வல்லவள். வளர்ந்த பெண்ணான பிறகு அவள் கெடு வாய்ப்பு (துரதிர்ஷ்டம்) கொண்டவள் என்று பேசப்படுகிறாள். அவளுடைய திருமணத்தன்று வேட்டு சத்தத்தினால் குதிரை மிரண்டு அதன் மீதமர்ந்திருந்த மாப்பிள்ளையை கீழே தள்ளிவிடுகிறது. அவன் இறந்துவிடுகிறான். ஆனால் அவள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உற்சாகமாக சுற்றி திரிகிறாள். அவளுடைய சிறு வயது நண்பன் ராஜூ இப்போது நாடக நடிகனாகி அந்த ஊரில் நாடகம் போட வருகிறான்.

அவனும் கோலி விளையாட்டில் வல்லவன் என்பதால் ‘கோலி ராஜு’ என அழைக்கப்படுகிறான். நன்றாக நடிப்பதால் ஜெமினி கணேசன் என்றும் அழைக்கிறார்கள். அந்த ஊருக்கு வரும் ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறார். அதில் சேருமாறு சகியை ராஜூ உற்சாகப்படுத்துகிறான். போக்கிரியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடைய நண்பன் சூரியும் அதில் சேர்கிறான். கர்னலின் பயிற்சியாலும் இயற்கையாக அவளுக்கு அமைந்திருக்கும் திறமையாலும் சகி சிறப்பாக விளையாடி மாநில அளவுப் போட்டிக்கு தேர்வாகிறாள். இதற்கிடையில் கர்னலுடன் அவள் பழகுவதைக் கண்டு ராஜூ பொறாமையும் சந்தேகமும் கொள்கிறான். இதனால் அவனை திரைப்படத்திற்கு தேர்வு செய்ய வந்திருக்கும்போது சரியாக நடிக்க முடியவில்லை.

தன்னுடைய இந்த கெடுவாய்ப்பிற்கு சகிதான் காரணம் என்று கூறி கடுமையாக திட்டுகிறான். இதனால் மனம் உடைந்த சகி மாநிலப் போட்டியில் தாறுமாறாக சுடுகிறாள். இதற்கிடையில் ராஜூவை சினிமாவில் நடிக்க தேர்ந்தெடுக்கிறார்கள். சகியின் வற்புறுத்தலினால்தான் அவனுக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது என்பதும் தெரிய வருகிறது. துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதி சுற்றில் ராஜூ அவளிடம் அவளுடைய அதிர்ஷ்டக் கோலிகளைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறான். ஆனால் அவள் அதைக் கீழே போட்டுவிட்டு கர்னல் சொன்ன’தலையெழுத்து என்பது எதுவும் இல்லை.உன் வெற்றி உன் கையில்’ என்கிற வார்த்தைகளை நினைத்து குறி பார்த்து சுட்டு வெற்றி பெறுகிறாள். ராஜுவுடன் திருமணமும் நடைபெறுகிறது.

படத்தில் பல குழப்பங்கள் உள்ளன. துப்பாக்கி சுடும் பள்ளி அமைப்பதை கர்னல் ஏன் ரகசியமாக செய்கிறார் என்று தெரியவில்லை. ராஜுவும் சகியும் சின்ன வயதில் ஜவ்வு மிட்டாய் கையில் சுற்றி தின்றால் பெரியவர்களானாலும் அப்படியே செய்துகொண்டிருப்பார்களா? ஒருதரம் காட்டினால் பரவாயில்லை. அதையே பலமுறை காட்டுகிறார். ராஜூவை விரும்பும் சகி திடீரென கர்னல் மேல் காதல் கொள்வது ஏன் என்று தெரியவில்லை. போக்கிரியாக இருக்கும் சூரி திடீரென நல்லவனாகி ராஜுவுக்கு உதவுகிறான். அதுவும் புரியவில்லை.

நாடகக் காட்சியில் கிருஷ்ணர் கண்ணாடி அணிந்து வருவதும் அர்ஜுனனாக நடிக்கும் ராஜூ தன் காதலியைக் கண்டதும் கர்ணனின் பின்புறத்தில் அம்பு எய்வதும் லேசான சிரிப்பை வரவழைக்கிறது. கடோத்கஜன் மேக்கப்பை கலைக்க முடியாமல் அந்த வேஷத்திலேயே ராஜூ மாநிலப் போட்டி நடக்கும் வளாகத்திற்குள் வருவது சற்று மிகையாக இருந்தாலும் அதையாவது நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் அவனை போட்டி நடக்கும் இடத்திற்கே அனுமதிப்பதும் சகியுடன் பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துப்பாக்கி சுடும் போட்டியில் உள்ள சிரமங்கள், பயிற்சி எடுக்கும் முறைகள் ஆகியவற்றை நல்ல முறையில் காட்டிய இயக்குனர் இறுதிக் காட்சியை கேலிகூத்தாக மாற்றிவிட்டார். ஆனாலும் ‘இறுதி சுற்று’ பாக் மில்கா பாக்’ போன்ற படங்களில் இறுதிக் காட்சியில் வெற்றி பெறுவதற்கு வேறு உந்துதல் வேண்டும் என்பது போல் காட்டப்பட்டிருக்கும். இதில் சகி தன் திறமையில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுவதாகக் காட்டியிருப்பதைப் பாராட்டலாம்.

சகியை ஊர் சார்பாக மாவட்டப் போட்டிக்கு அனுப்பவது குறித்த ஊர்ப் பஞ்சாயத்தில், அவள் பெண், அவள் வேறு ஊரிலிருந்து வந்தவள் என்று கூறி ஒரு சாரார் தடுக்க முயலுவதும் இன்னொரு சாரார் ஆதரிப்பதும் இறுதியில் சகி ‘என்னைக் கேட்காமல் எல்லோரும் பேசுகிறீர்கள்.நான் போட்டிக்குப் போகப் போகிறேன்’ என்று கூறுவது அழுத்தமான இடம். அவளுடைய உடை, அணிகலன்கள், கூந்தல் ஆகியவை துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக மாறுகிறது. இதற்கு ஊரில் பெரிய எதிர்ப்பு எதுவும் வருவதாகக் காட்டப்படவில்லை. ‘டங்கல்’ திரைப்படத்தில் இதை இன்னும் சற்று சிறப்பாகக் காட்டியிருப்பார்கள்.

அதிர்ஷ்டம், தலையெழுத்து, பெண்கள் தன்னம்பிக்கை போன்றவை குறித்த நல்ல மையக் கருத்து கொண்ட படம். பொருத்தமான கதைக் களம். சிறந்த இயக்குனர். ஆனாலும் இயக்கப்பட்ட விதம் அமைச்சூரிஷாக இருக்கிறது. இதற்கு முன் நல்ல திரைப்படங்களை இயக்கிய அவருடையது இது என்பதை நம்ப முடியவில்லை. ஒருவேளை அவரது முதல் தெலுங்குப் படம் என்பதாலா?