Mounan Yathriga (மௌனன் யாத்ரீகா) Poetry Sannatham Kavithai Thodar (Series 23) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam

கவிதைச் சந்நதம் 23 – நா.வே.அருள்கவிதை உடும்புமௌனன் யாத்ரீகா

இது வரலாற்று உடும்பு. இதன் உடம்புக்குள் காட்டின் எலும்புகள். மென்மை, மிருது என்கிற வார்த்தைகள் மனிதன் காலப்போக்கில் தனது நாக்கில் கண்டெடுத்த போலி அல்லது பாசாங்கு நாகரிகத்தனத்தின் புதையல் வார்த்தைகள். இந்தக் கவிதையில் ஆவி பறக்கப் பறக்க ஆதி மனிதனின் வாழ்வியல் கவிச்சி.

ஆதிகாலம் வேட்டை என்பது இரையோடு சம்பந்தப்பட்டது. நவீன காலத்திலோ வியாபாரத்தோடு தொடர்பாகிவிட்டது. கவிஞன் உடும்பின் உடம்பு விலாசத்தைக் காட்டின் நெடியுடன் கவிதையாய் எழுதுகிறான்…. “முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட காய்ந்த மரத்துண்டு”. வேறு வரிகளிலும் எழுதிக் காட்டுகிறான்….“பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்கள்”.

காலம் கணந்தோறும் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றை உண்டு ஒன்று வாழ்கிற உலக நியதி. ஒளியைக் கூட விழுங்கிவிடுகிற கருந்துளையின் கதை அறிவோம். ஜீவராசிகளிலேயே சிந்தனை வேட்டை நடத்துபவன் மனிதன்தான். மனிதனின் கண் உடும்பின் மேல். உடும்பின் கண்களோ நீலப்பறவை தங்கும் வங்கின் மேல். அது நுழைந்தவுடன் கவிதையில் ஒரு ஒலிக் காட்சி….“முட்டைகள் நொறுங்கும் சத்தம்”. நகுலனின் சாவின் முட்டையைப் பார்த்திருக்கிறது தமிழ்க் கவிதையுலகம். இந்தக் கவிஞனோ நீலப் பறவையின் முட்டையைப் பச்சை அண்டம் என்கிறான்.

“காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்”

மனிதனின் வரலாறு விலங்கோடு சம்பந்தப்பட்டது. இந்த இடத்தில்தான் கவிதை இடப் பெயர்ச்சி நடத்துகிறது. உடும்பின் வரலாறு மனித வரலாற்றின் குறியீடாகிறது. கால்தடங்களையே காண மறுப்பது மக்களின் இயல்பு; கண்களில் கால்தடம் காண்பது கவிஞனின் வேலை! பிடுங்கிய கண்களில் இடுங்கிய தடங்கள். அவை கண்கள் அல்ல; காலத்தின் உண்டியல்கள்! அதில் குறைந்தது ஆயிரம் தடங்களின் அடையாளங்கள்.

இங்கு தொடங்குகிறது கவிதையின் டுவிஸ்ட்….
”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்”

இது விலங்குகள் பிடிக்கிற வேட்டையல்ல. மனிதர்களுக்குக் காட்டின் கதைசொல்லும் கவிதையின் வேட்டை. வேட்டை ஒரு சாக்கு. துரத்திப் பிடிப்பதெல்லாம் ஒரு துயரம் மிகுந்த இழந்த காட்டின் இதயத்தை! வேட்டையில் இழந்த காட்டை வெற்றிகொள்ள உயிருடன் உடும்பைப் பிடிக்கிற உன்மத்த வெறி.

கவிதையின் டுவிஸ்ட் ஒரு கொண்டை ஊசி வளைவைப்போல சாகசம் புரியத் தொடங்குகிறது. வேட்டையில் பிடிக்கப்பட்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட கூண்டுகளை அடையாளம் காட்டுகிறான் கவிஞன்.

“சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

சினிமா முடிந்ததும் ஒரு காட்சியை (ஃபிரீஸ்) செய்வது போல – உறைய வைப்பதைப் போல – கவிதை முடிந்துவிட்டாலும் இரண்டு வரிகள் கவிதையை மனதில் உறைய வைத்துவிடுகின்றன….

“வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.”

உடும்பின் பார்வையில் தெரிகிறது இழந்தவர்களின் துயர வரலாறு. வாசிக்க முடிந்தவர்கள் வாசித்துக் கொள்ளலாம். வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது வெறும் நகைச்சுவை வசனம் அல்ல…. அது வாழ்க்கையின் மீட்சி. உடும்பின் மூலமாக நம் முன்னோர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள். புரிந்து கொண்டால் பூமி நமக்குச் சொந்தம். இல்லையெனில் நாமே நமக்குச் சொந்தமில்லை.

மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

இனி முழுக் கவிதை.

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு

”முரட்டுக் கொடிகள் சுற்றிக் கொண்ட
காய்ந்த மரத்துண்டைப்போல்
உறுதியான வால்
நீலப் பறவைப் பதுங்கும் வங்கில்
நுழைவதைப் பார்த்தேன்

பச்சைக் காடுகள் விதைக்கப்பட்ட உடும்பின் கண்களை
அது எட்டிப் பார்க்கும்போது காண வேண்டும்
அகவன் மகனே!
உன் உண்டி வில்லை சுருட்டி வை”

“எலே மலைராசா…
நாட்டுக்குள் போய் வந்த காட்டாளா
முட்டைகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது பார்
இந்நேரம் அதன் பிளந்த நாவின் நுனியில்
பச்சை அண்டத்தின் ருசி வழியும்
இன்று நம் அட்டிலில்
கூடுதல் மிளகை அரைப்பாள் நம் கிழத்தி’

“எச்சிலூறும் அந்த நத்தையை
ஓட்டுக்குள் கொஞ்சம் இழுக்கிறாயா?
காட்டின் சகல இடங்களுக்கும் போகும்
ஒரு முதிர்ந்த விலங்கின் கண்களில்
நமக்கு முந்தைய தலைமுறையின்
பாதத் தடங்கள் நிச்சயம் இருக்கும்
எனக்கதைக் காட்டு சிறுமலை நாடா ”

“என் ஈட்டியின் கூர்முனையால்
அதன் கழுத்துச்சதை அறுந்தால்
இரண்டு கண்களையும் பிடுங்கி
உன்னிடம் தந்துவிடுகிறேன்
அதற்குள் ஆயிரம் தடங்களாவது இருக்கும் ”

”இறந்த கண்கள் வேண்டாம்
உயிருடன் பிடிப்போம்
இந்தக் காட்டில் நம் வரலாறு மறைந்துள்ளது
முந்நூறாண்டுகள் வாழ்ந்த ஓர் உடும்புக்கு
நம் சரித்திரம் தெரியும்

சரித்திரத்தைத் தெரிந்து கொள் எந்தையே
உன் ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டு
ஜல்லி அள்ளும் கருவியை
உனக்குக் கொடுக்கப் போகிறார்கள்”

வரலாற்றுப் புகழ் மிக்க உடும்பு
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

மௌனன் யாத்ரீகா