Monetization (பணமாக்கல் - Panamakkal) Short Story By Jaypee. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

*பணமாக்கல்* சிறுகதை – ஜேப்பி



டேய் சோமாரி…

ஓனர் என்னய அப்படித்தான் கூப்புடுவாரு, மாரிங்கிறத சோமாரியாக மாத்தி. எனக்கு என் பேரு அடியோட புடிக்காம போனதுக்கு இவரு தான் காரணம்.

இன்னிக்கு சம்பளம் தருவாருன்னு சொல்லிருக்காங்க. நானும், மாடசாமியும் (இவனை மாடு என்று அழைப்பார்) ஓனர் ரும் வாசல்ல இரண்டு மணி நேரமா தவம் கிடக்கிறோம்.

டேய் வாங்கடா… முதலாளி கூப்பிடுறார்… மேஸ்திரி உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.

ஏண்டா களவாணிப் பயலுகளா… மூட்டையைத் திருடி விக்கிறீங்களோ…

இல்லைங்க என்றோம் இரண்டு பேரும்.

காவலுக்கு இருக்கச் சொன்னா… கக்கூஸ் போனீங்களோ.

பேச்சு வரல்ல. மேஸ்திரிதான் மூட்ட திருடுனாருன்னு சொன்னால், அவ்வளவுதான் கொன்னே போடுவான்.

போங்கடா… உங்களுக்கு இனிமே இங்க வேல கிடையாது.

முதுகு காட்டாம வெளிய வந்தோம்.

பின்னாலயே வந்தான் மேஸ்திரி. ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து போகச் சொன்னான். காட்டிக் கொடுக்காம இருந்ததுக்கு லஞ்சம். லஞ்சத்துக் கூட்டிக் கொடுன்னு கேட்க முடியுமா?

வேலை போவுறது, சம்பளம் கொறச்சு கிடைக்கிறது, திருட்டுப் பட்டம் கட்டப்படுறது இது எல்லாம் எனக்குப் புதுசா. வேல வாங்குறதுக்கும், வேல வாங்கிட்டு ஏய்க்கிறதுக்கும், பணத்தப் புடுங்குறதுக்கும் ஆயிரம் வழி இருக்குதுல்ல. இந்த வழியெல்லாம் தெரிஞ்சதுனால ஓனர் நிறையவும் மேஸ்திரி கொஞ்சங் கொறச்சும் பணம் வச்சிருக்காங்க. வழி தெரியாத என்ன மாதிரி மாடசாமி மாதிரி ஆளுங்கள்லாம் அன்றாடங் காச்சியா இருக்கோம்.

மாடசாமிதான் உடைஞ்சு போய்ட்டான்.

நான் சைக்கிளை எடுத்துக்கிட்டு கிராமத்துக்குக் கிளம்பினேன். மாடசாமி பின்னால ஏறிக்கிட்டான். ஒரு மணி நேரம் மிதிக்கணும். சட்டப் பையைத் தடவிப் பார்த்தேன், நூறு ரூபாய் இருந்தது.

போற வழியில முக்குத் தெருவுல மாடசாமி இறங்கிக் கொண்டான்.

மாடசாமி இறங்கிப் போன இரண்டாவது நிமிசம் சைக்கிள் செயின் அறுந்துருச்சு. இப்ப எங்க ஒட்ட வைக்கிறது. தள்ளிக்கொண்டே போனேன்.

வீட்டுக்குப் போக வேதனையாக இருந்தது. வீட்டுல அய்யா (எங்க அப்பாவ அப்படித்தான் கூப்புடுவேன்) முகத்த எப்படிப் பாக்குறது. கொஞ்ச நாள்ல நடந்த விசயங்கள்லாம் அவரப் புரட்டிப் போட்ருச்சு. இதில எனக்கு சம்பளம் கிடைக்கலன்னு எப்படிச் சொல்லுறது?

அய்யாவுக்கு வயசாயிடுச்சி, அறுபத்தி மூணு. விவசாயக் கூலியா இருந்து என்னையும் அக்காவையும் படிக்க வைக்க நினைச்சாரு. அக்கா ஏழோட நின்றுச்சு. கட்டிக் கொடுத்த பொறவு ஹோசூர் பக்கம் புருசனோட போயிருச்சு.

அய்யாவுக்கு தொடர் காய்ச்சல் வந்த வருசம் நான் ஆறாப்போட நிறுத்திட்டேன்.

நானும் கூலிதான். ஆனா விவசாயம் எங்க நடக்குது. எந்த வேலை கெடச்சாலும் செய்வேன், மூட்டை தூக்குறது, கல்லு உடைக்கிறது, தார் போடுறது. சாக்கடை அள்ளுறது கூட செய்வேன். உசுர விட முடியாது.

எங்க ஊரு தலைவரோட வயல்ல தான் அய்யா வேலை செஞ்சாரு. தலைவர் வயல் வேலைய நிறுத்திட்டு மில் போட்டுட்டாரு. பல வருசம் ஆச்சு. எல்லாம் மெசின் தான். மனுசனுக்கு கஞ்சி வேணும். மெசினுக்கு?

நிலம் வித்த போது, ஒரு துண்டு நிலத்த அய்யாவுக்கு கொடுத்தாரு தலைவர். அதுல தான் ஓரத்துல கூரை வேஞ்ச எங்க மண் வீடு.

வானம் பாத்த பூமி. தலைவரே ஒண்ணும் பண்ண முடியாம விவசாயத்த விட்டுட்டாருன்னா அய்யா மட்டும் எம்மாத்திரம். கிணத்துல இறைக்க மோட்டார் போட்டு கரண்ட் கனக்சன் வாங்குனது தண்டச் செலவாயிருச்சு.

அப்பத்தான் ஏதோ டவர் கட்டணும்… உங்க இடம் சும்மா இருக்குன்னு கேட்டாங்க, மாசம் ஆயிரம் இரண்டாயிரம் கிடைக்கும்னு சொல்ல, ஏதோ கிடைக்கட்டும்னு அய்யா ஒத்துக்கிட்டாரு. ஒண்ட ஒரு குடிசைதான் இருக்குதே. வத்துன கிணறு இருந்த இடத்த மூடி டவர் கட்டுனாங்க.

Monetization (பணமாக்கல் - Panamakkal) Short Story By Jaypee. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

டவர் கட்டி பல வருசம் இருக்கும். அப்போ நான் மச்சான் சிபாரிசுல ஹோசூர் பக்கத்துல ரோடு போடக் கூலிக்குப் போயிருந்தேன்.

டவர் கட்ட இடம் கொடுக்கலீன்னா… நல்லா இருந்திருக்குமோ?

இப்போ நிலம எல்லாம் மாறின பிறகு பழசப் பேசி என்ன பிரயோசனம்.

எல்லாம் டில்லியில அந்த மந்திரியம்மா ஆட்டி வச்சதுன்னு சொன்னாங்க.

கவர்மெண்டுக்கு செலவுக்கு காசில்லையாம். வீட்டை வித்து கஞ்சி குடிக்குற மாதிரி, கவர்மெண்டு சொத்து எல்லாம் வித்து, நாட்டுக்கு கஞ்சி ஊத்தப் போறாங்கன்னு மாடசாமி சொன்னான்.

நாட்டுக்கு கஞ்சி கிடைச்சுதான்னு எனக்குத் தெரியாது. ஆனா எங்க வீட்டுக்கு நோட்டீசு கிடைச்சுச்சு.

உங்க நிலப் பத்திரம் கொண்டு வாங்கன்னு கடிதாசு வந்துச்சு. டவர வேற யாரோ வாங்கிட்டாங்களாமே. அவங்க கிட்டே இருந்து வந்தது நோட்டீசு.

மண் குடிசைல தலைவர் கொடுத்த பட்டா பத்திரம் வீட்டு மண் கரஞ்ச மாதிரி நாலு வருசம் முன்ன பேஞ்ச மழைல எழுத்து கரைஞ்சிருச்சு.

கிணத்துல தண்ணி இருந்தப்போ தண்ணி எடுக்க மோட்டார் போட்டு கரண்ட் கனக்சன் எடுத்த கார்டு அய்யா பேர்ல இருந்துச்சு.

அதெல்லாம் பத்தாதுன்னு சொன்னாங்க. தலைவர் மவதான் ஏதோ கடிதாசி கொடுத்து சமாளிக்குறேன்னு சொன்னாங்க.

ஆனா, டவருக்கு ஏற்கனவே வந்துக்கிட்டிருந்த வாடகைய நிறுத்திப் புட்டாங்க. எப்பக் கிடைக்கும்னு தெரியல. வக்கீல் நோட்டீஸ் விடுணும்னு மாடசாமி சொல்லியிருக்கான்.

இது நடந்த கொஞ்ச நாள்ல இன்னோரு நோட்டீசு வந்திச்சு. டவருல இருந்து கரண்டு திருடுறோமுன்னு அதுல அபாண்டமா எழுதியிருந்தாங்க. கேட்டா டவர்ல வயர் தொங்குதுன்னாங்க. அய்யா அது கிரமத்துல டிவி பாக்குறவங்க கேபிள் வயர்னு பதில் போட்டோம். எங்களுக்குத் தான் கரண்டே கிடையாதே. குடிசைல விளக்கு எதுக்கு. இருக்குற ஓட்டைல நிலா உள்ள வந்துரும்ல.

அப்புறம் திரும்ப இன்னோரு நோட்டீசு வந்துச்சு. உங்க நிலம் விவசாய நிலமில்ல. டவர் வச்சு வாடகைக்கு விட்டிருக்கீங்க, பத்து வருச வரி பாக்கி ஃபைனு எதெல்லாமோ சேத்து பத்தாயிரம் கட்டுன்னிட்டு. மாடசாமி சித்தப்பா இதைக் கேட்டு கடுப்பாகிப் போனாரு. திருடனுங்க… முதல்ல டவர் கட்ட இடம் கொடுத்தா மானியம் தாரோம்னு சொல்லிட்டு, மானியமும் தாராம இப்ப பாக்கி இருக்கு கட்டுன்றானுவன்னு கம்பெனியத் திட்டுனாரு.

ஆனா, அய்யா மனசு உடஞ்சு போச்சு. நிலத்த விக்கலாம்னு புதுத் தலைவர்கிட்ட கேட்டாரு. ஆனா டவர் இருக்குற நிலத்த விக்கக் கூடாதுன்னு ஆர்டர் வாங்கியிருக்காங்கன்னு சொன்னாங்க. வித்தா டவர் கம்பெனிதான் வாங்குவாங்களாம். அதுவும் ஏதோ கணக்குச் சொல்லி பத்து இருபது கூடத் தேறாதுன்னு சொன்னாங்க.

வாடகை கிடைக்கல, நிலத்த வித்து பணமாக்கி சாப்பிடலாம்னா வழியில்ல.

சைக்கிள் செயின் பாதையில உரசிக்கிட்டே சத்தம் கொடுத்தது.

வீட்டு வாசல்ல கூட்டம். தாயி (முத்தாயி எங்க அம்மா) ஓ…ன்னு கத்தி அழுவுற சத்தம் அப்பத்தான் கேட்டுச்சு. மாடசாமி தங்கச்சி ஓடி வந்து அண்ணே அய்யா தூக்கு மாடிக்கிட்டாருண்ணே… என்று அழுதுக்கிட்டே சொல்லிச்சு.

சைக்கிளைக் கிடத்தி உள்ளார போவுறதுக்குள்ள போலீஸ் ஜீப் வந்துச்சு. டேய் மாரி… இங்க வாடா… சிகரெட்டை பத்த வச்சு உறிஞ்சிக்கிட்டே ஏட்டு கூப்பிட்டாரு.

சார்…

யார்ரா உங்க அப்பனக் கொன்னது. நீயா… இல்ல உங்க ஆத்தாவா…

எனக்கு வெலவெலத்துப் போனது.

ஏறுடா வண்டில…

தாயி கத்திக்கிட்டே வெளிய ஓடி வந்துச்சு.

ஏட்டு என்ன புடனில புடிச்சுத் தள்ளி வண்டில ஏத்துனாரு.

மாடசாமி லாக்கப்புல என்னயப் பாக்க வந்தான்.

மாரி… அய்யாவ உங்க நிலத்துல அடக்கம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அறுத்துப் பாக்கணுமாம், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ட்டாங்க. முத்தாயிக்கு பிரம புடிச்சிருச்சுன்னு சொன்னான்.

அப்பதான் பாத்தேன். மாடசாமியோட இரண்டு பேர் வந்திருந்தாங்க. இன்ஸ்பெக்டர்கிட்ட ஏதோ பேசி, பேப்பர் ஏதோ கொடுத்திட்டிருந்தாங்க.

ஏட்டு வந்து கதவத் தொறந்தான்.

டேய் மாரி… உங்க அப்பா சாவு எப்படி நடந்ததுன்னு தெரியுற வர உங்க கிராமத்த விட்டு இங்க அங்க நகரக் கூடாது.

மாடசாமியோட வந்த ரெண்டு பேரு பைக்கில என்னையும் அவனையும் ஏத்திக்கிட்டாங்க.

பைக்க நிறுத்தி இறங்குன போது பாத்தேன். சின்ன கல்லு கட்டடம். போர்டு மாட்டி இருந்துச்சு. செவப்பு நெறத்துல, ஆனா போர்டை யாரோ உடைக்க நினைச்சு பாதில விட்டுப் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன். வலது பக்கம் ..ங்கம்னு சில எழுத்து மட்டும் தெரிஞ்சுது. வாசல்ல ஒரு கொடிமரத்தை உடைச்சிருக்கானுவ யாரோ.

உள்ளார வாப்பா…

பெஞ்சுல நானும் மாடசாமியும் உக்காந்துக் கிட்டோம்.

போர்டை மட்டும் இல்ல உள்ளார வந்து பிளாஸ்டிக் நாற்காலி, மேஜை, சுவர்ல மாட்டியிருந்த படக் கண்டாடி எல்லாத்தையும் உடைச்சிருக்காங்க.

ஒரு பையன் உள்ளே வந்து அரை கிளாஸ் டீ கொடுத்தான்.

முத்தாயி என்ன பண்ணுது, என்ன குடிச்சிச்சோ தெரியலியே.

சட்டைப் பையத் தடவிப் பாத்தேன். ரூபாய் நெருடிச்சு.

அது என்ன ஆபீஸ்னு பாக்க ஆரம்பிச்சேன்…..சுவத்துல கண்ணாடி உடைஞ்ச படங்களப் பாத்தேன். பெரிய தாடியோட சிங்கம் மாதிரி ரெண்டு பேரு. இன்னோரு படத்துல தல வழுக்கையா சின்ன தாடியோட ஒருத்தர்.

படத்துல இருக்கிறவங்க என்னயவே பாக்குற மாதிரி தோணிச்சு. போலீஸ் பாக்குற மாதிரியில்ல. இது வேற ஏதோ… அய்யா என்னய பாசமா பாக்குற மாதிரி.

*************