Podi Udhayan (போடி உதயன்) Short Story Murikkappata Siragugal (முறிக்கப்பட்ட சிறகுகள்) Synopsis Written by Ramachandra Vaidyanath.

சிறுகதைச் சுருக்கம் 69: போடி உதயனின் *முறிக்கப்பட்ட சிறகுகள்* சிறுகதை



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

எண்பதுகளில் எழுதத்துவங்கி தொடர்ச்சியாக எழுதிவரக்கூடிய இவரது படைப்புகள் மாந்தரின் மேன்மையை அநாயாசமாக சித்தரிக்கிறது.

முறிக்கப்பட்ட சிறகுகள்

போடி உதயன்

“பானு காபி இருக்கா?” முகத்தை துண்டால் துடைத்துக் கொண்டே கேட்டான் குமணன்.  

“ஆமா, நீங்க வாங்குற சம்பளத்துல ரெண்டு காப்பி குடிக்குறாப்புலதேன் இருக்கு. வாங்குனது இருபதோருநா சம்பளம். மளிகை பாக்கி அப்படியே நிக்குது.”  

“ஐயோ, நா கேட்டது காப்பி இருக்கா இல்லியா? ஒரே விஷயத்த எத்தனை தடவுதே சொல்லுவ. வாய்வலிக்க போகுதம்மா. போராட்டம்னா எல்லாத்தையும் தாங்கித்தாம்மா ஆகணும்”.

“ஆமா நீங்க போராட்டங்கிறீங்க. பக்கத்து வீட்டுக்காரன் கையெழுத்துப் போட்டு வேலக்கிப் போனான் முழுசா சம்பளமும் வாங்கிட்டான்”.

துண்டை தோளில் போட்டபடி திரும்பினான். “நாம மனுசனுங்க. துரோகம் செய்யுற வாழ்க்க ஒரு வாழ்க்கையா சீ..”

“அங்க பாருங்க ஒங்க பசங்க சத்தத்த. ஓசீ டியூசன்லேயே இந்த அமர்க்களம். சரி இவங்கிட்டயாவது மாசம் ஒரு அஞ்சு பத்துனு வாங்குனா பத்தம்பது கெடைக்கும்.  அதையும் கேக்க மாட்டேங்றீங்க”. 

“என்னம்மா வெவரம் புரியமா பேசற, யோசிச்சு பேசறயா இல்ல யோசிக்காம பேசுறயா? அன்னாடு ஒழச்சாத்தான் சோறு. இதுல படிக்க வக்கிறதே பெரும்பாடு.  நம்ம கொழந்தைகளுக்கு சொல்லித்தாரமே பாவம். அவங்களுக்கும் ஒதவியா போகட்டும்னு வாலண்டியரா நானா கூப்டு சொல்லித் தர்றேன். காசு கேட்டம்னுவையி அவ்வளவுதான் பள்ளிக்கூடத்துக்கேகூட வரமாட்டாங்க.”

குமணன் முன் அறைக்குள் நுழைந்ததும் சொல்லி வைத்தாற்போல் டக்கென்று பேச்சு நின்றது. அவசர அவசரமாய்ப் பைக்குள் புத்தகங்களை எடுத்தவர்கள் ஆழ்ந்து படிப்பதாய் பாவனை செய்தார்கள். ரசித்தபடியே சேரில் அமர்ந்தான். “என்ன குமார் இராஜவேலுக்கு இப்ப எப்பிடி இருக்கு? மாரியம்மா மலை ஏறிடுச்சாமா?”

“நாளக்கித்தான் சார் தண்ணி ஊத்தப்போறாங்களாம். அம்மக்கட்டு வந்ததுக்கு இந்த வருசம் வீரபாண்டியிலே சேத்தாண்டி வேஷம் போடப்போறானாம்”.

“சரி போடட்டும். போடட்டும்.  நாளக்கிருந்து ஸ்கூலுக்கு வரச்சொல்லு. பரிட்ச அவந்தேன் எழுதணும், ஆமா. முருகேஸ்வரி, இன்னிக்கு ஒங்க கிளாஸ்ல டெஸ்ட் பேப்பர் தந்தாங்கல்ல.”

அவசர அவசரமாய்ப் புத்தகத்தைப் பிரித்து மடித்து வைத்திருந்த பேப்பர்களைத் தேடி எடுத்து குமணனிடம் தந்துவிட்டு அவனையே பார்த்தாள். திருப்திக்கு அடையாளமாய் அவன் புன்னகைத்ததும் அவளும் புன்னகைத்தாள்.  

“பரவாயில்லியே, சயன்ஸ் இன்னும் கொஞ்சம் கவனமா படி. இராஜத்திய முந்தீரனும்… ம் என்ன” முதுகில் தட்டினான்.

“இன்னக்கி கணக்கு பாப்பமா?”

“சரிங்க சார்” கோரஸாய் சொன்னார்கள்.

“எல்லோரும் முன்னாடி வாங்க, ஆமா இராஜத்திய எங்க காணம். சினிமாவுக்குப் போயிடுச்சா?”

“இல்லைங்க சார், பெங்களூர் போறா.”

குமாரும் முருகேஸ்வரியும் ஒருவரை ஒருவர் முந்தும் வேகத்துடன் பதில் சொன்னார்கள்.

“நல்லா யோசிச்சு சொல்லுங்க பெங்களூர்க்கா இல்ல பண்ணப்புரத்துக்கா?” பண்ணைப்புரத்தில் ராஜாத்தியின் பாட்டி இருக்கிறாள்.  

“பிள்ளைங்க சொல்றது நெசந்தாங்க. பெங்களூர்க்குத்தான் போறா” சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் பானு. கையில் காபி டம்ளர்.

“மத்தியானம் ராஜாத்தியோட அம்மா வடிவு வந்துச்சு. ராஜாத்திய ருக்குகிட்ட அனுப்பப் போறாங்களாம், வீட்டு வேலைக்கு.”

குமணனுக்கு பகீரென்றது. 

“அதாங்க இரும்பு கடக்காரு பொண்ணு ருக்மணி, போன மாசம் தேனியில கல்யாணம் நடந்துச்சில்ல. அவங்க வீட்டுக்குத்தேன். அவரு வேலக்கி போயிட்டா இவ மட்டும் வீட்ல தனியா இருக்கணுமாம். அதும்போகக் கட கண்ணிக்கு போகவர யாராவது சின்னப் புள்ள இருந்தா நல்லதுன்னு லெட்டர் போட்டிருக்கா. படிச்ச ஒடனேயே அவங்கப்பா அம்மாவுக்கு ராசாத்தி ஞாபகம்தேன் வந்துச்சாம். அதும்போக ராசாத்தியோட அப்பா அம்மா அவக தோட்டத்திலதான் வேலை பாக்குறாங்க. ஈஸியா சிம்பிளா பிள்ள பிடிச்சுட்டாங்க”.

மலர வேண்டிய அரும்பு கருகப் போகிறதா? ஆமாம் இந்த அரும்பு எந்தச் சுமையைச் சுமக்க முடியும்? அவனால் தாங்க முடியவில்லை.

ராசாத்தி துருதுருவென்ற கண்களில் அறிவு பளீரிடும் எவ்வளவு சிக்கலான பாடத்தை நடத்தினாலும் வார்த்தைகளின் பின்னாலேயே ஓடிவந்து புரிந்து கொள்வதில் வல்லவள்.   அந்த பெண்ணுக்கு செய்கிற உதவியாகவே இந்த டியூசனையும் அவ்வப்போது நோட்ஸ்  புத்தகங்களென்றும் வாங்கித் தந்தான்.  அதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வெறும் கனவாகவா மாறப்போகிறது?  இந்தச் சமூகத்தில் பெண்கள் படித்தே தீரவேண்டுமென்பது அவசியமல்லவா?   தங்களை உணர்வதற்கும் இந்தச் சமூகத்தை உணர்வதற்கும் ஒரு கருவியல்லவா கல்வி.  போராடுகிற தைரியம் கொடுக்கிற மூன்றாவது கண்ணல்லவா கல்வி.

“என்னங்க பேயறைஞ்சது போல ஆயிட்டீங்க, காபி ஆறப்போகுது சாப்பிடுங்க.”

“தல வலிக்குறாப்புல இருக்கு. நாளக்கி டியூசன் வச்சிக்குவமா?”

“சரிங்க சார்” எல்லோரும் புத்தகங்களைப் பைக்குள் வைத்துக் கொண்டு எழுந்தனர்.

“குமாரு, ராஜாத்தி அவங்கம்மாவ நான் வரச் சொன்னேன்னு சொல்றயா.”

“ஆகட்டும் சார்”.

கும்பலாய் வெளியேறினார்கள்.

“சார்.”

குரல் கேட்டு இமைகளைத் திறந்தான் குமணன். வாசலை ஒட்டி ராஜாத்தியும் அவள் அம்மா வடிவும் நின்றிருந்தார்கள்.

“உள்ள வாங்க, சும்மா வாங்க.”

ராஜாத்தி பளிச் சென்றிருந்தாள். இவன் பார்த்ததும் புன்னகைத்தாள், துவைத்த சட்டை பாவாடை, பவுடர் அடித்து, அச்சுப் பொட்டு வைத்து, இரட்டை சடை பின்னி,  பூ வைத்திருந்தாள். இந்த அலங்காரம் பயணத்தை உறுதிப்படுத்தியது.  

“ஒக்காருங்க” கையால் பெஞ்சியைக் காட்டினான்.

“ராசாத்தி, பானு அக்கா கூப்பிடுது பாரு.”

வடிவு சொல்லவும், ராஜாத்தி துள்ளியபடி உள்ளே சென்றாள்.

பெஞ்சியை ஒட்டி கீழே அமர்ந்தபடி இவனைப் பார்தத வடிவு,  இவன் பார்த்ததும் தலை கவிழ்ந்தாள்.

“படிப்பை நிறுத்தியாச்சுனு ராஜாத்திக்கிட்ட சொல்லீட்டிங்களா.”

“நல்லது கெட்டது அவளுக்கென்னங்கயா தெரியும்.  பச்ச புள்ள சொன்னா அளுவா.  அங்க போயி தெரிஞ்சுக்கிரட்டும்.  ஏற்கனவே பிடிவாதம்”.

“பச்ச புள்ளைங்றீங்க, பெறகு நட்டநடுவ பிரிச்சுக்கிட்டு போறீங்க.  ஒங்க மக நல்லா இருக்கணும்னு விரும்பலியா?”

“என்னத்த நல்லாயிருக்கிறது.  கைய ஊனித்தேன் கர்ணம் பாய வேண்டியிருக்கு.  எப்படின்னாலும் படிப்பு நிக்க வேண்டியது தானேங்கய்யா.  அதுவுமில்லாம ஏதோ கையெழுத்து போட கடுதாசு போடன்னு நாலு எழுத்து படிச்சுக்கிட்டா அது போதுங்கய்யா.”

“படிக்கிற பொண்ணு.  நெறைய ஆர்வமிருக்கு. கஷ்டத்தோட கஷ்டமா படிக்க வச்சுட்டீங்கன்னா பின்னும் பெறகு ஒங்களுக்கு ஆதரவு.”

“கோழிக்குஞ்சு மானத்துல பறக்க முடியாதுங்கய்யா. அங்க ராஜாத்தி போல இருந்துக்குவா. எங்களைப் போல சேறு சகதின்னு அல்லாட வேண்டியதில்ல.”

“என்னம்மா இப்பிடிப் பேசுறீங்க.  சரி நீங்க  சொல்றபடியே இந்தப் பொண்ண வேலக்கி அனுப்பி அம்பது ரூவா மாசாமாசம் கெடைக்கும்னு வச்சுக்குருவம்.  ஒங்க  கஷ்டமெல்லாம் தீந்துரும்னு நம்புறீங்களா? இப்ப ஒரு அஞ்ச வருசம் அவங்க வீட்ல வேல செய்யுமா? பெறகு மறுபடியும் அவங்களுக்கு வேற சின்னப்புள்ள வேணும்.  இந்தப் பொண்ணு மொதலாளி சொல்ற எடத்துல கள பிடுங்க வேண்டியதுதேன்”.

பதில் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதுபோல் தலையைக் குனிந்து கொண்டாள்.

“அதுக்காகப் படிச்ச ஒடனேயே வேல கெடைச்சுரும், வசதியா வாழலாம்னு சொல்ல வல்ல. கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும். படிப்பு வாழ்க்கையைப் பத்தி யோசிக்க வைக்கும். இதுக்கு மேல ஒங்க பிரியம்”.

“நீங்க சொல்றது சரிதேங்கய்யா. ஒத்துக்கறேன். ஆனா மொதலாளி வீட்ல விருப்பப்பட்டு கேக்குறாங்களேய்யா. மீறி செஞ்சம்னா சாப்பிடற அரை வகுத்துக் கஞ்சிக்கும் ஆபத்து வந்துரும். வேற வழி இல்லைங்கய்யா, குருட்டுப் பய கடவுளு எங்கள இப்பிடிதேன் எழுதியிருக்கான்”.

நினைப்பதே கஷ்டமாய் இருந்தது. சேரில் சாய்ந்து கொண்டான்.  

“ராசாத்தி அக்காகிட்ட சொல்லிட்டயா?”

“சொல்லிட்டேம்மா.”

“அய்யாகிட்ட சொல்லிட்டு கௌம்பு.”

“ஊருக்குப் போயிட்டு வாறேன் சார், வர்ரபோது ஜாமண்ட்ரி பாக்ஸ் வாங்கிட்டு வந்துர்றேன் சார்”.

இவன் பதில் சொல்கிறானா என்பதைக் கவனிக்கவில்லை. வடிவு நகர்ந்ததும் பின்னாலேயே ஓடினாள்.  

“டேய் சேகரு, நா பெங்களூர் போறேன்” யாரிடமோ சொல்லிக் கொண்டு போனாள்.

@செம்மலர் மார்ச் 1985

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.