நான் ஒரு பெண்தான் – அனிதா நாயர் | தமிழில்: கி. ரமேஷ்
எனக்கு ஒரு கணவன் உண்டு
உண்மையில் எனக்கு ஐவர் உண்டு
இப்படியாக அது நடந்தது
அவர்களில் ஒருவன்
தன் வில்லை வளைத்து
மரத்தில் நீந்திய ஒரு மீனை
கண்ணில் அடித்து வீழ்த்தினான்
மின்னிய சுனையைத் தவிர
அவன் வேறெதையும் பார்க்கவில்லை
அவர்கள் என்னை இல்லம் சேர்த்தனர்
ஒரு இளவரசிக்கு அது குடிசை
நான் எதுவும் பேசவில்லை
ஏனெனில் அதுதான் காதல்
அது பெண்களை முட்டாளாக்குகிறது
நானோ சிறுமிதான்.
உயரமும், வலுவும்,
அவர்கள் சாக்குகளில் விதைகள் நிரம்பியுள்ளன
ஆனால் முழுதும் முழுதும் அம்மாவின் பையன்கள்தான்.
அவள் சொல்வதைக் கேட்பதும்
அதுவரை முன்செல்லாதிருப்பதும். முட்டாள் பசு!
அவள் அவர்களது அன்னை
உள்ளே இருந்தாள். என்ன யோசனை?
மறைந்திருக்கும் உண்மைகள் என்ன?
அவளது புருவத்தை எது நெறித்தது?
உங்களுக்குள் அதைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்
நான் எதோ ஒரு கோழியைப் போல அவள் சொன்னாள்!
ஒருவருக்கு இறக்கைகள், ஒருவருக்கு மார்பு
கால்கள் ஒருவருக்கு, கழுத்து இன்னொருவருக்கு
பிறகு எடுத்துக் கொள்ள ஒரு விருப்ப எலும்பு.
எனக்கு ஒரு கணவன் உண்டு
உண்மையில் ஐவர் உண்டு
ஆனால் இவையனைத்தும் உங்களுக்குத் தெரியும்
ஆனால் இப்போது
நான் முழுதும் துகிலுரியப்படப் போகும்போது
உங்களுக்குச் சொல்கிறேன்
அவர்களைப் பற்றியும் ஆண்களைப் பற்றியும்
ஏனெனில் உங்களால்
ஆண்களை சிறிதும் புரிந்து கொள்ள முடியாது
ஐவரை நீங்கள் கையாளும்போது.
இல்லை என்னை உற்றுப் பார்க்காதீர்கள்
முட்டாள் பசுவே
இதுதான் உன் வேலை
நல்ல மகன்களை வளர்த்தாய்
நல்ல மனிதர்களாக இருக்கும் அவசியமில்லை.
ஏ துச்சாசனா, பெரும் காட்டுமிராண்டியே,
நான் உன்னை பிரச்சனையிலிருந்து காக்கிறேன்
நானே இந்தத் தோல்களை உரித்து விடுகிறேன்.
இதுதான் யுதிஷ்டிரன்
தர்மராஜாவின் மகன் அறிஞன்
கரைபடியாதவன் ஊழலற்றவன் எப்போதும் நியாயவான்.
என் முட்டியைத் தட்டிக் கொண்டிருக்கும் மென்மையான கொடுங்கோலன்:
திரௌபதி இது உனக்கு உகந்ததல்ல.
எப்படி இருக்கவேண்டுமென்று எனக்குக் கற்பிக்கும் தகப்பன்:
இப்போது திரும்பிக் கொள்கிறாய் கோழையே
நீ தலையிட விரும்பவில்லை
நேர்மை உன்னை அற்பனாக்கி விட்டது
நேர்மை உன்னை சுயநலமியாய் விரட்டிவிட்டது
எனக்கு இன்னும் நான்கு கணவர்கள் உள்ளனர்
எனக்காக உங்களில் யார் இருப்பீர்கள்?
வாயுவின் மகனே பீமா
ஓநாயின் வயிற்றுடன் தண்டாயுதம் ஏந்தியவனே
நீ முணுமுணுக்கும் ஒரு சகோதரன்
தேனியிடமிருந்தும் நீர்யானையிடமிருந்தும் என்னைக் காக்க விரும்பியவன்
என் விசித்திர ஆசைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாய்
நீ என்னிடம் விரைய விரும்புவதைக் காண்கிறேன்
தருமன் உன் முட்டியில் கைவைத்து அழுத்துவதைக் காண்கிறேன்
என் இரண்டாவது கணவன் பின்வாங்குவதைக் காண்கிறேன்.
அர்ஜூனா என் அர்ஜூனா
இந்திரனின் மகன் மனிதர்களில் என் கடவுள்
என் உதடுகளில் விருந்துண்டவன்
நான் சோர்ந்து போகாத அமிர்தம் நீயாக இருந்தாய்
நீ என் கைகளை வென்றாய்
அதே எளிதுடன் இப்போது என்னைக் கைவிடுகிறாய்.
எனவே இரு கணவர்களுடன் நான் விடப்படுகிறேன்.
நகுலா, ஒளிவீசும் என் கருப்பு கணவனே
வாழும் எந்த ஆணையும் விட கம்பீரமானவனே
குதிரையிடம் ரகசியம் பேசுபவனே, மென்மையான காதலனே
என்னைச் சிரிக்க வைத்த இளம் ஆண்மகனே
நான் உன்னிடம் ஒரு விளையாட்டுக் குழந்தையின்
குதூகலத்தைக் கண்டேன்
இறுகிய தசைகளையுடையவனே, ஊக்கமும் வசீகரமும் உடையவனே
ஆனால் இப்போது எங்கே போனாய் நகுலா?
அல்லது உன் இரட்டை சகாதேவன்?
வெட்கம் கலந்தவன் எல்லாம் தெரிந்தவன்
எப்படி ஆணாக இருக்க வேண்டுமென அவனுக்குக் காட்ட
நான் தேவைப்பட்ட ஒரு குழந்தை
நீ உன் தந்தையின் சதையை உண்டபோது உனக்குத் தெரியும்
எனினும் நீ அதை அனுமதித்தாய்
என்னால் அதை மன்னிக்க முடியாது சகாதேவா.
எனவே நான் இங்கு நிற்கிறேன்:
பளபளப்பான கணவர்கள்தான் நானாக இருந்தேன்
என் பெயர் யக்ஞசேனி
நெருப்பிலிருந்து பிறந்தவள்
சுட்டெரிக்கும் உன் பார்வை என்னை நாணப்படுத்தாது.
நீலத் தாமரையுடன்
சுதந்திரம் என் மணம்
யோஜனை தூரத்திலிருந்து நீ அதை நுகரலாம்.
நான்தான் கிருஷ்ணசகி
அந்த அடைமொழியையும் நான் விடுகிறேன்
ஏனெனில் இனியும் நான் நீ விரும்புவது போல் இருக்க முடியாது.
நான் என் கூந்தலை விரிக்கிறேன் நீ அறிவாய்.
நான் முதலில் பெண்ணென நீ அறிய
நான் அடையாளங்களை அழிக்கிறேன்.
முழுதும் முழுதும் நான் பெண்ணே
அதன்பிறகுதான் அனைத்தும்.
தமிழில்:கி. ரமேஷ்
மூலம்: அனிதா நாயர்
POEMS APLENTY