அஞ்சலகம் மீதான காதல் கவிதை – சத்யா சம்பத்
16 வயதில் என் மாமன் பட்டாளத்து பாபு மேல் காதல்,
18 வயதில் திருமணத்தில் வளர்ந்தது,
இப்போது அஞ்சலகம் மீதும் படர்ந்துள்ளது ஏனெனில்!
மாதம் ஒரு முறை மாமன் அனுப்பும் அன்பைச் சுமந்து வருவதால்!
அஞ்சலகத்தின் ஒட்டடை என் மனதை பதைக்க வைக்கும்
மாமன் அன்பில் தூசு விழுமோ என்று!
மாதம் ஒருமுறை அஞ்சலகத்தைச் சுத்தம் செய்ய வைத்தது என் காதல்!
மாமன் அனுப்பும் மணியாடரில் அலுக்கு படியுமோ என்று!
வருடம் ஒரு முறை அஞ்சலகத்தை வெள்ளை அடிக்க வைத்தது என் காதல் !
தினம் கேட்கும் போஸ்ட் மேனின் மணி ஓசைக்கு
எண்ணெய் போட வைத்தது என் காதல்!
என் மகள் மீதான பொன்மகள் திட்டம் வளர்ந்து கைகொடுக்க
விஜயதசமியை அஞ்சலகத்தில் சிறப்பிக்க வைத்தது என் காதல்!
ஆர்.டி யில் குருவியைப் போல் சேர்த்ததைக் கொண்டு
பல நகைக்கு உரிமைகாரியாக்கியது என் காதல்!
அலைப்பேசி, இணைய வழி என்று பல வழிகள் வந்தாலும்
என் மாமனின் கடுதாசி,
மணியாடருக்கு ஈடாகாது.
அதற்கான காத்திருப்பு, தவிப்பு, காதல் என
எதையும் தருவதில்லை இன்றைய வழிமுறைகள்.
அஞ்சலகத்தில் கேட்கும் முத்திரை ஓசையும்,
போஸ்ட்மேனின் மணி ஓசையும்
நம் வீடு நெருங்க நெருங்க
காதலின் ஆழம் புரியும்!
மனம் பதைத்து மெய்சிலிர்க்கும்
அஞ்சலகம் மீதான காதல்!!!!
– சத்யா சம்பத்