Thedum Kangal Shortstory By Sudha தேடும் கண்கள் சிறுகதை - சுதா

தேடும் கண்கள் சிறுகதை – சுதா

தியாகராய நகர் ரங்கநாதன் தெரு

தெரு முழுவதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.விசாகன் தன் மனைவி மித்ரா உடன் தி நகர் ரங்கநாதன் தெருவை அடைந்ததும் விசாகனின் முகம் ஏனோ சரியில்லை.

விசாகனுக்கு தன் பால்ய கால நினைவுகள் அங்கங்கே அசைபோட்டுக் கொண்டிருந்தது.இந்த எண்ணத்தை மித்ரா எப்படியோ கணித்து விட்டாள்.என்னாச்சு விசா ஏதோ போல இருக்க உடம்பு சரி இல்லயா?நாமவேன்னா வீட்டுக்கு போய்யிடலாமா?

இந்தக் கேள்வியை விசாகனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. தன் மனதை எப்படி இவள் படித்தாள்.என நினைத்துக்கொண்டே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா ஊரிலிருந்து வந்த சோர்வு வேற ஒன்னும் இல்ல வா கடைவீதிக்கு போவோம்.என்று மணிக்கட்டைப் பிடித்து நடந்தான்.

அப்போது மித்ரா நினைத்துக்கொண்டாள். இரவோடு இரவாக நானும் இவரோடு தான் ஜப்பானில் இருந்து வந்தேன்.எனக்கு மட்டும் சோர்வே இல்லையே ஒருவேளை இப்பெண்களுக்கு கடைவீதிக்கு போவதென்றால் சோர்வு இருக்காதோ என்னவோ என்று நினைத்து தனக்குள்ளே சிரித்து கொண்டாள்.

விசாகனோடு மித்ராவும் கடைவீதிக்கு கூட்டத்தில் நடந்தாள். என்று சொல்வதைவிட நகர்ந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.ரங்கநாதன் தெருவில் மட்டும் எப்படித்தான் இத்தனை கூட்டம் வருகிறது.சும்மா நின்றால் போதும் அவர்களை நம்மை நகர்த்தி நகர்த்தி தேவையான கடையின் முன்பு நிற்க வைத்து விடுவார்கள் போலும்.

இப்போதும் மித்ரா கவனிக்கத் தவறவில்லை விசாகனின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.என்னவாக இருக்கும் விசா இப்படி நடந்து கொள்பவன் இல்லையே.ஏன் இவன் என்னிடம் எதையோ மறைக்கிறான்.குழப்பத்தோடு கடைக்குள் நுழைந்தாள்.

கடைக்குள் சிறு புன்னகை

கடைக்குள் சென்றதும் மித்ரா தனக்கான பொருட்களைத் தேட ஆரம்பித்தாள்.இதை வாங்கலாமா அதை வாங்கலாமா என்று விசாகன் இடத்தில் அப்பப்போ கேட்டுக் கொண்டாள்.மாமியார் மாமனார் தன் பிள்ளைகள் நாத்தனார் பிள்ளைகள் மித்ராவின் அம்மா அப்பா என்று எல்லோருக்கும் தேவையானதை அலசி ஆராய்ந்து வாங்கிக் கொண்டிருந்தாள்.

என்னதான் மித்ரா பொருட்களும் துணிமணிகளும் வாங்குவதே கவனமாக இருந்தாலும் ஒருகண் விசாகனை கவனித்துக் கொண்டுதான் இருந்தது.இவன் ஏதோ ஒன்றைக் கட்டாயம் மறைக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு உறுதியாகிவிட்டது.

கடைக்குள் யாரையோ பார்த்து விட்டது போல் கொஞ்சம் நில்லு மித்ரா நான் இதோ வருகிறேன்.என்று ஓட்டமும் நடையுமாய் போன விசாகனைப் பார்த்து சரி போய்ட்டு வாங்க என்று கண்ணசைப்பதற்குள் ஓடி விட்டான்.நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை திடீரென்று பார்த்தது போல் ஆர்வமாய் போய் அந்தப் பெண்ணின் முன்பு நின்றான் ஆனால் அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது அவன் தேடி வந்த பெண் அவள் இல்லை என்று.அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விசாகன் திரும்புவதற்குள் அத்தனை பொருட்களும் எடுத்தாகி விட்டது.பில் போடுவதற்காக மித்ரா காத்திருந்தாள்.

என்னங்க அவ்வளவு வேகமா போனீங்க எங்க போனீங்க யாரை பார்த்தீங்க உங்க பிரண்டா என்று கேட்ட மித்ராவிற்கு இல்லை பா ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன் என்ற பதில் போதுமானதாக இல்லை.இவன் நடந்துகொள்வது இவளுக்கு பெரும் புதிராக இருந்தது. ஒருவழியாக வாங்க வேண்டியதை வாங்கி முடித்துவிட்டு வீடு வந்தனர். மித்ரா விற்கு என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல் இருந்தது.

விசாகனின் அம்மாவும் மித்ராவும்

இவர்கள் வீட்டிற்கு போகவும் விசாகனின் அம்மா சாப்பாடு பரி மாறவும் சரியாக இருந்தது.நல்ல வேலை அம்மா நீங்க சமைச்சீங்க எனக்கு பயங்கரமான பசி என்று மித்ரா தட்டில் சப்பாத்தியை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.விசாகன் சாப்பாட்டில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை இருந்தாலும் பெயருக்கு சாப்பிட்டான்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் மொட்டைமாடியில் உலாவலாம் உட்கார்ந்து பேசலாம் என்று மாடிக்குப் போனார்கள் ஆனால் விசாகன் மட்டும் தலை வலிக்கிறது என்று தனது ரூமுக்கு போய் விட்டான்.இது மித்ராவுக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது.எப்போதும் விசாகன் தான் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட வேண்டும் பேச வேண்டும் என்று விரும்புவான்.ஆனால் இன்று நாள் முழுவதும் விசாகனின் நடவடிக்கை சரியானதாக இல்லை என்றே தோன்றியது மித்ராவுக்கு.

இதை எப்படியாவது அம்மாவிடம் கேட்டுவிட வேண்டும் என்று எண்ணி மொட்டைமாடியில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மித்ரா மட்டும் தனியே இருந்தாள்.எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்று நினைத்தவளுக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை சரி நாளை இதுபற்றி கட்டாயம் அம்மாவிடம் பேச வேண்டும் என்ற முடிவோடு இவளும் படுக்கைக்கு சென்று விட்டாள்.

மறுநாள் காலை

மித்ரா காலை எழுந்ததும் விசாகன் உறங்கிக் கொண்டிருந்தான் இன்று எப்படியாவது அம்மாவின் காதில் இதை போட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு மாறவில்லை.விசாகன் தூங்கிக்கொண்டிருந்தான்.

மொட்டைமாடியில் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த விசாகனின் அம்மாவைத் தேடி மொட்டை மாடிக்கு வந்து விட்டாள் மித்ரா.அம்மா என்ன செஞ்சிட்டு இருக்கீங்க என்று கேட்டவாறே இவளும் கோப்பையில் தண்ணீர் எடுத்து செடிக்கு ஊற்றிக் கொண்டே பேச்சு கொடுத்தாள்.ஆமாம் மித்ரா எழுந்ததும் முதல் வேலையாக செடிக்கு தண்ணி விட்டுட்டா வெயில் வரதுக்குள்ள கீழே போய் சமையல் வேலையை ஆரம்பிச்சுடலாம் என்ற விசாகனின் அம்மாவின் வார்த்தைகள் மித்ராவிற்கு கவனத்தை ஈர்க்கவில்லை.

என்ன மித்ரா ஏன் ஒரு மாதிரியா இருக்க நேத்துல இருந்து நீ சரி இல்லையே.. அம்மா உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.சொல்லுமா என்று மாடி தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கோதை வாலியைக் கீழே வைத்துவிட்டு முந்தானையை கைகளை துடைத்த படி கேட்டாள்.

அம்மா விசாகனின் நடவடிக்கை ஒன்றும் சரியில்லையே எதையோ இழந்ததை போலவே இருக்கான் உங்களுக்கு ஏதாவது தெரியுமா.நேற்று கடைக்கு சென்ற போதும் அவன் சரியாக என்னோடு பேசவில்லை எதையோ தொலைத்து அதைப்போலவே இருக்கிறான். நேற்று மொட்டைமாடியில் எல்லோரும் இருந்தோம் அவன் கலந்து கொள்ளவில்லை.நீங்கள் கவனிச்சீங்களா?

நானும் கவனித்தேன் மித்திரா காலையில சுரேஷ் வந்தான்ல யார் என்பது போல் பார்த்த மித்ரா.நினைவு வந்தவளாய் பிரண்டு தான மா ஆமாம் மித்ரா அதுக்கப்புறம் தான் அவன் சரியில்லை.என்னவோ போங்க மா உங்க பிள்ளைய என்னன்னு கேளுங்க என்று சொல்லிக்கொண்டே இருவரும் அடுப்படி நோக்கி நடந்தார்கள்.

அன்று சமையல் செய்யும்போது விசாகனும் சேர்ந்து கொண்டான் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது திரட்டவும் பேச்சு சிரிப்பு எனவே இயல்பாகவே கிடந்தது.விசாகனின் மாற்றத்தை எல்லோரும் மறந்தும் போனார்கள். மறு நாள் எல்லோரும் மகாபலிபுரம் போகலாம் என முடிவு செய்ததோடு அன்றைய நாளும் முடிந்தது.

மகாபலிபுரத்தில் ஒரு நாள்

மகாபலிபுரம் காலையில் எட்டு மணிக்கு போவதாக முடிவானது எல்லோரும் அதற்கான ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தார்கள் விசாகனின் அம்மா கோதை காலையில் சாப்பிட டிபன் செய்து கொண்டிருந்தாள்.மித்ராவும் அப்பப்போ ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள்.

கடையில போய் சாப்பிட்டுக்கலாம்னு சொன்னா கேக்குறீங்களா மா என்று செல்லமாக கோபித்துக் கொண்டான் விசாகன்.விசாகனுக்கு கடை சாப்பிட பிடிக்காது தன் அம்மா கையில் சமைத்து சாப்பிடுவது தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.மகனுக்கு பிடிக்கும் என்பதற்காக எவ்வளவு வேலை இருந்தாலும் சலிக்காமல் செய்வாள் கோதை ஆனால் வீட்டை விட்டு வெளியேறியதும் விசாகனின் கண்கள் எதையோ தேடத் துவங்கியது.

விசாகனும் விசாகனின் மகன் யத்திக்கும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்.வீடே அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து எல்லோரும் கிளம்பினார்கள்.விசாகன் அம்மா அப்பா மனைவி மகன் யதிக் என காரில் அடைத்துக்கொண்டு கிளம்பினார்கள்.பாட்டு பேச்சு என குதூகலமான பயணம் துவங்கியது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறியதும் விசாகன் என் கண்கள் எதையோ தேடத் துவங்கியது தேடிக்கொண்டே இருந்தது.

மகாபலிபுரம் அடைந்ததும் கடற்கரையில் கால் நனைத்து லைட்ஹவுஸ் மேலே ஏறி கடலை ரசிக்க விசாவுக்கு மித்ராவுக்கு நீண்டநாள் ஆசை.இன்று எப்படியாவது லைட்ஹவுஸ் மேலே ஏறி விட வேண்டும் என்பதே இருவரின் ஆசையும்.விசாகனின் அம்மாவும் அப்பாவும் யத்திக்கும் நான் வரவில்லை நீங்கள் போங்கள் என்று கூறிவிட விசாகனும் மித்ராவும் இளம் ஜோடிகளை போல இரு கை கோர்த்து கைகள் வீசி பாட்டுப் பாடிக் கொண்டே லைட்ஹவுஸ்சை நோக்கி நகர சில்லென்ற காற்று முகம் முழுவதும் பட்டு இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

லைட் ஹவுஸ் மேலே ஏற டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார்கள் இவர்கள் பின்னால் நின்ற இரு ஆண்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் பேசிய வார்த்தைகள் மட்டும் காதில் மரண அடியாய் விழுந்தது விசாகனுக்கு.

அவர்கள் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.அந்தப் பிள்ளை நல்லா தான் பா படிச்சது ஆனா அவளோட அப்பனுக்கும் அம்மாவுக்கும் தன் பிள்ளை யாரையாவது காதலித்து கூட்டிகிட்டு ஓடிப் போய்விடுவாளோனு பயம். அந்தப் பிள்ளை அப்படிப்பட்ட பிள்ளை இல்ல அப்படினாலும்.சில பெத்தவங்களோட நெனப்பு இப்படிதான இருக்கு.

அதுக்கு ஏத்த மாதிரி அவ கூட படிச்ச பையன் புக்கு கொடுக்கிறேன்னு வீட்டுக்கு வந்து இருக்கான் அத பார்த்தா அவளோட அப்பனும் அம்மையும் சந்தேகம் அதிகமாகி அவளை படிக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க அன்னிக்கு அந்த பிள்ளை படிச்சிருந்தா வாழ்க்கை இவ்வளவு கஷ்டமா இருக்காது.

இவங்க பேசுவதைக் கேட்டுக்கொண்டே லைட் ஹவுசுக்கு மேலே ஏறிய விசாகனுக்கு மித்ராவின் பேச்சு எதுவும் காதில் விழவில்லை தலை சுற்றுவது போல் இருந்தது நாக்கு வரண்டு நடுங்கி படியே உட்கார்ந்து அப்படியே என்னாச்சுடா என்று மித்ரா துடித்துவிட்டாள்.அப்போதும் அவன் கண்கள் அந்த இருவரையும் தேடி அலைந்தது.

மித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை ஏன் விசாகன் இப்படி மாறிப் போய் இருக்கிறான்.என் பயப்படுகிறான்.அவன் கண்களில் எப்படி இவ்வளவு பயம் வந்தது.இந்தக் கேள்விகளை தனக்குள்ளே கேட்டவாறு மௌனமாய் லைட் ஹவுஸின் உச்சியை அடைந்தனர் இருவரும்.

மித்ரா எதுவும் பேசவில்லை கடலை ரசிக்கவும் இல்லை இவள் எதையோ யோசிக்கிறாள் என்று மட்டும் விசாகனுக்குத் தோன்றியது.

மித்ரா தான் பேச்சை துவங்கினார் என விசா என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க என்ன பிராப்ளம் விசா.உன்னோட ஸ்கூல் மேட் வந்து உன்னை பார்த்ததுல இருந்தே நீ சரி இல்லை அப்படி என்னதான் உன்னோட ஃப்ரண்ட் சொன்னார்.ஏன் இப்படி மாறி போயிட்ட விசா என்று தழுதழுக்க தொடங்கினாள் மித்ரா.

சொல்லு விசா எதுவும் தப்பு பண்ணிட்டியா.இதுவரைக்கும் உன்னோட கண்களில் நான் இவ்வளவு பயத்தை பார்த்ததே இல்லை.எதுக்காக பயப்படுற விசா என்ன செஞ்ச சொல்லு.நீ சொல்லலைன்னா சுரேஷ் கிட்ட தான் கேக்கணும்.என்று மிரட்டுவது போல் பேசிய மித்ராவை தன் தாயின் சாயலை பார்த்தான் விசாகன்.

நீ நினைக்கிற அளவுக்கு ஒன்னும் பெரிய விஷயம் இல்ல மித்ரா நான் எந்த தப்பும் பண்ணல.அதோட சுரேஷுக்கும் ஒன்னும் தெரியாது.இது என் மனசுக்கு மட்டுமே தெரிஞ்ச எனக்குள் நாம் விளங்கிக் கொள்ளும் மனப்புழுக்கம்.

அன்னைக்கு சுரேஷ் வந்தான் இல்லை என்று சொல்லும்போது மித்ராவின் கைகளைத் தன் கைகளை கோர்த்து கொண்டு சுவரில் சாய்ந்து பேசத் துவங்கினான்.எங்களின் பால்ய சினேகிதி சினேகிதன் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் அப்போது தான் அவன் தியாவை பற்றி சொன்னான் நான் அன்றோடு அரைமனிதானாகிப்போனேன் மித்ரா.என்று கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஒருவேளை காதல் தோல்வியை இருக்குமோ என நினைத்த மித்ராவுக்கு யாரந்த பெண் என்று விசாகனின் தோளில் கை வைத்து பற்றாய்க் கேட்டாள்.

துள்ளல் காலம்

நானும் தியாவும் ஒரே வகுப்பு அவளுக்கும் எனக்கும் எப்போதும் போட்டியாக தான் இருக்கும் என்னைவிட ஒரு மார்க் அதிகம் வாங்கினாலும் அவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம் எனக்கு அத்தனை வருத்தமாகவும் இருக்கும்.

தியா எனக்கு போட்டியாக இருப்பதை நான் விரும்பவில்லை அவள் வீட்டில் அவளை பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள்.என எனக்கு நன்றாகவே தெரியும் தேர்வுக்கு முதல் நாள் நான் புத்தகம் கொடுப்பதுபோல் அவள் வீட்டுக்கு போனேன்.அவளும் இது என்னுடைய புத்தகம் இல்லை என சொல்லி அனுப்பி விட்டால் அதுதான் நான் அவளை இறுதியாய் பார்த்தது. அதன்பிறகு அவள் பள்ளிக்கு வரவில்லை ஒரு வாரம் கழித்து தான் தெரியவந்தது என்னையும் தியாவையுசம்பந்தப்படுத்தி அவள் வீட்டில் அடித்தார்கள் என்று.

இது தெரிந்ததும் நான் துடித்துப் போனேன் விளையாட்டாய் செய்த காரியம் வினையாய் கண்முன்னே பள்ளி முடிந்து அவள் வீடு தேடி ஓடினேன்.அவளும் அவள் அம்மாவும் முற்றத்தில் ஒழுங்குபடுத்தி எப்படி இருந்தார்கள் என்னை பார்த்ததும் கையிலிருந்த கிடைப்பதோடு நெருங்கி வந்தாள் அவள் அம்மா.

ஆன்ட்டி தியாவை ஸ்கூலுக்கு அனுப்புங்க என்னால் தொல்லை ஏதும் வராது என சொல்லி முடிப்பதற்குள் கத்தி ஊரையே கூட்டி விட்டாள் இந்தியாவின் அம்மா ஆன்ட்டி அப்படின்னு சொல்ற நீ இந்தப்பக்கம் உன்னபார்த்த நடக்குறதே வேற என்று சண்டைக்காரி போல் கத்தினாள்.அவர் பின்னால் தியா அழுது கொண்டே நின்றாள்.

எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை கண்ணீரோடு வந்துவிட்டேன் எத்தனையோ முறை அவளை பார்த்து பேச முயன்றேன் முடியவில்லை.

நான் ஒவ்வொரு முறையும் கடைவீதிக்கு செல்லும் போது அவளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் அவளின் இன்றைய நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவேன் ஆனால் இதுவரை நான் அவளை பார்க்கவே இல்லை.அதன் பிறகு நான் அதை மறந்தும் போனேன்.

சுரேஷ் வந்தபோது பள்ளி காலத்தில் எடுத்த குரூப் ஃபோட்டோ கொண்டுவந்தான் அதை பார்த்த பின் தியாவின் நினைவுகள் என்னை உறங்க விடவில்லை நான் செய்த தவறு அவள் வாழ்வை எப்படிப் புரட்டிப் போட்டு இருக்கும்.இப்போது அவள் எப்படி இருப்பாள்.என்ற எண்ணம் என்னை தூங்க விடவில்லை இதுதான் என்னுடைய தேடலுக்கும் காரணம்.மித்ரா

என்று விசாகன் சொல்லும்போதே அவன் விரல்கள் மித்ராவின் விரல்களை இறுகப் பற்றிக் கொண்டது.எப்படியாவது அவளை பார்க்க வேண்டும் அவள் இப்போது எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டால் கூட போதும் மித்ரா என்று கடலைப் பார்த்து சொல்லியவாறே இருந்த விசாகன் கண்கள் ததும்பி கண்ணீர் ஓடியது.

கண்ணீரை துடைத்துக்கொண்டே லைட் ஹவுஸ் இல் இருந்து இருவரும் மௌனத்தின் துணையோடு கீழே இறங்கி வந்தனர்.

இப்போது விசாகனுக்கு பாரம் முழுவதும் இறங்கியது போலிருந்தது.மித்ராவின் கண்களும் தியாவை தேடத் துவங்கின. வெட்ட வெளியில் தேடுவதை விடுத்து முகநூலிலும் இன்னபிற சமூக வலைதளங்களிலும் தேட ஆரம்பித்தாள் மீண்டும் ஊருக்கு திரும்புவதற்குள் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி விசாகனின் கார் பறந்தது.