நூல் அறிமுகம் : சூ.சிவராமனின் ‘சற்றே பெரிய நிலக்கரித்துண்டு கவிதை’ – செல்வகுமார்
மிகச் சிறியதாகவுள்ளதே இக்கவிதை நூல் வெறும் 50 பக்கங்களோடு என மனதுள் எண்ணிக்கொண்டு வாசிக்கும்போது
“துருவேறிய மண்வெட்டி
கைவிடப்பட்ட தானியக்கதிர்
நானொரு மண்புழு” என்ற முதல்பக்கக் கவிதை நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது.
“ஆடுகள் மாடுகள் மேய்ந்த ஆற்றுப்படுகை
நீர்க்காகங்கள் வெளியேறுவதற்கு முன்பு வரை
வாழ்ந்து கெட்டவன் விழுந்து சாக
ஒரு நதி இருந்தது” இதில் பொதிந்திருக்கும் உண்மைகளான நீர்க்காகம் வெளியேறியதையும், மனிதனின் பேராசையால் நதி காணாமல் போனதையும் சூசகமாக கூறியதோடு, வங்கிக் கடனை செலுத்த முடியா பணமுதலைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவைப்பதும், கடனைத் தள்ளுபடி செய்து உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பெறவைத்து அழகுபார்க்கத்துடிக்கும் ஆட்சியாளர்கள் , விவசாயி வாங்கின கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் முகமூடி அணிந்துகொண்டு ஏழை விவசாயியை தூக்கில் தொங்கவிட்டு மேலுலகம் அனுப்பிவைக்கும் செயலை
” காளைகளின் நுகத்தடிக் கயிற்றில்
அழகிய சுருக்கொன்றைப்
போடக் கற்றுத் தேர்ந்தான்
நிலத்தின் நிர்வாணம் சகிக்கவில்லை
நிமிர்ந்த பால் கதிரென
அந்தரத்தில் தொங்குகிறான்
சட்டைப் பையில் ஓயாமல் ஒலிக்கிறது கைப்பேசி
தொடர்ந்து அழைத்தபடி இருக்கிறார்
வங்கி மேலாளர்” என்ற கவிதையை
வாசிக்கும்போது எங்கோ ஓர் மூலையில் நிலத்தை நேசிக்கும் விவசாயியின் மூச்சடங்குவதை கண்முன் காணச்செய்து நம்
கண்களைக் குளமாக்கிவிடுகிறார்.
“புல் மேயாத மாட்டின் பாலை விற்கிறார்கள்
நெகிழிப் பைகளில்
விடலைகள் அணையாத காளைகளோ
ஆண்மையிழந்துவிட்டன” என்பதை வலியோடு மனம் நொந்து சொல்லும் கவிஞர் அக்கவிதையின் முடிவில் “நீள்சதுரப் பெட்டியில் மீன்களை நீந்தவிட்டது தற்செயலில்லை” என முடித்திருப்பார் ஆறுகளை காணாமல் செய்த நம்சேவையை பாராட்டும்விதமாக.
பாய் கடையில் தேநீர் குடிக்கும் கடவுள்
“சிறுநீர் ரத்தத்தைச் சுத்திகரிக்குமா
கறி தின்பது தேத்துரோகமா” என்ற கேள்விகளுக்கு விடையளிக்கமுடியாமல் எனைக் கொன்றுவிடுங்கள் எனக் கூறி கதறச் செய்யும் சூழலை உருவாக்கிய இம்மானுடர்களின் மதவெறியை தோலுரித்துள்ளார்.
இயற்கை வழங்கிய அழகிய நிலத்தை மாசுபடுத்தும் செயல்களை தொடர்ந்து செய்து வரும் நாம், நமது சந்ததிகளுக்கு வாழத்தகுதியில்லா பூமியை வழங்கவுள்ளதை
“விலை நீரைப் பருகின பின்
அதன் புட்டிகளோடு
புதைக்கிறோம் எதிர்காலத்தை
நேசிப்பில் ஊரும் அன்பைப்போல்
நீரூரும் நல் நிலங்கள்
புவிக்கு வெளியே சென்றுவிட்டன
நம் காதலோ நீண்டிருக்கிறது
கதிராமங்கலம் வரை” என கரி நிலத்தை கவிபாடி எச்சரிக்கைவிடுக்கிறார்.
தன் இருப்பிடத்தின் கீழே பதிக்கப்பட்டுள்ள கெயில் குழாய்கள் சூழ்ந்திருக்கும் அனல்மின் நிலையங்களினால் எழுந்த அவநம்பிக்கையினால் உறக்கமின்றி படுக்கையில் சோர்ந்திருப்பவரின் உடல் கிடக்கை சற்றே பெரிய நிலக்கரித்துண்டென காட்சியளிப்பதை நேரில் கண்டுணர அவ்விடத்திற்கு நமை அழைத்துச் செல்லும் இக்கவிஞரை, நிர்வாண நிலத்தின் நடுவே நின்று அதைப் பாடி எச்சரிப்பது ஆட்காட்டி அல்ல, நூற்றுக்கு நூறு அது நூலாசிரியர் சூ. சிவராமன் தான் என அணிந்துரையில் உயர்திரு. நக்கீரன் கூறிய கூற்று சாலப் பொருந்தும். சமூக அவலங்கள், ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள், மானுடர்களின் பேராசைகள் போன்றவையால் விளையும் விளைச்சலை விலாவாரியாக அள்ளித்தெளித்த, ஊராட்சி செயலராக பணியாற்றும் இம்மக்கள் கவிஞரை தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறோம் எளிய மக்களுக்காக.
– செல்வக்குமார் இராஜபாளையம்.
நூல்: சற்றே பெரிய நிலக்கரித்துண்டு
ஆசிரியர்: கவிஞர் சூ. சிவராமன்
முதல் பதிப்பு: ஜனவரி 2020
வெளியீடு: கொம்பு பதிப்பகம்
நாகப்பட்டினம் -611001.
விலை: ரூ.50/-