தொடர் ஓட்டம் டி.கே.ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வுகள் – நினைவுகள் Thodar Ottam T.K Rangarajan Vazhkai Nigazvugal Ninaivugal book - https://bookday.in/

தொடர் ஓட்டம் டி.கே.ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வுகள் – நினைவுகள்

நூலின் தகவல்கள்: நூல் : தொடர் ஓட்டம் டி.கே.ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வுகள் – நினைவுகள் ஆசிரியர்: டி.கே.ரங்கராஜன் விலை : ரூ.300 வெளியீடு : பாரதி புத்தகாலயம்  தொடர்புக்கு : 44 2433 2924 நூலை இணையதளம் வழிப் பெற : thamizhbooks.com…
T. K. Rangarajan 80th Birthday Special Book. TKR 80 புத்தகம்

TKR 80 புத்தகம்



உங்களுடைய பின்னணி குறித்து கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் ஒரு மார்க்சிஸ்டாக,தொழிற்சங்கத் தலைவராக உருவானது எப்படி?

நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்தபோது, மேற்படிப்புக்குப் போக முடியாத சூழ்நிலையில் குடும்பநிலை கருதி வேலைக்குப் போக நேர்ந்தது.இ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் எழுத்தர் என்பது என் பணி. நிர்வாக ஊழியர்கள் அடுக்கில் அதுதான் கடைநிலை. 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி பணியில் சேர்ந்தேன்.பல மேலதிகாரிகள், ஜெனரல் மேனேஜர் உட்பட எல்லாரும் ஐரோப்பியர்கள், வெள்ளையர்கள். தொழிலாளர்கள் சுமார் 1000 பேருக்குமேல் இருந்தனர். நான், இன்னும் மூன்று பேர் எழுத்தர்கள். தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் உண்டு. காங்கிரஸ் – (ஐ.என்.டியு.சி.,), தி.மு.க கட்சிகளின் பின்னணித் தொழிற் சங்கங்கள் அவை. ஆனால் அலுவலக- நிர்வாக ஊழியர்களுக்குத் தொழிற்சங்கம் கிடையாது. ஒருகட்டத்தில், ஐ.என்.டி.யு.சி.சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கமாக மாறியது. அன்றைய நிலையில், தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் ஒரு ரூபாய். வார விடுமுறைக்கு சம்பளம் இல்லை. மூன்று ஷிஃப்ட்களில் பணிகள் நடைபெற்று வந்தன.
நிர்வாக எழுத்தர்தான் நான் என்றாலும் என் பணிகளைச் சீக்கிரமாகச் செய்து முடித்துவிட்டு ஃபாக்டரிக்குள் போய் அங்கு தொழிலாளர்களின் வேலை நிலைமைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பது வழக்கம். அப்போது எனக்குப் பதினேழு வயது. அடுத்த ஆண்டிலேயே அங்கு ஒரு வேலைநிறுத்தம் நடந்தது. 85 நாட்கள் நீடித்த தீவிரமான ஸ்டிரைக் அது. தோழர் உமாநாத் தலைமை வகித்து நடத்தினார். அவர் இரவு பகலாக அங்கேயே இருப்பார். காரணம், நிர்வாகம் ஏதேனும் சதித் திட்டம் தீட்டி தொழிற்சாலைக்குள் எதையாவது செய்துவிட்டுப் பழியைத் தொழிலாளர்கள் மேல் போட்டுவிடக் கூடாது என்பதே.

அன்றைய நாட்களில் நடந்த எல்லாக் கூட்டங்களிலும் நான் போய்க் கலந்து கொள்வது வழக்கம். தொழிலாளர்களில் பெரும்பாலோர் உடல் உழைப்பாளர்கள். சிறப்புத் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவு. அங்கு தொழிற்சங்க ஊழியர்களுள் ஒருவர் பழனியப்பன். அப்போது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அவர். நெசவுத்தொழிலாளியாக இருந்து சர்க்கரை ஆலை வேலைக்கு வந்தவர். தொழிற்சங்கக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் எழுத்தரான என்னை அவர் கவனித்து வந்திருக்கிறார். என் அறைக்கு அடிக்கடி வருவார். நிறைய விவரங்களைப் பேசுவார். ஜனசக்தி, சோவியத்நாடு பத்திரிகைகள் அவர் அறிமுகம் செய்தவைதாம். அவருடைய பெயருக்கு அடை மொழியாகவே “ஜனசக்தி-சோவியத்நாடு” பழனியப்பன் என்று ஆகிவிட்டது.

வேலைநிறுத்தம் தொடர்பாக அன்றைய முதல்வர் காமராஜ், தொழிலாளர்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருடன் கல்யாண சுந்தரம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேசி தீர்வு கண்டார்கள். பழனியப்பன் என்னுடன் தொடர்ந்து பேசிப்பேசி என்னைக் கட்சிக்குக் கொண்டு வந்தார். அன்றைய க்ளைமேட் அப்படியாக இருந்தது. மத்தியதர ஊழியரை, ஒரு நிர்வாகப் பணியாளரை ஒர் இயந்திரத் தொழிலாளி கட்சிக்குக் கொண்டுவர அன்றைக்கு முடிந்தது. மேற்கண்ட வேலை நிறுத்தம் முடிந்ததும் அலுவலக ஊழியர்களுக்காக ஸ்டாஃப் யூனியன் ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எங்களுக்கு வந்தது. 1961-ஆம் ஆண்டு அந்தச்சங்கம் உருவானது. உமாநாத்தான் தலைவர்.

பேட்டைவாய்த்தலை என்ற அந்த ஊர் சிறியதுதான். ரயில்வே லைன், கடைவீதி, குடியிருப்புகள் இப்படியாக இருந்தது. அவ்வபோது ஊருக்குள் போய் மக்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பார்த்துப் புரிந்துகொள்ள முயல்வது என் வழக்கம். சுற்றுப்புற கிராமங்கள் குளித்தலை வட்ட கிராமங்கள். அந்த ஊரிலிருந்து, தொட்டியம், முசிறி, திருச்சி வரையிலுமே கம்யூனிஸ்டுகள் மிக வலுவாக இருந்த காலம் அது. திராவிடர் கழகம் ஒரு வலுவான இயக்கமாக இருந்தது. இந்த இரண்டுகட்சிகளுமே அப்போது வலுமிக்க இயக்கங்கள். இப்படியாக நான் கட்சியில் சேர்ந்து அதன் பிறகு தொழிற்சங்கத்திற்கு வந்தேன். பொதுவாக அன்று தொழிற்சங்கத்தில் இருந்து கட்சிக்கு வருவதே அதிகம்.

புத்தக வாசிப்புக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? ஒரு மார்க்ஸிஸ்டாகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் உருவானதில் வாசிப்பின் பங்கு என்ன?

புத்தக வாசிப்பில் ஆரம்பநாட்களில் நான் ஏற்கனவே சொன்ன ஜனசக்தி-சோவியத்நாடு பழனியப்பன் அந்தப் பத்திரிகைகளை அறிமுகம் செய்து வாசிக்க வைத்தார். பள்ளி நாட்களில் எனக்குப் படிப்பில் பெரிய ஆர்வம் ஏதுமில்லை. ஒரு சராசரி மாணவனாகவே நான் இருந்தேன். பிற்பாடு, தொழிற்சங்கப் பணிகள்,கட்சி வேலைகள் என்று வந்தபோது அவை தொடர்பான ஆவணங்களைப் படித்துக் குறிப்புகள் எடுக்காமல் நான் கூட்டங்களுக்குப் போவதில்லை. ஒரு தொழிற்சங்கத் தலைவர், தொழிற்தகராறுகள் சம்பந்தப்பட்ட கட்டுரைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நிர்வாகத் தரப்பில் தரும் விளக்கங்கள், இவற்றையெல்லாம் முழுமையாகத் தீர்க்கமாகப் படிக்காமல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது. எங்கள் ஊழியர் சங்கம் உருவானபோது அதற்கு அடிப்படையாகப் பதிவு செய்யக்கோரி விண்ணப்பித்த ஏழுபேரில் நானும் ஒருவன். அடிப்படை உறுப்பினருள் ஒருவன் தானே தவிர செயலாளர், பொருளாளர் என்று எந்தப் பொறுப்பிலும் அப்போது நான் இல்லை. ஆனால், மார்க்சிய நூல்களை, கட்சிப்பிரசுரங்களைப் படிக்கும் அவசியத்தை பி.ராமச்சந்திரன் போன்ற தோழர்கள் வலியுறுத்திச் சொல்வார்கள்.

No description available.1962-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. இந்திய-சீனப் போரின் விளைவாக ஒன்றுபட்ட கட்சியில் பின்னால் மார்க்சிஸ்டுகளாக வரவிருந்தவர்கள் அத்தனை பேர் மேலும் சீன ஏஜெண்ட்டுகள் என முத்திரை குத்தினர். அவர்கள் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதிலும் தேசியஉணர்வு என்பதன் பெயரால் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு உணர்வு அதிகமாகப் பொங்கிய நிலை. எங்கள் ஸ்டாஃப் யூனியனிலும் செயலாளர் உட்பட மூன்று எழுத்தர்கள் விலகி விட்டார்கள். ஆகவே 1963-இல் நான் இடைக்காலச் செயலாளர் என்ற பொறுப்பை ஏற்கவேண்டி வந்தது.
திருச்சியில் எம்.கல்யாணசுந்தரம் தவிர மற்ற தலைவர்கள் அனந்த நம்பியார் உமாநாத், பி.ராமச்சந்திரன் போன்றவர்கள் சி.பி.எம். சார்புடன் இருந்தார்கள். 1964-ல் கட்சி உடைந்தபோது நான் சி.பி.எம். பிரிவைத் தேர்வு செய்து இணைந்து கொண்டேன். சி.பி.ஐ. தலைவர்களின் அணுகுமுறை, அவர்களின் பேச்சுகள், கட்சி பிரிவதற்கான ஆவணங்கள், கட்சி காங்கிரஸ் தீர்மானங்கள் போன்றவற்றை நான் பம்பாய் ஏ.ஐ. டி.யூ.சி. மாநாட்டின்போது 1966-இல் நேரடியாகப் படிக்க முடிந்தது. இந்த சந்தர்ப்பத்திலிருந்து நிறைய வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கட்சி பிளவுபட்ட பிறகும் 1966-வரை தொழிற்சங்கம், விவசாய சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளில் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம். ஆகவே பம்பாய் மாநாட்டில் பங்கேற்க முடிந்தது. நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்தக் காலகட்டத்தில் தொழிற்சங்கப் பணிகள், அரசியல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தமது பணிகள் தொடர்பாக வாசிப்பது மிக அவசியமாயிருந்தது.குறிப்பிட்ட தொழிலின் செயல்முறை, அதன் உற்பத்தி முறை பற்றிய ஞானம் முக்கியம். அன்றைய உற்பத்தியிலும், உற்பத்தித்திறனிலும் மனிதர்களின் பங்குஅதிகம். இயந்திரங்களின் பங்கு குறைவாயிருந்தது.தொழிலைப்புரிந்து கொள்ளாமல், தொழிலின் செயல்முறையைப் புரிந்துகொள்ளாமல் அன்றைய தலைவர்கள் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடுவதில்லை.

நீங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கிய கால கட்டத்தில் தமிழகத்தின் பொதுவான கல்விநிலையும், தொழிலாளர்களின் கல்விநிலையும் வேறாயிருந்தது. இன்றைய கல்விநிலை வேறு. இன்றைய உயர்கல்வி கற்ற தொழிலாளர்களிடையே பணியாற்ற வேண்டிய தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இருக்கவேண்டிய தயாரிப்பு குறித்துக் கூறமுடியுமா?

அன்றைய சூழலில், பேட்டைவாய்த்தலை, புகளூர் உட்பட மூன்று சர்க்கரை ஆலைகள் இருந்தன. என் அனுபவத்தில்,சர்க்கரைத் தயாரிப்பில், மூட்டைகள் அடுக்குவதில் பீஸ்ரேட் முறை இருந்தது. தொழிலாளிக்கு முறையான கல்வி இருக்காதே தவிர, தனது வேலைக்குத் தகுந்த கூலியைக் கணக்கிட்டுக் கேட்கும் நடைமுறை ஞானம் தொழிலாளர்களுக்கு இருந்தது. எனவே, தலைவர் பொறுப்பில் இருப்பவர் தொழிலாளர்களின் வேலையின் தன்மை, நிர்வாகத்தின் விளக்கங்கள், அணுகுமுறை, அவர்கள் தரும் பேலன்ஸ் ஷீட், கேஸ் லா, கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும். நிர்வாகத்துடன் பேசப்போகும் போது தொழிற்சங்க நிர்வாகிகளாக இருக்கிற தொழிலாளர்களையும் எங்களுடன் அழைத்துப் போவோம். தனியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. சி.ஐ.டி.யு. அமைப்பு உதயமானபின், தொழிற்சங்க ஊழியர்களுக்குத் தொடர்ச்சியாகக் கல்வி கொடுப்பது வழக்கம்.லெனின் சொன்னது போல “ஒவ்வொரு ஸ்டிரைக்கும் ஒரு போர்.. (war. though it is not an actual war,every strike is a war.)” எனவே யுத்தத்திற்குத் தயாரிப்பது போல தொழிலாளர்களைத் தயார் செய்ய வேண்டியதாயிருந்தது. இன்றைய தொழிலாளர்கள் கல்வியறிவு மிக்கவர்கள். எல்லா விசயங்கள் பற்றியும் குறைந்த பட்ச ஞானம் உள்ளவர்கள். அவர்களைவிட எல்லா விசயங்களிலும் ஒரு இன்ச் அளவுக்காவது கூடுதலாக விவரம் தெரிந்திராவிட்டால் நாம் சரியான தொழிற்சங்கத்தலைவர் என்று தொழிலாளிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நவீன தொடருற்பத்தித் தொழிற்சாலையில் (continuous process industry), தகவல் தொழில் நுட்ப அரங்கில், மற்றும் ஏனைய knowledge industry எனப்படும் அரங்கங்களில் பணியாற்றுபவர்களை வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் வைத்து அமைப்பாக்குவது சிரமம் என எங்களுடைய மிகக்குறுகிய அனுபவத்தில் தெரிகிறது. அவர்களுடன் அறிவாண்மைத் தளத்திலும் உரையாடவேண்டிய அவசியம் உள்ளது என நினைக்கின்றோம்.உங்கள் அனுபவங்களைப் பகிர முடியுமா?

இப்போதைய தொழிற்சாலைகள் போலவே அன்றைய தொழிற்சாலைகளிலும் தொடர் உற்பத்திச் செயல்முறை இருக்கவே செய்தது. உதாரணமாக சர்க்கரைத் தொழிற்சாலை. ஆனால், ஒரு பண்பு சார் மாற்றம் இன்றைக்கு இருக்கிறது. குவாலிட்டேட்டிவ் சேஞ் உள்ளது. நிர்வாகத்தரப்பில் தொழிலமைதி வேண்டும் என்பதில் அவர்கள் இன்று கவனமாக இருக்கிறார்கள். தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சட்டபூர்வமான உரிமைகள், சலுகைகளை நிறைவேற்றி விடுகிறார்கள். ஆனால் வேலைப்பளு மிகமிக அதிகரிக்கப் பட்டிருக்கிறது. சீயோலில் உள்ள கார் உற்பத்திச் சாலையில் அந்த ஊர்த்தொழிலாளர்களுக்கு உள்ள வேலைப் பளுவை இங்கேயும் திணித்துவிடுகிறார்கள். ஆனால் அங்கே தரும் சம்பளத்தை இங்கு தருவதில்லை.இந்த அம்சத்தைப் புரிந்துகொள்வதில் இன்றைய தொழிலாளர்களுக்குப் பலவீனம் இருக்கிறது. அவர்களுக்குப் புரியவைப்பதிலும் நமக்குச் சிரமம் இருக்கிறது. காரணம், எந்தவகையில் எல்லாம் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்று புரிந்துகொள்வதில் நவீன தகவல் தொழில் நுட்பத்தொழிலாளர்களுக்கு சிரமம் உள்ளது. என் அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன்.
பாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிற்தகராறு ஏற்பட்டபோது, தோழர் ஏ.சவுந்தரராஜன் கைதுசெய்யப்பட்டார். அது தொடர்பாக தொழிற்சாலை வளாகத்தில் கூட்டம் ஒன்றுக்குப் போக வேண்டியிருந்தது. நான் அங்கு போகும் போது நானூறு, ஐனூறு பேர் – அவ்வளவு பேரும் இளைஞர்கள். அவர்களில் பலர் மொபைல் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நடுவே பேசுவதில் நமக்கு இன்றைய நவீன இளைஞர்களின் விளையாட்டு, கலாச்சாரம், சமூக ஊடகங்களில் அவர்களுக்கு உள்ள ஈடுபாடுகள், பற்றிய பரிச்சயம் முக்கியத் தேவையாகும். நான் அன்று அவர்களின் உடை, ஈடுபாடுகள், பற்றியெல்லாம் பேசத்தொடங்கிய பிறகுதான் அவர்கள் என் பேச்சையே கவனிக்க ஆரம்பித்தார்கள். இதேபோல ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் ஒரு கூட்டம் ஆரம்பிக்கு முன் ஒரு தொழிலாளியிடம் “உங்களுக்கு எதற்கு யூனியன்” என்று கேட்டேன். அவர் சொன்னார்: ”தொழிற்சாலைக்கு உள்ளே எங்களுக்கு மரியாதை இல்லை”. ஆகவே இன்றைய நவீன இளைஞர்களின் மனரீதியான ஆர்வங்களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை அமைப்பாகத் திரட்ட முடியாது.

No description available.

இயந்திரத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும், விவசாய சங்க ஊழியர்களுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைப்பு, கூட்டுச் செயல்பாடுகள் பற்றி உங்கள் அனுபவத்தைச் சொல்லமுடியுமா?

நம்முடைய நாட்டில் விவசாயத் தொழிலாளர்களே அதிகம். எனவே கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டுவது முக்கியம். அந்தப் பணியை லால்குடி வட்டத்தில் கோத்தாரி ஆலைத் தொழிலாளர்கள் சிறப்பாகச் செய்தனர். திருவெறும்பூர் ஒன்றியத்தில் BHEL தொழிலாளர்கள் அந்தப் பணியைச் செய்தனர். இதன் மூலம் விவசாய சங்க, விவசாயத் தொழிலாளர் சங்க வளர்ச்சிக்கும், கிராமப்புறத் தலைவர்களை உருவாக்குவதற்கும் முடிந்தது.

தொழிற்சங்கத்தில் ஈடுபடும் முன்னணி ஊழியர்கள், தலைவர்கள் தினசரி பொருளாதார, நிர்வாகப் பிரச்சனைகளில் தலையிடுவது, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடுவது, போராடத் தயார்செய்வது என்பதைத் தாண்டி தொழிலாளர்களை அரசியல்படுத்துவது, அவர்களை அடிப்படையான சமூக மாற்றத்தின் முன்னணிப்படையாக மாற்றுவது எப்படி?

அரசியல்படுத்துவது என்பதைத் தொழிற்சங்கத்தலைவர் மட்டும் செய்ய முடியாது. தொழிலாளர்கள் நடுவே ஒரு சிறுபான்மைக் குழுவை அரசியல் உணர்வுபடைத்தவர்களாக மாற்ற முடியும். அது ஒரு செயல் முறை. பொலிடிக்கலைசேஷன் இஸ் எ ப்ரொசெஸ். தொழிலாளிகளிடமும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவச் சிந்தனைகள் உள்ளன. அவற்றையெல்லாம் தாண்டித்தான் நேரடி அனுபவத்தின் மூலம் அரசியல் உணர்வு பெறுகிறார்கள். உதாரணமாக ஜாக்டி போராட்டம் முன்பு நடை பெற்றபோது, சிறைக்குள் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மிக உத்வேகத்துடன் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. சாதாரண நாட்களில் மாலை ஐந்து மணிக்குமேல் நுழைவாயிற் கூட்டத்திற்கு வரச் சொன்னால் சங்கடப்பட்டுக்கொள்கிறவர்கள்தாம் அவர்கள். அதேபோல சிறைக்கு உள்ளே இருக்கும் வரை யார் எந்த சாதி, எந்த மதம் என்று பேதம் பார்க்காமல் ஒன்றுபட்டு நின்றார்கள்.

இந்த ஒற்றுமை உணர்வு தற்காலிகமானதாக மட்டுமே நின்று போவதுதான் பிரச்சனை. இன்றைய சூழலில் சந்தையை நோக்கி மக்களைத் தள்ளுவதே அரசின் கொள்கையாக இருக்கிறது.. ரேஷன் கடைகளில் ஏன் பொருட்களைக் குறைவாகக் கொடுக்கிறார்கள்? சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் ஏன் இவ்வளவு குறைபாடு? எல்லாப் பொருட்களையும் சந்தையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக நிர்ப்பந்தம் செய்வதுதானே இதன் நோக்கம்? இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் அரசின் கொள்கைகள்தாம் என்று புரியவைக்கும் செயல்முறைதான் அரசியல்படுத்தும் வேலை. ஒரு தொழிற்சங்கத்தில் இரண்டாயிரம் பேர் உறுப்பினர்கள் என்றால், அவ்வளவுபேரும் அரசியல், வர்க்க உணர்வு பெறுவது என்பது நடைமுறை சாத்தியமானதில்லை. ஒரு சிறுகுழு நல்ல முறையில் அரசியல்படுத்தப்பட்டு விட்டால் அவர்கள் ஏனையோரை அரசியல்படுத்துவார்கள்.

உங்களுடைய மிகவும் பரபரப்பான அரசியல், தொழிற்சங்க, நாடாளு மன்றப்பணிகளுக்கு நடுவே நீங்கள் உங்கள் வாசிப்புக்கு எப்படி நேரம் ஒதுக்க முடிகிறது? படிப்பதற்கு நேரமேயில்லை என்று கூறும் தோழர்களையும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா?

நான் படிப்பது, இரவு என்னுடைய மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரங்கழித்துத்தான்.அவசியப்படும்போது அதிகாலை மூன்று, நான்கு மணிக்கு எழுந்து படிப்பதுண்டு. ஆனால் பயணங்களின்போது படிப்பவனல்ல நான். பயணங்களின்போது சக பயணிகளுடன் உரையாடி விசயங்களை அறிவதே என் வழக்கம். பயணத்தில் என்னோடு பலதரப்பட்டவர்கள் வருகிறார்கள். வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பிற கட்சிகளின் நிர்வாகிகள்—இப்படியாகப் பலபேர் வரும் போது அவர்களோடு பேச்சுக்கொடுப்பதின் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களின் கருத்துகளைக் கேட்டுப் புரிந்து கொள்ள முடிகிறது.

நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பலவற்றில் நான் உறுப்பினராக இருந்திருக்கிறேன். இப்போது ஒரு குழுவில் இருக்கிறேன். அந்தக் குழுக்களினுடைய பணிகள் தொடர்பாகவும் நிறையப் படித்து,தயார் செய்ய வேண்டியிருக்கிறது. பல்வேறு செலவினங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி தணிக்கையாளர்களுடன் பேசி பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்.ஒருமுறை ஆடிட்டர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.: “Capitalism, without Insolvency is,Christianity without Hell”

No description available.

சமீபத்தில் நீங்கள் படித்த சில நூல்களைக் கூற முடியுமா? உங்களை மிகவும் கவர்ந்த நூல் எது? ஏன்? ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தா பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசியதாக அறிகிறோம். அதன் மீது உங்களுடைய இந்த ஈடுபாட்டுக்கு என்ன காரணம்?

விடுதலை ஆசிரியர். கி.வீரமணி எழுதிய பெரியார் சிந்தனைக்களஞ்சியம் ஒரு தொகுதியைப் படித்தேன்.சமீபத்தில் படித்த மற்றொரு முக்கியமான புத்தகம் ஒளரங்கசீப். அந்த மன்னனைப்பற்றிய பல தவறான கருத்துகளைப் பற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ஓர் அமெரிக்கப் பேராசிரியர். அவருக்கு இசை பிடிக்காது என்ற கருத்தின் உண்மைத் தன்மை பற்றி, இந்துக்களுக்கு அவர் எதிரி என்பது பற்றியெல்லாம் எழுதப்பட்ட ஒரு நல்ல ஆய்வு நூல். ஜவஹர்லால் நேருவே கூட ஒளரங்கசீப் குறித்து தவறாகவே சித்தரித்திருக்கிறார் என்கிறார். ஆனால்,இந்துக்களுக்கு 33.5 சதவிகிதம் வேலைவாய்ப்புகளில் பங்களித்தவர் ஒளரங்கசீப்.இன்னொரு புத்தகம், ’Pre History of Humankind’. பிறகு, சித்தார்த்தா பற்றிக் கேட்டீர்கள். அதை நான் அறுபதுகளில் படித்தேன். அந்தக்கதையின் மய்யம், எல்லா உண்மைகளையும் அறிதல்.  சமணம், பவுத்தம் போன்ற பல சமய நெறிகளைக் கடந்து உண்மைகளை அறிய முற்படும் இளைஞனின் கதை. இன்றைய இளைஞர்களைக் கவரும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..

நூற்றாண்டுப் பழமை வாய்ந்த நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களைப் பாதுகாப்பதில் தங்களுக்கு ஒரு பங்கு உள்ளது. அதை எப்படிச் செய்திர்கள்?

முந்தைய ஐக்கிய முன்னணி அரசுக்காலத்தில், இந்தியாவின் மிகப்பழமையான நோய்த் தடுப்பூசி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை மூடிவிடுவதென அரசு முடிவெடுத்தது. அவற்றுள் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டும் ஒன்று. இது எவ்வளவு தவறான முடிவு என்று அரசுக்கு இடதுசாரிகள் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் சொல்லத்தயாராக இல்லை. இங்கே நம்முடைய தோழர்கள் டாக்டர் ரெக்ஸ் சற்குணம், பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்ற தோழர்கள் பல தரவுகளைத் திரட்டித் தந்தார்கள். நமது நாட்டின் சாதாரண மக்களுடைய, குழந்தைகளின் எதிர்கால உடல்நலப் பிரச்சனைகள் தொடர்பான ஒரு பிரச்சனை அது. நம் மக்களுக்கு ரேஷன் கார்டு இல்லை என்றால், குடிநீர் கிடைக்கவில்லை என்றால், சாலை வசதி, பேருந்து வசதி இல்லை என்றால் ஆவேசம் கொள்வார்கள். ஆனால், எதிர்காலத் தலைமுறையினர்-தமது சொந்தக்குழந்தைகளின் எதிர்காலம் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமெனில், கிங்’ஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற பழமையான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நமது மக்களுக்கும் சரி, பெரும்பாலான கட்சிகளுக்கும் சரி அக்கறை ஏற்படவில்லை.

இதன் முக்கியத்துவதை எடுத்துச் சொல்லி அரசின் முடிவில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினோம். தோழர் பிருந்தாகாரத் இதற்கு முன் முயற்சி மேற்கொண்டார். அவரும் நானும் மாநிலங்களவையில் பேசினோம். பிரதமர் மன்மோகன்சிங், அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். மன்மோகன்சிங் இரண்டு நிமிடம் பேசலாம் என்று நேரம் ஒதுக்கினார். நான்கு பக்கக் குறிப்புரையில். தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மூடினால் இந்த நாட்டுக் குழந்தைகளுக்கு அது என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தேன். உலக சுகாதார நிறுவனம்தான் இம்மாதிரிச் செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது என்று மன்மோகன்சிங் சொன்னார். அந்த நிறுவனம் பெரும்பாலான சமயங்களில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இப்படியான பரிந்துரைகளை முன்வைக்கிறது என்பதைச் சொன்னேன். விவாதம் பதினைந்து நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு நிதியமைச்சர் பிரணாப்பைச் சந்தித்து இது பற்றி விவரங்களைச் சமர்ப்பித்தேன். ஒரு நீண்ட போராட்டத்துக்குப்பின் நல்லவேளையாக நமது நாட்டின் நூற்றாண்டுகள் கடந்த நான்கு பொதுத்துறை தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கு முடிந்தது. நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பெருமைக்குரிய சுயசார்பு நிறுவனங்கள் பற்றிய விவரங்களையெல்லாம் அறிந்து வைத்திருந்தால், நம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கான மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மூடுவது என்ற முடிவை அரசு எடுக்கும் போது மக்கள் எதிர்ப்பு இல்லாமல் சும்மா இருக்க முடிந்திருக்குமா?

ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில் உங்களது விருப்ப நிதியில் கணிசமான தொகையை அரசுப்பள்ளி நூலகங்களுக்கும், கிராமப்புற பொது நூலகங்களுக்கும் ஒதுக்கியிருக்கிறீர்கள். இதற்கான தூண்டுதல் எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது?

நான் கிராமப்புற பொதுநூலகங்கள், பள்ளி நூலகங்கள் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதற்கு இம்மாதிரிக் காரணங்கள் பல. எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் எண்பது (80) சதவிகித நிதியைக் கல்விக் கூடங்கள் தொடர்பான திட்டங்களுக்குத்தான் ஒதுக்கி வருகிறேன். பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், குடிதண்ணீர் வசதி செய்து தருவதுதான் முக்கியக் குறிக்கோள். இதெல்லாம் கட்சி எனக்குக் கொடுத்துள்ள வாய்ப்பு.அதை நான் முன்னெடுத்துச் செய்கிறேன்.

’புத்தகம் பேசுது’ வாசகர்களுக்கு உங்கள் செய்தி என்ன?

நான் படித்துப் பார்த்தவரையில், புத்தகம் பேசுது தரமான, ஆழமான கட்டுரைகளுடன் வருகிறது. பலதரப்பு அறிவுஜீவிகளுடனும் நாம் ஓர் உரையாடலை நிகழ்த்துகிறோம். இது தொடர வேண்டும். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், கன்வின்ஸ் செய்யும் விதத்தில் எழுதுவது முக்கியம். எளிய நடையில் விசயங்களைத்தர முயற்சி செய்யுங்கள். மற்றபடி நான் பண்பாட்டு, இலக்கிய சர்ச்சைகளுக்குள் அதிகம் போக முடியவில்லை. மார்க்ஸ், ஏங்கல்ஸ், மாவோ, லெனின் போன்றவர்கள் கலை இலக்கியக் கொள்கைகளை உருவாக்குமளவுக்கு ஈடுபாடும் திறமையும் கொண்டிருந்தவர்கள். அவர்கள் உருவாக்குநர்கள். நாம் இன்றைய தேவைக்கேற்ப அவர்களின் வழியில் இலக்கியங்களை உருவாக்குவது அவசியம்.

நன்றி: புத்தகம் பேசுது மாதஇதழ் (மே 2017)