இது யூதாஸ் பற்றிய கதை. யூதாஸ் பற்றி ஏற்கனவே இருக்கும் சில கதைகளை மையமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் கதை. யேசு கதையில் பல புனைவுகள் இருக்கிறது. இதில் யூதாஸ். யேசுவும் சீடர்களும் வந்து போகிறார்கள். இந்த நூலின் முதல் சிறப்பு அற்புதமான மொழி நடைதான். மொழியின் சுவையை தீவிரமாக படைப்பின் வழியே கடத்தும் இலக்கியங்கள் ஒரு வகைமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சைவ சமய பதிகங்களுக்கும் தமிழ் காப்பியங்களுக்கும் பிறகு, தமிழ் மொழி கிறிஸ்தவம் சார்ந்த படைப்புகளில் மாய வீச்சாக இருப்பது பற்றிய ஒரு ஆச்சரியம் எனக்கு எப்போதும் இருக்கிறது. பைபிள் அதற்கு முதலாவது உதாரணம்.
யேசு -யூதாஸ் இடையே என்ன முரண்பாடு என்று கேட்டால் சராசரியாக நண்பர்கள் இடையில் இருக்கும் பிரச்சினைகள் தான். அதிலும் சாதாரண மனிதன் ஒருவன் புகழ் பெற்று வரும்போது அவரை சுற்றி இருப்போருக்கு அவரை நெருங்குவதில் இருக்கும் இயல்பான சிக்கல்கள் தான் பிரதான முரண். யூதாஸ் யேசுவின் சீடர்களில் தனித்துவமாக இருக்கிறான். அவரை கண்போன போக்கில் தொடராமல் எல்லா வகையிலும் எடை போடுகிறான். அவனுடைய விசுவாசமும் மதிப்பும் தெளிவான காரணங்களை உள்ளடக்கியது. அது வெற்று மனக்கோட்டை அல்ல. மற்றைய சீடர்கள் இடையில் யேசு மேலான பற்றுதல் அளவுக்கு அவநம்பிக்கையும் இருக்கிறது. அவர்கள் யேசுவின் அற்புதங்களில் மெய்மறந்து இருக்கும் தருணங்களில் யூதாஸ் அன்றைய அரசு மற்றும் மத குருக்கள் பற்றிய சிந்தனைகளை குறித்தும் யோசிக்கிறான். ஒவ்வொரு வினைக்கான எதிர்வினை பற்றிய பார்வை அவனுக்கு இயல்பாகவே வந்து போகின்றது. அவர்கள் பிரசங்கம் செய்து பயணிக்கும் நிலப்பரப்புகளில் இனங்கள், பிரதேசங்கள், நம்பிக்கைகள் என்று பல்வேறு வகையான சிக்கல்கள் இருக்கிறது. இதற்குள் இருந்துதான் யேசுவும் யூதாசும் தங்கள் வாழ்வின் பொருளைத் தேடிக்கொள்ள வேண்டியது இருக்கிறது.
“யேசுவின் உயிர்த்தெழுதலுக்கு காத்திருந்து இருப்புக் கொள்ளாமல் மூன்றாம் நாள் அதிகாலை கல்லறைத் தோட்டத்திற்கு ஓடிச் சென்றது அவரது அணுக்கத்தோழி மகதலீன் மரியாளும், யாக்கோபின் தாய் மரியாளும், சலோமியுமே. சீடர்கள் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களுக்கு யேசு எழுந்து வருவார் என்பதில் நம்பிக்கை இருந்ததாக தெரியவில்லை. அவ்வளவு அசட்டையாகவே இருந்தார்கள். ஏற்கனவே அவரை விட்டு சீடர்கள் சிலர் விலகியும் போனார்கள்.
யேசு ஆவியாக சீடர்களை சந்திக்க முனையும் போது அவர்கள் அவரை பேயாக நினைத்து அஞ்சுகிறார்கள். அவர் தன்னுடைய ஆணி புகுந்த இரத்தக் காயங்களை காட்டியே சீடர்களிடம் தன்னை நிரூபிக்க வேண்டி வருகின்றது”
இந்த சொற்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இந்த யதார்த்த உண்மைகளில் இருந்துதான் நாம் யூதாஸ் பற்றிய மதிப்பீட்டை உண்டாக்க வேண்டும்.
இந்த படைப்பை வாசிக்கும் போது இரண்டு முறை முன் அட்டையை திருப்பி பார்த்துக்கொண்டேன். ஒரு வேளை மொழிபெயர்ப்பாக இருக்குமோ என்ற ஐயம்தான் அதற்கு காரணம். இலக்கிய வாசகர்கள் அனைவரும் “பாரபாஸ்” படித்திருப்பீர்கள். என்னுடைய பட்டியலில் எப்போதும் இருக்கும் நூல் பாரபாஸ். இதை படிக்கும் போதும் பாரபாஸ் அவர் போக்கில் தலையைக் குனிந்து கொண்டு வந்து போனார்.
வி. அமலன் ஸ்டேன்லியின் தத்துவ விசாரணைகள் மிகவும் எளிமையானவை என்ற போதிலும் ஆழமான பொருளைக் கொண்டுள்ளதாக கருதுகிறேன். எளிமையாக கூறப்படுபவை தீவிர விசாரணைக்குரியவை!.
– வாசு முருகவேல்
நூல்: ஔவிய நெஞ்சம்
ஆசிரியர்: வி. அமலன் ஸ்டேன்லி
பதிப்பகம்: தமிழினி
விலை: 120
புத்தகம் வாங்க: 24332924
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.