kaiyarunathi book reviewed by s.k நூல் அறிமுகம்: கையறுநதி - செ.கா.kaiyarunathi book reviewed by s.k நூல் அறிமுகம்: கையறுநதி - செ.கா.

“வாழ்க்கையில் என்னதான் மிச்சம் ? கொஞ்சம் சுமை , அந்தச் சுமையின் சுகம் – அவ்வளவுதான்.தொலைதூரங்களைப் படைத்தவன் ஆங்காங்கே சுமைதாங்கிக் கற்களையும் வைத்திருக்கிறான். சுமைதாங்கியாய் இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. என் பார்வைக் கோளாறைச் சரிசெய்ய வேண்டும் . குறைந்தபட்சம் மகளுக்காக ; முடிந்தால் சக மனிதர்களின் பொருட்டாகவும்” என்று நாவலின் 161ம் பக்கத்தின் இறுதிப் பத்தி இப்படியாக முடியும். இதுதான் இந்நாவலின் பிரதான அம்சம்.

மனநோய்களிலேயே மிகவும் கொடுமையான ஸ்கிசோஃப்ரீனியா என்கிற மனச்சிதைவு நோயால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட தனது மகளை மீட்டெடுக்கப் பயணிக்கப்பட்ட அனுபவங்களின் வழியே, முன்னும் பின்னுமாக தமது வாழ்க்கையின் கடந்த கால இருண்மையான அத்தியாயங்களையும் இழைத்து விவரிக்கிற ஓர் கள / எழுத்துச் செயல்பாட்டாளரின் பகிர்வோடு இந்நாவல் விரிகிறது. ஒருவகையில் இது பேரா. வறீதையாவின் தன் வரலாற்றின் பொதிவும் கூட.

சில பக்கங்களை படித்து முடித்தபின் , புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கண்களை மூடி அமைதியாகிவிட்டேன். கொஞ்ச நேரம். கழித்தபின்புதான் அடுத்தடுத்து வாசிக்க முடிந்தது. எனது நண்பரும் கூட நேற்று , இரண்டாம் அத்தியாயத்தைத் தாண்டி படிக்க மனசுவரவில்லை என்று கூறினார்.

இவற்றை வைத்து , மனதைப் பாதிக்கும் நாவல் என்றோ , மெல்லிய மனசுக்காரர்கள் படிக்கக் கூடாதென்றோ தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஒளியின் அருமை இருளில்தான் தெரியும் என்பது போலத்தான் அந்த அத்தியாயங்களும்.

தனது மகளின் மனச்சிதைவை முதன் முதலில் கண்டறிந்த தருணம் , அதுவரை வெளிப்பட்ட அறிகுறிகள் , அவற்றை முன்னரே சரியாகக் கையாளாதுவிட்ட குற்றவுணர்ச்சி , சிகிச்சை முறை , பின்னர் மறுவாழ்வு மையத்தின் கவனிப்பு ,அவருடனான ஆக்கபூர்வ நேரங்கழிப்பு உள்ளிட்டவற்றோடு , தாம் கவனித்த இன்ன பின் மனநலப் பிறழ்வு உடைய , தாம் வாழ்வில் நேரடியாக கவனித்த சிலரது வாழ்க்கை அனுபவங்களையும் உள்ளே இழைத்துத் தருகிறார்.

முடிவில் அம்மாவின் வழியே தமது கடந்தகாலச் சிடுக்குகளை கூர்நோக்கி,அதை உணர்வுபொதிந்த எழுத்துகளாக வடித்ததன் மூலம் மாபெரும் விடுதலையை அடைகிறார்.

அறிவியலும் ஊடகமும் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இச்சூழலிலும் கூட , அறிவியல் கற்பித்து வந்த தானும் மனநலக்கோளாறை சரியாக அணுகவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறார். நோயாளியின் சிக்கலை விட , அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களின் துயரத்தைப் பெருக்குவது சமூகத்தின் ‘தீட்டு’ப் பார்வைதான். ஒதுக்குதல் , புறக்கணித்தல் , புண்படுத்தல் – இவைதான் மனநலச் சிக்கலுக்குள்ளாகும் மனிதர்களுக்கு சமூகம் வழங்கும் ‘சிகிச்சை’. இதிலிருந்து மாறுபட்டு மீள , அர்த்தமுள்ள புரிதல்கள் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதை பல வாழ்ந்த உதாரணங்களின் வழியே வாசகர்களுக்கு கோடிட்டுக் காட்டுகிறார்.

முன்னாள் மாணவன் ஜெயன் , ஃபெலிக்ஸ் , சொத்தை இழந்த 45 வயது நபர் , ஜேம்ஸ் , மரியான் நபர்களின் வாழ்வியல் அனுபவங்களின் வழியே , நாம் கவனிக்கத் தவறிய புள்ளிகளை வரைபடமாய்க் காட்டுகிறார்.

நிற்காது ஏதோ ஒன்றின் பின்னே ஓடியாடி வாழ்ந்து கொண்டிருக்கும் பொருள் வழி புகழீட்டும் வாழ்வு குறித்த கற்பிதங்களை , அதன் விழுமியங்களை வேறொரு கோணத்தில் மறுவிசாரணை செய்கிறது இந்நூல்.

23 இணைக்குரோமோசோம்களில் குடிகொண்டிருக்கும் 1,20,000 மரபணுக்களில் ஏதேனும் ஒன்றில் பிறழ்வு ஏற்படுவதன் வாயிலாக ஏற்படுகிற இவ்வகை மனச்சிதைவிற்கு யார் காரணம் ? அப்படியான தாக்கம் ஏற்பட்டபின் அதை கையாளத்தெரியாமல் தீவிரத்தை முடுக்கிவிடுபவர்கள் நம்மில் எத்தனை பேர் ? என்ன ஏதுவென்றே தெரியாக கையறுநிலையில் நாவலாசிரியருக்கு ஏற்பட்ட உணர்வுநிலை விவரணை கொடூரமானது.

“என் சுமையைக் கொஞ்சநேரம் உங்கள் தோளில் இறக்கி வைத்துக் கொள்ளட்டுமா ?” என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது. மற்றவனின் கவலைகளைத் தன் தோளில் தூக்கிச் சுமப்பது என்பது யாருடைய பிணத்தையோ நம் வீட்டில் வைத்துச் சாமக் காவல் காப்பது போல” என்கிற நூலாசிரியரின் உள்ளக் கொந்தளிப்புதான் நாம் அறிந்த மனித உலகின் உன்னதமான , முதன்மைத் தேவை என்ன என்பதை தெளிவாக வரையறுத்தும் விடுகிறது. இதைத்தானே பேரா.மாடசாமியும் தமது “உம்” கொட்டுதல் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்.

தழுதழுக்க வைக்கும் அம்மாவின் அத்தியாயங்களுக்குப் பிறகு வருகிற இறுதி அத்தியாயத்தில் அப்பாவும் – மகளும் நோய் குறித்து உரையாடுகிற இலகுவான உரையாடல்கள் மிக ஆழமானவை ; நம்பிக்கையானவை.

ஒரு அப்பாவாக , தமது மகளைக் கையாளுவதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அசாதாரண சூழல் மற்றும் உளவிளைவுகளை மடைமாற்றம் செய்ய எழுத்தும் , சமூக செயல்பாடும் பெருந்துணை புரிந்திருப்பதை உள்வாங்கிக் கொள்ள முடிகிற அதே சூழலில் , ஜூலியாவின் அம்மா எப்படி இதை எதிர்கொண்டிருக்கிறார் என்பதை யூகித்துப் பார்க்கவே மனம் கனக்கிறது.

இருப்பினும் இந்நூல் , நமது சுமையை இறக்கி வைக்க உதவும். சில நேரங்களில் நாம் சுமைதாங்கிக் கற்களாக செயல்பட வேண்டியதன் பொறுப்பை உணர்த்தும். பொதுச்சமூகத்தின்

பரிகாசத்தால் , சிரித்தவாறே கடந்துசெல்கிற பிறழ்நடத்தை மாந்தர்களை வேறொரு கண் கொண்டு காண வைக்கும். நமது வட்டத்தில் இப்படியான பாதிப்பை நாம் கண்டறிந்தால் , அவற்றை எப்படி மனம்தளராது கையளலாம் என்பதற்கான நம்பிக்கையை விதைக்கும்.

எங்கு நடப்பட்டோம், எப்படி நடப்பட்டோம் என்பதை விட , நடப்பட்ட இடத்தில் வேரூன்றி எப்படி அச்சூழலுக்குப் பலன் கொடுத்தோம் என்பதுதானே வாழ்க்கைக்குச் செய்யும் உயரிய மரியாதை.

அப்படியான மரியாதைக்குரியவர்களாக தமது வாசகர்களை மாற்றுகிற வகையில் இந்நூல் மிக மிக முக்கியமான நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *