மார்க்சியம் குறித்த நூல்கள் உலகம் முழுவதும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. மார்க்ஸ் மண்ணில் பிறந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால்,அவரது சிந்தனைகள் இன்னமும் மனிதகுலத்திற்குவழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அந்தத் தத்துவத்தை பயில முயல்பவர்களுக்கான துவக்க நிலை நூல்கள் நிரம்ப தேவைப்படுகின்றன. அந்தத் தேவையைபூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான நூல்கள் வெளிவந்து இருந்தபோதும், தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியுள்ள ‘மார்க்சியம் என்றால் என்ன? – ஒரு தொடக்கக் கையேடு’என்ற இந்த நூல் தனித்துவம் வாய்ந்தது. இந்திய விடுதலை குறித்து அவர் எழுதிய ‘விடுதலைத் தழும்புகள்’ என்ற நூலும், சோவியத் புரட்சி குறித்து எழுதிய‘புரட்சிப் பெருநதி’ என்ற நூலும் பெரும் வாசகர்கள் கவனத்தைப் பெற்றது. எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு நியாயம் வழங்குகிற முறையில் முழுமையாகக் கற்றறிந்து, உள்வாங்கி, எளிமையாக எழுதும் பாங்குடையவர் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம்.இடுப்பில் இருக்கிற குழந்தைக்கு சோறு ஊட்டுகிற தாய், கதைகள் கூறி, குழந்தையின் போக்கிலேயே சென்று, அமுதூட்டுவது போல மார்க்சியம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ள விரும்பி வரும் இளைய சமூகத்தை மனதில் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார்.
தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான மேற்கோள்களை பொருத்தமாக எடுத்து கையாண்டிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். மார்க்சியம் என்பது அந்நிய விதை. அது இந்த மண்ணில் முளைக்காது என்போருக்கு விடையளிக்கிற பணியை இந்நூல்செய்கிறது. பொருள் முதல்வாத, கருத்துமுதல்வாத தத்துவப் போர் உலகம் முழுவதும் நடந்து கொண்டேயிருக்கிறது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. லோகாயதவாதம், சார்வாகம், பூதவாதம், பகுத்தறிவு, நாத்திகவாதம் என பல்வேறு வடிவங்களில் வழங்கி வந்தபொருள் முதல்வாதமே நம் வேர் என்று சுட்டிக் காட்டும் அதே நேரத்தில், காலத்தின் விளைச்சலான தத்துவங்களின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுகிறார். அந்தத் தத்துவங்களை உள்வாங்கி, குறை களைந்து, பூரணத்துவமாக மார்க்சியம் உருவான பின்னணியையும் எளிமையாக எடுத்துரைக்கிறார். முரண்பாடுகள் குறித்து மிக அழகாக விளக்கியுள்ளார். எல்லா முரண்பாடுகளும் நல்லதும், கெட்டதுமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. நேசமுரணும் உண்டு, பகைமுரணும் உண்டு, இயல்பாக எழுகிற முரணும் உண்டு என்பதை முரண்பாடின்றி சொல்லிச்செல்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சின் வாக்கு. ஆனால், தானாய் எதுவும் மாறாது, மாற்றத்தை முன்னேற்றமாக மாற்ற வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்று விளக்கும்போது, வள்ளுவனையும் துணைக்கு அழைத்து விளக்குகிறார்.
மார்க்சியத்தை இந்தியப் பின்னணியோடு விளக்கியுள்ள இந்த நூல், பொதுவுடமை இயக்கத்தில் இணையும் இளைய சமூகத்திற்கு ஓர் அரிச்சுவடியாக அமையும்என்பது திண்ணம்.சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல் மார்க்சியத்தை பயிலவும் முடியாது. நிறைவேற்றவும் முடியாது. அதற்கும் இந்த நூல் துணை நிற்கும். இதுபோல, இன்னும் பல நூல்களை சு.பொ.அகத்தியலிங்கம். எழுத வேண்டும் என்பதே நமது விருப்பம்.
மார்க்சியம் என்றால் என்ன? ஒரு தொடக்க நிலை கையேடு
ஆசிரியர்:சு.பொ.அகத்தியலிங்கம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,சென்னை – 600018
பக்: 136 விலை: ரூ.120 தொலைபேசி: 044-24332924