நூல் அறிமுகம் : அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் : தமிழில் . ராஜசங்கீதனின் : மானுடத்திற்க்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல – சு.பொ.அகத்தியலிங்கம்
நூல் : மானுடத்திற்க்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல
ஆசிரியர் : அய்ஜாஸ் அஹ்மத் – விஜய் பிரசாத் தமிழில் : ராஜசங்கீதன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ₹260.00
தொடர்பு எண் ; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுகிறது…
ஒரு புத்தகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறித்து பேசுவது அசாதாரணமானது. அதுவும் மார்க்சுக்கு பிறகு மோடிவரையிலான தத்துவம் , கோட்பாடு, அரசியல் சார்ந்து உரையாடுவது மிகவும் நுட்பமானதும் ஆழமானதும்கூட. ஆழந்த புலமைமிக்க இருவரின் உரையாடலாக இந்நுல் அமைந்துள்ளது .
ஏற்கனவே இத்துறையில் ஞானம் உள்ளோருக்கு இந்நூல் மறுவாசிப்பாகவும் புத்துணர்வு ஊட்டுவதாகவும் அமையும். புதிய வாசகர் ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து பல செய்திகளை தகவல்களை உள்வாங்கலாம். தெளிவடையலாம்.
சர்வதேச அரசியல் தத்துவப் போக்குகளூடே இலக்கிய கலாச்சாரப் போக்குகளையும் விரவி உரையாடும் இருவரும் மிகவும் பரந்த வாசிப்பும் கூர்ந்த ஞானமும் உடைய செயல்பாட்டாளர்கள். இந்நூலில் அய்ஜாஸ் அஹ்மத் உடன் விஜய் பிரசாத் உரையாடுகிறார் .
அய்ஜாஸ் இந்தியாவில் உத்திரபிரதேசம் முஷாபர் நகரில் 1941 பிறந்து, பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கு குடிபெயர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசித்து, மீண்டும் இந்தியா வந்து இங்கு பல காலம் வசித்துவிட்டு, அமெரிக்காவில் இவ்வாண்டு [2022] மார்ச்சில் தன் இறுதி மூச்சை விட்டவர். உலகின் சிறந்த மார்க்சிய அறிஞராக வலம் வந்தவர். இடது , வலது என எல்லா சார்பு நூல்களையும் தேடித்தேடி வாசித்தவர். மார்க்சியத்தை தொடர்ந்து வந்த பல்வேறு தத்துவக் கூறுகளை விமர்சன நோக்கில் ஆய்ந்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவர். உலகெங்கும் இவரது கட்டுரைகள் அறிவுப் புலத்தில் பெரிதும் கொண்டாடப்படுகின்றன. இந்தியச் சூழல் குறித்து நுட்பமாக பேசியவர். இவை அனைத்தின் சாரத்தையும் இந்நூலில் தரிசிக்கலாம்.
இவரோடு உரையாடிய விஜய் பிரசாத் நல்ல மார்க்சிய அறிஞர். பரந்த வாசிப்புக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர். இதில் அய்ஜாஸை பல கோணங்களில் பேச வைத்துள்ளார் விஜய் பிரசாத். அதன் மூலம் அறிவார்ந்த செய்திகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார். பதினெழு பகுதிகளாக இந்த உரையாடல் நீண்டிருக்கிறது .
“… மொத்த உருது இலக்கியத்திலும் எங்கேயும் புனைவாகக்கூட , இலக்கியத்துவமாகக்கூட, பாகிஸ்தான் உருவாக்கத்துக்கான கொண்டாட்டத்தைப் பார்க்க முடியாது .அது எப்போதுமே துயராகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கும்.” என அய்ஜாஸ் சொன்னதை வாசித்த போது ஒரு நிமிடம் உறைந்து போனேன். எவ்வளவு ஆழமான அவதானிப்பு .
“ ஒரு கட்டத்தில் லெனினைப் பற்றிய உருது மொழி எழுத்துகள் என்னை அலுப்பு கொள்ளச் செய்தன. எனவே மாஸ்கோவிலிருந்து வந்த லெனின் எழுத்துகளை நான் அமர்ந்து திருத்திச் சரியான உருது வார்த்தைகளில் எழுதினேன்..” என்கிற அய்ஜாஸ் அஹ்மத் அனுபவம் நம் அனுபவமாகவே உள்ளது .
“ பிராமணியம் மரபாக இல்லாமல் ஆசாரமாக நெஞ்சில் இருக்கிறது” என்கிற சுவிரா ஜெய்ஸ்வாலுடன் உடன்படும் அய்ஜாஜ் சொன்ன ஒரு செய்தி முக்கியமானது,
“பாகிஸ்தானில் அதிக காலத்துக்கு வாழ்ந்துவிட்டு, அற்புதமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதாலும் – காந்தி, நேரு போன்றோர் இருப்பதாலும் -மதச்சார்பின்மை முதலிய அம்சங்கள் இருப்பதாலும் ஆர்வத்துடன் இங்கு வந்த எனக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கீழ்ப்படியும் தன்மையைப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னால் உடனடியாக சாதியுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடிந்தது. இங்கு உயர்சாதியினர் பேசுவதுபோல் பாகிஸ்தானில் பேசினால் அடிவாங்குவார்கள். பாகிஸ்தானில் உங்கள் பாலினத்தை வைத்தே அடையாளம் கொள்வீர்கள். உங்கள் வர்க்கம், சாதி, மதத்தைக் கொண்டு அல்ல. இரண்டு ஆண்கள் சந்தித்தால் அணைத்துக் கொள்வார்கள். தில்லிக்கு வந்த பிறகு பல உயர்சாதிக் குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு சாதியில் நம்பிக்கைகூட இருக்காது. இடதுசாரிகளாகக் கூட இருப்பார்கள். ஆனால் நண்பர்கள் மத்தியில்கூட இடைவெளியையைக் கடைப்பிடிப்பார்கள். அனைப்பது என்பது வரவேற்புக்கான விஷயமாக அவர்களுக்கு இருப்பதில்லை . அத்தகையத் தன்மையை என்னால் உடனடியாக சாதியுடன் பொருத்த முடிந்தது.”
இதைத் தொடர்ந்து அம்பேத்கரைப் பற்றிப் பேசும்போது ஓரிடத்தில், “ இந்தியாவில் வர்க்கப் புரட்சி ஏற்பட சாதி ஒழிப்பு முன் நிபந்தனை எனத் தெரிந்துகொண்டேன்” என்கிறார்.
தோழர் இஎம்எஸ், பி.டி.ரணதிவே ஆகியோர் சாதியைப் பற்றி பேசியதை பாராட்டுகிறபோதே, கட்சி நடவடிக்கைகளில் அது பிரதிபலிக்கவில்லை என தன் ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார். இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஒப்புக் கொள்கிற அவர் இன்னும் போக வேண்டியது நெடுந்தொலைவு எனச் சுட்டிக்காட்டுகிறார் .
லெனினுக்கு பிறகான உலகில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலில் ஏற்பட்ட மாற்றங்களும் குழப்பங்களும் ,பின் நவீனத்துவம், கட்டுடைத்தல் , கிராம்ஸியின் பார்வை, ஐரோப்பாவில் உருவான பல்வேறு போக்குகள் குறித்து இந்நூல் நெடுக விமர்சனபூர்வமாக ஆழமாக உரையாடுகிறார் அய்ஜாஸ். சோவியத் யூனியன் தகர்வு , சீனாவின் தற்போதைய போக்கு உள்ளிட்ட எதுவும் அவர் பார்வையிலிருந்து தப்பவில்லை .
இன்னும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவம் இருப்பதும் , இன்னும் அமெரிக்க கரன்சி உலகில் தனி இடம் பெற்றிருப்பதும் , உலகெங்கும் கலாச்சாரத்தில் அமெரிக்க ஆதிக்கம் நீடிப்பதும் , ராணுவம் சார்ந்த அமெரிக்க பொருளாதாரம், உட்பட பலவற்றை சுட்டி அமெரிக்க வல்லரசின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மிகச் சரியாகச் சொல்லுகிறார் .
ஏகாதிபத்தியத்தை குறைத்து மதிப்பிடும் போக்கை விமர்சிக்கிறார் ; அதே நேரம் காலகதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இணைத்தே பார்க்கிறார். சோவியத் யூனியன் தகர்வு ,சீனாவின் செயல்பாடுகள் இவற்றின் பின்னணியில் ஒருங்கிணைந்த பார்வையை நோக்கி நகர்த்துகிறார் .
நவதாராளமயத்துக்கும் உலகெங்கும் வலதுசாரி அரசியல் மேலோங்குவதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும் ,இடதுசாரிகளின் தோல்வியையும் தயக்கமின்றி விவாதிக்கிறார். இங்கு சங்பரிவாரின் எழுச்சியையும் மோடியின் வருகையையும் இதனோடு இணைத்துப் பார்த்தும் இதன் தனிக் கூறுகளை உரசிப்பார்த்தும் அய்ஜாஸ் சொல்லும் கருத்துகள் ஆழ்ந்து பரிசீலிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவையே !
கேரளாவில் ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் இடதுசாரிகளுக்கு தந்த தோல்வியையும் சுட்டுகிறார் . இதைப் படித்த போது என்னுள் எழுந்த கேள்வி ; மதவாதம் சூழ்ந்துள்ள நாட்டில் ஒரு மாநில அரசு மதச்சார்ப்பற்று செயல்படுவதில் உள்ள சங்கடங்களும் சவால்களும் முக்கியமானவை . “ஓரடி முன்னே இரடி பின்னே” என்கிற லெனின் சொற்களைத்தான் இங்கும் சொல்ல வேண்டுமோ ?
“பிராமண முறையிலோ சமூக சமத்துவத்துக்கான கொள்கையே கிடையாது . சாதிய முறையின் அடுக்குகள் அத்தகைய கொள்கை இருக்கும் வாய்ப்பையே இல்லாமலாக்கி விடுகிறது” என்கிற அய்ஜாஸ் தன் உரையாடல் போக்கில் அம்பேத்கரின் சரியான பார்வைகளை சுட்டிக்காட்டுகிறார் . மேலும் , “இந்து மதவாதம் குறிப்பிட்ட வலிமையுடன் எதிர்க்கப்பட வேண்டும் என்கிற நேருவின் வாதத்தை நான் ஏற்கிறேன்.” என்கிறார் அய்ஜாஸ் .
மொழிப் பிரச்சனை தவிர்த்து வேறெதுக்கும் தமிழகம் பக்கமோ தென் இந்தியா பக்கமோ தன் பார்வையை பொதுவாக அய்ஜாஸும் திருப்பவில்லை . பொதுவாய் தில்லியில் மையம் கொள்கிற அறிவுப் புலமை வட இந்தியாவை மட்டுமே மையம் கொண்டே இருப்பது தற்செயலானதா ? இடதுசாரிகளுக்கும் இந்த விபத்து ஏற்படுகிறதே என்கிற காத்திரமான கேள்வி என்னுள் எழுகிறது .
ஜோதிபாசுவைபிரதமராக முன் மொழிந்த விவகாரத்தை அவர் நோக்கில் பேசவும் தவறவில்லை . பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து பின் வெளிவந்த தான் அதன் பிறகு வேறு எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினராகவில்லை எனினும் அவர்களோடு நெருக்கமாக இருந்தேன் . சிபிஎம் ,சிபிஐ இருபக்கமும் தனக்கு நண்பர்கள் உண்டு என்பவர் ஜோதிபாசு விவாதத்துக்கு பிறகு சம்மந்தமில்லாமல் தானும் கோஷ்டிவாதத்தில் இழுத்துவிடப்பட்டது குறித்து வருந்துகிறார் .
இறுதியாக . “ இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் உங்களை அதன் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறது.” என்கிற விஜய் பிரசாத்தின் கூற்றை அங்கீகரித்து அய்ஜாஸ் சொல்கிறார் ,“ நிச்சயமாக .அதுதான் சரியும்கூட .எனக்கு அது ஆச்சரியம் அளிக்கவில்லை . ஏனெனில் அது எனக்கு சந்தோஷம் தரக்கூடிய உண்மை.”
இந்த நூலில் பல்வேறு அறிஞர்களின் பெயர்களும் ,அவர்களின் வாதமும் விமர்சனபூர்வமாக இடம் பெற்றுள்ளது .நான் அவற்றை எல்லாம் இந்த நூலறிமுகத்தில் சொல்லி புதிய வாசகர்களை மிரட்ட விரும்பவில்லை .அவை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளே ! ஆகவே ,இந்த புத்தகத்தை ஒருவர் தனியே வாசிப்பதைவிட கூட்டாக வாசிப்பதும் விவாதிப்பதுமே பயன் தருவதாக அமையும் என பரிந்துரைக்கிறேன்.
கடினமான நூலை தமிழாக்கம் செய்த ராஜசங்கீதனுக்கு வாழ்த்துகள் .
சு.பொ.அகத்தியலிங்கம்.