Thu Pa Parameshwari Poems து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்




கரை கடந்த கனவு
***************************
அக்கரையில் நீ..
இக்கரையில் நான்..
பதித்த பாதம் நனைத்து
வைத்த கை‌ தொட்டு
நன்னீர் உவர்ப்பாகி
அடர்ந்த காதலின் ஆழத்தை
உப்புத் தண்ணீர் வழியே அனுப்பியது..
நன்னீர் காதல் நீராய்
பாதம் தடவ
காதல் ஸ்பரிசத்தை
உணர்ந்தது உயிர்..
பாதங்களினூடே ஒட்டமெடுத்த உவர்ப்பேறிய நன்னீர்
பற்பல தடங்களைக் கடந்து
பல்வேறு இடர்களைக் கடத்தி
உச்சி தொட சிலிர்த்துப் போனேன்..

வாழ்க்கைப் பாடம்
**************************
இதுவும் எதுவும்
இவையும் எவையும்
யாவும் யாவையும்
வெறும்
பிம்பங்கள்.
கானல் நீர்
தொடுவானம்..
இன்று குளிர்ச்சியை ஊட்டி
குதூகலிக்க வைக்கும் எவையும்
நாளை தீப்பிழம்புகளைப் பருகப் பரிமாறும்…
கொண்டுண்ண பின்
உயிருடன்….
கொன்றுண்டு விடும்..
வாழ்க்கைப் பாடம்
எப்போதும்…
பட்டபின்பே புரியும்..

இயற்கைக் கோலாகலம்
********************************
அழகின் அழகே.
வானில் மேகம்
மௌனமாய்க் கடக்க
ஆதவன் இதம்
கூடுதலாய்த் தகிக்க
வெப்பமுண்ட
ஆகாயத் தாமரை
தீயாய் எரிந்து
சாம்பலாய்ப் பூக்க
சோவென்றொரு மழை
சட்டென
முத்தமிட்டு நனைக்க
அங்கேயொரு
தாரகை தகிக்கிறாள்
வானவில்லாய் மின்னுகிறாள்
வண்ணங்களால்
வரைகிறாள்
காதல் கடிதமொன்றை..
அழகாய்
ஓவியமாய்
சிற்பமாய்
நர்த்தனமாய்
நாதமாய்
யாழிசையாய்
மொழிகிறாள் தன் மனதை..
என்ன …என்பதைப் போல
விண்வெளியே ஆரவார
சப்தமெழுப்ப
மலர்கிறாள் காதலாய்
“நானுன்னைக் காதல் செய்கின்றேன்…”

அப்பப்பா….
காதல் மேடை அங்கே
இடி முழங்க
மின்னல் வெட்ட
அண்ட சராசமே
ஆனந்தத்தாண்டவம் ஆட
ஆம்.,
இயற்கையின் காதல் கோலாகலம்..

சுற்றிலும் உண்மை
****************************
சுற்றிலும் உண்மையா..
உண்மையைச் சுற்றியே நானா..
சுற்றியுள்ள உண்மையைச்
சுற்றிச் சுற்றிச் சுமந்து
சுற்றிய காலங்கள்
இன்றும் என்னைச் சுற்றியே
உண்மையாய்க் கிடக்கின்றன..
எத்தனைச் சுற்றுச் சுற்றினாலும்
உண்மை என்னைச் சுற்றிட மறப்பதில்லை
என்பதே சுற்றியுள்ள உண்மை.

கூடு
******
கூட்டை விடுத்துக் கூட்டம் பிரிந்தாலும்..
கூடின்றி வாழ்ந்திடத் தான்
முடியுமா கூட்டத்தால்

கூடின்றி உயிருண்டோ இப்புவியில்
கூடின்றி உறவு கூட்டம் தான் உண்டோ இப்பெருவாழ்வில்

கூட்டை விட்டு உயிர் பிரிந்தாலும்
கூடற்ற உயிர்க்கு மதிப்பேது
இவ்வுலகில்..

கூட்டற்ற பரதேசியும்
கூடுள்ள சுகவாசியும்
கூடித் திளைக்கும் கூடே
இப்பூலோகம்….

வாழ் கூடு இன்றி நீ வாழ்ந்தால்
உடற் கூடு இருந்தும்
உயிர்க் கூடற்றதுப் போல
ஊடாடிக் கிடக்கும் எப்போதும்..

என்‌தேவதையும் மகளும்
*******************************
அதே….
மச்சத்தின் மிச்ச விழிகள்..
வாழ்க்கையேற்றம் சுட்டும் படர்நுதல்..
காரிருள் கரிய நாசித்துவாரம்
இருபுறமும் விரிந்து
நிலைக்கும் மூய்தல்

மெல்லிய மேலுதடு..
அதையொட்டிய..
அழகாய்
வரைந்த ஓவியமாய்‌ ..
ரோஜா இதழாய்
அடர் கீழுதடு..
உதட்டின் கீழ்
ஒளி வட்டமாய்
முகவாய்க் குழி..

தாய்மையின்‌ நிமித்தத்தை
முத்தங்களால் பருகத் துடிக்கும் இருகன்னங்கள்..
மீண்டும் மீண்டும் கொஞ்சத் தூண்டும்
அதே முகாந்திரம்…

கண் மூக்கு காது மெய் கூடி உருவெடுத்த
கவிதையின் கவிதாயினி அவள்..
அறிவுச் செறிவுற்று
முழுவீச்சாய்…
வடிவெடுத்து உருவகித்த
அறிவாயினி
அறிதாயினி
அவள்…

மொழி வீச்சில் சிக்கனம்
சிந்தனைச் செறிவின் பொற்கணம்
பேச்சில் சாதூர்யம்
புன்சிரிப்பில் மாதுர்யம்..
நடையின்‌ பிரதானம்
செயலில் அதே நிதானம்

கொஞ்சும் பைங்கிளி
புவி மிஞ்சும் பூங்கொடி
கண்களைச் சூறையாடியவள்
உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட
உயிர் மகள்..

மொத்தத்தில்..
நான் ..
கண்டு
ரசித்து..
களித்து..
மகிழ்ந்து..
கொண்டாடி..
பெருமிதம் பூத்த
அதே சாயல்..
என் மன்னவனின்..
உளம்கவர் மணாளனின்
மறுவடிவமவள்…
என் வாழ்வை ஒளிகூட்டிய…
குட்டி தேவதையும் மகளும்..

இசையாய் இதமாய் நீ…
*****************************
அன்று..
நாளொன்றும் உன் மெல்லிசை
விழிக்க வைத்தன என் விடியலை
என் இதயக் கூட்டில் எப்போதும் ஒலிக்கும்
உன் குயிலோசையின் குரலிசை
ஒலித்தப் பின்பே புலர்ந்து நிற்கும் பேரானந்தத்தின் பொழுதுகள்…
இன்று ..
உனது சாயல் எனது மீது
போர்த்திக் கல்வியே
பொன்முலாம் பூசிய சிலையாய்
மெருகேறி மிளிர்கின்றது..
நீதானே..
நீதானே..
என் பாடலாய் மலர்கிறாய்
நீதானே..
நீதானே..
அதில் வரிகளாய் ஒளிர்கிறாய்.
நீதானே..
நீதானே..
வடிவங்களாய் வடிவெடுத்தாய்
நீதானே..
நீதானே..
அதில் சொற்களைச் சூடிநிற்கிறாய்..
நீதானே..
நீதானே..
சிந்தனையைச் சிலையாக்கினாய்
நீதானே…
நீதானே..
அதில் வண்ணமும் தீட்டினாய்
நீயின்றி நான் பாட
வேறு காரணம் உண்டா..
நீயாக நான் மாற
நீயே தான் காரணம்..
நீயின்றி நான் தனித்திருக்க
நீயே தான் என் கீர்த்தனம்..
மீச்சிறு பிம்பமாய்
ராகமாய்
தாளமாய்
கானமாய்
பாவமாய்
நீக்கமற நிறைந்திருக்கும் நீயே
என்..
இதயம் தழுவும் இனிமையே…