இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76 – சுகந்தி நாடார்
2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி
அலிபாபா நிறுவனம் இயற்கை சூழலுக்காக செய்யும் வேலைகளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இயற்கையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமாக புத்தாக்க எரிசக்திகளைக் கொண்டுவருவதும் ஏற்கனவே சூழவியலில் உள்ள கரிமல வாயுவை சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்திலும் முதலீடு செய்து சுற்றுப்புறத்தையும் சூழ்வியலையும் சுத்தமாக வைத்திருக்கும் வகையில் மக்களின் நடத்தையை, குணாதிசியத்தை மாற்றப் போவதாகவும் சீன அலிபாபா நிறுவனம் அறிவித்து உள்ளது. இதில் இருந்து இரு செய்திகளை நாம் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று 2030 ஒரு முக்கியமான ஆண்டு. இரண்டாவது ஒரு நிறுவனத்தால் மனிதர்களின் குணாதிசியத்தை எளிதில் மாற்ற இயலும். அதற்குத் தேவையான அணுகு முறைகளும் தரவுகளும் அவர்களிடம் ஏற்கெனவே இருக்கின்றது. இந்த இரண்டில் இரண்டாவது கூறப்படும் விஷயம் நாம் அனைவரும் அன்றாடம் அனுபவித்து வருகின்றோம். இன்று நம் ஒவ்வொரு வேலையும் தொழில்நுட்பங்கள் என்ன சொல்கின்றதோ அதை அடிப்படையாக நம் தினப்படி வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது.
ஆனால் முதலாவது செய்தி அது என்ன 2030? அந்த ஆண்டில் என்ன அப்படி முக்கியத்துவம்?
2030ம் ஆண்டு இன்று உலக அரசின் செயல்திட்டங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகத்திலும் பங்குசந்தையிலும் பொருளாதார வல்லுநர்களாலும் ஒரு தாரக மந்திரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1990களிலிருந்தே ஐநாசபை மனித எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அப்போதைய புள்ளி விவரங்களில் இருந்து தெரிந்து கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தது. அதன் விளைவாக நீடித்து இருக்கக் கூடிய வளர்ச்சிக் குறிக்கோள்கள் என்று ஒரு பதினேழு குறிக்கோள்களை ஐநா சபைக் கொண்டு வந்தது. நம் பின்வரும் தலைமுறையினரின் எதிர்காலத் தேவைகளுக்கு எந்த ஒரு பங்கமும் வராமல், இன்றையத் தேவைகளை சந்திக்கும் ஒரு வளர்ச்சி தான் நீடித்து நிற்கக் கூடிய வளர்ச்சியின் சாராம்சம்.
ஏழ்மையில்லா நிலை, பசிக் கொடுமையின்மை, ஆரோக்கியம், வளமான கல்வி, பாலின வேறுபாடு களைவு, தூய்மையான நீரும் சுகாதாரமும், மலிவு விலையில் சுத்தமான ஆற்றல், தனிமனிதனுக்கு நல்ல வேலை, பொருளாதார வளர்ச்சி, சமநிலை, வளங்கள், நீடித்து இருக்கும்படியான பயன்பாட்டைக் கொண்ட சமுதாயம், பொறுப்புணர்வோடு கலந்த நுகர்வும் உற்பத்தியும் சூழவியல் செயல்பாடு நீர்வாழ் உயிரினப்பாதுகாப்பு, நிலவாழ் உயிரினப்பாதுகாப்பு, அமைதி, நீதி இவ்விரண்டையும் மையமாக் கொண்ட சமுதாய அமைப்பு, இவ்வனைத்து குறிக்கோள்களையும் அடைய கூட்டுறவு முயற்சி ஆகிய 17 குறிக்கோள்களைக் ஐநாசபை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐநாவின் திட்டப்படி இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டியக் காலக்கெடுதான் 2030ம் ஆண்டு.
மேற்கூறிய குறிக்கோள்களை அடைய ஒவ்வோரு நாடும் சட்டங்கள் இயற்றினாலும் பல வியாபாரர நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி சிறந்த நிலையில் இருந்தால் ஒழிய இந்தக் குறிக்கோள்களை அடையமுடியாது. இன்று நிறுவனங்களின் செயல்பாடு எப்படி இருக்கின்றது?
நுகர்வோர் மிண்ணனு பொருட்காட்சி (consumer electronic show- CES 2022) ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்வேகாஸ் நகரில் தற்போது நடந்துகொண்டு இருக்கின்றது. நுகர்வோர் தொழில்நுட்ப அமைப்பு ஒன்று 1967ல் நிறுவப்பட்டு அதன் மூலம் பாமர மக்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் மின்ணனு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணைந்து மூன்று நாள் பொருட்காட்சியை ஆண்டாண்டுகளாய் நடத்தி வருகின்றது. நுகர்வோர் வாழ்வின் அனைத்து பரிணாமங்களின் இன்று கணினி இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இந்தப் பொருட்காட்சி இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களை அலசி ஆராய்ந்தால் நமது எதிர்காலம் எப்படி இருக்கும்? முக்கியமாக வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பிற்கு நாம் நிச்சயம் வரலாம்.
செயற்கை நுண்ணறிவிலிருந்து முப்பரிமாண அச்சிடுதல் போக்குவரத்து , உடல்நலம், மனநலம், பந்தய விளையாட்டுகள், கேளிக்கைகள், சாதூரியமான நகரம், சாதூரியமான வீடு, விண்வெளி பாளச்சங்கித் தொழில்நுட்பம், மிண்னியியல் செலாவணி என்று பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பொருட்காட்சியில் ஈடுபட்டுள்ளன. கல்வித் தொழில்நுட்பத்திற்கு என்று தனிப்பிரிவு இல்லை என்றாலும் தொய்விக்கும் பொழுது போக்கு IMMERSIVE Entertainment தொழில்நுட்பத்தின் மெய்நிகர் தொழில்நுட்பங்களும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பமும் கல்வி சார்ந்த மின்ணனு சாதனங்களுக்கு அடிப்படையாக அமையும் என்று கொள்ளலாம்.
நேரத்திற்கும் இருப்பிடத்திற்கும் தகுந்தார் போல விளம்பரங்களைக் காட்டும் LG நிறுவனத்தின் CLO இயந்திர மனிதன், “organic light-emitting diode என்பதின் சுருக்கமான OLED தொலைக்காட்சிப் பெட்டிகள். தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் BMW மின்சார மகிழுந்து, OMN ipod எனப்படும் சகல வசதிகளும் செயற்கை நுண்ணறிவு இயந்திர வேலையாளும் கொண்ட உல்லாச போக்குவரத்து வாகனம், எந்த ஒரு தளத்தையும் தொலைக்காட்சியாக மாற்றக் கூடிய தொழில்நுட்பம், விளையாடுக்களுக்கெனவே பயன்படும் மடிக்கணினி என்று மின்னணு சாதனங்களின் ஊர்வலம் தொழில்நுட்ப ஆர்வலர்களையும் நிபுணர்களையும் இணைத்து நடக்கின்றது. இவ்வாறாக மொத்தம் 2200 நிறுவனங்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் இந்தப் பொருட்காட்சியின் இணையதளம் தெரிவிக்கின்றது.
இவற்றைப் பார்க்கும்போது, எந்த மாதிரி தொழில்நுட்பம் வருங்காலத்தில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் என்று நம்மால் யோசிக்கமுடியும். ஆனால் அதைவிட முக்கியமாக இந்த சாதனங்கள் எல்லாமே தற்போது பொழுதுபோக்கு அம்சங்களின் ஒரு பகுதியாக உள்ளன என்பதும் நமக்குத் தெரிகின்றது. இன்றைய தலைமுறை நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றையும் புத்தாக்க சிந்தைனையால் தொழில்நுட்பத்தின் உதவியோடு மெருகு ஏற்றிக் கொண்டிருக்கின்றது.
2015ல் ஆப்பிள் நிறுவனம் கணினியையே கைக்கடிகாராமாக்கியது ஒருவர் பயன்படுத்தும் கணினி திறன்பேசி அனைத்தும் அக்கடிகாரத்துடன் இணைந்து செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை இலகுவானதாக மாற்றுவதாக விளம்பரம் செய்து ஆப்பிள் நிறுவனம் அக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது. இன்று உலகம் முழுவதும் ஆப்பிள் ஆண்ட்ரைடு, சாம்சங் தளங்களுக்கு ஏற்ப மூன்று வித திறன் கடிகாரங்களே சந்தையில் உள்ளன. ஆனால் இன்றளவும் ஏறத்தாழ 12.3 million திறன் கடிகாரங்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த திறன் கடிகாரங்களை ஒப்பிடும் போது, கணினி சாராத பாரம்பரியக் கைகடிகாரங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இருபதிற்கும் மேல் உள்ளன. இந்தியாவில் மட்டும் 6 கடிகார நிறுவனங்கள் உள்ளன. இக்கடிகாரங்களில் நடக்கும் தொழில்நுட்ப மாற்றத்தைத்தான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
இந்த நிறுவனங்களில் கார்ட்டியர் கைக்கெடிகார நிறுவனம் அறிமுகப்படுத்திய மாதிரியில் 1917 வருட முகப்புக் கொண்டு, சூரிய சக்தியில் இயங்கும் மின்கலம் கொண்ட கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. சூரிய ஒளியில் இயங்கும் கைக்கடிகாரங்கள் முன்பே இருந்தாலும், இப்போது கடிகார எண்களில் உள்ளத் துளை வழியாகவும் சூரிய ஒளி சென்று மின்கலத்தை உயிரூட்டும் வகையில் இந்தக் கைக்கடிகாரத்தின் கட்டுமானம் உள்ளது. அதே போல கைகடிகாரத்தின் பட்டையுமே ஆப்பிள் பழத் தோலிலிருந்து பெறபப்ட்ட மூலவளம் 40% பயன் படுத்தபப்டுகின்றது. என்ன ஒரு புத்தாக்க சிந்தனை. இயற்கை வளங்களை காப்பதில் என்ன ஒரு அக்கறை.
Yankodesign என்ற நிறுவனம் நாம் சிறுவயதில் பயன்படுத்திய walkman போன்றத் தோற்றத்தில் bluetooth ஒலிப்பெருக்கிகளாக அறிமுகப்படுத்தியுள்ளன. அதேபோல இன்றைய திறன் பேசியை tape recorderல் இட்டு பாடவைப்பது போன்ற walkman ஒலிப்பெருக்கிகளும் வந்துள்ளன. சில ஒலிப்பெருக்கிகளில் திறன்பேசி மின்னேற்றம் செய்வதற்கும் வழி செய்யபட்டுள்ளது. வாழ்க்கை என்ற வட்டம் இதுதான் நம் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னதை அவர்களின் தலைமுறையினர் ஆசையோடு அரவணைக்கின்றனர். 2015ல் 18 வயதில் இருந்த சிறுவன் இப்போதுதான் இதுவரை அனுபவிக்காத ஒன்றைப் புதுமை என்று எண்ணி தன் வாழ்க்கை முறையில் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
இத்தலைமுறையின் குழந்தைகளுக்கு எந்த மாதிரிக் கல்வியை நாம் வழங்க முடியும்? அதற்குத் தயாராக நாம் என்ன செய்ய வேண்டும்? ஐநாவின் குறிக்கோள்களை அடைய அரசும் நிறுவனங்களும் செயல்பட்டால் போதுமா கல்வி என்ற அமைப்பு என்ன செய்ய வேண்டி இருக்கிறது?
இயற்கை வளங்களைக் காப்பது, மனித வளங்களைக் காப்பது, மருத்துவம் என்று பல துறைகளில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நுகர்வோருக்கு அடையாளம் காட்டும் கலாச்சாரம், நுகர்வோரின் குணாதிசியத்தை மாற்றும் ஒரு வழியாகத்தான் தோன்றுகின்றது. மனித வளமும் தொழில்நுட்பமும் மோதிக் கொள்ளும் நாள் வருமா? அப்படிப்பட்ட ஒரு நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? கை கொடுக்குமா கல்வி 4.0? யோசிக்கலாம்.
இயற்கை வளங்களில்லா உலகில் கல்வி என்பது என்ன?
நாம் இன்று திறன்பேசியை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? ஒரு தொலைபேசியாக, ஒரு கடிகாரமாக, ஒரு நாள் காட்டியாக, ஒரு விலாசப்புத்தகமாக, ஒரு ஆலோசகராக, செய்தித்தாளாக, நம் தொழில்சார்ந்த கணினியாக என்று பலவிதங்களில் பயன்படுத்துகின்றோம். இப்படி எல்லா வழிகளிலும் தகவல்களைப் பெறும் கருவியாக இருக்கும் ஒரு சாதனம் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக மாறிவிடுகின்றது. நாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மின்சாரப் பற்றாக்குறையால் அவதிப்பட்டவர்கள்தான். ஆனால் இப்போது மின்சாரம் தடைபட்டாலும் நம் வீட்டில் முக்கிய மின்சார சாதனங்கள் தற்காலிகமாக வேலை செய்ய வேண்டிய உபகரணங்களை வாங்கி வைத்து இருக்கின்றோம்.
கருவிகளைப் பயன்படுத்த நமது பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. ஒருவருடைய சராசரி நுண்ணறிவு குறைய ஆரம்பிக்கின்றது. நம் வீடுகளில் துவைப்பதற்கு என்று கல் இருக்கும். அவற்றின் இடத்தை சலவை இயந்திரங்களுக்கு நாம் கொடுத்துவிட்டோம். அம்மி உரல் போல துவைக்கும் கல்லும் கூட ஒரு கலாச்சாரத்தின் அடையாளாமாக மாறிவிட்டது.
ஆனாலும் இன்றைய தமிழ்நாட்டில், மின்சார சலவை இயந்திரம் வேலை செய்யாவிட்டால் நம்மில் பலருக்கு நம் துணியை துவைக்கத்தெரியும். அதே அம்மியில் அரைக்கத் தெரியுமா? ஆட்டுக்கல்லில் ஆட்டத் தெரியுமா ஏன்றால்? நம்மில் பலரின் பதில் என்னவாக இருக்கும்?
சுகாதாரமான உடை அணிவதும் நாவுக்கு ருசியாக உணவு உன்பதும் எந்த ஒரு மனிதனின் அடிப்படைத்தேவை. அவற்றைக் கருவிகள் கொண்டு செய்யப்பழகும்போது நாம் நம் உடல்பயிற்சியை மட்டுமல்ல மற்ற ஒரு சில திறன்களையும் இழந்து விடுகின்றோம். மின் இயந்திரங்களை சமையலில் பயன்படுத்தும்போது, நம் வேலை எளிதாகிறது. அதை அடுத்து பொடிகளை வாங்கி சமைக்கின்றோம். அதுவும் குளிர்சாதனப்பெட்டி என்ற இயந்திரம் வந்து விட்டதால் பல வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறைதான் சமையல், அதை அடுத்து இப்போது வலையொளியில் பார்த்து சமைக்கின்றோம். பாரம்பரிய கிராமக் கலைகளைத் தொலைத்து போல தொலைந்து போன ஒன்று சமையல்கலை.
எங்கள் வீட்டில் என் குழந்தைகள் நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போது நடந்த கதை ஒன்றைக் கேளுங்கள். நான் அமெரிக்கா வந்ததிலிருந்து மின் இயந்திரத்தில்தான் துணி துவைப்பது. என் குழந்தைகள் இந்தியா வரும்போது மட்டுமே, துவைக்கும் கல்லைப் பார்த்து இருக்கின்றார்கள். அதில் துணி துவைப்பதை ஆச்சரியமாகப் பார்த்து இருக்கின்றார்கள்.
சரி கதைக்கு வருவோம். என் இரண்டாவது பெண் எட்டாம்வகுப்பு படிக்கும்போது அவர்களின் கோடைக்காலக் கல்வியாக மற்ற நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் மூன்று வாரங்களுக்கு உலக சுற்றுப்பயணம் செல்ல முடிவுசெய்தாள். சரி பயணத்திற்குத் தயாராகும் வேளையில் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது, என்னவென்றால் அமெரிக்கா போல இல்லாமல் மற்ற எல்லா நாடுகளிலும் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் அதிகம். ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக யாரிடம் தனி வாகனங்கள் இருப்பதில்லை. பொது வாகனங்களில் மட்டுமே மற்ற நாடுகளில் பயணிக்க இயலும். அதனால் மாணவர்கள் அவர்களால் கையாளக்கூடிய வகையில் எடை குறைந்த இலகுவான பயணப் பெட்டிகளே எடுத்துவர வேண்டும்.
முடிந்த அளவு ஒருவருக்கு ஒரு பயணப்பெட்டி ஒரு கைப்பை போதும் என்று கூறிவிட்டனர். மூன்று வாரத்திற்கு ஒரேஒரு பெட்டி என்னும்போது தினம் ஒரு ஆடை அணிய இயலாது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வந்தாலே போதுமானது. எடுத்துவரும் துணிகளும் எளிதில் துவைத்து அலசிக் காயப்போடும் வகையில் இருக்கவேண்டும் அவர்கள் தங்கும் இடங்களில் அவர் அவர் துணியை அவர்களேத் துவைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் பயணம் எளிதாக இருக்கும் என்று சொல்லி விட்டனர்.
அடுத்தது என்ன? கையால் துவைக்க சோப்புக் கட்டியைத் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்கு சென்றாலும் சலவை இயந்திரத்திற்கு போடும் சோப்புத்தான் கிடைத்தது. வேறு வழியின்றி அந்த சோப்புத்தூளை வைத்தே துணி துவைக்க சொல்லிக் கொடுக்கவேண்டும். பயணத்தில் இருப்பவர்களாயிற்றே கூடவே வாளியையா கொடுத்து அனுப்பமுடியும். எட்டாவது படிக்கும் பெண் இயந்திரத்தில் அழகாக தன் துணியை துவைத்து எடுத்து வைத்துவிடுவாள், ஆனால் கையால் துவைக்க வேண்டுமேயானால்?
பயண ஏற்பாட்டாளர்கள் சொல்லித் தந்தபடி ஆரம்பித்தது துணி துவைக்கும் பயிற்சி. துணியைக் கையால் துவைப்பது எப்படி என்று பட்டியலிட்டு ஒரு காகிதத்தையும் கொடுத்து விட்டார்கள்.
அவள் செய்ய செய்ய நான் அவளை மேற்பார்வையிட வேண்டும் (நான் வேறு ஆசிரியர்கள் சொல்வதை பிறழாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அடிக்கடி புத்தி மதி கூறி இருக்கின்றேன். என் சொல்லைக் கேட்கவா போகிறாள்?. உதடுகளை கடித்து என் வாயை மூடி அவள் செய்வதைக் கவனிக்க ஆரம்பித்தேன். முதலில் நாம் கை கழுவி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணியை ஊறவைத்து பின் அதிலேயே அலச வேண்டும்.
தொட்டியில் நீரை நிரப்பி, சோப்புத்தூளை போடும்வரை இருவருக்குமே ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அதில் துணியை போட்டு ஊறவைக்க வேன்டும் என்ற நிலையில் எங்கள் இருவருக்குமே குமட்டிக் கொண்டு வந்தது. சரி வாய் கொப்பளிக்கும் தொட்டியில் துணி துவைப்பது என்பது முடியாத காரியம் என்று தெரிந்துபோனது. வீட்டில் இருக்கும் தொட்டியிலேயே இவ்வளவு அருவருப்பாக இருக்கும்போது பொதுத்தொட்டியில் துணியை துவைப்பதா ?
கண்டிப்பாக முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து குளிக்கும்போதே அப்படியே துணியை அலசிக் கொள்வது. அப்படி செய்து இரவில் துணியை குளியல் அறையிலேயே வைத்து விட்டு மறுநாள் காலை சென்று பார்த்தால் துனியிலிருந்து ஒரு வாடை மட்டுமல்ல துணி கொஞ்சம்கூட காயவில்லை ஏன் என்றால் துணியை ஈரம் போகப் பிழிய அவளுக்குத் தெரியவில்லை, துணையைப் பிழியாமலே சொட்ட சொட்ட காயப் போட்டு வந்துவிட்டாள்.
இந்தக் கதையை எதற்குச் சொல்கின்றேன் என்றால், இயந்திரத்தை வைத்து ஒரு செயலைச் செய்யப் பழகிய அவளுக்கு அந்த வேலையை இயந்திரம் இல்லாமல் செய்யத்தெரியவில்லை. அதைவிட அந்த வேலையைச்செய்யும் பொறுமை அவளிடம் இல்லை. ஒரு இயந்திரத்தை இயக்கத் தெரிந்த அறிவைக் கொண்டு மட்டுமே அவளுடைய அன்றாட வாழ்க்கை இன்றும் நடக்கிறது.
இந்த இளம் தலைமுறையினர் பொதுவாக இப்படித்தான் இருக்கின்றனர். கணினிகள் சூழந்து அவர்கள் வாழும் வாழ்க்கை, கணினிகளே அவர்களுடைய வாழ்க்கையின் அத்தியாவசியம் ஆகி விடுகிறது. கருவிகளையே நம்பி வாழும் தலைமுறைக்கு நமக்குப் பிந்தைய தலைமுறையினர் நுண்ணறிவோடு செய்த செயல்கள் ஆச்சிரியத்தைத் தருகின்றன. அவை ஒவ்வோன்றையும் அற்புதமாக நினைக்கின்றனர். அதனாலேயே இன்றைய அவர்களுடைய வாழ்க்கையில் புத்தாக்கம் என்பது நுண்ணறிவு சார்ந்து செய்யப்படும் செயல்கள்தான். நாளையை தலைமுறை நேற்றைய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கருவி என்ற ஒரு பெரியதிரை இடையில் இருக்கின்றதே!
அப்படி யோசித்தால் நம்முடையக் கல்வி என்பது கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது மட்டுமா? இல்லையே? கருவி என்பது மனிதன் செய்யும் வேலைக்கு உதவி புரிய வந்தது தானே? இந்தக் கேள்விகளைப் பார்க்கும்போது இயற்கை சார்ந்த வாழ்க்கைதான் சிறந்தது என்ற முடிவிற்கு நாம் வரலாம். ஆனால் நம்முடைய சுமை தோளாக இருக்க இயற்கை உயிரோடு இருக்குமா? இயற்கையைவிட மேலாக நம் முண்ணோரின் அனுபவ அறிவிற்கும் நுண்ணறிவிற்குமே 2030ல் பற்றாக்குறை இருக்குமே?
நாம் இன்றிலிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்தான்/ ஆனால் அது மட்டும் போதுமா? நமது நுண்ணறிவை, கடந்த 200 ஆண்டுகால பட்டறிவை எப்படிக் காப்பது?
உலகில் ஐயாயிரம் வகை தவளைகள் இருக்கின்றனவாம். ஆனால் தவளைகளின் தொகை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. காரணம் அசுத்தமாகிப்போன நீர் நிலைகள். இப்படி எத்தனையோ நாம் கைக்காட்டிக் கொண்டே போகலாம். நம்முடைய வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தவேண்டும் அதே நேரம் செழிப்பான மண்வளம், நீர்வளம் மாசற்ற காற்றும் நம் அடிப்படைத் தேவையல்லவா? ஐநாசபை 2030க்கான திட்டம் கொரானா பெருந்தொற்றினால் ஆட்டம் கண்டிருந்தாலும் அரசாங்கத்தைப்போல, சமுதாயப் பொறுப்புள்ள நிறுவனங்களைப்போல கல்வியாளர்களாகிய நமக்கும் ஐநாவின் பதினேழு குறிக்கோள்களைப் பின்பற்றி ஒரு நல்லுலகைப் படைக்க வேண்டாமா?
ஒவ்வோரு நாடும் தன் தனித்தன்மை, பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைக் கணினி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுத்தால் போதுமா?
நாம் இன்று என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?
அதற்குத் தான் கல்வி 4.0. இத்தனை வாரங்களில் கல்வி 4.0ன் தேவைக்கான காரணிகளைப் பலவாறு பார்த்தோம். அடுத்து கல்வி 4.0 என்ன என்பதைப் பார்ப்போம். அதை இன்றே நாம் நம் கல்வி முறையில் எப்படிப் பயன்படுத்துவது என்றும் காணலாம். உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்:
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 72 (தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளும் கல்வியும்) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 73(கல்வி ஏழ்மை) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்