நூல்: ஏவாளின் ஏழு மகள்கள் ஆசிரியர்: பிரையன் சைக்ஸ் | தமிழில்: டாக்டர். வி. அமலன் ஸ்டேன்லி வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 375 விலை: ரூ. 375 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/evalin-ezhu-magalgal/
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி பிரையன் சைக்ஸ் எழதிய இந்த புத்தகம் தமிழில் டாக்டர் வி.அமலன் ஸ்டேன்லி அவர்கள் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவியல் ஆவணம். டிஎன்ஏ எனப்படும் மரபணு ஆய்வு அறிஞரான ஆசிரியரின் மனித குலத்தின் மூதாயை கண்டறியும் முயற்சியை விருவருப்பாக ஒரு மர்ம நாவலைப்போல எழுதியுள்ளார். முதலில் ஐரோப்பியர்களின் மூதாயை கண்டறியும் முயற்சியில் பசிபிக் கடலில் சிறு புள்ளிகளைப்போல் உள்ள தீவுகள் உட்பட ஐரோப்பா முழுவதும் பயணித்து டிஎன்ஏ மூலக்கூறுகளை திரட்டுகிறார் ஆசிரியர். மைட்டோகான்ரிய டிஎன்ஏ நம் தாய்வழி மூலத்தை உள்ளடக்கியுள்ளது.
இந்த டிஎன்ஏ க்கள் மைனஸ் 70 டிகிரி உறைகுளிரில் வைக்கப்பட வேண்டும். சற்று வெப்பநிலை அதிகரித்தாலும் அதனை குப்பையில் போட வேண்டிவரும். பல ஆண்டுகள் கடும் உழைப்பில் திரட்டிய டிஎன்ஏக்களை பகுத்தாய்கிறார். இறுதியில் அவற்றை ஏழு கொத்துகளாக பகுக்கிண்கிறார். ஒட்டு மொத்த ஐரோப்பியர்களின் மூதாயை ‘ஏவாள்’ என்றழைக்கிறார். இந்த ஏழு கொத்துக்களை ஏவாளின் ஏழு மகள்கள் என்று அழைக்கிறார்.
அந்த ஏழு கொத்துக்களும் ஏழு குலங்கள். அவற்றின் மூதாய்களை உருசுலா,எக்சினா,ஹெலினா, வேள்டா, தாரா, காத்ரினா மற்றும் ஜாஸ்மின் என்ற கற்பனை பெயர்களால் அழைக்கிறார். இவர்கள் முறையே 45,000, 25000,20000, 17000,15000,10000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் வெவ்வேறு இடங்களில் தோன்றியவர்கள்.
இவர்கள்தான் ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்களின் மூத்த தாய்மார்கள். இந்த ஆய்வை வெற்றிகரமாக நிறுவியபின் மனித குலத்தின் மூதாயை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார். அந்த மனித குலத்தின் ஏவாள் ஆப்ரிக்காவில் எத்தியோப்பியாவில் பிறந்து நம் அனைவருக்குமான மூத்த பாட்டியாக கண்டறிகிறார். ஒவ்வொரு பெண்ணும் ஒரு குலத்தை உருவாக்குகிறார். வலியோடு பெற்றெடுக்கும் குழந்தைகளை பாசத்தால் ஒன்றிணைக்கிறாள். மனித நேயத்தால் ஒரு குலத்தை கட்டமைக்கிறாள். ஆனால் ஒரு ஆணின் ‘ஒய்’ குரோமசோம் ஆண்மையைத்தான் கட்டமைக்கிறது. வரலாற்றில் நாம் காணும் ஆண் மைய குலம் அனைத்தும் செல்வம் மற்றும் அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தாய் வழிச்சமூகம் அமைந்திருந்தால் சாதி மத பேதமின்றி அன்பால் மனித நேயத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும். நம் அனைவரின் மூதாயை மனித குலத்தின் ஏவாளை கண்டறிந்த மன நிறைவில் நூலாசிரியர் தன் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் பக்கத்திலிருந்த ஒரு ஆடிடோரியத்தில் இவர் கண்டறிந்த ஏவாளின் ஏழு மகள்கள் வழி வந்த மக்களுக்கு மருந்து தயாரிக்கும் உரிமையை பேடன்ட் போடும் கலந்தாய்வில் மருந்து கம்பெனிகளின் நிர்வாகிகள் தீவரமாக ஈடுபட்டிருந்தனர் என ஆசிரியர் நூலை முடிக்கிறார்.
நூல்: ஏவாளின் ஏழு மகள்கள் ஆசிரியர்: பிரையன் சைக்ஸ் | தமிழில்: டாக்டர். வி. அமலன் ஸ்டேன்லி வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 375 விலை: ரூ. 375 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/evalin-ezhu-magalgal/
மனிதகுல வரலாற்றை தாயின் கொடி வழி (மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ) மூலம் சொல்லும் ஓர் அற்புத அறிவியல் ஆவணம் தான் இந்த நூல். ஏவாளின் ஏழு மகள்கள் என புத்தகத்தின் பெயர் சூட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக இப்புத்தகம் பைபிளில் குறிப்பிடப்பட்ட ஆதாம் ஏவாளின் வரலாறு நமக்கு சொல்கிறது என யாரும் கருதிட வேண்டாம். உலகத்தில் உள்ள மிகப் பெரிய மதமான கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடு (ஹிப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள்) அடிப்படையில் கடவுளின் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாள் என்கிற இருவரும் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டதாகவும், அதற்கு கடவுள் தனது உருவத்தையே கொடுத்ததாகவும் எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்து மதத்தில் மனிதன் பிரம்மாவின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திலிருந்து பிறந்ததாக இந்து மதத்தின் இதிகாசங்கள், வேதங்கள் கூறுகின்றன. இதனை அறிவியல் எப்படி ஆதாரப்பூர்வமாக மறுக்கிறது என்பதை இந்நூல் தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டுகிறது என நான் நம்புகிறேன். மேலும் இந்நூல் மனிதகுல வரலாற்றை எந்தவித புனைவும் இன்றி மரபணுவியல் ஆராய்ச்சி மூலமே நமக்கு எடுத்துக் கூறுகிறது.
முதலில் நாம் இந்நூலில் ஆசிரியரை பற்றி தெரிந்து கொள்வோம். இந்நூலின் ஆசிரியர் பிரையன் சைக்ஸ் பிரிட்டிஷ் மரபணுவில் நிபுணத்துவம் பெற்ற முக்கியமான ஒரு அறிவியல் பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் ஆவார். இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மரபணுவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் தொல் படிமங்களாக இருந்த மனித மற்றும் விலங்கினங்களின் எலும்புகளில் இருந்து அதன் டிஎன்ஏவை பிரித்து பகுப்பாய்வு செய்து அதன் காலத்தை கணக்கீடு செய்வதில் வல்லவர். 32 மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற இந்நூலை தமிழில் நச்சியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் அமலன் ஸ்டான்லி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இப்போது நாம் புத்தகத்திற்குள் வருவோம்.. இந்தப் புத்தகம் ஒரு ஆதி ஆப்பிரிக்க தாயான ஏவாளின் வழிவந்த 7 மரபணு சகோதரிகளின் குலங்கள் அதாவது பரம்பரைகள் எவ்வாறு 7 கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் மனித வரலாற்றை அதிக அறிவியலாகும், கொஞ்சம் கதையாகவும் நாம் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.
23 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் முதல் 13 பகுதி முழுக்க முழுக்க அறிவியலின் விளக்க பக்கங்களாகும், அதனைத் தொடர்ந்த பகுதிகள் கொஞ்சம் கதைகளாகவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. டார்செட்டில் பனி மனிதனின் உறவினர் இதன் முதல் தலைப்பில் துவங்கும் புத்தகத்தில் இருந்து, 1991ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் (இத்தாலி) ஒரு பனியில் உறைந்த மனிதனை மலையேற்ற தம்பதியினர் எரிக்கா மற்றும் ஹெல்மெட் சைமன் கண்டறிந்தனர். அந்த பனி மனிதனின் மரபணுவை ஆராய்ந்து அதன் காலத்தை கணக்கிட ஆசிரியர் பிரையன் சைக்ஸ் வரவழைக்கப்பட்டார். கார்கன் ஆய்வின் மூலம் அதில் சுமார் 5000 முதல் 5300 ஆண்டுகள் பழமையானது என்பது கண்டறியப்பட்டது. மேலும் அப்பணி மனிதனின் டிஎன்ஏவை பிரித்து நவீன மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அது ஒரு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஆசிரியரோடு ஒத்துப் போகிறது. அது எப்படி ஒப்பீடு செய்யப்பட்டது என்றால் அப்பணி மனிதனின் தாயினுடைய மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ தகவல் வாழையடி வாழையாக அப்பெண்மணியின் டிஎன்ஏவில் கடத்தப்பட்டு உள்ளது. அதுவரை எலும்புக்கூடு சம்பந்தப்பட்ட ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபேக்டா என்னும் நோயின் பரம்பரை குறித்து ஆராய்ந்து வந்த அவர், நமது எலும்புகளில் உள்ள கொலாஜனை உருவாக்கும் மரபணுக்களில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது என்பதை அவர் கண்டறிந்தார். எப்போதும் இறந்தவரின் உடலிலிருந்து கொலாஜெனின் கரிம அளவைக் கொண்டே வயது அளவிடப்படுகிறது. ஆகவே அத்தகைய கொல்லாஜன் எனும் புரதம் உருவாக காரணமாக இருக்கும் டிஎன்ஏவை ஆராய்வதன் மூலம் மனித குல வரலாற்றை அறிய முடியும் என ஆசிரியர் நம்பினார். அதன் அடிப்படையிலேயே அவர் இந்த ஆராய்ச்சியின் உள் நுழைந்தார்.
அடுத்ததாக டிஎன்ஏ என்றால் என்ன, அது நம் உடலை என்ன செய்கிறது ? என்பதை ஆசிரியர் நமக்கு தெரிவிக்க இரண்டாவது தலைப்பில் ஏராளமான டிஎன்ஏ குறித்த அறிவியல் விளக்கங்களை குறிப்பிட்டுள்ளார். கிமு 335 இல் அரிஸ்டாட்டில் பிறக்கப் போகும் குழந்தை காண மூல வடிவத்தை அக்குழந்தையின் தந்தையே வழங்குகிறார். குழந்தை பிறந்த பிறகு அதனை பாதுகாப்பதற்கு தாயிற்கு சொற்ப பங்கு உள்ளது என தெரிவித்தார். மேற்கத்திய நாகரிகத்தின் அப்போதைய ஆண் மைய சமூகத்தில் அக்கோட்பாடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் எப்படி அந்த பெண்ணிற்கு பெண் குழந்தை உருவாகிறது என்கிற கேள்வி எழுந்தபோது பெண்ணின் கருவில் எந்த ஒரு தலையீடும் இல்லாமல் இருந்தால் தந்தையாரைப் போலவே அச்சு அசலாக இருக்கும் குழந்தைகள் பிறக்கும் என்றார். அதன் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் உருவான கூட்டு நுண்ணோக்கியின் மூலம் ஆணின் விந்தணுவில் உள்ள ஹோமுன்கிளஸ் எனும் மனித பொருள் பெண்ணின் கருவில் நுழைந்து குழந்தையை உருவாக்குகிறது என்பதை அந்தோணிவான் லீவன்ஹாக் கண்டறிந்தார். அதன் பின்னர் வந்த ஹிப்போகிரேட்டஸ் ஒரு குழந்தையின் பிறப்பில் ஆணைவிட பெண்ணுக்கே பங்களிப்பு அதிகம் என நிறுவ முயற்சித்தார். இனப்பெருக்கத்திற்கு பின்பு பிறக்கும் குழந்தை தாய் தந்தை என இருவரின் பண்புகளையும் பெற்றிருக்கும் என தெரிவித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனிதனின் உடலில் உள்ள குரோமோசோமின் இரட்டை ஜோடி சுருள் வடிவம் கேம்பிரிட்ஜில் பணியாற்றிய இளம் அறிவியலாளர்களான ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோரால் கண்டறியப்பட்டது.
மனிதனின் ரத்த வகையிலிருந்து மரபணுக்களுக்கு, ஐரோப்பாவின் ஆரம்ப காலத்தில் அதாவது கிபி 1628 பெண்ணின் பிரசவ காலத்தில் பெண்ணுக்கு ஏராளமான இரத்தம் வெளியேறியது. அதிலிருந்து பெண்ணை காப்பாற்றவும், அப்போது இனங்களுக்கு இடையே நடந்த போரில் காயமடைந்து உயிருக்கு போராடும் நபர்களை காப்பாற்றும் நோக்கில் சிகிச்சைக்காக ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்கு நேரடியாக செலுத்தியதால் மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு கிட்டத்தட்ட 270 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், அதாவது 1900 ஆண்டில் கார்ல் லேண்ட்ஸ்டீனர் மனிதனில் உள்ள இரத்தத்தின் வகையை ஏ, பி, ஏபி, ஓ ஆகிய நான்கு வகைகளாக பிரித்தார். அதன் பின்னர் நமது ரத்தத்தில் உள்ள டிஎன்ஏ கிளையை ஆராய்ந்து மனித சமூகத்தின் இடம்பெயர்வு மரபியல் ரீதியாக ஓரளவு நிரூபிக்கப்பட்டு இருந்தது.
நான்காவது தலைப்பான சிறப்பு தகவலாளர்கள்: இந்த உலகில் பிறந்த மனித இனத்தில் ஆண், பெண் என இருவருக்கும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. அந்த 22 குரோமோசோம்களில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி இருக்கும். அதில் வேறுபடும் 23வது குரோமோசோமே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிக்கும். அதாவது 23வது குரோமோசோமில் x-y ஜோடி ஆணையும், x-x ஜோடி பெண்ணையும் குறிக்கும். நமது உடலில் உள்ள லட்சக்கணக்கான குரோமோசோமில் இரண்டு வகையான டி என் ஏ க்கள் உள்ளன. அதில் ஒன்று மற்றொன்று உட்கரு டிஎன்ஏ மற்றொன்று மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ இதில் மைட்டோகாண்டிரியா டிஎன்ஏ உடலில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்து ஏடிபி(ATP)ஐ அதாவது அடினோசின் ட்ரை பாஸ்பேட் என்னும் புரதத்தை உருவாக்குகிறது. குரோமோசோமில் புதைந்திருக்கும் ட்ரைஆக்சிப்பரோ நியூக்ளிக் ஆசிட் (DNA) நமது செல்லில் செயல்பாடுகளுக்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் அடுத்த அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தப்படுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் விந்தணுவில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவின் வால் பகுதியில் இருந்து ஒரு ராக்கெட் போல் செயற்கைக்கோளை சுமந்து சென்று பின்னர் தனது ஆற்றலை இழந்து முறிந்து போகிறது. ஆகையால் கருவினுள் நுழையும் விந்தணு அங்கு உள்ள புரதத்தில் கரைந்து கருவினை உருவாக்குகிறது. ஆகவே பிறக்கப் போகும் ஆண், பெண் என்ற இரண்டு குழந்தைகளும் தாயின் மைட்டோகாண்ட்ரியா தகவல்களை அப்படியே வருகின்றன. பின்னர் அந்த டிஎன்ஏ அவரிடமிருந்து அவருடைய குழந்தைக்கு, பின்னர் அக்குழந்தையில் இருந்து அப்பெண்ணின் பேத்திக்கும் அப்படியே சென்று சேர்கிறது. இப்படியே மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததியினருக்கு கடத்தப்படுகிறது.
மனிதனின் உட்கரு டிஎன்ஏ விட மைட்டோகாண்ட்ரியா ஏனெனில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை ஆசிரியர் கண்டறிகிறார். அதனடிப்படையில் அவர் ஐரோப்பிய மக்களின் இன்றைய மரபியல் சங்கிலி ஒரு பெண்ணின் டிஎன்ஏ-விலிருந்து வந்ததாக நிறுவுகிறார். அதற்கு அவர் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு 1918 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இரவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் நிக்கோலாஸ் 2 என்கிற ஜார் மன்னன், அவரது மனைவி அலெக்ஸாண்ட்ரா மற்றும் அவரது ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் அவருடைய வேலையாட்களின் சடலங்களை ஆசிரியர் ஆராயும்போது அவர்களது எலும்பிலிருந்து ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் தாயை சரியாக அடையாளம் காணப்பட்டது. காரணம் அவர்களது மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ ஒரே மாதிரியாக இருந்தது. இதில் ஜார் மன்னனின் டிஎன்ஏ ஆசிரியர் பிரையன் சைக்ஸ் டிஎன்ஏ -வுடன் ஒத்துப் போனது என்று அவர் தனது முடிவை அறிவிக்கிறார்.
அடுத்ததாக ஆசிரியர் மனிதனின் தோற்றம் குறித்து ஏற்கனவே உள்ள தரவுகளை ஆராய்கிறார், அதனடிப்படையில் மனித இனம் நான்கு வகை குரங்கு இனத்திலிருந்து வந்திருக்கிறது. அவை ஹோமோ ஹபிலிஸ், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெய்டல்பேர்ஜெனிசிஸ், ஹோமோ நியன்டர்தால் ஆகியவை அடங்கும். இதில் இருந்து பரிமாண வளர்ச்சி பெற்று தான் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் அதி தீவிர சிந்தனை கொண்ட ஓர் இனம் மற்ற இனங்களை அடக்கி தனது வாழ்வை தக்க வைத்திருக்கிறது. அந்த இனமே ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் எனும் நாம். மேலும் இதுவரை கிடைத்த பழமையான தொல் மனித படிமங்களில் இருந்து ஆராயப்பட்டது. அதன் முடிவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த நமது மூதாதையர்கள் அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பின்னர் ஆசிரியர் நமது தாய் வழி டிஎன்ஏ மூலம் நமது வழித்தடத்தில் பாதைகளை சரியாக கணித்து அவர்களது காலங்களையும் டிஎன்ஏ-வில் வெளிப்பட்ட பிறழ்வுகள் மூலம் கண்டறிகிறார்.
பின்னர் அந்த டிஎன்ஏ-க்கள் ஏற்படும் பிறழ்வுகள் அடிப்படையில் ஒவ்வொரு சந்ததியினரும் ஆசிரியர் பிரையன் சைக்ஸ் ஆல் கண்டறியப்பட்டது. அதனைத்தான் ஆசிரியர் இங்கு ஏழு பரம்பரையாக பிரித்து வழங்கியுள்ளார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த மனித சமூகத்தின் வரலாற்றை அந்த மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ தாய் வழியே அப்படியே பயணிக்கிறது என்பதோடு, கூடவே நம்மையும் அக்கூட்டத்தில் ஒரு அழைத்து செல்கிறார் ஆசிரியர்.
ஏவாளின் ஏழு மகள்கள்:
உர்சுலா (Ursula) – 45,000 years ago
ஜீனியா (Xenia) – 25,000 years ago
ஹெலினா (Helena) – 20,000 years ago
வெல்டா (Velda) – 17,000 years ago
தாரா (Tara) – 17,000 years ago
கேத்ரின் (Katrine) – 15,000 years ago
ஜாஸ்மின் (Jasmine) – 10,000 years ago
அதாவது ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் வசித்த மனித இனம் மெல்ல மெல்ல இடம்பெயர்ந்து கிமு 45,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிற்கு இடம்பெறுகிறது. அங்கு பிறக்கும் பெண்ணின் டிஎன்ஏவின் ஏற்பட்ட பிறழ்வு உர்சுலா என்கிற பெண் வழியே ஒரு குலத்தை சுமார் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்குகிறது. அப்போதைய மனித இனம் வேட்டையாடி உணவை உட்கொண்டு வந்தது. அவர்கள் மிகக் கூர்மையான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தி காட்டெருமைகளையும் மான்களையும் வேட்டையாடி தங்களது குழுவிற்கு உணவாகக் கொடுக்கும். வேட்டையாட செல்லும் ஆண்கள் வீடுகளுக்கு வராத வசந்த காலத்தில் உணவு சேகரிப்பு ஈடுபடும் பெண்கள் கிழங்கு, பறவைகளின் முட்டைகள், மீன்கள் காளான்கள் ஆகியவையே அந்த குழுவில் உணவாக இருக்கும். அதன் பின்னர் வரும் இலையுதிர் காலத்தில் அவர்கள் காடுகளில் பதுங்கி காட்டெருமைகள் வேட்டையாடி இறைச்சிகளை பகிர்ந்து கொண்டு வந்தனர். தற்போதைய இத்தாலியின் பர்னசாஸ் மலையில் பிறந்த உர்சுலாவின் டிஎன்ஏ நவீன ஐரோப்பியர்கள் உடன் அது 11% பொருந்தியுள்ளது.
உர்சுலா இறந்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஜீனியா இப்போதைய கிழக்கு ரஷ்யாவில் ஒரு வட்டவடிவ குடிசையில் பிறந்தால். கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளில் மனித சமூகம் தொழில்நுட்பங்களில் கொஞ்சம் முன்னேறிய சமூகமாக மாறி இருந்தது. அதாவது குகைகளில் இருந்து மனிதன் சமவெளி பகுதியில் குடிசைகள் அமைத்து வசிக்க துவங்கினான். அதே போல அவர்களுடைய ஆயுதங்களையும் சிறிய தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. கூரிய கல் ஈட்டி எலும்பு அல்லது மரத்தினால் செய்யப்பட்ட கைப்பிடி கொண்ட ஆயுதங்கள் செய்யப்பட்டிருந்தன. நவீன ஐரோப்பியர்களுடன் இவரது டிஎன்ஏ 6 சதவீதம் பொருந்தி உள்ளது.
ஜீனியா இறந்து சுமார் 5,000 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதைய கிழக்கு பிரான்சில் உள்ள மலைக் குகையில் பிறந்தாள் ஹெலினா. 5000 ஆண்டுகளில் மனித சமூகம் மேலும் சில தொழில்நுட்பங்களைக் கொண்டு நவீன மையமாக எலும்பு மற்றும் மரங்களால் ஆன கூறிய வீச்சில் ஈட்டியை கண்டறிந்துள்ளனர். மேலும் இவர்கள் அப்போதே குளிரிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள உடைகளை உருவாக்கும் நுட்பம் அங்கே மேம்பட்டு இருந்தது. இவர்களது டிஎன்ஏ தற்போதைய நவீன ஐரோப்பியர்கள் உடன் 46 சதவீதம் பொருந்தி உள்ளது.
ஹெலினா இருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வடக்கு ஸ்பெயினில் உள்ள காண்டாபிரியா மலை அருகே உள்ள சமவெளிப் பகுதியில் வெல்டா பிறந்தார். அங்கே மக்கள் நெருக்கம் அதிகமானதால் உணவுத்தட்டுப்பாடு காரணமாக குழுக்களுக்கிடையே மோதல் உருவாகியது. ஆயினும் அவர்களிடையே குகையில் ஓவியம் வரைதல் யானையின் தந்தங்கள் ஆபரணங்கள் செய்தல் உள்ளிட்ட கலைத் திறன் மேம்பாடு அடைந்து இருந்தது. வேட்டையாட செல்லும் ஆண்கள் இலையுதிர் காலத்தில் திரும்புகையில் குழுவின் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். அது அக்குழுவின் ஆனால் வெகு விமர்சியாக அனுஷ்டிக்கப்படும். வெல்டாவின் டிஎன்ஏ நவீன ஐரோப்பியர்கள் உடன் 5% ஒத்துப் போகிறது.
வோல்டவின் சம காலத்தைச் சேர்ந்த தாரா மத்திய இத்தாலி பகுதியில் உள்ள மலையில் பிறந்தார். வேட்டையாடி உணவு சேகரிப்பதற்கு மாற்றாக இறைச்சி வீட்டருகே வந்தது. எனினும் குழுவில் ஏற்பட்ட அதிகப்படியான மக்கள் நெருக்கத்தின் காரணமாக அக்கூட்டம் மெது மெதுவே மாற்று உணவினை தேட வேண்டிய அவசியத்தில் தள்ளப்பட்டது. கடல் உணவில் நாட்டம் கொண்டவர்களாக மாறினர். தாராவின் டிஎன்ஏ- வும் நவீன ஐரோப்பியர்கள் உடன் 9% பொருந்தியது.
தாரா இறந்த 2000 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது கிமு 15 ஆயிரம் ஆண்டுகளில் வடக்கு இத்தாலியில் பிறந்தால் கேத்ரின். கேத்ரின் பிறந்த காலகட்டத்தில் அதிகப்படியான வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டத்தின் அளவு குறைந்ததால், ஒரே நேர்கோட்டில் நடந்து இத்தாலியை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதிகப்படியான மக்கள் தொகை காரணமாக இங்கே உள்ள காடுகளில் பல்வேறு இனக்குழுக்கள் வசித்து வந்தனர். உணவிற்காக அவர்கள் மான்களை வேட்டையாட வேண்டியிருந்தது. அப்போது அவர்களது வசிப்பிடம் அருகே ஓநாய் ஒன்று வந்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த ஓநாய் இருக்கு அவளது தந்தை முதன்முதலாக இறைச்சியை கொடுத்து பாசமிகு விலங்காய் மாற்றினார். பின்னர் அந்த விலங்கு அவர்கள் வேட்டைக்குச் செல்லும் போதெல்லாம் உதவி இருக்கிறது. அதன் பிறகு அவர்கள் சமவெளிப் பகுதிக்கு வந்த பிறகு அந்த ஓநாய் அவர்களது குட்டியை மனிதருடன் பழக அனுமதித்திருக்கிறது. அதுவே பின்னாளில் நன்றியுடன் மிக்க நாயாக மாறி இருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். நவீன ஐரோப்பியர்களின் 6 சதவீதம் பேர் கேத்ரின் -இன் குலத்தில் பிறந்து உள்ளனர்.
முந்தைய ஆறு பெண்களின் வாழ்க்கை கஷ்டங்கள் மற்றும் முக்கிய நிச்சயமற்ற தன்மைகளை ஜாஸ்மின் உடன் ஒப்பிடும்போது அவளது வாழ்க்கை மிகவும் எளிதாக இருந்தது. ஏனெனில் கேத்ரின் இறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் குடிசைகளில் (கிராமமாக) வசிக்க ஆரம்பித்திருக்கிறான். இவர்களது முகாம் கடந்த ஆறு குலப் பெண்களின் முகாம்களை விட பெரிதாக உள்ளது. அவர்கள் வேட்டையாடிய மானின் இறைச்சியை பல மாதங்கள் பாதுகாத்து வைத்துக் உண்டு வந்திருக்கிறார்கள். மேலும் பெண்கள் காடுகளிலிருந்து ஒக் மற்றும் பிஸ்தா கொட்டைகளை சேகரித்து அதனை விற்று தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார்கள். பின்னர் அவர்கள் காடுகளில் இருந்து சில பொருட்களின் விலையை கைப்பிடியளவு எடுத்து வந்து சமவெளிப்பகுதியில் பயிரிட்டு விவசாயம் செய்ய ஆரம்பிக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் விவசாயத்திற்காக ஆறுகளில் கரையோரம் உள்ள சமவெளிப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஏழு மகள்களில் ஏழாவது மகளான ஜாஸ்மின் உடன் மட்டுமே நம்மை பொருத்தி பார்க்க முடியும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் ஜாஸ்மின் பிறந்தது பாரசீக வளைகுடா அருகே என்பதால்தான் அவரை நம்முடன் பொருத்திப் பார்க்க முடியும் என நம்புகிறேன். நவீன ஐரோப்பியர்கள் உடன் இவரது டிஎன்ஏ 17% பொருந்துகிறது.
அற்புதமான அறிவியல் புத்தகம் அனைவரும் இப்புத்தகத்தை வாங்கி வாசித்து மனிதகுல வரலாற்றை அறிவியலின் துணை கொண்டு அறிந்திட வேண்டுகிறேன்.
நூல்: ஏவாளின் ஏழு மகள்கள் ஆசிரியர்: பிரையன் சைக்ஸ் | தமிழில்: டாக்டர். வி. அமலன் ஸ்டேன்லி வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 375 விலை: ரூ. 375 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/evalin-ezhu-magalgal/