தங்கேஸ் கவிதைகள்
கவிதை 1
பிறிதொரு வார்த்தை
ஒரு வார்த்தைக்கு மட்டும் பிறிதொரு வார்த்தை என்றும் இல்லை
அதுவும் நேசத்தை வார்த்தையில் சொல்வதென்றால்
ஒரு கடலைக் குடித்து விட்டு வர வேண்டும்
நானோ உதிர்த்த விண்மீன்களை
கைகளில் ஏந்திக்கொள்ளத் துடிப்பேன்
அபலைச் சருகுகளை எடுத்து முகத்தோடு உரச விடுவேன்
கண்திறக்காத குட்டிப் பூனைக்கு
வெண் சங்கில் பாலைப் புகட்டுவேன்
எண்ணங்களில் ஒரு பாலம் கட்ட முடிந்தால் போதும்
நட்டநடு நிசியில் உன் முன் ஒரு முழு அல்லி இலை போல வந்து நிற்பேன்
மார்பில் தலைசாய்த்து லப்டப் இசையை ஸ்வரம் பிரிப்பேன்
உதிரும் மூச்சுகள் கோர்த்து
உனக்காக ஒரு மாலை கட்டுவேன்
பின்பு உனக்காக எழுதப்பட்ட இந்தக் கவிதையை கிழித்துப் போட்டு விட்டு
உன் உள்ளங் கால் பாதத்தில்
ஒரு துளி கண்ணீரை எடுத்து
திருஷ்டிப்பொட்டிட்டு வருவேன்
கவிதை 2
மனமற்ற செம்பருத்தி
அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப் பூனையின் பரவசமாய்
கால்களைச் சுற்றிச் சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து
அள்ளிப்பருக நினைக்கையில்
மேகத்தைச் சபித்தபடி ஊர்ந்து போகும்
கிழவனின் உதடுகளில்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
வனாந்தரத்தின் வாசம்
எலிக்குஞ்சுகளாகத் தொலைக்காட்சியை
மொய்த்துக் கிடக்கும் கண்களில்
ஆதி வேட்டை வெறி அடங்கவேயில்லை
பூனையின் கண்களாய் மினு மினுத்துக்கிடக்கும்
சிறுவர்கள்
விளம்பர இடைவேளைகளில்
ரிமோட்டைக் கைப்பற்றி
பீம் டாம் சகிதம் வலம் வருகிறார்கள்
ஈரத்தை சுமந்தபடி புறப்பட்டு வரும்
சாயங்காலக் காற்றுக்கு
திறந்த படி காத்திருக்கின்றன
மனித உடலங்கள்
மொட்டைமாடியெங்கும்
காயப்போட்ட கொடிகளில் பட படத்து
அடித்துக்கொள்ளும் மெய் இரகசியங்கள்
திருகப்பட்ட கழுத்துகளோடு
காற்றிலலையும் காகங்கள்
இரவின் கீற்றாய் தரையிறங்கி வருகின்றன
ஒரு துளியையும் குடித்து விட இயலாத
விரக்தியில்
சூட்டப்படும் மாங்கல்யமாய் பறந்து வந்த
வெண்புறாக்கள்
சட்டென்று கலைகின்றன
இரவு உருவாகும் புள்ளியில்
மனமற்று ஆடும்
வாசல் செம்பருத்தியில் என்
வாசம் ஒரு கணம் தான் என்றாலும்
போதும் இது
எத்தனையோ தூக்கமற்ற
இரவுகளைக் கரைத்து விடுவதற்கு
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்