நூல் அறிமுகம் : கிருபானந்தனின் குவிகம் 100 – ஜி.பி.சதுர்புஜன்
தற்கால தமிழ் இலக்கிய பஃபே உணவைச் சுவைக்க வாருங்கள் !
நூல்களைப் படிக்கும் பழக்கம் அருகி விட்டது, அதுவும் தமிழ் நூல்களைப் படிப்பவர்களை பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும் என்றெல்லாம் சில காலம் முன்பு வரை தமிழ் பிடிக்கும், தமிழ் படிக்கும் ஆர்வம் கொண்ட தலைமுறையைச் சேர்ந்த நாமெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொண்டும் அங்கலாய்த்துக் கொண்டும் இருந்தோம். “அவ்வளவுதான் இனி தமிழ்”, “நம்மோடு போய்விட்டது இந்தத் தமிழ் படிக்கும் தலைமுறை” என்றெல்லாம் முடிவுரை கூட எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில், தமிழ் படிப்பதில் ஒரு மறுமலர்ச்சியே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று இன்று நாம் சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் பிறந்திருக்கின்றன. புக் டே போன்ற மின்னிதழ்கள் மூலமும், பரவலாக்கப்பட்ட மின் புத்தகங்கள் மூலமும், இணையவழி தமிழ் போற்றும், தமிழ் வளர்க்கும் சந்திப்புகளின் மூலமும் தமிழ் வாசிப்பு பட்டுப் போகாமல், இன்று, மீண்டும் துளிர்த்து, தலைதூக்கி இருக்கிறது. தமிழை ஆராதிக்கும் நமக்கெல்லாம் இது ஓர் இனிமையான தருணம் அன்றோ !
தமிழிலே பலவித நூல்கள் அனுதினமும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. மின் வடிவத்திலும், அச்சு வடிவத்திலும் பல தரப்பட்ட நூல்கள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருக்கின்றன. பழைய மரபு வழி பதிப்பாளர்களோடு போட்டி போட்டுக்கொண்டு பரிசோதனை முயற்சிப் பதிப்பாளர்களும் தமிழ் வாசகர்களுக்கு புதிய ஜன்னல்களைத் திறந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த புதிய வசந்தத்தை வாசகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
குவிகம் என்ற சென்னையைச் சேர்ந்த இலக்கிய அமைப்பு (கிருபானந்தன் மற்றும் சுந்தரராஜன் என்ற இரு இலக்கிய நண்பர்கள் தலைமையேற்று நடத்தி வரும் அமைப்பு ) தமிழ் இலக்கிய உலகில் புதிய தடம் பதித்து வருகிறது. இணைய வழி இலக்கிய சந்திப்புகள், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எழுத்துப் போட்டிகள், மின்னிதழ் வெளியீடு என்று பலதரப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்து கடந்த ஐந்து வருடங்களில் தனக்கென்று தனி இடத்தையும் நல்ல பெயரையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது குவிகம் அமைப்பு.
குவிகம் என்ற மாதாந்திர மின்னிதழ் கிட்டத்தட்ட 100 மாதங்களாக பல்வேறு சுவை மிக்க படைப்புகளைத் தாங்கி வெற்றிகரமாக வெளிவந்து வாசகர்களின் ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று இருக்கிறது. பல வளரும் எழுத்தாளர்களுக்கு இப்படி ஓர் எழுத்துக் களம் அமைத்துக் கொடுத்து அவர்கள் திறமைக்கு ஓர் அங்கீகாரம் அளித்து வருகிறது. குவிகம் லாப நோக்கமின்றி குறைந்த செலவில் தமிழ் நூல்களையும் பதிப்பித்து வருகின்றது.
சமீபத்தில் தன்னுடைய நூறாவது நூலான குவிகம் 100 என்ற நூலை குவிகம் வெளியிட்டுள்ளது வாசகர்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. 170 பக்கங்கள் ஓடும் இந்த குவிகம் 100 தற்காலத் தமிழ் இலக்கியத்தை சுவைத்துப் பார்க்க ஓர் அருமையான வாய்ப்பு.
கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்ற மூன்று இலக்கிய வடிவத்தையும் தன்னுள்ளே தாங்கி வருகிறது குவிகம் 100. கொசுறாக ஒரு சிறிய நாடகமும் நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
குவிகம் 100 நூலில் நமக்கு காணக் கிடைக்கும் சுவையான படைப்புகளைப் பற்றி ஒரு பருந்துப் பார்வையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் கவிதைகள். ஏழு கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. கவிஞர் வைத்தீஸ்வரன், மீ.விசுவநாதன், “கவிஞாயிறு” துரை தனபாலன், தில்லை வேந்தன், கானப்ரியன், மதுவந்தி, தீபா மகேஷ் ஆகிய கவிஞர்களின் கவிதைகள் சுவைக்கத் தகுந்தன. மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் இவற்றில் சரியான விகிதத்தில் கலந்து படைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக, அனைத்துக் கவிதைகளும் எளிமையான நடையில், பயிற்சி குறைந்த வாசகர்களும் புரிந்து ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனக்கு கூடுதல் சிறப்பாகத் தோன்றுகிறது. இந்த கவிதைகளிலிருந்து ஒரு சில வரிகளை மட்டும் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். சுவைத்துப் பாருங்கள் :
எட்டும் கைகளுக்கு
எப்போதும் தப்பித்து காற்றில்
எட்டுப் போட்டுப் பழகும்
பட்டாம்பூச்சிகள் அங்கே ஏராளம்.
( “காலம் தாண்டி” – கவிஞர் வைத்தீஸ்வரன்)
கொள்ளை விலை சொல்லுகிற மால்கள் – எங்க
குலத்துக்கே குழிப்பறிக்கும் வேல்கள்
தள்ளுவண்டி காரனுங்க நாங்க – உங்க
தயவுலதான் நாளுதள்ளு ரோங்க.
( “தள்ளுவண்டிகாரனுங்க நாங்க” – மீ.விசுவநாதன்)
இல்லையினி முதியோரால் பயனே என்று
ஈன்றோரை விடுதிகளில் இடுதல் மடமை !
( “மடமையைக் கொளுத்துவோம் “ – “கவிஞாயிறு” துரை தனபாலன்)
ஒன்றுமறி யாதவர்கள் பெரிதென்றும் சிறிதென்றும்
உரைத்தலும் உலகத்தில் ஒவ்வொன்றும் ஒரு பயனே !
( “ஒவ்வொன்றும் ஒரு பயனே !” – தில்லைவேந்தன்)
உயர்ந்து கொண்டே போகிற
கூச்சலின் நீர் மட்டத்தில்
முழுமையாக
மூழ்கிப் போகின்றன
என் வார்த்தைகள்.
( “மானுடனும் அரக்கியும்” – கானப்ரியன்)
கரம் பற்றி தழல் சுற்றி
காலம் முழுவதும் உடன் வருவேனெனச்
சொன்னது கனவோ ?
( “ரத்து” – மதுவந்தி )
நீ இருக்கும் நேரங்களை விட
நீ இல்லாதபோது உன்னோடு
அதிகம் பேசுகிறேன்
( “உன்னுடனான என் உரையாடல்கள்” – தீபா மகேஷ்)
மேற்குறிப்பிட்ட கவிதை வரிகள் உங்களை வசீகரிக்கின்றனவா ? இந்தக் கவிதைகளைப் பற்றி இங்கே எழுதுவதை விட நீங்களே படித்து ரசிப்பதுதான் சரியாக இருக்கும்.
அடுத்தது கட்டுரைகளைப் பார்ப்போம். மொத்தம் 11 கட்டுரைகள். முனைவர் வ வே சு, இராய. செல்லப்பா, லதா ரகுநாதன், நாகேந்திர பாரதி, மாலதி சுவாமிநாதன், ஜி பி சதுர்புஜன், க.சிற்பி, தி. இரா. மீனா, எஸ் வி வேணுகோபாலன், எஸ் கௌரிசங்கர் மற்றும் முனைவர் தென்காசி கணேசன் ஆகிய இவர்களே இந்த கட்டுரைகளை வழங்கியிருக்கும் எழுத்தாளுமைகள். ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான ஒரு கருத்தைப் பேசுகிறது. பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தை வாசகனுக்கு இக்கட்டுரைகள் ஒரு பெரு விருந்தாக வழங்குகிறது.
“பாரதியும் பறவைகளும்” என்ற முனைவர் வ வே சு வின் கட்டுரை வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறது. பாரதியின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பறவைகளைப் பற்றி பேசும் இந்தக் கட்டுரை கற்பனையில் சிறகடித்துப் பறக்கிறது.
“இராய செல்லப்பாவின் “சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும்” எழுத்தாளருக்கு சரித்திர நாவல் மன்னர் சாண்டில்யனோடு ஏற்பட்ட நிஜ வாழ்வு அனுபவங்களை சுவையாக விவரிக்கிறது.
“கேள்விக்குறி ???” என்ற கட்டுரையில் லதா ரகுநாதன் முதியோருக்கு வங்கிகளின் வட்டி குறைப்பால் ஏற்பட்டுள்ள சவால்களைப் பற்றி ஆராய்கிறார்.
“ஆகாய அவஸ்தை” நாகேந்திர பாரதியின் பயணத்தைப் பற்றிய நகைச்சுவைக் கட்டுரை.
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் “எளிதான நற்செயல்” என்ற கட்டுரையில் மகிழ்ச்சியைப் பெருக்க சுலபமான உபாயம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார்.
ஜி.பி.சதுர்புஜனின் “வெண்பாக்களில் கிரேஸி மோகன்” நாம் பரவலாக அறியாத நகைச்சுவை மன்னனின் வாழ்க்கைப் பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.
க.சிற்பி “புருஷ லட்சணம்” என்ற கட்டுரையில் வித்தியாசமான கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார்.
“காலம் கடந்து நிற்கும் வசனங்களும் வசனக்காரர்களும்” என்ற கட்டுரையில் தி. இரா. மீனா நாம் அறிந்திராத கன்னட வசனக்காரர்களைப் பற்றி புதிய விஷயங்களைப் பகிர்கிறார்.
எஸ் வி வேணுகோபாலனின் “பாவப்பட்ட பாட்டியும் பேரன்களும்” கதையா கட்டுரையா என்று இனம் பிரிக்க முடியாத ஒன்றாய், சுவையும் கருத்தும் கலந்த விருந்தாய் பரிமளிக்கிறது.
“பரிபூர்ண கலைஞர்” என்ற எஸ் கௌரிசங்கரின் கட்டுரை தமிழ் நாடக முடிசூடா மன்னர் பூர்ணம் விஸ்வநாதனை நினைவு கூர்கிறது.
முனைவர் தென்காசி கணேசன் “மழை” என்ற கட்டுரையில் நம்மை மகிழ்ச்சி மழையில் நனைய வைக்கிறார்.
ஆக, இந்தக் கட்டுரைக் கலவை மிகவும் ருசிகரமாகவும் ரசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
இப்போது குவிகம் 100 ல் இடம்பெற்றுள்ள 15 சிறு கதைகளுக்கு வருவோம். வளவ. துரையன், பி ஆர்.கிரிஜா, ஜெ.பாஸ்கரன், அழகியசிங்கர், பத்மினி பட்டாபிராமன், சுரேஷ் ராஜகோபால், ஈஸ்வர், சிறகு இரவிச்சந்திரன், ஆர்க்கே, சந்திரமோகன், எஸ் எல் நாணு, மீனாக்ஷி பாலகணேஷ், யாரோ, பானுமதி. ந, ஹெச்.என்.ஹரிஹரன் ஆகியோர் இந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கருக்களையும் நடைகளையும் கொண்டவை. சிறிதும் அலுப்புத் தட்டாதவை.
வளவ துரையனின் “காற்று அசைத்து விடும்” கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அப்பாவைப் பற்றிப் பேசுகிறது. அனைவரும் ரசிக்கத்தக்கது.
பி. ஆர் கிரிஜாவின் “மூன்றாமவன்” “மூன்றாமவன் யார் ?” என்ற கேள்வியை நம்முள் எழுப்பி தன் சுவையான நடையில் இறுதியில் நம்மை முறுவலிக்கச் செய்கிறது.
ஜெ.பாஸ்கரனின் “அழகு” “அழகு என்றால் என்ன ?” என்று நம்மையே கேள்வி கேட்டு நம்மை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
அழகியசிங்கரின் “மௌனம் காத்தது” அலுவலகத்தில் நடக்கும் ஆண்-பெண் சந்திப்புகளில் நம்மை சுவாரசியமாக ஈடுபட வைக்கிறது.
பத்மினி பட்டாபிராமனின் “விரட்டல் எளிது” பூனையையும் காரையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. நீங்கள்தான் படித்து ரசிக்க வேண்டும்.
சுரேஷ் ராஜகோபாலனின் “அத்தையம்மா” சிறுகதை என்ற போர்வையில் வரும் சிறிய நாடகம்.
சிறகு இரவிச்சந்திரனின் “இரண்டு மக்கு” விறுவிறு நடையில் வித்தியாசமான சிறுகதை. “நாம் மக்கா இல்லையா ?” என்ற கேள்வியை நம்மையும் இறுதியில் கேட்க வைக்கிறது.
ஆர்க்கேயின் “ அக்ர சேனரின் மணிமகுடம் “ ஒரு சரித்திரச் சிறுகதை. சித்திரமும் அதில் அடங்கியிருக்கிறது.
சந்திரமோகனின் “இப்படியும் சில மனிதர்கள்” வாழ்க்கையின் மிகக் கசப்பான தருணங்களைக் காட்டுகிறது. ஆனால் நிதர்சனமான கசப்பு.
எஸ் எல் நாணுவின் “பிராயச்சித்தம்” இந்தத் தொகுதியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. கதையில் கோபம் கொப்பளிக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமம்.
மீனாக்ஷி பாலகணேஷின் “ பயக்குறை வாழ்நாள்” பழைய கதையா, புதிய கதையா என நம்மை திக்குமுக்காடச் செய்கிறது. வித்தியாசமான நடை.
“யாரோ” என்ற புனைப்பெயரில் யாரோ எழுதிய “காற்றில் ஒரு காதல்” எனும் சிறுகதை நம்மை ஔரங்கசீப்பின் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. மறக்க முடியாத காதல் கதை.
பானுமதி.ந எழுதிய “புகையும் தீ” குந்தியைப் பற்றிய வித்தியாசமான புனைவு.
ஹெச்.என்.ஹரிஹரனின் “அப்பாவின் சைக்கிள்” மறைந்து வரும் ஒரு காலத்தையும் மறக்கமுடியாத அந்நாளைய மனிதர்களையும் நம் மனக்கண்முன் நிறுத்துகிறது.
மொத்தத்தில் குவிகம் 100 நூலில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சோடை போகாத சிறுகதைகள். வாசகனை ஏமாற்றாத ரகம்.
இறுதியாக நாடகத்தை மறந்து விடக் கூடாது என்ற நல்ல நினைப்போடு எஸ் சுந்தரராஜனின் “அலெக்ஸி” நாடகத்தை நமக்காக வழங்கியிருக்கிறார் நூலின் தொகுப்பாளர் கிருபானந்தன் அவர்கள்.
அலெக்ஸி நம்மை அமெரிக்காவுக்கு அழைத்துப் போகிறது. புதிய உலகத்தை நமக்குத் திறந்து காட்டுகிறது.
குவிகம் 100 என்ற இந்த தொகுப்பு நூல் வாசகர்கள் தவற விடக்கூடாத நூல். அவசியம் படியுங்கள்.
குவிகம் 100
தொகுப்பு : கிருபானந்தன்
குவிகம் பதிப்பகம் ( முதல் பதிப்பு : நவம்பர் 2021 )
பக்கம் 172
விலை ரூபாய் 120
விமர்சகர் : ஜி.பி.சதுர்புஜன் : ஓர் அறிமுகம்
*இயற்பெயர் : பாஸ்கர் எஸ். ஐயர்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளியிட்ட இதழ்கள்:ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, மங்கையர் மலர், குமுதம், குமுதம் ஜங்ஷன், குமுதம் சிநேகிதி, அமுதசுரபி, கலைமகள், குங்குமம், கணையாழி, தினகரன் வசந்தம், ராணி, இலக்கியப் பீடம், பாரத மணி, தினமலர் வாரமலர், குவிகம், நவீன விருட்சம், இலக்கிய வேல், Business India, Business World, Advertising & Marketing, Reader’s Digest, Indian Express, The Hindu Business Line, Indian Management, Caravan.
பரிசுகள் : இலக்கியச் சிந்தனை, மாதாந்திர சிறுகதை, அமரர் சேஷசாயி நினைவு சிறுகதை போட்டி, அமுதசுரபி, கலைமகள் கவிதைப் போட்டி,
இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் : ஒரு கவிதை நூல், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், பழமொழிகள் பற்றிய ஒரு கட்டுரை நூல், ஆங்கிலத்தில் Qualitative Market Research பற்றிய நூல், ஆங்கிலத்தில் கவிதை, கட்டுரை, கதைகள் அடங்கிய சிறு நூல், முதல் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்க நூல்.