கவிதைச் சந்நதம் 25 நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 25 நா.வே.அருள்




                                                                                                                                                    ஒரு புதிய திசைக்காட்டிக் கருவி
                                                                                                                                                       *******************************************

தேர்ந்த கவிதையைப் படிக்கையில் கவிஞரின் திறன் தெரிந்துவிடும்.  பொங்கல் கவிதை என்று கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் பால், கொஞ்சம் முந்திரி என்று பானையில் போட்டு சூரியனைக் கும்பிட்டுச் சூடேற்றுவதா?  அடுப்பு நெருப்பு அறியாது பொங்கல் சுவை. ஆனால் பொங்கலைச் சுவைக்கிற போது வாசகனின் கண்களை முகர  வைத்து விடுகிறது….. பொங்கலுக்குள் ஊறியிருக்கும் மண்ணின் மணம்.

கவிஞனின் கவிதைத் தாளும் ஒரு பொங்கல் பானைதான்.  அதனுள் வார்த்தைகள் முந்திரிகளைப்போல ஊறி விடுகின்றன.  ஒரு விண்டு விண்டி வாயில் சுண்டுகிறபோதே கவிதையின் சுவையில் கண்கள் செருகும்.

பொங்கலின்  சுவை அரிசியிலா?   முந்திரியிலா?  பாலிலா?  எதில் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?  அதற்கென்று சூத்திரம் கிடையாது.  ஆனால் சுவையின் கலவை ஒரு சூட்சுமம்.  கவிதையிலும் அப்படித்தான்.  சுவை எதில் இருக்கிறது?  வார்த்தையிலா?    படிமத்திலா?   அந்தக் கவிதைக் கென்றே அமைந்த இசை யொழுங்கிலா?  கவிதை  வீணையில் வார்த்தைத்  தந்திகள்  கட்டப்பட்டிருக்கும் இறுக்கத்திலா?   ஆனால் ஒரு கவிஞன் கவிதையின் சுவையை ஏதோ ஒரு வகையில் எங்கோ பொதிந்து வைக்கிறான்.

மார்கழி மொட்டு, மார்கழி மணம், மார்கழிப் பழம், மார்கழிக் கொடி, மார்கழி மலர், மார்கழிப் பிஞ்சுகள் என ஒரு தாவரத்தையே கவிதையாக ஆவணப் படுத்திவிடுகிறான்.  கடைசியில் அந்த கவிதைக் கொடியைத் தனது கவிதைத் திரைச் சீலையில் ஒரு பெண்ணாகச் சித்திரம் தீட்டிவிடுகிறான்.  மாதங்களில் அவள் மார்கழி  இவரது கவிதையில் மொட்டாக மாறுகிறது.   பின்பு அது  வே தையாக மலர்கிறது. புன்னகை பொங்கலாகி விடுகிறது.

மளிகைக் கடையில் இரும்புச் சாமான்களைப் பொட்டலம் கட்டிக் கொடுப்பதைப் போல இந்தக் கவிதையில் ஒரு கனமான பொருளை அநாயசமாக அள்ளித் தருகிறார்.  பொட்டலத்தின் எடை  தாங்காமல் உள்ளே இருப்பதை மெல்ல அவிழ்த்துப் பார்க்கிறோம்…

“நடைபாதைக் குளிரில் தாயின் கிழிந்த சேலைக்குள்
முடங்கிக் கிடக்கின்றது ஒரு
மார்கழி மொட்டு!”

தாயின் கிழிந்த சேலையைக் கண்டு கவிதையின் மார்பகம் கசிகிறது.  அந்தத் தாயின் அணைப்பிற்குள் குளிரில் முடங்கிக் கிடக்கும் ஒரு மொட்டுக்காக மார்கழி தனது பனியை நெருப்பின் புகையாக மாற்ற நெஞ்சம் துடிக்கிறது மார்கழி மாதம்.

ஒரு கிராமத்தின் அதிகாலை ஒலிபெருக்கியில் பக்தி வெள்ளம்  பாய்ந்துகொண்டிருக்கிறது.  கோலம் போடும் பெண்களின் செவிகளில் மௌனமான  கோலாகலமாய் அந்த ஒலி.  செவியின் ஒலி மூக்கின் மணமாகிறது.  இது கவிதையின் ரசவாதம்.

“துயிலும் பாவையரை எழுப்புகிறது
கோவில் கோபுர ஒலிபெருக்கியிலிருந்து வீசும்
மார்கழி மணம்!”

எவ்வளவு போர்த்தினாலும் கிழவன் போர்த்தியிருக்கும் கிழிந்த போர்வைக்குள் எப்படியோ நுழைந்துவிடுகிறது இரவெல்லாம் துணையிருக்கும் இருமல்!
“திண்ணையில் முக்காடு போட்டபடி
முட்டிகள் இரண்டும் முகவாய்த் தாடையில் இடிக்க
தொடர் இருமலில் பின்னணி இசை சேர்க்கிறது
மார்கழி பழம்!”

தீட்டிய மார்கழிச் சித்திரத்தின் சிந்திய  வண்ணங்களாக அங்கங்கும் தீமூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள்.
“சுள்ளிகளையும் ஓலைகளையும் தீமூட்டி
சுற்றிலும் அமர்ந்து குளிர் காய்கின்றன
மார்கழிப் பிஞ்சுகள்!”

மார்கழித் திரைச் சீலையில் இத்தனை ஓவியங்களையும் தீட்டிய ஒருத்தி ஒன்றும் தெரியாத பாவனையில் இரவின் ஒரு ஓரத்தில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.  அவள்தான் தை  மங்கை என்று அறிமுகப்படுத்துகிறான் கவிஞன்.
“மார்கழிப்பனியைச் சிறிது சிறிதாய்ச் சேகரித்து
மகிழ்ச்சி கலந்து செய்த பால்பனிக்குழைவைப்
பொங்கல் நன்னாளில் உங்களுக்குத் தர
எப்போது விடியுமெனக் காத்திருக்கிறாள்
தை மங்கை!”Poetry Sannatham Kavithai Thodar (Series 24) By Poet Na. Ve. Arul. Book Day, Bharathi Puthakalayam கவிதைச் சந்நதம் 24 நா.வே.அருள் . அன்பழகன்

இனி முழுக் கவிதை…

நடைபாதைக் குளிரில் தாயின் கிழிந்த சேலைக்குள்
முடங்கிக் கிடக்கின்றது ஒரு
மார்கழி மொட்டு!

துயிலும் பாவையரை எழுப்புகிறது
கோவில் கோபுர ஒலிபெருக்கியிலிருந்து வீசும்
மார்கழி மணம்!

திண்ணையில் முக்காடு போட்டபடி
முட்டிகள் இரண்டும் முகவாய்த் தாடையில் இடிக்க
தொடர் இருமலில் பின்னணி இசை சேர்க்கிறது
மார்கழி பழம்!

குளித்து வண்ண உடை உடுத்தி
வாசல் தெளித்துக் கோலமிட்டு ஈரத் தலையோடு
கோலம் போடுகின்றது ஒரு
மார்கழிக் கொடி!

ஏற்கனவே மணமானவனை
மாலையிட்டு மணாளனாக்கிக் கொள்ள
பாசுரம் பாடுகின்றது ஒரு
மார்கழி மலர்!

சுள்ளிகளையும் ஓலைகளையும் தீமூட்டி
சுற்றிலும் அமர்ந்து குளிர் காய்கின்றன
மார்கழிப் பிஞ்சுகள்!

மார்கழிப்பனியைச் சிறிது சிறிதாய்ச் சேகரித்து
மகிழ்ச்சி கலந்து செய்த பால்பனிக்குழைவைப்
பொங்கல் நன்னாளில் உங்களுக்குத் தர
எப்போது விடியுமெனக் காத்திருக்கிறாள்
தை மங்கை!

ஒரு கவிதை காட்டில் பயணம் செய்து கொண்டேயிருந்து திடீரென வளைந்து ஒரு புதிய சாலைக்குள் நுழைவது மாதிரி தனது கடைசி வரிகளில் புதிய திருப்பத்தை அமைத்திருக்கிறான் கவிஞன்.

காட்டையே துவம்சம் செய்துவிடுகிற ஒரு பெரிய மிருகம் ஒரு கயிற்றுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறது.
“முட்டித் தள்ளி  முட்டித் தள்ளி
மரத்தையே சாய்த்துவிடும்
பலம் கொண்ட யானையை
மரத்திலலேயே
கட்டிவைத்திருக்கிறீர்கள்
அதுவும் சாதுவாக இருக்கிறது”

என்ன காரணமாக இருக்கும்?  இவ்வளவு பிரம்மாண்டமான உருவத்தின் காதுகளுக்குள் ஓர் எறும்பு நுழைந்து மரணத்தைத் தந்து விடுகிறதே எப்படி?   அது சரி. அதற்குள் எப்படி நுழைந்தது பயம் என்னும் எறும்பு?
“ஒரு சிறு குச்சியைக் காட்டி
அதனை மிரட்டுகிறீர்கள்
அச்சத்துடன் உங்களிடம்
அடங்கிப் போகிறது”

மரங்களைப் பெயர்த்துத் தள்ளிப் பசியாற வேண்டிய மாபெரும் மிருகம் நமது பசிக்குப் பழம் பறித்துப் போடுகிறது.
“உயரக் கிளையிலிருந்து
எட்டாப் பழங்களை
உங்கள் பசிதீரப்
பறித்துப் போடுகிறது
நீங்களும் சாப்பிட்டுவிட்டு
ஏப்பம் விடுகிறீர்கள்”

ஒரு கவளச் சோற்றுக்காகக் காட்டுச் சக்கரவர்த்தி ஒரு காட்டையே கப்பம்  கட்டுகிறது.  தூக்கிப் போட்டு மிதிக்க முடிந்த தும்பிக்கையால் தடவிக் கொடுக்கிறது.
“உங்களுக்காக நாள் முழுவதும்
பெரிய பெரிய மரக்கட்டைகளைத்
தூக்கிச் சுமக்கிறது

நாளைக்கும் உங்களுக்காக
கடுமையாய் உழைத்திட
கவளச் சோற்றைப்
பெரிய மனதோடு
வழங்குகிறீர்கள்.

அதனை நன்றியோடு
விழுங்கி விட்டுத்
தும்பிக்கையால் உங்களைத்
தடவிக் கொடுக்கிறது”

கூண்டில் கிளிகளை அடைக்கிற கொடுமைக்கார மனிதன் யானைக்கு முகபடாம் போர்த்தி முட்டாளாக்கியதாய் நினைக்கிறான்.   அங்குசத்தால் அடக்கிவிட்டுத் தன் அகங்காரத்தால் அடக்கிவிட்டதாகப் பெருமை கொள்கிறான்.  அங்குசத்தை மூடியிருக்கும் அன்பென்னும் கண்ணுக்குத் தெரியாத புழுவைப் பார்த்து  ஒரு நிலத்து மீனைப் போல ஏமாந்துவிடுகிறது யானை.
“நாள் கிழமை வந்தால்
முகபடாம் போர்த்தி
அழகு பார்க்கிறீர்கள்
உண்மை அன்பென்றெண்ணி
அதுவும் ஏமாந்து போகிறது”

இதுவரையிலும் யானையின் வரைபடத்தைக் காட்டிய கவிதை இனி கண்டடைகிற உருவம் வேறொன்றாய் மாற்றுகிறான் கவிஞன்.  அவனது திசைக்காட்டிக் கருவியில் திடீரெனத் தெற்கு வடக்காகிறது; வடக்கு தெற்காகிறது.

ஏன் யானை கட்டுப்படுகிறது?  கட்டுப்படுகிற யானையைப் பற்றிச் சொல்லி வந்த கவிஞனின் பார்வையில் இப்போது தட்டுப் படுவது யார்?  கவிஞன் நம்மை யோசிக்கச் சொல்கிறான்.  எப்படி யோசிக்க வேண்டும் என்று சொல்கிற வரியில் விடையையும் விட்டுச் செல்கிறான்.  ஒரு தேர்ந்த கவிஞனின்  திசைக்காட்டிக் கருவியில் இப்போது தெரிவது ஒரு புதிய திசை!
“உங்கள் கையால் கட்டிய
தளையினால் தான் அது
அடங்கிப் போகிறது என
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

“அந்த தளையினை
அறுத்தெறிந்து செல்ல அதற்கு
எவ்வளவு நேரம் ஆகும் என்பதை
நீங்கள் யோசித்ததில்லை

“யோசிக்கத் துவங்குங்கள் இன்றே
உங்கள் கட்டிலில் படுத்தபடி
உங்கள் மனைவியின் தலையை
அன்பாய்க் கோதியபடி!”

இனி முழுக் கவிதை

முட்டித் தள்ளி  முட்டித் தள்ளி
மரத்தையே சாய்த்துவிடும்
பலம் கொண்ட யானையை
மரத்திலலேயே
கட்டிவைத்திருக்கிறீர்கள்
அதுவும் சாதுவாக இருக்கிறது

ஒரு சிறு குச்சியைக் காட்டி
அதனை மிரட்டுகிறீர்கள்
அச்சத்துடன் உங்களிடம்
அடங்கிப் போகிறது

உயரக் கிளையிலிருந்து
எட்டாப் பழங்களை
உங்கள் பசிதீரப்
பறித்துப் போடுகிறது
நீங்களும் சாப்பிட்டுவிட்டு
ஏப்பம் விடுகிறீர்கள்

உங்களுக்காக நாள் முழுவதும்
பெரிய பெரிய மரக்கட்டைகளைத்
தூக்கிச் சுமக்கிறது
நாளைக்கும் உங்களுக்காக
கடுமையாய் உழைத்திட
கவளச் சோற்றைப்
பெரிய மனதோடு
வழங்குகிறீர்கள்

அதனை நன்றியோடு
விழுங்கி விட்டுத்
தும்பிக்கையால் உங்களைத்
தடவிக் கொடுக்கிறது

நாள் கிழமை வந்தால்
முகபடாம் போர்த்தி
அழகு பார்க்கிறீர்கள்
உண்மை அன்பென்றெண்ணி
அதுவும் ஏமாந்து போகிறது

உங்கள் கையால் கட்டிய
தளையினால் தான் அது
அடங்கிப் போகிறது என
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

அந்த தளையினை
அறுத்தெறிந்து செல்ல அதற்கு
எவ்வளவு நேரம் ஆகும் என்பதை
நீங்கள் யோசித்ததில்லை

யோசிக்கத் துவங்குங்கள் இன்றே
உங்கள் கட்டிலில் படுத்தபடி
உங்கள் மனைவியின் தலையை
அன்பாய்க் கோதியபடி!