ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் | நிகர பூஜ்யத்தின் சவால்கள் – எஸ்.விஜயன்
மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான 2022ம் ஆண்டு நோபல் பரிசு
மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு சற்று முன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசை பெற்றவர் ஸ்வண்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மரபணுவியலாளர். இவரது ஆய்வுகள் பேலியோஜெனோமிக்ஸ் (Paleogenomics) என்ற தனியான ஒரு அறிவியல் புலத்தை தோற்றுவித்திருக்கிறது. தமிழில் பண்டையமனித மரபணுவியல் எனலாம். இவர் செய்த ஆய்வுகளுக்கு செல்லும் முன் மரபணுவியல் பற்றிய ஒரு எளிய அறிமுகத்துடன் துவங்குவோம், மரபணுவியல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது எனலாம். ஒவ்வொரு உயிரினத்தின் வாரிசுகளிடம் பெற்றோர்களின் ஜாடை எப்படி இருக்கிறது என்ற கேள்வியை ஆய்வு செய்யத் துவங்கியதால் இந்த துறை உண்டானது. இருபதாம் நூற்றாண்டில் அது தாவிப்பாய்ச்சல் முன்னேற்றம் கண்டது. பெற்றோர் உடற்கூறு செய்திகள் எப்படி பிள்ளைகளிடம் செல்கிறது என்ற ஆய்வில் அதற்கு காரணமான உடற்கூறை தேடும் வேட்டையுடன் இது துவங்கியது. இறுதியில் உயிரினத்தில் செல்களுக்குள் உள்ள ஏதோ ஒரு பொருளில் ஒளிந்திருக்கிறது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
ஒவ்வொரு உயிரினமும் செல்களால் கட்டப்பட்டவை. செல்களல்லாத உயிரனங்களும் உண்டு (உம் வைரஸ்கள்) செல்களுக்குள் செல் கரு இருக்கிறது. அது சிறிய ஜவ்வால் மூடப்பட்டிருக்கிறது. செல்லுக்கு வெளியே மைட்டோகான்டிரியா என்ற மூலக்கூறுகள் உள்ளன. அத்துடன் ரைபோசோம் என்ற பெரிய மூலக்கூறுகளும் செல்லுக்குள் உள்ளள. இவை அனைத்தும் ஒரு திரவத்தில் மிதக்கின்றன. செல் ஒரு ஜவ்வால் மொத்தமாக மூடப்பட்டிருக்கிறது. செல்லுக்குள் உள்ள மற்ற உறுப்புகளை இப்போது புறக்கணிப்போம்.
செல் கருவிற்குள் டிஎன்ஏ என்ற மூலக்கூறு இருக்கிறது இதுதான் மரபுச் செய்திகளை தாங்கி நிற்கும் மரபணுவாகும். மிகபிரம்மாண்டமான மூலக்கூறாகும். இது அமினோஅமிலங்களால் கட்டப்பட்ட மூலக்கூறாகும். குறிப்பாக நான்குவகை அமினோ அமிலங்களால் ஆனது. இவற்றை A, T, C, G என்ற எழுத்துக்களால் குறிக்கலாம். இவை சுழலேணி வடிவத்தில் அடுக்கப்பட்டுள்ளன. ஏணியின் நெடுக்கு கம்பு சர்க்கரை மூலக்கூறால் ஆனது. படிகள் அமினோ அமிலங்களால் ஆனது. ஒவ்வொரு படியும் பேஸ் என்று அழைக்கபடுகிறது. Aயும் Tயும் மட்டுமே இணைந்து ஒரு படி உருவாக முடியும் அதேபோல் Cயும் Gயும் இணைந்து ஒரு படி உருவாக முடியும், மனித செல்லுக்குள் இருக்கும் மரபணுவில் மொத்தம் 300 கோடி படிகள் உள்ளன. இதே போன்று மிட்டோ காண்டிரியா என்ற மூலக்கூறும் மரபணுச் செய்தியை தாங்கி நிற்கும் மூலக்கூறாகும். இதில் 16.500 படிகள் உள்ளன.
மிட்டோ காண்டிரிய தாயிடம் இருந்து மட்டுமே வரமுடியும் ஏனெனில் தாயின் கருமுட்டைக்குள் விந்தணுசெல்லும் போது அதன் செல்கருவில் உள்ள டிஎன்ஏ மட்டுமே செல்கிறது. தாயின் செல்லில் உள்ள இதர பொருட்கள் அப்படியே குழந்தைக்கு வருவதால் மிட்டோ காண்டிரியாவும் தாயிடமிருந்து மட்டுமே வரமுடியும். இதேபோல் கருவிற்குள் இருக்கும் டிஎன்ஏ பல மடிப்புகளாக மடித்து வைக்கப்படிருக்கிறது. மடிப்புகள் அடிப்படையில் கணக்கிட்டால் அது 23 ஜோடி மடிப்புகளை மனித டிஎன்ஏ கொண்டிருக்கும், இந்த மடிப்புகள் குரோமோசோம் என்று அழைக்கப்படுகிறது. எளிய புரிதலுக்காக விஷயங்களை மிகவும் குறுக்கியுள்ளேன். விஷயம் இன்னும் சிக்கலானது என்பதை நினைவிற் கொள்ளவும். 23வது குரோமோசோமே குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது. இவற்றில் இரண்டு சாத்தியக்கூறுகளே உள்ளன. அதாவது ஆண் அல்லது பெண். பெண் சாத்தியக்கூறை தாங்கி நிற்கும் 23வது குரோமோசோமை எக்ஸ் என்றும் ஆண் சாத்தியக்கூறை தாங்கி நிற்கும் 23வது குரோமோசோமை ஒய் என்றும் அழைக்கப்படுகிறது. எக்ஸ் இருந்தால் அது பெண், ஒய் இருந்தால் அது ஆண். 23 வது குரோமேசோம் ஆணிடமிருந்து வருவதால் குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது ஆண்களே.
இந்த 300 கோடி ஏணிப்படிகளில் 30ஆயிரம் படிகளே மரபணுச் செய்திகளை தாங்கி நிற்பவை இதரவை ஜங்க் என்று அழைக்கப்படுபவை. இவைகளை வரிசைப்படுத்தினால் அந்த மனித உயிரின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதை எப்படி வரிசைப்படுத்துவது இதை எப்படி அறிவது என்பது ஒரு சவால். 20ம் நூற்றாண்டின் இறுதியில் மனித மரபணுக்களின் உட்கூறுகள் வரிசைப்படுத்தி தொகுக்கப்பட்டுவிட்டன, ஜங்குகன் பயனற்றவை கிடையாது. அதன் பயன்கள் பற்றி இப்போது பேச வேண்டாம். ஜங்குகளில் ஏற்படும் பிறழ்வுகளை வைத்து மனித வரலாறே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது மக்கட்தொகை மரபணுவியல் (Population Genomics) என்ற தனியொரு அறிவுப் புலமாக வளர்ந்துவிட்டது.
மரபணுவை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். பாபோவின் ஆய்வுக்கு வருவோம். மற்ற உயிரினங்களைப் போலவே மனிதனும் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவன். இன்று மனிதனாக அறியப்படுவனை நாம் ஹோமோ சேப்பியன் என்ற உயிரினம் என்று அழைக்கிறோம். மனிதர்கள் போல் தோற்றம் உள்ள இதர விலங்கினங்களை ஹோமோ என்ற முன்சொல்லை வைத்து வகைப்படுத்தப்டுகின்றன. சிம்பன்ஸி கொரில்லா போன்ற மனிதக்குரங்குகள் மனிதனுடைய சகோதர இனங்களாக இருந்தாலும் தூரத்து சகோதரர்களே ஆவார்கள். நெருங்கிய சகோதர இனமாக அறியப்படுவது ஹோமோ எரக்டஸ் என்றொரு மனித இனமே. இவற்றை நாம் அறிந்தது சென்ற நூற்றாண்டில்தான். ஜெர்மனியின் நியாண்டார்தால் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் நமது சகோதர இனத்தவரான ஹோமோ எரக்டஸ் இனம் என்றும் அந்த எலும்புக்கூட்டின் மனிதன் நியாண்டார்தால் மனிதன் என்றும் அழைக்கப்படுகிறான். இதுபோல் பீகிங் மனிதனும், சைபீரியாவின் டெனிசோவா மனிதனும் ஹோமோ எரக்ட்ஸ் இனத்தை சேர்ந்தவனே. ஆக இந்த மனிதர்களை தனித்தனி உயிரினங்களாக பிரிப்பது எது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்காண விடையத் தேடும் பணிதான் பாபோவின் ஆய்வுப்ணியாகும்.
நியாண்டார்தால் மனித இனம் அதாவது ஹோமோ எரக்ட்ஸ் இனம் 70000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது.. நாம், ஹோமோ சேப்பியன்கள் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்தோம், நமது சகோதரன் ஹோமோ எரக்ட்ஸ் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்தான். இவன் ஆப்பிரிக்காவுக்கு வெளியே வாழ்ந்தான். 3லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நாமோ ஆப்பிரிக்காவில் வாழ்ந்தோம். 70000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவை விட்டு வெளியே வந்தோம். முதலில் அரேபியாவுக்கு வந்து பிறகு ஐரோப்பா ஆசியா முழுவதும் பரவினோம். 40000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுவிட்டோம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா கண்டத்திற்கு பரவினோம். ஐரோப்பா கண்டத்தில் நமது சகோதரனோடு பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். இருவருக்கு ஒரே பொது மூதாதையர் உண்டு அது 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்திருந்தது. மரபணுக்களின் பிறழ்ச்சியால் வெவ்வேறு உயிரினக்கள் தோன்றுகின்றன. மெல்ல மெல்ல நிகழும் பிறழ்வுகள் மெல்ல மெல்ல மாற்றத்துக்கு அடிகோலி ஒரு கட்டத்தில் தனித்தனி உயிரினங்களாகின்றன. பொதுவாக இரு உயிரினங்கள் கூடினால் குழந்தை பிறக்காது. அந்த நிலையை எட்டும்போதுதான் அவை இரண்டையும் வெவ்வேறு உயிரினங்கள் என்று அறிவியல் அழைக்கிறது. ஆனால் ஹோமோ எரக்டஸும் ஹோமோ சேப்பியன்களும் இணைந்து குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் கதைகள் போல் தெரிகிறதல்லவா. இவையனைத்தையும் அறிவியல் பூர்வமான நிறுவியவர் பாபோ.
தற்போது வாழும் உயிரினத்தின் டிஎன்ஏஐ தொகுப்பது எளிதாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பண்டைகால உயிரினத்தின் மரபணுவை எப்படித் தொகுப்பது? இதைச் செய்து காட்டியவர் பாபோ. 40000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட ஹேமோ எரக்டஸின் எலும்பிலிருந்து டிஎன்ஏஐ பிரித்தெடுத்து தொகுத்துக் காட்டியவர் பாபோ. வாழும் செல்லின் கருவின் டிஎன்ஏஐயும் மிட்டோகாண்டிரியா டிஎன்ஏஐயும் தனித்தனியாக பிரித்து எடுத்து தொகுக்க முடியும். பல்லாண்டுகளுக்கு முன்பு மடிந்து போனவற்றில் இந்த இரண்டு டிஎன்ஏக்களும் இணைந்து குழப்பமான சங்கிலியே கிடைக்கும்.அவற்றில் எது மிட்டோகாண்டிரியாவைச் சேர்ந்தது எது கருவைச் சேர்ந்தது என்று பிரித்தெடுக்கும் நுட்பத்தை கண்டுபிடித்தவர் பாபோ. இப்படிச் செய்து நியாண்டார்தால் மனிதனின் மரபணுவை முதன் முதலில் 2010ம் ஆண்டு தொகுத்துக் காட்டினார். இதன் விளைவாக ஹேமோ சேப்பியன்களது மரபணுப தொகுப்புக்கும் ஹோமோ எரக்டஸின் மரபணுத் தொகுப்பிற்கும் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்யும் களம் திறக்கப்பட்டது. எது ஹோமோ சேப்பியன் மனிதனை நியாண்டால் மனிதனிடமிருந்து வேறுபடுத்துகிறது என்பதை கண்டறிய உதவியது இவரது கண்டுபிடிப்பு.
இப்பொழுது நியாண்டார்தால் மனிதனின் மரபணுதொகுப்பின் 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை ஹோமோ சேப்பியன்களிடம் உள்ளது என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 1 லிருந்து 6 சதவீதம் டெனிசோ மனிதனின் மரபணுக்கள் கலந்திருக்கிறது. நியாண்டார்தால் மனித மரபணுக்கள் நமது நோயெதிர்ப்பு அமைப்பில் என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் தற்போதைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பாபோவின் ஆய்வுமுறையால் அழிந்துபோன பண்டைய உயிரினத்தின் மரபணுக்களை தொகுக்கும் தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது. இது ஒரு அறிவுப்புலமாக வளர்ந்து பேலியோஜெனோமிக்ஸ் என்ற பெயர்தாங்கி நிற்கிறது. அதன்மூலம் தற்போதைய மனிதனின் உடலமைப்பில் என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது. இத்தகைய அற்புதமான பணிகளுக்காக ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த ஆண்டு மருத்துவம் அல்லது உடற்கூறியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
எஸ்.விஜயன்
03.10.2022