தொடர் 20: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
நான் 2000 ம் வருடம் நடிகை ராதிகாவின் ராடான் டிவியின் தயாரிப்பில் வெளிவந்த தொடர்களான “அவன் அவள் அவர்கள்” (மும்மொழி) மற்றும் சரத்குமார் தொகுத்து வழங்கிய “கோடீஸ்வரன்” போன்றவற்றில் என் குருநாதர் இயக்குநர் சி. ஜேரால்டு அவர்களிடம் உதவி இயக்குநராக பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் சூர்யா எனும் புனைப்பெயரில் இயங்கிக் கொண்டிருந்தேன். நான் சென்னை வராததற்கு முன்பும் இதே பெயரில் தோழர் வெண்புறா தீட்டிய அட்டை படத்தோடு “மீறல்” என்கிற நூலை தமுஎகச நாகமலை புதுக்கோட்டை கலை இரவில் வெளியிடப்பட்டது. சூர்யா எனும் பெயரில் மூன்று டிவி தொடர்கள் பணியாற்றி முடிப்பதற்குள் நடிகர் சூர்யாவும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவும் பிரபலமாகிவிட நான் என் புனைப்பெயரை ராஜினாமா செய்துவிட்டு ஏகாதசியாகவே ஆனேன் என்பது வேறுகதை. அந்த காலகட்டத்தில் தான் ராடன் டிவியில் “சித்தி” சீரியல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. அந்தத் தொடரில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்த மாதேஷ் என்பவர் எனக்கு நண்பரானார். அவர் ஒருநாள் அவரின் வகுப்புத் தோழர் செல்வநம்பியை அறிமுகம் செய்து வைத்தார். செல்வநம்பி இசையமைப்பாளராகும் கனவோடு சென்னையில் இருப்பவர். அப்போது நான் திரைப்படத்தில் பாடல் எழுதியிருக்கவில்லை. பிறகு நானும் செல்வ நம்பியும் நல்ல நண்பர்களானோம். எனது ஆரம்பகட்டத் திரைப்பாட்டுப் பயணத்தின் போது மெட்டுக்கு பாடல் எழுதுவதில் எனக்கிருந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.
நண்பர் மாதேஷ் தனது முதல் படத்திற்கு செல்வநம்பியைத்தான் இசையமைப்பாளராக போடுவேன் என அழுத்தமாக இருந்தார். எனக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. நினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன, நான் இயக்கிய முதல் படத்திற்கு பரணியை போடவேண்டிய சூழலாகிவிட்டது. மாதேஷ் இயக்குநர் ஆவதற்கு பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். போராட்டத்தில் வெல்லும் நாளில் அவரின் முதல்பட இசையமைப்பாளர் செல்வநம்பிதான் இருப்பார் என்றெல்லாம் யாரும் முடிவுசெய்துவிட முடியாது.
என் முதல் படத்திலும் அவர் இல்லை. என் இரண்டாம் படத்திலும் அவர் இல்லை. இடையில் நான் இயக்குவதாகயிருந்த ஒரு படத்திற்கு அவரை முடிவு செய்தேன். அந்தப்படம் இடையில் நின்றுவிட்ட போதிலும். படத்திற்காக அவர் எனக்குத் தந்த மூன்று மெட்டுக்களும் அதற்கு நான் எழுதிய வரிகளும் மறக்க முடியாதவை. இதன் கம்போஸிங் சிதம்பரத்தில் ஒரு ஹோட்டலில் நடந்தது. அது அவரின் ஊரும் கூட. பெரும்பாலும் சாப்பாடு அவரின் வீட்டில் தான். கம்போஸிங் நடந்துகொண்டிருந்த போது ஒரு நாள் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் நண்பர் கவிஞர் த. கண்ணன் வீட்டிலிருந்து மீன் குழம்பு சாப்பாடு சமைத்து எடுத்துவந்து என்னை உபசரித்தார் அந்த அன்பிற்கு நிகர் ஏதுமில்லை.
பல்லவி
அவ நேரா பாத்தா த்ரிஷா
தல சாச்சுப் பாத்தா சமந்தா
அவ நடக்கும் போது அனுஷ்கா
அட சிரிக்கும் போது சிநேகா
அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2)
எந்தக் கடையில அரிசி வாங்குறா
இம்புட்டு அழகா இருக்கிறா
எவர் சில்வர் தட்டப்போல பாவிமக – ஏ
எதிர போகயில மினுக்குறா
சரணம் – 1
தலமுடி ஒண்ணு குடுத்தாக்கா
அரணா கயிறு கட்டிக்கலாம்
அருவா கண்ண குடுத்தாக்கா
வேலிக்கு முள்ளு வெட்டிக்கலாம்
பைசா நகரத்துக் கோபுரத்த
பாதகத்தி மறச்சு வச்சா
பாத்துப் போகும் கண்ணுக்கெல்லாம்
பச்ச மொளகா அரச்சு வச்சா
துண்டு மஞ்சளும் அவதொட்டா
குண்டா ஆகிடுமே – அந்தப்
பொண்ண ஒருநாள் பாக்காட்டா – ஏ
கன்னம் வீங்கிடுமே
அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2)
சரணம் – 2
தொறந்த வீட்டுக்குள்ள நொழஞ்சுக்கிடும்
நாயப் போல காதலடா
விரட்டிப் பார்த்தும் போகவில்ல
அதுபோல் ஒருசுகம் காணலடா
காதல ஜெயிக்க சாமிகிட்ட
மொட்ட போடத்தான் வேண்டிக்கிட்டேன்
கல்யாணம் முடிக்கச் சம்மதிச்சா
காசு துட்ட நான் சேத்துக்குவேன்
ரோசாப் பூவென ஏம்பொழப்பு
அழகா மலரணுமே – அவ
செவப்பா ஒருத்தனத் தேடிக்கிட்டா – நா
லூசா பொலம்பணுமே
அவ உசிலம்பட்டி நயன்தாரா – ஏ
உசுர எடுத்துக்கிட்டுப் போறா (2)
இது செல்வநம்பி மெட்டுக்கு சிதம்பரத்தில் நான் எழுதிய பாடல்கள் மூன்றில் ஒன்று. செல்வநம்பியின் கனவும் நிறைவேறியது அவர் “திட்டக்குடி” எனும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். நான் என் முதல் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த தவறினேன், ஆனால் அவர் என்னை அவரின் முதல் படத்தில் விட்டுவிடவில்லை. இறுகப் பிடித்துக் கொண்டார். திட்டக்குடி படத்தில் நான்கு பாடல்கள் எழுதினேன். அதன் இயக்குனர் சுந்தரம் அற்புதமான நண்பர். என் எழுத்துக்கள் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அவரின் அடுத்த படமான “ரங்க ராட்டினம்” படத்திலும் எனக்கு பாடல் எழுத வாய்ப்புத் தந்தார். இதிலும் செல்வ நம்பியே இசை.
செல்வநம்பியும் நானும் குடும்ப நண்பர்களானோம். என் தோழி காளத்தி காளீஸ்வரன் தயாரிப்பில் “பெண் அழகானவள்” என்கிற பத்து பாடல்கள் அடங்கிய ஒரு ஆல்பத்தை உருவாக்கினோம். அதில் அவர் இரண்டு பாடல்களும் பாடித்தந்தார். அவரின் குரலுக்கு நான் ரசிகன். சென்னை வீதியில் பெரிய பயணம் எங்களுடையது.
பல்லவி
இதயத்தில தீயெரிய
உயிர் மட்டும் தாங்கிக் கொள்ளுதே
ஒரு பறவ உறவிழந்து
ஊர் விட்டு ஊரு செல்லுதே
புயல் காத்து வீசும்போது
தீபம் பேசிடுமா
உப்பு மேல பட்ட தூறல்
நீங்கிடுமா
விழி சாஞ்சா வெளிச்சமில்ல
உயிர் சாஞ்சா ஒண்ணுமில்ல
நிலவொடஞ்சு விழுமா விழுமா
சரணம் – 1
துன்பமெல்லாம் இவ நெஞ்சுக்குள்ள
கூடி வந்து அடையும்
கண்ணாடியா உயிர் இருந்திருந்தா
எத்தன முற உடையும்
கூட்டுக்குள்ளே தீயை யார் வைத்தது
காதலெனும் விதியா
இனி கொள்ளை போக உயிர் மீதமில்லையே
கனவாகிப் போனதையா
கண்ணீரால் பெண்ணொருத்தி
தலைவாசல் தெளித்தாளே
விதி எழுதி பார்க்கும் கூத்து
வருசமெல்லாம் தவமிருந்து
பெற்ற வரம் வீணாச்சு
இவ தனியா அலையும் காத்தோ
சரணம் – 2
தாயக்கட்ட நீயும் ஆடயில
தப்புகள செஞ்ச
காதலெனும் ஒரு பேரு வச்சு
கத்தரிச்ச நெஞ்ச
சிறு பிள்ளை போலே
விளை யாடிடத்தான்
பெண் இங்கே பொம்மை இல்ல
ஒரு தீர்ப்பு சொல்ல – இங்க
யாரும் இல்ல
உள் நெஞ்சே உண்மை சொல்லும
பாவம் செஞ்ச குத்தத்துக்கு
பரிகாரம் ஏதூமில்லையே
வேரறுத்த பின்னாலே
பூப்பூக்கும் யோகமில்லையே
இது திட்டக்குடி பாடல்.
காதலெனும் பேர் வைத்து பெண்களை வேட்டையாடித் தின்று எலும்புகளை வீசுகின்ற ஆண் சமூகத்தின் நெற்றியில் ஆணி அடிப்பதான கருப்பொருள் இது. நாங்கள் தொடர்பு அறாத நட்பாய் இன்னமும் இருக்கிறோம்.