தொடர் 25 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 25 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு “அசுரன்” படத்தைத் தொடங்க சில மாத இடைவெளி இருந்தது. அதற்குள் சின்னதாக ஒரு படத்தை இயக்கி விடலாம் என்கிற எண்ணம் அவருக்கு. காரணம் கோவையைச் சேர்ந்த தோழர் எழுத்தாளர் வெ.சந்திரக்குமார் தனக்கு நேர்ந்த அனுபவங்களை வைத்து எழுதிய “லாக்கப்” என்கிற நாவலை வெற்றிமாறன் வாசித்திருந்ததுதான். அதுதான் தினேஷ், சமுத்திரக்கனி நடித்த “விசாரணை”.

வழக்கம்போல் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இந்தப் படத்திற்கு இரண்டு பாடல்களை உருவாக்கத் திட்டமிடிருந்தார் இயக்குனர். அதில் ஒன்று, வெளி மாநிலத்தில் மளிகைக் கடையொன்றில் வேலைப்பார்க்கும் ஓர் இளைஞனுக்கும் வீட்டுவேலை செய்யும் ஓர் இளம்பெண்ணுக்கும் இடையில் மலர்கிற காதல் என்பது சூழல்.(விசாரணை படத்தில் பாடலே இல்லையே இவன் என்னடா வேறொரு கத சொல்றான்னு தோணும் அதுக்கு நான் அப்பறமா வர்றேன்)பாடலை ஒரு ஃபோக் டைப்பில் உருவாக்கத் திட்டமிட்டதில் உதித்த பல்லவி தான்.

“உருட்டுக் கண்ணால
ஒரசிப் போறாளே
அய்யய்யோ பத்திக்கிச்சு
நெஞ்சுக்குழி தன்னால

இடுப்புத் தண்டால
இமயம் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

மேகத்தக் கத்தரிச்சு
செஞ்ச பொண்ணாடா – இந்த
மாயக்காரி மண்டைக்குள்ள
சுத்தி வாராடா

நெத்திப் பொட்டாக – என்ன
இட்டுக்கிட்டாளே – அவ
கண்ணா பின்னான்னு – என்ன
கொன்னுபுட்டாளே – அவ
மிச்சம் வைக்காம – என்ன
தின்னுபுட்டாளே

நான் காணா போனேன்டா – என்ன
கண்டா சொல்லுங்க”

என்கிற ஒரு நீளமான பல்லவி.

மோதிப் பாக்கட்டுமா
கெடா முட்டுக் கண்ணால
மூச்சில் வேகட்டுமா
முத்துப்பேச்சி முன்னால

கீரக் கட்டுப்போல
கூந்தல் முடிப் பின்னால
வீரன் சாஞ்சுபுட்டான்
வீதியில தன்னால

நான் பீடி பத்தவச்சா – அவ
பொகையப் போல வருவா
ஒரு பீர தொறந்து வச்சா
அட நொரையப்போல வருவா

நா தியேட்டருக்குப் போனா – அவ
ஹீரோயினா தெரிவா
அட சீரியலுப் பாத்தா
அவ மருமகளா அழுவா

இடியோட மழபெய்யும் – அவ
ஏ வீட்டில் வந்து நின்னா

இப்படியாக இரண்டு சரணங்கள். பாடல் மிக சிறப்பாக வந்தது. பாடலை ஜீ.வி. பிரகாஷ் குமாரே பாடியிருந்தார். படம் முடித்துப் பார்த்தபோது படம் மிக மிக நேர்மையாக வந்துநிற்க, பாடல் படத்தில் ஒட்டுமா என்கிற சந்தேகம் வர வெற்றிமாறன் அவர்கள் படத்தில் பாடல்கள் வைக்கும் திட்டத்தைக் கைவிட்டார். படமும் வெளியானது விருதுகளும் குவிந்தன.

சிறிது இடைவெளிக்குப் பிறகு தம்பி இயக்குநர் வள்ளிக்காந்த் அவர்கள் இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் “பசங்க” புரொடக்சன்ஸில் ஜி.வி.பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்து “செம” எனும் தனது முதல் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ஒரு மாஸ் சூழலுக்கு அந்தப் பாடல் பொருந்திப் போக, தினேஷ் க்காக இசைத்த பாடல் இசைத்தவருக்கே வாய்த்துப் போனது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பாடல் அப்படி ஒரு ஹிட்.

ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த படத்தில் இடம்பெறாமல் போனாலும் இன்னொரு படத்தில் வெளியாகி வெற்றியடையும் போது மனம் ஆறுதல் அடைந்துவிடுகிறது. ஆனால் எண்ணற்ற பாடல்கள் உருவாக்கப்பட்டு அங்கேயே தங்கி விடுகின்றன. அந்த வரிகளை நாம் இன்னொரு படத்தில் பயன்படுத்தவும் முடியாது. காரணம் ஒரு மெட்டுக்குள் இருக்கும் வரிகளைப் பிய்த்து இன்னொரு மெட்டுக்குள் பொருத்தமுடியாது. பாடல் என்பது பிரசவத்திற்கு சமமானது. இதில் கூட அறுவை சிகிச்சை மூலமும் குழந்தை பிறக்கிறது. ஆனால் பாடலில் சுகப்பிரசவம் மட்டுமே உன்னதமானது.

தோழர் பேரா. இரா. காளிஸ்வரன் அவர்களின் மனைவி காளத்தி அவர்களின் தயாரிப்பில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் “பெண் அழகானவள்” என்கிற ஒரு தனியிசை ஆல்பம் உருவானது. அதற்கு செல்வநம்பி இசையமைத்திருந்தார். ஆல்பத்தின் பெரும்பாலான பாடல்களை நானே எழுதியிருந்தேன். அதில் ஒன்று தான் “பெண் அழகானவள் பேரன்பானவள்” எனும் பாடல்.

பல்லவி
பெண் அழகானவள்
பேரன்பானவள்
அரவணைத்துப் பூப்றிப்பாள்
அநீதி கண்டு ஆர்ப்பரிப்பாள்

வெளிச்சம் தந்து வெளிச்சம் தந்து
தீபமானவள் – இவள்
தேகம் கொன்று தேகம் கொன்று
தெய்வமானவள்..

சரணம் 1
உயிர் தந்து உடல் தந்து
தாயானவள் – நம்
விரல் பிடித்து நடந்து வரும்
மகளானவள்

கடலுத் தண்ணி தேக்கி வச்சா
கண்ணுக்குள்ள தான்
கடைசி வரை இவள் கால்கள்
மண்ணுக்குள்ள தான்

இமயமலையைத் தோற்கடிக்கும்
ஈரம் கொண்டவள் – பெண்
எவரும் வீழ்த்த முடியாத
வீரம் கொண்டவள்

சரணம் 2
காடு மலை சுத்தி வந்து
காவல் காத்தாள் – பெண்
காலமெல்லாம் நெருப்பைத்தான்
பாதுகாத்தாள்

கட்டிகிட்டு வந்தவள
யாரும் நம்பல
காளி மாரி யாருமில்ல
நம்ம பொம்பள

சிறகு கொண்ட பெண்ணுக்கு
ஏது எல்லையே – பெண்ணை
சீசாவுல் அடைக்கிறது
ஞாயம் இல்லையே

தோழர் இரா. காளீஸ்வரன் அவர்கள் மக்கள் டீவியில் “மூதாய்” என்கிற தொடரை இயக்குனார். அது வாரா வாரம் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றது. சிறு தெய்வங்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் விதமாக அந்தத் தொடர் அமைந்தது. அந்தத் தொடருக்கு நான் மேலே குறிப்பிட்ட “பெண் அழகானவள்” பாடலே டைட்டிலில் பாடப்பட்டது. ஒவ்வொரு எபிசோடுக்கும் முன் வரும் அந்தப் பாடல் செல்வநம்பியின் குரலில் தொன்மம் கசிந்தது.

இயக்குநர் சி. ஜெரால்டு இயக்கிய “அவன் அவள் அவர்கள்” மெகா சீரியலில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த போது ஒரு துணை நடிகை கைக் குழந்தையோடு ஷூட்டிங் வருவார். அந்தப் பெண் வீட்டு வேலை செய்பவராக நடித்தார். குழந்தையை அறையில் தூங்க வைத்துவிட்டு ஷார்ட்டுக்கு வருவார்.
ஒவ்வொரு ஷார்ட்டுக்கும் இயக்குநர் நடிகர்களை வரவழைக்க உதவி இயக்குநர்களைக் கத்துவார். உதவி இயக்குநர்கள் விழுந்தடித்து ஓடி நடிகர்களின் அறை முன் நிற்போம். சில உதவி இயக்குநர்கள் இயக்குநர்கள் கொடுக்கும் நெருக்கடி பொறுக்காமல் நடிகர்கள் பாத் ரூமில் இருந்தாலும் கதவைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதே போல் தான் குழந்தை வைத்திருக்கும் துணை நடிகையிடமும் நடந்துகொள்வார்கள். அதாவது ஏழை எளிய துணை நடிகர்களிடம் தான் இவர்கள் பருப்பு வேகும். செல்வாக்குப் பெற்ற பெரிய நடிகர்கள் என்றால் வாலை உருட்டிக் கொண்டு நின்றிருப்பார்கள். மயில் தோகை கொண்டு கதவு தட்டி வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துப் போவார்கள். நான் ஒரு முறை அந்தத் துணை நடிகையை அழைக்கச் சென்றபோது அவர் தன் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார. என்னால் அவரை அழைக்க முடியவில்லை. நான் வந்திருப்பது கண்டு அவரே அவசரமா எனக்கேட்க நான் இல்லை என்று பொய் சொன்னேன்.

நான் இயக்கிய முதல் படத்தில் “கபடின்னா கபடி காசுக்கு ரெண்டடி” எனும் பாடலுக்கு பத்மாவதி எனும் ஒரு பெண்ணை ட்ராக் பாட வைத்திருந்தார் இசையமைப்பாளர் பரணி. அவரின் பல பாடல்களுக்கு அவர் அதற்கு முன்னும் ட்ராக் பாடியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு திரைப்படத்தில் பாடவேண்டும் என்பது கனவு. அந்தக் கனவு மெய்ப்படும் தூரம் மிக அருகில் தான் இருந்தது. ஆனால் ஒருவர் ட்ராக் சிங்கராக அறியப்பட்டால் அவரை அதற்குப் மட்டுமே பயன்படுத்துவார்கள். அங்கேயும் அதுவரை அதுதான் நடந்துகொண்டிருந்தது. அந்த என் படப்பாடலை யாரை வைத்துப் பாடலாம் என யோசித்தபோது ஆண் குரலுக்கு கார்த்திக்கை முடிவு செய்துவிட்டு பெண் குரலுக்கு ஒருவரை பரணி சொன்னபோது நான் அந்தப் பாடலுக்கு ட்ராக் பாடிய பத்மாவதியை பாடவைக்கலாமே என்றேன். பரணி யோசித்தார், நான் இல்லை அவரே பாடட்டும் என்றேன். மிக அழகாகப் பாடிக்கொடுத்தார். அதன் பிறகு திரையிசை உலகில் பல பாடல்கள் பாடி பிரபலமானார். இங்கே திறமை இருந்தும் அங்கீகாரம் கொடுக்க ஓர் ஆள் தேவைப்படுகிறது. அந்த ஆள் ஏன் நாமாக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றேன்.