நூல் அறிமுகம்: தகழியின் ஏணிப்படிகள் – ஸ்ரீதர் மணியன்நூல்: ஏணிப்படிகள்
ஆசிரியர்: தகழி சிவசங்கரப் பிள்ளை
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்
விலை: ரூ. 140

1891ஆம் ஆண்டு மலையாள இலக்கிய உலகு தன் முதல் படைப்பினைக் கண்டது. சி.வி.இராமன் பிள்ளை அதனைத் தொடங்கி வைத்தாலும், 1899இல் ஓ.சந்து மேனோனின் ‘இந்துலேகாவே‘ முதல் பெருங்கதை என பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய மலையாள இலக்கியத்தின் பிதாமகர்களுள் ஒருவராக இன்றுவரை கொண்டாடப்படுபவர் தகழி சிவசங்கரன்பிள்ளை. வைக்கம் முஹம்மது பஷீர், கேசவதேவ், உறூப், பாறப்புரத்து, லலிதாம்பிகெ அந்தர்ஜனம், எஸ்.கெ.பொற்றெக்காட், யு.எ.காதர், ஓ.வி.விஜயன், மாதவிக்குட்டி, பட்டத்துவிள கருணாகரன் உள்ளிட்ட முதல் தலைமுறை ஆளுமைகளால் நிறைந்திருந்திருந்தது மலையாள இலக்கிய தளம். உயிரோட்டமிக்க, மிகை வர்ணணைகள் ஏதுமற்ற, மலையாள மொழிக்குரிய பெண்மை கலந்த நளினமான உச்சரிப்போசையுடன் கூடிய படைப்புகள் நிரம்பியது.

தகழியின் எழுத்துகள் ஏழை வர்க்கத்தினரின் பாடுகளை, அல்லல்களைப் பற்றிப் பேசுபவை. வாழ்வின் கசப்புகள், முதலாளி வர்க்கத்தினரின் ஏய்ப்புகள், அடிமைமுறை வழியாக உழைப்பினை உறிஞ்சும் வஞ்சகங்கள், உழைப்பாளிகளின் போராட்டங்கள் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகள் குறித்தும் பேசுபவையாக அவை இருந்தன.ஏணிப்படிகள் நாவல் இத்தகைய கருத்துருக்களிருந்து சற்றே மாறுபடுகிறது. ஒரு தனி மனிதனின் சுயநலம், பதவி மோகம், வஞ்சகம் என அவனுடைய இயல்பினைக் கொண்டு புனையப்பட்டுள்ளது. அரசுக்கு அடிவருடிச் செல்லும் அதிகாரிகள் குறித்து ஏணிப்படிகள் விவரிக்கிறது. அவர் பணியில் சேர்ந்த கணம் பெறும் பாலபாடம் அதிகாரவர்க்கத்தின் விழைவிற்கேற்ப கோப்புகளில் குறிப்பெழுதக் கற்றுக் கொள்வதுதான். அதில் மிக விரைவில் தேர்ச்சி பெறுகிறார் கேசவபிள்ளை. அது அவரை அதிகாரபீடத்தின் உச்சியை நோக்கித் தனது பாதையினை அமைத்துக்கொள்ள ஏதுவாகிறது. அதிகாரத்தின் போதை, அது மனிதனுக்கு மயக்கம், சுகம், மமதை இன்னும் பலப்பலவற்றை அளிக்கிறது. ஒரு முறை அதிகாரத்தின் சுவையை சுவைத்துவிட்ட மனிதனுக்கு அது மனிதவாழ்வின் மற்ற அடிப்படையான நற்பண்புகள் அனைத்தினையும் துச்சமாகக் கருதி பின்னுக்குத் தள்ளிவைக்கத் தூண்டுகிறது. அதன் இன்னுமொரு இன்றியமையாத அங்கமான சுயநலத்தைத் துணைக்கழைத்துக் கொள்கிறது. தனது பதவி விலகல் கடிதத்தினை அரசுக்கு அனுப்பிவிட்ட பிறகும் கூட அவரது மனத்தில் அலையடிக்கும் எண்ணங்கள் மேற்கூறப்பட்ட கருத்துகளுக்கு வலு சேர்ப்பதைக் காணலாம்.

அதிகாரத்துடன் கூடிய சுயநலம் மனிதனைப் பற்றிக் கொண்டுவிட்டால் அவன் அதனைத் தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் சென்றிடத் தயங்கமாட்டான். சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கேசவப்பிள்ளையின் பரிணாம வளர்ச்சி வியப்பளிப்பது. மனச்சான்றின் கழுத்தினை ஏறத்தாழ நெறித்துக் கொன்றுவிட்ட கேசவப்பிள்ளை தான் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அன்றுதான் அதனை ஆழ்ந்த துயிலிலிருந்து எழுப்பி மீள்பார்வைக்கு உட்படுத்துகிறார். மனைவியிடம், காதலியிடம், பெற்றோரிடம், சக அலுவலக நண்பர்கள் உள்ளிட்ட யாரிடமும் அவர் உண்மையாகப் பழகுவதில்லை. அது குறித்து அவர் மன சஞ்சலமடைந்ததுமில்லை. தன் பதவி உயர்வு மட்டுமே அர்ச்சுனனின் பறவைக் கண்ணாக அவருக்குத் தெரிகிறது. கேசவபிள்ளையின் குணநலன்களை விரித்துச் சொல்வதில் செல்வதில் தகழியின் எழுத்து வன்மையும், மேன்மையும் காணலாம்.

Thakazhi Sivasankara Pillai – The Great Indian Writer who Brought...முதன் முதலாக லஞ்சமாக மூன்று ரூபாய் பெறுகிறார். அதைக் கொடுப்பவரது கொடிய வறுமையை அவர் பொருட்படுத்துவதில்லை. அதுவே போல், பணியில் சேர்ந்த காலத்தில் தனது சூழலை மனதில் கொண்டு உணவிட்ட உணவகப் பெண்ணான லட்சுமி அம்மாளைக் குறித்து அவர் நினைப்பதும் இல்லை, எண்ணிப்பார்க்க விரும்புவதுமில்லை. பல நேரங்களில் இத்தகைய சுயநலத்தினை மனம் சுட்டிக்காட்டினாலும் அதனை அவர் பொருட்படுத்தாது மிக இயல்பாகக் கடந்து சென்றுவிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் போராட்டங்கள், அவர்களது அரசியல் நடவடிக்கைகள், பொறுப்பாட்சி கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்திட திவான் முடிவெடுக்கிறார். அதனைச் செயலாக்கிட குண்டர்களுக்குப் பணம் தந்து கல்லெறிந்து கலவரத்தினை உண்டாக்கவும் பிள்ளை ஏற்பாடு செய்கிறார். துப்பாக்கிச்சூடு நடந்து, பல அப்பாவி மக்கள் பலியாகின்றனர். இதனால் மக்களிடையே அவருக்குக் கடும் எதிர்ப்பு உண்டாகிறது. அவரது உயிருக்கும் ஆபத்து உண்டாகும் சூழல் ஏற்படுகிறது.

இந்நிலையில், தனது தாய், தந்தையின் தார்மீக அறம் குறித்தான கேள்விகளை அவர் உதாசீனம் செய்கிறார். அது பற்றி யாருடனும் பேச அவர் விரும்புவதில்லை. களங்கமற்ற, எளிய கிராம மக்களான அவர்களுக்கு தங்களது ஒரே மகனான பிள்ளையின் இத்தகைய செயல்பாடுகள் ஆழ்ந்த வேதனையினை அளிக்கின்றன. அத்தருணத்தில் கேசவபிள்ளையின் தந்தை காங்கிரஸ் கட்சித் தொண்டனால் கொலையுறுகிறார். ஒரு முதியவரின் கொலை மக்களிடையே பலத்த தாக்கத்தினை உண்டாக்குகிறது. மக்கள் கவனம் திசை திரும்புகிறது. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. கேசவபிள்ளைக்கு இது சிறு ஆசுவாசத்தினை அளிக்கிறது. தந்தை மரணமுற்றதும் அவரது நன்மைக்கு என தகழியின் எழுத்து உச்சத்தைத் தொடும் இடமும் உண்டு. அதன் விளைவாக அவரது வாநாள் கனவு நிறைவேறுகிறது. அரசு தலைமைச் செயலராக அவர் பதவி உயர்த்தப்படுகிறார்.

நாடு விடுதலை பெறுகிறது. பிள்ளையைத் தங்களது முதல் எதிரியாகப் பாவித்து அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று மேடைதோறும் முழங்கி வந்த காங்கிரஸ் கட்சியினர், சுதந்தரத்திற்குப் பிறகு தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சியமைத்திடவும் அவருடைய உதவியை நாடுவது சுவையான நகைமுரண். காங்கிரஸ் தலைவர்களின் இச்சூழலை பிள்ளை திறம்பட பயன்படுத்திக் கொண்டு எனக்குத் தெரியாத தேர்தல் தந்திரங்களா என இறுமாப்புடன் கூறுகிறார். அத்துடன் தனது பதவிக்கும் எவ்வித சிக்கலும் உண்டாகாத நிலையினையும் உறுதி செய்து கொள்கிறார்.

ஆட்சிப் பீடத்தில் அமரும் காங்கிரஸ் தலைவர்களின் பொருளாசையினை பிள்ளை பல வகைகளில் தனக்குச் சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் பகுதிகள் மிக்க சுவாரசியத்துடனும், விறுவிறுப்பாகவும் புனையப்பட்டுள்ளது. அதிகாரம் கைக்கெட்டியதும் மக்களின் பிரதிநிதிகள் பர்மிட்டுகள், காடுகளை தங்கள் உறவினர்களுக்கு ஒதுக்கிக் கொள்ளுதல், பேருந்து வழித்தடங்களை ஒதுக்கித் தந்திட என பல்வேறு திட்டங்களுடன் அவரை அணுகுகின்றனர். அவரும் சட்டச் சிக்கல்கள் ஏதும் எழாவண்ணம் அவற்றை பெற்றுத் தருகிறார். இதற்கான தொகையினை பிள்ளைக்கு ‘காணிக்கையாக‘ அவர்கள் அளிகின்றனர். காங்கிரஸ் தலைவர் ஒருவர் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம் உண்டாக்கிக் கொள்கிறார்.தனது கணவரின் பதவி உயர்விற்காக ‘எதையும்‘ இழக்கத் துணியும் பகவதி அம்மாளின் கதாபாத்திரம் வாசகனுக்கு அதிர்ச்சியளிக்கலாம். அதை மிக்க துணிவுடன் தகழி உருவாக்கியுள்ளார். பகவதி அம்மாள், தலைமைச் செயலரான தனது கணவரின் திறமையின்மையினால் போட்ட முதலுக்குக்கூட பலனில்லாது போனதே எனப் புலம்பும் கட்டம் அதிகாரவர்க்கத்தின் உள்ளடுக்குகளின் உண்மையினைப் பட்டவர்த்தனமாக்குகின்றன. கேசவபிள்ளையும் தனது மனைவியிடம், மனைவிமார்கள் மனது வைத்தால் கணவர்களுக்கு பதவி உயர்வு உறுதி எனக் கூறுகிறார். இருப்பினும், அத்தகைய செயல்கள் இறுதியில் அளிப்பது விரக்தியையும், வெறுமையையுமே. இதனையும் தகழி பதிவாக்கிடத் தவறவில்லை. தனி மனிதன் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் அதனூடே இணைந்துவரும் வெறுமையும் வாழ்வின் தவிர்க்கவியலாத கூறுகள். இவ்வாறு மனித மனதின் ஊசலாட்டங்களை தகழி எளிய வாசகனும் இரசிக்கும் வண்ணம் சொல்லிக் கொண்டே செல்கிறார். இது போன்ற ஒரு மனவோட்டத்தினை தமிழின் மற்றொரு படைப்பாளுமையான ஆதவனின் ‘காகித மலர்களில்‘ காணலாம்.
தான் தனது பணிக்காலத்தில் எவருக்காவது உதவியிருக்கிறோமா என்ற எண்ணம் அவருக்கு ஓய்வு நாளன்று தோன்றுகிறது. சிந்தித்துப் பார்த்தால் தன்னைச் சந்திக்க தனது அலுவலக வாயிலில் காத்துக் கிடந்த எளிய மனிதர்கள் குறித்த பிரக்ஞையே அவருக்கில்லாதிருந்ததை உணர்ந்து துணுக்குறுகிறார். பல இடங்களில் கேசவபிள்ளையின் மனம் சஞ்சலத்திற்குள்ளாகுகிறது. எனினும், தன்னைத் தனது அதிர்ஷ்டமும், விதியும் காப்பாற்றிவிடும் என்பதாகத் தன்னைத் தேற்றிக் கொள்கிறார். பொதுவுடைமைக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தகழியின் இத்தகைய கதாபாத்திரம் மிக மாறுபட்டு அமைந்திருப்பதனை பல இடங்களில் காணலாம்.

அவ்வாறே, அரசின் உயர்ந்த பீடங்களில் இருக்கும் அதிகாரிகள் தாங்கள் கையூட்டுப் பெற்றவர்களின் வயிற்றெரிச்சலும், கோபத்தின் சாபங்களும் தங்களைப் பாதிக்காதிருக்கவும், பதவி உயர்வுக்காகவும் ‘சாஸ்தாவிற்கு‘ பூஜையும், புஷ்பாஞ்சலியும் நடத்துவதை தகழி மிக்க அங்கதத்துடன் கூறுகிறார்.
கேசவபிள்ளையின் காதலியும், அவரது முன்னேற்றத்திற்குப் படியமைத்து உதவிய தங்கம்மாள், பின்னாட்களில் மடம் ஒன்றினை உருவாக்கி மதிப்பிற்குரிய மாதாவாகிறாள். இருப்பினும், காவி உடையிலேயே பிள்ளையுடனுனான உறவு தொடர்கிறது. இன்றைய நாட்களில் காவியுடை தரித்தலையும் மகான்கள் எவ்வாறு அரசில் செல்வாக்கினையும், அரசினையே ஆட்டிப்படைக்கும் சூத்திரதாரிகளாக அவதாரமெடுக்கும் அவலத்தின் அந்தரங்கத்தினை தகழி அன்றே வெளிச்சமாக்குகிறார். கம்யூனிஸ்டுகளை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் மனோநிலையினையும் படைப்பாளி பதிவாக்குகிறார்.

சங்கரன்பிள்ளை எனும் போராட்டவீரர் தியாகிகளுக்கான உதவித் தொகை பெற தலைவரைச் சந்தித்து மனம் வெதும்பி மீள்வது மிக உருக்கமானது. சுதந்தர திருவாங்கூர் கோஷமிட்டுத் திரிந்த பலர் இப்போது கதராடையும், காந்தி குல்லாயினையும் உடுத்தி வேஷமிட்டுத் திரிவதும், திடீரென அவர்கள் முக்கிய பிரமுகர்களாக உருமாற்றமடைந்ததையும் கண்டு மனம் குமுறுகிறார். ஊழல்கள் மலிந்த ஆட்சியினையும் கண்டு வேதனையுறுகிறார். இருப்பினும் அவர் விடுதலை குறித்தும், அனைவருக்குமான உரிமைகள் குறித்தும் மிக்க கண்ணியத்துடனும், மனமுதிர்வுடனும் தன்னைத் தேற்றிக் கொள்ளும் பகுதி அற்புதமாகக் கூறப்படுகிறது. இதனை வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டும்.

Thakazhi Sivasankara Pillaஏணிப்படிகள் கேசவபிள்ளை எனும் தனி மனிதனின் வாழ்வினைக் குறித்ததாக புனைவாக மட்டுமன்றி கதை சொல்லப்படும் காலம் குறித்த சிறந்ததொரு அரசியல் வரலாற்றுப் பதிவாகவும் புனையப்பட்டுள்ளது. தகழியின் நேர்மையான எழுத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. புனைவில் இரு பெரும் பிரதான கட்சிகளின் செயல்பாடுகள், ஆட்சி முறைகள் குறித்து நடுநிலையில் நின்று புனைவினை நடத்திச் செல்கிறார் தகழி.

புனைவில் சங்கரன்பிள்ளை, கிருஷ்ணன் நாயர் இருவரும் தகழியின் அத்தகைய நடுநிலைமைக்கேற்ற பொருத்தமான கதை மாந்தர்களாகின்றனர். அரசியல் சாதுர்யம் எதுவும் அறியப்பெறாத, கொள்கைகளுக்காக தங்கள் வாழ்வினை அர்ப்பணித்து, வாழ்வாதாரத்தினை இழந்து போராடும் எளிய தொண்டர்களுக்கு இலக்கணமாக அவர்கள் திகழ்கின்றனர். இருவருக்குமே தங்கள் போராட்டத்தின் பலன் எதுவுமே கிடைக்கப் பெறாது, வாழ்வினைத் தொடர வழியின்றி, திசையறியாது நிற்கின்றனர்.

இருவரும் தாங்கள் சார்ந்தியங்கிய கட்சித் தலைவர்களை உதவித்தொகை பெறுவதற்காக அணுகிய தருணங்களில் அவர்கள் நடத்தப்பெறும் முறை அவர்களுக்கு கண்ணியக்குறைவினையும், ஆழ்ந்த மனக்காயங்களையும் உண்டாக்குகிறது. அரசின் சிகப்பு நாடா நடைமுறைகளால் அலைக்கழிக்கப்பெற்று, வெறுப்புற்று வேறு தேர்வின்றி தற்கொலை செய்து கொள்கின்றனர். எண்ணற்ற எளிய, கீழ்நிலைத் தொண்டர்களின் அவலநிலைக்குத் தக்கதோர் உதாரணமாகிறது அவர்களது வாழ்வு.

தகழியின், தோட்டியின் மகன், மலம் அள்ளும் கீழ்நிலைத் தொழிலாளர்களின் அவல வாழ்வினை சித்தரிக்கும் படைப்பாகும், தகழியின் முக்கிய படைப்புகளில் இதுவும் ஒன்று, மேலும், நான்கு தலைமுறைகளின் வாழ்வினை உள்ளடக்கியதாக விரியும் கயிறு மிக அரியதொரு படைப்பாகிறது. 1885 – 1971 ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த பல நூறு கதை மாந்தர்களைக் கொண்டு உண்டாக்கபட்ட இது 1300 பக்கங்களைக் கொண்ட நீண்டதொரு புதினமாகும். .N.B.T (நேஷனல் புக் டிரஸ்ட்) கயிறு நாவலினை தொடர்கல்வி நூல் வரிசையில் குறுநாவலாக 2002இல் ரூ 30 விலையில் வெளியிட்டது. மண்டை ஓடு குறுநாவலும் புரட்சியினை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டது. .திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் தகழி பட்டம் பெற்றார். முதல் பணி கேரள கேசரி இதழில் செய்தியாளர். பின்னர், அம்பலப்புழா நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். கம்யூனிச சிந்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களிலும் அவர் பங்கேற்றார். அவரது இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக சில காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

தனது இளம் வயதிலேயே அதாவது பதிமூன்று வயதிலேயே அவர் தனது முதல் சிறுகதையினை எழுதினார். நாற்பது நாவல்கள், சற்றேறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரண்டு நாடகங்கள் என அவரது எழுத்துக்களம் பரந்து விரிந்தது. அவருடைய ஏழு நாவல்கள் திரைப்படங்களாக்கப் பெற்று பல விருதுகளையும் பெற்றுள்ளன. செம்மீன் அவற்றில் முக்கியமானதொன்றாகும். செம்மீன் 19 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அத்திரைப்படம் 15

நாடுகளில் வெளியானது. ஏணிப்படிகளும் திரைப்படமாகியது. மலையாள படைப்புலகின் மிக அரிய கௌரவமான ‘எழுத்தச்சன் விருது உட்பட கேரள சாகித்ய அகாதெமி, வயலார் விருது சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, பத்மபூஷன் என எண்ணற்ற விருதுகள் அவருக்கு சாத்தியப்பட்டன.
N.B.T. (நேஷனல் புக் டிரஸ்ட்) இதனை 1977இல் தனது அனைத்திந்திய நூல் வரிசையில் பதிப்பித்தது. சிறந்த தொழிற்சங்கவாதியாக விளங்கிய சி.ஏ.பாலன் இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார், மொழிபெயர்ப்பு மிக எளிய நடையில் தடையின்றி உருவாக்கப்பட்டுள்ளது. தகழியின் படைப்புகள் இந்திய மொழிகளிலும், பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவர் கடந்து சென்ற தலைமுறையினைச் சேர்ந்தவராக இருப்பினும் இக்கணம் வரை மலையாள படைப்புலகிலும், தமிழ் வாசகர்கள் மனதிலும் நிலையான இடம் பெற்றிருக்கிறார்..