Children's essay on Pathanichorum Malaimaina song Article by Dhurai Arivazhagan பதனிச்சோறும் மலைமைனா பாட்டும் சிறார் கட்டுரை - துரை. அறிவழகன்




அன்புள்ள அப்பாவுக்கு,

அன்பு முத்தங்களுடன் மகி எழுதிக் கொள்வது.
இப்பொழுது நான் எங்கிருக்கிறேன் தெரியுமா? தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இங்கு பொழுது போவதே தெரியவில்லை, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. தாத்தாவோடு வயல், பனங்காடு என்று சுத்துவதற்கே நேரம் போதவில்லை. எத்தனை அதிசயமான பறவைகளை எல்லாம் இங்கு பார்க்கிறேன் தெரியுமாகரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா  என்று ஏராளமான பறவைகளை இங்கு பார்க்கிறேன். எல்லா பறவைகளின் பெயர்களும் தாத்தாவுக்கு தெரிந்திருக்கிறது தெரியுமா? குளத்தங்கரையில் இந்த பறவைகள் என்றால் வயல்வெளியில் பறந்து திரிகின்றன நாற்றாங்குருவி, தவிட்டுக் குருவி போன்ற பறவைகள்

இது மட்டுமா, தாத்தா வீட்டுக்கு முன்பாக இருக்கும் தொழுவத்தில் செவலை, உப்பளச்சேரி, புலிக்குளம், புங்கனூர், காரி என்று ஏராளமான மாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாட்டின் குணாதிசயங்களையும் கதை கதையாகச் சொல்வார் தாத்தா. ஒரு மாட்டின் கொம்புகளுக்கு மத்தியில் அழகான நட்சத்திர வடிவ பொட்டு இருக்கிறது; அதைப் பார்த்து அதிசயித்தே போய்விட்டேன்.

மாட்டு தொழுவத்துக்குப் பக்கத்திலேயே  பெரிய ஆட்டுக் கொட்டில் இருக்கிறதுஆட்டுக் கொட்டிலைச் சுற்றிலும் வேம்பு, பூவரசு, இச்சி, அகத்தி, முள்முருங்கை என்று விதவிதமான மரங்கள் இருக்கின்றன். நம் மாநிலத்து மரமான பனை மரம் இங்கு ஒரு காடாக வளர்ந்து காட்சியளிக்கிறது. அப்பப்பா, பனை மரத்தில் தான் எத்தனை வகைகள்குமுதிப்பனை, சாற்றுப்பனை, குடைப்பனை, குண்டுப்பனை……இப்படி முப்பத்தி நாலு வகைகள் இருக்கிறதாம்; மூச்சுவிடாமல் தாத்தா சொல்லிக் கொண்டே போகிறார்.

ஒரு ஆண்டுக்கு நூத்தி எண்பது லிட்டருக்குக் குறையாமல் பனை மரத்தில் இருந்து பதனீர் கிடைக்குமாம். ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரைக்கும்தான் பதனீர் சுரக்குமாம். தாத்தா சின்ன வயதில் ஒரு நாளைக்கு எழுபது மரம் ஏறி இறங்கிவிடுவாராம்; அம்மாடியோவ்.

என்னுடைய பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் கையில் இருக்கும் ஏட்டுப் புத்தகம் பனை ஓலையில் செய்யப்பட்டதாம், தாத்தா சொன்னார். அந்தக் காலத்தில் நோட்டுப் புத்தகமெல்லாம் கிடையாதாம்; பனை ஓலைப்பட்டைகளை பதப்படுத்தி, வெயிலில் காயவைத்து எழுத்தாணியால்தான் எழுதுவார்களாம்

தாத்தாவோடு பனங்காட்டுக்குள் சுற்றி வரும் போது அதிசயமான மஞ்சள் நிற மைனாக்களைப் பார்த்தேன். அழகாக இனிய குரலில் பாடுகின்றன இந்த மைனாக்கள்; அதுமட்டுமல்லாமல் கிளிப்பிள்ளை போல நாம் பேசுவதை அப்படியே திருப்பிப் பேசுகின்றன. இவைமலை மைனாக்கள்என்று சொன்னார் தாத்தா. இந்த மைனாக்கள் பனை மரத்தில் பொந்து அமைத்து வாழ்கின்றன

ஒரு குஞ்சுப் பறவை பறக்க ஆரம்பிக்கும் போது பெரிய பறவைகள் சுற்றி நின்று விசிலடித்து உற்சாகப் படுத்தியதைப் பார்த்தேன். அப்படி ஒரு வேடிக்கையாகவும், அதிசயமாகவும் இருந்தது. காட்டுக்குள் தாத்தாவோடு சுற்றி வரும் போது இப்படி அதிசய காட்சிகள் என்றால், வீட்டில் இருக்கும் போது விதவிதமான பலகாரங்கள் செய்து அசத்திவிடுகிறார் பாட்டி.

இன்று காலையில் பாட்டி செய்து கொடுத்த  ‘பதனிச்சோறுஅப்படி ஒரு ருசி. நம் வீட்டைப் போல சில்வர் பாத்திரங்கள் எல்லாம் இங்கு கிடையாது. தின்பண்டங்களை எல்லாம் ஓலைக் கொட்டானில்தான் வைத்திருக்கிறார் பாட்டி. இந்த ஓலைக்கொட்டானில் பாட்டி வைத்திருக்கும் சில்லுக் கருப்பட்டியின் வாசனையையும், சுவையையும் சொல்லவே முடியாது. சில்லுக்கருப்பட்டி மட்டுமில்லை, வட்டக்கருப்பட்டி, சுக்குக் கருப்பட்டி, மிளகு கருப்பட்டி, இஞ்சி கருப்பட்டி, புட்டு கருப்பட்டி என்று எத்தனையோ விதமான கருப்பட்டி மிட்டாய்களை செய்து ஓலைக் கொட்டானில் பத்திரமாக வைத்திருக்கிறார் பாட்டி

தினமும் மாலையில், கருப்பட்டி அப்பம், கம்பு அதிரசம், கருப்பட்டி வெந்தயக்களி, கருப்பட்டி தேங்க்காய் பால், கருப்பட்டி கொழுக்கட்டை என வெரைட்டியாக தின்பண்டங்களைச் செய்து அசத்திவிடுகிறார் பாட்டி. நீங்கள் கடையில் இருந்து கோதுமை அல்வாதான் வாங்கிக் கொடுத்து இருக்கீங்க. பாட்டி என்னடாவென்றால், கருப்பட்டி கேரட் அல்வா, கருப்பட்டி பீட்ரூட் அல்வா, கருப்பட்டி பூசணி அல்வா என்று புதுசு புதுசாக செய்து  கொடுக்கிறார். இதுமட்டுமா, சாமை பனங்கற்கண்டு லட்டு, தினை சுக்கு மிட்டாய், எள்ளு சீடை, பாசிப்பயறு லட்டு, நரிப்பயறு லட்டு என்று இதுவரை கேள்வியே படாத தின்பண்டங்களைச் செய்து திக்குமுக்காட வைத்துவிடுகிறார். அவ்வளவையும் தின்று தீர்க்க இந்த ஒரு வாய் பத்தவே பத்தமாட்டேன் என்கிறது.

தாத்தாவின் வயக்காட்டில் வீரன் என்று ஒரு மாமா வேலை செய்கிறார். என்மீது ரொம்பவும் அன்பு காட்டுவார். எனக்காக பனை மரம் ஏறி நுங்கு எல்லாம் வெட்டி கொண்டுவந்து தருவார். வீட்டுக்குப் பின்புறத்தில் பனங்கொட்டைகளை புதைத்து வைத்து அதிலிருந்து முளைத்து வரும் கிழங்கை எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார். வீரன் மாமா கொண்டு வந்து தரும் பனம்பழத்தை அவித்து சாறெடுத்து அந்த சாற்றையும் பனம் பழத்துச் சதையையும் உருட்டி திரட்ட பாட்டி ஒரு தின்பண்டம் செய்வார் பாருங்கள், அப்படித்தான் சுவையாக இருக்கும். பனங்கொட்டையில் இருந்து கிழங்க்கை பறித்த பிறகு கொட்டையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை முட்டையும் ஜெல்லி மிட்டாய் போல ரொம்ப சுவையா இருக்கும்.

வீரன் மாமா பனை ஓலையிருந்து செய்யும் நார்க்கொட்டானில் தண்ணீர் ஊற்றினால் ஒரு சொட்டு கூட கீழே சிந்தாது. வீரன் மாமாவின் மந்திரக் கையில் இருந்து உருவாகும் பொருட்கள், தாத்தா வீட்டையே நிறைத்துக் கொண்டிருக்கிறது. குருத்தோலையில் இருந்து அஞ்சறைப்பெட்டி, கடகப்பெட்டி, வெற்றிலைக்கொட்டான், பாய்கள், தடுக்கு என்று வீரன் மாமா செய்யும் பொருள்களுக்கு ஒரு அளவே இல்லை. எனக்கும் விளையாடுவதற்கு குருத்தோலையில் கிளி, கிலுகிலுப்பை எல்லாம் செய்து கொடுத்துள்ளார்.

வீரன் மாமாவுக்கும் தாத்தா மாதிரி எத்தனை விஷயங்கள் தெரிந்திருக்கிறது தெரியுமா? அவர் உடல் வலுவாக இருக்க காரணம், பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி அதனுடன் தேங்காய், உப்பு போட்டு தினசரி சாப்பிட்டு வருவது தானாம். ஒரு நாள் காலில் புண் வந்த போது பனம்பூவை சுட்டு தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவிட்டார்; எரிச்சல் அடங்கி ஒரே நாளில் புண் ஆறிப்போய்விட்டது தெரியுமா! இதே மாதிரி கண்ணில் புண் வந்த ஒரு குழந்தைக்கு குருத்து மட்டையை பிழிந்து எடுத்த சாறை கண்ணில் விட்டு குணப்படுத்தினார் தெரியுமா!

இதையெல்லாம் விட அதிசயம். வீரன் மாமாவின் அசத்தலான சமையல். பாட்டிக்கு தெரியாதா புது புது விஷமெல்லாம் வீரன் மாமவுக்கு தெரிந்து இருக்கிறது. ஒரு நாள் பனங்கிழங்கு மாவை இட்லி மாவுடன் கலந்து வீரன் மாமா செய்த பனங்கிழங்கு இட்லியைப் பார்த்து பாட்டியே அசந்து போய்விட்டார்.

பனங்காட்டில் பாடித் திரியும் நாமக்கோழி, சாக்குருவி, செம்புத்தான் பட்சிகளையும், காட்டுக்காடை, வாள்காடை, பூங்காடை, பக்காடை, அரிகாடை ஆகிய காடை வகைகளையும் வீரன் மாமாதான் எனக்குக் காட்டினார். வீரன் மாமாவோடு சுற்றி வரும் போதுதான் பனை ஓலை நுனியில் தூக்கணாங்குருவி கட்டியிருந்த அழகான வீட்டைப் பார்த்தேன்

பதனீரோட மருத்துவ குணத்தைப் பற்றி வீரன் மாமா எவ்வளவோ தெரிந்து வைத்திருக்கிறார். மலச்சிக்கல், வயிற்றுப்புண், இருதய நோய் ஆகியவைகளுக்கு பதனீர் நல்ல மருந்தாம்பற்களையும், ஈறுகளையும் வலுவாக்குமாம். இது மட்டுமல்லாமல் சொறி, சிரங்கு உட்பட சகல தோல் வியாதிகளையும், கண் நோயையும் பதனீர் குடிப்பதால் குணப்படுத்தலாமாம்.

பதனிச்சோறு சாப்பிட்டுக் கொண்டும், மலை மைனாக்களின் பாட்டை கேட்டுக் கொண்டும், தாத்தா, பாட்டி, வீரன் மாமாவோடு இங்கேயே இருந்துவிடலாம் போல தோன்றுகிறது. ஊருக்குப் போகும் போது பாட்டியையும் கையோடு நம் வீட்டிற்கு அழைத்துப் போக வேண்டும்விதம் விதமான கருப்பட்டி பலகாரம் செய்வதற்கு பாட்டியிடம் சொல்லி அம்மாவிற்கு சொல்லித்தர சொல்ல வேண்டும். இது மட்டுமில்லாமல் இரண்டு மலை மைனாக்களையும், சில ஓலைக்கொட்டான்களையும் கொண்டு போகவேண்டும்

.கே. பை.
அன்பு முத்தங்களுடன்,
மகி.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “பதனிச்சோறும் மலைமைனா பாட்டும் சிறார் கட்டுரை – துரை. அறிவழகன்”
  1. பதனிச்சோறும் மலைமைனா பாட்டும் சிறார் கட்டுரை – துரை. அறிவழகன்
    கடித வடிவில் அமைந்த கட்டுரை கிராமப்புற சுற்றுச்சூழலை மிக அழகாக எடுத்துக்காட்டுகிறது. பறவைகள், ஆடுமாடுகள், பனைமரங்கள், பதனீர், கற்பட்டிகள், உணவுவகைகள் என்று எவ்வளவு விபரங்கள்!
    எங்களைப் போன்ற நகரவாசிகள் அறிந்திடாத கிராம வாழ்க்கை முறையையும் கிராம சுற்றுசூழல் பற்றியும் இந்த கட்டுரையைப் படித்து நிறைய
    தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *