சிறுகதை : மூன்று கிணறுகள் - இராமன் முள்ளிப்பள்ளம் sirukathai: moondru kinarugal - raman mullippallamசிறுகதை : மூன்று கிணறுகள் - இராமன் முள்ளிப்பள்ளம் sirukathai: moondru kinarugal - raman mullippallam

 

 

வேதாரண்யம் வலங்கைமான் வந்து அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்தான்.. வடக்குத் தெரு முனையிலிருந்து வடக்கு நோக்கி சென்ற தெருவில் அந்த விடுதி இருந்தது. விடுதியை அடுத்து மேற்கு கிழக்காக சென்ற குடவாசல் சாலை. நேராக வடக்கே சென்றால் குடமுருட்டி. காவிரியின் ஒரு கிளை. கல்லணையிலிருந்து பிரியும் ஐந்து ஆறுகளில் இதுவும் ஒன்று. எல்லாம் மீண்டும் திருவையாற்றில் சங்கமிக்கின்றன. மிகுந்த களைப்புடன் அறை எடுத்தான். குளித்ததும் உற்சாகம் வந்தது. விடுதிக்கு வெளியே வந்து குடமுருட்டி நோக்கி நடந்தான். 1964 ஆம் வருடத்தை நினைவில் கொண்டு வந்தான். அருணாச்சலேஷ்வரர் கோவிலில் இருந்து குடமுருட்டி சென்றால் இருபுறமும் நெல் வயலகள் கரும் பச்சை தாள்களுட்ன் ஆடும். தற்போது மருந்துக்கு கூட நெல் வயல் இல்லை. எல்லாம் பொருளாதார மாற்றம். பெரு மூச்சு விட்டான்.

ஆற்றுப் படித்துறைக்கு வந்தான். படிகள் அனைத்திலும் மது பாட்டில்கள். உடைந்தவை, உடையாதவை எல்லாம் எல்லாப் படிக்கட்டுக்களிலும் சிதறி கிடந்தன.  சரி அடுத்த படித்துறைக்கு சென்றான். அங்கு மொத்தப்படிகட்டுக்களும் தென்படவில்லை. பெரும் பாட்டில் குவியலில் ஒட்டு ,மொத்த .படித்துறையும் மூடப்பட்டிருந்தது. அது செப்டம்பர் மாதம். வட மேற்கு தேசத்தில் பெய்த நல்ல மழை ஆற்றை நிரப்பியிருந்தது. கடைசிப் படியில் இருந்த மதுப் புட்டிகளை வேகமாக ஓடிய நீர் அசைத்து ஒரு ஓல ஓசையை ஏற்படுத்தியது. அவன் நினைவு அவனை வருத்தியது. அவன் தன் உடன் பிறப்புக்களுடன் இதே ஆற்றில் குளித்து விளையாடியிருக்கிறான்.  சுமார் நூறு குழந்தகள் ஆற்றில் கும்மாளம் போட்டு குளிப்பார்கள். அந்தக் குழந்தைகள் எங்கே போனார்கள் ? இன்று ஏன் ஆற்றங்கரையில் ஒரு குழந்தை கூட இல்லை. சமூகம் எங்கே போய்க் கொண்டுள்ளது ? தாத்தாவின் புராதன வீடு அந்த ஊரில் இருந்தது, பெரிய வீடு அரண்மனை என்றும் சொல்லலாம், வீட்டை விற்று கால் நூற்றாண்டு ஆகி விட்டது வீடு பல கைகள் மாறி விட்டது என அறிந்தான். ஆனால் அவன் ஒரு வீடு வாங்கும் தகுதியை தற்போதுதான் பெற்றான், தாத்தா வீடு கூறுகள் போடப்பட்டு விற்பனை ஆகிக் கொண்டிருந்த செய்தி கிடைத்தது ஏஜெண்ட் அழைப்புக்கு காத்தான்.

கைபேசி ஒலித்தது. எடுத்தான், மறு முனைக் குரல்

’’வணக்கம் வேதாரண்யம் நீங்கதானே’’

’’ஆமாங்க நீங்க’’

’’நான் வில்லா வீடு ஏஜெண்ட் நீங்க கேட்டிருந்தீங்க’’

’’ஆமா ஆமா எங்க இருக்கீங்க உங்கள எங்க பாக்குறது’’

’’நீங்க இருக்குற லாட்ஜுக்கு வந்துடறேன்’’

’’இப்ப நான் குடமுருட்டி கரையில’’

’’சரி நான் வர பதினஞ்சி நிமிடம் ஆகும்’’

’’வாங்க நானும் விடுதிக்கு வந்துடறேன்’’

வேதாரண்யம் அறை பெரியது. குளிர் பதனம் நன்றாக வேலை செய்தது. அவன் வந்து பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. குடமுருட்டி வரை நடந்த களைப்பும் அறையின் குளிர் சாதனமும் ஒரு ஆழ்ந்த தூக்கத்தை தருவித்தது.

அவன் கனவில் காலம் பின்னோக்கி சென்றது, அந்த வீடு வருகிறது. தெற்கு பார்த்த வீடு. அன்றைய பழமொழி ‘’ வடக்குப் பார்த்த மச்சி வீட்டை காட்டிலும் தெக்கு பாத்த குச்சு வீடு பெரிசு’’ ஆனால் அவன் தாத்தாவின் வீடு தெற்கு பார்த்தது மட்டும் அல்ல அவர்கள் வீட்டில் மட்டும்தான் மாடி இருந்தது. மாடிமேல் மொட்டைதான். இருந்தாலும் அது ஒன்றே மொட்டை மாடி வீடு. ஊரில் அனைவரும் அதை மாடி வீடு என்றனர். கிழக்கு மேற்காக நூற்றி அறுபது அடி. மேற்கு பக்க என்பது அடியில் வீடு, தெற்கில் இருந்த வாயிலில் இருந்து வடக்கே குடவாசல் சாலை நீண்ட வீடு. இன்றைய அளவில் அரைக் கிலோ மீட்டர்.

கனவில் கண்டான் நீண்ட கீழ் திண்ணை., அடுத்து மேல் திண்ணை. நடையில் போனால் ஒரு வராந்தா. அதன் மேல் மரச்சட்டங்களும் அதன் மேல் நாட்டு ஓடு கூரையும், ஐமபது அடி நடந்தால், ஆகாயம் காட்டிய முற்றம். இடது புறம் அடுத்து அடுத்து இரு அறைகள். முதல் அறையில் கிருட்டிண லீலை படங்கள். பெரிய துணியால் மூடி வைத்திருந்த்னர். நிர்வாண படங்க்களை குழந்தைகள் பார்க்க கூடாது என கண்டிப்பு. புது மண தம்பதிகள் தங்கும் போது படங்களின் திரை விலகும். முற்றத்தின் மேற்கே வலது புறம் ஓடிய வராந்தா அதை அடுத்து உள் வராந்தா. மேலே சட்டங்கள் அதன் மேல் நாட்டு ஓடு கூரை. அடுத்து சமயலறை அதன் கிழக்கே ஒரு கிணறு. அதின் அரை வட்டம் சமயலறையில், மீதி அரை வட்டம்  மேலும் தொடர்ந்த நடையில்.. நடை முடிவில் இடது புறம் பெரிய அறை. அதனுள் வாழைக் களஞ்சியம். வாழைக் காய்களை உள்ளே போட்டு கீழே புகை மூட்டினால் காயும் பழுக்கும். அதோடு வீடு முடிந்து நாற்புறம் சூழ்ந்த உயர்ந்த சுவர்களுக்குள் ஒரு தோட்டம். என்பது அடிக்கு  நூறு அடி அதில் ஒரு கிணறு. மழைகாலத்தில் கை சொம்பு கொண்டு நீர் எடுக்கலாம். இராட்டினமும் கயிறும் தேவை இல்லை. வடக்கு வாயில் திறந்தால் குடவாசல் சாலை வரை ஆயிரம் அடிக்கு தோட்டம். தென்னை, மூங்கில் மலர்ச் செடிகள். மலர் கொடிகள், மாதுளை, கொய்யா, கருவேப்பிலை. துளசிக் காடு. வீட்டின் மூன்றாம் கிணறு. வீட்டு வாயிலின் கிழக்கே துவங்கும் என்பது அடி அகல தோட்டம் இங்கே வந்து வீட்டுப் பின்புற தோட்டத்துடன் கூடும் இடத்தில் மூங்கில் கூட்டம். அவ்வப் போது அவை உரசி பேரொலி ஏற்படுத்தும்  ஒரு ஒலி தூக்கத்தை கலைத்தது.

வேதாரண்யம் விழித்தான். தட்டப்பட்ட கதவை திறந்தான்.

வெளியே நின்றவர் சொன்னார்

’’நான், அருணாச்சலம், வில்லா ஏஜெண்ட்’’

வேதாரண்யம் கை குலுக்கினான்.

’’வாங்க’’

அறையினுள் இருவரும் அமர்ந்தனர்.

’’போகலாமா’’ அருணாச்சலம் கேட்டார்’’

இருவரும் எழுந்தனர். வேதாரண்யம் அறையை பூட்டினார். அருணாச்சலம் பின்னே சென்றார். விடுதியை அடுத்தே வடக்குத் தெரு துவங்கியது. இரு நூறு அடி நடந்திருப்பார்கள். வலதுபுறம் ஒரு தோட்டத்தின் திறப்பில் விளம்பரம் ‘’ தோட்டம் சூழ்ந்த வில்லா வீடுகள் விற்பனைக்கு; தொடர்புக்கு அருணாச்சலம், அடுத்து ஒரு கைபேசி எண்.. அருணாச்சலம் பேச்சை துவக்கினார்

‘’சார் நீங்க வாங்குறது முதலீட்டுக்கா இல்ல குடியிருக்கவா’’

’’இரண்டும் இல்ல’’

’’வீடு காட்டலாமா பாக்குறீங்கலா’’

ஆம் என தலையசைத்தார் வேதாரண்யம்.

இருவரும் வில்லா வீடுகளின் முன் இருந்த தோட்டத்தில் நடந்தனர்.

‘’சார் இங்க எட்டு வில்லா பண்ணியிருக்கோம். முதல் ஆறு வீடு வடக்கு தெற்கா இரு நூறு அடி, கிழக்கு மேற்கா என்பது அடி. இதோடு ஒவ்வொரு வில்லா முன்னாலயும் தோட்டம் இருக்கு பாருங்க. வீட்டு அளவுக்கு தோட்டம். ஆனா கிழக்கு கடசியில பத்தடி வழி, எல்லாருக்கும் பொது. ஆனா வடக்கு கடைசி வில்லா இரண்டும் நூறு அடி அகலம்.. கடைசியில ஒரு நூறு அடி பார்டர் மாதிரி கொடுத்திருக்கொம், அதுவும் பொது. கார் பார்க்கிங். மொத்தம் ஆயிரத்து ஐநூறு அடி நீளம், அகலம் நூற்றி அறுபது அடி.’’

’’ வடக்கு தெற்கா சுமார் அரைக் கிலோ மீட்டர் இல்லையா ? இது வேதாரண்யம் கேள்வி.

’’எப்படி சார் அவ்வளவு துல்லியமா சொல்றீங்க.’’

’’ஏதோ ஒரு ஊஹம்தான்’’’

’’அப்பறம் கழிவறை நீர் வெளியேற மூனு செப்டிக் குழி இருக்கு. நல்ல ஆழம், . இருபது வருடத்துக்கு கவலை இல்லை. ஒன்பது வீட்டு கழிவும் இந்த மூனு செப்டிக் குழியில விழும். எல்லாம் மூடப்பட்ட நிலத்தடி குழாய்கள் ஜி ஐ பைப். எந்த வாடையும் வராது..

’’ஏன் ஓவ்வொரு வீட்டுக்கும் ஒரு செப்டிக் குழி பண்ணியிருக்கலாம் இல்லையா ?

’’இல்ல சார் இது பெரிய குழி, எல்லா வீட்டுக்கும் போதும். அப்புறம் இடத்த மிச்சம் பண்ணி தோட்டத்த காட்டணும்.’’

’’மூன்று கிணறுகள் மூன்று செப்டிக் குழியா மாறிடுச்சா ?’’

’’அது எப்படி சார் அவ்வளவு துல்லியமா சொல்றீங்க’’

’’ஏதோ ஒரு ஊஹம்தான்., சரி குடி நீருக்கு என்ன பண்ணியிருக்கீங்க

எல்லா வீட்டுக்கும் பஞ்சாயத்து குடி நீர் குழாய் கனெக்‌ஷன் வரும், தண்ணியும் வாரம் ரெண்டு தடவ வரும்

இருவரும் விடுதி திரும்பினார்கள்.

’’சார்,. உங்களுக்கு எந்த வில்லா வேணும் சொல்லவே இல்லையே’’

’’எனக்கு மூன்று கிணறு இருக்குற வில்லா வேணும்..’’

One thought on “சிறுகதை : மூன்று கிணறுகள் – இராமன் முள்ளிப்பள்ளம்”
  1. “எனக்கு மூன்று கிணறு இருக்கிற வில்லா வேண்டும்” – இந்தச் சொற்றொடர் நமது உள்ளத்தை அதன் உறக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது.

    பழைய மாடி வீட்டுச் சித்தரிப்பு, செட்டி நாட்டு வீடுகளை நினைவூட்டுகிறது.

    சிறப்பான சிறுகதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *