நினைவே பேசுவாயா? உண்மையாகவும் உருவகமாகவும் நாவுகள் வெட்டி வீசப்படும் இந்த நாட்டில் அது நிகழப்போவதேயில்லை. குற்றவாளிக்கான மரணதண்டனை சாலையோரத்திலும், கிராமப்புற வயல்வெளிகளிலும்தான் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தேவைக்கும் அதிகமான அளவில் “நிஜ வாழ்வு” உள்ளதுதான், எனினும் புனைவுகளைப் பற்றி நாம் இப்போது பேசுவோம். ஆர்டிகிள் 15 நினைவிருக்கிறதா? தங்களுக்கு வழங்கப்படும் கூலியோடு வெறும் மூன்று ரூபாய்கள் உயர்த்திக் கொடுக்கச்சொல்லி இரு இளம்பெண்கள் கேட்கின்றனர். அதற்காய் அவர்களுக்கு அந்த ஒப்பந்தக்காரர் பாடம் புகட்டுகிறார். (அவர்களை வன்புணர்ந்து கொலை செய்வதன்மூலம். நீங்கள் கேட்பதால் சொல்கிறேன், அதுதான் அந்தப்பகுதிகளில் வழக்கமாக வழங்கப்படும் பணம்.) எவ்வளவு துணிவிருந்தால் “தாழ்ந்த சாதியை” சேர்ந்தவன் கேள்வி கேட்கலாம்? தமக்கென எந்த உடைமைகளையும் கொள்ள வழியற்ற இவர்கள், புனித வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி தம் உழைப்பை வழங்கவேண்டிய இவர்கள் எப்படி உரிமைகள் கோரலாம்? எவ்வளவு துணிவிருந்தால் இவர்கள் பேசுவார்கள்? பதாயூன் கூட்டுப்பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைச்சம்பவத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது, அப்படத்தில் குறிப்பிடும்படியாக அமைந்திருந்த பல விஷயங்களில் ஒன்றாக கருணைமிகுந்த பிராமண காவலதிகாரி ஒருவரை மையக்கதாபாத்திரமாக சித்தரித்திருந்ததைக் கூறலாம். பாதாள் லோக் நினைவிருக்கிறதா? ஆதிக்கசாதியினரின் கொடுமைகளை எதிர்த்தப் புரட்சியாள மகனைப் பழிதீர்ப்பதற்காக அவனுடைய தலித் தாயை நூறு ஆண்கள் வன்புணர்வர்.

    தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த தலித்களையும் ஒடுக்கப்பட்ட சாதியினரையும் அச்சுறுத்திக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டியிருப்பதால், அதை முழுமையாகச் செய்ய ஒரு தலித் பெண்ணின் உடல்மீது அத்துமீறி வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதைவிட வேறெந்த சிறந்த வழியுள்ளது? நிஜ வன்முறையையும் குறியீட்டு வன்முறையையும் இது ஒருசேர நிகழ்த்திவிடுகிறது. அதனாலேதான் ஆளும் வர்க்கத்தினர்/சாதியினர் தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கென நீண்டநெடுங்காலமாகவே வன்புணர்வையும் பாலியல் வன்முறையையும் ஒரு அரசியல் கருவியாகத் தொடர்ந்து உபயோகித்து வருகின்றனர். பிராமணனின் “அருளால்” சூத்திரப்பெண் தன் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளவேண்டும் எனக்கூறும் பழைய ‘நிதான்’இல் துவங்கி, பாலியல் வன்புணர்வையும் படுகொலையையும் சர்வசாதாரணமாக ஒன்றிணைத்து ரன்வீர் சேனா போராளிக்குழுவினர் 1997இல் கொடூரமாக நிகழ்த்திய லக்‌ஷ்மண்பூர் பாதே சம்பவம் வரை, ஒதுக்கப்பட்ட மக்களின் விருப்பங்களை குத்திக்கிழிக்க ஏதுவான தளமாக தலித் பெண்ணின் உடல்களே உருவாக்கமும் மீளுருவாக்கமும் கொண்டுவருகின்றன.

     இன்று, ஹத்ராஸில் நிகழ்ந்துள்ள கூட்டுவன்புணர்வு கொடூரம் குறித்தான செய்திகளும், அந்த தலித் பெண்ணின் உடல்பாகங்கள் சிதைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் நம் சமூகவளைதளப் பக்கங்கள் முழுவதும் நிறைந்துகிடப்பதைக் கண்டு நாம் பீதியில் நடுங்கிக்கொண்டிக்கிறோம், ஆனால் வன்புணர்வு செய்தவர்கள் யாரென்பது குறித்து ஏன் ஒரு தலைப்புச்செய்திகூட இதுவரைப் பேசவில்லை? அவர்கள் என்ன சாதியை சேர்ந்தவர்கள்? இந்தக் கேள்வி ஏன் நம் மனதில் தோன்றவேயில்லை? தீவிர விசாரணைக்குப் பிறகும் குற்றவாளிகளின் சாதிப்பெயர்கள் பற்றி ஏன் யாருமே மூச்சுவிடவில்லை? ஒடுக்குவோரின் சாதியடையாளம் மறைக்கப்படுவது ஏன், அதிலும் குறிப்பாக அவர்கள் ஆதிக்கசாதியினராக இருந்துவிட்டால் இது கட்டாயம் நிகழ்கிறதே, அது அச்சத்தாலா அல்லது தீவிர சாதிப்பற்றினாலா? 19 வயது இளம்பெண்ணை ஹத்ராஸில் பாலியல் வன்புணர்ந்தோர் ராஜ்புத்கள்/தாக்கூர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற இந்தியாவின் பெரும்பான்மை விவசாயநிலத்தின் சொந்தக்காரர்கள் இந்த சாதியினர்தாம். பாதிக்கப்பட்ட தலித் பெண்ணைப்பற்றியச் செய்திகளை அறிவிப்பதில் பேரார்வம் காட்டும் ஊடகத்துறை, அந்த ஆதிக்கசாதிகள் கொண்டுள்ள பெரும் அதிகாரத்தை வெளியிடத் தயங்குவது ஏன்? 

     ”அதுவொரு பாலியல் பலாத்கார சம்பவம் மட்டுமே, அதில் ஏன் சாதியை நுழைக்கிறீர்கள்?”

The Dalit Caste Identity of Hathras Victim Is Vital to Recognizing Her Rape as a Casteist Crime | The Swaddle

     இந்தியா அடிப்படையில் ஒரு சாதீய சமூகமே. குடியரசாலோ தாராண்மை அரசியலமைப்பாலோ அதை மாற்றமுடிந்ததேயில்லை. ஒருவர் உருவச்சொத்துக்களையோ அறிவாற்றல் போன்ற அருவச் சொத்துக்களையோ அடையும் வாய்ப்புகளையும், உற்பத்திக்கு வழிகோலும் நிலம் போன்ற வளங்களை உடைமையாக்கிக் கொள்வதையும் அவர் எந்த குடும்பத்தில் பிறந்துள்ளார் என்பதை அடிப்படையாகவே வைத்து இந்த சாதீய சமூகம் தீர்மானிக்கிறது. வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த அந்த 19 வயது இளம்பெண் கம்புவயல் அருகே மாட்டுக்குத் தீவனம் பொறுக்கவந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். உயர்சாதினரின் அனுகூலத்திற்காய் உயர்சாதியினரால் உண்டாக்கப்பட்டுள்ள சாதிய அமைப்பின்படி பார்த்தால் சூத்திரர்களும் அவர்களுக்கும் “கீழானவர்களும்” சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ளக்கூடாது.

     உடலுழைப்பைத் தவிர விற்று உண்ணத் தம்மிடம் வேறெதுவுமில்லாதவர்கள்தான் அந்தப் பெண்ணும் அவள் குடும்பத்தினரும். நிலப்பிரபுத்துவப் பொருளாதாரத்தின் வேலையாட்கள் அவர்கள், நிலங்களை உழுவர், மற்றவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவர், கழிவறைகளைச் சுத்தம் செய்வர், பிணங்களை எரிப்பர். இவையெல்லாம் உடலுழைப்பைக் கோருவதோடு “தீட்டு” என்றும் “தீட்டை உண்டாக்கும்” பணிகளென்றும் வரையறுக்கப்பட்டுள்ளன, பிரம்மனின் உடலின் மேற்பகுதியில் இருந்து பிறந்தவர்களாகக் கருதப்பட்ட ‘த்விஜாக்கள்’ (உடலாகவும் ஆன்மாகவும் இருபிறப்பு எடுப்போர்) அதுபோன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது. எனவே, உழைக்கும் வர்க்கத்தினரின் ஒரு பிரிவு முழுவதும் ஒடுக்கப்பட்ட சாதியினரில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். நிலங்களை உடைமையாக்கிக் கொள்ளும்போதும், அறிவாற்றலை ஈட்டிக்கொள்வதிலும் மற்றவர்களின் உழைப்பிலிருந்து லாபங்களை ஈட்டிக்கொள்வதிலும் பிரத்யேக உரிமைகொள்ளும்போதும் இந்த ஆளும் சாதிகளெல்லாம் மாசற்றதொரு “சடங்கியல் புனிதத்தை” பூண்டுகொள்கின்றனர்.

        இந்த நிலப்பிரபுத்துவ சாதிய சமூகம்தான் இந்தியாவின் நிஜ முகம், நவீன நகரச்சூழல்களும் கூட இப்பாரத்தை சுமக்கின்றனதாம். அதனாலேதான் பாதிக்கப்பட்டவர் மற்றும் வன்முறையை ஏவிவிட்டோரின் சமூக நிலை குறித்து நாமிங்கு பேச வேண்டியுள்ளது, ஏனெனில் சமூக உறவுதான் அவர்களுக்கு மற்றவரை தாக்குவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. யார் எங்கு எதை உடைமையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வைத்தே இந்தத் தொடர்பு செயற்படுகிறது, ஒடுக்கப்பட்டவர் ஒடுக்குவோர் ஆகிய இருவரையும் ஒரே உறவுக்குள் கொண்டுவருவதை இந்தத் தொடர்புகளே தீர்மானிக்கின்றன எனும்போது இத்தொடர்புகளோ சாதியால்தான் இந்தியாவில் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, இந்திய மக்களில் பெரும்பான்மை மக்களை மிகச்சில சமூகங்கள் ஒடுக்குவதையும் சுரண்டுவதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும் சமூகக்கட்டமைப்பின் உள்ளார்ந்த சார்புத்தன்மையை ஒதுக்கிவைத்துவிட்டு, ஹத்ராஸ் வன்புணர்வு போன்ற சம்பவங்களை வெறும் பாலியல் கோணத்திலிருந்து மட்டுமே நாம் அணுகுவோமானால், அதுவொரு அரைகுறைக் காட்சியையே நமக்களிக்கும்.

Four Dalit Women Raped Every Day': Why Caste Matters In Sexual Assault

பரம்பரைப்பெயரைக் கடந்த சாதி

நீதித்துறை, காவல்துறை, தாராண்மை குடியாட்சி போன்ற நவீன சட்ட அமைப்புகளெல்லாம் இங்கு நிறுவப்பட்டபிறகும்கூட, நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக எப்படி மிகச்சிலரால் பெரும்பான்மை இந்திய மக்களை தொடர்ந்து ஒடுக்கியாளமுடிகிறது எனப் பலரும் கேட்கின்றனர். அவர்களால் சாதியின் நேர்த்தியானப் பரவலையும், அதன் கூட்டுணர்வையும் நவீனமயமாகிவிட்ட அதன் வடிவதத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை; தனிமனிதனுக்குரியதாக, உதிரிகளாக, எச்சங்களாக, பாரம்பரிய உணர்வின் அற்ப மீதங்களாகத்தான் அவர்கள் இதை எண்ணுகிறார்கள், நவீனத்துவத்தாலோ அல்லது நிலப்பிரபுத்துவ தொடர்புகளில் நிகழும் மாற்றங்களோடோ இது முடிந்துபோய்விடும் என அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்தியாவின் சாதீய ஆட்சிமுறை அவர்கள் எண்ணங்களைப் பொய்யென நிரூபிக்கிறது. சொத்துக்களை சொந்தமாக்கிக்கொள்வது மட்டுமே சாதிரீதியான மூலதனமல்ல, குறிப்பட்டக் கலாச்சார, சமூக மூலதனங்களையும் பெருமளவில் கையகப்படுத்திக்கொள்வதும் அதில் சேர்த்திதான்.

        அறிவாற்றலை அடைவதில் ஆளும்சாதியினர் கொண்டிருந்த பிரத்யேக உரிமையின் விளைவாக நவீன நிறுவனங்களான அதிகாரத்துறை, காவல்துறை, ஊடகத்துறை போன்றவற்றில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உட்புகுந்துவிட்டனர். பெரும் ஊதியம்வழங்கும் நிறுவனங்களில் ஆளும்சாதியினரின் அதீத பிரதிநிதித்துவத்தால் உண்டாகும் ஒருதலைபட்சமான தகவல்தரவுகளை மற்ற சாதியினர் புரிந்துகொள்வதில் சிக்கல் எழுகிறது. உள்ளூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் ஹவில்தாரில் துவங்கி நாட்டின் உச்சபட்ச நீதிபதி வரையிலும், சாதியொற்றுமை என்பது மிகப்பெரிய வலைப்பின்னலாக விரிந்துகொண்டே செல்கிறது, பாலியல் வன்புணர்வுக்குள்ளான தலித் பெண்ணால் காவல்நிலையத்தில் முதல் தகவலறிக்கையைக் கூடப் பெறமுடியாத அளவிற்கு இந்தப்பின்னல் ஆகப்பெரிதாயுள்ளது.

     ஒவ்வொரு நாளும் நான்கு தலித்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர், பாலியல் வன்கொடுமைகுறித்துப் புகாரளிக்கச் செல்லும் தலித் பெண்கள் காவல் நிலையத்தினுள்ளேயே வன்புணரப்படும் வழக்குகள் உள்ளன, வன்புணர்வுக்கான வழக்கு தொடுக்கப்பட்டாலுமேகூட  அவை எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவதில்லை. தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் எதிரான குற்றங்கள் மற்றவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களைவிடக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவுப்பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது குற்றவாளிக்கும் காவல்துறைக்கும் நீதித்துறைக்குமிடையே கட்டப்பட்டுள்ள சாதியொற்றுமையின் விளைவாக நிறுவனரீதியாகவும் கட்டமைப்புரீதியாகவும் உருவான சார்புத்தன்மை என்பதைவிட வேறென்ன?

     அதனாலேதான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட ஏதுவான தளமாக தலித் பெண்களின் உடல்கள் உள்ளன, ஏனெனில், இதில் எவ்விதமான ஆபத்துமில்லை, எந்த விலையும் தரவேண்டியதில்லை, ஆளும்சாதியைச் சேர்ந்தவன் என்பதாலேயே குற்றவாளி தான் அடையப்போகும் சமூக-அரசியல் ரீதியானப் பாதுகாப்பு குறித்து அறிந்திருப்பதால் தண்டனைகுறித்து அவனுக்கு நம்பிக்கையுள்ளது. இதுவொரு மறைமுக சார்புத்தன்மையாகவும் அவர்களுக்குச் சாதகமான ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது எனும்போதும் இப்போதோ இது தமக்கான உரிமையென்பதைப்போல மிகுந்த உறுதியோடு அதைக் கோரத்துவங்கிவிட்டனர். தம் சமூகத்தின் “மகன்கள்” தவறான காரியங்களில் இறங்கவே மாட்டார்கள் எனக்கூறிக்கொண்டு பலாத்காரம் செய்தவர்களுக்கு ஆதரவாக “ராஷ்டிரிய சவர்ண பரிஷத்” களமிறங்கியதையும் நாம் கண்டோம். ஆண்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள். தாக்கூர் ஆண்கள் தாக்கூர் ஆண்களாகத்தான் இருப்பார்கள்.

Hathras gangrape: Allahabad HC takes up case, summons top UP government officials

     மீண்டும் ஆர்டிகிள் 15க்கு வருவோம், வழக்கமான நாடகக் கதாபாத்திரங்களான ஒப்பந்தக்காரர், இரு காவல்துறை அதிகாரிகள், ஒரு அமைச்சர், வேறு பிராந்தியத்தில் இருந்துவந்த சட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரியொருவர்(ஆனால் அனைவரும் ஒரே சவர்ண நம்பிக்கையாளர்கள்) ஆகியோரைக் கொண்டு அமைந்த சாதீய வியூகத்தை அத்திரைப்படம் சுட்டிக்காட்டியிருந்தது. படத்தில், பாதிக்கப்பட்டப் பெண்களின் இரு தலித் தந்தையரும், இரு பெண்களிடையே இருந்த தகாத உறவையெண்ணி ஆத்திரப்பட்டுத் தம் மகள்களைத் தாமே கொன்றிருப்பரென மிக எளிதாகக் குற்றம்சாட்டப்படுகின்றனர். நிலப்பிரபுத்துவ கருத்தாக்கமான “கௌரவம்” இங்கே உள்ளே கொண்டுவரப்பட்டு, அனைத்துப் பறவைகளையும் ஒரே கல்லில் கொன்றுவிடும் யுக்தியுடன் அதை தலித்களின் மீது பிரயோகித்துள்ளனர், ஏதோவொரு இயற்கைவிதியைப் போல இது நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஆணாதிக்க ஆழ்மனவிருப்பத்தையும் பூர்த்திசெய்துவிடுகிறது, அத்துடன் ஆளும் சாதியினரின் அடிப்படை நெறிகளையும் இது காப்பாற்றிவிடுகிறது. அதனாலேதான் குறிப்பிட்டப் பாலினமென்பதை இங்கு நம்மால் பிரித்துத் தனியாக பார்க்கமுடிவதில்லை, அதனுள்ளே பொதிந்திருக்கும் வர்க்க/சமூகக் கூறுகளை கணக்கிலெடுக்காமல் இதை நம்மால் அளவிடவும் முடியாது. ஆணாதிக்கத்தை நசுக்க, நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ, சாதிய அதிகார உறவுகளை தொடர்ச்சியாக நாம் நசுக்கவேண்டும். 

     அந்தப் பெண்ணின் கடுந்துயர்கொண்ட உறவினர்களையெல்லாம் விலக்கிவைத்துவிட்டு, காவல்துறையினரால் திருட்டுத்தனமாக நடுநிசியில் அந்தப் பெண்ணின் உடல் “சிதையூட்டப்பட்டுள்ளது” அவளை எரிக்கும்முன்னர், அவளுக்கு நடந்தேறிய அரக்க சம்பவத்தால் அவளுடைய பாதி நாவு துண்டிக்கப்பட்டிருந்தது, அவளது முதுகெலும்பும் கழுத்தும் முறிக்கப்பட்டிருந்தன, அவளது உடலின் கீழ்ப்பகுதி செயலற்றுப்போயிருந்தது. ஆனாலும் அவள் போரிட்டாள், தொடர்ந்து 14 நாட்கள் போரிட்டாள், போரிட்டுக் குற்றவாளிகளை அடையாளம் காட்டினாள். அந்த 19 வயது இளம்பெண் சாகவில்லை. நம் கண்ணெதிரே 19 வயது பெண்ணொருத்தி எரிகின்றாள், ஆனால் அவளுடைய சிதையில் எரிவதென்னவோ நம் அரசியலமைப்புச் சட்டங்கள் காக்கத்தவறிய வாக்குறுதிகள்தாம். அந்த சிதைநெருப்பின் நாவுகள் பேச நீள்கின்றன, நீதி கிடைக்கும்வரை அமைதி இருக்காது என அந்த நா கூறுகின்றது.

Dipsita (@DharDipsita) | Twitter

(ஜே என் யூவில் ஆய்வறிஞராக திப்சிதா தர் பணி மேற்கொண்டுள்ளார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *