திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
ஜெ. ஜெயரஞ்சன் | தமிழில்: பா.பிரவீன்ராஜ்
பிப்ரவரி 2021, ப.352, ரூ.350/=
கயல் கவின் புக்ஸ்
சென்னை-41
9962233382
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்புவரை ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றொரு குரல் ஒலித்து வந்தது. இப்போது அது சற்று மட்டுப்பட்டிருக்கிறது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் மேலெழும்பும். கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தை ஆண்டு வரும் இரண்டு திராவிடக் கட்சிகளால் தமிழகம் வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதுதான் ‘வீழ்ந்தோம்’ என்பாரின் குற்றச்சாட்டு. திராவிட இயக்கத்தின் அரசியலர்களும் அறிவாளர்களும் இதை மறுக்கின்றனர். முன்னவர்கள் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான சுயமரியாதையும் சமூகநீதியும் தமிழகத்தை உயர்த்தி இருக்கின்றன என்று வாதிடுகின்றனர். பின்னவர்கள் பல வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம், இந்திய அளவில் முன்வரிசையில் நிற்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர். விடை கோட்பாட்டிலும் இருக்கிறது; குறியீடுகளிலும் இருக்கிறது; முக்கியமாக அடியாழத்தில் படிப்படியாய் நடந்தேறிய மாற்றங்களில் இருக்கிறது. இவை அனைத்தையும் ஒன்றிணைத்து இந்தக் குற்றச்சாட்டை நேரிடுகிறது “திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்” என்கிற இந்த நூல். இதில் 12 கட்டுரைகள் உள்ளன. இவை வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. எனில், எல்லாக் கட்டுரைகளும் தமிழகத்தின் வளர்ச்சியைப் பல்வேறு தளங்களில் அலசுபவை. தரவுகளோடும் மேற்கோள்களோடும் சான்றாதாரங்களோடும் எழுதப்பட்டவை. ஆய்வுப்புலம் சார்ந்த ஆங்கில சஞ்சிகைகளிலும் நூல்களிலும் வெளியானவை. தமிழில் இந்தப் பொருளில் வெளியாகிற ஆய்வுப்புலம் சார்ந்த முதல் நூல் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும்.
இதில் மூன்று கட்டுரைகளை நூலின் பதிப்பாசிரியர் ஜெ.ஜெயரஞ்சனும் அவரது சக ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர். மீதமுள்ள கட்டுரைகளை ம.விஜயபாஸ்கர், ஆ.கலையரசன் ஆகிய இரு பேராசிரியர்களும் அவர்களது சக ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.
வளர்ச்சியில் இரண்டு வகை
1990களில் ஆய்வுத்தளங்களில் கேரளமும், புத்தாயிரமாண்டுகளில் பொதுத்தளங்களில் குஜராத்தும் ‘வகைமாதிரி’யான மாநிலங்களாக முன்நிறுத்தப்பட்டன. மனித வளர்ச்சிக் குறியீட்டில் முன்னணி மாநிலங்களில் ஒன்று கேரளம். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் முன்னணியில் இருக்கிறது குஜராத். ஆனால் இரண்டு குறியீடுகளிலும் ஒரே நேரத்தில் முன் வரிசையில் நிற்கும் தமிழகம் இந்தக் கவனிப்பைப் பெறவில்லை. ‘கேரள மாதிரிக்கு இருந்த கொடுப்பினையோ, குஜராத் மாதிரிக்குக் கிடைத்த பகட்டான பயனோ தமிழக மாதிரிக்குக் கிடைக்கவில்லை’ என்று நூலின் முன்னுரையில் ஆதங்கப்படுகிறார் ஜெயரஞ்சன். இதற்கு அறிவுலகத்தில் இயங்கியவர்களுக்குத் திராவிடத்தின் மீதிருந்த ஒவ்வாமைதான் காரணம் என்றும் துணிகிறார்.
இரண்டு மாநிலங்கள்
குஜராத்தையும் தமிழகத்தையும் ஒப்பியல் நோக்கில் ஆய்வு செய்யும் கலையரசனின் நீண்ட கட்டுரை இதைத் தெளிவுபடுத்துகிறது. இரண்டு மாநிலங்களும் 1990களில் ஒன்றிய அரசு கொண்டு வந்த தாராளமயமாக்கலையும் சந்தை சார்பான கொள்கைகளையும் தழுவிக்கொண்டன. 1991-2012 காலகட்டத்தில் இரு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி வீதம் ஒரே அளவில் இருப்பதையும், அது ஒட்டுமொத்த இந்தியாவின் வீதத்தைவிட அதிகமென்பதையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஆனால் இதே கால கட்டத்தில் வறுமை ஒழிப்பில் குஜராத்தைக் காட்டிலும் தமிழகம் 12 விழுக்காட்டுப் புள்ளிகள் முன்னால் நிற்கிறது. இதற்கான காரணங்கள் சமூகநலத் திட்டங்களில் இருக்கிறது. நான்கு திட்டங்களைக் கட்டுரை ஆராய்கிறது. அவை: 1. பிள்ளைகளுக்கு மதிய உணவு; 2. பொது மருத்துவச் சேவை; 3. உணவுப்பொருள் பொது விநியோகம்; 4. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு. இந்த நான்கு திட்டங்களும் இரண்டு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டாலும் அதிலுள்ள வேறுபாடுளைக் கலையரசன் வெளிக்கொணர்கிறார்.
தமிழகத்தில் கிராமப்புற ஏழைக் குழந்தைகளில் 44% மதிய உணவு பெறும்போது இது குஜராத்தில் 7% மட்டுமே. இரண்டாவதாக, குடிமக்களின் ஆயுள், தடுப்பூசி, பேறுகாலக் கவனிப்பு முதலானவற்றில் தமிழகம் முன்னால் நிற்கிறது; அதே வேளையில் கருவள விகிதம் (fertility rate), பச்சிளங் குழந்தைகளின் மரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு முதலானவற்றில் பின்னால் நிற்கிறது. இதற்கான சமூகக் காரணிகளில் ஒன்றாகக் கலையரசன் இட ஒதுக்கீட்டைச் சுட்டுகிறார். இடைநிலைச் சாதியினர் கல்வி பெற்றனர்; அவர்கள் எந்த மனத்தடையுமின்றி சிறு நகரங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிகின்றனர். (நீட் பற்றிய பிறிதொரு கட்டுரையில் இந்தக் கட்டுமானங்கள் நீட் தேர்வுகளால் நீர்த்துப் போகும் என்றும் வாதிடுகிறார்).
மூன்றாவதாக, பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் எல்லோருக்குமானது, குஜராத்தில் இது இலக்கு சார்ந்தது. இந்தத் திட்டம் தமிழகத்தில் அரசியல் பொறுப்புடனும் மக்கள்திரளின் கண்காணிப்போடும் அமல்படுத்தப்படுகிறது. இறுதியாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழகம், மற்ற பல மாநிலங்களைவிடச் சிறப்பாகச் செயல்படுவதற்கு உள்ளூர் மட்டத்தில் மக்கள் மேற்கொள்ளும் இடையீடுகளே காரணம் என்கிறார்.
நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை
காவிரிப்படுகையில் நில உரிமையும் அரசியல் பொருளாதரமும் எப்படி மாற்றத்துக்கு உள்ளாகியது என்று ஒரு கட்டுரையில் ஜெயரஞ்சன் விளக்குகிறார். 1960களில் நிலச்சுவான்தார் கைகளில் இருந்த நிலங்கள் பலவும் இப்போது குத்தகைதாரர் கைகளுக்கு மாறியிருப்பதை அவரது களப்பணிகளின் வாயிலாகப் பதிவு செய்கிறார். 1967இல் அமலுக்கு வந்த குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இதன் தொடக்கப்புள்ளி என்கிறார். குத்தகைதாரர்களும் தொழிலாளர்களும் முன்னெடுத்த போராட்டங்களும், திராவிடக் கட்சிகளின் அரசு அதிகாரமும், அவை இயற்றிய சட்டங்களும், கிராம அதிகாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் பிற காரணிகள் என்கிறார். ‘சட்டம் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்றை களப்பணியும் சமுதாய மாற்றமும் அதிகாரப் பரவலாக்கலும் சாத்தியப்படுத்தியுள்ளதை’ச் சொல்லிக் கட்டுரையை முடிக்கிறார்.
வேறு கட்டுரைகளில், இதே நில உரிமையையும் மாறி வரும் கிராமப் பொருளாதாரத்தையும் தமிழகம் முழுமைக்கும் விரிவாக்குகிறார் விஜயபாஸ்கர். தமிழகத்தில் 92% நிலங்கள் சிறு (1 ஏக்கர் வரை)- குறு (1-2 ஏக்கர்) உடமையாளர்களிடமே இருக்கின்றன. நிலங்கள் மேல் சாதியினரிடமிருந்து இடைநிலை சாதியினருக்கும், குறைந்த அளவு தலித்துகளுக்கும் கை மாறியுள்ளன. இது கூலி விவசாயிகளின் மீது நிலச்சுவான்தார்களுக்கு இருந்த ஆதிக்கத்தைக் குறைத்திருக்கிறது.
அடுத்து, வேளாண்மை லாபகரமான தொழிலாக இல்லை. விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் பயன்பாட்டுக்கு விற்கப்படுகிறது. சாகுபடியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. வேளாண்மையிலிருந்து வெளியேறும் விவசாயத் தொழிலாளர்கள் அனைவரையும் உற்பத்தித் தொழிலால் ஈர்த்துக்கொள்ள முடியவில்லை. அன்றாடக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. போதிய வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, பணிப் பாதுகாப்பு முதலான பரிந்துரைகளையும் விஜயபாஸ்கர் முன்வைக்கிறார்.
வாழ்ந்தோமா வீழ்ந்தோமா?
இந்த நூல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிற குற்றச்சாட்டை மறுக்கிறது; திராவிடத்தால் வளர்ந்தோம் என்று வாதிடுகிறது; அதே வேளையில் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று முற்றுப்புள்ளி வைத்து விடுவதுமில்லை. ஏனெனில், இது ஒரு தொடர் பயணம் என்கிறார் ஜெயரஞ்சன். அதில் நமது குறைகளைக் களைந்தபடி புதிய அடிகளை வைத்து முன்னேறியபடி இருக்கவேண்டும்.
பல்வேறு கலைச் சொற்கள் நிறைந்த இந்தக் கட்டுரைகளை பா.பிரவீன்ராஜ் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்க்கும்போது சில நீண்ட வாக்கியங்களை உடைத்திருக்கலாம். எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் களைந்திருக்கலாம். இரண்டு கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே தரப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தமிழ்ப் படுத்தியிருக்கலாம். இந்தக் குறைகளை அடுத்த பதிப்பில் நேர் செய்ய வேண்டும்.
இந்த நூல் வாசகர்களிடையே மாற்றம்- வளர்ச்சி பற்றிய புரிதலை மேம்படுத்தும். பொது வெளியில் இந்த நூல் தொடர்பான விவாதங்கள் நடை பெறவேண்டும். அறிவுலகத்தில் இந்தப் பொருள் சார்ந்த புதிய ஆய்வுக் கட்டுரைகள் அரங்கேற வேண்டும். அப்போது ‘தமிழக வகைமாதிரி’ அதற்குரிய அங்கீகாரத்தைப் பெறும்.
(பொறியாளர் மு. இராமனாதன்,
எழுத்தாளர்.
தொடர்புக்கு: [email protected])
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.