கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றும் அதனைத் தொடர்ந்து சமூக முடக்கம் மற்றும் தினசரி வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையிலும், முதலாளித்துவ உலகத்தில் பொருளாதார மந்தம் மிகவும் ஆழமாகியுள்ள நிலையிலும், இவ்வாறு இரட்டிப்புத் தாக்குதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில்தான் 2020இல் மாபெரும் சோசலிஸ்ட் அக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழா, வந்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவமும், முதலாளித்துவத்தைவிட சோசலிசம் மேன்மையானது என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

சகாப்தம் படைத்திடும் பங்களிப்புகள்

அக்டோபர் புரட்சி, 20ஆம் நூற்றாண்டில் மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதன் வரையறைகளை வடிவமைத்ததில், சகாப்தம் படைத்திடும் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது என்று கடந்த பல ஆண்டுகளாகவே நாம் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கிறோம். அக்டோபர் புரட்சியினால் ஏற்படுத்தப்பட்ட உத்வேகமும், உற்சாகமும் மற்றும் அனைவருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றை அது அளித்தன் காரணமாக உலகில் பல நாடுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கீழ் சோசலிச நாடுகளாக நிறுவப்பட்டதும், உலகில் பல நாடுகளில் மக்கள் சிறந்ததோர் வாழ்க்கைக்காகப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றதும் நடப்பதற்கு வழிகோலியிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் மேற்கொண்ட தலைமைப் பாத்திரம், பாசிசம் மற்றும் ஹிட்லர் தோல்வியடைவதற்கும், உலகை பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கும், உலகில் பல நாடுகளை காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் இட்டுச் சென்றது.
இவ்வாறு, சோசலிச சிந்தனைகள் மக்கள் மத்தியில் மிக வேகமாக ஆதரவினைப் பெற்றுவந்ததைத் தடுத்த நிறுத்துவதற்காக பல முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளிலும் ஒருவிதமான சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் ‘சேமநல அரசு’ (‘welfare state’) கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டன.

அறிவியல் முன்னேற்றங்கள் துறையில், சோவியத் யூனியன் விண்வெளி அறிவியலில் இதர நாடுகளைக் காட்டிலும் மிக வேகமான முன்னேற்றத்தை அடைந்து பல்வேறு சாதனைகளைப் படைத்த முதல் நாடாக மிளிர்ந்தது. அதேபோன்று, கலைகளிலும், ஐன்ஸ்டீன் திரைப்படத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தியபோது, சோவியத் யூனியன் திரைப்படத்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது.



எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான மூர்க்கத்தனமான முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதிலும் உறுதியுடன் நின்று, உலகில் பல நாடுகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு சோவியத் யூனியன் உத்வேகத்தையும், உந்துதலையும் ஏற்படுத்தியது. இவை அனைத்தும் உலகில் அமைதி நிலவுவதை உத்தரவாதப்படுத்தியது. சோவியத் யூனியன் தகர்ந்தபின் (இதற்கான காரணங்களை நாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாட்டின் தத்துவார்த்த தீர்மானத்தில் ஆய்வு செய்திருக்கிறோம்), ஏகாதிபத்தியம், சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையின்கீழ் நவீன தாராளமய உலகமயக் கொள்கை மூலமாக, மிக மோசமான விதத்தில் தாக்குதலைத் தொடங்கியது.

இதன் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதல்களை உலக அளவில் இயங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் நாடுகளில் எப்படித் தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பாக திட்டங்கள் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாமும் இந்தியாவின் நிலைமைகளுக்கு ஏற்ப துல்லியமாகத் திட்டமிட்டிருக்கிறோம்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ளுதல்

தற்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று, திரும்பத் திரும்ப அதிகரித்துக் கொண்டிருப்பதைச் முதலாளித்துவ நாடுகள் திணறிக்கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், (முதலாளித்துவ நாடுகளில் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கிற தகவல்கள், “பனிமலையில் ஒரு சிறு துளி” (“tip of the iceberg”) என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்) அதற்கு முற்றிலும் மாறாக, சோசலிச நாடுகள் இத்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றிருப்பதுடன், தங்களுடைய பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியிருக்கின்றன. அக்டோபர் வரை, 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், 4,634 பேர் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

Learn The Changes after October Revolution in 3 minutes.

கியூபா

கியூபா 123 பேரை இந்நோயால் இழந்திருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை தொடர்ந்து இருந்துவந்தபோதிலும், கியூபா இந்நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்று, பெரும்பான்மையான மக்களின் உயிர்களைப் பாதுகாத்திருக்கிறது. இப்போது உலகில் உள்ள 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவர்களையும், மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி உதவிக்கொண்டிருக்கிறது.

வியட்நாம்

வியட்நாமில் இதுவரை, 139 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நாட்டில் அதிகரித்த இரண்டாவது அலையை இது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி விட்டது. வியட்நாம் அரசாங்கம், மக்களுக்கு அனைத்து அத்தியா வசியப் பொருள்களையும் இலவசமாகக் கொடுப்பதற்கான வாராந்திர சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறந்திருக்கிறது. மேலும், அரிசியைத்தரும் ஏடிஎம் (ATM) எந்திரங்களையும் பொருத்தி இருக்கிறது. மக்கள் அதில் தங்களுக்குத் தேவையான அளவு அரிசியை வரவழைத்த எடுத்துச் செல்லலாம்.

வட கொரியா

கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு என்னும் வட கொரியாவில், சமீபத்தில் கடும் வெள்ளம் மற்றும் புயற்காற்றால் பாதிக்கப்பட்டபோதிலும், இதுவரை எவரும் பாதிப்புக்கு உள்ளாகாமல் அங்கே இறந்தோர் எண்ணிக்கை பூஜ்யம் என்பது தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், கொரோனா வைரஸ் தொற்றால் எவரும் பாதிக்கப்படவில்லை.

மனிதகுலம் தங்களுக்கு எதிராக வந்துள்ள சவால்களைச் சமாளித்து, இந்தக் காலகட்டத்தில் நவீன தாராளமய முதலாளித்துவத்தைப் பின்பற்றும் நாடுகளுக்கும், சோசலிச நாடுகளுக்கும் இடையே மிகவும் கூர்மையான முறையில் முரண்பாடு நிறுவப்பட்டிருக்கிறது.



உலகப் பொருளாதாரம்

உலக வங்கி, நடப்பு உலகப் பொருளாதார நிலைமையை 1929-30இன் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்குப் (Great Depression of 1929-30) பின், ஆழமான பொருளாதார மந்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகச் சித்தரித்திருக்கிறது.

உலக மக்கள்தொகையின் பெரும்பாலானவர்களின் வாழ்வாதார நிலைமைகளில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக வங்கியின் அறிக்கையின்படி, 2021இல் 15 கோடி மக்களுக்கும் மேலானவர்கள் அதீத வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தொழிலாளர்களின் பங்கேற்பு என்பது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு முன்பிருந்த நிலையைவிட மிகவும் கீழானதாக இருந்திடும். மேலும் பல வேலையிழப்புகள் ஏற்படும். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, 2019இன் நான்காவது காலாண்டுடன் 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை ஒப்பிடும்போது, வேலை நேரங்களில் உலக அளவில் குறைவு ஏற்படும் என்றும் இதன் அளவு 40 கோடி (400 மில்லியன்) முழுநேர வேலைகளுக்குச் சமமாக இருந்திடும் என்றும் கூறியிருக்கிறது. முதல் காலாண்டில் 15 கோடியே 50 லட்சம் வேலையிழப்புகளிலிருந்து இது மிகவும் ஆபத்தான அதிகரிப்பாகும்.

சோசலிச சீனம்:

2020இன் (ஏப்ரல்-ஜூன்) இரண்டாவது காலாண்டில், உலகில் உள்ள பெரிய பொருளாதார நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான அளவிற்கு வீழ்ச்சியை அடைந்துள்ள அதே சமயத்தில், இதே காலாண்டில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மைனஸ் (-) 23.9 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற அதே சமயத்தில், சீனா மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சியில் +3.2 சதவீத அளவிற்கு ஆக்கபூர்வமான வளர்ச்சியை (positive growth)ப் பதிவு செய்திருக்கிறது. அடுத்த காலாண்டில், முதலாளித்துவ உலகம் பொருளாதார மந்தத்தால் திக்கித்திணறும் அதே சமயத்தில், சீனப் பொருளாதாரம் மட்டும் 4.9 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.

சர்வ தேச நிதியம், 2019இல் சீனா அதன் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திடும் என்றும், ஆனால் இதே காலத்தில் பெரிய முன்னேறிய முதலாளித்தவ நாடுகளின் பொருளாதாரம் அவற்றின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மைனஸ் (-) 5.9 சதவீத அளவிற்கு வீழ்ச்சியடைந்திடும் என்று சித்தரித்திருக்கிறது.



நவீன தாராளமய திவால்நிலைமை:

கொள்ளை லாபம் ஈட்டுவதையே தங்களுடைய ஒரே குறிக்கோளாகக் கொண்டுள்ள நவீன தாராளமயம் மற்றும் அதன் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள், உலகம் முழுதும் பெரும்பாலான மக்கள் மீது சுரண்டலைக் கூர்மையான முறையில் உக்கிரப்படுத்தி இருக்கின்றன. இது, பொருளாதார சமத்துவமின்மைகளைக் கூர்மையாக விரிவுபடுத்தி இருக்கிறது. இன்றைய கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும் மற்றும் பொருளாதார மந்தம் ஆழமாகி இருக்கக்கூடிய நிலையிலும் உலக பில்லியனர்கள் தங்கள் லாபத்தை பல மடங்கு அதிகரித்திருக்கின்றனர். இதன் விளைவாக, பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறன் (purchasing power) கூர்மையாக வீழ்ச்சியடைந்து, அவர்களின் தேவைகளைப் பெரிய அளவில் சுருக்கிவிட்டது.

முதலாளித்துவத்தின்கீழ், உற்பத்தி செய்யப்பட்டவை விற்காவிட்டால், பின் லாபத்தையும் அவர்களால் பார்க்க முடியாது மற்றும் வளர்ச்சியும் ஏற்படாது. வளர்ச்சி இல்லையேல், பின் லாபத்தை ஈட்ட வேண்டுமானால், மக்களை மேலும் கசக்கிப்பிழிய வேண்டும், மக்கள் மீது மேற்கொண்டுவரும் சுரண்டல் நடவடிக்கைகளை மேலும் அதிகரித்திட வேண்டும். இதுதான் இப்போது உலகம் முழுதும் நடந்துகொண்டிருக்கிறது. நவீன தாராளமயம், வேலைவாய்ப்பை மற்றும் தேவையை அதிகரிக்கக்கூடிய விதத்தில் அதிக அளவில் பொதுச் செலவினங்கள் செய்ய வேண்டும் என்பதைத் தடுக்கிறது.

ஏனெனில் அவ்வாறு செய்தால் அது அவற்றின் லாப விகிதங்களைக் கடுமையாகப் பாதித்து விடும். எனவே, அனைத்து ஊக்குவிப்பு நிதித்தொகுப்புகளும் இருக்கின்ற நிதியை தனியார் முதலீட்டுக்கு அளிப்பதற்குத் தயாராக இருக்கிறார்களே யொழிய, பொது முதலீட்டுக்கு அளிக்கத் தயாராயில்லை. இது பலனளிக்கப் போவதில்லை. ஏனெனில் நாம் மேலே குறிப்பிட்டதைப்போல, தனியார் முதலீடு மூலமாக உற்பத்தி செய்த பொருள்கள் விற்றாக வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் மற்றும் நம் நாட்டிலும் சந்தைகள் சுருங்கிக்கொண்டிருப்பதால், இது சாத்தியமில்லை.

இவ்வாறு, நவீன தாராளமயத்திடம், இப்போது ஆழமாகிக்கொண்டிருக்கும் பொருளாதார மந்தத்திற்குத் தீர்வு ஏதும் இல்லை. மாறாக, அது, அதனை மேலும் ஆழமாக்கிடும். இதுதான் நவீன தாராளமயத்தின் திவால்நிலை என்பதாகும்.

அரசியல் வலதுபக்கம் பெயர்வு

உழைக்கும் மக்களைக் கசக்கிப் பிழிவதை அதிகரிப்பது வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு சுரண்டலை மேலும் உக்கிரமான முறையில் கொண்டுசெல்வதற்கு ஏற்றவிதத்தில் ஓர் அரக்கத்தனமான, எதேச்சாதிகார, பாசிஸ்ட் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதற்கு, இத்தகைய உக்கிரமான சுரண்டலுக்கு எதிராகவும், அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள துன்ப துயரங்களுக்கு எதிராகவும், மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் எதிர்ப்புகளைத் திசைதிருப்புவது தேவை. இதற்காகத்தான் எப்போதும் அவர்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய விதத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுவதைப்போல பிற நாட்டினர் மீதான வெறி (xenophobia) மற்றும் நிற வெறி, இந்தியாவிலும் துருக்கியிலும் மேற்கொள்ளப்படுவதைப் போல சாதி வெறி மற்றும் மத வெறி, பிரேசிலில் மேற்கொள்ளப் படுவதைப் போல நேரடியாகவே பாசிஸ்ட் ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் வெறுப்பையும் வன்முறைகைளையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போதைய உலக அரசியலில், மக்கள் மத்தியில் சீர்குலைவு உணர்ச்சிகளைக் கிளப்பி, அதன் அடிப்படையில் வலதுசாரி எதேச்சாதிகார ஆட்சிகள் அமைந்திருக்கின்றன.
இத்தகைய வலதுசாரி சாய்வு என்பதன் பொருள், உழைக்கும் மக்களுக்கு எதிராக அவர்களை விஷத்தனமாகப் பிளவுபடுத்தி அவர்களுக்கு எதிராக தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுவது என்பதேயாகும்.

Revolution or coup~I - The Statesman

அக்டோபர் புரட்சியிலிருந்து உத்வேகம் பெறுவோம்

இந்தத் திசைவழியில்தான் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏவப்பட்டுள்ள தாக்குதல்களை எதிர்த்து முறியடித்திட, அக்டோபர் புரட்சியும் மற்றும் அதன் சாதனைகளும் உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்களுக்கு உத்வேகத்தை அளிப்பது தொடர்கிறது.

பல நாடுகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு இது வலுவை அளிக்கிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தால் மக்களின் துன்ப துயரங்களுக்குத் தீர்வு காண முடியாது. மாறாக, அது மக்களை மேலும் ஒடுக்குவதற்கே முயற்சிகளை மேற்கொள்ளும். மக்களின் துன்ப துயரங்களுக்கு ஏதேனும் தீர்வு கிடைக்கும் எனில் அது முதலாளித்துவத்திற்கு வெளியே, அதாவது சோசலிசத்தால் மட்டுமே காண முடியும்.

சோசலிசமே மாற்று ஆகும்.
(தமிழில்: ச. வீரமணி)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *