மோடி அரசும், கொரானா தடுப்பு மருந்துகளின் பெயரில் லாப வேட்டையும் – வே. மீனாட்சி சுந்தரம்பொதுவாக மிருக வேட்டைக்குச் செல்பவர்கள் மிருகங்களை மட்டுமே வேட்டையாடுவர். வேட்டையாட வரும் பிறரை வேட்டையாடி வீழ்த்த மாட்டார்கள். ஆனால் முதலாளித்துவ கட்டத்தில் லாபவேட்டையாடுபவர்கள் ஒருவரை ஒருவர் வேட்டையாடி வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பர்.

 இன்று ஜெனட்டிக் இன்ஜினியரிங் என்ற கருவின் இயல் மாற்றுத் தொழில் நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்படும் கொரானா தடுப்பு மருந்தினை லாபவேட்டைக்கு குறிவைப்பவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் கண்டு லாபத்தை அள்ள முயலுவதைக் காண்கிறோம். கொரானா வைரஸ்களுக்கு வர்க்க பேதம் தெரியாது. ஆனால் அதனை வெல்லவரும் மருந்திற்கு வர்க்க பேதம் பார்க்கும் முதலாளித்துவ குணம் தொத்திவிடுகிறது.. மருந்தைச் சோதிக்க ஏழைகளாக இருப்பவர்கள் தேவை மருந்தின் குணப்படுத்தும் திறன் உறுதியாகிவிட்டால் அது பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் அருமருந்தாகிவிடும். இன்று காண்பதென்ன?

 மேலை நாட்டு மருந்து நிறுவனங்கள் இந்திய மருந்து நிறுவனங்களை வேட்டையாடுகின்றன. இந்தியாவின் சுதேசி நிறுவனங்களோ லாபம் குவிக்க முயலுவதால் மக்களுக்கு  மருந்துகள் எட்டாத விலையாக உயரப் போகிறது..

மோடி அரசின் மோசடி உத்தரவுகள்

 மோடி அரசு 1966ல் நிறுவப்பட்ட பாரத் பயோடெக் என்ற தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கோவாக்சின் என்ற மருந்தையும், 1996ல் துவங்கிய சீரம் இந்தியா என்ற இன்னொரு நிறுவன தயாரிப்பான கோவிஷில்டு என்ற மருந்தையும் கொரானா தடுப்பு மருந்துகளாக அறிவித்ததோடு, அந்த மருந்துகளின் 10 கோடி டோஸ்களை  அரசே வாங்கி தேர்வாகப் பயன்படுத்தும் என்று அறிவித்தது. உண்மையில் இந்திய அரசு மறைமுகமாகத் தனியார் நிறுவனங்களின் மூன்றாம் கட்ட சோதனைச் செலவைக் குறைக்கச் செய்கிற சூழ்ச்சியே. மேலை நாடுகளில் காசு கொடுத்து தன்னார்வலர்களைப் பயன்படுத்தும் நிலமை உள்ளது. இந்தியாவில் அந்த முறைகள் நடைமுறைக்கு வரவில்லை. அதற்கான சட்ட பாதுகாப்புமில்லை கொள்ளை லாபம் சம்பாதிக்கும் இந்திய மருந்து நிறுவனங்கள் தன்னார்வலராகச் சோதனைக்கு உட்படுபவர்களுக்குக் காசு கொடுக்க மனம் வரவில்லை. மேலை  நாடுகளிலும், இந்தியாவிலும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு வரிப் பணத்திலிருந்து நிதி கொடுத்தே ஆய்வு செய்யவைக்கின்றன.  மோடி அரசு தனியார் லாபம் சம்பாதிக்கத் தேர்வு செய்தவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதாகப் பசப்புகிறது. சர்வதேசச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மேலை நாட்டு மருந்து நிறுவனங்கள் இதனை நேரடியாக விமர்சிக்காமல் முறையாகச் சோதிக்காத மருந்து எனக் காட்டமாகக் கத்துகின்றன. இந்த இரண்டு இந்திய நிறுவனங்களும் மேலை நாட்டுத் தொழில் நுட்பங்களைப் பெற்றே இவற்றைத் தயாரிக்கின்றன என்ற உண்மையை மோடி மட்டுமல்ல பன்னாட்டு நிறுவனங்களும் மறைக்கின்றன.  அதிலும் ஒரு கூத்து மோடி அரசு பாரத்பயோ டெக் நிறுவனத்தை இரண்டாம் இடத்தில் தள்ளி சீரம் இந்தியாவிற்கு அதிக சலுகை காட்டுவதாக அந்த நிறுவனம் புலம்புகிறது. (Vaccine war: Bharat Biotech chief lashes out at Serum Jan 5, 2021, 10:04 IST TIMES OF INDIA)

பொதுத்துறை மாயமான வரலாறு

 தனியார் ஆர்வம் காட்டாததால் இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்திலிருந்து பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் உருவாக்கும் நோய்களைத் தடுக்கும் வாக்சின்கள் ஆராய்ச்சியும்  தயாரிப்புகளும் பொதுத்துறை தொழில்களாக இருந்தன. அரசு மருத்துவ மனைகள் மருத்துவர்கள், ஆய்வாளர்கள்,  உற்பத்தி கட்டமைப்பு இணைந்து செயல்பட்டனர். 1960களுக்குப் பிறகு படிப்படியாக பொதுத்துறை உற்பத்தி முறையை மூடவைத்து வாக்சின்கள் தயாரிப்புகள் தனியார் லாபம் சம்பாதிக்கும் தொழில்களாகிவிட்டன.

இன்று ஒரு விநோதம் அரங்கேறுகிறது

தடுப்பு மருந்து பற்றிய பிரதமர் அறிவிப்பு வந்த மறு நிமிடமே சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் இந்த மருந்துகளின் திறன்கள் சர்ச்சைக்குள்ளாயின. மூன்று கட்ட கட்டாய சோதனைகளுக்கு உட்படுத்தாமலே  பாரத்பயோ டெக் தயாரித்த கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை மோடி அரசு புகுத்துவதாக 4 ஜனவரி 2021 தேதியிட்ட பி.பி.சி செய்தி குற்றம் சாட்டியது. 

( Covaxin: Concern over ‘rushed’ approval for India Covid jab. https://www.bbc.com/news/world-asia-india-55526123?fbclid=IwAR0U-6D2mTgSO7XxA7jgHzynwBctRbu45ARHsdPh85TJ-D87rWJD5R1OGWo)

விநோதம் என்னவெனில் பிரிட்டிஷ் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் சீரம் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மருந்தையும் மோடி அரசு புகுத்தியது பற்றி பி.பி.சி செய்தி  எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த மருந்தின் திறன் மீது சந்தேகத்தை உருவாக்கும் செய்தியை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுக் கலக்கியது 

(https://www.nytimes.com/interactive/2020/health/oxford-astrazeneca-covid-19-vaccine.html?auth=login-google)  அந்த பத்திரிக்கையும் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பு மருந்திற்கு வக்காலத்து வாங்கவே எழுதியது என்பது வெளியே தெரியாது. இன்று அமெரிக்க கொரானா தடுப்பு மருந்து நிறுவனங்கள் (ஃபிஷர் மோடர்னா) இரண்டும் உலக சந்தையைக் கைப்பற்ற முயற்சிக்கிறது அமெரிக்க அரசும் அதற்கு உதவுகிறது. மோடி அமெரிக்க ஆளும் வட்டாரத்தைப் பகைக்கிற முறையில் சுதேசி நிறுவனங்களை அங்கீகரித்துள்ளார். அதாவது இந்திய மக்கள் எனும் மானை வேட்டையாடப் பன்னாட்டு நிறுவனமெனும் வேட்டைக்காரனைத் தடுத்து, சுதேசி தனியார் நிறுவனம் எனும் குள்ள நரி வேட்டையாடப் பிரதமர் லைசென்ஸ் கொடுத்துவிட்டு தேசபக்திக்கு இது தான் இலக்கணம் என மார்தட்டுகிறார்..     

அறிவுச் சொத்துரிமையும் தொற்று தடுப்புக்களும்

மேனிஞ்சைட்டிஸ் என்ற மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் ராபின்ஸ் மறைவை ஒட்டி 17 – டிசம்பர் 2019 – நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் அவர் தனது கண்டுபிடிப்பை அறிவுச் சொத்துரிமை கொண்டாடப் பதிவு செய்ய மறுத்துவிட்டார் என்று குறிப்பிடுகிறது. பொதுமக்களின் வரிப்  பணத்தாலும், உதவியாலும் ஆய்வு நடத்தியதால் இது பொதுமக்களின் சொத்து அதை வைத்து நாங்கள் பணத்தைக் குவிப்பவர்களாக ஆக விரும்பவில்லை என்று அவரோடு இணைந்து ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் ஸ்கீனர்சன் கூறியதாக அச் செய்தி கூறுகிறது. 

விநோதம் என்னவெனில் டாக்டர் ஜான்.பி.ராபின்ஸ் உருவாக்கிய  வழியில்தான் இந்திய பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதாகத் தனது வலைத்தளத்தில் பெருமையோடு குறிப்பிடுகிறது.  அது போல் ஆக்ஸ்போர்டு பல்கலை கழக மாணவர்கள் உதவியுடன் தான் ஆஸ்டரா செனிக்கா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டது. அதாவது எல்லா நாடுகளிலும் மக்களின் வரிப் பணமும் ஒத்துழைப்பும் ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியும் அவசியமாகின்றன.. மேலும்  முதலாளித்துவ உற்பத்தித்துறையால் இயற்கை சூழல் கெட்டு பலவகை  நுண்ணுயிர்கள் உருவாகின்றன. அதனைத் தேடுவது அடையாளம் காண்பது  முறியடிப்பது என்பது கூட்டு முயற்சியாலேயே சாத்தியம். அதனை அறிவுச் சொத்து என்று லாபம் சம்பாதிக்க விட்டால் என்ன நடக்கும் என்பது இந்தியா தொற்று நோய்களின் கோவிலாக இருப்பதை வைத்தே கூறிவிடலாம்.

India records highest ever single day COVID-19 recoveries of 51,255 - Punekar News

இந்தியா தொற்று நோய்களின் கோவில்

2000ம் ஆண்டிலிருந்து 2019 வரை  தாராள முதலாளித்துவம் உலகளவில் பரவிய காலம் மட்டுமல்ல தொற்றுகளும் உலகமயமான காலமாகும். 2003ல் சார்ஸ் என்ற தொற்று உலகைக் குலுக்கியது. பணக்கார நாடு ஏழைநாடு சோசலித்தை நோக்கி பயணிக்கும் நாடு. தாராள முதலாளித்துவத்தைப் பேணும் நாடு என்று பாகுபாடு காட்டாமல் பரவியது. அதன் பிறகு முதலாளித்துவ நாடுகள் லாபம் சம்பாதிக்க இதனைப் பயன்படுத்தத் தொடங்கின.  சோசலிச பாதையைத் தேர்ந்தெடுத்து நாடுகள் நோய் பரவலைத் தடுக்க பாடம் கற்றன.

 20 ஆண்டுகளாக இந்தியமக்களைத்   தாக்கும் வைரஸ் தொற்றுகள்  பட்டியல் வெகு நீளம்  நிஃபா வைரஸ், ஸிர்க்காவைரஸ், சிக்குன் குனியா வைரஸ்,  டெங்கு ஏவியன், ஜப்பானிஸ் என்சபெலிட்டிஸ் மெனின்கோகோகால் என்று அடுக்கலாம். இது தவிரப் பாக்டீரியா உருவாக்கும் காலரா. பிளேக் இன்றும் இந்தியாவில் கோவில் கட்டி குடியிருக்கின்றன. லாப நோக்கு கொண்ட தொழில்களாலும் சூழல் பாதிப்பும், சுத்தமான குடிநீர் பணம் குவிக்கும் சரக்காகிவிட்டதாலும்  இந்த நோய்கள் பரவுகின்றன. இந்திய அரசு தொற்றுநோய்களைத் தடுப்பது ஒரு தனியார் தொழிலாகக் கருதுவதால் சிகிச்சைகள்  பணக்காரர்களின் சலுகை ஆகிவிடுகின்றன..

கிருமிகளும் முதலாளித்துவமும்

2003 சார்ஸ் தொற்று உலகைக் குலுக்கிய பிறகு இரண்டு வகையான அணுகுமுறைகள் உலகளவில் எழுந்தன. 

அந்த பரவலுக்கு முன்பு வரை ஏகாதிபத்திய ஆசை கொண்ட நாடுகளான அமெரிக்கா. ஜப்பான் கிருமிகளை ஆயுத பயன்படுத்திடத் திட்டங்களோடுதான் ஆய்வுகள்  இருந்தன.  அதற்கு மாறாகச் சோவியத் ஒன்றியம் மற்றும் சோசலிச பாதையைத் தேர்வு செய்த நாடுகள் கிருமி ஆயுதங்களை முறியடிக்கத் தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தன.  தொற்று பரவாமல் இருக்கும் ஆய்வில் வெகுவாக முன்னேறி வாக்சின்கள் உருவாக்கும் தொழில் நுட்பங்களைக் கண்டு கொண்டனர் இன்று கூட கொரானா வைரசிற்கு முதலில் வாக்சின் கண்டது ரஷ்யாதான்.2020 ஆகஸ்டில் சோதனையைத் தொடங்கிவிட்டது அது போல் சீனா,கியூபா, வியட்நாம் உருவாக்கிவிட்டன.

லாப நோக்குடன்  ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா பின்னர் தான் கண்டுபிடித்தன. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மன் நிறுவனத்தோடு இனைந்தே வாக்சினை உருவாக்குகிறது. லாபநோக்கால் ஏழை அமெரிக்கா, ஏழை இந்தியா என முதலாளித்துவ நாடுகள் இரண்டாகிவிட்டன.

 கொரானா பரவலைச் சேதாரமில்லாமல் தடுத்த வியட்நாமை உலகமே பாராட்டுகிறது மேலை நாட்டுச் செய்தி நிறுவனங்களே இச்செய்தியை மறைக்க முடியவில்லை. கியூபா தடுப்பு மருந்துகள் ஊசி மூலமும் நாசி மூலமும் செலுத்துகிற மருந்துகளைத் தயாரித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகத் தொற்று உருவாகாத சூழலை உருவாக்குவதில் சோசலிசபாதையை தேர்ந்தெடுத்து நாடுகள் கவனம் செலுத்துகின்றன. முதலாளித்துவ பொருளாதார வல்லரசுகளும்  இந்திய அரசும் தடுப்பு மருந்துகளைத் தனியார் லாப வேட்டைப் பொருளாக வைப்பதில் கவனம் செலுத்துகின்றன. இப்பொழுதே வாக்சின் விலை  ரூபாய் 5௦௦ முதல் 700 என்று பத்திரிக்கைகள் எழுதத் தொடங்கிவிட்டன.

வரிப் பணத்தால் செய்த பொருளுக்கு விலை வைக்காதே என்ற மக்களின் குரல் வலுக்க வில்லையானால் போலிகளும் தயாராகிவிடும். மோடி அரசு பணக்கார இந்தியாவைக்காட்டி கோவிட்19 விரட்டியதாகப் பசப்பும் ஏழை இந்தியா தொற்றின் வலியைச் சுமப்பார்கள். வாயைக்கட்டிச் சேமித்ததையும்  இழப்பார்கள்.