நூலின் பெயர் : மோகனா – ஓர் இரும்புப் பெண்மணியின் கதை
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
விலை: ரூ.120.00
பக்கங்கள்: 144
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/mohana-ore-irumbu-penmaniyin-kadhai/

மோகனா என்ற பேராசிரியரின், தொழிற்சங்க, அறிவொளி, அறிவியல் இயக்க செயல்பாட்டாளரின் சுயசரிதை இது.
தமிழில் சுயசரிதை எழுதுவது மிகவும் குறைவு. சுயசரிதை என்றால் மிகப் புகழ்பெற்ற நடிகர்கள், அரசியல் தலைவர்கள் இப்படியானவர்கள்தான் எழுத வேண்டும் என்று நாம் இயல்பாகவே நினைக்கிறோம். அணிந்துரையில் எனது மரியாதைக்குரிய தோழர் எஸ்.ஏ.பெருமாள் சுயசரிதை எழுதுவதற்கு ஒரு தகுதி வேண்டும். சமூகப் போராளிகளுக்கே தன் வரலாறு எழுத உரிமையுண்டு என்று சொல்கிறார். எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. எல்லாருடைய வாழ்விலும் பிறர் அறிந்து கொள்வதற்கு நல்லதோ, கெட்டதோ ஒரு செய்தி இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. சமூகப் போராளிகளின் சுயசரிதையில் பிறர் அறிந்து கொள்வதற்கான செய்திகள் சற்று கூடுதலாக இருக்கக் கூடும். அந்த வகையில் நான் யார் தன் வரலாற்றை எழுதினாலும் வரவேற்பேன். அதில் பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயக்கங்கள் சார்ந்து போராடுபவர்கள் எழுதியது என்றால் இன்னும் கூடுதல் உற்சாகத்தோடு கைதட்டி வரவேற்பேன்.

எளிய குடும்பத்தில் பிறந்து, வாழ்வில் ஒவ்வொன்றிற்காகவும் பெரிய போராட்டம் செய்தே மேலேறி வந்தவர் தோழர் மோகனா். ஐந்தாம் வகுப்பிற்கு மேல் பக்கத்து ஊரில் சென்று படிக்க போராட்டம். பிறகு பி.யூ.சி படிக்க, பட்டப்படிப்பு படிக்க, பின் முதுகலைப் பட்டம் பெற என்று ஒவ்வொன்றிற்கும் போராட்டம். பின் வேலைக்குச் செல்ல ஒரு தனி போராட்டம். இதில் திருமணம், அந்த திருமண வாழ்வு தந்த சோகம், துக்கம் என்று மற்றொரு டிராக்கில் வீட்டில் வேறுவிதமான போராட்டம். இத்தனைக்கும் நடுவில் அவர் கல்லூரி ஆசிரியர் இயக்கமான மூட்டாவில் இயங்குகிறார். பின்னர் அறிவொளி இயக்கத்தில். பிறகு அறிவியல் இயக்கத்தில். அறிவியல் இயக்கத்தில் மாநில துணைத் தலைவராக பணிபுரிந்து பல பல அண்டுகளுக்குப் பிறகுதான் மாநிலத் தலைவராக முடிகிறது. நடுவில் புற்று நோய். அதை எதிர்த்துப் போராட்டம். மனஉறுதியோடு அதை எதிர்த்து அதிலிருந்து மீண்டு வருகிறார். உடல் வலிமை பெற ஐம்பது வயதிற்கு மேல் தாய் சி பயிற்சியில் சேர்கிறார். அதில் முதுகலைப் பட்டயம் பெறுகிறார். இந்தியாவிலேயே மிக அதிக வயதில் இந்தப் பட்டயம் பெற்ற பெண் இவர்தான். பணி ஓய்விற்குப் பிறகு, சிஐடியுவில் இணைந்து துப்புரவுப் பணியாளர்களுக்காக போராடி வருகிறார். ஏராளமான கட்டுரைகள், நூல்கள் எழுதுகிறார். புற்றுநோய் பற்றி இன்று முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். வயது அப்படியொன்றும் ஆகிவிடவில்லை.. 72 தான்! இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் அவர் வாழ்வை ரசிக்கிறார். இந்தியா முழுவதும், வெளிநாடுகள் சிலவற்றிற்கும் பயணித்திருக்கிறார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

மேலே சொன்ன ஒவ்வொன்றிற்கும் ஒரு போராட்டம். பெண் என்பதனால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே. ஆனால் அவரது மனதிடமும், துணிவும் வியப்பூட்டுகிறது. இயக்க வேலைகளுக்காக முன்பின் தெரியாத ஊர்களுக்கெல்லாம், ( மொழி தெரியாத வெளிமாநிலங்களில் கூட) நள்ளிரவில் சென்று இறங்கும் அனுபவமும் உண்டு, நள்ளிரவில் வீடு திரும்பும் அனுபவமும் உண்டு. 2017 – 19 காலகட்டத்தில் அறிவியல் இயக்கப் பணிகளுக்காக சுமார் 1,42,000 கிமீ பயணம் செய்திருக்கிறேன் என்று அவர் சொல்லும் போது திகைப்பாக இருக்கிறது. அதுவும், புற்றுநோய் வந்து மீண்டு பிறகு, 60 வயதிற்கு மேல் !



இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்தது எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மிக நேரடியாக தனது சொந்த வாழ்வு பற்றி எழுதியிருப்பது. தமிழில் இப்படி எழுதுவது, அதுவும் பெண்கள் – அவர்கள் எத்தனை வயது முதிர்ந்தவர் என்றாலும் கூட – எழுதுவது மிகவும் அரிது. பொதுவாழ்வின் நிகழ்வுகளை இந்த ஆண்டு இந்த அமைப்பில் இன்ன பொறுப்பில் இருந்தேன், இதைச் செய்தேன், அதைச் செய்தேன், இந்த இந்த ஊர்களில் நடந்த இந்த இந்த மாநாடுகளில் கலந்து கொண்டேன் என்று யாரும் எளிதாக எழுதிவிடலாம். ஆனால் தன் குடும்ப வாழ்வு பற்றி, வீட்டு சண்டையில் கணவனிடம் அடிவாங்கியது பற்றி, விவாகரத்து பெற்றது பற்றியெல்லாம் இத்தனை நேர்மையாக யாரும் எழுதியதில்லை. பொதுவாழ்விற்கு வருவதற்கு இடையூறாக, எழுதவும், படிக்கவும் இடையூறாக இருக்கும் கணவன்,மாமியாரைப் பெற்ற பெண்கள் ( 100க்கு 99 சதம் இப்படியானவர்கள்தான் !) தாம் எழுதும் புத்தகத்தில் என் எழுத்துப் பணிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் கணவர் இன்னாருக்கும், மாமியார் இன்னாருக்கும் நான் என்றென்னும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் இன்றி இந்த நூல் சாத்தியமில்லை என்று எழுதுவதைத் தான் காலம் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். தோழர் மோகனா எந்த தயக்கமும் இன்றி தன் குடும்ப வாழ்வு பற்றி பதிவு செய்திருக்கிறார். அந்த சோகத்திலிருந்து மீண்டெழ பொது வாழ்வும், பிறருக்காகப் பாடுபடுவதும் எப்படி உதவின என்பதையும் மிக அழகாக எழுதியிருக்கிறார். இந்த சிறு நூலின் அடிநாதமே அதுதான்.

ஒரு பெண்ணிற்கு படிப்பு, வேலை தரும் மிகப் பெரிய தைரியம் எத்தகையது என்பதை பக்கத்திற்குப் பக்கம் சொல்லும் நூல். தோழர். மோகனா என் அம்மாவை விட 8 -10 வயதுதான் இளையவர். அவர் பெறாத பல பிள்ளைகளில், அவரை அம்மா என்றே அழைக்கும் பலரில் நானும் ஒருவன். ஒருக்கால் என் அம்மா மோகனா போல் படிப்பதற்காகப் போராடி வெற்றி பெற்றிருந்தால் அவரது வாழ்க்கை, அதன் தொடர்ச்சியாக எங்களது வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்பதை அவ்வப்போது நினைத்துக் கொண்டே இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.

நிஜமாகவே மோகனா ஒரு இரும்புப் பெண்மணிதான்..
தனிப்பட்ட முறையில் எனக்கு அவரோடு அறிமுகம் உண்டு. நட்பு உண்டு என்பது பற்றி எனக்கு எப்போதும் பெருமை உண்டு. நானறியாத அவரது வாழ்வைப் பற்றி விரிவாகப் படித்ததும் அந்தப் பெருமை இன்னும் அதிகமாகி விட்டது.
வாழ்த்துகள் அம்மா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *