நாட்டில் தற்போதுள்ள சமூக அமைப்பைக் கடுமையாகச் குற்றஞ்சாட்டும் விதத்தில், இந்தியச் சிறைகளில் வாடும் சிறைவாசிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்கிற உண்மையை சமீபத்தில் வெளியாகியுள்ள அரசாங்கத்தின் சிறைகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.  2011இல் மேற்கொள்ளப்பட்ட கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்நாட்டின் மக்கள்தொகையில் இம்மூன்று சமூகத்தினரின் பங்கு என்பது 39.4 சதவீதமாகும். ஆனால் சிறையில் அடைக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை இம்மூன்று சமூகத்தினரையும் சேர்த்து 50.8 சதவீதமாகும்.

மேலும் இம்மூன்று சமூகத்தினரும் நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். எழுத்தறிவு விகிதம் குறைவு, பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதற்கான வாய்ப்பு வசதிகள் மிகவும் குறைவு, வறுமை விகிதம் அதிகம், வேலையின்மை மிக அதிகம் மற்றும் இவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருப்பது என்பது இதர சமூகத்தினரைவிட குறைவேயாகும். இவற்றுக்கும் மேலாக, சமூகத்தில் தங்களை ‘உயர்ந்த சாதியினர்’ என்று கூறிக்கொள்பவர்களால் இவர்கள் சமூக ஒடுக்குமுறைக்கும், வன்முறை வெறியாட்டங்களுக்கும், பாகுபாடுகளுக்கும் ஆளாகிக்கொண்டுமிருக்கிறார்கள். தலித்துகள் மற்றும் பழங்குடியினரைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறை என்பது பல நூறு ஆண்டுளாக தொடர்ந்து வருகிறது. முஸ்லீம்களைப் பொறுத்தவரை, சமீபத்தில் தலைதூக்கியுள்ள சங் பரிவாரத்தின் அரசியல் அங்கமாக விளங்கும் பாஜக, மத்தியிலும் மற்றும் பல மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள நிலையில் அதனுடன் இணைந்துள்ள பல்வேறு அமைப்புகளும் இவர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை உமிழ்ந்தும், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டும் ஒரு புதிய விஷ சகாப்தத்தையே உருவாக்கி வருகிறார்கள்.  இத்தகைய இவர்களின் பொருளாதார மற்றும் சமூக பிற்பட்டநிலைமையும் மற்றும் இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாகுபாடும்தான் இந்திய சிறைகளில் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் இவர்கள் அதிக விகிதத்தில் இருப்பதற்குக் காரணங்களாகும்.

நம்நாட்டின் நிலைமை, அமெரிக்காவில் ஆப்ரிக்க-அமெரிக்கர் என்னும் கருப்பர் சமூகத்தினரின் நிலைமைகளை நினைவூட்டுகிறது. சமீபத்தில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அங்கே ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் மொத்த மக்கள் தொகையில் 13 சதவீதத்தினராக இருந்தபோதிலும், சிறைகளில் வாடும் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் எண்ணிக்கை மனசாட்சியற்றமுறையில் 40 சதவீதமாகும்.

தேசியக் குற்றப் பதிவு பீரோ (National Criminal Record Bureau) வெளியிட்டுள்ள அட்டவணை 1-இன்படி, மொத்தம் உள்ள சிறைவாசிகளில் 18.1 சதவீதத்தினர் முஸ்லீம்களாகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் 14.2 சதவீதத்தைவிட இது அதிகமாகும்.

தலித்துகள் நிலைமையைப் பொறுத்தவரை இடைவெளி இதைவிட அதிகம். இந்திய மக்கள்தொகையில் தலித்துகளின் பங்கு என்பது 16.6 சதவீதமாகும். ஆனால் சிறைகளில் வாடும் தலித்துகளின் எண்ணிக்கையோ 21.2 சதவீதமாகும்.

இதேபோன்று பழங்குடியினர் நாட்டின் மக்கள்தொகையில் 8.6 சதவீதத்தினர் இருக்கின்றனர். ஆனால் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பழங்குடியினர் 11.5 சதவீதமாகும்.

“சப்கா சாத், சப்கா விகாஷ்” என்று (“sabka saath, sabka vikas”) என்று கூறுகிற இப்போதைய ஆட்சியாளர்களும் மற்றும் இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் சமூகநீதி மற்றும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று கூறிவந்த போதிலும் நாட்டில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் உண்மையான நிலைமை என்பது இதுதான்.

சமூகத்தில் உரிமைகள் பறிக்கப்பட்ட பிரிவினர்

இவர்களின் மோசமான நிலைக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இதில் முதலாவதும், மிகவும் முக்கியமானதுமானதும் இவர்களில் அதிகமானவர்கள் ஏழைகள் என்பதாகும். இவ்வாறு இவர்கள் மிகவும் வறியநிலையிலிருப்பதால், இவர்களால் தங்கள்மீது ஏவப்படும் கொடுமைகளுக்கு எதிராக, காவல்துறையினரின் புலன் விசாரணையிலிருந்து, நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் வரை சட்டரீதியாக முறையான நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. அவர்களின் வறியநிலையின் காரணமாக, தாங்கள் கைது செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு, வழக்குரைஞர்களைச் சந்தித்து முறையிடுவதற்கோ, பின்னர் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கோ, பிணையில் வெளிவருவதற்கோ, தண்டனை பெற்றால் மேல் நீதிமன்றங்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கோ முடியவில்லை.

இவர்கள் ஏழைகளாக இருப்பது மட்டும் இவர்களுக்குத் தடையாக அமைந்திடவில்லை. அதைவிட, சமூகத்தில் காவல்துறையினரும், பல சமயங்களில் இவர்களுக்கெதிராக நீதிமன்றங்களும் மிகவும் விரிவான அளவில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதும் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொள்ள வேண்டிய காவல்துறையினரும், நீதிபதிகளும் பல சமயங்களில் முஸ்லீம்கள், தலித்துகள் அல்லது பழங்குடியினருக்கு எதிராக வகுப்புவாத மற்றும் சாதீய சாய்மானத்துடன் நடந்துகொள்வதால், இவர்களுக்கு நீதி கிடைப்பது என்பது அரிதாகிவிடுகிறது.

இந்தியாவின் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் சுமார் 30 சதவீதத்தினர்தான் தண்டனைக் கைதிகள். 69 சதவீதத்தினர் விசாரணைக் கைதிகள். ஒரு சதவீதத்தினர் இதரவகைப்பட்ட கைதிகள்.

விசாரணைக் கைதிகளில் பெரும்பாலானவர்களால் பிணை விண்ணப்பமே தாக்கல் செய்ய இயலா நிலையில் இருப்பவர்களாவார்கள். இதற்கான வசதிகளோ வாய்ப்புகளோ இவர்களுக்கு இல்லை. இவ்வாறு வறுமையின் காரணமாகவே இவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், மேலே கூறிய தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களாவார்கள்.

முஸ்லீம்கள் குறித்து மாநில அரசாங்கங்களின் நிலை

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் அதிக அளவில் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதற்கு மற்றொரு காரணி என்ன என்பதை ஆராய்வோம்.

உத்தரப்பிரதேசத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் 27 சதவீதத்தினர் முஸ்லீம்களாவர். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் இவர்கள் 20 சதவீதம் மட்டுமே. குஜராத்தில் மக்கள்தொகையில் முஸ்லீம்கள் 10 சதவீதம் மட்டுமே. ஆனால் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் இவர்கள் 27 சதவீதமாகும். அனைத்து மாநிலங்களுடனும் ஒப்பிடும்போது,  குஜராத்தில் மிகவும் மோசமான நிலையாகும்.

ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவுகளில்தான் அதிக அளவில் முஸ்லீம்கள் மக்கள்தொகை இருந்தது. ஆனால் இப்போது அவை யூனியன் பிரதேசங்களாகிவிட்டன. அதற்கு அடுத்து அஸ்ஸாமில், சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 45 சதவீதத்தினர் முஸ்லீம்கள். ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அஸ்ஸாமில் முஸ்லீம்கள் 34 சதவீதமாகும்.

இம்மூன்று மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ள அம்சம் என்னவென்றால், இம்மூன்று மாநிலங்களும் பாஜக-வினால் தலைமை தாங்கப்படக்கூடிய அரசாங்கங்களைப் பெற்றிருப்பதும், சங் பரிவாரங்களாலும் பாஜக-வினாலும் முஸ்லீம்களுக்கு எதிராக மிகவும் வெறித்தனமான முறையில் மதவெறித் தீ விசிறிவிடப்படுவதுமாகும்.

உத்தரப்பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் அரசாங்கம் 2017இல் ஆட்சிக்கு வந்தது. அன்றிலிருந்தே அது முஸ்லீம்களைக் கடித்துக் குதறும் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.

குஜராத், கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவின் அதிகாரத்தில் இருந்து வருகிறது. அங்கே 2000 பிப்ரவரி-மார்ச் மாதத்தில் இந்தியாவின் வரலாற்றில் மிகவும் மோசமான முறையில் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்தன. வட கிழக்கு மாநிலங்களில் பாஜக சமீபத்தில் ஆட்சிக்கு வந்துள்ள அஸ்ஸாமில், தேர்தல் ஆதாயங்களுக்காக,  சங் பரிவாங்களினால் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித் தீ மிகவும் கொடூரமான முறையில் விசிறிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு அங்கேயும் முஸ்லீம் கைதிகள் எண்ணிக்கை அதிகம்.

மேற்கு வங்கத்தில் உள்ள நிலைமை மிகவம் வித்தியாசமான ஒன்று. இங்கே 2011இலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆட்சியிலிருக்கும்  மமதா பானர்ஜி, தன்னை சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக நிற்பவர் என்று சித்தரித்துக் கொண்டுள்ளபோதிலும்,  இம்மாநிலத்தின் முஸ்லீம் மக்கள் தொகை 27 சதவீதம் என்ற போதிலும், சிறையிலிருக்கும் முஸ்லீம்கள் எண்ணிக்கை 37 சதவீதமாகும். இதிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் முஸ்லீம்களின் நலன்களைப் பாதுகாப்பதாக உதட்டளவில் கூறிக்கொண்டிருக்கிறது என்பது நன்கு விளங்கும். உண்மையில் முஸ்லீம்களை சிறையில் அடைப்பதைப் பொறுத்தவரையில்,  இதன் நிர்வாக எந்திரம், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிர்வாக எந்திரத்திற்கு வேறான ஒன்று அல்ல.

தலித், பழங்குடியினர் நிலை

இதேபோன்றே பாஜக ஆளும் மாநிலங்களில் தலித், பழங்குடியினரும் அதிகஅளவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் தலித்துகள் 24 சதவீதத்தினர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மக்கள்தொகை என்பது 21 சதவீதம் மட்டுமே. இம்மாநிலத்தில் பழங்குடியினர் சதவீதம் 0.6 சதவீதம் என்ற அளவிற்கு உள்ள போதிலும், 5 சதவீதத்தினர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

குஜராத்திலும் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள கதிதான். தலித்துகள் மக்கள் தொகை 7 சதவீதம், ஆனால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் 16 சதவீதம். அதேபோன்று பழங்குடியினர் மக்கள்தொகை 15 சதவீதம், ஆனால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் 16 சதவீதமாகும்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசாங்கம் 2016இல் அமைக்கப்பட்டபிறகு, தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது என்பது அதிகரித்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் தலித்துகள் மக்கள்தொகை 16 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், சிறையிலிருக்கும் தலித்துகளின் எண்ணிக்கை 21 சதவீதமாகும். இதேபோன்று, மக்கள்தொகையில்  1.3 சதவீதமே இருக்கின்ற பழங்கடியினர், சிறைகிளில் 4 சதவீதம் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசாங்கம்தான் ஆட்சி செய்து வருகிறது. இங்கே மக்கள்தொகையில். தலித்துகள் 17 சதவீதம், பழங்குடியினர் 23 சதவீதமாகும்.   இவ்வாறு ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இவர்கள் 40 சதவீதமாகும். இருப்பினும், இவ்விரு சமூகத்தினரும் நீதிபரிபாலன அமைப்புமுறையால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். சிறைகளில் இருப்பவர்களில் 30 சதவீதத்தினர் தலித்துகள், 28 சதவிதத்தினர் பழங்குடியினராவார்கள். இவ்வாறு இவர்களிரு சமூகத்தினரும் 58 சதவீதம் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

இவ்வாறு இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து அரசாங்கத்தால் இதுவரை அமைக்கப்பட்டுள்ள சிறை சீர்திருத்த ஆணையங்களோ அல்லது குழுக்களோ கண்டுகொள்ளவே இல்லை. இடதுசாரிகளைத் தவிர இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தப் பிரச்சனை குறித்து பேசியதே கிடையாது. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை அவர்களைச் சார்ந்திருப்போரின் நலன்களைத் தூக்கிப்பிடித்து மற்றவர்களை கண்டுகொள்ளாது ஒதுக்கும் அரசியலையே அவை விரும்புகின்றன.  இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால், முதலாவதாக, சிறைக் கைதிகளின் பொருளாதார, கல்வி, சமூகப் பின்னணி குறித்து முழுமையான தரவுகள் தொகுக்கப்படக்கூடிய விதத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு  அல்லது அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விசாரணைக் கைதிகள் அனைவரும் சட்டத்தின் ஷரத்துக்களின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லீம்கள், தலித்துகள், பழங்குடியினர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்.

மேலும், இவர்களின் அரசியல் அல்லது இவர்கள் எதற்காக கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பது குறித்த புலனாய்வும் அவசியம். ஏனெனில், இவர்களில் பல முஸ்லீம்கள், தலித்துகள், பழங்குடியினர், கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வன நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்தவதற்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும்போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது மதவெறி மற்றும் சாதிய அடிப்படையில் பொய்யாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, படுபிற்போக்குத்தனமான சிந்தனையுடையவர்கள் ஆட்சி புரியும் இன்றைய நிலையில், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் மிகவும் விரிவான அளவில் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இப்போது மிகவும் அவசியமாகும்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 13.9.20)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *