வரவேற்கப்பட வேண்டிய சில அம்சங்கள்:
(வரைவு அறிக்கையின் இந்த அம்சங்களிலுள்ள, நாம் உடன்படமுடியாத பல துணை –விரிவான அம்சங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, பரந்த பொருளில் வரவேற்கலாம்.)
1. ஆசிரியர்களுக்கான கல்வியின் மீது பிரதானமான அழுத்தம்: நாட்டிலுள்ள ஆசிரியர் களின் கல்வி இன்று இருக்கும் அவலநிலை பற்றி இந்த ஆவணம் மிகக் கடுமையான மொழியில் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இந்த வரைவுக் கொள்கை, “நாடு முழுவதிலும் இருக்கிற தரமற்ற எல்லா ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூடிவிட வேண்டும்“ என்று அறைகூவல் விடுத்துள்ளது. இவற்றுக்கு மாற்று ஏற்பாடாக, இந்த வரைவுக் கொள்கை, ஆசிரியர் பயிற்சிக் கல்வியைப் பல்கலைக் கழகத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டுவருவது மட்டுமன்றி, கல்வியமைப்பிலேயே ஒரு மையமான இடத்தையும் அதற்கு வழங்குகிறது.

2 . இந்த வரைவுக்கொள்கை, ஒன்று முதல் பதினேழு வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வி பெறும் உரிமையை, முன்பருவ மழலையர் பராமரிப்பிலிருந்து தொடங்கி, மேல்நிலைப் பள்ளிக்கல்வி வரையிலும் வழங்க வேண்டும் என்ற மிகத்தெளிவான, எவ்வித ஐயத்திற்கும் இடமளிக்காமல் பரிந்துரைத்துள்ளது. (இதில் ECCE – என்று இருந்ததில் CARE என்பதை நீக்கி விட்டு ECE என ஆக்கியதன் மூலம் இதை அவர்கள் நீர்த்துப்போகச் செய்திருந்த போதிலும்) முன்பருவ மழலையர் பள்ளி முதல் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிக் கல்வி, அதை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியது தேவை; இதை வரைவுக் கொள்கை வலியுறுத்திக் கோருகிறது.

3. பள்ளிக்கல்வியில் சீர்திருத்தங்களும், உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங்களும் குறித்து நடைமுறை சாத்தியமான எதிர்காலத் திட்ட வரைவைக் கட்டாயம் உருவாக்குவதுடன், இரண்டையும் ஒரே சமகாலக் கட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற அம்சம் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இதை அங்கீகரித்திருப்பதுடன், மாற்றமேதுமின்றி முறையாக நடைமுறைப் படுத்துவது அவசியம் என்றும் வரைவுக்கொள்கை ஒரு நிலை எடுத்துள்ளது . இது கடந்த கால அணுகுமுறையிலிருந்து வழி விலகிய, அத்தியாவசியமான ஓர் அம்சமுங்கூட.
உண்மையில், நாட்டில் இன்று நிலவும் ஆராய்ச்சி மனப்பாங்கின் நிலை பற்றிய விவாதத்தில் கூட, வரைவுக் கொள்கை பின்வருமாறு குறிப்பிட்டுக் கூறியுள்ளது:

“அறிவியல் பூர்வமான வழிமுறை, விமர்சனரீதியான சிந்தனைப்போக்கு – ஆகியவற்றின் மீது முதன்மை அழுத்தத் துடன் அதிகபட்ச அளவில் விளையாட்டும், கண்டுபிடிப்புகள் அடிப்படையிலமைந்த பாணி கற்றலும் பள்ளிக்கல்வியில் இடம்பெறுவதை நோக்கிய நிச்சயத்தன்மை மிக்க விலகல்கள் தேவை“; மேலும், “இளநிலைப் பட்டக்கல்விக்கான பாடத்திட்டத்தில் ஆராய்ச்சி, நேரடிப் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளிணைப்பது; தாராளமான நெகிழ்வுத் தன்மையுள்ள கல்வியளிப்பது –ஆகிய அம்சங்களின் மீது அழுத்தம் தருவது“ போன்ற பிற பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறாக, கல்வியின் எல்லா நிலைகளையும் இணைக்கும் ஓர் இழை, வரைவுக் கொள்கையில் ஊடாடுகிறது . இது வரவேற்கத்தக்க அம்சம் .

4. கல்வித்தரங்களை நிர்ணயித்தல், கல்விக்கான நிதியளித்தல் , மதிப்பீட்டு அடிப்படை யில் அங்கீகாரமளித்து தரமுயர்த்துதல் , ஒழுங்குமுறைகளுக்குட்படுத்துதல், கல்வி வழங்குதல் – இவை எல்லாவற்றுக்கும் தெளிவான, நிறுவனப்பூர்வமான பிரித்தல் நடவடிக்கைகளுக்கு வரைவுக் கொள்கை கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் இது மிகவும் அவசியப்படுகிற, குறிப்பாக உயர்கல்வியில், ஒரு தேவை. ஆனால், பள்ளிக்கல்வியிலுங்கூட, கல்வியளிப்ப வர்கள், ஆய்வாளர்கள், சான்றளிப்பவர்கள் – என எல்லாமாக மாநில அரசுகள்தாம் இருக்கின்றன. தனித்தனி நிறுவனங்கள் என்ற கொள்கை வரவேற்கப்பட வேண்டியது.

5 .இந்த வரைவுக் கொள்கை நெடுக கலைகள், இலக்கியம், வரலாறு போன்ற மானுடவாழ்வு சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு மிகுந்த அழுத்தம் தரப்பட்டுள்ளதை வரவேற்கலாம். இந்தப் பகுதியை, இந்தியாவின் ‘ மகோன்னதமான கடந்தகாலம்  ‘என்ற பெருமிதத் திளைப்பு மிக்க பெருமையடிப்புக்கு வால்பிடிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் நாம் தெளிவாக உணர முடிகிறது. இந்தத் திசைதிருப்பல் நோக்கம் ஒருபுறம் இருப்பினும், மேற்கண்ட மனிதகுலம் சார்ந்த படிப்புகளையும் முறையியல் ரீதியாக ஒன்றிணைத்து, பிரிவு கள் கடந்து எல்லா நிலைகளிலும் கல்வியில் உள்ளிணைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததே.

6. இந்த வரைவுக்கொள்கை, வயதுவந்தோர் கல்வி குறித்துக் கணிசமான அளவுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டில், நாட்டின் வரைபடத்திலிருந்தே அடியோடு காணாமற்போய் விட்ட அம்சம் இது. பெருந்திரள் மக்கள் இயக்கங்கள், மற்றும் தன்னார்வ உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி எல்லாருக்குமான எழுத்தறிவையும், தொடர் கல்வியையும் எட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் பற்றிப் பேசுகிறது இது.

7. பல தலைமுறைக் காலங்களாக மக்கள் அறிவியல் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு, சாதிக்கப்பட்டுள்ள பல புத்தாக்கங்கள், பன்முகப்பட்ட முயற்சிகள் – நடைமுறைகளின் மதிப்பார்ந்த பங்களிப்புகளையும், கேரளா போன்ற மாநிலங்களில் இவை நடைமுறைப்படுத் தப்பட்டு வந்துள்ளதையும் வரைவுக் கொள்கை ஏற்று அங்கீகரித்துள்ளது. அவற்றுள் சில: மொழி, கணித வாரங்கள் , கணிதத் திருவிழா, செயற்பாட்டு
மன்றங்கள், சமூக மட்டத்தில் கோரிக்கைகள் உருவாக்கம், பள்ளிகளுக்கு உதவுவதில் உள்ளூர் முதியோரை ஈடுபடுத்துதல் போன்றவை எடுத்துக்காட்டுகள். இவற்றை “எல்லாப் பகுதிகளுக்கும்“ நடைமுறைப்படுத் துவது, பள்ளிக்கல்வி அமைப்பையே மாற்றியமைக்கும் .

8. வரைவுக் கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ள தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, அமெரிக்க மாதிரியையே பெருமளவுக்குப் பின்பற்றியிருப்பதாகத் தோன்றுகிறது; ஆனால் , அதன் மிகச்சிறந்த சில நடவடிக்கைகளைக் கடன் வாங்கியுள்ளது . இந்த முன்மொழிவில் பிரச்சனைக்குரிய பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து நடைமுறைப்படுத்துதல் என்ற இலட்சியத்தைத் தெளிவான வழிகளின் மூலம் எட்டுவது என்பதில் ஒட்டுமொத்தமான ஒரு தொலைநோக்குப் பார்வையுள் ளது . சாதிக்கப்படக்கூடிய குறிக்கோள்கள் என்பதாகவே இவை தோற்றமளிக்கின்றன.

இவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு ஆலோசனைகள் அடிப்படையில் வலுவானவையாக உள்ளன. இவற்றில் நாம் ஒப்புக்கொள்ள முடியாத அம்சங்கள் இருக்கின்றன என்பதிலும், அவற்றைக் கருத்திற் கொண்டுதான் இந்த முன் மொழிவை அணுகுகிறோம் என்பதிலும் நாம் தெளிவாயிருக்கிறோம். வரைவுக் கொள்கை, அடிப்படையான ஆலோசனைகள் பலவற்றினை ஒட்டுமொத்தமாக விவரித்தும், வரிசைப் படுத்தியும் தந்துள்ளது . அவற்றின் புறத்தோற்ற அளவில் வரவேற்கப்படக் கூடியவையாகவே இருக்கின்றன.

எனினும், வரைவுக் கொள்கையின் எஞ்சிய பகுதிகளின் உள்ளடக்கம், தொனி இவற்றையும் சேர்த்து ஒரு முழுமை என்ற வகையில் பார்க்கும்போது, அவற்றைச் சாதிக்க முடியும் என்பதில் மிகச்சொற்பமான அளவுக்கே எதார்த்தத்தில் எதிர்பார்ப்பு உள்ளது. இவை வெறுமனே மனப்பூர்வமான அக்கறை , தீவிர முனைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதோடு நின்று போகின்றன . எடுத்துக்காட்டாக , மனப்பாடக் கல்விமுறையிலிருந்து விலகியாக வேண்டும் என்பதையும், தேர்வுகள் வெறுமனே தகவல்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்படக் கூடாது;

மாறாக, கருதுகோள்களையும், உயர்நிலை ஒழுங்கமைந்த சிந்தனை களையும் சோதிப்பவையாக தேர்வுகள் இருக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் யார் இருப்பார்கள்? ஆனால், இவையெல்லாம் இவ்வளவு காலமாக ஏன் நடக்காமற் போயின என்ற கேள்வி எழும் போது , இதை நிர்வாகரீதியான தோல்வியாக மட்டுமே வரைவுக் கொள்கை பார்க்கிறது; தீர்வுகளாக, வெறுமனே மேலாண்மை சார்ந்த முன் மொழிவுகளையே வழங்குகிறது .

வரைவுக் கொள்கையின் மையப்படுத்தப்பட்ட தோல்விகள் குறித்து நான் மேற்கொண்டு பரிசீலிப்பதற்கு முன்பாக, நாம் மேற்கொண்டு முன்னோக்கிப் போயாக வேண்டிய தேவை இருக்கிறது என்பதை வலியுறுத்திக்கூற விழைகிறேன். நாட்டில் தற்போதுள்ள கல்வியமைப்பு முறை, குறிப்பாக, உயர்கல்வி – ஒரு முழுமையான பரிசீலனைக்குப்பின், ஒட்டுமொத்தப் பழுது பார்த்தல் நடவடிக்கையைக் கோரி நிற்கிறது;

அதைச்செய்வதற்கு வரைவுக் கொள்கை முயன்றிருக்கிறது. அதனுடைய அடிப்படைக் கருத்துகளோடு நாம் முரண்பட்டு மோதுகிற அதே சமயம், இருக்கிற நிலைமையை அப்படியே பராமரித்துக் கொண்டு போக வேண்டு மென்று கோருகிறவர்களாக நாம் பார்க்கப்பட்டு விடக்கூடாது. இந்த அம்சத்தில், வரைவுக் கொள்கை பிரதானமான பழுதுபார்த்தல் நடவடிக்கைக்கு முயற்சி செய்திருப்பதை நாம் பாராட்டியாக வேண்டும்; அதே சமயத்தில் , சமூக நீதி இலட்சியத்தை நோக்கி மேற்கண்ட நடவடிக்கையைத் திசை திருப்புவதற்காக நாம் வாதிடுவோம்.

1.கல்வியமைப்புமுறையின்ஒவ்வொரு மட்டத்திலும் நிலவிவரும் இடைவெளிகளைப்பற்றி அறிந்துகொண்டு, அவற்றுக்குத்தீர்வுகாண்பதற்கானஅதன்முயற்சிகளில், வரைவுக்கொள்கைநெடுகநேர்ந்திருக்கும் ஒற்றைத்தோல்விஇது: கல்வியின்ஒவ்வொருபகுதியிலும்அணுகல்வழி, தரம், ஆளுகை. இவற்றுள், ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்திருக்கும் இலக்குகளை இவ்வளவு நீண்ட காலமாகியும் ஏன் நம்மால் எட்டமுடியாது போனதென்பதற்கு, எந்த ஒரு கோர்வையான , ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கம் ஒருபோதும் அளிக்கப்பட்டதே கிடையாது. (“சமூக நீதி“ என்ற சொல்லாடல், வரைவுக் கொள்கையில் இடம்பெறாமற் போயிருப்பது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.)

எடுத்துக்காட்டிற்காக, இன்றைய பள்ளிக்கல்வியில் , “கற்றலின் சிக்கல்“ பற்றிய விவாதத்தைப் பரிசீலிப்போம். வரைவுக் கொள்கையால் வழங்கப்படும் தீர்வுகளிலிருந்து, இதற்கான காரணங்களாக அது சுட்டிக்காட்டும் அம்சங்களாகத் தோன்றுபவை இவை: அ) தவறான மேலாண்மை, ஆ .) எழுத்தறிவும், எண்ணறிவும் அடிப்படையான அம்சங்கள் என்பதைக் கல்வியமைப்பு முறையில் இருப்போர் உணராமலிருப்பது, இ. ) வெற்றிகரமாகச் செயல்பட முடியாத சிறிய பள்ளிகள் .

“கற்றலில் சிக்கல்“ என்பது, பெருமளவுக்குச் சமூக ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுகள் நடுவே நிலவி வருவதும், சமூக அமைப்பில் சாதியடிப்படையிலான அசமத்துவம் ஆழமாக வேரோடி யிருக்கும் தன்மையும் கொண்ட கூர்மையான எதார்த்த நிலைமையைக் கணக்கில் கொண்டு பரிசீலித்தாக வேண்டும். இந்தப்பிரச்சனை, பள்ளி வளாகங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், தன்னார்வலர்களாக முன்வரும் ஆசிரிய உதவியாளர்கள்–போன்ற தீர்வுகளால் எதிர்கொள் ளப் படக்கூடியதா? இங்கு காணாமற் போயிருக்கும் சமூக அரசியல் உறுதிப்பாடு எங்கிருந்து வரப் போகிறது .

ஒரு முழுமை என்றவகையில், “எல்லாருக்குமான தரமான கல்வி “ என்ற இலட்சியத்திற்குக் கடப்பாடுடைய மிக ஆழமான உயரிய நோக்கம் கொண்ட நிர்வாகிகளால் தயாரிக் கப்பட்டுள்ள இந்த வரைவுக் கொள்கை, மிக நன்றாக எழுதப்பட்டுள்ள ஓர் ஆவணமாக அமைந்துள்ளது. எல்லா அரசியல் பிரச்சனைகளையும் இவர்கள் புறமொதுக்கிப் புறக்கணித்து விட்டிருக்கிறார்கள் . அசமத்துவ நிலைமையை மேலும் தீவிரமாக்கும், விரிவுபடுத்தும் செயலில் சாதி, வர்க்கம் , பாலினம் ஆகியவற்றின் மையமான வகிபாகத்தை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுத்திருப்பதுடன்,

சமூக நடவடிக்கையை வெறும், “செயற்திறன் மிக்க நிர்வாகம்“ என்பதாகக் குறுக்கியுள்ளனர்.
உண்மையில், இந்தியக் கல்வியிலிருந்து திட்டமிட்டு முறைப்படுத்தித் தலித்துகளைக் கழித்துக்கட்டி வெளியேற்றுவதற்கான சூழல் பற்றிப் பார்ப்போமானால்,  “பிற்படுத்தப்பட்ட ஏனைய வகுப்புகள் மற்றும் பட்டியலின சாதிகளின் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி“ பற்றிய அரைப்பக்கக் குறிப்பை மட்டுமே (பக்கம்: 148, பிரிவு: 6.3) காண முடிகிறது. இந்த 484 பக்க ஆவணத்தில், இந்தியாவின் கடந்த காலம், கல்வியில் அதன் பாரம்பரியத் தைப் பற்றி விளக்குவதற்குக் கணிசமான பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

2.வரைவுக்கொள்கையின்இரண்டாவதுஆழமானதோல்வி– பொதுக்கல்வியையும் , தனியார் கல்வியையும் ‘ஒரே தட்டில்‘ இணையாகவே பாவிக்க வேண்டுமென்பதற்காக தன் ஒவ்வோர் எட்டுவைப்பிலும் இது காட்டும் அவசரம். இது உயர்கல்வியில் இன்னும் கூர்மை யாக வெளிப்பட்டு நிற்கிறது. எந்த வரலாற்று ஆவணத்தின் அடிப்படையில் இது வேர்கொண் டிருக்கிறது என்று இவ்வாறு கூற முற்படுகிறார்கள்? இதை நியாயப்படுத்துவதற்கு, வரைவுக் கொள்கையறிக்கை எந்தவிதமான கருதுகோள்களைக் கொண்டு ஊகங்களை முன்வைத்திருக்கிறது? எதுவுமில்லை! உண்மையில், ‘கல்வி லாபத்துக்கானதல்ல‘ என்று முழுமனதுடன் தெள்ளத் தெளிவாக வலியுறுத்தும் ஓர் ஆவணம், நாட்டைத் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும், எவ்விதக் கடிவாளமுமற்று வானளாவிப் பரவிவரும் கல்வி வணிகமயமாக்கல் குறித்து மிகவும் சொற்ப அளவுக்கே கவனம் செலுத்தியுள்ளது .

இந்த ஆழமான சமூக நோயைத் தீர்ப்பதற்கு, “மெல்லிய, ஆனால், இறுக்கமிக்க“ ஒழுங்காற்று முறையின் மந்திரக்கோல் அசைக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவுக் கொள்கையோ எவ்வித உண்மைத் தன்மையுமற்ற தொனியில், “தனியார் அறக்கொடை “ நிறுவனங்களைப் பற்றிய வெற்றுவார்த்தைகளை இறைத்திருக்கிறது . நம்பத்தகுந்த புள்ளி விவரங்களைத் திரும்பத் திரும்பக் கோருகிற இந்த ஆவணம், நாட்டில் தனியார் கல்வித்துறையிலுள்ள வணிகத்தையும், அறக்கொடையையும் பற்றிய புள்ளிவிவரங்களைக் கோரிப்பெறவோ, பரிசீலிக்கவோ எந்த ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப்போட முயலவில்லை.

3. மேலும்பொது / தனியார்பிரிவினை, அரசாங்கஉதவிபெறும்தனியார் கல்வி நிறுவனங் களுடைய பிரதான பங்கு வகிப்பு பற்றிய புரிதலையோ, தெளிவையோ வெளிக்காட்ட வில்லை. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் , கல்வி வழங்குகிறவர்களாகவும் – முன்னணி நிறுவனங்களாகவும் இத்தகைய கல்வி நிலையங்கள் வரலாற்று ரீதியான பாத்திரத்தை வகித்து வந்துள்ளன; மேலும் சமுதாய உடைமையுரிமை என்பதும் அரிதான விஷயமும் அன்று. கல்விசார்ந்த நிலவெளியின் சிக்கல் நிறைந்த தன்மை, வரைவுக் கொள்கையினால் கவனத்திலேயே கொள்ளப்படவில்லை .

4 . இந்தப்புதிய கொள்கையில், மிக உயரிய அதிகாரம் படைத்த “ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக்” (தேசியக் கல்வி ஆணையம்) என்ற ஓர் அமைப்பு பிரதமரின் தலைமையில் உருவாக்கப்படப் போகிறது . இதனால் மிகத் தீவிரமான மையப்படுத்தல் நிகழப் போகிறது . நாடுமுழுவதற்குமான பாடப்புத்தகங்களைக் கூட மைய அமைப்பான என்.சி.இ.ஆர்.டி . தான் உருவாக்குமாம்! மாநிலங்கள் அவற்றைச்
“சுவீகரித்துக்“ கொண்டு “உள்ளூர்” வேறுபாடுகளை (வேண்டுமானால்) சேர்த்துக்கொள்ளலாம்.

5. கல்வி என்பது, இனிப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டுபோகப்பட்டு விடும் நிலையில், வரைவுக் கொள்கையில் மாநிலத் தன்னாட்சி அதிகாரம் என்பது துளியும் கவனத்திற் கொள்ளப்படவேயில்லை. இதன் உள்ளார்ந்த பொருளாகத் தெரியும் அனுமானம் என்னவெனில், “எல்லா நல்ல அம்சங்களும் மத்தியிலிருந்துதான் பாய்ந்து வருகின்றன ; மாநிலங்களெல்லாம் அதிகபட்சம் தடைக் கற்களாகத் தானிருக்கின்றன. “ என்பதுதான்.

கல்வியின் எல்லா நிலைகளிலும், ஆளுகை பற்றிய எல்லா விவாதங்களிலும் – நல்லவையாக இருப்பவை அனைத்தும் டெல்லியிலிருந்துதான் பிரவாகமாகப் பாய்ந்து வருகின்றன என்றும், மாநிலங்கள் அனைத்தும் வெறும் தொண்டூழியம் புரியும் சேவகர்களாக மட்டுமே பங்காற்றும் என்றும்தான் ஒரு சித்திரம் தீட்டப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. மாநிலங்களிலிருந்து மைய அரசு கற்றுக் கொள்வதற்கும்சாத்தியங்கள் இருக்கின்றன என்பதையோ, அல்லது மாநிலங்களே கூட தமது சொந்த விருப்பத்தின் பேரில் ஒத்துழைக்க முன்வரும் சாத்தியங்களும் உள்ளன என்பதையோ இந்த வரைவு அறிக்கை துளியும் கருத்திற் கொள்ளவில்லை. இந்த அணுகுமுறை, அதுவும், அளவற்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில்!

6. STEM மற்றும் மானுட வாழ்க்கை சார்ந்த பொருண்மைகள், கலைகள் குறித்து வரைவுக் கொள்கை மிக நீளமாகப் பேசியிருக்கிறது; இவற்றின் நீட்சியடைந்த, விரிந்த ஒன்றிணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது; பன்முகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களுக்காக மிக வலிமையான தொனியில் வாதிட்டுள்ளது; ஆனால், எல்லாவற்றிலும் பிரம்மாண்டமாய் இருப்பவை சமூக அறிவியல்கள்.

“விமர்சனப்பூர்வமான சிந்தனை “ பற்றி தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டிருப்பது கூட ஓர் அரூபப் பண்புடையதாகவே இருக்கிறது. சமூகம், ஜனநாயகம், அதிகாரம் – இவை பற்றிய விமரிசனப்பூர்வமான புரிதல், வரைவுக் கொள்கையில் ஓரிடத்தில் கூடச் சித்தரிக்கப்படவில்லை. கோத்தாரி குழு முன்வைத்திருந்த, “கற்றுக் கொண்டிருக்கும் சமுதாயம் “ சமூக வளர்ச்சி மேம்பாடு குறித்த விமரிசனத்தின் மூல வளமாகப் பல்கலைக்கழகம்
“போன்ற தொலைநோக்குப் பார்வை மிக்க அம்சங்கள், இந்த வரைவுக் கொள்கையில் முற்றிலுமாகக் காணப்படவில்லை.

7 . வரைவுக் கொள்கையில் மிகவும் வெட்டவெளிச்சமாகக் காணப்படும் சீரற்ற, முரண்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நான்காண்டு கால, எட்டு செமஸ்டர் இடைநிலைப் பள்ளி என்பது தேர்வுகளில் ஒரு தீவுப்பகுதியாயிருக்கும். இந்த நிலையை அடைவதற்கு முன்பு, ஆசிரியரும், பள்ளியும் மதிப்பீடு செய்வதற்கான அதிகாரமுடையவர்களாக உள்ளனர். பிறகு, பட்டம் வழங்கும் நிறுவனங்களாகிவிட வேண்டுமென்பதற்காகக் கல்லூரிகள் பெருமுயற்சி மேற்கொள்கின்றன. ஆனால், இந்த நான்கு வருடங்களின்போது, நாம் பெறுவதெல்லாம் வாரியத் தேர்வுகள் மட்டுமே.

அதன்பிறகு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளைப் பெறுகிறோம். எனில், பள்ளிகளின் சுயாளுகைத் தகுதி, திறன் கட்டமைக்கும் நடவடிக்கைகள் பற்றி இதுவரையிலும் கூறப்பட்டு வந்தவை எல்லாமும் என்னவாயின? ஒவ்வொரு செமஸ்டருக்கும் மூன்று வாரியத் தேர்வுகளை எழுதுவதற்கான விருப்பத் தேர்வுரிமை மாணவருக்கு இருக்கிறது என்பதென்னவோ உண்மைதான். இவை தவிர, வேறு தேர்வுகளே இருக்காதா அல்லது எஞ்சியவை பள்ளித் தேர்வுகளாக இருக்குமா? பள்ளிகளைப் பொறுத்தவரை, அவை ஏற்பாடுகள் தொடர்பான கொடுங்கனவுதான்.

(இவை, வரைவில் சித்தரிக்கப் பட்டுள்ளவாறு பார்த்தால் மிகப்பெரிய பள்ளிகளாயிருக்கும்.) மேற்கண்ட விருப்புரிமைத் தேர்வு வழிமுறையில் மாணவருடைய தேர்வு எவ்வளவாக இருக்கும்? பள்ளியினுடையது எவ்வளவு இருக்கும்? இதை யார் மேற்பார்வை செய்வது? நியாயமான தேர்வை உறுதி செய்வது யார்? இவ்வாறு மேற்பார்வையிட்டு முடிவு செய்வதற்கான அளவைகள் / நிபந்தனைகள் எவை?

சிறிய பள்ளிகள் செயற்திறனற்ற, வெற்றிகரமாக செயல்பட முடியாதவை என்று வரைவு கூறுகிறது. மேலும் பள்ளி வளாகங்களை அடிப்படை அலகாக முன்மொழிகிறது. நகர்ப் புறங்களிலும், புற / அரை – நகரப்பகுதிகளிலும் நிலவும் பின்னணிச்சூழல்களில், உண்மை யில் இது நியாயமானதே; பட்டியலிடப்பட்டுள்ள ஆதாயங்களில் பலவற்றை இது வழங்கவும் கூடும். ஆனால், வரைவுக் கொள்கை, தான் எதை விமர்சனம் செய்திருக்கிறதோ அதே குறைபாட்டினால்,

“எல்லாக் கால்களுக்கும் ஒற்றை அளவுச்செருப்பே பொருந்தும்“ என்று சாதிக்க முற்படுகிற ஒரு நோயினால் (நாடு முழுவதிலும் உள்ள பள்ளி வளாகங்களை அடிப்படை அலகாக வழங்குகிற போது ) துன்புறுகிறது . மிகவும் வெவ்வேறுபட்டு அமைந்திருக்கிற புவியியல் ரீதியான பிரதேசங்களை நாம் பெற்றிருக்கிறோம்; அங்கு அணுகல் வசதி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனை.

அருகில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிகளை மூடிவிட்டு, அதிகத் தொலைவிலுள்ள பள்ளிவளாகத்தை வழங்க முன்வருவது, பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கவே செய்யும். சிறப்புப் போக்குவரத்து வசதிகள், சைக்கிள்களை வழங்கு வது பற்றிய பேச்சுகள் (பருவமழை மாதங்களில்? வடமாநிலப்பகுதிகளின் குளிர்காலங்களில்?) வெற்று ஆரவார வாக்குறுதிகளாகவே தோன்றுகின்றன. விவசாய வேலைகளில் அன்றாடக் கூலிக்கு உழைக்கும் தலித் பெற்றோரின் குழந்தை, தனக்காக இத்தகைய வசதிகள் செய்து தரப்பட வேண்டுமென்று கோருவதற்கு மிகச்சொற்ப அளவுக்கே வாய்ப்பைப் பெற முடியும்.

8. “நடப்பு நிகழ்வுகள்“ கல்வியைப் பற்றி வரைவுக் கொள்கை பேசுகிற அதே வேளையில், நம்மை எதிர்கொண்டு அச்சுறுத்தி வருகிற மிகப்பெரிய பிரச்சனைகளாகிய பின்வரும் ஆபத்துகளைப் பற்றி மிக சொற்பமான கரிசனம்தான் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது . சுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்கள் குறித்த தன்னுணர்வு, காலநிலை மாற்றத்தோடு போராடி வெல்லுவது, தண்ணீர் பெறுவதற்கான அணுகல் வசதி, இன்ன பிற பிரச்சனைகள்; இருபத்தோராம் நூற்றாண்டில், கல்வியின்மீது இப்பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம். இத்தகைய சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு நமது குழந்தைகளைத் தயார் செய்யும் பொருட்டு, அவர்களுடைய கற்றலை மறு வடிவமைப்புச் செய்ய வேண்டிய தேவையும் கடமையும் நமக்கு இருக்கிறது.

9. “தர அடிப்படையிலான“ ஓர்அமைப்புமுறை பற்றி திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படுகிறது: இட ஒதுக்கீட்டு முறைக்கு இந்தத் ‘தரம்‘ பற்றிய அதீத அழுத்தம் எந்தவகையில் முக்கியத் துவம் உடையதாயிருக்கிறது என்பது தெளிவற்றதாய் உள்ளது. உண்மையில், இந்தச் சொல்லாடல் எந்தப் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதுகூடப் புதிராகவே உள்ளது.

10. வாரியத் தேர்வுகளின் அமைப்புமுறையைச் சீர்திருத்தியாக வேண்டிய மிக அவசர அவசியத் தேவை உள்ளது. இவை “உயர்நிலைப் போட்டிச்சூழல் தேர்வுகள் “போன்ற நிலையை உருவாக்குவதால் அளவுக்கு மீறிய அழுத்தம் உண்டாகிறது. எட்டு செமஸ்டர்களுக்கு, ஒவ்வொரு செமஸ்டருக்கும் தலா மூன்று வாரியத் தேர்வுகளாக மாற்றுவதால், போட்டிகளின் அழுத்தம் எப்படிக் குறையும் அல்லது சிறப்புத் தனிப்பயிற்சிகளை எப்படி ஒழிக்கும்? குழந்தைகள் நான்கு ஆண்டுகள் வரை வாரியத் தேர்வுகளை எழுதப்போகிறார்கள்;

அவர்களின் திரளும் தேர்ச்சித் திறன்களே இன்னமும் அவர்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறவையாக இருக்கும். இந்த “உயர்நிலைப் போட்டிச்சூழல்“ பிரதானமாக மிக வரையறைக்குட்பட்ட அளவிலேயே நல்ல, தரமான இளநிலைப் பட்டபடிப்புத் திட்டங்கள் இருக்கிற காரணத்தினாலேயே அவசியமாகப்படுகிறது. இத்திட்டங்களுக்குக் கடுமையான, பெரிய அளவிலான போட்டி நிலவுகிறது. மேலதிகமாக , வரைவு அறிக்கை, வாரியத்தேர்வுகளில் “உயர்நிலை வரிசைத் திறன்கள் “ மட்டுமே சோதிக்கப்படப் போகின்றன என்று வெகு எளிதாகக் கூறுகிறது. இந்த நாள் வரையிலும், இதைச் செய்யக்கூடாது என்று வாரியத்தைத் தடுத்துக் கொண்டிருந்தது எது? இப்போது அதில் என்ன மாறிவிட்டிருக்கிறது?

11. வரைவுக் கொள்கை, நடைமுறைப்படுத்துதல் சார்ந்த தன்னுணர்வுடையதாகவே அதிகபட்சம் இருக்கிறது. ஆயினும், “திறந்த – புத்தகத் தேர்வுகள்“ – போன்ற சில சிறிய சொல்லாடல்கள் ஆங்காங்கே வீசி எறியப்பட்டுக் கிடப்பதை நாம் பார்க்கிறோம்; அதிலும், மனப்பூர்வமான அக்கறையின்றி, வெற்று ஆரவார முழக்கங்களாகவே இவை அனேகமாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

நாடு முழுவதிலும் மேற்கண்ட “ திறந்த புத்தகத் தேர்வுகள்“ மூலம் குறைந்த பட்சம் ஒரு சதவீத அளவுக்கேனும் மதிப்பீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்த நம்மால் முடிந்தால், இளநிலைப் பட்டப்படிப்பு வகுப்புகளுக்கு மட்டுமே இது என்று நாம் இவற்றைக் கட்டுப்படுத்தி நடத்த முடிந்தால்கூட, நமது கல்வியமைப்பு முறைக்கு அது மாபெரும் அடிவைப்பாக, அணுகுமுறை மாற்றங்களிலும் – திறன்களைக் கட்டமைக்கும் தேவைகளிலும் அது அமைவதை நாம் காணமுடியும். வரைவுக் கொள்கை ஆவணத்தின் ஆசிரியர்கள், இந்தப்பணியின் பிரம்மாண்டமான பரிமாண அளவைப் பற்றி அறிந்து, புரிந்து கொண்டவர் கள்தாமா என்று மேற்கண்ட பகுதியின் எழுத்து ஒருவரை ஆச்சரியப்படச் செய்யும்.

எல்லா அம்சங்களின் ஊடாகவும், சிறந்த, சிறு எண்ணிக்கையிலான மேட்டுக்குடி நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட முற்போக்கான நடவடிக்கைகள், ஒட்டுமொத்த மிகப்பெரும் கல்வியமைப்புக்கும் பொருந்தும் என்ற செய்தி விடுக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இவையெல்லாம் ஒரே சீராகப் பெருகிப் பயன்தரும் என்று மவுனமாக ஊகித்துக் கொண்டிருப் பார்கள். நாடு முழுவதிலும் உள்ள நம்முடைய மாணவர்கள் இத்தகைய கல்விசார் அனுபவங் களுக்குத் தகுதி படைத்தவர்களாக வேண்டும். இது மிகநல்ல நோக்கம் கொண்ட புனைவுத் தோற்றம்தான்; ஆனால், முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டு விட்ட, ஊழல் மலிந்த, சாதிய ஒடுக்குமுறைகளால் வழி நடத்தப்படும் கள எதார்த்தக் குப்பைகளை வேகமான, எளிதான ஒரு துடைப்பத்தைக் கொண்டு நாம் பெருக்கி அள்ளித் தூய்மைப்படுத்திவிட முடியுமா?

உண்மையில், பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒன்றையடுத்து இன்னொன்றாகப் படித்துக் கொண்டே வருகையில், — வகுப்பறைச் செயல்முறை, மதிப்பீடு, ஆசிரியர் தன்னாட்சி, பட்டம் வழங்கும் நிறுவனங்களாக மாறுவதற்குக் கல்லூரிகள் எடுக்கும் பெருமுயற்சி , கல்விப்புல அறிஞர்களுக்கும், தொழிற்துறை வல்லுனர்களுக்குமிடையே வலிமை மிக்க உறவு — நாம் மிகப்பெரும் ஆச்சரிய உணர்வுக்கு ஆளாகி விடுகிறோம். இந்த வரைவுக் கொள்கை செவ்வாய்க் கிரகத்தில் அமைந்திருக்கக்கூடிய ஒரு நாட்டுக்காக என்றே வடிவமைக்கப்பட்ட ஒன்றா?

இந்த அதிகபட்ச மக்கள்தொகையைக் கொண்ட நம் நாட்டைப் பற்றியா நாம் இதில் பேசியிருக்கிறோம்? சமூக, பொருளாதாரப் பிளவுகளால் ஆழமாக முடக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, அளவற்ற வறுமையோடும் சாதிய வன்முறைகளுடனும் போராடிக் கொண்டிருக்கிற, வேலையில்லாமையும் – குறை வேலைவாய்ப்புகளும் ஏராளமான அளவுக்குப் பரவியிருக்கிற, வேலைகள் கடினமானவையாக மாறிவிட்ட, ஒரு கவுரவமான வாழ்க்கையை நடத்திச் செல்லுவதற்கே இயலாத நிலையில் பலர் அந்தச் சவாலை எதிர்கொள்ளத் திறனற்றிருக்கும் ஒரு நாட்டிற்காகவா இந்த வரைவுக் கொள்கை மூலம் நாம் பேசுகிறோம்? கல்விக்கொள்கைக்கு , இத்தகைய ஓர் அவலநிலை ஏன் எப்படி உருவானது என்பதற்குரிய காரணங்கள் பொருத்தமற்றவையாகத் தோன்றுகின்றனவா?

நாம் நம்பிக்கையுடையவர்களாக இருந்தாக வேண்டிய தேவையுள்ளது. நம்முடைய தற்போதைய நிலையினால் நெருக்கடிக்கு ஆளாகிவிடாத ஒரு புதிய தொலைநோக்குப் பார்வையை வழங்க வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டியுள்ளது. ஆனால், கற்பனை செய்யப்பட்ட ஒரு கடந்த காலத்தில் வேர் பிடித்து நிற்கும் தன்மை, அரசியல் எதார்த்தத்தைப் புறக்கணிக்கும் அணுகுமுறை, புதிய – தாராளமயப் பொருளாதாரத்தின் அறிவிப்புகளை விமர்சனமேதுமின்றி ஏற்றுக் கொண்டிருப்பது – இவையெல்லாம் கல்வி பற்றிய ஆழமான சீரழிவுத் தன்மை வாய்ந்த ஒரு கொள்கையில் போய் முடிந்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *