சத்தியமாகத்தான் சொல்கிறேன்.

நல்ல பல அம்சங்கள் காணப்படும் என்ற நம்பிக்கையுடன், திறந்த மனதுடன்தான் புதியக் கல்விக் கொள்கையின் முன் வரைவை படித்தேன்.

ஆனால் அப்படி எதுவும் காணப்பட இயலாமல் போனதற்குக் காரணம் அந்த முன் வரைவு தானே தவிர.

நான் அல்ல என்ற சத்தியப் பிரமாணத்துடன் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

பன்முக அறிவுத்திறன், புதுமை, ஆக்க பூர்வமான சிந்தனை, சமூக உணர்வு, அற உணர்வு, சேவை மனப்பான்மை மற்றும் ஒரு கட்டு ஞான ஒளி உட்பட உலகின் அனைத்து நல்ல பண்புகளையும், திறங்களையும் கொண்டு அதன் மூலம் 21ஆம் நூற்றாண்டின் அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் இளைஞர்களை உருவாக்க விரும்புவதாக கட்டியம் கூறித் தொடங்குகிறது புதிய கல்விக் கொள்கைக்கான முன்வரைவு.

ஒவ்வொருமுறையும் புதிய கல்விக் கொள்கையினை வெளியிடும் போதும் இப்படிப்பட்ட முழக்கங்களுடன்தான் அவை தொடங்கியுள்ளன. ஆனால் அவையனைத்தையும் நிறைவேற்றவில்லை என்பதை மிகவும் வெளிப்படையாக அடுத்த முறை அறிவித்துவிட்டு, புதிய கல்விக் கொள்கை இந்தியாவையே புரட்டப்போகிறது என்று எக்காளமிட்டு அறிவிப்பதே அரசின் வழக்கமாக உள்ளது.

வெறும் வேலைக்கான கல்வியாக உயர் கல்வியை வைத்திராமல், விமர்சன அறிவு, பிரச்சினைகளைத் தீர்க்கும் அறிவு, என பன்முக அறிவுத்திறன் கொண்ட இளைஞர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் புதிய கல்விக் கொள்கையின் மூலம் உருவாக்கப்படுவார்கள் என்கிறது இந்த முன் வரைவு. இதைத்தான் கல்வியாளர் பலரும் பரிந்துரைத்து வந்துள்ளனர். ஆனால் இதற்கான செயல் திட்டங்களாக இந்த முன்வரைவு முன் வைப்பதுதான் மிகவும் ஆபத்தானது.

எப்போதுமே முற்போக்காளர்களின் கல்வி குறித்த பார்வைகளைத் தத்துவங்களாக முன்னுரையில் தெறிக்கவிட்டு அவற்றை நடைமுறைப் படுத்துவதற்காக முன்வைக்கும் செயல் திட்டங்களில் முற்றிலும் எதிரான அம்சங்களைக் கொண்டுவருவது முன் வரைவு தயாரிப்பவர்களின் யுக்தியாக உள்ளது.
எல்லாமே புதிது. இனி இந்தியாவையே புரட்டிப் போடவிருக்கும் 40 ஆண்டுகளுக்கான ஒரு கல்வி கொள்கையை வகுத்துள்ளோம் என்பதும் முக்கியமான அறிவிப்பாகக் காணப்படுகிறது.

இதை மேலோட்டமாகப் படிப்பவர்கள் நல்ல கொள்கைதான் என்று ஏமாந்து விடக்கூடிய வகையில் மொழியும், கருத்துக்களும் கையாளப்பட்டுள்ளதே இதன் முக்கிய யுக்தியாகும்.

ஆழமாகப் படித்து சல்லடை போட்டு சலித்து பார்த்தால், செயல் திட்டங்களாக என்ன மிஞ்சுகிறது என்று பார்த்தால் அத்தனையும் விஷம். புதிய கல்விக் கொள்கை 2019 என்பது இனிப்பு தடவப்பட்ட விஷம்.
மிஷன் நாலந்தா மற்றும் தக்சசீலா மிஷன் நாலந்தா மற்றும் தக்சசீலா என்பதையே முக்கியமான முழக்கமாக முன்வைக்கிறது புதிய கல்விக் கொள்கை.

புராதன இந்தியாவில் வழங்கப்பட்ட எல்லா கலைகளையும் இன்று உயர்கல்வி நிறுவனங்கள் மூலமாக தாராள கலைகள் படிப்பு (Liberal Art Education) என்ற பெயரில் மத்திய அரசு வழங்க உள்ளது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பாணபட்டர் என்பவரால் எழுதப்பட்ட காதம்பரி என்னும் காதல் காவியத்தில் விளக்கப்பட்டுள்ள ஆயகலைகள் அறுபத்தி நான்கையும், அதற்குப் பின்னர் லலித விஸ்தார சூத்திரம் என்ற நூலில்விளக்கப்பட்டுள்ள 86 கலை வகைகளையும், மேலும் எல்லாவற்றிற்கும் மேலாக காமசூத்திரத்தின் உரையாக யசோதரர் என்பவரால் எழுதப்பட்டுள்ள ஜெயமங்களா என்னும் 13-ஆம் நூற்றாண்டின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 512 கலைகளையும் நமது மாணவர்களுக்கு கல்வித் திட்டங்கள் மூலம் வழங்குவது என்பதையே முக்கியமான நோக்கமாக அறிவிக்கிறது புதிய கல்விக் கொள்கை 2019.

காமசூத்திரத்தை கல்லூரிகளில் போதிக்கும் அளவிற்கு இவர்கள் முன் மொழிந்திருப்பதை என்னவென்று சொல்வது.

முன்மாதிரி உயர்கல்விக் கூடங்களாக தட்சசீலத்தில் முன்னொரு காலத்தில் நிறுவப்பட்டிருந்த பல்கலைக்கழகமும், நாலந்தாவில் இருந்த புராதனப் பல்கலைக்கழகமும் கொள்ளப்படுகின்றன.
இதைப் படிக்கும் போதே சாணக்கியர் காலத்தில் வாழ்ந்த அறிவு ஜீவிகளுக்கு மறு உயிர் கொடுத்து இந்த அறிக்கையை தயார் செய்ததாகத் தெரிகிறது.

சமகாலத்திய கல்வி ஆய்வு நூல்களோ, உலகின் சிறப்பான கல்வி தத்துவங்களோ, பல்கலைக் கழங்கங்களோ, செயல்பாட்டு திட்டங்களோ எதுவும் இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. தென்னகத்தின் திருக்குறள் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வியல் விழுமியங்கள் கூட எதுவும் புலப்படவில்லை என்பது பண்பாட்டுக்கல்வி குறித்த இவர்களின் போதாமையைக் காட்டுகிற அதேவேளையில் தமிழர் பாரம்பரியத்தை சற்றும் மதிக்காததும் வெளிப்படுகிறது.

புராதனமான, அக்கால கட்டத்தில் சமஸ்கிருத இலக்கிய கர்த்தாக்களால் வடிக்கப்பட்ட, எந்தவித சமகால ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படாத நூல்களில் கூறப்பட்டுள்ள விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வி அமையும் என்று பிரகடனம் செய்ததிலிருந்தே இது எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

எல்லோரும் கார்ப்ரெட் கம்பெனிகளுக்கான திட்டங்களைத்தான் இந்த கல்வி கொள்கை முன் மொழியும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறுத பழசான நூல்களையும், மதிப்பீடுகளையும் ஏன் கல்வித் திட்டத்தில் கொண்டு வர விழைகிறார்கள் என்று பார்த்தால், அது ஆரியப் பண்பாட்டு விழுமியங்களை இந்தியா முழுவதிலும் விதைப்பது என்ற நோக்கத்திற்காகத்தான் என்பது புரிகிறது. ஆனால் இந்த கலைகளெல்லாம் யார் கற்றுக் கொடுப்பார்கள், அவை பற்றி யாருக்கு முழுமையாகத் தெரியும் என்பது பற்றியெல்லாம் பெரிய கவலையை வரைவு தயாரித்தவர்கள் கொண்டதாகத் தெரியவில்லை.

மேலும் அக்காலத்தில் விருப்பமுள்ள நபர் குருகுல வாசத்தின் மூலமும், தன் வாழ்கை அனுபவங்கள் மூலமாகவும் கற்பவைதான் இவை. அவற்றை எப்படி கல்லூரிகளில் கற்பிப்பது என்பது பற்றியெல்லாம் இவர்களுக்குத் தெளிவு உள்ளதாகத் தெரியவில்லை. அவர்களது முக்கிய நோக்கம் வேத கால பண்பாட்டை புத்துயிர்ப்பு செய்யவேண்டும் என்பதே ஆகும்.

இந்தியாவின் மரபை மீட்டெடுத்து அதை உயர் கல்வியின் மூலமாக பிரகாசிக்க வைப்பதே நல்லதொரு இந்தியாவிற்கான செயல்பாடு என புதிய கல்விக் கொள்கை அறிவிக்கின்றது. மிக ஆழமாக சென்று பழமையான கூறுகளைத் தோண்டி எடுத்து அவற்றை பட்டை தீட்டி வரும் தலைமுறைகளுக்கு விதைப்பதன் மூலம் இருபத்தியோராம் நூற்றாண்டின் அனைத்து சவால்களையும் இலகுவாக எதிர் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த இளைய தலைமுறையை நாம் உருவாக்கப் போவதாக அது பிரகடனம் செய்கிறது.

கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் செயல் திட்டங்களை உற்று நோக்கினால் எவ்வளவு ஆபத்தான அறிக்கை இது என்று புரிகிறது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகாலம் பல்வேறு திட்டங்களின் மூலம் தட்டுத் தடுமாறி முன்னேறி வரும் இந்தியாவின் உயர் கல்வி மறுபடியும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னே இழுத்துச் செல்லப்படுவது மிகவும் துயரமானது. இனி எந்தக் கல்விக் கொள்கையும் தேவையில்லை

சுதந்திரம் அடைந்தவுடன் படிப்படியாக அரசு மக்களுக்குத் தரமான கல்வியை, இலவசமாக வழங்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படிப்படியாக கல்வியை அரசு வழங்காது என்பதுதான் தெளிவாகி வருகிறது. இந்த முன்வரைவு ஒட்டு மொத்தமாக இனி அடுத்த கொள்கை எதையும் அரசு வெளியிடவேண்டிய அவசியம் இன்றி முற்றுப்புள்ளி வைக்கின்றது.

இதற்குப் பின் கல்விக் கொள்கை எதையும் அரசு அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போவதற்குக் காரணம் அனைத்து உயர்கல்வியும் தனியார் வசம் ஒப்படைக்கப் படும் என்பதே ஆகும். அரசு உயர்கல்வித்துறையை மொத்தமாக தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் திட்டமே இந்தப் புதிய கல்விக் கொள்கை திட்டமாகும்.

அப்படி அவர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் வகையில் கல்வி செயல்பாட்டிற்கு விதிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் சட்ட பூர்வமாக நீக்குவதே இதன் உள் நோக்கமாகும்.
எப்படி என்று கேட்கீறீர்களா? இதோ கீழ்கண்ட விதிகள் மூலமாகதான்.

அனைத்துக் கல்லூரி நிறுவனங்களுக்கும் தன்னாட்சி வழங்கப்படும். கல்வித் திட்டத்தை வடிவமைப்பதில் தன்னாட்சி, நிதி நிர்வாகத்தில் தன்னாட்சி, மற்றும் பொது நிர்வாகத்தில் தன்னாட்சி என கல்லூரி நிறுவனங்கள் அனைத்து வகை தன்னாட்சியையும் பெற்றவையாக விளங்கும்.
கல்லூரிகளே இனி தங்கள் பெயரிலேயே பட்டம் வழங்கலாம்.

உயர்கல்விக்கான கட்டண விகிதத்தை அந்தந்த உயர்கல்வி நிறுவனங்கள் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப விதித்துக் கொள்ளலாம். அதேசமயம் பெறப்படும் கல்விக்கட்டணத்தில் இருந்து ஒரு தொகையை மட்டும் போனால் போகிறது என்று கல்வி உதவித்தொகையாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

நிதியை எவ்வாறாக செலவு செய்வது என்பது பற்றி கல்லூரி நிர்வாகங்களே முடிவு செய்யும்.. அரசு தலையிடாது.
விரைவில் எல்லா கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும்.
கல்லூரிகள் பல்கலைக் கழக அந்தஸ்து பெறலாம்.

மேற்கண்ட முன் மொழிவுகளுக்கு என்ன பொருள்? ஒட்டு மொத்தமாக சாதாரண மக்கள் படித்து வரும் உயர்கல்வியை விற்பனைக்குரிய பொருளாக்கி அதை தனியார் வசம் ஒப்படைப்பது என்பதே ஆகும்.

எங்கும் தன்னாட்சி,எதிலும் தன்னாட்சி தன்னாட்சி என்பது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமானதா இல்லையா என்பது பற்றிய ஆய்வுகள் என்ன, அவற்றின் விமர்சனங்கள், பரிந்துரைகள் என்ன என்பது பற்றியெல்லாம் விளக்காமல், விவாதிக்காமல், இனி எல்லா கல்லூரிகளும் தன்னாட்சி கல்லூரிகள்தான் என்பது அடாவடித்தனத்தின் உச்சம். இந்தியாவில் தன்னாட்சி கல்லூரிகள் என்பது பல கல்வியாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மொத்தமாக 40,000 கல்லூரிகள் இருப்பதாக முன்வரைவு தெரிவிக்கின்றது. இதில் இன்று வரை தன்னாட்சி தகுதி வழங்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை மொத்தமே 695 தான். மீதி 39305 கல்லூரிகள் தன்னாட்சி என்றால் என்னவென்றே அறியாதவை. அதுவும் தமிழகத்தில்தான் 191 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக இருக்கின்றன.

பிஹார் மாநிலத்தில் ஒரே ஒரு கல்லூரிதான் தன்னாட்சிக் கல்லூரி. பிஹாரின் கல்வித் தரம் பற்றி உலகே அறியும். அதே போன்று உத்திரபிரதேசத்தில் உள்ள தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை 12 தான்.

குஜராத்திலேயே வெறும் 4 கல்லூரிகள்தான் தன்னாட்சிக் கல்லூரிகள். கேரளாவில் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே சமீபத்தில்தான் தன்னாட்சி 19 கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட தன்னாட்சி கூட கல்வி திட்டங்கள் பற்றிய முடிவுகள் எடுப்பதற்கான தன்னாட்சி.

அப்படி ஒரு தன்னாட்சித் தகுதியை ஒரு கல்லூரி நிறுவனம் பெறவேண்டுமானால் அதற்கு ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் உள்ளன.

அவற்றை நிறைவேற்றுவது மிகவும் சிரமமான காரியம். அதுவும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீட்டுக் குழு வருகை புரிந்து பரிசீலிக்கும். இப்போது என்னவென்றால் யு.ஜி.சி யை ஓரம் கட்டிவிட்டு, ஒரேடியாக எல்லா உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தன்னாட்சித்  தகுதி வழங்கப்படுமாம். அதுமட்டுமல்ல, நிதி மற்றும் நிர்வாகத்திற்கும் தன்னாட்சிதான்.

இதற்கு என்ன அர்த்தம்?உயர்கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அரசுதானாம். எனவே அதை கட்டவிழ்த்து விட்டு விட்டால் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை குபு குபு என வளர்த்துவிடுமாம்.

இனி கல்லூரிகள் பட்டமளிக்கும் அதிகாரத்தைப் பெறும் என்னும் அதிரடி முடிவு எப்படிப்பட்ட சீரழிவை உருவாக்கும் என்பதைக் கற்பனைகூடச் செய்யமுடியாது. உத்திரபிரதேசத்திலும், பிஹாரிலும் கல்வி செழிப்பாக வளரும். இந்தியாவில் பணம் உள்ள அனைவரும் உயர்கல்வி பெறுவர்.

ஒருவேளை விற்கப்படும் பட்டத்தின் விலை வேண்டுமானல் கட்டுப்படுத்தப்படலாம்.

ஜியோ போன்ற பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் இந்த விதித் தளர்விற்காகத்தான் காத்துக் கிடக்கின்றன. இந்த முன் வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதிகக் கொண்டாட்டம் இவர்களுக்குத்தான். வேலை வாய்ப்புக்கல்வி என்ற பெயரில் பல பாடத்திட்டங்களை அறிவித்து, பெரும் தொகைகளை கட்டணமாகக் கறந்து கொழிக்க தயாராகி வருகின்றன.

பல சுமார் வகை கல்லூரிகளுக்குப் பாடத்திட்டங்கள்  தயாரித்துக் கொடுக்கும் பணியை இப்போதே பல நிறுவனங்கள் தொடங்கிவிட்டனவாம். இனி என்ன தடி எடுத்தவன் தண்டல் காரன்தான்.

ஜனநாயக வெளிகள் அடைப்பு இவை அனைத்தும் இத்தனை நாட்களாக பாதுகாக்கப்பட்டு வந்த ஒரளவு ஜனநாயகத் தன்மை கொண்ட கல்வித் திட்டத்தை சுக்கு நூறாக உடைப்பதாகும்.
ஆசிரியர்களும் எதுவும் இனி பேச முடியாது. சங்கம் வைத்து உரிமைகளைக் கோரமுடியாது. ஏனெனில் ஆசிரியர்களின் பணி உயர்வு, இனி பணி மூப்பின் அடிப்படையில் அன்றி, நிர்வாகம் அமைக்கும் தர மதீப்பீட்டு குழுவின் நிர்ணயத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

இப்போதே கல்லூரிகளில் பதவிகள் நிர்வாகத்திற்கு ஒத்து ஊதுபவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றது. இப்படி முழு அதிகாரத்தையும் கல்லூரி நிர்வாகங்களிடம் கொடுத்துவிட்டால் உரிமை என்றெல்லாம் பேச முடியாது.

அதே போன்று மாணவர்களுக்கான ஜனநாயக அமைப்புகளுக்கான எந்தக் குறிப்பும் வரைவில் காணப்படவில்லை. ஏற்கனவே கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கும் மாணவர் சமுதாயம் இனி ஈன ஸ்வரத்தில் கூட முனக முடியாது. இப்படி எல்லா ஜனநாயக வெளிகளும் அடைக்கபடும்.

அப்படியே குறைகளை முறையிட வேண்டுமானால் அதற்கென்று அமைக்கப்படும் ஒரு தனி ஒழுங்காணையத்திடம் முறையிடலாமாம். ஒழுங்காணையத்திடம் முறையிட்டு அதில் திருப்தி இல்லை என்றால் மட்டுமே நீதி மன்றத்தை நாட முடியும்.

இலஞ்சத்தை ஒழிக்க ஒரே வழி:
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் அரசின் தலையீடு உள்ளது. எனவே இலஞ்சம் கொடுத்தும், சிபாரிசின் மூலமும் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாகவும். நிர்வாகிகளாகவும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

இதைத் தடுத்து திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டுமெனில், ஒரே தீர்வு, எல்லா கல்லூரி நிர்வாகங்களுக்கும் ஆசிரியர்களைப் பணிக்கு தேர்வு செய்யும் முழு உரிமையையும் வழங்குவதுதான் என வரைவு கூறுகிறது.

இனி என்ன, தனியார் நிர்வாகங்கள் எந்த வித கட்டுபாட்டுக்குள்ளும் வரவேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் பகல் கொள்ளைதான். பணி நியமனங்கள் தமிழகத்திலே ஏற்கனவே பல இலட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது வெளிப்படையாக நடக்கும். அது மட்டுமல்ல தங்களுக்கு அடிமைகளாக இருக்க தகுதி உள்ளவர்களை மட்டும் அவை பணிக்கு எடுத்துக் கொள்ளும்.

கல்லூரி ஆசிரியர்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற குறைந்த பட்ச சட்டப் பாதுகாப்புகளைக் கொண்ட தனியார் கல்லூரி ஒழுக்காற்று சட்டங்கள் புதைக்கப்படும். பணிப் பாதுகாப்பு என்பது ஒழிக்கப்பட்டு, மீண்டும் பழங்கால பண்ணையார் நிர்வாகம் ஏற்படுத்தபடும்.

இரண்டு வகைப் பல்கலைகழங்கள் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களாக மாறலாம் என்பது மட்டுமல்ல, இனி இரண்டு வகை பல்கலைக் கழகங்கள்தான் நாட்டில் இருக்கும். ஒன்று அரசு பல்கலைக் கழகங்கள், மற்றொன்று: தனியார் பல்கலைக் கழகங்கள்.. கல்லூரிகள் பல்கலைக் கழகங்களாக ஆவது என்பதின் பொருள் என்ன? கல்வி வணிகத்தை திறம்பட தங்கு தடையின்றி நடத்தலாம் என்பதற்கான அனுமதியே அது.

யு.ஜி.சி என்ற அரண் உடைப்பு இது வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த பல்கலைகழக மான்யக் குழு இனி அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிதி வழங்கும் நிறுவனமாக மட்டும் செயல் படும்.

பல்கலைக் கழகங்களும், பிற கல்வி நிறுவனங்களும் இது வரை தாங்கள் ஏதேனும் புதிய பாடத் திட்டங்களைக் கொண்டு வரவேண்டுமெனில் பல்கலைகழக மான்யக் குழுவின் அங்கீகாரம் பெற்றவற்றை மட்டும்தான் கொண்டு வர இயலும்.

இது எதற்காக இருக்கிறது என்றால் தனியார் நிறுவனங்களும், சில பல்கலைக் கழகங்களும், தங்கள் விருப்பபடி பட்டப் படிப்புக்களை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களிடம் கொள்ளை அடிப்பதைத் தடுக்கத்தான். பல்கலைக் கழக மான்யக்குழுவின் கெடுபிடி இருக்கும் போதே பல உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி வணிக நோக்கத்துடன் பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்.

ஆனால் பல்கலைக் கழக மான்யக்குழுவின் கட்டுப்பாடுகள் உயர்கல்விக்கே உலை வைத்துக் கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாக தெரிவிக்கின்றது இந்த வரைவு.

பல்கலைக் கழக மான்யக்குழுவில் ஏராளமான குறைகள் காணப்பட்டாலும் 65 ஆண்டுகளுக்கு மேலாக கல்வியாளர்களின் பல வித அனுபவபூர்வமான ஆலோசனைகளால் அது செழுமைப்படுத்தப் பட்டு வந்தது. அதை ஒரேடியாக இழுத்து மூட வேண்டும் என்பதுதான் இந்த பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருந்தது.

பிறகு நாட்டில் கல்வியாளர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதின் காரணமாக, பல்கலை கழக மான்யக்குழுவின் அதிகாரங்களை குறைத்து அதைஒரு மூலையில் இயங்க வைக்க முடிவு செய்துள்ளது.

இப்படி செய்வதால் என்ன இலாபம் இவர்களுக்கு என்று பார்த்தால், தாங்கள் தகர்க்க விரும்பும் நாட்டின் ஒட்டு மொத்த உயர்கல்வி அமைப்புக்கு முதல் தடையாக இவர்களுக்கு இருப்பது பல்கலைக்கழக மான்யக்குழுதான்.

ஏனெனில் யு.ஜி.சியின் விதிகள் மற்றும் செயல்பாடுகள் பல ஆண்டுகளாக மக்களுக்குத் தரமான உயர் கல்வியை வழங்கும் வகையிலும், தனியார் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பபடி உயர்கல்வியை சிதைத்து கெடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஆக்கப்பட்டவை. இந்த அரணை உடைத்தாலன்றி, கல்வியை தாராளமயமாக்க, தனியாரிடம் ஒட்டு மொத்தமாக தாரைவார்க்க இயலாது.

கோடிக்கணக்கானோர் உடனடி உயர்கல்வி பெறும் அதிசயத் திட்டம் நாட்டில் கல்வி கற்றோர் விகிதத்தை (GER) 2035க்குள் 50 சதவிகிதமாக ஆக்க வேண்டும். ஆகவே மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இரட்டிப்பு ஆக்க வேண்டும்.

உயர்கல்வியை விரைவாக அதிக மக்களுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் 10000 முதல் 25000 வரை மாணவர்களைச் சேர்க்கவேண்டுமாம். உள்ளவர்களுக்கே இடமும், பரிசோதனைச்சாலை வசதிகளும், கழிப்பறை வசதிகளும். பெண்களுக்கான இடங்களும், விடுதிகளும், ஆசிரியர் பற்றாக்  குறையும் உள்ளது.

இதையும் தாண்டி வகை 1 & 2 கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு கல்வி வழங்கலாம். அதாவது பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி கல்லூரிகளும் திறந்த நிலை மற்றும் தொலைத் தொடர்பு கல்வி வழங்கலாம்.. அனைத்துக் கட்டுப்பாடுகளுடன் படிப்புக்களை வழங்கும் போதே இங்கு கொள்ளையடிக்கப்படுகிறது.

இதில் திறந்த நிலை மற்றும் தொலைதூரக் கல்வியை கல்லூரிகளே நடத்தி பட்டத்தையும் அவர்களே வழங்கத் தொடங்கினால் அவ்வளவுதான். மசானக் கொள்ளைதான். ஊருக்கு ஊர் கல்லூரிகளின் தொடர்பு நிலையங்கள் எனும் பெயரில் ஆள் பிடிக்கும் பணி தொடங்கும். பட்டங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல் வகை பிராண்டுகளில் விற்கப் படும்.

பல்கலைக் கழகங்கள் போல பல்கலை கல்லூரிகள் இன்றைய தேவை என்கிறது வரைவு. அதாவது இரண்டு அறிவியல் படிப்புகள். இரண்டு கலை படிப்புகள், கணிதம் மற்றும் ஒரு சமூக அறிவியல் படிப்பு போன்றவை பட்டபடிப்பு அளவிலே ஒரு கல்லூரியில் இருக்குமானால் அதுவே பல்கலைகல்லூரி எனப்படும். தமிழகத்தில் காணப்படும் பெரும்பாலான கலை அறிவியல் கல்லூரிகள் ஏற்கெனவே பல்கலைக் கல்லூரிகள்தான்.

ஆனால் வட இந்தியாவில் ஒரு பாடதிட்டத்தை மட்டும் நடத்தும் கல்லூரிகள் ஏராளமாக உள்ளனவாம். அவையெல்லாம் இனி பல்கலைக் கல்லூரிகளாக மாறும். மாறவேண்டும்.

இல்லாவிடில் மூடவேண்டும். சிறப்பு கல்வி மண்டலங்களும், நவோதயா கல்லூரிகளும்
புதிய கல்விக்கொள்கையின் படி மூன்றுவகை உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் ஆராய்ச்சிக்கு மட்டுமே ஆனது வகை 1, ஆராய்ச்சியும் கற்பித்தலும் இணைந்தது வகை 2, மூன்றாவது கற்பித்தல் மட்டுமே கொண்ட நிறுவனம். அதைப்போல சிறப்பு பொருளாதர மண்டலங்கள் போல சிறப்பு கல்வி மண்டலங்களும் உருவாக்கப்படும்.

50 லட்சம் மக்கள் தொகைக்கு வகை1 நிறுவனமும் 5 லட்சம் மக்கள் தொகைக்கு வகை 2 நிறுவனமும் இரண்டு இலட்சத்திற்கு வகை 3 நிறுவனமும் அமைக்கப்படும்.

உயர்கல்விக்கூடங்கள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு சகல வசதிகளுடன் பல்துறை அறிவு சார் கல்வியும் வழங்கக் கூடிய அளவில் உருவாக்கப்படும். அவை உலகத்தரம் வாய்ந்த முன்மாதிரி உயர்கல்வி நிறுவனங்கள் ஆக அமையும். இம்மாதிரியான முன்மாதிரி உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் நவோதயா பள்ளிகள் போன்று மாவட்டத்திற்கு.

ஒன்று என படிப்படியாக உருவாக்கப்படுமாம் இந்த சிறப்பு கல்வி மண்டலமும் சரி, முன்மாதிரி உயர்கல்வி நிறுவனங்களும் சரி அனைவருக்குமானது அல்ல. அவை குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையினருக்கு மட்டுமே பலனளிக்கும்.

இருபக்க மூளையையும் செயல் படவைக்கும் அபூர்வக் கல்வித் திட்டம்:
இதுவரை ஒருபக்க மூளையை மட்டுமே உயர் கல்வி வளர்த்து வந்ததாம். அதனால்தான் நாம் நோபல் பரிசு எதுவும் பெறமுடியாமல் போனது.இனி வரும் காலங்களில் ஒரு பக்கம் கலை மற்றும் கற்பனைக்கான மூளையின் செயல்பாடு, மறுபக்கம் அறிவியல் மற்றும் விமர்சனக் கூறு கொண்ட மூளையின் செயல்பாடு என இரண்டையும் வீர்யமாக வளர்க்கும் கல்வி திட்டங்கள் உருவாக்கப்படும் என்று புதிய கல்வி கொள்கை திட்டம் கூறுகின்றது.

இதை எப்படி செய்யப் போகிறதென்றால் புதை பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள காம சூத்திரம் மற்றும் சாணக்கியரின் அர்த்த சாத்திரம் போன்ற பல காவியங்களின் மூலம் செயல்பட வைக்க உள்ளதாம், இதைப் படித்துவிட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

ஆழமான அறிவையும், ஆரோக்கியமான அறிவியல் பார்வையையும் உருவாக்கும் கல்விக்கு இனி வேலை கிடையாது. எல்லா சமூக ஞானிகளுக்கும் கல்வியகங்கள் விடை கொடுத்துவிடும். இவர்கள் குறிப்பிடுவது போல இரண்டுபக்க மூளையும் விருத்தி ஆகி முழு ஆளுமை கொண்ட மாணவர் உருவாக வாய்ப்பே இல்லை. ஏனெனில் உயர்கல்வி கூடங்களுக்கிடையே உருவாகும் போட்டியில், கல்வி என்பது வெறும் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் அளவில்தான் இருக்கும்.

ஆராய்ச்சி எல்லாம் கூட குறைந்து போகத்தான் வாய்ப்பு. ஆனால் உயர் தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட கல்வியகங்களில் படிக்க வாய்ப்பு பெற்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வது எளிது. குப்பனும், சுப்பனும் அந்தப்பக்கம் போகவே முடியாது என்பதே நிதர்சனம் கலை அறிவியல் கல்லூரிகளில் நீட் தேர்வு
அரசு கல்வியகங்களில் இளங்கலை அறிவியல் மற்றும் கலைப் படிப்பு சேரவிரும்புபவர்கள் தேசிய அளவிலான தர நிர்ணய அமைப்பு நடத்தும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தால்தான் சேரமுடியும் என்பது சமூக நீதிக்கு எதிரான சதித்திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன் வரைவு இட ஒதுக்கீடு பற்றி மூச்சுக் கூடவிடவில்லை.

ஆனால் இந்த நுழைவுத் தேர்வு எப்படி எழுத இயலும். யார் எழுத இயலும்? நீட் தேர்வுக்காக போராடியவர்கள் இந்த நீட்டுக்காகவும் தயாராகவேண்டும் எத்தனை உயிர்களை இந்தத் தேர்வு பலி கேட்கப் போகிறதோ தெரியவில்லை.
பொதுவாக அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகள் படிக்க வருபவர்கள் பெரும்பாலானோர் பொருளாதர ரீதியாக மிகவும் பின் தங்கியவர்களாகவும், குடும்பத்தில் முதன் முறை பட்டம் பயில்பவர்களகவும் தான் இருக்கிறார்கள். இவர்கள் நுழைவுத் தேர்வு எழுதியெல்லாம் வருவது மிக மிகக் கடினம். ஆகவே உயர்கல்வியை விட்டு விலகிப் போவது மட்டுமல்ல, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைக் கற்க விரட்டப்படுவார்கள்.

ஒரு புறம் அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு தர நிர்ணயத் தேர்வு, மறு புறம் தனியார் கல்லூரிகளில் அவர்கள் விருப்பப்படி விதி முறைகளை உருவாக்கி மாணவர் சேர்க்கையை நடத்துவது . அதாவது பணம் உள்ளவர் எந்த கட்டுப்படுமின்றி தகுதியும் இன்றி சேர்ப்பது என்பது நல்ல தமிழில் சொல்வதென்றால் «அயோக்கியத்தனம் எனலாம்..

ஆசிரியர் -மாணவர்களுக்கான ஜனநாயக பங்கேற்பு பற்றி இந்த அறிக்கை மூச்சு கூடவிடவில்லை. மொத்தத்தில் அரசு உயர் கல்வி வழங்கும் பொறுப்பை மொத்தமாக கைகழுவி தனியாரிடம் அவர்களுக்குரிய முழு சுதந்திரத்துடன் தாரை வார்க்கும் சதி திட்டமே புதிய கல்வி கொள்கையாகும்.

வெளிநாட்டு பல்கலைக் கழங்களுக்கான வணிக அனுமதி பல ஆண்டுகளுக்கு முன்னரே காட்ஸ் (GATS) ஒப்பந்தத்தின்படி, கல்வி கடைச்சரக்காகி விட்டது. கல்வித்துறையில் அந்நியநேரடி முதலீடு எப்போதோ அனுமதித்தாகி விட்டது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு உள்ள நிறுவனங்களோடு கூட்டாக இணைந்து கல்வி நிறுவனங்களை நடத்தலாம். ஆனால் நம் நாட்டில், AICTE மற்றும் யு.ஜி.சி யின் அனுமதி இன்றி எந்தக் கல்வி நிறுவனமும் நடத்த முடியாது. அவை அனுமதிக்கவில்லை எனவே குறுக்கு வழியாக, கல்வியை கம்பெனி சட்டத்தின் கீழ் கொண்டு வந்து யு.ஜி.சி. அனுமதியின்றி செயல் பட்டு, கல்வியை வணிகமயமாக்க அரசு முயற்சி செய்தது. அதுவும் பலிக்கவில்லை.

எனவே புதியக் கல்விக் கொள்கை மூலம் தங்கள் தாராளமயத் திட்டங்களுக்கான தடைகளைத் தகர்த்தெறிய திட்டமிட்டுள்ளது அரசு. அப்படி நடந்தால், சமூகநீதி அங்கு சாத்தியமே இல்லை. இன்றைக்கு காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய படிப்புகள் எதுவும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவதில்லை..

புதிய தளங்களில், தொழில்நுட்பப் படிப்புகளை படிக்க விரும்புபவர்களை மேலை நாட்டுப் பல்கலை கழகங்கள் ஈர்க்கின்றன. இந்தியாவில் எந்த கல்வி நிறுவனமும் மேலை நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, பட்டப் படிப்புகளை வழங்கலாம். இங்கு இரண்டாண்டும், வெளிநாட்டில் ஒரு ஆண்டும் படிக்கலாம் என்பதே திட்டம்.

இது ஏற்கனவே சில தொழில் படிப்புக் கல்லூரிகளில் அமல் படுத்தப்பட்டுவருகின்றது. இதில் சரியான வருமானம் உள்ளதாம். வெளிநாட்டுக் கல்வி மோகத்தில் இருக்கும் வசதி படைத்தவர்கள் இதில் சேருவதற்கான பெரிய சந்தை இருக்கின்றது.

இதில் முரண்பாடு என்னவென்றால் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு கதவைத் திறந்துவிடும் இந்த முன் வரைவு இந்தியாவில் படி (Study in India) என்ற வெற்று முழக்கத்தையும் அரசியல் இலாபத்திற்காக வைக்கின்றது. வெளிநாட்டு மாணவர்களை கவரும் இந்தியப் படிப்பாக யோகா, ஆயுர்வேதம் போன்ற படிப்புக்களை வழங்குவார்களாம்.

வெளி நாட்டு மாணவர்களை கவரும் விளம்பர யுக்திகளையும் கையாளப்போவதாக இந்த வரைவு கூறுகிறது. தரமான கல்வி, பயனுள்ள கல்வி எங்கு கிடைக்கிறதோ அங்கு மாணவர்கள் போக, வரக்கூடும். அதற்கான பிராண்டிங் எனப்படும் விளம்பர யுக்திகள் மேற்கொள்வது என்பது நாம் காட்ஸ் ஒப்பந்ததிற்கு எவ்வளவு பணிவான அடிமையாக ஆகியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

1996 முதல் 2018 வரை தனியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 10% வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் அரசு கல்லூரிகள் 1.5 சதவிகிதம் தான் உருவாகியிருக்கின்றன. மனிதவளமேம்பாட்டுத்துறையின் ஒரு அறிக்கையின் படி 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று தனியார் சுயநிதிக்கல்லூரிகளில்பயில்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது

சமூக நீதியின் மரணம்

இந்திய கல்விகுறித்த பிரச்சினைகளில் முதன்மையானது கல்வி கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஆகும். பழங்குடியினரும் தாழ்த்தப்பட்ட மக்களும் இன்றளவிலும் மிகக் குறைவான அளவே உயர் கல்வி பெறுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எஸ்.சி.எஸ்.டி பிரிவினரில் இருந்து மொத்தமாக 17 சதவீதத்தினர்தான் உயர்கல்வி பெறுகிறார்கள் அதிலும் பழங்குடி மக்கள் 7 சதவிகிதம்தான் உயர்கல்வி பயில்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு உயர்கல்வியை எப்படி கொண்டு சேர்ப்பது என்பது பற்றி இந்த முன்வரைவு எந்த கவலையும் கொள்ளவில்லை. மாறாக தனியார் நிறுவனங்களுக்குஒட்டுமொத்த கல்வி செயல்பாடுகளையும்,அதற்குரிய அதிகாரங்களையும் தாரை வார்ப்பது என்பது அம்மக்களுக்கு இழைக்கக்கூடிய மிகப்பெரிய துரோகமாகும்.

ஆரய்ச்சியும் அரசியலும் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக ஆராய்ச்சிக்குரிய நிதி உதவி வழங்கப்படும். தகுதியின் அடிப்படையிலும், மேற்கொள்ளும் ஆய்வின் முக்கியத்துவம் கருதியும் இந்த நிதி உதவி ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

இம்மாதிரி மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்புகளால் ஆராய்ச்சிகள் வளர வாய்ப்பே இல்லை. அரசியல்தான் வளரும். வட்டார அளவிலே நிதி வழங்கப்பட்டு ஆங்காங்கு உள்ள கல்வியாளர்கள் ஆரய்ச்சிக்கான தேவை மற்றும் ஆய்வு முறைகள் பற்றிய தர நிர்ணயம் ஆகியவற்றை கணித்து, ஆய்வு நிதிகளை வழங்குவது ஜனநாயகப் பூர்வமானதாகும்.

ராஷ்ட்ரீய சிக்ஷ ஆயோக் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்  எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக அகில இந்திய அளவிலே ராஷ்ட்ரீய ஷிக்சா ஆயோக் எனும் தேசிய கல்வி ஆணையம் நிறுவப்படும். இதுதான் உயர் மட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதன் தலைவராக பிரதம மந்திரி இருப்பார்.

துணைத் தலைவராக மத்திய உயர் கல்விதுறை அமைச்சர் இருப்பார். மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய கல்வித் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். இந்த தேசியக் கல்வி ஆணையத்தில் 30 40 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் பெருவாரியாக அமைச்சர்களும், அதிகாரிகளும் இருப்பார்கள். அரசால் அடையாளம் காணப்படும் கல்வியாளர்களும் இருப்பார்கள்.

தேசியக் கல்வி ஆணையம் கல்வித் திட்டங்கள் பற்றியும், கல்வி வளர்ச்சி குறித்தும், செயல்பாடுகள் பற்றியும், கல்வியில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்தும் முடிவு எடுக்கும் உரிமை பெற்றது. அதாவது நீங்கள் என்னதான் கல்வியில் மாற்றம், முன்னேற்றம் கொண்டுவந்தாலும், அதை மோடிஜிக்கும் அவர் நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை எனில் அவற்றை நிராகரிக்கும் உரிமை உண்டு.

அதே போல ஓரிரவில் பண மதிப்பீட்டிழப்பு செய்தது போல அவர் விரும்பும் கல்வி திட்டத்தை அமல் படுத்தவும் முடியும். கல்வியாளர்கள் வாய் பொத்தி கட்டளையை நிறைவேற்றவேண்டியதுதான். அப்படி செய்வதற்காக ஏற்கெனவே கல்வி அதிகார அமைப்புகளில் ஆட்கள் புகுத்தப்பட்டு இருப்பதும் அனைவரும் அறிந்ததே.

இதேபோல மாநிலங்கள் அளவிலும் மாநிலக் கல்வி ஆணையத்தை மாநிலங்கள் அமைத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அப்படி அமைக்கப்பட்டால் அதற்கு எடப்பாடி அவர்களே தலைவராக இருப்பார். செல்லூர் ராஜு முக்கிய உறுப்பினராகவும் இருக்க வாய்ப்புக்கள் ஏராளம்.

அணுகுண்டு

2030க்கு பிறகு படிப்படியாக உயர்கல்வி நிறுவனங்களை மூடிவிடுவார்களாம். பிறகு இருக்கும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்தான் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் அடைபட்டுப் பயிலவேண்டுமாம். அது ஏன் என்று புரியவில்லை. பிறகு யாரும் படிக்க வரமாட்டார்களா, இல்லை மக்கள் தொகை இத்தோடு நின்றுவிடுமா இல்லை உலகம் அழியப்போகிறதா என்றெல்லாம் யோசிக்க வைக்கின்றனர்.

தேவை ஜனநாயகக் கல்வி

பண்பாட்டுப் பன்மைத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில்அறிவார்ந்த நீதியின் அடிப்படையிலான விழுமியங்களையும்,சகோதரத்துவத்தையும் அறம் சார்ந்த வாழ்வியல் கூறுகளையும் உயர் கல்வி வழங்க வேண்டும் என்பதும், மதவெறி, மூடநம்பிக்கை மற்றும் இனவெறி, சாதி வெறி போன்றவற்றை அறவே ஒழிக்க கூடிய கல்வித் திட்டங்கள் நாட்டின் தேவையாக இருக்கின்றன என்பது குறித்தும், அறிவியல் உலகில் இந்தியா முன்னேற்றமடைய எத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும், அதற்கு அரசின் ஆதரவு எத்தகையது என்பன பற்றியெல்லாம் கஸ்தூரிரங்கன் கமிட்டி எந்த அக்கறையும் கொள்ளாதது மிகவும் வருத்தமான விஷயம் ஆகும்.

பெண் கல்வி குறித்தும் எதுவும் சொல்லப்படாதது அவர்களுக்கு பெண்கள் மீது எவ்வளவு அக்கறை என்பதைக் காட்டுகிறது.

கல்வியை முழுக்க முழுக்க வணிகமாக்குவது என்பது நாட்டிற்கு எவ்வளவு பெரிய சீரழிவை உண்டாக்கும் என்பதை கொஞ்சம் கூட கவலைப்படாத ஒரு கூட்டம் பாடுபட்டு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பி வரும் உயர்கல்வி எனும் மாளிகையை தகர்க்கப் போகிறது.

அறிவு ஜீவிகளும், தீவிர நுகர்வோர் பண்பாட்டில் மூழ்கிக் கிடக்கும் பொது மக்களும் அமைதி காப்பது என்பது அவர்களைத் தேச விரோதிகளாக்கும்.

அனைவருக்குமான ஜனநாயகபூர்வமான, மதச்சார்பற்ற – அறிவியல் போக்கு கொண்ட உயர்கல்வியை அரசே தரமாக அனைவருக்கும் வழங்க வேண்டும். அதை வலியுறுத்தும் தொடர் இயக்கங்களில் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டும்.

இது ஜனநாயகத்தைக் காக்கும் போர் ஆகும். கல்வி என்பது பணம் சம்பாதிக்க மட்டும் இல்லை. அது உயர்வான சமுதாயத்தை உருவாக்கும் பண்பாட்டுப் பாதை என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *