சோகங்கள் நிறைந்த சூழலுக்குள்ளும் பாசம் மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்குமா என்றால், பாசம் எலும்பு மஞ்சை வரை ஊடுருவி உயிரைக் கையில் ஏந்தி நிற்கும்.

உலக உயிர்களின், மிக மிஞ்சிய வாழ்வின் எல்லையே பாசம் தான். பாசம் பல இடங்களில் வரலாறுகளின் திருப்பு முனையை உண்டாக்கி வைத்திருக்கின்றன. நெருடலான மன உணர்வுகளைத் தாண்டி இருக்கமான, கடினமான, திறமான ஓர் உணர்வு உண்டு என்றால் அது பாசமாகத்தான் இருக்கும்.

புராண, இதிகாச, நிகழ்கால வரலாறுகளின் காட்சிகளில் பாசப் போராட்டத்தின் உண்மைத் தன்மைகள் நிரூபிக்கப்படுகின்றன. அவ்வகையில் எத்தனை யுகமாய் இருப்பினும் உலகைக் கோலொச்சி நடத்திச் செல்வது பாசமாகத்தான் இருக்க முடியும்

தன் மூலமாகப் புத்துயிர் எதாகினும் உலகில் உருவாகுமானால், அதன் மேலான ஆளுமை, பாசமாகக் கிடைத்து வளர்கின்றது. தன் வாழ்நாளோடு இணைந்த பலவும் நாள் பட, நாள் பட, நம் கவனத்தின் ஊடாக நிறைந்து பாச வளைக்குள் படர்ந்து விரிகின்றன.

இதுவே உலக வாழ்வியலின் மைய நரம்பாகும். இவ் உணர்ச்சியையே பன்னெடும் காலமாய் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன. சொல்ல முடியாத கதைகளை இவ்வுலகம் எடுத்து ஓதிக் கொண்டே இருக்கிறது. அதன் நீட்சியே ”வெடியன் மணியமும் இடியன் துவக்கும்” எனும் குறும்படமாகும்

எத்தகவு வேதனைகளின் உள்மூழ்கிக் கிடந்தாலும், பாச வலைக்குள் உள்ளவர்களின் மேல் செலுத்தும் அன்பு என்றும் குறைந்து விடாது எனும் தாரக மந்திரம் எவ்வளவு உயர்வானது. அதனைக் குறும்படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் மதிசுதா.

தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து விடுவது சாத்தியமே இல்லை என்பதுதான் லளகீக வாழ்வின் மூலாதாரம். இதையும் விளக்குகிறது இக்குறும்படம். பிறரிடமிருந்து வரும் வாஞ்சையான அன்பு, மனதைக் கொள்ளை கொண்டு அடிமையாக்கி விடுகிறது.

குறும்படத்தின் கதை

இலங்கையில் தொடர்ந்து சிங்கள ராணுவத்திற்கும், தமிழ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான போர் நடக்கும் காலம். கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து இருக்கும் ஒரு தமிழ்க் குடும்பம். குடும்பத் தலைவி மற்றும் மருமகள் இருவரும் குண்டு தாக்கி இறந்திருப்பர். பேரன் சாதுரியன் தமிழ் அமைப்புப் போர் பிரிவில் வீரனாக இருக்கின்றான். இப்படி உள்ள சூழ்நிலையில் குடும்பத் தலைவனான வெடியன் மரணப்படுக்கையில் சுய நினைவின்றிக் கிடக்கின்றான். அவரது மகன் அப்பாவைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான். வெடியனின் மச்சானும் வந்து வந்து பார்த்துவிட்டுச் செல்லுகின்றார்.

ஒரு நாள், செய்தித்தாளில் வந்திருந்த செய்தியை வெடியனின் அருகே மகன் படிக்க, அதில் பேரன் சாதுர்யனின் துப்பாக்கிச் சுடும் திறனைத் தமிழ் இயக்கத் தலைவர் பாராட்டியதாகப் போடப்பட்டிருந்தது. அதைக் கேட்டவுடன் இவ்வளவு நாள் மரணப்படுக்கையில் இருந்த வெடியன், சந்தோஷம் என்கிற நிலையை அடைந்து அவனின் உயிர் பிரிகிறது.

இதுதான் கதை. இக்கதையில் பாதி, கதையோட்டத்தில் நாமாகப் புரிந்து கொண்டது. உரையாடல்கள் தான் பெரும் பகுதிக் கதையைப் பார்ப்பவருக்குக் கூறி உணர வைக்கின்றன

குறும்படத்தின் சிறப்பு

வெடியன் எனும் கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை சுற்றப்பட்டுள்ளது. அவனின் மனைவி எஸ்தர், கணவன் மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள் உலகத்தரம் மிக்க இலக்கிய வரிகளாக அமைந்திருக்கின்றன. எதார்த்தமான நக்கல், நையாண்டி, விட்டுக்கொடுத்தல், பணிவிடை, கோபம், பாசம், அன்பு இவையெல்லாம் உரையாடல்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறன.

’நான் இறப்பதற்கு முன் நீ இறந்து விடாதே அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது’ எனும் பொருள்படும்படி எஸ்தர் கணவனிடம் கூற, ’சரி சரி அதைத் தானே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். என்னால் நீ ஒரு சொட்டு கண்ணீரை கூட விடக்கூடாது’ என்று அவர் கூறுகிறார்.

இந்த உரையாடல்களுக்குள் உள்உள்ளே உள்ள பொருள் எத்தகையது. அன்பினுடைய உச்சத்தை இந்த உரையாடல் விளக்குகிறது. இப்படியே எல்லோரும் இருந்து விட்டால், உலகில் வாழ்க்கை எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்”செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்” என்பது இதுதானா?

Short Film Review: Vediyan Maniyam and Idiyan Laasim - Bharatishandran குறும்பட விமர்சனம்: வெடியன் மணியமும் இடியன் துவக்கும் - பாரதிசந்திரன்

தன் பேரனுக்குத் துப்பாக்கியைச் சுடுவதற்குப் பயிற்சி கொடுக்கும் போது, அவர் கூறும் எடுத்துக்காட்டுகள் உளவியல் அடிப்படையிலானது மற்றும் நுணுக்கமான செய்தியைக் கொண்டு, அவன் தன்னைப்போல் சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக மாறி, நாட்டின் விடுதலைக்குப் போராட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கின்றது. தம் மனைவியிடம் தன் பேரனைப் பிரிந்து இருக்கும் துயரை விட இது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார். நாட்டின் மேல் கொண்ட பற்றை இது உணர்த்துகிறது.

”எத்தனை உயிர்களை அதாவது பறவைகளைக் கொன்று இருப்பீர்கள். இது பாவம் இல்லையா” என்று பேரன் கேட்கிறார். அதற்கு அவர் கூறுவார் ”சாப்பிடுவதற்குத் தானே” என்பார்.(இதையே ”தர்மா” குறும்படத்தின் கருவாகவும் இயக்குனர் மதிசுதா வைத்திருப்பார்)

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைப் போராட்டம் எவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையே வலி மிக்கதாய் இருக்கிறது என்பதைச் சில நிமிடத் தொடக்கக் காட்சிகளிலேயே விளக்கி விடுகிறார் இயக்குனர். இரு பெண்களும் இல்லாத வெறுமையான வீடாக இருந்தாலும், நாட்டிற்காக ஒருவனை அனுப்பிய சோகத்தை அனுபவிக்கும் உன்னதக் குடும்பத்தைக் இக்குறும்படம் தூக்கி நிறுத்தி இருக்கிறது.

எஸ்தர் கதாபாத்திரம் மிக அற்புதமான படைப்பு. மச்சானாக வரும் கதாபாத்திரம் கதையை வெளிப்படுத்தும் ஊடு கதாபாத்திரமாக வருகிறது. வெடியன் இறக்காமல் எதற்கோ ஏங்கிக் கொண்டு இருக்கின்றார் என்பதற்கான காரணத்தை இவரே கூறுவதாகக் கதையை அமைத்திருக்கிறார்.

எந்த ஒரு வார்த்தையும் குறும்படத்தில் கதைக்கு வெளியே தேவையற்றதாக இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான கதையைச் சொல்வதற்காக எழுதப்பட்டிருக்கின்றன. அது குறும்படத்தின் மிகச்சிறந்த பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்

சாதுர்யன் தன் இலக்கைத் தொட்டுவிட்டால், இதுவே வெடியனின் இலக்காகவும் அமைந்ததனால், ”மூச்சை இழுத்து வைத்துக் கொள் விட்டாயானால் இலக்குத் தவறி விடும்” எனும் வசனம் காட்சியாகவும் விரிந்து நிற்கின்றது. வசனத்தை உறுதிப்படுத்தும் காட்சியே கடைசிக் காட்சியாகிறது.

சில வசனங்கள் தான். ஆனால், அவை கதை கதையாகச் சொல்லுகின்றன கதையை. நறுக்கென்று இருக்கின்றது. அதோடு ஈழ மண்ணின் தமிழ் சொலவடைகள் வேறு. ”சிறிய பாம்பு என்றாலும் பெரிய கம்பால் அடி” என்பது போல ஈழத் தமிழ்நடை. தமிழ் நிலத்தின் வாசனையை உலகெங்கும் பரப்புவதாய் எதார்த்தத்தைப் பெற்றிருக்கின்றது இக்குறும்படம்.

படக் கோர்வை (எடிட்டிங்):

முன் பின்னதான கதை கூறல் ஒரு சரியான கட்டமைப்பில் கச்சிதமாய்ப் பொருந்தி நிற்கிறது. அதுவும் கடைசிக் காட்சி மிக அற்புதமான நேர்த்தி. காரணம், கரணம் தப்பினால் மரணம் எனும் ஒன்றுதான். ஆனால், மிகத் தரமான படக்கோர்வையினால் நெருடலற்ற கதை அம்சத்தை நம்மால் உணர முடிகிறது. கதையும் எந்தவித நெருடலும் இல்லாமல் புரிகிறது.

கேமரா:

Short Film Review: Vediyan Maniyam and Idiyan Laasim - Bharatishandran குறும்பட விமர்சனம்: வெடியன் மணியமும் இடியன் துவக்கும் - பாரதிசந்திரன்

சிறிய மெழுகுவர்த்தி மற்றும் சிமிலி விளக்கு வெளிச்சத்தில் எஸ்தரும் விடியனும் பேசிக் கொள்ளும் காட்சி அற்புதமான ஒளி ஓவியம். குறும்படங்களில் கேமரா பார்வையின் உச்சம். ஆவி பிடிக்கும் விடியன் முண்டுவது முதற்கொண்டு படம் பிடித்து இருக்கிறது கேமரா கண்கள்.

வீட்டினில் வெடியனின் மரணப்படுக்கைக் காட்சி, கண்மாயில் துப்பாக்கிச் சுடப் பயிற்சி கொடுக்கும் காட்சி, இவை பாராட்ட வேண்டிய கேமரா கண்களாகும்.

இசை”

படத்தின் உயிர் நாடியைப் பிடித்து, லயம் அறிந்து இசை விளையாடுகிறது. சோகமும், ஏக்கமும், தவிப்பும், இசை தந்து விடுவதற்கான முழு முயற்சியையும் செய்திருக்கிறது. இசையமைப்பாளரின் இசை நயம் கச்சிதமாகப் படத்தை அதன் சோகத்தை விளங்க வைக்கிறது. சைக்கிள் தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியில் கூட, அதன் இயல்பான சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையான விஷயம் உணர்வுகளை வெளிப்படுத்தும் இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலமாய் அமைகிறது.

மண்ணின் தீவிரமான கொள்கைப் பிடிப்பு, உரம் கொண்ட நெஞ்சமும், வாழ்க்கைப் போராட்டமும், பாசப்பிணைப்பும், பரிதவிப்பும் கொண்ட அற்புதமான குறும்படத்தை இயக்குனர் மதிசுதா கொடுத்திருக்கிறார்.

இந்த உலகத்திற்குச் சிறந்த மண்ணின் மாண்பு கூறும் இலக்கியப் படைப்பை உருவாக்கிய இயக்குனரின் இந்தக் கலைப் படைப்புக் கட்டாயம் வரலாறாக மாறும். இலக்கியத் தரமிக்கப் படைப்புகளின் வரிசையில் இப்படமும் நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற தியாகங்களின் வரலாற்றை இயக்குனர் மதிசுதா மூலம், தமிழ்உலகம் என்றும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும்.

படக்குழு:

எழுத்து, இயக்கம் – மதிசுதா

நடிப்பு – முல்லை யேசுதாசன் , கமலராணி, சங்கர் , ஜசீதரன், கேசவராஜன், தர்சன்

ஒளிப்பதிவு – ரிசி செல்வம்

படத்தொகுப்பு – சன்சிகன்

இசை மற்றும் ஒலி – பத்மயன்

உதவி இயக்கம் – குருநீலன்

தயாரிப்பு – ஐங்கரன் கதிரிகாமநாதன், மதி சுதா

வாசகரின் விமர்சனம்:

NithaniPrabu :

மிக மிக மிக அருமையான படைப்பு மதிசுதா. தாத்தாவுக்கும் பேரனுக்குமான பிணைப்பை நம் வாழ்வியலோடு எளிமையாக எத்தனை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நிறையச் சொல்லவேண்டும் போலிருக்கிறது என்ன சொல்வது என்றும் தெரியவில்லை. ஆத்மார்த்தமாக மனதைச் சென்று சேர்ந்திருக்கிறது கருவும் கதையும்.

கட்டுரை ஆக்கம்:
பாரதிசந்திரன்
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782

[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “குறும்பட விமர்சனம்: மதி சுதாவின் வெடியன் மணியமும் இடியன் துவக்கும் – பாரதிசந்திரன்”
  1. பாரதி சந்திரன் அவர்களின் பன்முக நோக்கிற்கு வாழ்த்துக்கள்

  2. இவ்வுலகில் எல்லா உயிர்களும் சுதந்திரமாக வாழ்கின்றன மனிதனைத் தவிர என்ற சிந்தனை தான் எழுகிறது. குறிப்பாக ஈழத்து தேசத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சூழல் அங்கு ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார். ஒரு குறும்படம் எத்தனை பெரிய வலியை மிக எளிமையாக ஒவ்வொருவருக்கும் கடத்துகிறது. அந்தச் செய்தி தான்,
    உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கக் கூடிய கடற்படை பலம் புலிகள் இடம் உண்டு இந்த வார்த்தை எத்தனை மகத்துவமானது. அதைக் கேட்ட மாத்திரத்திலே தன் உயிரை கையில் பிடித்து வைத்ததை போல உணரும் தருவாய்

    மகிழ்ச்சி ஐயா இன்று உங்களால் ஒரு நல்ல குறும்படத்தை பார்த்த மகிழ்ச்சி.

    எப்பொழுதும் போல குறும்படத்தை பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனத்தை படித்தேன்.

    மனித உறவுகளை குறித்த உங்களின் பார்வை விழுமிய சிந்தனை உள்ளபடியே போற்றத் தகுந்தது.

    ஒரு படைப்பாளியை விட திறனாய்வாளர் சமூக பொறுப்பு மிக்கவர் என்பது உங்கள் எழுத்துக்களில் இருந்து அறிய முடிகிறது.

    ஏதோ வெந்ததைத் தின்று விட்டது வெளிவந்தால் சாவதல்ல மனித பிறப்பு… ஏதோ ஒரு உன்னதமான பணியை செய்வதற்காக இயற்கை இவ்வுலகில் நமக்கு அளித்திருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    “சோகங்கள் நிறைந்த சூழலுக்குள்ளும் பாசம் மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்குமா என்றால், பாசம் எலும்பு மஞ்சை வரை ஊடுருவி உயிரைக் கையில் ஏந்தி நிற்கும்.

    உலக உயிர்களின், மிக மிஞ்சிய வாழ்வின் எல்லையே பாசம் தான். பாசம் பல இடங்களில் வரலாறுகளின் திருப்பு முனையை உண்டாக்கி வைத்திருக்கின்றன. நெருடலான மன உணர்வுகளைத் தாண்டி இருக்கமான, கடினமான, திறமான ஓர் உணர்வு உண்டு என்றால் அது பாசமாகத்தான் இருக்கும்” தொடக்கத்தில் எழுதிய இந்த இரண்டு பத்திகள் (two paragraphs) எத்தனை உன்னதமானவை.

    ஒரு தலைமுறை தாண்டிய உறவை தாத்தாவிற்கும் பேரனுக்குமான அந்த அற்புதமான படைப்பை, படைத்த படைப்பாளியை உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறேன். படம் பார்த்து உறைந்து போன கனத்த எண்ணத்தோடு இயக்குனர் உள்ளிட்ட அனைத்து படைப்பாளிகளையும் அன்பு நிறைந்த அந்த கரங்களை பிடித்து வாழ்த்து தெரிவிக்கிறேன். அவர்களுக்கும் என் அன்பும் மகிழ்ச்சியும்.

    இத்தனைக்கும் பிறகு, இந்த படம் குறித்து நான் எழுதுவது அத்தனை உகந்ததாக இருக்காது. அதனால் உங்கள் திறனாய்வை நான் பெரிதும் மெச்சுகிறேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். பாராட்டுவும் கடமை பட்டிருக்கிறேன்.

    மகிழ்ச்சி ஐயா.

    முனைவர் பாவலன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *