கையில் காபி கோப்பையுடன் “இலக்கிய உலா மகளிர் தின போட்டி முடிவுகள்” பார்த்த ரம்யா ஒரு நிமிடம் அசந்து போய்விட்டார். தனது கையில் இருக்கும் வெளியிட்டையும் கட்டுரையும் எத்தனையாவது முறையாக படித்துக் கொண்டு இருக்கிறோம் என ரம்யாவிற்கே தெரியாது. மறுபடியும் படிக்க துவங்கினாள்.

“கடிதப் போட்டி”.
“எழுதுகிறேன் ஒரு கடிதம்”
அன்பு கவிதைக்கு,

அன்பும் பிரியத்துடன் உன்னை படைத்த புதுகவியின் (மன்னிக்கவும்) மடல். நலம் நலமறிய ஆவல். தங்களின் மடல் கிடைத்தது. கவிதையிடம் இருந்து மடலா? என ஆச்சிரியத்தோடு, வியந்து பிரித்து படித்தவுடன் உடைந்து போனேன். தங்களை பாதித்த எனது செயலுக்கு முதலில் என் மன்னிப்பை கேட்டு கொண்டு தொடர்கிறேன்.

நான் கவியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் படைப்பாளியாக தங்களை படைத்து விட்டேன். தங்களின் கோபம் நியாயமானது தான். பிரித்து பிரித்து மட்டுமே எழுதினால் கவிதையாகுமோ என்ற தங்களின் கேள்வி கணைக்கு பதில் தெரியாமல் விழிக்கின்றேன்.

“கவிதை”

என்னுடைய முதல் எழுத்து கடைசி எழுத்து இணைந்தால் நான் “கதை”.

என்னுடைய இரண்டாம் எழுத்து முன்றாம் எழுத்து இணைந்தால் நான் “விதை”

கதையையும், விதையையும் என்னுள் தாங்கி உள்ளேன் என்ற தங்களின் விளக்கம் கேட்டு மெய் சிலர்த்து போனேன்.

ஓசை, வடிவம், எதுகை, மோனை, இலக்கணம், கருத்து என தங்களை வடிவமைத்து சங்க இலக்கிய பாடல்கள், மரபு கவிதைகள் காலப்போக்கில் புதுக்கவிதை என்ற பெயரில் தங்களின் பல பரிமாற்றங்களை அறிந்தேன். தங்களுக்கு பல வலியையும், வேதனைகளையும் சில படைப்புகள் உண்டாக்கி வருகிறது என்பதை அறிந்து வருத்த மடைந்தேன்.

முன்னர், நாளிதழ்களில் ஒரு கவிதை பிரசுரமாக பல நாட்களாக எடுக்கும். கவிஞர்கள், அவர்களின் படைப்புகள் பிரசுரமாகும் நாளுக்காக தவம் கிடக்கும் நிலை, காதலன் காதலியின் வருகைக்கு காத்துக் கொண்டு இருக்கும் தருணம் போல் இருந்ததையும் அதில் தங்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்தையும் அறிந்து இன்புற்றேன்.

அஃது மட்டுமின்றி தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று கட்சேவி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தங்களை எளிதில் பிரசுரமாகும் விதத்தில் ஒரு விதத்தில் மகிழ்ச்சியும் அதே சமயத்தில் சிறு வருத்தமும் இருப்பதையும் அறிந்து, சற்றே சங்கடபட்டேன்.

தங்களின் மடல் “தாங்கள் (கவிதை)” எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதை எனக்கு உணர்த்திய சில அம்சங்கள்:

• உணர்ச்சி மிகுதியால் உள்ளத்தில் உருவாகி வெளிவரும் கவிதையில் தான் உயிர் இருக்கும்.

• இலக்கணமும், கருத்தும் பின்னிப்பிணைந்து இருத்தல் அவசியம்.• கவிதையில் “நன்மொழி” புணர்த்தல் வேண்டும்

• கவிதையை சுருங்க சொல்லி விளங்க வைக்கும் விதமாக படைக்க வேண்டும்

• கவிதை வடிவம், ஓசை, எதுகை, மோனை கொண்டு வடவமைக்கபட வேண்டும்.

• மரபு கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகள் படைக்கலாம். எழுத்தில், நடையில், ஓசையில் புதுமையிருக்கலாம். ஆனால் அடித்தளம் ஒரு படைப்புக்கு அவசியம். புதுமை என்ற பெயரில் அதை சிதைத்து விடக் கூடாது.

• ஊடுருவி சென்று பார்க்கும் பார்வை வேண்டும்.

• சமகால நிகழ்வுகளை படைக்கும் திறனும் தைரியமும் அவசியம்.

• பாரதியார், பாரதிதாசன் படைப்புகளை வாசிக்க வேண்டும்.

• வாசிப்பு விழித்திரை மலர்ந்து மனதினுள் உள்ள கவிஞரை தட்டி எழுப்பும்.

• ஆழமான பயிற்சி அவசியம்.

• பயிற்சி பெற்றே மேடை ஏற வேண்டும்.

ஒரு பயிற்சி பட்டறைப்போல் தங்களின் மடல் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தது.

“கூட்டுக் களியினிலே -கவிதை
கொண்டு தர வேண்டும் – அந்தப்
பாட்டு திறந்தாலே வையத்தைப்
பாலித்திட வேண்டும்”

– என்று பராசக்தியிடம் பாரதி வேண்டியது போல் யானும் யாசிக்கிறேன், தாய் மொழியாம் தமிழன்னையிடம் ஒரு கவிதை படைக்க வேண்டும் என.

கவிதையை (தங்களை) நண்பனாக, காதலியாக, தோழியாக உவமை கொண்டு ஒரு படைப்பாளியாக தங்களின் அகம் மகிழ படைப்பை உயிர்போடு‌‌ படைக்க முயற்சிக்கிறேன். அடுத்தமடல் தங்களிடமிருந்து நான் பெறுவது பாராட்டாகவே இருக்கும் ‌ என்பதில் ஐயமில்லை.

நன்றி கவிதையே!
தோழமையுடன்
படைப்பாளி யாழினி

நம்பவே முடியவில்லை இதை யாழினி தான் எழுதினாளா? ஆம் அவர்கள் அண்ணா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யாழினி 10th B பிரிவு – 18 வயது மாணவர்கள் பிரிவில் கலந்து கொண்டு போட்டியில் வென்று முதல் பரிசு .கட்டுரை தான் இது.

ரம்யா டீச்சர் நினைவுகள் சற்றே பின்நோக்கி சென்றது.
சென்ற மாதம் ஆசிரியர்கள் மத்திய உணவு வேலையில் பேசிக்கொண்டு இருந்த போது, ரம்யா டீச்சர் கோபமாக வந்து அமர்ந்தார்.

“கோமதி டீச்சர், ரம்யா என்னம்மா ஏன் இவ்வளவு லேட்? “

“எங்க டீச்சர் வர முடியாது. இந்த பசங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்க வேண்டியுள்ளது. ஒன்னு கூட சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குது?

“ஆமாம் அது தெரிஞ்ச கதை தானே! அதற்கு ஏன் இவ்வளவு டென்ஷன்? “

“இல்லை டீச்சர் கடைசி வகுப்பு தமிழ் வந்தாலே பிரச்சினை தான். எப்போது பெல் அடிக்கும்? எப்போது சாப்பிட போகலாம் என காத்திருக்காங்க?”

“தமிழ் வகுப்பு மட்டும் இல்ல டீச்சர் என் அறிவியல் வகுப்பில் கூட அப்படி தான்? என்றார் புனிதா டீச்சர்.

“வாலுங்க…” நம்ம உயிரை எடுக்கவே வந்திடுதுங்க எல்லா ஆசிரியர்களும் அவர்கள் அவர்கள் குறைகளை பகிர்ந்து கொண்டு இருந்தார்கள். “

“ஷீலா டீச்சர் தனது பங்கிற்கு மாணவர்கள் கைபேசி எடுத்து வருகிறார்கள். சைலண்ட் மோடில் போட்டு விடுவதால் அதை கண்டு பிடிக்க முடிவதில்லை.”

எதற்கும் பதில் அளிக்காமல் வெண்பா உணவு அருந்தி கொண்டு இருந்தாள்

சமீபத்தில் தான் ஆம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாற்றம் பெற்று இந்த பள்ளியில் சேர்த்துள்ளார்.

வெண்பா தமிழ் ஆசிரியர். வெண்பாவின் தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வி எடுக்கும் பாடம் முறை மிகவும் பிடிக்கும். தமிழ் பிடிக்க காரணமே அவர் தான். முக்கியமாக மாணவர்கள் பேசுவதை கேட்பார். வகுப்பு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் சத்தம் நித்தம் வகுப்பில் கேட்கும். தலைமை ஆசிரியர் வகுப்பை கடக்கும் போது ஏன் இந்த சத்தம் என கேட்டாலும் ஆசிரியர் பதில் சொல்வர். உரையாடல் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது ஐயா என. அவரும் கடந்து சென்று விடுவார்.

சக ஆசிரியர் கேட்கும் போது பேச்சுரிமை நமது சுதந்திரம். மாணவர்களை கேள்வி கேட்க அவகாசம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு கேட்கும் திறன் வளரும். இல்லையெனில் தஞ்சாவூர் பொம்மை போல் நாம் தலையாடிகளை தான் உருவாக்க முடியும். எதிர்கால சமூகத்தை இல்லை என்பார்.

வெண்பாவின் எண்ண ஒட்டம், ஷீலா டீச்சர் என்ன வெண்பா அமைதியாக இருக்கீங்க. உங்கள் அனுபவம் என்ன? என கேட்டவுடன் கலைந்தது. ஒரு சிறிய புன்னகை உதிர்த்தாள் வெண்பா.

“சும்மா சொல்லுங்கள்.. என்றார் சுமதி டீச்சர். “

“இல்லை கால மாற்றத்திற்கு ஏற்ப நாமும் கொஞ்சம் மாற வேண்டும்… என்றார்”

“எப்படி…. என அனைத்து டீச்சர் களும் ஒன்றாக..”

“நாமும் செல் போன் வைத்து பாட்டு போட்டு கொண்டு…. என சிரித்தபடி ரம்யா டீச்சர் கோபமாக கேட்க

“இல்லைங்க டீச்சர்…. கொஞ்சம் அவர்கள் வழியில் சென்று… “

“பதிலில்லை…. “

ரம்யா டீச்சர், “சரி வெண்பா டீச்சர் நான் தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். 10th B பிரிவு வகுப்பில் இந்த ஒரு மாதம் தமிழ் வகுப்பு தாங்கள் எடுங்கள்… பிறகு பார்போம்… “

இல்லைங்க டீச்சர் அதெல்லாம் வேண்டாம் என்ற வெண்பாவை …… கண்டு கொள்ளாமல் வேகமாக வெளியேறி விட்டார்.

வெண்பா டீச்சருக்கு சங்கடமாக போய்விட்டது.

ரம்யா டீச்சர் சொன்னபடி வகுப்பு டீச்சர்களக்கு மத்தியில் மாற்றம் அடைந்தது.

ரம்யா டீச்சர் 10th B பிரிவு உள்ளே சென்றவுடன் மாணவர்களுக்கு ஆச்சரியம்.

“அட புது டீச்சர்”.

வெண்பாவின் பார்வையில் அனைவரும் அமைதியானவர்களாக திறமையானவர்களாகவே தெரிந்தவர்கள். மகாபாரதத்தில் துரியோதனன் பார்வையில் அனைவரும் கெட்டவர்களாகவும் தர்மனின் பார்வையில் அனைவரும் நல்லவர்களாகவும் தெரிந்தது போல.

முதலில் அறிமுகம் பின்னர் தனது ஆசிரியர் தமிழ்ச்செல்வி வழிமுறைகளை பின்பற்றி பாடங்கள் எடுக்க துவங்கினார் வெண்பா…. சில மாதங்கள் கடந்தது.

யாழினி பெற்றோர்கள், வணக்கம் டீச்சர் என கையில் இனிப்போடு முகத்தில் மகிழ்ச்சியோடு வகுப்பின் உள்ளே வந்தார்கள். ரம்யா டீச்சரின் நினைவுகள் திரும்பியது……..

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு டீச்சர். என் மக இப்படி போட்டியில் கலந்துக் கொண்டு பரிசு வாங்குவாள் என நாங்கள் நினைக்கவில்லை என்றவுடன்..

“இல்லை வெண்பா டீச்சர் ….”

ஆமா டீச்சர், “வெண்பா டீச்சரை பார்த்துவிட்டு தான் வரோம். அவுங்க தான் அனைத்து டீச்சர்களின் பயிற்சி தான் காரணம்”, என சொன்னார்கள். தங்களையும் தலைமை ஆசிரியரையும் பார்த்து நன்றி சொல்லிவிட்டு போகலாம் என வந்தோம் என்று இனிப்பு வழங்கிவிட்டு மகிழ்ச்சியோடு சென்றனர்,

தவறு யாருடையது என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது ரம்யா டீச்சருக்கு.

யாதுமாகி நிற்கும் வெண்பா டீச்சருக்கு நன்றி சொல்ல ரம்யா டீச்சர் கிளம்பினார்.

நன்றி
திருமதி.சாந்தி சரவணன்
சென்னை 600 040
9884467730
Email: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *