மார்கழி, காலைப் பனி உற்சாகத்தை பெருக்குவது, உறக்கத்தை ஒழிப்பது. முதலில் வரும் உணர்வு பசி. குளித்து கோவிலுக்கு சென்றால், பொங்கல் கிடைக்கும். கோவிலில் கூட்டம் இருக்காது. ஐவர் அல்லது அறுவர் மட்டுமே அதில் ஒருவர் பிரசாதம் கொடுப்பவர். ஜெய கீர்த்தி அன்றும் காலை ஆறு மணிக்கு பொங்கல் சாப்பிட்டாள். ஆனால் முற்பகல் மீண்டும் பசித்தது. அவள் கோகிலாவை எதிர் பார்த்தாள்.

பசி மயக்கத்தில் வீட்டின் வெளித் திண்ணையில் படுத்து உறங்கி விட்ட ஜெயகீர்த்தியை உசுப்பி ஆட்டி எழுப்பினாள் கோகிலா

’’எந்தெழு எந்தெழு ஓ எழுந்திரு எழுந்திரு’’

கண் விழித்த கீர்த்தியின் பார்வை முதலில் புளியோதரை மீது

’’நேக்கு தெரியும் உனக்கு பசின்னு’’

கீர்த்தி புளியோதரையை சுவைக்கத் தொடங்கினாள். கோகிலா கீர்த்தியின் தலை முடியில் கை வைத்து வருடினாள். கீர்த்திக்கு விக்கல் வந்தது.. உடனே சொம்பில் இருந்த நீரை கொடுத்தாள் கோகிலா.

‘’கீர்த்தி முடக்குத் துறை வரியா’’

என்னால நடக்க முடியாது

சே அங்க நடந்து போக முடியாது, மாட்டு வண்டியில போறோம், அதுவும் நாளைக்கு’’

’’வரேன்’’

அது ஓடும் நதியா இல்லை ஓய்வெடுத்த நதியா என கூறுவது கடினம். கண்ணுக்கு எட்டிய தூரம் நீர், நீரன்றி வேறு இல்லை. பரவசத்துடன் பார்த்தால் அமைதியாக நிலை கொண்ட நீர்; உற்று பார்த்தால் ஓடும் நீர், ஓசையின்றி ஓடும் நீர். அதுதான் முடக்குத் துறை. கர்நாடக மாநிலத்தில் காவேரி நதியின் ஒரு நிறுத்தம். ஏரியாக காட்சியளிக்கும் காவிரி. நீரருகே படித்துறையில் கோகிலாவின் மடியில் கீர்த்தி. பத்து வயது கோகிலா ஏழு வயது கீர்த்தியை இறுக அணைத்துக் கொண்டாள். வருடம் 1955. கோகிலாவின் தந்தைக்கு முடக்குத் துறை நீர் வளம் அருகே ஒரு காணி நிலம். நெல் பயிரிட்டிருந்தார். அன்று விடிகாலை சொசலெ கிராமத்தில் இருந்து மாட்டு வண்டியில் கோகிலா, தந்தை, தாய், கீர்த்தி அனைவரும் வந்திருந்தனர். கீர்த்தியின் தாய் கோகிலாவின் தந்தையின் சொந்த தங்கை, ஆனால் கீர்த்தியின் தந்தை மரணித்து நான்கு வருடங்கள் ஓடி விட்டன. கீர்த்தியை நேரடியாக பார்க்க மாட்டார் கோகிலாவின் தந்தை. அப்படி பார்த்தால் அவர் கண்களில் நீர் கசியும். கீர்த்தி அவ்வப் போது மேல்கோட்டை கிராமத்திலிருந்து சொசலெ வருவாள். அவளை அழைத்து வருவது கோகிலாவின் தந்தையே. இரு நாட்கள் ஆனதும் அவளை மீண்டும் மேல் கோட்டையில் விட்டு வர வேண்டும். எப்படியும் மாதம் ஒரு முறை செலுவ நாரயணஸாமியை தரிசிக்க வேண்டும். இப்போது ஜெயகீர்த்தி வந்தும் ஒரு மாதம் ஆகி விட்டது. கோகிலாவின் மடியிலிருந்த கீர்த்தியை தன் பக்கம் தூக்கி வைத்துக் கொண்டார் இராமானுஜம். ‘’புட்டா நாள நான் மேலுகோட்ட போறேன் உன்னையும் அழச்சூட்டு போறேன்’’ அவர் சொல்லி முடிக்கவில்லை ‘’ஓ’’ வென அழுகை வெளிப்பட்டது கோகிலாவிடமிருந்து. கீர்த்தியும் கோகிலாவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

’’அழாத கோகிலா, கீர்த்திய அவங்க அம்மா பெங்களூர் அழச்சூட்டு போகப் போறாள், நீங்க ரெண்டு பேரும் எப்ப திரும்ப ஒருத்தர ஒருத்தர் பாக்கப் போறேள்னு அந்த செலுவ நாரயணஸாமிக்கு கூட தெரியாது’’

2016 ஆம் வருடம். சென்னை, மே மாத உச்சி வெயில் கோகிலாவின் மண்டையை பிளந்தது.. வியர்வை வீழ்ச்சி தலையிலிருந்து இறங்கியது. ஏழ்மை அவளை எலும்புக் கூடாக்கியிருந்தது. மனதுக்குள் நினைத்தாள் எழுபத்தியோரு வயது ஆன அவளை கீர்த்தி அடையாளம் கண்டு கொள்வாளா ? சரி கீர்த்தி எப்படி இருப்பாள். அவள் பணக்காரி, தன்னைப் போல் அல்லாமல் அழகு சிகரமாக இருப்பாள் என நினைத்து சிரித்தாள். உடன் வந்த மகன் அவள் புன்முறுவலைக் கண்டு வியந்தான்

அம்மா இந்த வெயில்ல கூட உன்னால சிரிக்க முடியறதா ?

மகன் தேசிகன் கேட்டரிங் வேலை செய்பவன். நாற்பது வயதில் திருமணம் செய்து கொண்டான். அவன் மகன் கல்லூரியில் சேர பெரும் தொகை தேவைப்பட்டது. அப்பா முடக்குத் துறை காணி நிலம் விற்று அவளை ஒரு கோவில் அர்ச்சகருக்கு மணம் முடித்து வைத்தார். அர்ச்சகர் வேலை, சமையல் வேலை இதில் எல்லாம் இருந்து மற்ற அந்தணர்களை போல் தன் வாரிசுகளும் விடுதலை பெற வேண்டும் என கோகிலா நினைத்தாள். உடனே முடிவு எடுத்தாள். ஏன் சென்னைக்கு சென்று ஜெயகீர்த்தியை பார்த்தால் என்ன ? அவள் பெரிய பதவியில் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டாள். எப்படியேனும் சிரமப்பட்டு அவளை கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்தாள்.. ஆனால் கீர்த்தியை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. மாண்டியா மாவட்ட ஜெயகீர்த்தி என் நெருங்கிய உறவு அவளுக்கு புளியோதரை ஊட்டி விட்டிருக்கேன் என சொன்னதும் அவளுக்கு ஒரு முகவரி கொடுத்தனர், இப்போது அந்த முகவரிக்கு போய் கொண்டிருக்கிறாள்.

‘’அம்மா நான் விசாரிச்சேன் இந்த இடத்துக்கு மட்டுமில்ல சென்னையில எந்த இடத்துக்கும் ஆட்டோவிலதான் போகனும்,’’

ஏண்டா பஸ்ல போகலாமில்ல

இல்லம்மா இந்த முகவரிக்கு பஸ் போகாது

’’நம்ம ஜெயகீர்த்தி பஸ் கூட போகாத இடத்திலயா குடியிருக்கா’’

’’அம்மா சும்மா இரு’’ தேசிகன் எதிரே வந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினான். தாயும் மகனும் ஆட்டோவில் ஏறினர். போக வேண்டிய முகவரியை கூறினான் தேசிகன். ஆட்டோ ட்ரைவர் திரும்பி திரும்பி அவர்களை பார்த்தான்.

‘’அம்மா ஜெயகீர்த்தி உங்களுக்கு உறவா ?

ஆமாப்பா அத்த பொண்ணு மாமா பொண்ணு’’

புரியல்ல அம்மா

அவ எனக்கு அத்த பொண்ணு, நான் அவளுக்கு மாமா பொண்ணு,

புரியல்லம்மா

என் அப்பாவோட தங்க கீர்த்தியோட அம்மா

அப்படி சொல்லுங்க இப்ப புரியுது

’’சரி ஜெயகீர்த்தி அம்மா யாருன்னு தெரியுமா’’

என் அத்த பொண்ணு, அன்னைக்கு அவ அப்பா அகத்துல சாப்பாடு கூட சஷ்டம், என் அப்பா அவள மேலு கோட்டையிலிருந்து அழச்சுட்டு வருவார்’’…….மேலும் பேச முடியாமல் கோகிலா அழுதாள், சக்தி இல்லாமல் அழுதாள். தேசிகன் கடிந்து கொண்டான்,

‘’ அம்மா சொல்லிவிட்டு அழு’’

அங்க கீர்த்தி அப்பா அகத்துகல அவர் போன பிறகு வசதி போஷாக்கு பத்தாது, அப்பா அவள எங்க அகம் கூட்டி வந்ததும் அவள் பசியோட இருப்பாள் நான் தான் அவளுக்கு புளியோதர ஊட்டி விடுவேன் “”

பத்து நிமிடங்களில் ஆட்டோ அந்த பெரிய மாளிகை முன் நின்றது. தேசிகன் ஒரு முடிவு எடுத்தான், ‘’அம்மா நீ இங்கயே இரு, நான் பேசிட்டு வருவேன்’’

’’சரி தேசிகா, சொசலெ கோகிலான்னு சொல்லு’’

’’சரிம்மா’’

தேசிகன் நேரே கேட் அருகே சென்றான், ஏரளமான காவலர் கூட்டம். அவனுக்கு வியப்பிலும் வியப்பு. சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கோமா என அஞ்சினான். ஒரு போலீஸ் அதிகாரியிடம் சொன்னான்

நான் கர்நாடக மாநிலம் மைசூர் பக்கத்துல சொசலெ கிராமம்; ஜெயகீர்த்தி எங்களுக்கு நெருங்கிய உறவு என் அம்மா சொசலெ கோகிலா அவங்கள பார்க்கனும்’’

’’அம்மா எங்க’’

’’அங்க ஆட்டோவுல’’

அந்த உயர் போலீஸ் அதிகாரி ஆட்டோ அருகே சென்று குனிந்து உள்ளே அமர்ந்திதிருந்த மூதாட்டியை பார்த்தார். பின் கேட் உள்ளே சென்று ஒரு உ;ள் தொலை பேசியை எடுத்து மேடம் சந்திரகலாவுடன் பேசினார், பதில் எதிர் முனையிலிருந்து வந்தது

‘’இப்படி சொல்லிட்டு நிறைய பேர் வராங்க எப்படி நம்புறது’’

‘’இல்லம்மா நான் அட்டோகிட்ட போய் பார்த்தேன், அப்படியே அம்மா போலவே இருக்காங்க’’

அவங்க பேர் என்னன்னு சொன்னாங்க’’

சொசலெ கோகிலா

சரி நான் அம்மாகிட்ட கேட்டுட்டு சொல்றேன் அப்படியே லைன்ல இருங்க’’

அம்மாவிடம் பயபக்தியுடன் சென்றார் சந்திரகலா

அம்மா கர்நாடக மாநிலத்தில இருந்து சொசலெ கோகிலா வந்துருக்காங்க உங்கள் பாக்கனுமா

அம்மா தன் நெஞ்சை பிடித்துக் கொண்டார், கண்களை மூடிக் கொண்டார், ஈர சிலுசிலுப்புடன் காற்று வந்தது, முகத்தில் அடித்தது, முடக்குத் துறை நீர் நிலை கண் முன் வந்தது. மூச்சுக் காற்று அனலாக வந்தது. காவிரி ஏரியாக காட்சி தரும் இடம், ஒரு பசி பீடித்த குழந்தைக்கு ஒரு பெரிய பெண் சோறு ஊட்டி விடும் காட்சி வருகிறது. அம்மா கூவினார்

’’சந்திரகலா அந்த பேர்ல எனக்கு யாரும் உறவினர் கிடையாது’’

’’சரிங்கம்மா ’’

சந்திரகலா செக்யூரிட்டியுடன் பேச உள் தொலைபேசியை எடுத்தார்,

’’சந்திரகலா இரு இப்ப பேசாத, அந்த சொசலே கோகிலாவுக்கு இரண்டு லட்சம் கொடு, யாரோ எழைகள், பிழைச்சிட்டு போகட்டும்.’’

இரண்டு லட்சம் பணத்துடன் சந்திரகலா வாயிலுக்கு வந்தார். உயர் காவல் அதிகாரியை பார்த்து சொன்னார்

’’அந்த அம்மா சொசலெ கோகிலா எங்க இருக்காங்க’’.

சந்திரகலாவை பார்த்து சல்யூட் அடித்தவாறே காவல் அதிகாரி சொன்னார்

’’அந்த அம்மா வெளியில ஆட்டோவுல இருக்காங்க இவர் அவங்க மகன்னு நினைக்கிறேன்’’

சந்திர கலா தேசிகனை பார்த்து சொன்னார்

’’உங்க அம்மாவ கூட்டு இங்க வா’’

தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்து தேசிகன் கேட்டுக்கு வெளியே ஆட்டோவில் இருந்த அம்மாவிடம் போனான், சொன்னான்

‘’அம்மா வா உள்ள கூப்பிடறாங்க’’

கோகிலா அட்டோவில் இறங்கியவாறே சொன்னாள்

’’எனக்குத் தெரியும் நான் ஊட்டி வளர்த்த கீர்த்தி என்னைய மறக்ககமாட்டாள்’’

கோகிலாவும், தேசிகனும் சந்திரகலா முன் நின்றனர். சந்திரகலா கனிவுடன் கூறினார்

’’பாருங்கம்மா நீங்கதானே சொசலெ கோகிலா’’

ஆமா என தலையசைத்தார் கோகிலா

’’அம்மாகிட்ட சொன்னேன், உங்க பேர்ல அவங்களுக்கு யாரும் உறவினர் கிடையாதுன்னு சொன்னாங்க’’

கோகிலாவின் முகம் வெளிறியது, கண்களில் ஒரு அனல் கொதித்தது. சந்திரகலா தொடர்ந்து சொன்னார்

’’ஆனால் அம்மா உங்களுக்கு செலவுக்கு இரண்டு லட்சம் கொடுக்க சொன்னாங்க, இதோ இரண்டு லட்சம் வாங்கிக்கோங்க’’

’’கோகிலா இரண்டு அடி பின் வைத்தாள், தேசிகன் கை பிடித்தாள், வா தேசிகா போகலாம் அட்டோ நிக்குதா’’

’’ஆமாம் அம்மா அட்டோவ காத்திருக்க கொன்னேன்’’

சந்திரகலா முன் அடி அடுத்து வைத்தார் மீண்டும் சொன்னார், ’’ இரண்டு லட்சம் வாங்கிக்கோங்க’’

சக்தி அற்ற நிலையிலும் நடுங்கும் உடலுடன் கர்ஜனை குரைலில் கோகிலா பேசினார்

’’நான் அத்த பொண்ண பாக்க வந்த மாமா பொண்ணு எனக்கு அவங்க உறவு இல்லைன்னா இந்தப் பணம் இரண்டு கோடியா இருந்தாலும் வேண்டாம் தூ’’

துப்பிய பிறகு தேசிகனுடன் வெளியே சென்று ஆட்டோவில் ஏறினார் சொசலெ கோகிலா.

– இராமன் முள்ளிப்பாளையம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *