Interview with Nivedita Louis on the Chennai Book Fair - Brinda Srinivasan சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நிவேதிதா லூயிஸுடன் நேர்காணல் – பிருந்தா சீனிவாசன்

சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நிவேதிதா லூயிஸுடன் நேர்காணல் – பிருந்தா சீனிவாசன்

இப்படியும் எழுதலாம் வரலாறு!
நிவேதிதா லூயிஸ்

நிவேதிதா லூயிஸின் ‘முதல் பெண்கள்’ கட்டுரைத் தொகுப்பின் மூலம் தொடங்கிய எழுத்துப் பயணம், ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’, ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’, ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ (இரண்டு தொகுதிகள்) என்று அடுத்தடுத்து நகர்ந்துகொண்டிருக்கிறது. நிவேதிதா லூயிஸுடன் உரையாடியதிலிருந்து…

பெண்கள் பெரும்பாலும் கவிதைகளையும் புனைவுகளையுமே எழுதுகிறார்களே?
பெண்கள் புனைவைத் தாண்டி வெளியே வர வேண்டும். ஆண், பெண் உறவு நிலை குறித்து மட்டுமே எழுதும்போது ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடக்கூடும். புனைவல்லாதவற்றை எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டும், கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அது நம் அறிவை விரிவாக்கும். ராஜம் கிருஷ்ணன் போன்ற வெகுசில பெண் எழுத்தாளர்களே கள ஆய்வு செய்து கதை எழுதினார்கள். ஆங்கிலேயர்கள் எழுதியவற்றைத்தான் இப்போதுவரை வரலாறு எனப் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தப் படைப்புகளில் காலனியாதிக்கக் கண்ணோட்டமே மேலோங்கியிருக்கும். சதாசிவபண்டாரத்தார், மயிலை சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் எழுதிய வரலாற்றைப் படித்தப்போதுதான் நாட்டார் கண்ணோட்டத்துடன் வரலாறு எழுதப்படுவதன் அவசியம் புரிந்தது. பெண்கள் பார்வையில், பெண்களையும் உள்ளடக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதற்காகவாவது பெண்கள் புனைவிலிருந்து வெளியேவர வேண்டும்.

எழுத்துலகில் ஆணுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் பெண்ணுக்கும் கிடைக்கிறதா?
சென்னை புத்தகக்காட்சியில் பல அரங்குகளில் ஆண் படைப்பாளிகளின் சிலைகளும் பெரிய அளவிலான உருவப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. பெயருக்குக்கூடப் பெண்களை வைக்க வேண்டும் என்று ஏன் யாருக்கும் தோன்றுவதில்லை? முற்போக்குக் கருத்துகளைப் பேசுகிறவர்கள்கூடப் பெரியாரின் சிலையை மட்டுமே வைக்கிறார்களே ஒழிய, கருத்தியல்ரீதியாக அவருக்கு இணையாக நின்று செயல்பட்ட மணியம்மையின் சிலையை ஏன் வைப்பதில்லை? திராவிடக் கொள்கையை உயர்த்திப் பிடித்த சத்தியவாணி முத்துக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரும்பணியாற்றிய அம்புஜம் அம்மாளுக்கும்கூட நாம் சிலை வைக்கவில்லை.

பெண்களின் வாசிப்புத்தளம் விரிவடைந்திருக்கிறதா?
உண்மையில் பெண்களிடையே தேர்ந்தெடுத்த வாசிப்பு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் எதை வாசிக்க வேண்டும் என்பதையும் பெண்கள் வாசிக்க வேண்டுமா என்பதையும் ஆண்களே முடிவுசெய்கிறார்கள்.

உங்களின் ‘முதல் பெண்கள்’ நூலை எழுதுவதற்கான தூண்டுதல் எது?
இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த 20 பெண்கள் குறித்துப் பெண்கள் இதழொன்றுக்காக எழுத ஒப்புக்கொண்டேன். இருவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி எழுதிவிட்டு, மூன்றாவதாக கமலா சத்யநாதன் குறித்து எழுதத் தொடங்கினேன். அப்போதுதான் அவரைப் பற்றிப் பல அரிய தகவல்கள் கிடைத்தன. கமலா சத்யநாதன் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்காக ஆங்கிலத்தில் பத்திரிகை நடத்தியிருக்கிறார். ஆனால், அவரைப் பற்றி ஒரேயொரு ஆய்வுக் கட்டுரை தவிர, வேறெந்தத் தகவலும் இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது.

அவர் நடத்திய இதழ்கள் சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருக்கும் தகவல் அறிந்து அவற்றை வாசித்தேன். முதல் இஸ்லாமியப் பெண் விமான ஓட்டுநர், உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி, முதல் பெண் வயலின் கலைஞர் என்று ஒவ்வொரு துறையிலும் தடம்பதித்த முதல் பெண்கள் குறித்து அப்போதே அவர் அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகுதான் தென்னிந்திய அளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் தடம் பதித்த முதல் பெண்கள் குறித்துக் கள ஆய்வு செய்து எழுத வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. அதற்கான தேடலும் பயணமும் என்னை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றன.

யாருடைய எழுத்துகள் உங்களுக்கு முன்மாதிரி?
பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் எனக்குப் பெரிய முன்மாதிரி. ஆ.சிவசுப்பிரமணியன், தென்தமிழகத்தில் கத்தோலிக்கம் என்பதை முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்த பேராசியர் ஜான், ராஜம் கிருஷ்ணன் போன்றோரும் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டிகளே. போக்குவரத்து, தங்குமிடம், தகவல்தொடர்பின்மை என்று பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் அவர்கள் அந்தக் காலத்தில் ஆய்வு செய்திருப்பார்கள். ஆனால், நாம் இன்று இவ்வளவு தொழில்நுட்ப வசதிகளை வைத்துக்கொண்டு குறைந்தபட்ச பயணங்களைக்கூட மேற்கொள்ளவில்லையென்றால் எப்படி?

பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
நன்றி: இந்துதமிழ் நாளிதழ்

Interview with Justice Chandru on the Chennai Book Fair - Asaithambi சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நீதிநாயகம் சந்துருவுடன் நேர்காணல் - ஆசை

சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | நீதிநாயகம் சந்துருவுடன் நேர்காணல் – ஆசை

ஜெய்பீம் எதிர்ப்பாளர்கள் தேர்தலில் காணாமல் போனார்கள்
 – நீதிநாயகம் சந்திரு

இந்திய நீதித்துறையில் எளிய மக்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் கே.சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில் கிட்டத்தட்ட குறுகிய காலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பு கூறி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய வழக்கைக் கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் பெருவெற்றி பெற்றது. இப்போது அவருடைய சுயசரிதையான நானும் நீதிபதி ஆனேன்’ நூல் (அருஞ்சொல் வெளியீடு) வெளியாகி சென்னை புத்தகக்காட்சியில் அதிகம் பேசப்படும் நூல்களில் ஒன்றாகியிருக்கிறது.

பொதுவாக சுயசரிதை என்றால், தனிப்பட்ட வாழ்க்கையை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் சுயசரிதையை உங்கள் பணிகள் வழியாகவே எழுதியிருக்கிறீர்கள். ஏன்?
ஏற்கெனவே சிறிய அளவில் சில பத்திரிகைகளில் என்னுடைய ஆரம்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இப்படித் தனிப்பட்ட சம்பவங்களின் வாத வாழ்க்கைக் கதையை எழுதுவதைவிடவும், ஒரு சட்ட மாணவனாக வழக்குரைஞராக, நீதிபதியாக என்னுடைய அனுபவங்களை எழுதுவது சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. குறிப்பாக, மனித உரிமைகள் சார்ந்த செயல்பாடுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அதேபோல, நான் நீதிபதியாகச் செயல்பட்ட விதத்தைப் பலரும் பல விதமாகப் பரந்துகொண்டிருந்தார்கள். அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றியது முக்கியமாக நீதிபதிகள் நியமனம் குறித்து நிறையப் பேசப்படவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்த நூல் படைக்கப்பட்டது.

பத்தகத்தை வாசிக்கும்போது, நீதித் துறையின் மீதான நம்பிக்கை மேலும் பிரகாசிக்கிறது. ஆனால், சமூகத்துக்கு இப்படி ஒரு நற்பிக்கையை உருவாக்கும் நீங்களே, பத்தகத்தில் வழக்கறிஞர் தொழில் கசந்து போனதாக எழுதியிருக்கிறீர்கள். இந்த முரண் ஏன்?
சாமானிய மக்களுக்குச் சட்ட அணுகுமுறையிலும், நீதித்துறை மீதும் நம்பிக்கைகள் அதிகமாகும் காலகட்டத்தில், வக்கீல்கள் தங்களுடைய தொழில் தர்மத்தைத் தவிர்த்துவிட்டு வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்ததுதான் அந்தத் தொழில் மீது கசப்பு ஏற்பட காரணம் ஆனது சக வழக்குரைஞர்கள் மீதான அக்கறையும் ஆதங்கமுமே அப்படி ஒரு கட்டுரையாக வெளிப்பட்டிருக்கிறது.

மாணவர் உதகுமாரின் மரணம்தான் நிதித் துறையில் நீங்கள் நுழையக் காரணமாக இருந்தது. உதயகுமாருக்கு நீதி கிடைத்திருப்பதாக எண்ணுகிறீர்களா?
உதயகுமாருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் பெரிய அளவில் மாணவர்களைத் திரட்டிக் கொடிப் பிடித்தபோதும், அவரது தந்தையே அப்பிரச்சினையில் மறுதலித்து வாக்குமூலம் அளித்ததுதான் நீதி கிடைப்பதற்கான பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. இருப்பினும், அந்த அநீதிக்கு எதிராகத் தமிழக மாணவர் சக்தி ஒன்றுதிரண்டது பெரிய வெற்றி.

நூலில் நெருக்கடி நிலை தொடர்பான அத்தியாயத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அனுபவித்த சித்ரவதைகளைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளீர்கள். அது அந்தக் காலத்தை வாசகர்களின் கண்முன் அப்படியே கொண்டுவருகிறது. சட்டரீதியாக இந்தியா இன்னொரு நெருக்கடி நிலையைச் சந்திக்கும் அபாயத்திலிருந்து விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறீர்களா?
நெருக்கடி நிலைக்கு எதிராக ஜனநாயக நடைமுறையைக் கோரி அனைத்து சக்திகளும் அரசியல்ரீதியாகத் திரண்டதன் விளைவாக 1977-ல் ஜனதா கட்சி ஒன்றிய அரசில் ஆட்சியைப் பிடித்தது. அதன் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் இரண்டு முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அரசின் அத்துமீறலுக்கு எதிராக நீதிமன்றங்களை அணுகுவதை ஒன்றிய அரசால் தடுக்க முடியாது என்றும், அடிப்படை உரிமைகளைத் தள்ளி வைக்க முடியாது என்றும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஒன்றிய அரசு கலைக்க முற்பட்டாலும், அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்ற மற்றொருதிருத்தமும் கொண்டுவரப்பட்டது. அதேபோல, ஏடிஎம். ஜபல்பூர் வழக்கு தீர்ப்பு தவறு என்று அறிவிக்கப்பட்டு, ‘நெருக்கடி நிலையானாலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறுவதைத் தடுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தக் காரணங்களால், மீண்டும் ஒருமுறை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டாலும், அதன் விளைவுகள் பழைய பாணியில் இருக்க முடியாது.

அமைப்பின் கடுமையான விமர்சகர் நீங்கள். அப்படிப்பட்ட ஒருவரையும் உள்ளடக்கியது இந்திய நீதித் துறையின் நல்ல விஷயம். இதைப் பொதுவான போக்கு என்று சொல்ல முடியுமா அல்லது சந்துரு ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறீர்களா?
அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு முதல் 20 வருடங்களில் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொத்துரிமை வழக்குகளில் அளித்த தீர்ப்புகளானவை மக்களின் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கின்றன என்ற விவாதம் பொதுவெளிகளில் எழுந்தபோது நீதித் துறை நியமனங்களைப் பற்றி முதல் தடவையாக கவனம் எழுப்பப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் மீது உண்மையிலேயே நம்பிக்கையுள்ளவர்களையும் சமூக நீதியில் நாட்டம் கொண்டவர்களையும் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதையொட்டி, பதவிக்கு வந்த நீதிபதிகள் விட ஆர் கிருஷ்ணய்யர், பி. என். பகவதி, ஒ. சின்னப்பரெட்டி, டி.ஏ.தேசாய் அக்கடமையை சரிவரச் செய்தனர். ஆனால், அதற்குப் பிறகு அப்படிப்பட்ட நியமனங்களில் மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டு நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் கொலிஜிய நடைமுறை நிறைவேற்றப்பட்டது. இதனால் சிறப்பான நியமனங்கள் நடைபெறுவது தடைபட்டது. இந்நியமன முறையில் ஒரு விதிவிலக்குகள் இருந்திருக்கலாம். ஆனால், ‘நீதித் துறை சுதந்திரம்’ என்ற பெயரில் இப்படிப்பட்ட நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதே உண்மை. இதை விவரிக்கும் விதமாகவே இந்தப் பத்தகத்தில் என்னுடைய நியமனத்தில் நடைபெற்ற பல்வேறு அவலங்களையும் பட்டியலிட்டுள்ளேன். இதனால் இந்த நியமன நடைமுறையை மாற்றுவதற்கு இந்நூல் உதவி செய்யும் என்பது என்னுடைய நம்பிக்கை.

இந்திய நீதியமைப்பில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறீர்கள். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தற்போது வரை பார்க்கும்போது நீதித் துறையின் சுதந்திரம் பலப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா, பலவீனப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
நீதித் துறையின் வீச்சும், செயல்பாடுகளின் தாக்கமும் பெருமளவில் கூடியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அதிலுள்ள நீதிபதிகளின் தனிப்பட்ட அணுகுமுறைகள் மக்களை அயர்ச்சியடையவே வைக்கின்றன. மேலும், நீதித் துறைக்கு சமூகநீதியின்மீது ஒருமித்த கருத்து இல்லாததும், அரசின் அதிகார மீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதில் சுணக்கம் இருப்பதும் மக்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது. ஆயினும் அங்கும் இங்குமாக ஒருசில ஒளிக்கற்றைகள் தெரிந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை நம்பிக்கை நட்சத்திரங்களா அல்லது நொறுங்கிவிழும் வால்நட்சத்திரங்களா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.

உங்களுடைய வழக்கை முன்வைத்து எடுக்கப்பட்டஜெய்பீம்படத்துக்கு ஒரு பக்கம் பெரிய வரவேற்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் சர்ச்சையும் ஏற்பட்டது. காவலர் கதாபாத்திரம் மாற்றியமைக்கப்பட்டது போன்ற மாற்றங்கள் உங்களுக்குத் தெரிந்துதான் நடந்தனவா? இந்த சர்ச்சைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜெய்பீம்’ படம் நாடு தழுவிய வரவேற்பைப் பெற்றது ஒருபுறம் என்றால் ஒருசிலர் எவ்வித ஆதாரமுமின்றி அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முன்வந்தது துரதிர்ஷ்டமே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் காலச்சூழலில் அடித்துச் செல்லப்பட்டனர். எந்தத் திரைப்படம் வந்தாலும் அதற்கு ஆதாரமின்றி எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டம் இரண்டாவது தணிக்கை முறையொன்றை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே படத்தின் ஆரம்பத்தில் கூறியது போல், இப்படம் ராஜாக்கண்ணுவின் காவல்நிலைய சித்ரவதையால் ஏற்பட்ட மரண வழக்கை தழுவிய கதையாக இருப்பினும் படத்திலுள்ள சித்தரிப்புகள் கற்பனைதான் என்று கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆதாரமில்லாமல் சர்ச்சை எழுப்பியவர்களுடைய உண்மையான நோக்கம் நிறைவேறாததோடு நகராட்சித் தேர்தல்களில் அவர்கள் காணாமல்போனார்கள். மேலும், இப்படம் தமிழ்நாடு எல்லையைத் தாண்டி இந்தியா முழுவதும் பெரிய அலையை உருவாக்கியுள்ளது. அங்கெல்லாம் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடமேதும் இன்றி ஜெய்பீம் என்ற முழக்கம் அனைவரது உதடுகளில் ஒலித்துவருவதே இப்படத்தின் வெற்றி.

ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
நன்றி: இந்துதமிழ் நாளிதழ்

Interview with ‘Nizhal' Thirunavukkarasu on the Chennai Book Fair - R. C. Jeyanthan சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | ‘நிழல்’ திருநாவுக்கரசுடன் நேர்காணல் - ஆர்.சி.ஜெயந்தன்

சென்னை புத்தகக் காட்சியின் எண்ண சிதறல்கள் | ‘நிழல்’ திருநாவுக்கரசுடன் நேர்காணல் – ஆர்.சி.ஜெயந்தன்

தமிழகத் திரைப் படைப்பாளிகள் பின்தங்கிவிடக் கூடாது
   – நிழல் திருநாவுக்கரசு

திரையிடல், திரைப்படப் புத்தகங்கள், பயிற்சிப் பட்டறைகள். இந்தப் பயணம் எப்படி?
இம்மூன்றுமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. கிராமங்களுக்கு நல்ல படங்களைக் கொண்டுசெல்வது என முடிவெடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பல கிராமங்களில் திரைப்படக் குழுக்களை உருவாக்கினேன். அவர்களை இணைப்பதற்காகத்தான் ‘நிழல்’ தொடங்கப்பட்டது. செயலுக்கான முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘நிழல் – பதியம்’ இணைந்து ‘குறும்படப் பயிற்சிப்பட்டறை’களை தமிழ்நாடு முழுவதும் நடத்திவருகிறோம். இந்திய அளவில் 60 பட்டறைகள் என்பது ஆச்சரியமே! இதன் மூலம் இன்று 200 பேர் திரைத் துறையில் பணியாற்றிவருகின்றனர். 6,000 கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 10 வெற்றித் திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.

திரைப்படக் கலையை அதற்குரிய கல்வி நிறுவனங்களில் முறையாகப் பயில முடியாதவர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் மாற்றாக அமையும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக… குறிப்பாக கலை, தொழில்நுட்பம் குறித்துத் தாய்மொழியில் பதிப்பிக்கப்படும் நூல்கள் விரைந்து கற்றுகொள்ள உதவுகின்றன. தமிழில் முதன்முறையாக எடிட்டிங்தொழில்நுட்பத்தை ‘படத்தொகுப்பு – கலையும் அழகியலும்’ என்ற நூலாகக் கொண்டுவந்தோம். இது போலவே நடிப்பு, திரைக்கதை, கேமரா பற்றியும் வெளியிட்டோம். தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக்கின் ‘சினிமாட்டிக் உடல்கள்’, குறும்படம் மற்றும் ஆவணப்படத் தொகுப்பான ‘சொல்லப்படாத சினிமா’, ‘ஈரானிய சினிமா’ போன்றவை பெரிய வரவேற்பைப்பெற்றன. தமிழ் சினிமாபேசத் தொடங்கியபின் 1931முதல் 60 வரை வெளிவந்த படங்கள் பற்றி பல்வேறு இதழ்களிலிருந்து வந்த விமர்சனங்களைத் தொகுத்து ‘தமிழ் சினிமா விமர்சனம்’ என்கிற நூலை ஊடகத் துறை பேராசிரியர் சொர்ணவேலும் நானும் கொண்டுவந்திருக்கிறோம். இப்படி இன்னும் பல.

இன்றைய தமிழ்க் குறும்பட உலகை எப்படி மதிப்பிடுவீர்கள்?
உலகப் புகழ்பெற்ற பல இயக்குநர்கள் குறும்படம் எடுத்துக் கற்றுக்கொண்ட பிறகுதான் பெரிய படங்கள் எடுத்திருக்கிறார்கள். குறும்படம் எடுப்பதன் மூலம், ‘இதை நம்மால் செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கை முதலில் வரும். இன்று தமிழ்நாட்டின் குறும்படப் படைப்பாளிகள் எடுக்கும் பலபடங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துவருகிறது. தனா எடுத்த ‘மீனா’ என்கிற படத்துக்கு அமெரிக்காவில் பரிசு கிடைத்துள்ளது. வசந்த், முரளி திருஞானம், மருதன் பசுபதி, பாண்டியன் சூறாவளி, சரவணன் போன்றவர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.

திரைப்படங்களை, ஊடகங்களைப் புரிந்துகொள்வதற்கான மீடியா அப்ரீசியேஷன்பயிற்சி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெறும் கனவா?
அரசு கல்வித் துறைவழியாக முன்னெடுக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பல தனியார் கல்லூரிகளில் காட்சி ஊடகத் துறை மூலம் பயின்றுவரும் மாணவர்கள் அடிப்படையான ‘மீடியா திறனாய்வு’ பயிற்சி பெற்று வெளிவருவது ஆறுதல். நாங்கள் நடத்திவரும் குறும்படப் பயிற்சிப் பட்டறைகளில் படங்களைத் திரையிட்டுத் திறனாய்வுக் கலையை வளர்த்துவருகிறோம்.

திறன்பேசிகளைக் கொண்டு குறும்படமெடுக்கப் பயிற்சிஎன்கிற உங்கள் முன்னெடுப்பு எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
இந்திய அளவில் முதன்முறையாக ‘செல்போன் பிலிம் மேக்கிங்’ குறும்படப் பயிற்சியைத் திட்டமிட்டுள்ளோம். வரும் மார்ச் 7முதல் 10வரை சென்னை, பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் பாலையா தோட்டத்தில் நடத்தவிருக்கிறோம். பிரெஞ்சு இயக்குநர் ழான்-லுக் கோதார் (Jean-Luc Godard), “எல்லோரும் பேனா வைத்துக்கொள்வதுபோல கேமரா வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போதுதான் சினிமாவில் ஜனநாயகம் வரும் என்றார். திறன்பேசி கேமரா மூலம் அது இன்று சாத்தியப்பட்டுவருகிறது. பெரிய படங்கள்கூட இன்று திறன்பேசி கேமரா மூலம் எடுக்கப்பட்டு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்கின்றன. தமிழகப் படைப்பாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பட்டறை.

ஆர்.சி.ஜெயந்தன், தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

நன்றி: இந்து தமிழ்

புத்தகக் கண்காட்சியில் என் அனுபவம் – மருதன்

புத்தகக் கண்காட்சியில் என் அனுபவம் – மருதன்

My experience at the book fair - Maruthan புத்தகக் கண்காட்சியில் என் அனுபவம் - மருதன்

புத்தகத்துக்கு அப்பால்
– மருதன்

இளங்குளிர் விலகி, சூடு தொடங்கும்போது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகியிருக்கிறது. புத்தக எடிட்டிங் பணி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கண்கட்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு அநேகமாக நடக்காது என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் தேதி குறித்துவிட்டார்கள்.

புத்தகக் கண்காட்சி என்பது எப்போதுமே எனக்கு அரங்குக்கு வெளியிலிருந்துதான் ஆரம்பமாகிறது. சென்ற ஆண்டு இதே நடைபாதையில், ‘எதையெடுத்தாலும் ஐம்பது அரங்கில்’ அர்னால்ட் டாய்ன்பீயின் A Study of History சுருக்கப்பட்ட பதிப்பு (இரு பாகங்களில்) கிடைத்தது. அழகிய கையளவு கறுப்பு அட்டைப்பெட்டியில் இரண்டும் உறங்கிக்கொண்டிருந்தன. ‘ஒன்று அம்பது ரூபா. ஆனா, பெட்டிக்குள் இரண்டு புக் இருக்கு பார்த்துக்கிடுங்க’ என்றார் கடைக்காரர். ராய் போர்ட்டர் எழுதிய கேம்பிரிட்ஜ் மருத்துவ வரலாறு நூலையும் அவரிடம்தான் வாங்கினேன். ‘இதுல பாருங்க. அளவு இரண்டு மடங்கா இருக்கு. இது இரண்டு புக்குக்குச் சமம், பார்த்துக்கிடுங்க.’

இந்தமுறை பெரியசாமித் தூரனின் பாரதியும் உலகம் (வானதி பதிப்பகம், 1979), அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் (கவிதா) ஆகியவற்றோடு ஹெச்.ஜி. வெல்ஸின் The Invisible Man, தி மாடர்ன் லைப்ரரி பதிப்பு கிடைத்தது. ஆர்தர் சி. கிளார்க் நூலை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒரு நூலின் உள்ளடக்கம் போலவே அதனை யார் வெளியிடுகிறார்கள் என்பதும் முக்கியமானது என்பதை உணர்ந்துகொண்ட காலம்முதல் எனக்குப் பிடித்த பதிப்பகங்களில் ஒன்றாக தி மாடர்ன் லைப்ரரி இருந்து வருகிறது. செம்பு வண்ணத்தை அவர்களைப் போல் வேறு யாரும் இவ்வளவு அழகாகப் பயன்படுத்திப் பார்த்ததில்லை. பெங்குவினுக்கு காவி எப்படியோ அவர்களுக்கு செம்பு.

உள்ளே நழைந்ததும் முதலில் பிரிட்டிஷ் கவுன்சில் அரங்குக்குள் நுழைந்தேன். அண்ணா சாலையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஒரு காலத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குப் பின்னால் சத்தம் போடாமல் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த நூலகம். முதல் முறை போனபோது நிறைய முறை சுற்றிச் சுற்றி வந்த பிறகே கண்டுபிடிக்கமுடிந்தது. குளிரூட்டப்பட்ட அறை, அயல் இதழ்கள், டிவிடி, கணிப்பொறி, இணைய வசதி, புத்தகங்கள் என்று ஒரே மிதப்பாக இருக்கும்.

வளாகத்துக்குள் சிறிய உணவகமொன்று இருக்கிறது. இயந்திரத் தேநீர், காபியோடு பிஸ்கெட், கட்லட், சமோசா மூன்றும் கிடைக்கும். ஒரு காபியை எடுத்துக்கொண்டு வெளியிலுள்ள படிக்கட்டில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது பிரிட்டனுக்கே போய்விட்டது போல் தோன்றும். தோலில் ஒட்டிக்கொண்டிருக்கும் குளிர் மறைந்து வெயில் சீண்டும்போது உள்ளே நுழைந்தால் மாலைவரை இருக்கலாம்.

அப்போது சேகர் என்றொரு ரயில் நண்பர் எனக்கிருந்தார். பட்டாபிராம் சைடிங்கிலிருந்து கிளம்பும் அவர் ரயிலில் ஆவடியில் நான் ஏறிக்கொள்வேன். மாலை சென்ட்ரலில் சந்தித்து ஒன்றாக வீடு திரும்புவோம். நார்மன் லூயிஸின் பர்மா பயண நூலை ஒருமுறை எனக்குப் படிக்கக் கொடுத்தார். பிகோ ஐயரின் Tropical Classical நூலைப் படிக்காவிட்டால் உயிர் வாழ்வதில் பொருளே இல்லை என்பதுபோல் ஒருமுறை அவர் சொல்லப்போக (அவர் படித்துவிட்டு மற்றவர்கள் படிக்காத எந்தப் புத்தகத்தையும் அவர் இப்படித்தான் சொல்வார்), மறுவாரமே பிரிட்டிஷ் நூலகத்தில் அதைக் கண்டுபிடித்தேன். கிரஹாம் கிரீன், பீட்டர் மாத்தைஸன், கிம் ஃபில்பி, எமர்சென், தொரோ என்று பலரை முதல்முறையாக அல்லது நெருக்கமாக அறிந்துகொண்டது அந்நூலில்தான். காற்புள்ளியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அவருடைய எல்லா நூல்களையும் அதன்பின் தேடிப் படித்துவிட்டேன் என்றாலும் இன்றுவரை டிராபிகல் கிளாசிக்கல் மட்டும் என் கண்ணில் இதுவரை படவில்லை.

நார்மன் லூயிஸ் ஆம்னிபஸ் பதிப்பையும் அதே நூலகத்தில் ஒரு நாள் கண்டுபிடித்தபோது பிரிட்டிஷ் கவுன்சில் எனக்கு நெருக்கமான இடமாக மாறிவிட்டது. அந்தப் பெரிய கெட்டி அட்டைப் புத்தகத்தை எடுத்து வந்து நான் படிக்கும் முன்பே சேகரிடம் கொடுத்து, ‘பத்து நாளில் தந்துவிடுங்கள், இல்லாவிட்டால் ஃபைன் போட்டுவிடுவார்கள் அண்ணா’ என்று சொன்னது நினைவிலிருக்கிறது. அதன் பிறகுதான் அவர் வேர்கடலை பொட்டலத்தை என்னோடு இயல்பாகப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். ஜன்னல் இருக்கையையும் அவ்வப்போது எனக்கு விட்டுக்கொடுத்துவிடுவார். ‘Les Miserables’ படிக்காத அனைவரும் நடைபிணங்கள்’ என்றொருநாள் அவர் சொன்னபோது, ‘அடுத்தது அதுதான்’ என்று சத்தியம் செய்தேன். உயிரே போனாலும் சுருக்கப்பட்ட எந்தப் பதிப்பையும் படிக்காதே என்று இன்னொரு நாள் அறிவுறுத்தினார். மீறி படிப்பவர்களின் ரத்தத்தை டிராகுலா வந்து உறிஞ்சும் என்று மட்டும்தான் சொல்லவில்லை.

அலமாரியிலிருந்து அகற்றப்பட்ட பழுதடைந்த புத்தகங்களை மிகவும் விலை குறைத்து விற்பனைக்கு வைக்கும் வழக்கம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இருந்தது. ஆண்டுக்கொருமுறையோ இருமுறையோ இவ்வாறு நடக்கும். வெயில் வந்து விழும் தாழ்வாரம் போலிருக்கும் இடத்தில் இந்தப் புத்தகங்களை வைத்திருப்பார்கள்.

தாக்கரே, பைரன், விட்மேன், டிக்கன்ஸ் என்று பல நூல்கள் வாங்கினேன். ஆர்.கே. நாராயணின் Writerly life புத்தகம் இங்கே வாங்கியதுதான். இன்றுவரை இதை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை. எரிக் ஹாப்ஸ்பாமின் சுயசரிதையை 100 அல்லது 150 ரூபாய்க்குப் பார்த்தபோது கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. அதற்கு முந்தைய வாரம்தான் அந்நூலை முழுக்க நகலெடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து வைத்திருந்தேன். வாங்குவதா, வேண்டாமா என்று மாபெரும் விவாதமொன்றை அங்கேயே நிகழ்த்திவிட்டு, வேண்டாம் என்று வந்துவிட்டேன். அதன்பின் ஏதோ ஒரு நாள் அந்தப் புத்தகம் கனவில் வந்தது என்று நினைக்கிறேன். வாழ்நாளில் இனி ஸ்பைரல் பைண்டிங் புத்தகம் படிக்கக்கூடாது என்றொரு முடிவை அன்று எடுத்து, குறைந்தது ஒரு மாதம் கடைபிடித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஒருமுறை கிரஹாம் கிரீனின் ஆறேழு கெட்டி அட்டைப் புத்தகங்களை (பாட்லி ஹெட்) மொத்தமாக வீட்டுக்குத் தூக்கமுடியாமல் தூக்கி வந்தேன். என்னென்ன தலைப்புகள் என்று நினைவில் வைத்திருந்து மறுநாள் சேகரிடம் சொன்னபோது, அமைதியாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொன்னார். ‘கிரஹாம் கிரீன் என்றால் ‘The Quite American’. அதை விட்டுவிட்டு என்னென்னவோ வாங்கியிருக்கிறாயே!’

பிரிட்டிஷ் கவுன்சில் நூலக அரங்கில் பழுதடைந்த நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தங்கை ஆஸ்கர் வைல்ட் தொகுப்பொன்று வாங்கிக்கொண்டார். In Their Own Words : British Women Writers and India 1740-1857, ஜேன் மோரிஸின் Hong Kong, தீர்த்தங்கர் ராயின் The Economic History of India உள்ளிட்ட நூல்கள் வாங்கினேன். பயண நூல்களில் இன்றுவரை நான் திளைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணமான சேகரை நினைத்துக்கொண்டே அரங்கிலிருந்து வெளியில் வந்தேன். ஒரு நல்ல நூலை அதைப் பரிந்துரைத்தவரோடு சேர்த்தே நாம் நினைவில் வைத்துக்கொள்கிறோம்.

கி. ராஜநாரயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியை மிகச் சமீபத்தில்தான் படித்தேன் என்று சொல்வதற்குக் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. கி.ரா. தலைமைத் தொகுப்பாளராக இருந்து சாகித்திய அகாதெமியில் வெளியிட்ட ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ நூலின் ஒரேயொரு அட்டைச் சிறிதளவு தளர்ந்திருக்கும் பிரதியை அவர்கள் ஒட்டி வைத்திருக்கும் குறைவான விலையைவிடவும் விலை குறைத்துக் கொடுத்தார்கள். ஒரே பிரதிதான் பாக்கி இருந்தது. அதைத் தூக்கி முதுகுப்பையில் போட்டுக்கொண்டபோது, கி.ராவைப் படிக்காத உலகின் கடைசி மனிதனின் பிரதி என்று அது சொல்வதுபோல் இருந்தது.

புதிய, பழைய ஆங்கில நூல்களை மலை, மலையாகக் குவித்து வைத்திருக்கும் (பெயரை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத) அரங்கங்கள் சிலவற்றுக்குச் சென்று வந்தேன். The Inner Life of Empires (ஒரு குடும்பத்தின் கதையாகத் தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரலாறாக வளரும் விருதுபெற்ற நூல்), Classics of Western Philosophy (Edited by Steven M. Cahn, ஆயிரம் பக்கங்களைக் கடந்த பெரிய தொகுப்பு), Modernity of Slavery (காலனிய காலத்து கேரளாவும் தலித் மக்களும்) உள்ளிட்ட புத்தகங்களைப் புதினா, கொத்துமல்லி போல் ‘மூன்றெடுத்தால் 200’, ‘நான்கெடுத்தால் 400’ என்று கூறு போட்டு வைத்திருந்தார்கள்.

நான் சமீபத்தில் கன்னிமாராவிலிருந்து எடுத்துப் படித்த Beyond the Englightenment (சில முக்கிய சமூகக் கோட்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நூல்), லத்தீன் அமெரிக்கப் புரட்சிகளின் வரலாற்றைக் கலையின் மூலம் விவரிக்கும் பெரிய, அழகிய படங்கள் கொண்ட ஒரு நூல் (Art and Revolution in Latin America 1910-1990, David Craven) இரண்டையும் இதே போன்ற வேறொரு அரங்கில் சேகரித்தேன்.

ஒவ்வொரு பிடிஎஃப் கோப்பும் ஓர் அச்சுப் புத்தகமாக மாறும் கனவைத் தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அசோகர் நூலுக்காக வாசித்துக்கொண்டிருந்தபோது ஹிரியண்ணாவின் இந்தியத் தத்துவத்தின் தமிழாக்கத்தை இணையத்தில் தேடியெடுத்தேன். சில ஆங்கில, சமஸ்கிருதப் பதங்களைத் தமிழில் எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்று சரி பார்க்க விரும்பினேன். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் அரங்கில் ஹிரியண்ணாவின் இந்தியத் தத்துவத்தைக் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. நீலகண்ட சாஸ்திரி, வின்சென்ட் ஸ்மித், மார்டிமர் வீலர் என்று பலருடைய நூல்களை மலிவு விலையில் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். தயாரிப்பும் நன்றாக இருக்கிறது. வரலாறு போக, வ.உ.சி., தொ.மு.சி. ரகுநாதன், திருக்குறள், கால்டுவெல் என்று புதிய பதிப்புகள் நிறைந்திருக்கின்றன.

ஒரு பார்வையில் சென்னை நகரம் நூலில் ‘மிக்க அன்புடன், அசோகமித்திரன். சென்னை, 27.05.2003’ என்று ஆசிரியர் கையெழுத்திட்டிருந்ததை வீட்டுக்கு வந்து பிரித்த பிறகே கவனித்தேன். எதிர்பாராத வியப்புகளைப் பழைய புத்தகங்கள் மட்டுமே ஏற்படுத்துகின்றன.

எப்போது வேண்டுமானாலும் எளிதில் வாங்கிவிடக்கூடிய புதிய நூல்களை நான் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் வாங்குவதில்லை. சுமை கூடிவிடும். தவிரவும், புதிய நூல்களை வேண்டியபொழுது வரவழைத்துக்கொள்வது சுலபமாகிவிட்டது.

ரா.அ. பத்மநாபன் தொகுத்த பாரதி புதையல் பெருந் திரட்டு நூலின் பழைய பிரதி வானதியில் கிடைத்தது. 45 ரூபாய் விலையுள்ள 584 பக்க நூலை ஐந்து ரூபாய் கழித்துக்கொண்டு ரசீது போடுகிறார்கள்.

இரு ஆண்டுகளாக உலகைக் நிலைகுலையச் செய்துவிட்ட கிருமி குறித்து நான் பார்த்தவரையில் எங்கும் எந்தப் பதிவும் இல்லை. உடல், உள்ளம் இரண்டையும் பாதித்த பெருந்தொற்றின் கதைகள் இன்னும் எழுதப்படவில்லையா? தனித்தலைப்பில் இல்லாவிட்டாலும் கவிதைத் தொகுப்புகளிலோ சிறுகதைத் தொகுப்புகளிலோ நிச்சயம் இந்தக் கொடுமையான காலகட்டத்தின் நிழல் படிந்திருக்கும் என்று நம்புகிறேன். தமிழ் இலக்கியம் சமகாலத்து நிகழ்வுகளிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறதோ? இமையத்தின் செல்லாத பணம் போன்ற படைப்புகள் குறைவாகவே வெளிவருகின்றன.

பதிப்பகம் ஆரம்பிப்பது இப்போது சுலபமாகிவிட்டது. கைவிரல்கள் எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவது சாத்தியம் என்பதால் பலர் நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருப்பதைப் பார்க்கிறேன். அச்சில் இல்லாத பல நூல்களை இவர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள். பரிசல் ஓர் உதாரணம். சென்றமுறையைவிட மொழிபெயர்ப்பு நூல்கள் கணிசமாகப் பெருகியிருக்கின்றன. கவிதைத் தொகுப்புகளும். சுகுமாரன், ஸ்ரீவள்ளி, பெருந்தேவி, மனுஷ்ய புத்திரன், இசை, வெய்யில் என்று பலருடைய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. நாவல்களை இனிதான் பார்வையிடவேண்டும். இரு முறைதான் சென்றிருக்கிறேன். சில மணி நேரங்களுக்கு மேல் சுற்றிவரமுடியவில்லை.

சேகரை அதன்பின் சந்திக்கவேயில்லை. வருமான வரித்துறையில் பெரிய பொறுப்பொன்றை வகிக்கிறார் என்று பிற நண்பர்கள்மூலம் தெரிந்துகொண்டேன். பிரிட்டிஷ் நூலகம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த மூலையில் எந்தப் புத்தகம் இருக்கும் என்பதுவரை கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகிவிட்ட பிறகு அந்நூலகம் சட்டென்று சிறுத்துப்போய்விட்டதுபோல் ஓர் உணர்வு. அதன்பின் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அதே வேளையில் தேவநேயப் பாவாணரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டுவிட்டேன். இரட்டைக் காப்பியங்கள் இல்லையென்றாகிவிட்ட பிறகு கன்னிமாராவே ஒரே புகலிடமாக மாறியது. இன்றுவரை நூலகம் என்றால் அது மட்டும்தான் எனக்கு.

ஆவடி காமராஜ் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் தலைமை ஆசிரியர் எட்வர்ட் செல்லதுறையின் அறைக்குள் நுழைந்து கன்னிமாரா நூலக விண்ணப்பத்தைத் தயக்கத்தோடு நீட்டினேன். என்னது என்று வாங்கிப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையோடு கையெழுத்திட்டுக் கொடுத்தார். அவர் அரிதாகவே புன்னகைக்கக்கூடியவர். நூலகத்தில் சிறிய நீல வண்ண அட்டையில் முத்தான கையெழுத்தில் என் பெயரும் உறுப்பினர் எண்ணும் எழுதிக்கொடுத்தார்கள். பரணில் எங்காவது போட்டு வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த காலத்திலிருந்து புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இருந்த இடத்திலேயே புத்தகங்களை வரவழைத்துக்கொள்ள முடிகிறது என்பதால் முன்பு போல் நிறைய புத்தகங்களும்கூட இப்போதெல்லாம் இங்கிருந்து வாங்குவதில்லை. ஒரு நாள் விடாமல் சென்ற காலமெல்லாம் இருந்தது. இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று முறை சென்றாலே அதிகம். அப்போதும்கூடப் பெரும்பாலும் நண்பர்களைச் சந்திக்கவே செல்கிறேன். சில சமயம், அப்படியொரு காரணத்தை எனக்கே சொல்லிக்கொண்டும் சொல்கிறேன்.

கண்ணுக்குப் புலப்படாத மரபொன்றை என்னையுமறியாமல் பின்பற்றிக்கொண்டிருக்கிறேனா? ஒரு தொடர்ச்சி அறுபட்டுவிடக்கூடாது என்பதற்காக கவனத்தோடு ஒவ்வோராண்டும் வந்துகொண்டிருக்கிறேனா? இருக்கலாம். ஒருவேளை புத்தகங்களைக் குவித்து வைக்கும் இடமாக மட்டும் இருந்திருந்தால் எப்போதோ கண்காட்சி அலுத்துப் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

The number of readers of Tamil books is increasing. Interview with Bharathi Puthakalayam Nagarajan - S Gopalakrishnan தமிழ் நூல்களை வாசிப்பவர்கள் அதிகரித்து உள்ளனர் பாரதி புத்தகாலயம் க. நாகராஜனுடன் நேர்காணல் - ச. கோபாலகிருஷ்ணன்

தமிழ் நூல்களை வாசிப்பவர்கள் அதிகரித்து உள்ளனர் பாரதி புத்தகாலயம் க. நாகராஜனுடன் நேர்காணல் – ச. கோபாலகிருஷ்ணன்




தமிழகம் முழுவதும் கிளைபரப்பி நூல்களையும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆழமாக விதைத்திருக்கும் பதிப்பகம், பாரதி புத்தகாலயம். அரசியல், இலக்கியம், கல்வி, அறிவியல், வரலாறு, சூழலியல், பெண்ணியம் எனப் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூல்களை வெளியிட்டிருக்கிறது. பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளரும் பபாசி அமைப்பின் முன்னாள் துணைத் தலைவருமான க.நாகராஜன் தமிழ் வாசிப்பு, பதிப்புச் சூழல் குறித்த தன் கருத்துகளை நம்முடன் பகிந்துகொள்கிறார்…

ஒரு பதிப்பாளராக கரோனா பெருந்தொற்றின் தாக்கங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?
பெருந்தொற்றானது பதிப்பகங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் பதிப்புலகத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. குறைந்தபட்சம் நூலக ஆணைகளுக்கான பழைய நிலுவைத்தொகையைகூடச் செலுத்தவில்லை. 2019-ல் வாங்கிய நூல்களுக்கான தொகைகூட நிலுவையில் உள்ளது. அதே நேரம், இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகமாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. தமிழ் நூல்களின் தரமும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருக்கிறது. கேரளம், கர்நாடகம், வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழ்நாட்டிலும் நூல்கள் அதிக அளவில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பின்புலம் கொண்ட பதிப்பகங்கள் பொது வாசகர்களை ஈர்ப்பதற்கு என்னென முயற்சிகளை மேற்கொள்கின்றன?
2,000 தலைப்புகளில் குழந்தைகளுக்கான நூல்கள், 300 தலைப்புகளில் அறிவியல் நூல்கள், 60-70 தலைப்புகளில் கல்வி, மாற்றுக் கல்வி குறித்த நூல்களை வெளியிட்டுள்ளோம். வரலாறு, பொருளாதார நூல்களையும் வெளியிட்டுள்ளோம். இவற்றை எந்த அரசியல் கட்சி, அமைப்போடும் தொடர்புபடுத்த முடியாது. அரசியல் என்னும் விரிவான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால், அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. ஒரு நாவல், சிறுகதையில்கூட அரசியல் உண்டு.

பாரதிபுத்தகாலயத்தின் சிறு வெளியீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?
வெகுஜன இதழ்களை மட்டும் படித்துக்கொண்டிருந்தவர்களை சிறு வெளியீடுகள் புத்தக வாசிப்பு நோக்கி நகர்த்தியுள்ளன. அப்படி வருகிறவர்கள் தீவிரமான விஷயங்களைப் படிக்கத் தொடங்குகிறார்கள். தீவிரமான விஷயங்களைக் குறித்த சிறிய காத்திரமான நூல்களைப் படிப்பவர்கள், அவை குறித்த மேலும் அதிகமான நூல்களைத் தேடுகிறார்கள். அந்த வகையில் சிறுவெளியீடுகள் ஒட்டுமொத்த வாசகர் பரப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இன்று நிறைய பதிப்பகங்கள் சிறு நூல்களைவெளியிடத் தொடங்கிவிட்டன. சிறு வெளியீடுகளைத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அனைவருக்கும் பரிசாகக் கொடுக்கிறார்கள்.

நல்ல புத்தகங்களைக் கொண்டுவரும் பல பதிப்பகங்கள் சந்தைப்படுத்தலில் தோல்வியடைந்துவிடுகின்றன. இந்த விஷயத்தில் பாரதி புத்தகாலயத்தின் வெற்றி எப்படிச் சாத்தியமானது?
பாரதி புத்தகாலயத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 24 கிளைகள் உள்ளன. கிளைகள் மட்டுமல்ல… வாசகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான முகவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.5,000 செலுத்தினால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை விற்பதற்குக் கொடுத்துவிடுவோம். ஒவ்வொரு புத்தகத்துக்கும் விளம்பரத்துக்கு அதிகத் தொகையைச் செலவிடுகிறோம். புத்தகங்களுக்காகவே ‘புத்தகம் பேசுது’ என்னும் இதழை நடத்துகிறோம். அது 5,000 சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. இது தவிர, புத்தக விமர்சனங்களுக்கென்று புக் டே’ இணையதளம், ‘பாரதி டிவி’ என்னும் யூடியூப் சேனல் போன்றவற்றை நடத்திவருகிறோம். இவற்றின் மூலமாகத்தான் எங்களுக்கு ரூ.10, ரூ.20-க்குச் சிறு நூல்களை வெளியிடுவதற்கான பொருளாதார பலம் கிடைக்கிறது.

இணையம்வழியாகப் புத்தக விற்பனை, கிண்டில், கைபேசி போன்றவற்றில் படிக்கும் வசதிகள் ஆகியவற்றுக்கிடையே சென்னை புத்தகச் சந்தை போன்ற பிரம்மாண்ட புத்தகத் திருவிழாக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
புதிதாக வரும் வாசகர்களில் சிறு பகுதியினர் மட்டுமே இணையம்வழியாகப் புத்தகம் வாங்கவும், கிண்டில் உள்ளிட்டவற்றை நாடவும் செய்கிறார்கள். 85% புத்தகங்கள்நேரில்தான் வாங்கப்படுகின்றன. அச்சு நூல்களின் எண்ணிக்கையை மின்னூல்களால் குறைத்துவிட முடியாது. எனவே, சென்னை புத்தகக்காட்சியின் பிரம்மாண்டம் அதிகரிக்குமேதவிர குறையாது. அரசும் ஊடகங்களும் போதுமான ஆதரவு அளித்தால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் புத்தகக்காட்சிகளும் பதிப்பாளர்களுக்கு லாபகரமாக அமையும். இந்தப் புத்தகக்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

நன்றி: இந்து தமிழ் நாளிதழ்
24.02.2022

சென்னை புத்தக கண்காட்சியில் அனைவருக்கும் பயனளிக்கும் பாடநூல் நிறுவன வெளியீடுகள்

சென்னை புத்தக கண்காட்சியில் அனைவருக்கும் பயனளிக்கும் பாடநூல் நிறுவன வெளியீடுகள்



 Textbook releases that benefit everyone at Chennai Bookfair சென்னை புத்தக கண்காட்சியில் அனைவருக்கும் பயனளிக்கும் பாடநூல் நிறுவன வெளியீடுகள்

மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து தரப்பின ருக்கும் பயனளிக்கக் கூடிய நூல்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 45ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 16ஆம்  தேதி 800 அரங்குகளுடன் துவங்கியது. கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.   இதில் பல்வேறு பதிப்புகளின் வெளியீட்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அரங்கம் (எப் – 14) அமைக்கப் பட்டுள்ளது.

இந்த அரங்கத்தை முதலமைச்சர் பார்வை யிட்ட முதலமைச்சர் ‘திசைதோறும் திராவிடம்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழில்  புகழ்பெற்ற 6 இலக்கிய நூல்களையும் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் கால்டுவெல் ஒப்பிலக்கணம் நூலையும் வெளியிட்டார்.

கி.ராஜநாராயணன் எழுதிய ‘கரிசல் கதைகள்’ நூலும், ராஜம் கிருஷ்ணன் எழுதிய ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’, ‘திருக்குறள்’ உள்ளிட்ட 12 நூல்கள் புகழ்பெற்ற  ஆங்கில பதிப்பகங்களுடன் இணைந்து ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களும் இங்கு மிகவும் குறைந்த  விலையில் கிடைக்கின்றன.

இந்த நூல்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. அதேபோல், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் 150ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் அவரது நூல்கள் அனைத்தையும் அரசு வெளியிடும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதையொட்டி அவரது நினைவு நாளன்று 1,020 பக்கங்கள் கொண்ட ‘பன்னூல் திரட்டு’, 725 பக்கங்கள் கொண்ட ‘திருக்குறள் உரை’ ஆகிய 2 தொகுதி நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்த 1,745 பக்கங்கள் கொண்ட இரண்டு நூல்களும் மிகவும் குறைந்த விலையில் 600 ரூபாய்க்கு கிடைக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 3 திட்டங்களில் ஒன்றான முத்தமிழ் அறிஞர் மொழி பெயர்ப்பு திட்டத்தின் கீழ் உயர்கல்வி மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய நூல்கள் மொழியாக்கம் செய்து வெளியிடப் பட உள்ளன.

அதன் ஒருபகுதியாக, திராவிட கருத்தியல் உருவாவதற்கு முக்கிய காரணமான, திராவிட மொழிகள்  அல்லது தென்னிந்திய குடும்ப மொழி இலக்கியங்கங் களை ஒப்பிட்டு ‘திராவிட அல்லது தென் இந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியத்தால் மொழி யாக்கம் செய்யப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 1500 பக்கங்கள்  கொண்ட அந்த நூல் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நூலில் அவர் திராவிடம் ஆரிய குடும்பத்தை சேர்ந்தது இல்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது. பாடநூல் நிறுவனம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்  வளர்ச்சி, தமிழ் வரலாறு, இந்திய வரலாறு உள்ளிட்ட 874 தலைப்புகளில் அரிய நூல்களை 32 பாட பிரிவுகளில்  வெளியிட்டுள்ள.

இந்த நூல்கள் யுபிஎஸ்சி தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு, குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கு பயனளிப்பவையாக ஆகும். இந்த அரிய நூல்கள் தற்போது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு 635 நூல்கள் மிகவும்  குறைந்த விலையில் பாடநூல் கழக அரங்கில் கிடைக்கின்றன.

அதேபோல் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில்  23 நூல்கள் மறு பதிப்பு செய்யப்பட்டு புகழ்பெற்ற  பேராசிரியர்களின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பிறமொழி  சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும் ஜி.எஸ்.அனந்த நாராயணன் எழுதிய கலைச்சொற்கள் உளவியல், தமிழ்ச் சுருக்கெழுத்து புவியியல், கலைச்சொற்கள் – பொறியியல் தொழில்நுட்ப வியல், கலைச்சொற்கள் – புள்ளி இயல் போன்ற அகராதி  நூல்களும், அரசியல், இயற்பியல், உளவியல், கல்வியி யல், சமூகவியல், தத்துவம், நிலவியல், மனையியல், வகை நுண்கணிதம், உலக வரலாறு மற்றும் தமிழ்நாட்டு  வரலாறு, வேதியியல், வேளாண்மை, இலக்கியம், உயிரியல், பொது விலங்கியல், மருத்துவம், வணிகவி யல், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வரலாறு, பன்னாட்டு பொருளாதாரம், உடலியங்கியல், உயர்கல்வி நுழைவுத்தேர்வு வினாக்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், கீழடி குறித்த நூல்களும் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மாணவர்கள், ஆய்வாளர்கள் என அனைத்து  தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடிய நூல்கள் ஒருசேர இந்த அரங்கில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல்களை www.textbookcorp.in என்ற இணையதள முகவரியில் rare book என்ற உட்தலைப்பின் வழி நுழைந்து ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Start recording an audio library for kids at the Chennai Book Fair சென்னை புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலக பதிவு தொடக்கம் - ராம் குமார்

சென்னை புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலக பதிவு தொடக்கம் – ராம் குமார்



குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலகம்

பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இயல் குரல் கொடை அமைப்பின் தன்னார்வளர்களோடு இணைந்து ‘கதைப்பெட்டி’ என்ற ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் அரங்கம் சென்னை புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் சிறார்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்காக முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கியிருக்கிறது.

குழந்தைகளின் நிலை:
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பாடநூல்கள் மட்டுமே புத்தகமாக அறிமுகமாகின்றன. அவைகளும் பெரும்பாலும் ஆங்கில நூல்களாக இருக்கின்றன. குழந்தைகளுக்கான கதைகள், பாடல், பொழுதுபோக்கு என அனைத்துமே காட்சி ஊடகங்களின் வழியாகவே நடக்கிறது. இவற்றை நுகரும் ஒரு குழந்தைக்கு பல தமிழ்ச் சொற்களும், எழுத்துக்களும் அறிமுகமே ஆவதில்லை. இதனால் குழந்தைகள் தாய்மொழியை இழப்பது மட்டுமல்லாமல், வாசிப்பின் சுகத்தை இழந்துவிடுகிறார்கள்.

காட்சி ஊடகங்களும், இணையதளங்களும் அவைகளின் போக்கில், கற்பனை உலகத்தை சுருக்கி விடுகிறார்கள். அத்துடன் மொபைல் விளையாட்டும் இணைந்து கொள்கிறது. இதுபோன்ற புலம்பல்களை நாம் பெற்றோர்களிடம் அவ்வப்போது கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மாற்று வழிகள் இல்லாமல் தீர்வைத் தேடுவது சாத்தியமில்லை. அப்படியான ஒரு மாற்றாக ‘கதைப்பெட்டி’ அமைகிறது.

கதைப்பெட்டி எனும் நூலகம்:
கதைப்பெட்டி ஒரு சாதாரண நவீன ஒலிப்பேழை. இந்த பெட்டிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார் நூல்களை ஒலி வடிவில் மாற்றி ஒரு நூலகமாக அமைக்கிறோம். குழந்தைகளுக்கும், பெற்றோருக்குமாக, தேர்ந்தெடுத்து சேர்க்கப்பட்ட இந்த கதைகளை ‘இயல்’ குரல் கொடை அமைப்பின் வழியாக பல தன்னார்வளர்களும் வாசித்து கொடையாக கொடுத்துள்ளார்கள். ஒலிவடிவில் நூல்களை கேட்கும் குழந்தை அதனை கற்பனை திறனைக் கொண்டு புரிந்துகொள்கிறது. ஆரம்பத்தில் ஒரு குழந்தைக்கு இது புதிதாக இருக்கும். ஆனால், ‘கேட்டல் நன்று’ என்பதன் பலனை குழந்தைகளிடமும் ஏன் பெற்றோரிடமும் விரைவிலேயே பார்க்க முடியும்.

இயல் குடும்பங்கள்:
புத்தக கண்காட்சியில், இயல் குடும்பமாக இணைவதற்கான சந்தா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டு சந்தா ரூ.600 செலுத்தும் ஒருவருக்கு ஒரு ஒலிப்பேழையும், கதைகள் அடங்கிய மெமரி கார்டும் தரவுள்ளோம். இதன் வழியாக இயல் சிறார் கதைகளை கேட்கலாம். குழந்தைக்கு ஒன்று என பரிசளிக்கலாம். இயல் குடும்பங்களும் கதை வாசிப்பில் ஈடுபட்டு அந்தக் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாட்டை ‘இயல்’ அமைப்பு மேற்கொள்கிறது.

ஒலிப் பேழை எதற்காக?
ஏற்கனவே இயல் மூலமாக வாசிக்கப்பட்ட நூல்கள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் குழந்தைகளுக்கான கதைகளை வாசித்து வழங்கும் இந்த முயற்சி ஒலிப்பேழையுடன் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் அடக்க விலைக்கே நூற்றுக்கணக்கான கதைகளையும், கருவிகளையும் வழங்குகிறோம். இந்த கதைகளை விநியோகிக்க இணையதளத்தை தேர்வு செய்யாததற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன.

1) இணையவழி கல்வி, இணைய வழி நுகர்வு என எல்லாவற்றிற்கும் செல்போனை தேடும் நமது பழக்கம் பெரும்பாலும் கவனச் சிதறலில் கொண்டுவந்து விடுகிறது. ஆழ்ந்த வாசிப்புக்கு அது உதவாது.
2) குழந்தைகள் எப்போதும் செல்போனையே தேடிக் கொண்டிருக்கும் சூழலை மாற்றியமைப்பதுதான், வாசிப்பின் வாசலுக்கு அவர்களை அழைத்து வரும்.

புக்ஸ் பார் சில்ரன் – வெளியீட்டில் வந்துள்ள பல நூல்களை இந்த ஒலிப்பேழையில் வாசித்து வழங்குகிறோம். நூல்களை பார்த்துக்கொண்டே கதைகளை கேட்டால் அது வாசிப்பையும் மேம்படுத்தும்.

முன்பதிவு ஏன்?
கதைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தயாராக இருக்கின்றன. அதே சமயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்றால்தான் அவைகளை டிஜிட்டல் முறையில் விநியோகிக்க முடியும். இயல் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அது புதிதாக இலவசமாகவே ஒலி வடிவ நூல்கள் கிடைக்கவும், ஒருவருக்கொருவர் பகிரவும் வழிவகுக்கும். எனவே முன்பதிவுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்வதன் மூலம் இந்த முயற்சி தொடர்ந்து நடக்க முன்பதிவு வழிமுறையே உதவும் என்பதால்தான் இந்த வழிமுறையை பின்பற்றுகிறோம்.

இயல் குரல் கொடை என்றால் என்ன?
‘இயல்’ என்ற பெயரில் நூல்களை வாசித்து ஒலிவடிவில் வெளியிடும் தன்னார்வளர்களின் குழுவே இயல் குரல் கொடை ஆகும். இந்த அமைப்பில் நூல்களை திருத்தமாக வாசித்து வழங்க சாத்தியமுள்ள அனைவரும் இணையலாம். இயல் குரல் கொடை அமைப்பு, பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து இயல் ஒலியோடை என்ற ஒலி நூல் பக்கத்தையும் நடத்துகிறது. இப்போது இயல் கதைப்பெட்டி, புக்ஸ் பார் சில்ரனுடன் இணைந்து தயாரித்துள்ளது.