Start recording an audio library for kids at the Chennai Book Fair சென்னை புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலக பதிவு தொடக்கம் - ராம் குமார்



குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலகம்

பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இயல் குரல் கொடை அமைப்பின் தன்னார்வளர்களோடு இணைந்து ‘கதைப்பெட்டி’ என்ற ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் அரங்கம் சென்னை புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் சிறார்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்காக முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கியிருக்கிறது.

குழந்தைகளின் நிலை:
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பாடநூல்கள் மட்டுமே புத்தகமாக அறிமுகமாகின்றன. அவைகளும் பெரும்பாலும் ஆங்கில நூல்களாக இருக்கின்றன. குழந்தைகளுக்கான கதைகள், பாடல், பொழுதுபோக்கு என அனைத்துமே காட்சி ஊடகங்களின் வழியாகவே நடக்கிறது. இவற்றை நுகரும் ஒரு குழந்தைக்கு பல தமிழ்ச் சொற்களும், எழுத்துக்களும் அறிமுகமே ஆவதில்லை. இதனால் குழந்தைகள் தாய்மொழியை இழப்பது மட்டுமல்லாமல், வாசிப்பின் சுகத்தை இழந்துவிடுகிறார்கள்.

காட்சி ஊடகங்களும், இணையதளங்களும் அவைகளின் போக்கில், கற்பனை உலகத்தை சுருக்கி விடுகிறார்கள். அத்துடன் மொபைல் விளையாட்டும் இணைந்து கொள்கிறது. இதுபோன்ற புலம்பல்களை நாம் பெற்றோர்களிடம் அவ்வப்போது கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மாற்று வழிகள் இல்லாமல் தீர்வைத் தேடுவது சாத்தியமில்லை. அப்படியான ஒரு மாற்றாக ‘கதைப்பெட்டி’ அமைகிறது.

கதைப்பெட்டி எனும் நூலகம்:
கதைப்பெட்டி ஒரு சாதாரண நவீன ஒலிப்பேழை. இந்த பெட்டிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார் நூல்களை ஒலி வடிவில் மாற்றி ஒரு நூலகமாக அமைக்கிறோம். குழந்தைகளுக்கும், பெற்றோருக்குமாக, தேர்ந்தெடுத்து சேர்க்கப்பட்ட இந்த கதைகளை ‘இயல்’ குரல் கொடை அமைப்பின் வழியாக பல தன்னார்வளர்களும் வாசித்து கொடையாக கொடுத்துள்ளார்கள். ஒலிவடிவில் நூல்களை கேட்கும் குழந்தை அதனை கற்பனை திறனைக் கொண்டு புரிந்துகொள்கிறது. ஆரம்பத்தில் ஒரு குழந்தைக்கு இது புதிதாக இருக்கும். ஆனால், ‘கேட்டல் நன்று’ என்பதன் பலனை குழந்தைகளிடமும் ஏன் பெற்றோரிடமும் விரைவிலேயே பார்க்க முடியும்.

இயல் குடும்பங்கள்:
புத்தக கண்காட்சியில், இயல் குடும்பமாக இணைவதற்கான சந்தா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டு சந்தா ரூ.600 செலுத்தும் ஒருவருக்கு ஒரு ஒலிப்பேழையும், கதைகள் அடங்கிய மெமரி கார்டும் தரவுள்ளோம். இதன் வழியாக இயல் சிறார் கதைகளை கேட்கலாம். குழந்தைக்கு ஒன்று என பரிசளிக்கலாம். இயல் குடும்பங்களும் கதை வாசிப்பில் ஈடுபட்டு அந்தக் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாட்டை ‘இயல்’ அமைப்பு மேற்கொள்கிறது.

ஒலிப் பேழை எதற்காக?
ஏற்கனவே இயல் மூலமாக வாசிக்கப்பட்ட நூல்கள் இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் குழந்தைகளுக்கான கதைகளை வாசித்து வழங்கும் இந்த முயற்சி ஒலிப்பேழையுடன் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் அடக்க விலைக்கே நூற்றுக்கணக்கான கதைகளையும், கருவிகளையும் வழங்குகிறோம். இந்த கதைகளை விநியோகிக்க இணையதளத்தை தேர்வு செய்யாததற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன.

1) இணையவழி கல்வி, இணைய வழி நுகர்வு என எல்லாவற்றிற்கும் செல்போனை தேடும் நமது பழக்கம் பெரும்பாலும் கவனச் சிதறலில் கொண்டுவந்து விடுகிறது. ஆழ்ந்த வாசிப்புக்கு அது உதவாது.
2) குழந்தைகள் எப்போதும் செல்போனையே தேடிக் கொண்டிருக்கும் சூழலை மாற்றியமைப்பதுதான், வாசிப்பின் வாசலுக்கு அவர்களை அழைத்து வரும்.

புக்ஸ் பார் சில்ரன் – வெளியீட்டில் வந்துள்ள பல நூல்களை இந்த ஒலிப்பேழையில் வாசித்து வழங்குகிறோம். நூல்களை பார்த்துக்கொண்டே கதைகளை கேட்டால் அது வாசிப்பையும் மேம்படுத்தும்.

முன்பதிவு ஏன்?
கதைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தயாராக இருக்கின்றன. அதே சமயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்றால்தான் அவைகளை டிஜிட்டல் முறையில் விநியோகிக்க முடியும். இயல் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அது புதிதாக இலவசமாகவே ஒலி வடிவ நூல்கள் கிடைக்கவும், ஒருவருக்கொருவர் பகிரவும் வழிவகுக்கும். எனவே முன்பதிவுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்வதன் மூலம் இந்த முயற்சி தொடர்ந்து நடக்க முன்பதிவு வழிமுறையே உதவும் என்பதால்தான் இந்த வழிமுறையை பின்பற்றுகிறோம்.

இயல் குரல் கொடை என்றால் என்ன?
‘இயல்’ என்ற பெயரில் நூல்களை வாசித்து ஒலிவடிவில் வெளியிடும் தன்னார்வளர்களின் குழுவே இயல் குரல் கொடை ஆகும். இந்த அமைப்பில் நூல்களை திருத்தமாக வாசித்து வழங்க சாத்தியமுள்ள அனைவரும் இணையலாம். இயல் குரல் கொடை அமைப்பு, பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து இயல் ஒலியோடை என்ற ஒலி நூல் பக்கத்தையும் நடத்துகிறது. இப்போது இயல் கதைப்பெட்டி, புக்ஸ் பார் சில்ரனுடன் இணைந்து தயாரித்துள்ளது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *