ஆக்சிஜன் பறவை கவிதை – கோவை ஆனந்தன்
தார்ச்சாலைகள் நவீனமாக மாறும்போது –
வேரோடு பிடுங்கியெறியப்படும் மரங்களின் நிழல்கள்
எங்கு எப்படி உருமாற்றமடைந்திருக்குமென விடைகளைத்தேடியதில்
நீண்டநாட்கள் திட்டமிட்டு வெட்டியமரங்கள்
விழும்போது உயிரையும் உறவுகளையும் அதன் கனவுகளையும் பறிகொடுத்து
படர்ந்து நிழல்தரும்
கிளைகளில் வசித்த
பறவைகள் அத்தனையும் வேறுகிளைகளைத்தேடி
அகதிகளாய்ப் பறந்துபோன பறவைகளின் வசிப்பிடங்களையும் தேடுகிறேன்
பறவைகளின் இடமாற்றத்தால் தடுமாற்றமானது
ஆறறிவுகள் அறியாமல்
செய்த வினைகளும்
கோடாரிகளை தூக்க கட்டுப்பாடுகள் இருந்திருந்தால்
காலியான ஆக்சிஜன் உருளைகள் தட்டுப்பாடோடு உருண்டிருக்கா.
வழியெங்கும் காற்றினை சுத்திகரிக்கும்
மரங்களின் ஆலைகளை அழித்தபின்
மனிதஇனத்தின் உயிர்காக்கும்
ஒட்டுமொத்த சுவாசக்காற்றையும் சுமந்து
அதே வழித்தடத்தில் பயணிக்கிறது சுவாச சுமையுந்துகள்
சுவாசங்களைப் புதுப்பிக்கும் விருட்சங்களின் விசேசங்களை அறிந்திருந்தால்
அவசியமிருந்திருக்காது மருத்துவ படுக்கைகளும்
ஏதோ ஒருகிளையின் பழத்தினை தின்றுதிரியும் பறவையின்
எச்சிலில் முளைக்கும் மரங்கள் தீங்கு செய்தோருக்கும் நிழல்தந்து
கார்பன் துகள்களை
உள்வாங்கி சுவாசிக்கும் உயிர்களுக்கு பிராண வாயுவினைத்தரும்
அதிசயமரத்தை விதைத்த ஆக்சிஜன் பறவையின்முன்
வெட்கப்பட்டு தலைகுனிந்து நிற்பதையறியாமல்
பறந்துசெல்கின்றன அப்பறவைகள்….
கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு