தனித்துவம் நமது உரிமை; பன்மைத்துவம் நமது வலிமை” என்கிற முழக்கத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு ஆகஸ்ட் 12 முதல் 15ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நகரில் நடைபெறவிருக்கிறது. 600 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
12ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு இயக்குனர் த.செ.ஞானவேல் கலைப்பேரணியைத் தொடங்கிவைக்கிறார். பொது மாநாட்டை காஷ்மீர் மக்களின் உரிமைக்குரலாக செயல்படும் முகமத் யூசுப் தாரிகாமி தொடங்கிவைத்து உரையாற்றுகிறார். தொடர்ந்து தமிழக அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ், கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ், சங்கத்தின் தலைவர்களான ச.தமிழ்செல்வன், சு.வெங்கடேசன் எம்.பி, மதுக்கூர் ராமலிங்கம், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு வரலாற்றாளர் ஊர்வசி புட்டாலியா, கேரள முன்னாள் கல்வியமைச்சர் எம்.ஏ.பேபி ஆகியோர் பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்கள்.
மாலை படைப்புத்தளத்தில் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் எழுத்தாளர்கள் நக்கீரன், சுகிர்தராணி, விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஆகஸ்ட் 14 மாலை பண்பாட்டுத்தளத்தில் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், நடனக்கலைஞர் நிருத்யா, சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தென்னிந்தியக் கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் குறுந்தகடுகள் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் சல்மா உரையாற்றுகிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் அறம், கேரள புரோகமன கலா சாகித்திய சங்கத்தின் ஜி.பி. இராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இந்திய விடுதலையின் 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் 14ஆம் தேதி நள்ளிரவு சிகரம் செந்தில்நாதன் தலைமையில் எஸ்.ஏ.பெருமாள் கொடியேற்றுவதுடன் தொடங்குகிறது.
கொடிப்பயணம்: மாநாட்டில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாடு விடுதலை அடைந்ததும் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடியை நெய்து அளித்த குடியாத்தம் ‘கோட்டா வெங்கடாஜலம்’ குடும்பத்தாரிடமிருந்து “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் காந்திஜியால் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 8ஆம் தேதி எமது நிர்வாகிகளால் பெறப்படுகிறது. அங்கிருந்து வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு 9ஆம் தேதி காலை 9 மணிக்கு விடுதலைப் போராட்ட வீரரும் 101 வயதைத் தாண்டியும் நாட்டு நலனுக்காக சிந்திக்கும் தகைசால் தமிழருமான என்.சங்கரய்யா அவர்களிடம் தரப்படுகிறது. பின்னர் விடுதலைப் போராட்ட வீரரும் தகைசால் தமிழருமான ஆர்.நல்லகண்ணு மற்றும் தமிழகத்தின் கலை இலக்கிய ஆளுமைகள் முன்னிலையில் சங்கரய்யா எமது நிர்வாகிகளிடம் தேசியக்கொடியை ஒப்படைக்கிறார். அந்தக் கொடியின் பயணம் தமுஎகச ஐம்பெரும் ஆளுமைகளாகக் கொண்டுள்ளவர்களின் வாழ்விடங்கள் வழியாகக் தொடர்கிறது. அதன்படி புதுச்சேரியில் பாரதிதாசன், கவிஞர் தமிழ் ஒளி, தஞ்சை மண்ணில் பாலசரஸ்வதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எட்டயாபுரத்தில் பாரதியார் ஆகியோரது வாழ்விடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு காஷ்மீரிலிருந்து மாநாட்டைத் தொடங்கிவைக்க வருகை தரும் முகமத் யூசுப் தாரிகாமியிடம் 12ஆம் தேதி பொது மாநாட்டு மேடையில் வழங்கப்படுகிறது. பின்னர் இக்கொடி 14ஆம் தேதி நள்ளிரவு ஏற்றப்படுகிறது.
மாநாட்டை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் 11 ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை 5 கலை இரவுகள் நடக்கின்றன. தமிழகம் மற்றும் கேரள கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளும், இயக்குனர் கரு.பழனியப்பன், பாடலாசிரியர் யுகபாரதி, வி.என் முரளி, வி.எஸ் பிந்து உள்ளிட்ட ஆளுமைகளின் உரைகளும் இடம்பெறுகின்றன.
புத்தகக் கண்காட்சி, தொல்லியல் கண்காட்சி, ஓவியக்கண்காட்சி ஆகியவையும் இடம் பெறுகின்றன.