நூல் அறிமுகம்: ஈரோடு கதிரின் திரை எனும் திணை – விஜிரவி
ஈரோடு கதிர் அவர்கள் எழுத்தாளர், பேச்சாளர், மனிதவள மேம்பாட்டாளர், பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளர். இதுவரை மொத்தம் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது மூன்றாவது புத்தகமான ‘உறவெனும் திரைக்கதை’ பல்வேறு மொழித் திரைப்படங்களைப் பற்றி இருபத்தைந்து கட்டுரைகளில் பேசுகிறது.
‘திரை எனும் திணை’ நூல் அவரின் ஐந்தாவது புத்தகம். மொத்தம் 20 கட்டுரைகளை கொண்டது. தமிழ் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களை அலசி ஆராய்ந்து, உற்றுநோக்கி, ஆழ்ந்து ரசித்து, அழகிய நடையில் அதன் சாராம்சத்தை தந்திருக்கிறார். அதனோடு கூட பொருத்தமான வாழ்வியல் சம்பவங்களை இணைத்திருப்பது பெரும் சிறப்பு. இந்தப் புத்தகம் உளவியல் சிக்கல்களை பற்றி பேசுகிறது. பிரச்சனைகளை அலசுகிறது. தீர்வுகளையும் சேர்த்தே முன்வைக்கிறது
திரைப்படங்கள் பார்ப்பது கதிருக்கு மிகப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. தன் தேடலுக்கான புதையலாய், உடன் பயணிக்கும் ஜீவனாய், ஆசுவாசமாய் ஒதுங்கும் கதகதப்பான தாய்மடியாய் நினைப்பது திரைப்படங்களைத் தான். திரைச்சாளரத்தின் வழியே யார் ஒருவரும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் செல்லலாம் என்கிறார். பூவின் மடி, முள்ளின் நுனி, நம்பிக்கையின் வேர், அன்பின் ஈரம், துரோகத்தின் வலியை உணரலாம் என்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாசகரும் இந்த அனுபவங்களை உணர வைப்பது இதன் சிறப்பு.
மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். கோபம் என்ற உணர்ச்சி ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறது? அது தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து எப்படி துன்பப்படுத்துகிறது என விளக்குகிறார் ஒரு கட்டுரையில்.
கோபத்தின் பிறப்பிடம் எங்கே…..?
‘‘காலம் காலமாய் சேகரம் ஆனது சிதறித் தெரிக்கிறதா…? இல்லை நொடிப்பொழுதில் முளைத்துக் கிளைத்து வெடித்துப் பிளந்து வந்து வீழ்த்தி மாய்க்கிறதா..?’’ என்று ஒரு கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.
கோபமான ஒரு சொல், உணர்வு, செயல், தொடுகை, பார்வை போதும் ஒரு மனிதனை மிருகமாக்க…. கோபம் என்ற உணர்ச்சி வடிந்த பின் எதை சேகரிக்கப் போகிறீர்கள் அந்த போர்க்களத்தில்…..? இறந்துபோய் கிடக்கின்ற உடல்களையா…? உறைந்து கிடக்கும் ரத்தக் குளத்தையா? இல்லை துடிக்கும் உயிர்களையா…?’ என்ற அவரின் கேள்வி அதிர்ச்சியளிக்கிறது.
கோபத்தை அவர் தீராப்பசி கொண்ட ஒரு மிருகமாக உருவகம் செய்கிறார். பசி கொண்ட ஒரு மிருகம் அதன் இரை கண்ணில் பட்டால், அடித்துத் தின்றுவிட்டு, பசி அடங்கிய பின் படுத்து ஓய்வெடுக்கும். ஆனால் கோபம் என்ற உணர்ச்சி கொண்ட மிருகத்தின் பசி என்றும் அடங்கப் போவதில்லை என்று சொல்கிறார்.
சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பகிரப்படும் காணொளிகளை கண்டிக்கிறார். அது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பத்தை சேர்க்கும் என்ற அடிப்படை அறிவும், யோசனையும் இல்லாமல் பகிரும் நெட்டிசன்களுக்கு ஒரு குட்டு வைக்கிறார். அதிலும் எதிர்மறையான கருத்துக்களைப் பகிரும் காணொளிகள் ‘ ஏழு தலைமுறைக்கான எதிர்மறை’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக.
இந்தப் புத்தகத்தில் பெண்களின் நுண்ணிய மன உணர்வுகளை, வேதனைகளை, காலம் காலமாய் அவர்கள் அனுபவித்து வரும் அடக்குமுறையையும் மிக சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள் மட்டுமே எழுதத் துணிந்த மாதவிலக்கு பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆண்கள் ஒரு பெண் உபயோகப்படுத்தும் நாப்கினை கையால் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்? ஏன் எப்போதும் பெண்களின் மாதவிலக்கும், அது குறித்த விஷயங்களும் ஆண்களுக்கு அன்னியமாகவும் இரகசியமாகவும் வைக்கப்படுகிறது என்று கேட்கிறார். ஒரு பெண் தனக்கு இன்று மாதவிலக்கு. அதனால் இன்று லீவு தேவை என தன் ஆசிரியரிடமோ, மேல் அதிகாரியிடமோ சொல்லத் தயங்குவது ஏன்..?
பெண் குறித்த தவறான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் வைத்திருக்கும் சமூகத்தை சாடுகிறார் ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுக்கும் அதிகாரத்தை சமூகத்திற்கு யார் கொடுத்தது?
தன் துணையை இழந்த ஆணோ அல்லது பெண்ணோ தன் முதுமைக் காலத்தில் தன்னுடன் இருக்க துணை தேடும் போது அதனை இந்த சமூகமும், உறவுகளும், நட்புகளும் எதிர்ப்பது ஏன்…? பரஸ்பர புரிதலுடன் கூடிய துணை எவ்வளவு அவசியம் என்பதை அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்.
வாழ்க்கைப் பற்றிய இவரின் கண்ணோட்டம் மிக அழகானது. முழுக்க முழுக்க நேர்மறைகளையோ அல்லது முழுவதும் எதிர்மறைகளையோ கொண்டதல்ல வாழ்க்கை. ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்ன தருகிறதோ அதை அப்படியே எதிர்கொள்ளுவது தான் அழகு. வாழ்ந்து பார்த்து விடவேண்டும் இந்த வாழ்க்கையை என்ற சொற்கள் மிகப் பெரும் உத்வேகம் தருகிறது.
‘‘ வாழ்வை ரசிப்பவர்களை, கொண்டாடுபவர்களை அந்த வாழ்க்கைக்குள் அவர்கள் கண்டடையும் ஏதோவொன்று பிரயமுடன் ஒட்டியணைத்து, அவர்கள் விரும்பும் வண்ணம் இயக்கி நகர்த்துகிறது’’
‘வாழ்வு என்பது மரணத்திற்கு எதிரான நிலை’ என்ற கட்டுரையின் இறுதி வரிகளாக மேற்கண்ட வரிகள் அமைந்து பெறும் நம்பிக்கையை வழங்குகின்றன.
கட்டுரைத் தலைப்புகள் கவித்துவமாகவும் பொருத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் ஒரு கருத்து பெட்டகம் என்பதில் ஐயமே இல்லை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அருமையான நூல் இது.
நூல் : திரை எனும் திணை
ஆசிரியர் : ஈரோடு கதிர்
பதிப்பகம் : வாசல் படைப்பகம்
விலை: 150
விஜி ரவி.