நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை – வசந்ததீபன்
(1)
துயரம் கசியும்
ஒதுக்கப்பட்ட ஆன்மாவின் ஓலம்
உனது இதயத்தை
எட்டவில்லையா ?
விண்மீனாய் ஜொலிக்கிறாய்
பார்வையால் கூட தீண்டமுடியாத
வெகு அப்பால்…
தளிர்கள் முகிழ்க்கும் வாசனை
வெளிகளை நிறைக்கிறது
ஓலைகளில்
யாரோ
இசைத்துக் கொண்டிருப்பதை
அதன் அசைவுகளில்
சொல்லுகிறது பனைக்கூட்டம்
உழுத காட்டின் ஊடாக
சுருண்டு கிடக்கிறது
சாரைப்பாம்பு ஒற்றையாக
நான்
எட்டு வைக்கிறேன்
கலங்கிய உள்ளம் சுமந்து
உன்னை நோக்கி.
(2)
மழை நீரில் அடித்துச் செல்லப்படும்
விதையாய் நான்
எந்நிலத்தில் நின்று தரிப்பேன் ?
திணைகளெல்லாம் திரிந்து
பாலையாகி விட்டதே!
வனமிழந்த பறவையாக
இரை தேடி அலைகிறேன்
நீர் ஆதாரங்கள் யாவும்
மனிதக் கூண்டுகளாகிவிட்டனவே !
தலைகீழ் மரத்தில் பறவைகள்
சிதறிப் பறக்கின்றன
தேங்கியிருக்கும் சொற்ப
குளத்து நீரில் தெரிகிறது
துரத்தும் கோடைக்குத் தப்ப
அவை போலவே நானும்
ஆனால் திசையறியாமல்
திகைக்கிறது பெண்ணே உன்னால்
என் நிகழ் காலம்.